Wednesday, February 24, 2016

கன்னையா குமார் உணர்ச்சிப் பேருரை!!

இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம்!
வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரிகள் நாங்கள்!
ஆர்.எஸ்.எஸ். நற்சான்றிதழ் எமக்குத் தேவையில்லை!!

  
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (JNU) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார். அவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை (AISF) சேர்ந்தவர்.
 பிப்ரவரி 11ஆம் நாள் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். மறுநாள் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். சங் பரிவாரத்தினர் மற்றும் அவர்தம் வழக்குரைஞர்களால் கடுமையான தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் ஆளானார் அந்த தேசபக்திமிக்க மாணவர் தலைவர்.
  கன்னையா குமார்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எத்தனை அநீதியானவை என்பது பின்வரும் உரையிலிருந்து தெளிவாகும்.
  இந்தியில் அவர் ஆற்றிய உணர்ச்சிமிகு உரையை ‘தி டெலகிராஃப்’ ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் ஜே.பி.யாதவ், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
  பொருள் பொதிந்த அந்த உரை இங்கே தமிழில் தரப்படுகிறது. தமிழாக்கம்: எஸ்.துரைராஜ்.
  வர்கள்தான் [சங் பரிவாரத்தினர்] தேசியக் கொடியை எரித்த புண்ணியவான்கள். பிரிட்டிஷ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்ட சவர்க்காரின் வழித்தோன்றல்கள் இவர்கள். அரியானா மாநிலத்தில் ஒரு விமானநிலையத்தின் பெயரை மாற்றிய மகானுபாவர்கள் இவர்கள். அங்கே அந்த விமானநிலையத்துக்கு பகத் சிங்கின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அங்கே இருக்கும் கட்டார் அரசு, அதை மாற்றி, அந்த விமானநிலையத்துக்கு இப்போது ஒரு சங்கியின் பெயரை (ஆர்.எஸ்.எஸ்காரரின் பெயரை) வைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். சர்டிஃபிகேட் தேவையில்லை
  நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஆர்.எஸ்.எஸிடமிருந்து தேசபக்தர்கள் என்கிற நற்சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஆர்.எஸ்.எஸிடமிருந்து நாங்கள் தேசியவாதிகள் எனும் நற்சான்றிதழ் பெறத் தேவையில்லை. நாங்கள் இந்த தேசத்துக்கு உரியவர்கள். இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த நாட்டிலுள்ள 80 சதவீத ஏழை மக்களுக்காகப் போராடுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, இதுதான் தேசத்துக்கு வந்தனை செலுத்துவது!
  பாபாசாஹேப் (அம்பேத்கர்) அவர்களின்பால் நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய அரசியல் சட்டத்தின்மீது நாங்கள் பரிபூரண பற்றுறுதி கொண்டுள்ளோம். அரசியல் சட்டத்துக்கு யாரேனும் சவால்விட்டு நிற்பார்களேயானால், அவர்கள் சங்கிகளாக [ஆர்.எஸ்.எஸ்காரர்கள்] இருந்தாலும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூற விரும்புகிறோம். 
  எங்களுக்கு அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், (டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான) ஜண்டேவாலனிலும், நாக்பூரிலும் அரசியல்சட்டம் என்று போதிக்கப்படுகிறதே அதன்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனுசாஸ்திரத்தின்மீது எமக்கு நம்பிக்கை கிடையாது. இந்த நாட்டில் நிலவுகின்ற ஜாதி முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
  திருத்திக்கொள்கிற நடவடிக்கைகளைப்பற்றி அரசியல் சட்டமும் பேசுகிறது; பாபாசாகேப் அம்பேத்கரும் பேசுகிறார். அதே அம்பேத்கர், மரணதண்டனையை ஒழிப்பதுபற்றிப் பேசுகிறார். கருத்து சுதந்திரம் பற்றியும் அவர் பேசுகிறார். நமது அரசியல் சட்டத்தை உயர்த்திப்பிடிக்க விரும்புகிறோம். நமது உரிமையைப் பேணிக்காக்க விரும்புகிறோம். ஆனால், ஏபிவிபி (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) ஆசாமிகள், அவர்தம் ஊடக நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடாத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
  உயர்கல்வி  உதவித்தொகைகளுக்காக நாம் போராடுவதாக ஏபிவிபி இணைச் செயலாளர் நேற்று சொல்லியிருக்கிறார். என்ன வினோதம் பாருங்கள்! அவர்களுடைய அரசாங்கமும், மனுஸ்மிருதி இரானி அம்மையாரும் உயர்கல்வி உதவித்தொகைக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உயர்கல்வி உதவித் தொகைகளுக்காகப் போராடுவதாக நம்மீது குற்றம் சுமத்துகிறார்கள். உயர்கல்விக்கான பட்ஜெட்டை 17 சதவீதம் குறைத்திருக்கிறது அவர்களது அரசாங்கம்.
  கடந்த நான்கு ஆண்டுகளாக நமக்கு விடுதி கட்டப்படவில்லை; வைஃபை வசதியும் செய்துதரப்படவில்லை. பிஎச்இஎல் (BHEL) அத்தகையதொரு வசதியை நமக்கு அளித்திருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துவதற்கு நிர்வாகத்திடம் பணம் இல்லை. ஆயினும், ஏபிவிபி ஆசாமிகள் தேவ் ஆனந்தைப் போல தோற்றமளித்துக் கொண்டு, விடுதிகளைக் கட்டித்தரச் செய்வோம்; வைஃபை வசதியைப் பெற்றுத் தருவோம்; உயர்கல்வி உதவித்தொகையை உத்திரவாதம் செய்வோம் என்றெல்லாம் சவடால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகளுக்கு ஒரு சவால்
  இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைப்பற்றி ஒரு விவாதம் நடத்தப்படுமேயானால், அவர்கள் அம்பலமாகிப் போவார்கள். இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைப்பற்றி நாம் பேசியும் விவாதித்தும் வருவதால், ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்த நாட்டிலுள்ள பெண்கள், தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் கண்ணியம் குறித்த பிரச்சனைகளை நாம் எழுப்பிவருகிறோம். அதனால்தான், அவர்களின் சுவாமி (சுப்ரமணியன் சுவாமி), ஜேஎன்யூவில் ஜிகாதிகள் வசிக்கிறார்கள் என்றும், ஜேஎன்யூ மாணவர்கள் வன்முறையைப் பரப்பிவருகிறார்கள் என்றும் பிதற்றுகிறார்.
  ஆர்.எஸ்.எஸ். சித்தாந்திகளுக்கு, ஜேஎன்யூ சார்பாக நான் சவால் விடுக்க விரும்புகிறேன். எங்களை அழைத்து விவாதம் நடத்துங்கள். வன்முறை எனும் கருத்தைப்பற்றி நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். ஏபிவிபியினரின் வெறிபிடித்த கோஷங்களை, ரத்தத்தால் திலகமிடுவோம் என்றும் துப்பாக்கி ரவைகளால் ஆரத்தி எடுப்போம் என்றும் அவர்கள் இடுகின்ற கோஷங்களைப்பற்றி நாங்கள் வினாக்களைத் தொடுக்க விரும்புகிறோம். யாருடைய குருதியை அவர்கள் கொட்ட விரும்புகிறார்கள்? அவர்கள், பிரிட்டிஷ்காரர்களுடன் அணிசேர்ந்து நின்று இந்த நாட்டின் விடுதலைப் போராட்டவீரர்களின்மீது குண்டுகளைப் பாய்ச்சினார்கள். ஏழை மக்கள் ரொட்டி வேண்டுமென்று கோரியபோது, துப்பாக்கிக் குண்டுமழை பொழிந்தார்கள் அவர்கள்; பட்டினியால் மாய்ந்துகொண்டிருந்த மக்கள், தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோது, தோட்டக்களைப் பரிசாக அளித்தார்கள் அவர்கள்; முஸ்லீம்களுக்கு எதிராகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள் அவர்கள்; சம உரிமை வேண்டுமெனப் பெண்கள் கோரியபோது அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பாய்ச்சினார்கள் அவர்கள்.
  ஐந்து விரல்கள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என வியாக்கியானம் பேசுகிறார்கள் அவர்கள். பெண்கள், சீதையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அக்னிப்பரீட்சைக்குத் துணியவேண்டும் என்றும் பிரலாபிக்கிறார்கள் அவர்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; மாணவராக இருந்தாலும், தொழிலாளராக இருந்தாலும், ஏழையாக இருப்பினும், செல்வந்தராக இருப்பினும், அம்பானி அல்லது அதானியாக இருந்தாலும் அனைவர்க்கும் சம உரிமையை அளிக்கிறது ஜனநாயகம். பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்று நாம் பேசினால், இந்தியக் கலாச்சாரத்தை நாசமாக்குவதாக நம்மைப் பழிசொல்கிறார்கள் அவர்கள்.
சுரண்டல், ஜாதி கலாச்சாரத்தை நிர்மூலமாக்குவோம்
  சுரண்டல் கலாச்சாரத்தை, ஜாதி கலாச்சாரத்தை, மனுசாஸ்திர, பிராமணீய கலாச்சாரத்தை நிர்மூலமாக்கவே நாம் விரும்புகிறோம். இதுநாள்வரையிலும் கலாச்சாரம் என்பதற்கான வியாக்கியானம் தீர்ந்தபாடில்லை. இந்த நாட்டிலுள்ள மக்கள், ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதும், செவ்வணக்கத்தோடு சேர்த்து நீலவணக்கத்தைத் தெரிவிப்பதும், மார்க்சுடன் சேர்த்து அம்பேத்கரைப் பற்றிப் பேசுவதும், (விடுதலைப் போராட்ட வீரரான) அஸ்ஃபகுல்லா கானைப்பற்றிப் பேசுவதும் அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. அவர்களால் இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களுடைய சதிகாரத்தனம். அவர்கள், பிரிட்டிஷ்காரர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். முடிந்தால் எனக்கு எதிராக அவதூறு வழக்குப் போடுமாறு அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.ன் வரலாறு, பிரிட்டிஷ்காரர்களுடன் அணிசேர்ந்து நின்ற வரலாறுதான் என்கிறேன் நான். இந்த துரோகிகள்தான் இன்று தேசியவாதிகளுக்கான நற்சான்றிதழ்களை இன்று விநியோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  நண்பர்களே, எனது செல்பேசியை எடுத்துப் பாருங்கள். அதில் எனது அன்னைக்கும் சகோதரிக்கும் எதிராகப் பொழியப்பட்ட எத்துணை அசூசையான வசவுகள்! பாரதமாதா என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள் அவர்கள்? அவர்களது பாரதமாதாவில் எனது தாயும் அங்கம் எனும் நிலை இல்லாத பட்சத்தில், அவர்தம் பாரதமாதா எனும் கருத்தமைவு எனக்கு ஏற்புடைத்தன்று.
  எனது தாய் ஓர் அங்கன்வாடி சேவகி; அவர் ஈட்டுகின்ற 3000 ரூபாய் ஊதியத்தில்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது; அந்தத் தாயை நிந்திக்கிறார்கள் அவர்கள். இந்த நாட்டில், ஏழைகளின், தலித் விவசாயிகளின் அன்னையர் பாரதமாதாவின் அங்கமில்லை என்பதை எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன். நான், இந்த நாட்டின் அன்னையரைப் போற்றுவேன்; இந்த நாட்டின் தந்தையரைப் போற்றுவேன்; இந்த நாட்டின் தாய்மார்களையும் சகோதரிகளையும் போற்றுவேன்; ஏழை விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், தொழிலாளர்களைப் போற்றுவேன்.
  அவர்களுக்கு [ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு] வீரம் இருக்குமேயானால், ‘புரட்சி ஓங்குக’ என்று முழங்கட்டும் அவர்கள்; ‘பகத்சிங் வாழ்க’ என்று வாழ்த்தட்டும் அவர்கள்; ‘சுக்தேவ் வாழ்க’ என்று போற்றட்டும் அவர்கள்; ‘அஸ்ஃபகுல்லா கான் வாழ்க’ என்று கோஷிக்கட்டும் அவர்கள்; ‘பாபாசாகப் அம்பேத்கர் வாழ்க’ என்று போற்றட்டும் அவர்கள். அவ்வாறு செய்யும்பட்சத்தில்தான் அவர்கள் இந்த நாட்டின்மீது பற்றுகொண்டுள்ளார்கள் என நான் நம்புவேன்.
ஆர்.எஸ்.எஸ். கபட நாடகம்
  அம்பேத்கரின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக அவர்கள் கபடநாடகம் நடத்துகிறார்கள். அவர்களுக்குத் திராணி இருக்குமேயானால், அம்பேத்கர் எழுப்பிய பிரச்சனைகளை எழுப்பவேண்டும். ஜாதி அமைப்புமுறை நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. ஜாதி முறையைப்பற்றிப் பேசட்டும்; ஒவ்வொரு துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரட்டும்; தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரட்டும். இந்தப் பிரச்சனைகளையெல்லாம் அவர்கள் எழுப்பும்பட்சத்தில், இந்த நாட்டின்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்பேன் நான்.
  இந்த தேசம் என்றுமே உங்களுடையதாக இருந்ததுமில்லை; ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. ஜனசமூகத்தால் உருவானதுதான் தேசம்; பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேசமெனும் உங்கள் கருத்தில் இடமில்லை என்றால், அது தேசமாகவே இருக்காது.
  நேற்று நடைபெற்றதொரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, இடர்மிகு நிலையில் நாம் இருப்பதாக நான் குறிப்பிட்டேன். நாட்டில் பாசிசம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கையில், ஊடகங்கள்கூட தப்புவதற்கில்லை. நெருக்கடி நிலை காலத்தில், காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து எப்படி எதைப் பிரசுரிக்கவேண்டுமெனப் பத்திரிகை செய்திக் குறிப்புகள் எழுதப்பட்டு வந்தனவோ அதேபோன்று, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு செய்திக் குறிப்புகள் எழுதி அனுப்பப்படும்.
  மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில்தான் ஜேஎன்யூ நடக்கிறது என்று சில ஊடக நண்பர்கள் கூறினார்கள். மானியத்தில் ஜேஎன்யூ நடக்கிறது என்பது வாஸ்தவம்தான். இருப்பினும், இங்கே நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: பல்கலைக் கழகங்கள் எதன்பொருட்டு நடத்தப்படுகின்றன? சமுதாயத்தின் கூட்டு மனசாட்சியை விமர்சனபூர்வமான ஆய்வு செய்வதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அத்தகைய விமர்சனபூர்வமான ஆய்வு ஆதரிக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்கள் தமது பணியில் தவறிவிட்டனவென்றால், தேசமே இருக்காது. மக்கள் தேசத்தின் அங்கமாக இல்லையெனில், சுரண்டலுக்கும், கொள்ளையடிப்பதற்கும் பணக்காரர்களின் வேட்டைக்காடாக அது ஆகிவிடும்.
  மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை நாம் ஸ்வீகரிக்கவில்லையெனில், ஒரு தேசமென்பதே உருவாகாது. தேசத்தோடு நாம் உறுதியாக நிற்கிறோம்; பகத் சிங், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் கனவுகளுக்காக நாம் நிற்கிறோம். சம உரிமைகளுக்காக நாம் நிற்கிறோம். வாழ்வுரிமைக்காக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளுக்காக நிற்பதன்பொருட்டே ரோஹித் (வெமுலா) தன் உயிரைத் துறந்தார்.
  “உங்கள் அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று சங்கிகளுக்கு நாம் சொல்ல விரும்புகிறோம். மத்திய அரசுக்கு நாம் சவால்விட்டுக் கூற விரும்புகிறோம்—ரோஹித் விஷயத்தில் அது என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம்; ஆனால், அது ஜேஎன்யூவில் நடக்க நாம் அனுமதிக்க மாட்டோம். இங்கே ரோஹித் தன் உயிரைத் துறக்கமாட்டார். ரோஹித்தின் தியாகத்தை நாம் மறக்கமாட்டோம். கருத்துச் சுதந்திரத்துக்காக நாம் நிற்போம்.
மனிதகுலத்தை நேசிக்கிறோம்
  பாகிஸ்தானும் வங்கதேசமும் இருக்கட்டும்; உலகெங்கிலுமுள்ள ஏழைகள், உழைப்பாளி மக்கள் அனைவரின் ஒற்றுமைக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதகுலத்தை நாம் போற்றுகிறோம்; இந்திய மனிதகுலத்தைப் போற்றுகிறோம்.
  மனிதகுலத்துக்கு எதிராக இருப்பவர்களை நாம் இனங்கண்டு கொண்டோம். இதுதான் நம் முன்னே உள்ள ஆகப்பெரிய பிரச்சனை ஆகும். ஜாதியின் முகத்தைக் கண்டுகொண்டோம்; மனுவாதத்தின் முகத்தைக் கண்டுகொண்டோம்; பிராமணீயத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே உள்ள கள்ளத் தொடர்பைக் கண்டுகொண்டோம். இந்த முகங்களை  நாம் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான சுதந்திரத்துக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்; அது அரசியல் சட்டத்தின்மூலமாக வருகின்ற சுதந்திரம்; நாடாளுமன்றத்தின் மூலமாக வருகின்ற சுதந்திரம். நாம் அதை அடைந்தே தீருவோம்!
  நண்பர்களே, நான் உங்களை அறைகூவி அழைக்கிறேன்: நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், கருத்து சுதந்திரத்தை நாம் காப்பாற்றியாகவேண்டும்; நமது அரசியல் சட்டத்தைக் காப்பாற்றியாகவேண்டும்; இந்த நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றியாகவேண்டும். இதன்பொருட்டு நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; நமது நாட்டைத் துண்டாட எத்தனிக்கும் சக்திகளை, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுக்கின்ற சக்திகளைப் போரிட்டுச் சாய்க்கவேண்டும்.
  எனது உரையை நிறைவுசெய்வதற்குமுன் ஒரு பிரச்சனைபற்றிக் குறிப்பிடவேண்டும். யார் இந்த கசாப்? யார் இந்த அஃப்சல் குரு? தமது உடல்களைச்சுற்றி குண்டுகளைக் கட்டிக்கொண்டு கொன்றழிக்கிறார்களே யார் இவர்கள்? இந்தக் கேள்விகளையெல்லாம் பல்கலைக் கழகங்களில் எழுப்பவில்லையெனில் பல்கலைக் கழகங்களின் ஜீவிதமே அர்த்தமற்றதாகிவிடும். நீதியை நாம் வரையறுக்கவில்லையெனில், வன்முறையை வரையறுக்கவில்லையெனில்... நாம் வன்முறையை எப்படிப் பார்க்கிறோம்? வன்முறை என்பது யாரேனும் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதுமட்டுமன்று. தலித்துகளின் அரசியல்சட்டரீதியான உரிமைகளை ஜேஎன்யூ நிர்வாகம் மறுக்கின்றபோது அது வன்முறையாகிறது. இது நிறுவனரீதியான வன்முறை.
  அவர்கள் நீதியைப்பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்று யார் தீர்மானிப்பது? தலித்துகள் கோவில்களில் நுழைவதை பிராமணீயம் அனுமதிப்பதில்லை. உணவு விடுதிகளில் நாய்களும் இந்தியர்களும் நுழைவதை பிரிட்டிஷ்காரர்கள் அனுமதிக்கவில்லை. அது அன்றைய [அ]நீதியாக இருந்தது. அன்று அந்த [அ]நீதியை நாம் எதிர்த்தோம்; இன்று நமக்கு நீதியை அளிக்காத ஏபிவிபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் [அ]நீதியை எதிர்த்துச் சவால்விட்டு நிற்கிறோம். அவர்தம் [அ]நீதி நமக்கு நீதி அளிக்காத நிலையில் அவர்களது அந்த [அ]நீதியையும், இந்த சுதந்திரத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம். ஒவ்வொரு நபரும் தனது அரசியல்சட்டபூர்வமான உரிமையைப் பெறும்போது இந்த சுதந்திரத்தை நாங்கள் ஏற்போம். அனைவருக்கும் சம உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படுகின்ற நிலையில் நீதியை நாங்கள் ஏற்போம்.
வன்முறை, பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்
  நண்பர்களே, நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் ஜேஎன்எஸ்யூ (ஜேஎன்யூ மாணவர் சங்கம்) எத்தகு வன்முறைக்கும், எந்த பயங்கரவாத, பயங்கர சம்பவத்துக்கும் இந்திய-விரோத நடவடிக்கைக்கும் ஆதரவளித்தலாகாது. அடையாளம் தெரியாத சில நபர்கள் எழுப்பிய “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷத்தை ஜேஎன்யூ மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறதென நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். 
  நண்பர்களே, உங்களுடன் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது ஜேஎன்யூ நிர்வாகம் மற்றும் ஏபிவிபி தொடர்புடைய விஷயம். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. தற்போது ஏபிவிபி எழுப்புகின்ற கோஷங்களை உற்று கவனியுங்கள். நம்மை ‘கம்யூனிஸ்ட் நாய்கள்’ என்று அவர்கள் ஏசுகிறார்கள். ‘அஃப்சல் குருவின் ஏவல்நாய்கள்’ என்று அவர்கள் நம்மை நிந்திக்கிறார்கள்.
  ‘ஜிகாதிகளின் புத்திரர்கள்’ என்று அவர்கள் நம்மை அழைக்கிறார்கள். இந்த நாட்டின் பிரஜைகள் என்கிற உரிமையை அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள நிலையில், நமது பெற்றோரை நாய்கள் என்று அவர்கள் தூஷிப்பது நமது அரசியல்சட்ட ரீதியான உரிமையின்மீது அவர்கள் தாக்குதல் தொடுப்பதாகாதா? இந்தக் கேள்வியை ஏபிவிபி மற்றும் ஜேஎன்யூ நிர்வாகத்தின்முன் வைக்க விரும்புகிறோம். யாருக்காக, யாருடன் சேர்ந்துகொண்டு, எந்த அடிப்படையில் ஜேஎன்யூ நிர்வாகம் வேலை செய்கிறது என அதனைக் கேட்க விரும்புகிறோம். [ஒரு நிகழ்ச்சிக்கு] முதலில் அனுமதி கொடுக்கிற ஜேஎன்யூ நிர்வாகம், [ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள] நாக்பூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறது. முதலில் அனுமதி கொடுப்பதும் பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வதும் என்கிற பாணி தீவிரமாகியுள்ளது. முதலில் அவர்கள் உயர்கல்வி உதவித் தொகையை அறிவிப்பார்கள்; அதை வாபஸ் வாங்கிவிட்டதாகப் பின்னர் சொல்வார்கள். இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏபிவிபி பாணி; இந்த வழிமுறையில்தான் நாட்டைக் கொண்டுசெல்ல அவர்கள் விரும்புகிறார்கள்.
  ஜேஎன்யூ நிர்வாகத்திடம் நாம் கேட்க விரும்புவது இதுதான்: (இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் பிப்ரவரி 9 ஆம் தேதிய நிகழ்ச்சிக்கு) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதியை அளித்துவிட்டு, யாருடைய உத்தரவின்பேரில் அது திரும்பப்பெறப்பட்டது? ஜேஎன்யூ நிர்வாகத்திடம் நாம் இதனைக் கேட்க விரும்புகிறோம்.
ஆட்டம் போடுகிறது ஏபிவிபி
  அதே நேரத்தில் இந்த (ஏபிவிபி) ஆசாமிகளின் சுயரூபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வெறுக்காதீர்கள். அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். (புனேயில் உள்ள ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவராக) கஜேந்திர செளஹான் நியமிக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அவரைப்போன்ற ஆட்களைப் புகுத்திவிடலாம் என்ற நினைப்பில் அவர்கள் இப்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். செளஹானைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் பொறுப்பில் இருக்கும்பட்சத்தில், தமக்கு வேலை கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கு வேலைகிடைத்த உடனே தேசத்தை வணங்குவதையும், பாரத மாதாவையும் மறந்துவிடுவார்கள். அவர்கள் என்றுமே மதிக்காத தேசிய மூவர்ணக் கொடியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை! காவிக் கொடியையும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள்.
  அவர்கள், தேசத்தைத் துதித்தல் என்று கொக்கரிக்கின்றார்களே, அந்தத் துதி எத்தகையது என நான் அறிய விரும்புகிறேன். முதலாளியொருவர் தனது சிப்பந்திகளிடம் முறையாக நடந்துகொள்ளவில்லையெனில், விவசாயி ஒருவர் தனது விவசாயத் தொழிலார்களுக்கு நீதி வழங்கவில்லையெனில், ஓர் ஊடக நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்குகிற தலைமை நிர்வாக அதிகாரி, மிகக் குறைவான ஊதியம் பெறுகின்ற நிருபர்களிடம் முறையாக நடந்துகொள்ளவில்லையெனில், இந்த தேசத்துதி என்பதற்கு என்னதான் அர்த்தம்?
  அவர்களுடைய தேசத்துதி, ஒரு இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிந்துவிடக்கூடியது. இதன் பின்னர், சாலையில் செல்லும் அவர்கள், வாழைப்பழம் விற்கிறவரிடம்போய் முறைகேடாக நடந்துகொள்வார்கள். ஒரு டஜன் வாழைப்பழம் 40 ரூபாய் என்று அந்த நபர் சொன்னால், வாடிக்கையாளர்களிடம் அவர் கொள்ளையடிப்பதாக அவரை இழித்தும் பழித்தும் பேசுவார்கள். டஜன் பழம் 30 ரூபாய்க்கு வேண்டும் என்பார்கள்.
  வாழைப்பழம் விற்கும் அந்த மனிதர் நிமிர்ந்து நின்று, அவர்களைப் பார்த்து, உண்மையில் நீங்கள்தான் கொள்ளையடிக்கிறவர்கள் என்று சொன்னால், அந்த எளிய மனிதரை தேசவிரோதி என்று அவர்கள் சாடுவார்கள். [அவர்களது] தேசத்துதி என்பது வசதி வாய்ப்புகளில் தொடங்கி அவற்றிலேயே முடிந்துவிடுகிறது.
  எனக்குப் பல ஏபிவிபி ஆட்களைத் தெரியும்; தேசிய உணர்வு அவர்களை உத்வேகமூட்டியிருக்கிறதா? என்று அவர்களை நான் கேட்டிருக்கிறேன். “என்ன செய்வது சகோதரரே, இந்த அரசின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள்தான்; அதில் இரண்டு ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. எஞ்சியிருப்பது மூன்று ஆண்டுகள்தான்; அதற்குள் எதையெல்லாம் செய்துமுடிக்க வேண்டுமோ அதனைச் செய்துமுடிக்க வேண்டும்” என்கிறார்கள் என்னிடம்.
  நான் அவர்களைக் கேட்க விரும்புவது இதுதான்: நாளைக்கு, ரயிலில் பயணிக்கும் அவர்களுடைய உறுப்பினர்களிலேயே ஒருவர், யாரேனும் மாட்டுக்கறி வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும்போது, அவர்களின் காலரைப்பிடித்து, ஜேஎன்யூவைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நீங்கள் தேசத்துரோகிகள் என்று பழிசொல்ல நேர்ந்தால் என்னாகும்? வன்முறைக் கும்பலால் நீங்கள் கொல்லப்படக்கூடும். இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா? என நான் அவர்களைக் கேட்கிறேன்.
  தாம் இந்த ஆபத்தை உணர்வதாகவும் அதனால்தான், #ஜேஎன்யூவுக்கு மூடுவிழா நடத்துவது (ட்விட்டர் குறியீடு) என்பதைத் தாம் எதிர்ப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். முதலில் ஜேஎன்யூவுக்கு எதிராக ஒரு சூழலை உருவாக்கிவிட்டுப் பின்னர், எவ்வாறாயினும் இறுதியில் அவர்கள் ஜேன்யூவில்தான் வாழவேண்டும் என்பதை உணர்ந்தவுடன் அந்த சூழலை எதிர்க்கிறார்கள்.
ஜேஎன்யூவினர்க்கு ஒரு வார்த்தை
  அதனால்தான் அனைத்து ஜேஎன்யூவினருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: மார்ச் மாதத்தில் தேர்தல்கள் வரவிருக்கின்றன. “ஓம்” கொடியை ஏந்திக்கொண்டு, உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள் ஏபிவிபி ஆசாமிகள். “நாங்கள் ஜிகாதிகள்; நாங்கள் பயங்கரவாதிகள்; நாங்கள் தேசவிரோதிகள்; எங்களுடைய வாக்குகளை ஏற்பதன்மூலம் நீங்களும் தேசவிரோதிகள் ஆகிவிடமாட்டீர்களா?” என்று அவர்களிடம் கேளுங்கள். இந்தக் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது, “நீங்கள் தேசவிரோதிகள் இல்லை; ஒருசிலர்தான் அப்படிப்பட்டவர்கள்” என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையில், “இதை ஏன் அப்போதே நீங்கள் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை” என்று அவர்களிடம் கேளுங்கள். “ஏன் அவர்களது துணைவேந்தரும், பதிவாளரும்கூட அப்போதே இதனைச் சொல்லவில்லை?” என்று அவர்களிடம் கேளுங்கள்.
  அவர்கள் குறிப்பிடுகிற சிலரும்கூட “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பவில்லை; அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவுமில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். [நிகழ்ச்சிக்கு] ஏன் முதலில் அனுமதி வழங்கப்பட்டது; பின்னர் ஏன் திரும்பப்பெறப்பட்டது? இது ஜனநாயக உரிமையின்மீதான தாக்குதல் ஆகாதா? என்பதைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்கள். எங்கேனும் ஜனநாயகத்திற்கான போராட்டம் நடைபெறுமேயானால் அதனைத் தாம் ஆதரித்து நிற்போம் என்பதைத்தான் அந்த சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
  அவர்கள் [ஏபிவிபியினர்] ஒருபோதும் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால், குறைந்த கால அவகாசத்தில் இங்கே கூடியிருப்பவர்கள் இந்தப் பிரச்சனயைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் பல்கலைக்கழக வளாகமெங்கும் சென்று, நாட்டை மட்டுமின்றி ஜேஎன்யூவையும் சின்னாபின்னமாக்குவதற்கு ஏபிவிபி முயன்றுகொண்டிருக்கிறது; ஆனால் அவ்வாறு நிகழ்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மாணவர்களிடம் எடுத்துச் சொல்வார்கள்.
  ஜேஎன்யூ நீடூழி வாழ்க! நாடெங்கிலும் நடைபெறும் அனைத்து ஜனநாயகப் போராட்டங்களிலும் ஜேஎன்யூ தொடர்ந்து ஊக்கத்துடன் பங்குகொள்ளும்; தொடர்ந்து ஜனநாயகத்தின் குரலை, சுதந்திரத்தின் குரலை, கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தும். நாம் போராடுவோம், வெற்றி பெறுவோம்; இந்த நாட்டிற்கெதிரான தேசத்துரோகிகளை முறியடிப்போம். இந்த வார்த்தைகளுடன், உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்; ஒன்றுபட்டு நிற்க அறைகூவல் விடுக்கிறேன்.
  ஜெய் பீம்! லால் சலாம்!!

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP