Sunday, March 27, 2016

மகாத்மா காந்தி குறித்து தோழர் டாங்கே

வாழ்க நீ எம்மான்!
காந்தி மகாத்மா வாழ்க வாழ்க!!

எஸ்.ஏ.டாங்கே


[தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமான அதே பரிவாரங்கள் அவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க இன்றளவும் தொடர்ந்து பலவடிவங்களில் எத்தனிக்கின்றன. இவர்களின் விஷப்பிரச்சாரம், முறியடிக்கப்பட வேண்டும். இந்தியா, மென்மேலும் இளைய தேசமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முற்போக்கு ஜனநாயக சக்திகள் இந்தப் பணியை
செய்யவேண்டியது அவசர அவசியமாகிறது. அந்தக்கடமையின் ஒரு  பகுதியாக, மகாத்மாவின் பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்ட 1969-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், பாட்டாளிவர்க்க இயக்கத்தின் பீஷ்ம பிதாமகராகவும் விளங்கிய, வரலாற்று நாயகர் தோழர் எஸ். ஏ. டாங்கே அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அப்படியே தரப்படுகிறது.]
  
  வ்வாண்டு (1969) அக்டோபர் மாதம், மகாத்மா காந்தியின் பிறந்த நூற்றாண்டினை நம் தேசத்து மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
  1857 சுதந்திரப்போரில் நம் வீரர்கள் வீழ்ந்துபட்டதனாலும், அந்தப் போரில் இந்தியாவின் தோல்வியினாலும் நாடு பெருந்துயரில் இன்னும் ஆழ்ந்திருந்த காலத்தில்தான் அவர் பிறந்தார். அந்த மாபெரும் போராட்டம் நடந்து முடிந்து 12 ஆண்டுகளுக்குப்பின் அவதரித்த அந்தக் குழந்தை, செல்வச் செழிப்பும் பக்தியும் மிகுந்ததொரு இந்துக் குடும்பத்தில் வளர்ந்தது. அது, ஒரு புறம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தொண்டூழியம் செய்துவந்த சுதேச சமஸ்தானப் பகுதியில் ஆழ்ந்தும், மறுபுறத்தில், விக்டோரியா மகாராணியின் சாம்ராஜ்யத்து செல்வாதாராத்தைக் கட்டும்பொருட்டு லட்சோப லட்சம் மக்களைக் கொடும் பஞ்சத்துக்குத் தாரைவார்த்த, பரம ஏழைகளைக் கொண்ட இந்தியாவால் சூழப்பட்டுமிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இதயமான லண்டனில் ஆகச்சிறந்த கல்வியை அவர் பெறவும், பிரிட்டிஷ் சட்டத்தினடிப்படையில் விசுவாசமாக வாதாடும் வழக்கறிஞராக உருவாகவும் அவரது குடும்பத்தின் செல்வம் வழிவகுத்தது.
  ஆனால், அவர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் நலனுக்காக அதே சட்டத்தினடிப்படையில் வாதாடியபோது, வெள்ளை ஆட்சியாளர்களின் ஆணவம், அடக்குமுறை ஆகியவற்றின் முன்னே சமத்துவம், சரிநிகர்-சமானம் எனும் கற்பனைக் கோட்டைகளெல்லாம் காற்றில் கரைந்து மறைந்துபோகலாயின. சமத்துவம், மானுடத்தின் கண்ணியம் ஆகியவற்றுக்காகவும் இனவெறியை எதிர்த்தும் நடைபெறும் போராட்டத்திற்கான பாலபாடத்தை அங்குதான் அவர் கற்றுக்கொண்டார். இருப்பினும், சாம்ராஜ்யத்தின் விசுவாசியாகவே அவர் தொடர்ந்தார்; பண்பாடு, நீதி, முன்னேற்றம் ஆகியவற்றின் சின்னமாகவே அன்று அது விளங்கியதாக எண்ணினார்.  
  எனவேதான், முதல் உலக யுத்தம் வெடித்தபோது, சாம்ராஜ்யத்தின் விசுவாச ஊழியர் என்றமுறையில், அதனைக் காக்க இந்தியாவின் இளைஞர்களைத் திரட்டலானார்; தன்னாட்சி எனும் தனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில் இத்தகு பாதுகாப்புப் பணிகளில் இறங்கப்போவதில்லை என்று முடிவெடுத்த லோகமான்ய திலகருடன் அவர் கருத்துவேறுபாடு கொண்டார்.
 
யுத்தத்தின் இறுதியில், சுதந்திரம், தேசவிடுதலை ஆகியவற்றுக்காக மக்கள் வேட்கைகொண்டபோது, முதலில், ரௌலட் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை ஏவியும், பின்பு பயங்கர ரத்தக்களரிகளைக் கட்டவிழ்த்துவிட்டும், ஜாலியன்வாலாபாக் சம்பவம்போன்று மக்களைக் கொன்றுகுவித்த கொடுமைகளை நிகழ்த்தியும், கிளர்ந்தெழுந்த பஞ்சாபின் அமைதியான நகரங்கள் மற்றும் கிராமங்களின்மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலமாகவும் மக்களின் கோரிக்கைகளை அடக்கி ஒடுக்கிவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துணிந்தபோது, [சாம்ராஜ்யத்தின்] விசுவாசியாகவும், பிரிட்டிஷ் சட்டத்தின் வக்கீலாகவும், பிரிட்டிஷ் நீதியில் நம்பிக்கை கொண்டவராகவும் அதுவரை இருந்த காந்தி, நெஞ்சுறுதிகொண்ட, தர்மாவேசமிகு கலகக்காரராக மனமாற்றம்கொண்டார்; அதன்பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மாபெரும் ஒருங்கிணைப்பாளராகவும், சுதந்திரம் மற்றும் தேசவிடுதலை ஆகியவற்றுக்கான மக்கள் எழுச்சியின் தலைவராகவும் அவரே உருவானார்.
  அவரது தலைமையின்பால் தேசத்தின் நம்பிக்கை பேரலையாய் எங்கும் வீசியதாலும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக மக்கள் கொண்ட மகத்தான கோபாவேசத்தாலும் மக்கள் இயக்கத்தின் உன்னதமிகு தளபதியாக அவர் உயர்ந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை, சைத்தானின் ராஜ்யம் என்று வர்ணித்த அவர், அதனை முற்றாக நிர்மூலமாக்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார். சைத்தானோடும், கயமையுடனும் சமரசத்துக்கு இடமேயில்லை என்றார் அவர்.
  நாடுமுழுதும் லட்சோபலட்சம் மக்களை ஒன்றுபடுத்தி, கட்டுக்கோப்புடன் அவர்களைக் களமிறக்குவதன்பொருட்டு, அகில இந்திய ஹர்த்தால் எனும் போர்வாளை அவர் சுழற்றினார்; அதுவே இன்றைய 'பந்த்' எனும் போராட்ட வடிவத்தின் முன்னோடியாயிற்று. பகிஷ்காரம், மறியல் எனும் கோஷங்களுடன் லட்சோப லட்சம் மக்களை வீதியில் இறங்கிப் போராடச் செய்தார் அவர்; பிரிட்டிஷ் நிர்வாகத்தினருடனும் அவர்தம் சட்டம் ஒழுங்கினைப் பரிபாலிக்கும் சேனைகளுடனும் மக்களின் போர்க்குணமிக்க மோதல்களுக்கு இது வழிவகுத்தது. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை; பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இந்திய மக்கள் அனைவரும் மனதாலும் செயலாலும் விஸ்வரூபம்கொண்டு எழுந்து நிற்கவேண்டும்; இந்த சைத்தானின் ராஜ்யத்திற்கு ஒத்துழைப்பு நல்கக்கூடாது என்றும் அதைக் கவிழ்த்தெறிய வேண்டுமென்றும் அவர் அறைகூவல் விடுத்தார். அந்த சாம்ராஜ்யத்திற்காக உழைக்க மாட்டோம்; அதற்கு வரி செலுத்தமாட்டோம்; அதனிடம் கல்வி பயிலமாட்டோம்; அதற்குப் பணிந்துகிடக்கமாட்டோம் என அறுதியிட்டுக் கூற ஒன்றுபட்ட இந்திய மக்களை அவர் அறைகூவி அழைத்தார். அதுமட்டுமின்றி, இந்தியாவின் சுதந்திரத்தை விழைகின்ற, சுதந்திரத்திற்காக உறுதியான செயலில் இறங்குகிற மக்கள் தேசிய முன்னணியின் மேடையாகவும் அமைப்பாகவும் காங்கிரஸ் கட்சியைக் கட்டினார்.
  மக்களை செயலுக்குக் கொண்டுவரவும், சில சமயம் (இந்து-முஸ்லிம் கலவரங்கள் போன்ற) தவறான நடவடிக்கைகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும் அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்கள் நெறிதவறிப்போகாமல் காக்கவும் சில சந்தர்ப்பங்களில் தனது உயிரைப் பணயம் வைத்தும்கூட அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு, அதனை சுதந்திரப்போரில் ஓர் ஆயுதமாகச் சேர்த்தார். எல்லா சந்தர்ப்பங்களில் இல்லாவிட்டாலும்கூட, அவர் நல்கிய இந்த ஆயுதம், அவரது மகத்தான புரட்சிகர ஆளுமையின் விளைவாகவும், ஒழுக்கத்தினாலும் பயன்மிக்கதாயிற்று.
இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதல் போராட்டமான சம்பாரண் போராட்டத்தின்போது, இந்திய விவசாயிகளின் நிலைமையையும், பிரிட்டிஷ் தோட்டமுதலாளிகளின் ஒடுக்குமுறையையும் மிக நெருங்கி நோக்கினார். இண்டிகோ தோட்ட முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கர ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தீர்க்கமான நிலையை எடுத்ததன் விளைவாக, பிரிட்டிஷ்காரர்களைப் பின்வாங்கச் செய்தார் அவர். போருக்குப் பின்னைய காலத்தில் அகமதாபாத் மில் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தலைமைதாங்கியபோது, தொழிலாளர்களையும், தியாகம்புரிய, துன்பங்களை அனுபவிக்க, போராட அவர்களுக்குள்ள திராணியையும் அவர் கண்டுணர்ந்தார். அதுபோன்றே லட்சாதிபதிகளிடம் விரவிக்கிடக்கின்ற லாப வேட்கையையும், அவர்தம் சுயநலத்தையும் உணர்ந்த அவர், தானும், தொழிலாளர்களும் படுகின்ற துயரங்களைக்கண்டும், "கடவுளின் விருப்பத்தினாலும்" அவர்கள் சாந்தகுணமும், பரிவும் கொள்வர் என்று நம்பினார்.
  ஆயினும், அவரது பிரதான லட்சியத்தை எட்டுவதற்கான முயற்சியைத் தொடரும்பொருட்டு, தனது போராட்டத்தின் இந்த பரிமாணங்களைக் கைவிட்ட அவர், ஒத்துழையாமை யுத்தத்தைத் தொடங்கும் தருவாயில், "சிங்கம் பிடரி சிலிர்த்து எழுந்துவிட்டது" என்னும் புகழ்மிகு கட்டுரையை எழுதினார்; பர்தோலியை நோக்கிப் பயணம் தொடங்கியபோது, "மரணத்தின் நடனம்" என்று அதனை வர்ணித்தார்.
கோபாவேசம் கொண்ட விவசாயிகளின் திரள்மீது குண்டுமழை பொழிந்த சில போலீஸ்காரர்கள் சவுரி-சவுராவில் கொல்லப்பட்ட சம்பவம், மகாத்மாவை தடுமாறச்செய்தது. "மரணத்தின் நடனத்தை" விலக்கிக்கொண்ட அந்த "சிங்கம்" ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று காராக்கிருகம் புகுந்தது. மக்களின் எதிர்ப்பு எவ்வளவுதான் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்தாலும், ஒடுக்குமுறையாளர்கள் எத்தனை அநீதியாளர்களாக, தவறானவர்களாக இருந்தாலும் [பிரிட்டிஷ்] சாம்ராஜ்யமெனும் தீமையை வன்முறையற்ற வழியில்தான் களையவேண்டுமென அவர் வலியுறுத்தலானார்.
  மகாத்மா காந்தி சிந்தனையின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு அவரது பெயரை ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் அல்லது அவர் நடத்திய மகத்தான போராட்டங்களினால் சுய அதிகாரததையும், செல்வத்தையும் பெற்றவர்கள், அவரது சாத்வீக வழிமுறை, பிர்லாவிடம் அவரது மென்மையான அணுகுமுறை அல்லது கடவுள், மதம், கைராட்டை ஆகியவற்றின்பால் அவர் கொண்ட நெருக்கமான ஈடுபாடு என்பதைமட்டுமே கிளிப்பிள்ளை போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
  ஆனால், வெகுஜனங்கள் வன்முறையில் இறங்கியதால் மகாத்மா காந்தி தனது இயக்கத்தை விலக்கிக்கொண்ட போதிலும், 1930 அல்லது 1942 மற்றும் 1945-ஆம் ஆண்டுகளில் அவர் முன்னெடுத்து நடத்திய, இறுதியில் இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்கக் காரணமாக அமைந்த போராட்டங்களின்போது அந்தத் தவறை அவர் செய்யவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
  அந்தப்புதிய காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஒடுக்குமுறையாளர்கள் மக்களின் வன்முறைசார்ந்த, போர்க்குணமிக்க தாக்குதல்களைச் சந்திக்க நேர்ந்தபோது, அவற்றை அவர் கண்டனம் செய்யவேண்டுமென பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும், அவற்றுக்கு அவர் செவிமடுக்க மறுத்துவிட்டார். சாத்வீக சிந்தனைக்கு ஆட்பட்டிருந்தபோதிலும், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் "மிருகத்தனமான வன்முறை" தான் மக்களின் பதிலடிக்குக் காரணம் எனும் நிலையெடுத்தார் அவர்.
அவரது தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை, ஸ்தாபனத்தின்மீதும் மக்களின் துடிப்புமிகு போராட்டத்தின்மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று, எவையெல்லாம் மனிதனை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதாகவும், தரம் தாழ்த்துவதாகவும், மனிதாபிமானமற்றதாகவும் இருக்கின்றனவோ அவற்றின்பால் கொண்ட அளவற்ற வெறுப்பு ஆகியவைதான் மகாத்மாவின் மிகவுயரிய பண்புகள் என்பதை அவரது பிறந்த நூற்றாண்டு தினத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் நினைவில்கொள்ள வேண்டும். தீமையை வீறுகொண்டு எதிர்க்க வேண்டும்; அதற்குத் தாழ்ந்து பணிந்துவிடக்கூடாது என்றார் அவர்.
  ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிக்கவும், இந்திய மக்களைப் பிளவுபடுத்த அது மேற்கொள்ளும் தந்திரோபாயங்களைத் தகர்த்தெறியவும், இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற பிரதான முழக்கமாக இந்து-முஸ்லிம் ஒற்றுமை உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டுமென, தீர்க்கதரிசனத்துடன் கூறினார் அவர்.
விசுவாசமான இந்து என்றமுறையில், இந்து சமூகத்தின் வர்ணாசிரமத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், தனக்கு முன்னதாக, எந்தக் கருத்தை முன்மொழிந்ததால் சுரண்டும் வர்க்கத்தினர் மற்றும் சாதியினரின் நிந்தனைக்கு எண்ணற்ற இந்து மனிதநேயத் துறவிகள் ஆளானார்களோ அதே கருத்தான, தீண்டாமையை ஒழித்தல் என்பதை, மகத்தான மனிதாபிமானியான அவர் வலியுறுத்தினார்.
  கைத்தொழில், கிராம வாழ்வு என்கிற பழைய உலகுக்கு இந்தியாவைக் கொண்டு செல்ல வேண்டும்; நவீன யந்திர உலகை விட்டொழிக்க வேண்டுமென ஆரம்பத்தில் அவர் கனவுகண்டாலும், கடந்த காலத்திற்குத் திரும்பவேண்டுமெனும் அந்தக் கருத்திலிருந்து விடுபட்ட அவர், இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருக்கு உதவும் பட்சத்தில் மட்டுமே, நவீன தொழிற்சாலைகளை உருவாக்கவும், நல்ல நாணயப்பரிவர்த்தனை கிட்டவும், தொழிற்சாலை அதிபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் முன்வந்தார்.
  அவர் வாழ்ந்து, காங்கிரசுக்குத் தலைமையேற்ற காலத்திலேயே கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இன்னபிறர் உள்ளிட்ட பலரும், அவருடனும், அவரது சித்தாந்தம், சில வர்க்க சேர்மானங்கள் மற்றும் வழிமுறைகளின்பால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். இருப்பினும், நாடு சுதந்திரம் அடையும் பொருட்டு, மக்களின் போராட்டத்திற்கான அமைப்பாகவும், தலைமைதாங்கும் ஸ்தாபனமாகவும் மகாத்மாவால் உருவாக்கப்பட்ட காங்கிரசின் வடிவிலிருந்த தேசிய முன்னணியில் அவர்கள் அனைவரும் செயலாற்றினர்.
  போராட்ட வழிமுறைகள், பின்பற்றப்படவேண்டிய தந்திரோபாயங்கள் ஆகிய பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுகள் மேலோங்கியபோது, புதிய சிந்தனைப் போக்குகளுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்றும், புதிய கட்சிகள் காங்கிரசிலும் இயக்கத்திலும் பங்கேற்க அனுமதிக்கலாகாது எனவும் பிற்போக்குப்பழமைவாதிகள் கோரினர்.
  ஆனால், இத்தகைய கருத்துவேறுபாடுகளின் காரணமாகக் கட்சிகள் அல்லது குழுக்களுக்குத் தடைவிதிக்கவேண்டுமெனும் இந்தக் கோரிக்கையை மகாத்மா ஏற்க மறுத்தொதுக்கினார். பிற்போக்குப் பழமைவாதத்தை எதிர்த்துச் சமர்புரிந்ததோடு மட்டுமல்லாமல் அவர், தன்னைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பதவி அதிகாரத்திற்கான மோகத்தையும் சாடினார்; அவர்களிடம் ஊழலைக் கண்டபோதெல்லாம் அதனை அம்பலப்படுத்தினார்.
ரஷ்ய நாட்டின் மகத்தான மனிதாபிமானியாகவும், ஜனநாயகவாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் விளங்கிய டால்ஸ்டாயுடன் அவர்கொண்ட நட்பு, 1905-ல் நிகழ்ந்த புரட்சிகுறித்துக் கேள்விப்பட்டதும் ரஷ்யா நலம்பெற அவர் வாழ்த்துவதற்கு வழியேற்படுத்தியது; போல்ஷெவிக்குகளின் நாத்திகத்தை அவர் விரும்பாவிடினும், ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து 1917-ஆம் வருடத்திய மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியைச் சாடியவர்களுடன் அணிசேர மறுத்துவிட்டார் அவர்.
  அவரது பல நடவடிக்கைகளும், கருத்துக்களும் தெளிவற்றதாகத் தோற்றம் கொண்டாலும், உலகம் உருவாக்கிய மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டக்காரர்களில் ஒருவர் மகாத்மா காந்தி; மனிதகுல வரலாறு தோற்றுவித்த மகத்தான மனிதாபிமானி அவர்; தேசவிடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான இந்தியப் புரட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் அவர் என்பதும் நிச்சயமே.
சுதந்திரச் சமரிலும், இனவெறி, சமத்துவமின்மை, ஒடுக்குமுறை, தீண்டாமை, மக்களைப் பிளவுபடுத்தி ஒற்றுமையைச் சீர்குலைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில், தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில் தூய்மையை நிலைநாட்டுவதற்காக நடந்த போரில் உயிர்நீத்த தியாகிகளின் புரட்சிகர நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இந்த விஷயங்கள், நம்மை எழுச்சிகொள்ளச் செய்ய அவரது பிறந்ததின நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும்.
  அரசு அதிகாரம் மற்றும் செல்வ ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்த அவரது போர்க்குணம், மனிதனின்-குறிப்பாக ஏழைகள், தரித்திரநாராயணர்கள், ஒடுக்கப்பட்டவர்களின்-கண்ணியத்தைக் காக்க அவர் எடுத்த நிலை ஆகியவற்றை எண்ணிப்பார்த்துப் பின்பற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உழைப்பின் மகத்துவத்தைப் போற்றிய அவர், அதன் குறியீடாக தினமும் கைராட்டையில் நூல் நூற்றார்.
  இன்று சுதந்திரத்தை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் சோஷலிசத்திற்காகப் போராட வேண்டும்; அதுதான் பணமூட்டைகளின் அதிகாரத்திற்கு இறுதியாக முடிவுகட்டி, சுதந்திர இந்தியாவின் வயல்வெளிகளிலும், தொழிற்சாலைகளிலும் கரத்தாலும் சிரத்தாலும் உழைத்து வாழ்கின்ற கோடானுகோடி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும்.
  1869-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்தபோது, இந்தியாவின் [முதல்] சுதந்திரப் போரில் பங்கேற்ற சக்திகள் பின்னடைவை சந்தித்திருந்தன; பிரஞ்சு-ஜெர்மானிய போர் மேகங்கள் ஐரோப்பாவைச் சூழ்ந்து, அதிலிருந்து ஏகாதிபத்தியம் முளைத்தெழுந்து உலகமுழுவதற்கும் தீங்கு ஏற்படுத்திய காலம் அது.
  ஆனால், 1948-ல் அவர் மறைந்தபோது, ஏகாதிபத்தியம் புறமுதுகிட்டோடத் தொடங்கியிருந்தது; உலகின் மூன்றில் ஒருபகுதியில் சோஷலிசம் மலர்ந்திருந்தது; காலனியாதிக்க சாம்ராஜ்யங்கள் கலகலத்துக்கொண்டிருந்தன. இந்தியா போன்றதொரு கேந்திரமான பகுதியில், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சியில் அவர் மகத்தான பங்கு வகித்தார். இந்தியா முற்போக்கான பாதையில் நடைபோடுவதையும் ஜனநாயகப் புரட்சியில் முன்னேறுவதையும் தடுக்கவேண்டும் எனும் தீய நோக்கத்துடன், கேடுகெட்ட ஒரு கொலைகாரன் அவரது உயிரைப் பறிக்கும் வரை இந்தப் பணியைச் செய்தார்.
  மகாத்மா காந்தியெனும் தன்னலமற்ற தலைவரின் புரட்சிகரமான, ஜனநாயகபூர்வமான, முற்போக்கான, மனிதகுலத்தை ஒன்றுபடுத்துகின்ற கொள்கைகள் அனைத்தையும், தீரமிகு அந்தப் போராட்டக்காரரின் அடிபணியாமை எனும் பண்பையும் முன்னெடுத்துச் செல்ல அவரது இந்த நூற்றாண்டு பிறந்த தினத்தில் சபதமேற்போமாக!

தமிழில்: விதுரன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP