Tuesday, April 30, 2013

மேதினி போற்றும் மேதினம்:





தொழிலாளர் மற்றும் மே தினங்கள்:

ஓரளவு தெரிந்த சில தனிச்சிறப்புகள்


அனில் ரஜிம்வாலே

ர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மேதினம் பற்றி நாம் அறிந்திராத சில தனிச்சிறப்புகள் உள்ளன; சில புனைந்துரைகளை அல்லது செவிவழிக்கதைகளை விளக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஓரளவு தெரிந்த உண்மைகளை விரித்துரைக்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் தினம் மேதினமாக உருவாகவில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான். மேதினம் தொடங்குவதற்குச் சற்று முன்னரே-சொல்லப்போனால், அமெரிக்காவில் தொழிலாளிவர்க்க இயக்கம் தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பதை நீண்ட பாரம்பர்யமாகக் கொண்டிருந்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி பல்வேறு இடங்களில் தோன்றிய மக்கள் எழுச்சி ஆகியவற்றின் ஓர் அங்கமாகத் தொழிலாளிவர்க்க இயக்கம் விளங்கியது. 1770களில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப்போரிலும், 1860களில் அங்கு நடந்த உள் நாட்டுப்போரிலும் அது பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டிருந்தது.
வேறெங்கும் தோன்றுவதற்கு முன்னரே இங்கிலாந்தில் தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. 18-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் என அதைச் சொல்லலாம். ஐரோப்பாவின் பல நாடுகளில் இத்தகு அமைப்புகள் தோன்ற ஆரம்பித்தபோது, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவடையத் தொடங்கின.
அக்காலகட்டத்தில்தான், அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படலாயின. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதல் தொழிற்சங்கங்கள் அமெரிக்காவில் அமைக்கும் பணி தொடங்கிற்று. சான்றாக, 1792-ல் ஃபிலடெல்ஃபியாவின் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு, பால்டிமோரின் தையல் தொழிலாளர்களுக்கு, நியூயார்க்கின் அச்சகத் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் அமைக்கப்பட்டன. 1796 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளில், நியூயார்க்கில் முறையே தளவாட மரச்சாமான்கள் செய்யும் தொழிலாளர்களுக்கும், கப்பல் கட்டுமானத் தொழிலாளர்களுக்குமான சங்கங்கள் அமைக்கப்பட்டன. வேலைநிறுத்தத்தைத் தகர்ப்பதை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இது அந்த நாட்டின் தொழிலாளர் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வேலைநிறுத்தத்தைத் தகர்ப்பது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. அப்படித் தகர்ப்பவர்கள் சங்கங்களிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்கள்.
1830-களில், குறிப்பாக, 1833-1837-ஆம் ஆண்டுகள் அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் மிக வேகமாக விரிவடைந்த காலம். நெசவாளர்கள், புத்தகங்கள் பைண்ட் செய்வோர், தையல் தொழிலாளர்கள், காலணி தயாரிப்பவர்கள், பெண் தொழிலாளர்கள் உட்பட ஆலைத் தொழிலாளர்கள் அவர்களில் உண்டு.
அந்த காலகட்டத்தில், தொழிலாளர் அமைப்புகளின் உள்ளூர் சங்கங்கள் முதன்முதலில் அமைக்கப்பட்டன. ஃபிலடெல்ஃபியாவின் இயந்திரப்பட்டறைத் தொழிலாளர் சங்கம் (1827), பால்டிமோர், நியூயார்க், போஸ்டன் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற சங்கங்களும் இதில் அடங்கும். 1836-ஆம் ஆண்டில், ஒன்றோடொன்று தொடர்புகொண்ட தொழிற்சங்கங்கள் 13 நகரங்களுக்கிடையே இருந்தன. நியூயார்க்கில் (1833-ல்) அமைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பொதுத் தொழிற்சங்கங்கமும் இதில் அடங்கும். இச்சங்கம் மிகத் திறனுடன் செயல்பட்டது. வேலை நிறுத்தத்திற்கென்றே நிரந்தர நிதியை அது கொண்டிருந்தது. நாளிதழையும் வெளியிட்டது. மற்ற நகரங்களிலும் தொடர்பு வைத்திருந்தது. தேசிய அளவில் அமைப்புகள் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக, 1834-ல் தேசிய தொழில் கூட்டமைப்பு (ந்ஏஷனல் டிரேட்ஸ் யூனியன்) தோற்றுவிக்கப்பட்டது.
வேலை நேரத்தைக் குறைக்க சில ஆரம்பகால போராட்டங்கள்:
வேலை நேரத்தைக் குறைப்பதற்கான போராட்டமே அமெரிக்கத் தொழிலாளிவர்க்கம் நல்கிய ஆரம்பகால, திறன்மிகு பங்களிப்பாகும். 1832-ல் வேலை நேரத்தைப் பத்து மணியாகக் குறைக்க நியூ இங்கிலாந்து ஆண் தொழிலாளர் சங்கம் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தியது. இந்த இயக்கத்தின் தலைவர்கள், ஏற்கனவே அரசியல் முழக்கங்களை எழுப்பிவந்தனர். இந்த சங்கத்தில் சேத் லூதர் போன்ற தலைவர்கள், இங்கிலீஷ் தொழிற்சாலை முறைமையை அப்படியே அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதை எதிர்த்தார்கள். அமெரிக்கத் தொழிலாளிவர்க்கம், சுதந்திரப் பிரகடனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. மேலும், தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப் படவேண்டுமானவும் கோரியது.
இங்கு முக்கியமானதொரு வரலாற்று உண்மையைக் குறிப்பிட்டாக வேண்டும். 1776 அமெரிக்கப் புரட்சியில் உழைக்கும் மக்களும், கறுப்பின மக்களும் நெருங்கிய இணைப்பும் ஆர்வமும் கொண்டிருந்தார்கள். பெரிய அளவில் அடிக்கடி நடைபெற்ற அதன் கொண்டாட்டங்களில் பொதுவான தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.
சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பரந்த அளவில் பங்கேற்றனர். எடுத்துக்காட்டாக, பெனிசில்வேனியா 11-வது படைப்பிரிவின் வீரர்களில் மிகப்பலர் தொழிலாளர்களே! ரூடி தீவு மற்றும் 72 மசாசூசெட்ஸ் நகரங்கள், பெனிசில்வேனியா ஆகிய பகுதிகளிலிருந்தும், கறுப்பின மக்கள், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் ராணுவத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
அமெரிக்கப் புரட்சியின் ராணுவம், மக்கள் ராணுவமாகும். அதுமட்டுமின்றி, அதன் முழக்கங்களும், நோக்கங்களும் அமெரிக்கத் தொழிலாளிவர்க்க இயக்கத்தில் அழிக்கவொண்ணா முத்திரை பதித்தன.
பல தலைமுறைகளாக, ஜூலை 4-ஆம் நாள், உழைக்கும் மக்கள் தினம் போன்றே கொண்டாடப்பட்டது. கூட்டங்கள், வரவேற்புக்கள், விழாக்கள், அணிவகுப்புகள், பேரணிகள் ஆகியன இதன் அங்கமாக இருந்தன. தொழிலாளர்களின் கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் அதுபோழ்தில் முன்வைக்கப்பட்டன.
1835-ஆம் ஆண்டுவாக்கிலேயே, அமெரிக்காவில் சில பகுதிகளில் அந்நாட்டுத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலை என்பது சாத்தியமாகியது. அந்த ஆண்டில், ஃபிலதெல்ஃபியாவில் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாளொன்றுக்கு 10 மணி நேர வேலை என்பதை நகர நிர்வாகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது, இந்தக் கோரிக்கைக்கான நாடுதழுவிய இயக்கத்திற்கு வழிகோலியது. இதன் விளைவாகப் பெரும் எழுச்சி பிரவகித்தது.
பத்து மணி நேர வேலை நாள் நியூ ஹாம்ஷைர் சட்டமன்றத்தில் 1847-ல் முதன்முதலாகச் சட்டமாக்கப்பட்டது. பின்பு, 1848-ல் பெனிசல்வேனியா, மைனி ஆகிய மாகாணங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. 1860-களில், அமெரிக்கா முழுவதும் 10 மணி நேர வேலைநாள் சட்டவிதியாக அமலுக்கு வந்தது.
அரசியல் அமைப்புகள்:
தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் கட்சிகள், ஐரோப்பாவில் தோன்றுவதற்குச் சற்று முன்னரே, அமெரிக்காவில் முகிழ்க்கலாயின. அமெரிக்காவில் கற்பனா சோஷலிச (உடோபியன் சோஷலிசம்) இயக்கத்திற்கு வலுவான பாரம்பர்யம் உண்டு; இந்தக் கற்பனாவாத, தற்சார்புகொண்ட காலனிகளைப் பரிசோதித்துப்பார்ப்பதற்கு ஏதுவான அதன் விரிந்துபரந்த பூகோளப்பரப்பு இதற்குரிய காரணிகளில் ஒன்றாகும். தாமஸ் ஸ்கிட் மோர், ஜார்ஜ் ரிப்ளே, ஃப்ரான்சிஸ் ரைட், ராபர்ட் டேல் ஓவன் (புகழ்பெற்ற ராபர்ட் ஓவனின் மகன்), ஹோரேஸ் க்ரீலே மற்றும் பலர் அன்றைய காலத்தில் அமெரிக்கத் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் தலைவர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள். ஓவன், பவுரியர் மற்ற பிறரின் செல்வாக்கால் அநேக கற்பனாவாத சோஷலிஸ்ட் அமைப்புகள் தோன்றலாயின. இதற்குப் பின்பு, முதலாவது அகிலத்தின் தாக்கத்தால் பெரும்பாலோர் மார்க்சீயத்தையும் விஞ்ஞான சோஷலிசத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
1828-ல் ஃபிலதெல்ஃபியாவில் முதன்முதலில் தொழிலாளர்களின் அரசியல் கட்சி (அமெரிக்காவில்) அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆறு ஆண்டுகளில், அறுபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் தொழிலாளர் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. பத்துமணி நேர வேலை நாள், குழந்தைகளின் கல்வி, கட்டாய ராணுவ சேவையைக் கைவிடுவது, திவாலான கடனாளிகளுக்குச் சிறைத் தண்டனையை நீக்குவது, ஊதியத்தைப் பணமாக வழங்குவது, வருமான வரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற சமூக, அரசியல் ரீதியிலான அவர்களின் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
நகராட்சி மற்றும் மாநில சட்டமன்றம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர் கட்சிகள் போட்டியிட்டன. ஃபெடரல் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவோடு 1829-ல் தொழிலாளர் கட்சிகளின் இருபது வேட்பாளர்கள் ஃபிலதெல்ஃபியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பத்துமணி நேர வேலைக்கான போராட்டத்தின் பயனாக, நியூயார்க்கில் உழைக்கும் ஆண்கள் கட்சி தொடங்கப்பட்டது. 1829-ல் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்தன; அதன் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பேட்டர்சன், நியூஜெர்சி ஆகிய நகரங்களிலிருந்த ஆலை உரிமையாளர்கள், இரவு உணவு நேரத்தை 12 மணியிலிருந்து 1 மணிக்கு மாற்ற முனைந்தபோது, 1828-ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தொழிலாளர்களில் அதிகம்பேர் சிறார்கள். இப்படியே போனால், சாப்பாட்டு நேரத்தையே நிர்வாகம் நீக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடமிருந்தது. வேலை நிறுத்தத்தை உடைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
1820, 1830-களில் நடைபெற்ற பல போராட்டங்களில் பெண்கள் முன்னணியில் இருந்தார்கள். இதனால் ஆலைகளில் கூட பெண்கள் சங்கம் 1834-ல் அமைக்கப்பட்டது.
பிற கட்சிகள் பலவற்றிலும், அதிலும் குறிப்பாக-ஜனநாயக, குடியரசுக் கட்சிகளிலிருந்த தொழிலாளர்கள் முனைப்பாக இருந்தார்கள். உண்மையில், இக்கட்சிகள் பெருமளவு தொழிலாளர்களைச் சார்ந்திருந்தன. அன்றைய காலத்தில், இக்கட்சிகள் பிற்காலத்தில் மாறியதுபோல் அல்லாமல், தொழிலாளர்கள், அவர்தம் கோரிக்கைகள் மற்றும் இயக்கத்தோடு நெருங்கியிருந்தன.
நாம் ஏற்கனவே கூறியபடி, மேதினம் கொண்டாடப்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே, அமெரிக்காவில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கும் மரபு இருந்தது. மீண்டும் மீண்டும் தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக, செப்டம்பரில் ஒரு நாள், அதிலும் குறிப்பாக முதல் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கும் பழக்கம் இருந்தது. இவை பெரும் விழாக்கள் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களாக அமைந்தன. தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் ஊர்வலமாக வருவதும், கூட்டங்கள் நடத்துவதும் இதன் அங்கம். ஜூலை 4-ஆம் தேதியைத் தொழிலாளர் தினமாக அனுஷ்டிப்பது பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம்.
அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்திலும், அவர்களின் தொழிற்சங்கங்களிலும் நடைபெற்ற சில நிகழ்வுகளே தொழிலாளர் தினம், மேதினம் ஆகியவை உருவாவதற்கான உந்து சக்தியாக விளங்கின. அமெரிக்காவில் இரண்டு பெரிய தேசிய தொழிற்சங்கங்கள் இருந்தன: அவற்றில் ஒன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் (Knights of Labour); மற்றொன்று அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் (American Federation of Labour-AFL). தொடக்கத்தில், இது அமெரிக்கா மற்றும் கனடாவின் அமைப்புரீதியான தொழில் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் (Federation of Organised Trades and Labour Unions-FOTLU).
1882 மே 18-ல் நடைபெற்ற நியூயார்க் மத்திய தொழிற்சங்கக் கூட்டத்தில் விழாவாகக் கொண்டாட ஒரு நாளை ஒதுக்க வேண்டுமென பீட்டர் மெக்குயர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். செப்டம்பரில் முதல் திங்கட்கிழமை இதற்கென ஒதுக்கலாம் எனவும் அவர் பரிந்துரை செய்தார். இது ஜூலை நான்காம் தேதிக்கும் அறுவடைத் திருநாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வரும்.
நியூயார்க் நகரிலுள்ள தெருக்களில் செப்டம்பர் 5-ஆம் தேதி, எல்லாத் தொழில்களையும் சேர்ந்த 30,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக வலம் வந்தனர். அங்குதான் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரம் தமது சொந்த வேலை என்ற கோஷம் முழஙகப்பட்டது. 1883-ல் இதே நிகழ்வு மீண்டும் நடைபெற்றது. 1884-ல் நியூயார்க் மத்திய தொழிற்சங்கம் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை (அது செப்டம்பர் முதல் தேதியாகும்) தொழிலாளர் பேரணி நடத்த முடிவு செய்தது. வேறு நகரங்களிலுள்ள தொழிலாளர்களும் இதைப் பொதுவான விடுமுறையைப் போல் கொண்டாடவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பல நகரங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
தொழிலாளர் கூட்டமைப்பு (எஃப்.ஓ.டி.எல்.யு) 1884-ல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையைத் தொழிலாளர்களின் தேசிய விடுமுறை நாள் போன்று அனுஷ்டிக்க வேண்டும் என முடிவு செய்தது. நாடுமுழுவதும் இந்த அறைகூவல் எதிரொலித்தது. செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை முதலில் தேசிய அளவில் அனுஷ்டிப்பதானது 1885 செப்டம்பர் 7-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, மேலும் பல மாநிலங்களில் தொழிலாளர் தினம் விடுமுறை நாளாகப் பின்பற்றப்பட்டது.
இந்த சங்கங்களும் அவற்றின் தேசிய அமைப்புகளும் வர்க்க ஒருமைப்பாட்டை, குறிப்பாக, எட்டுமணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது மே முதல் நாளன்று அனுஷ்டிக்க முடிவு செய்தன. இதை 1886 மே மாதம் முதல் நாள் தொடங்கி  நடத்த அவர்கள் முடிவு செய்தார்கள். சில மாநிலங்களில் 8 மணி நேர வேலை என்பதற்கான சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இதற்கான தேசிய சட்ட அங்கீகாரம் பெறவேண்டியிருந்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 1886 மே முதல் நாள் அமெரிக்கா முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
1886 மே மாதத்திற்கு முன்பு ஒரு சில ஆண்டுகளில் பல்வேறு தேதிகளில் அல்லது நாட்களில் தேசிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பரில் ஒரு நாள், எடுத்துக்காட்டாக, 1884-ஆம் ஆண்டு நடத்த ஆலோசிக்கப்பட்டது. 1885, 1886-ஆம் ஆண்டுகளில்தான் தேசிய தொழிற்சங்கங்கள் தேசிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டிருந்தன.
உண்மையில், 1886 மே மாதத்தில் தேசிய அளவில் நடைபெற்ற இயக்கம், குறிப்பாக, முந்தைய ஆண்டுகளைப்போல் செப்டம்பரில் நடத்தவே ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அது வாணிப சுழற்சிக்காலம் என்பது உட்பட பல்வேறு காரணங்களால் மே மாதத்திற்கு மாற்றப்பட்டது.
இதே காலத்தில்தான், நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலை என்பதற்கான போராட்டம், எட்டு மணி நேர வேலை என ஆக்குவதற்கான போராட்டமாக மாற்றம் பெற்றது.
மேதினம் பற்றிய எஞ்சிய வரலாறு நன்கு அறியப்பட்டதுதான் என்பதால் அதனை இங்கு நான் மீண்டும் கூறவில்லை.
எனினும் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. 1886 மேதின நிகழ்வுகளின்போதுதான் செங்கொடி பிறந்தது என்கிற பிரச்சாரம் தவறானது. 1886க்கு முன்னரே அமெரிக்கா முழுவதும் செங்கொடியைப் பரவலாகக் காணமுடிந்தது. 1840, 1850, 1860-களிலேயே கூட்டங்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்களின்போது தொழிலாளர்கள் செங்கொடிகளையும் செம்பதாகைகளையும் ஏந்தி வந்தனர்.
இதுதவிர, ஐரோப்பாவில் 1830-களிலேயே உழைக்கும் வர்க்கத்திற்குரிய பிரத்யேக சின்னமாக செங்கொடி ஆகிவிட்டது. 1832 ஜூனில், தொழிலாளர்கள் தமது அரசியல் குறியீடாகச் செங்கொடியை பாரீஸ் எழுச்சிப் போராட்டங்களின்போது ஏற்றினார்கள்.
இந்தியாவில் மேதினம்:
1862 ஏப்ரல்-மேயில், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்த 1200 தொழிலாளர்கள் சில நாட்கள் செய்த வேலை நிறுத்தத்தை இந்தியாவில் நடைபெற்ற ஆரம்பகால வேலை நிறுத்தங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். இதில் ஆர்வத்துக்குரிய செய்தி என்னவெனில், அவர்களின் கோரிக்கையும், எட்டுமணி நேர வேலை என்பதேயாகும். லோக்கோ பிரிவுத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. எனவே, ஹவுரா ரயில் நிலையத் தொழிலாளர்களும் அதையே கோரினார்கள். அமெரிக்காவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மேதினத்திற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் மேதினம் அனுஷ்டிக்கப்பட்டதற்கான ஆரம்பகாலச் சான்றுகள் சிலவற்றைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம். நாம் அறிந்தவரை, இந்தியாவில் 1923-ல் மேதினம் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொடக்ககால கம்யூனிஸ்டுகளில் சிங்காரவேலு செட்டியாரும் ஒருவர்; தென்னிந்தியாவின் தொழிலாளர் தலைவர் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தில் செல்வாக்குடையவர். உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் கொண்டாடுவதால், இந்தியாவிலும் மேதினம் கொண்டாட வேண்டுமென்று 1923 ஏப்ரலில் ஓர் ஆலோசனையை முன்வைத்தார் சிங்காரவேலு செட்டியார். இந்நிகழ்வின்போது நாடுமுழுவதும் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கூறினார். சென்னையிலும் மேதினம் கொண்டாட வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சென்னையில் அந்த நாளில் பேரணிகளுடன் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன: ஒன்று வடசென்னை தொழிலாளர்கள் கலந்துகொண்ட கூட்டம். இது உயர்நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள கடற்கரையிலும், தென்சென்னைக்குரிய பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் நடைபெற்றன. லேபர் கிசான் கட்சி அமைக்கப்பட்டுள்ளதாக அன்றைய தினம் அறிவித்தார் சிங்காரவேலு செட்டியார். இந்தக் கூட்டங்களில் அநேக காங்கிரசாரும் பங்குகொண்டனர்.
உயர்நீதி மன்றத்திற்கு அருகமைந்த கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிங்காரவேலு செட்டியார் தலைமைவகித்தார். மற்றொரு கூட்டமோ எஸ்.கிருஷ்ணசாமி சர்மா தலைமையில் நடைபெற்றது. லேபர் கிசான் கட்சியின் அறிக்கையை பி.எஸ்.வேலாயுதம் படித்தார்.
இக்கூட்டங்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளியானது. மாஸ்கோவிலிருந்து வெளியான தி வேன்கார்டு பத்திரிகை, இதை இந்தியாவில் நடைபெற்ற முதல் மேதினம் (ஜூன் 15, 1923) என வர்ணித்தது.
1927-ல் மீண்டும் சிங்காரவேலு செட்டியார் முயற்சியால் மேதினம் கொண்டாடப்பட்டது. இம்முறை சென்னையிலுள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. பிற்பகலில் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர் விருந்தளித்தார். மாலையில் ஊர்வலம் நடைபெற்றது. டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டமாக அந்தப் பேரணி மாற்றப்பட்டது. அங்கு உடனே செங்கொடி கிடைக்காததால், சிங்காரவேலு, தமது மகளின் சிவப்பு சேலையைக் கொடியாக்கி அதைத் தனது வீட்டின்மீது ஏற்றினார்.
மேதினம், குறிப்பாக செங்கொடி, தொழிலாளிவர்க்க வரலாறு ஆகியவற்றில் நாம் அறிந்ததைக் காட்டிலும் ஆர்வத்தைத் தூண்டுகிற, அறிவார்ந்த எண்ணிலடங்கா செய்திகள் உண்டு. 
Courtesy: MAINSTREAM, MAY 1, 2010 (LABOUR DAY AND MAY DAY: SOME
 LESSER KNOWN FEATURES/ANIL RAJIMWALE)
 
தமிழில்: இளசை மணியன்
 






Read more...

Sunday, April 14, 2013

யுகப்புரட்சியின் நாயகர்


வரலாற்றில் முத்திரைபதித்த

மாபெரும் புரட்சியாளர்


அனில் ராஜிம்வாலே
வ்வுலகில், 54 ஆண்டுகளே வாழ்ந்தார் லெனின். வரலாற்றில் அவரைப் போன்று இன்னொரு லெனினைக் காண்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல. வாழ்ந்த 54 ஆண்டுகளுக்குள், உலக வரலாற்றில் அவர் ஆழமான தாக்கத்தை உருவாக்கினார். அவர், தத்துவங்களை ஆய்வு செய்த்தோடு, அவற்றை நடைமுறைப்படுத்தி, இதுவரை உலகம் கண்டிராத மகத்தான புரட்சியை நடத்தியவர்.
லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிறந்தார். மிகக் கடுமையான முரண்பாடுகளை அவர் முற்றாக உணர்ந்துகொண்டார். எனவேதான் அவரால் மார்க்சியத்தை மேலும் உயர்மட்டங்களுக்கு வளர்த்தெடுத்துச் செல்லவும், ஒருசமூக- அரசியல் மாற்றத்திற்குத் தலைமையேற்கவும் முடிந்தது.

அவருக்கு இது எவ்வாறு சாத்தியமாயிற்று? அவர் இயக்கவியலைக் கற்றுத் தேர்ந்தது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஹெகல் பற்றிய கட்டுரை ஒன்றில், மார்க்சியவாதிகள் ஹெகல்பற்றிய புரிதல் இன்றியே பணியாற்றிவந்துள்ளனர் எனக் குறிப்பிட்டதோடு,  இது உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் எனவும் கூறினார். எனவே, அவர் ஹெகலைக் கற்றுணரத் தலைப்பட்டார். ஹெகலின் இயக்கவியலைக் கற்றுணர்ந்த வெகுசிலரில் லெனினும் ஒருவர். லெனினது தொகுப்புநூல்களின் 38வதுதொகுதி இதற்குச் சான்றாக விளங்குகிறது. இவ்வாறாக, அரிஸ்டாடில், ஹெகல், மார்க்ஸ் ஆகியோரைப் போன்று மிகப்பெரிய தத்துவஞானியாக லெனின் திகழ்ந்தார்.

உலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறிவரும் காலத்தில் லெனின் வாழ்ந்தார். மற்றெல்லோரைக் காட்டிலும் இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு ஏகாதிபத்தியம் பற்றிய சில முடிவுகளை மேற்கொண்டார். ஏகாதிபத்தியம் பற்றி அவர் மேற்கொண்ட முடிவுகள் இன்றுவரை தத்துவம் மற்றும் நடைமுறைப் பணிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை அவர் ஐரோப்பிய நாடுகளில் கழித்தார். அவர் மிகுந்த ஆர்வத்தோடும், மிக ஆழமாகவும், மிக வேகமாகவும் படித்து, தனது காலத்தில் உருவாகிவரும் மிகப் பெரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டார். அதனையொட்டி ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியதோடு, அக்கட்சியை வழி நடத்தினார். அதே வேளையில் அவர், இரண்டாவது அகிலத்திலும் பங்கேற்றுச் செயல்பட்டார். இரண்டாவது அகிலத்தில் பணியாற்றும் வேளையில்தான், தொடங்கவிருந்த முதல் உலகப்போருக்கான எதிர்ப்பை முறைப்படுத்த முயன்றார். அதோடு புரட்சிகர நெருக்கடியை இணைத்தார். இது மேற்கு ஐரோப்பாவில் புரட்சி உருவாக வழி வகுத்து, புகழ்வாய்ந்த ரஷ்யப் புரட்சியையும் வழி நடத்தியிருக்கும்.

ஏகாதிபத்தியச் சங்கிலியின்பலவீனமான கண்ணிஎன லெனின் ரஷ்யாவை அடையாளம்கண்டிருந்தார். இதனால் மேற்கத்தியத் தலைவர்கள் லெனினை எதிர்த்ததோடு, முதலாளித்துவ அமைப்பின் எதிரி என அவரைச்சாடினர். இது லெனினது ஆற்றலுக்கும் வரலாற்றில் அவர் வகித்த பங்கிற்குமான புகழாரமாகும்.
1905-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தோல்விக்கு முன்னரே, லெனின் ரஷ்யாவின் விவசாய உறவுகள் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டார். முதலாளித்துவ உறவுகள் எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகின்றன என்பதைத் தனது ஆய்வில் அவர் எடுத்துக்காட்டினார். இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதற்காக அவர் நரோத்னிக்குகளை விமர்சித்தார். அந்த விமர்சனம் நமது நாட்டின் இன்றைய போலி புரட்சியாளர்களுக்குப் பொருந்தும். இந்த விமர்சனத்தை அவரது பிரபலமானமக்களின் நண்பர்கள் யார்?என்ற நூலில் குறிப்பிட்டார். இதனுடைய தொடர்ச்சியாகரஷ்யாவில்  முதலாளித்துவ வளர்ச்சிஎன்ற ஆய்வை மேற்கொண்டார்.

இந்த நெருக்கடிக்களுக்கிடையே லெனின் மற்றொரு நெருக்கடிமீதும் கண்வைத்திருந்தார். அது அணுபற்றியது. சித்தாந்தத்திலும் அவரது பார்வை பதிந்தே இருந்தது. அவரது  ‘பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற நூலைப்படிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது. அவரது காலத்தில் இயற்பியலில்  எந்தவொரு கோட்பாட்டையும் அதன் விளைவாக உருவாகும் சிந்தாந்த முரண்பாடுகளையும் அவர் கவனத்தில் கொண்டிருந்தார். சித்தாந்தம் நெருக்கடியில் இருந்தது. அனைத்து இயற்கை விஞ்ஞானக் கோட்பாடுகளையும் கற்றறிந்தபின் அவர் பொருள்முதல்வாதத்திற்கு ஆதரவாக நின்றார். தனது நூலினைக் கட்சி உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார். இது 1909- ஆம் ஆண்டில் நடந்தது.
தொழிலாளி வர்க்கத்திற்கு தேவையானது தெளிவான சித்தாந்தமே தவிர, குழப்பம் அல்ல என்றநிலையை லெனின் மேற்கொண்டார். 
ரஷ்ய சோவியத் புரட்சியின் தலைமையில் லெனின் இருந்தார். 1917- ஆம் ஆண்டு நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், தொழிலாளி- விவசாயி ஆட்சிக்கான மாற்றம் உருவாகும் என அவர் உணர்ந்தார். அவரது  ஏப்ரல் ஆய்வுரைகளில், இரட்டை அதிகாரத்தலைமை பற்றிக் குறிப்பிட்டார். வரலாற்றிலேயே இது பற்றிக் குறிப்பிட்ட ஒரே மனிதராக அவர் இருந்தார். இயற்கையான இயக்கவியலின்படி, இந்த இரட்டை அதிகாரத் தலைமை ஒரு புதிய புரட்சியை உருவாக்கும் என லெனின் கூறியது அக்டோபரில்புதிய காலண்டர் படி நவம்பர்) நிகழ்ந்தது. 1917-ஆம் ஆண்டு இயக்கவியலின் தொகுப்பாக விளங்குகிறது. அந்த ஆண்டு ஏற்பட்ட மிகக் கடுமையான புரட்சிகர மாற்றங்களை லெனின் ஒருவர்மட்டுமே புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீர்வுகண்டிருக்கமுடியும்.

ரத்ததாகம் கொண்ட புரட்சியாளர் என்று சிலர் லெனினைப் பற்றிக் கூறிய பிரச்சாரம் உண்மையானதல்ல. 1917-ஆம் ஆண்டில் அமைதியான முறையில் அதிகாரமாற்றம் ஏற்பட இரண்டுமுறை லெனின் முயன்றார். உண்மையில், ரஷ்யப்புரட்சியை மிக அமைதியான ஆயுதப்புரட்சி என்றுதான் லெனின் கூறினார். ரஷ்யாவைப் பார்த்து, அதே போன்ற வழியைப் பின்பற்ற வேண்டாம் என மேற்கத்திய நாடுகளின் க்ம்யூனிஸ்டுகளுக்கு எடுத்துக்கூறிய லெனின், தேர்தல்கள் போன்ற ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்குமாறும் கூறினார். ஆசியக்கண்டத்தின் புரட்சியாளர்களுக்கும் இதே அறிவுரையைத்தான் வழங்கினார்.

லெனின் ஒருபோதும் கட்சியில் எந்தப் பொறுப்பையும் வகித்ததில்லை. கட்சி, கூட்டுத்தலைமையின்கீழ் இயங்கியது. கட்சியின் தலைவர்களுக்குப் பொறுப்புகள் சுழல்முறையில் அளிக்கப்பட்டன. லெனினது தலைமை, தத்துவார்த்த, அறிவார்ந்த, தூண்டுதல் அளிக்கும் தலைமையாக இருந்தது. மிகுந்த வற்புறுத்தல்களுக்குப் பின்னர் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர்  வகித்த பொறுப்பு  நமது நாட்டில் பிரதமர் வகிக்கும் பொறுப்பிற்குச் சமமானதாகும். பதவிகளைப் பிடிப்பதையும், தனிநபர் வழிபாட்டையும் அவர் வெறுத்தார். 1922-ஆம் ஆண்டில்தான் கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதுவும், கட்சியின் மத்தியக் குழுவின் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பாகவே உருவாக்கப்பட்டது. பின்னர் உருவான வரலாறு, லெனின் எச்சரித்தபடி, இதிலிருந்து மாறுபட்டதாக அமைந்தது. சோவியத் ஆட்சியில் வளர்ந்துவந்த அதிகாரவர்க்கப் போக்குகள் குறித்து அவர் மிகவும் கவலைகொண்டார்.
புதிய சர்வதேசப் பொருளாதார ஒழுங்குமுறைஎன்ற  வாதத்தைத் துவக்கியவர் லெனின் என்பது பொரும்பாலோருக்குத் தெரியாது. ((இதனை 1922-ஆம் ஆண்டில் அவர் உருவாக்கினார். மேற்கத்திய நாடுகளோடு இத்தகையதொரு பொருளாதார ஒழுங்குமுறையை உருவாக்கும் பணியில் சோவியத் ரஷ்யா பங்கேற்கத் தயார் என லெனின் கூறினார். எத்தகைய தீர்க்கதரிசனமான சிந்தனையோட்டம்!

காலனி நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களோடு நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், புதிய உலகு ஒன்றை உருவாக்கவும், சரியான தத்துவார்த்த நிலையை உருவாக்கியதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இருந்த லெனினின் பங்களிப்பை நாம் மறந்துவிடக்கூடாது. பிற்காலத்தில் உருவான இந்திய- சோவியத் நட்புறவு போன்றும், இதர நாடுகளோடு நட்புறவுகள் உருவாக  லெனின் அடித்தளமிட்டார். அதோடு  பரந்த அளவில் விடுதலைப் போராளிகளின் தலைமுறைகளை உருவாக்குவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பரந்த கூட்டணியின்மூலம் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்டு, புதிய, நியாயமான உலகத்திற்கான மாற்றம் உருவாகும் என்பதை லெனின் உணர்ந்திருந்தார். இவ்வகையில் ஒரு சகாப்தம் முழுமைக்குமான ஒரு சித்தாந்தவாதியாக அவர் திகழ்ந்தார்.
லெனினது ஆலோசனைகளும், அவர் உருவாக்கிய தத்துவக் கோட்பாடுகளும் செவிமடுக்கப்பட்டிருந்தால் பின்னாளில், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிஸ்ட் நாடுகளிலும் நிகழ்ந்த தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இருப்பினும், லெனின் உலக வரலாற்றில், என்றென்றைக்குமான முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றுள்ளார்.

(நன்றி:நியூ.ஏஜ்’, ஏப்ரல் 17-23, 2011)
தமிழில்: வீ. ராஜமோகன்
COURTESY: NEW AGE/APRIL 17-23, 2011

Read more...

Saturday, April 13, 2013

வரலாற்றில் முத்திரைபதித்த மாபெரும் புரட்சியாளர்

Read more...

பல்லாண்டு பல்லாண்டு!




பல்லாண்டு பல்லாண்டு!

பி..குப்புசாமி

ன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் நண்பர்களாகிய நாங்கள், ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்து, கடந்த 2010 செப்டம்பருடன் ஐம்பது ஆண்டுகள் ஆயின.


அதுகுறித்து, அந்த செப்டம்பரில் ஒரு கூட்டம் போட்டுக் கொண்டாட வேண்டும் என்னும் என் நெடுநாள் ஆசை நிறைவேறவில்லை. அந்தக் கூட்டம் திருப்பத்தூரில் மட்டும்தானே நடக்கும்? அதுவும்கூட காற்றில் கலந்த ஓர் ஓசையாகத்தானே போகும்? 'சஞ்சிகை'யில் அந்த நினைவுகளைக் கொண்டாடுவது நிலைபேறுடையதொரு காரியம்தானே? இதனால் இத்தொடரை எழுத ஆரம்பிக்கிறேன்...

அந்தக் காலத்தில், எங்கள் ஊரில் 'இளங்கோ இலக்கிய மன்றம்' என்று ஒன்று இருந்தது. அதில் எல்லாக் கட்சியினருமே ஒற்றுமையாக அங்கம் வகித்தனர். பெரியார், ஜீவா, ம.பொ.சி. என்றெல்லாம் வந்து பேசுவர்.


இந்த வரிசையில், 1960-ஆம் ஆண்டு செப்டம்பரில், பாரதி விழாவில் பேசுவதற்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தோம்.


அப்பொழுதெல்லாம் இந்தக் கூட்டங்களை நடத்தும் செலவுக்கு நாங்கள் நன்கொடைக்குக் கிளம்புவோம். ஒவ்வொருவரிடமும் போய், ஐந்து ரூபாய்-பத்து ரூபாய் நன்கொடைக்காக நயந்து பேசி, வாங்கி, போதாக்குறைக்குக் கையிலிருந்து போட்டு, நாங்களே கூழ் காய்ச்சி, விழாவிற்கான சுவரொட்டிகளை இரவெல்லாம் ஒட்டி, கூட்ட நாளன்று மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகளைத்தூக்கிப் போட்டு, எங்களில் ஒருவரே தலைவராய் அமர்ந்து, அந்தப் பிரபலங்கள் பேசுகிற கூட்டங்களை நடத்தினோமே, இன்று ஏன் நமது ஜெயகாந்தனுடனான சந்திப்பின் ஐம்பதாவது ஆண்டு விழாவை அரங்கேற்ற முடியவில்லை? இது, ஒரு வகையான நாணமும் கையறு நிலையில் தோன்றும் அவமானமும் கொள்ளவைக்கிறது.



ஐம்பதாண்டுகளின் கால மாற்றத்தை அனைவரும் எளிதில் ஊகிக்கலாம். கூட்டத்துக்குப் பிரதானமானவர்கள் அன்று பெஞ்சு தூக்கிப் போட்டார்கள். இன்று ஒரு கூட்டத்தில் பெஞ்சு தூக்கிப் போடுவதற்கே பிரதானமாக செலவு செய்ய வேண்டும். அன்றிருந்த தோழர்களில் பலர் இன்று இல்லை. இருக்கின்ற தோழர்களும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ இருக்கிறோம். அருகருகே இருந்து அடிக்கடி சந்தித்துக் கொள்கிற ஓரிரு நண்பர்களும்கூட ஒரு கூட்டம் போட்டுப் பார்ப்பதில் உள்ள பயன் குறைவால் உத்வேகமற்று உள்ளோம். நாங்கள், ஜெயகாந்தனை அவ்வப்பொழுது நேர்முகமாகச் சந்தித்துப் பேசும் சந்தோஷத்திலேயே சொக்கிவிடுவதால், மேற்கொண்டு செயல்புரியத் தோன்றுவதில்லை.


கூட்டம்போட்டுப் பேசுவதைவிடவும், ஏதோ ஒரு ரூபத்தில் எழுதிவைத்தால், அது என்றைக்காவது , எதற்காவது, யாருக்காவது பயன்படும் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் அவரை ஆராய வருகிற ஏராளமான சந்ததியினர்க்கு இதிலிருந்து கொஞ்சமாவது விஷயங்கள் கிடைக்கலாம்.


கூட்டம் கூட, அந்தக் கூட்டத்தைக் கேட்டு ஒரு நபரேனும் உருவானால், உயர்வாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். மலைப்பிரசங்கம் ஒரு மகாத்மாவை உருவாக்கியதாய் அறிகிறோம்! அந்த மகாத்மாவின் சின்னஞ்சிறு உரைகள், ஒரு தேசத்தையே திரள வைத்துவிட்டன.


இங்கே கூட்டம் என்பது அதன் பௌதீக லட்சணங்களை இழந்து, காலந்தோறும் நிகழ்கிற ஓர் ஆன்மீகச் சஞ்சாரத்தின் அடையாளமாகிவிடுகிறது!


காலதேச வர்த்தமானத்தில் கூட்டங்கள் என்பவை இன்றுள்ள கருத்துப்பரிமாற்ற ஊடகங்களென உருமாற்றம் கொண்டுள்ளன. அவ்வகையில், ஜெயகாந்தன் அவர்களை திருப்பத்தூர் நண்பர்கள் முதலில் சந்தித்ததன் அரை நூற்றாண்டையொட்டிய விழாவெனக் கருதி அவரைச் சந்தித்ததிலும், அவரோடு நாடெங்கும் சஞ்சரித்ததிலும் அமைந்த அனுபவங்களை 'சஞ்சிகை'யில் தொடர்ந்து எழுத விழைகிறேன்.


எல்லாம் யோசிக்கும் வேளையில், நடந்ததும், திரிந்ததும், கிடந்ததும், பேசியும் பாடியும் களித்ததும், சற்றே உண்டதும், உறங்கியதுமாகக் கழிந்த அந்த வாழ்க்கையில் என்னதான் கண்டோம்?


எல்லாமும் கண்டோம். இறந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் எனும் திரிகாலமும் கண்டோம். கவிதை கருத்தரிக்கிற கணங்களையும், மழையினூடே ஆலங்கட்டிகள்போல் புதிய புதிய சொற்கள் சரேல் சரேல் என விழுவதையும் கண்ணெதிரே கண்டோம். உள்ளூர்ச் சாதிகளின் வரலாறு முதற்கொண்டு உலக வரலாறுவரைக்கும் எங்கள்முன் ஓடின. விதவிதமான வினாக்களும் விடைகளும் உதிக்கும் இலக்கியப் பட்டறைகளைச் செவிமடுத்தோம். போதிப்பது அறியாதவாறு போதிக்கப்பட்டோம்! உலகிய இலக்கிய சாம்ராட்டுகளை எங்கள் உற்ற நண்பர்களைப்போல் உற்று கவனிக்கக் கற்றோம். கண்டறியாதன கண்டோம் என்கிற வாக்கியம் எங்களுக்கு முன்பிறந்து, எங்களுக்குக் கைலாகு கொடுக்கக் காத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம்.

மனித மனக் கற்பனைகள், நேரடியான நிஜம் என்கிற ஈரம் பட்டவுடன் எப்படி உறைந்திருந்த உயிர் கொஞ்சம் ஊறி, வீரியம் பெற்று, தம்மை மூடிய மண் பிளந்து வெளிக்கிளம்பி, பூதங்கள் ஐந்தும் பொருந்தியிருக்கவே தளிர்விட்டு, தழைத்துக்கொடியோடி, எண்ணமுடியாத அரும்புகள் எடுத்துப் பூச்சொரிகின்றன என்பதற்கு எங்களின் இந்த சொந்த அனுபவங்கள் சாட்சியாக அமையுமானால், அதுவே பயனுள்ள ஒன்று என்று நம்புகிறேன்; நம்பி எழுதுகிறேன்!

ஒருகாலத்தில், அவரோடு பயணப்பட்டுப் பழகிக் களித்த இந்த விவரங்களையெல்லாம், நான் ஒரு நோட்டுப்புத்தகம் வைத்துக் குறித்துக்கொண்டுதான் வந்தேன். அதனால், குப்புசாமியாகிய எனக்குக் "குறிப்புச்சாமி" என்கிற ஒரு பட்டப்பெயரும் கிடைத்தது.

எதனாலோ அப்புறம் அந்தப் பழக்கம் எனக்கு விட்டுப்போயிற்று. ஆனால், மனம் அந்தப் பயணங்களை மறந்துவிடாமல், இன்றளவும் அவற்றை நினைவுகூர்ந்து, காலச்சுழற்சியில் எங்களிடம் உண்டாகும் தன்னிரக்கச் சுழல்களில் நாங்கள் அடித்துச் செல்லப்பட்டு, அதல பாதாளத்தில் வீழாவண்ணம் எப்பேர்ப்பட்ட ராஜ வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்கிறோம் நண்பர்களே என்கிற பெருமிதச் சிகரங்களில் எங்களை ஏற்றுகின்றன.

அசைபோடுதல் என்ற ஒன்று உண்டு. அவசரகதியாக உட்கொண்டவற்றையெல்லாம், அலைச்சல் ஓய்ந்தபின், ஆழத்திலிருந்து கொண்டுவந்து, மென்று மென்று அனுபவித்து ருசித்துப் பசியை மேலும் மேலும் ஆற்றிக்கொள்கிற அந்தப் பண்பு மாந்தரிடத்தும் இல்லையா என்ன?

ஒரு புல்லே அசைபோடத்தக்கது எனில், நாங்கள் போதமுற்ற போதினிலே பொங்கிவந்த தீஞ்சுவையை அசைபோடாதிருப்பது எங்ஙனம்? (தொடர்வோம்...)

Read more...

Friday, April 12, 2013

சமூக எதார்த்தவாதி











தோழர் ஜெயகாந்தன், தி ஹிண்டு (THE HINDU) குழுமத்தால் வெளியிடப்படும் "ஃப்ரன்ட்லைன்"  (FRONTLINE) ஆங்கில
மாதமிருமுறை சஞ்சிகையின் நிருபர் எஸ்.துரைராஜுக்கு அளித்த பேட்டி இது. "சமூக எதார்த்தவாதி" (Social realist) என்னும் தலைப்பில், அக்டோபர் 5, 2012 தேதிய இதழில் வெளியான அந்த பேட்டியில், பல்வேறு பிரச்சனைகள்பற்றிய தனது கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். முன்னுரையுடன், கேள்வி-பதில் வடிவில் அமைந்த அந்த பேட்டி தமிழில்-சஞ்சிகை வாசகர்களுக்காக:

சமூக எதார்த்தவாதி
 

"ஜே.கே" என நண்பர்களாலும், தோழர்களாலும் அழைக்கப்படும் தண்டபாணி ஜெயகாந்தன், தனது அறுபதாண்டுக்கால இலக்கியப் பணியில், சமூக அநீதிகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து எழுதுகோல் ஏந்திப் போராடிவருவதற்காகப் பெரும் பாராட்டுக்களை வென்றவர். தலைசிறந்த எழுத்தாளர் என்பதையும் கடந்து, அவர் ஒரு ஈடுஇணையற்ற பேச்சாளர்; இலட்சிய உறுதிகொண்ட திரையுலகப் படைப்பாளி, சாதனைபுரிந்த பத்திரிகையாளர்; அச்சம் அறியாத செயல்வீரர்.

உலகளாவிய அளவில் ஜனநாயகம், சமத்துவம், சமாதானம், முன்னேற்றம் ஆகிய லட்சியங்களுக்காகச் செயல்படுபவர்களுடன் ஓரணியில் கரம்கோர்த்து நிற்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அரசியல் களமானாலும், கலாசாரக் களமானாலும் தனது கருத்துக்களை நிகரற்ற துணிச்சலுடனும் மிகவுயர்ந்த நேர்மையுடனும் வெளிப்படுத்திவருபவர் அவர்.

விருதுகளும் பட்டங்களும் அவரைத் தேடிவந்து குவிந்திருக்கின்றன. ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் விருது,  ரஷ்ய அரசின் நட்புறவு விருது ஆகியவை அவற்றுள் சில.

ஜெயகாந்தன், 1934-ல் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். அவருடைய தாயாரும், தாயாரின் சகோதரர்களும் அவரிடத்தில் தேசபக்த உணர்வை ஊட்டி வளர்க்க, ஓர் ஆரோக்கியமான சூழலில் வளர்ந்தார்.  ஐந்தாம் வகுப்புடன் பள்ளியிலிருந்து விடுபட்ட அவர், 1946-ல் தனது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு, ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.  உண்மையில் அதுதான், உலக இலக்கியம், கலாசாரம், அரசியல், பொருளாதாரம், பத்திரிகையியல் எனப் பல்வேறு துறைகளில் அவரது ஞானத்தை விருத்திசெய்த பல்கலைக்கழகமாக ஆனது. போற்றற்குரிய இலக்கியப் படைப்புகளை நல்கிய மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்களான ப.ஜீவானந்தம், ஆர்.கே.கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோருடன், கம்யூன் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிணைப்பு, இலக்கிய உலகம் குறித்த அவரது பார்வையைச் செழுமைப்படுத்தியது.

கம்யூன் உறுப்பினர்களிலேயே மிகவும் இளையவரான ஜெயகாந்தனுக்கு முழுவளர்ச்சிபெற்ற எழுத்தாளராக மலர்வதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. அவரது முதல் சிறுகதை 1953-ல் வெளியானது. அதன் பிறகு அவர் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்ததில்லை. சமுதாயத்தில், கடைக்கோடியில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் கதைகளின்மூலம் அவர் வெளிக்கொணர்ந்தார். அதுகாறும் மற்றவர்களால் சொல்லப்படாத நடுத்தரவர்க்கத்தினர் மற்றும் உயர்சாதியினரின் பல்வேறு பிரச்சனைகளைத் தொட்டுக்காட்டியதன்மூலம் தமது இலக்கிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டிருந்த அந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்க, புகழ்மிகு தமிழ்ப்பத்திரிகைகள் நீயா-நானா என்று போட்டியிட்டன.

 ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று கதைகளான 'அக்கினிப்பிரவேசம்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'கங்கை எங்கே போகிறாள்?' ஆகியவை, மனித உறவுகளின் நுணுக்கங்களைச் சித்தரிப்பவையாகும்.  'ஊருக்கு நூறு பேர்', 'கைவிலங்கு' ஆகியவை மரணதண்டனை, சிறை வாழ்க்கை, ஆகிய பிரச்சனைகளை அவர் எத்தனைத் திறனுடன் கையாண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன.

கதையல்லாத படைப்புகளைப் பொறுத்தவரை, 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்', 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்', 'யோசிக்கும் வேளையில்' ஆகிய படைப்புகள் பரந்த அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. அவருடைய முன்னோடிகள் சிலரைப்போலவே சாதனைபுரிந்த எழுத்தாளரான அவரும், 1964-ல் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என அங்கு அவரது பங்களிப்பு பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது. அவரது முதல் திரைப்படமான 'உன்னைப்போல் ஒருவன்', குடியரசுத்தலைவரின் விருதினை வென்றது. அவர் எழுதிய இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 45 நாவல்கள், குறுநாவல்கள், 20 கட்டுரைத்தொகுதிகள், அவர் திரைக்கதை எழுதிய 10 திரைப்படங்கள் ஆகியவை அவரின் படைப்பாற்றலுக்கும் சித்தாந்தப் பிடிப்புக்கும் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.


கேள்வி: இந்திய முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தாங்கள். அந்த இயக்கத்திற்கு எதிர்காலம் உண்டா? உலக இயக்கத்தில் அது குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்க இயலுமா?

ஜெயகாந்தன்: முற்போக்கு என்ற சொல் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தைப் பொறுத்தே முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் எதிர்காலமும் அமையும்.

கேள்வி: அண்மைக்காலம் வரையில் எதார்த்தவாதம், சோஷலிஸ்ட் எதார்த்தவாதம் ஆகியவற்றைப் பின்பற்றிவந்த எழுத்தாளர்கள், பின் நவீனத்துவம் (postmodernism), மாயா எதார்த்தவாதம் (magical realism) எனும் இலக்கிய பாணிகளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். முற்போக்கு இலக்கியத்தின்பால் இந்தப் போக்குகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

ஜெயகாந்தன்: முன்னவற்றைக் கைவிடாத வரைக்கும் இயவற்றினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட முடியாது. அவற்றுக்கு ஊக்கமாகவும் உதவிகரமாகவும் இவை அமைந்தால் நல்லதே!

கேள்வி: அண்டை நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியத் தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், அந்தத் தீவு தேசத்தில் உள்ள தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசுக்குத் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

ஜெயகாந்தன்: இலங்கை இனப்பிரச்சனை அவர்களின் பிரச்சனை. அதை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது சக்தியின் தலையீடு-குறிப்பாக, இந்தியாவின் தலையீடு உதவாது என்றே நினைக்கிறேன். இந்தியாவில் இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறதோ, அவ்விதமே இலங்கையிலும் இது கையாளப்பட வேண்டும். ஆனால், இது காலங்கடந்த யோசனை.

கேள்வி: மரண தண்டனை குறித்த தங்களின் கருத்து நன்கு அறியப்பட்டது. அந்த தண்டனைமுறையை அடியோடு ஒழித்துவிடவேண்டுமென மனித உரிமை அமைப்பினர் கோரவும், குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை நீடிப்பது அவசியமென வேறு சிலர் கூறவும், அந்தப் பிரச்சனைகுறித்த விவாதம் இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளதே?

ஜெயகாந்தன்: மரணதண்டனையைப் பற்றி [மரணம் ஒரு தண்டனையாக இருக்கமுடியாது என்பதால் மரண தண்டனை விட்டொழிக்கப்பட வேண்டும் என] ஏற்கனவே கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அதில் ஒருவித மாற்றமும் இல்லை. தண்டனை, குற்றங்களைக் குறைக்க உதவாது.

கேள்வி: தனிநபர் என்ற முறையில் மகாகவி பாரதியும், ஒரு வரலாற்று நிகழ்ச்சி எனும் வகையில் ரஷ்யாவில் நிகழ்ந்த மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியும்தான் தங்களை எழுதத்தூண்டிய உந்து சக்திகள் எனப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்த யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் உள்ளன. எழுத்தாளர் என்கிற வகையில் தங்கள்பால் அது ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுகூர வேண்டுகிறோம்.

ஜெயகாந்தன்: அது உலகின் கண்களைத் திறந்திருக்கிறது. அந்த வெளிச்சத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் பின்னடைவு என்பதே கிடையாது. அதில் ஏற்பட்ட தவறுகளை மாற்றிக்கொள்வதிலோ, திருத்திக் கொள்வதிலோ தவறு ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது அவசியமான நடவடிக்கை. அதுதான் சோவியத் யூனியனிலும் நடந்திருக்கிறது என்று கருதுகிறேன். இது ஒரு பின்னடைவு அல்ல. இதனால் தாக்கம் பெற்றவர்கள், இதிலிருந்து படிப்பினையும் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: தங்களைப் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆதர்சமாக இருந்த சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது. சோஷலிஸ்ட் முகாமோ தகர்ந்துபோனது. இது சோஷலிசத்தின் தோல்வியைக் குறிக்கிறதா அல்லது சோஷலிசத்திற்கு இது தற்காலிகப் பின்னடைவா?

ஜெயகாந்தன்: இது ஒரு சரிவே அல்ல. இதிலிருந்து படிப்பினைகள் பெறும் பட்சத்தில், இது பயனுள்ள மாற்றமே!

கேள்வி: குழந்தைப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர் தாங்கள். உலகு தழுவிய முறையிலும், தேசிய அளவிலும் நிலவுகின்ற அரசியல் சூழலில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?

ஜெயகாந்தன்: கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கியம் என்ற நிலை மாறி, "கம்யூனிசம்" என்கிற சொல்லும், பொருளும் எல்லா கட்சிகளையும் பாதித்துச் செயல்படத் தூண்டியிருப்பது இதன் சாதனையாகும். கட்சி கடந்த, சகல கட்சிகளையும் சார்ந்த ஒரு தத்துவமாகக் "கம்யூனிசம்", "சோஷலிசம்" என்ற வரையறைகள், கருதுகோள்கள் உருவாகிவருகிற காலம் இது.

கேள்வி: பெண்மைக்கு எதிரான போக்குகளையும் அவர்கள்மீதான பாலியல்ரீதியிலான தாக்குதல்களையும் சாடுவதற்கு உங்கள் எழுதுகோல் என்றுமே தயங்கியதில்லை. தேசங்களுக்கிடையிலான ஆயுத மோதல்களின்போதும், உள் நாட்டில் சாதி-மதக்கலவரங்களின்போதும் பெண்களும் குழந்தைகளும் தான் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது கசப்பான உண்மை. இருப்பினும், இதுபோன்ற அக்கிரமங்களுக்கு எதிரான குரல் இப்போது வலுப்பெற்றிருப்பது ஓர் ஆறுதலான விஷயமல்லவா?

ஜெயகாந்தன்: எப்போதுமே ஒரு மாற்றம் என்று வருகிறபோது, அதில் ஆண்கள்-பெண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் இந்தக் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதன் வளர்ச்சியும், தொடர்ச்சியுமாகும் இன்றைய நிலை.

கேள்வி: அன்னா ஹசாரே தலைமையில் உள்ள குழு உட்பட சிவில் சொசைட்டி குழுக்கள் ஊழலுக்கு எதிராகக் கலகக்கொடியை ஏந்தியிருக்கிறார்கள். ஊழல் என்பது தேசத்தைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கிற பூதாகாரமான விஷயம் என்று தாங்கள் கருதவில்லையா?

ஜெயகாந்தன்: ஊழலற்ற சமூகம் என்பது கம்யூனிசம் போன்றதொரு முற்போக்கான கற்பனைதான். எல்லா சமூகத்திலும் எப்போதும் ஊழல் இருந்திருக்கிறது. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுதான் மாபெரும் ஊழல். அன்னா ஹசாரேவின் முயற்சியும் அதுதான். ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லா அரசியல் கட்சிகளிலும் உண்டு. அடிப்ப்படையில், தனிச்சொத்துரிமை உள்ள ஒரு சமூகத்தில் ஊழல் உருவாவது இயல்புதான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,இந்தியாவில் தனிமனித உரிமையும், சொத்துரிமையுடன் சேர்த்திருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளில் இது ஒன்று. எனவே, ஊழலும் இங்கு இயல்பாகிவிடுகிறது. உடைமை மறுப்பு என்கிற அடிப்படையில், தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில்தான் ஊழலை ஒழிக்கமுடியும்.

கேள்வி: தாங்கள் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல; வெற்றிகரமான பத்திரிகையாளரும் கூட. பத்திரிகை உலகில் தங்களின் அனுபவம், உங்கள் இலக்கியப் பணியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது? இது போலவே, தங்களது படைப்புலக அனுபவம் பத்திரிகத்துறையில் எவ்வித பிரதிபலிப்பை நிகழ்த்தியது?

ஜெயகாந்தன்: வெற்றிகரமான பத்திரிகையாளன் என்பதை மாற்றிக்கொள்ளுங்கள். வெற்றிகரமான பத்திரிகையாளர் என்பதற்கு என்ன விளக்கம் என்பதை உறுதி செய்யாமல் நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி: பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பையேற்று, சமரசமற்ற போர் நடத்தியிருக்கிறீர்களே?

ஜெயகாந்தன்: சமரசம் (Compromise) பண்ணிக்கொள்வதுதான் வெற்றி என்று சொல்லிக்கொள்கிற சமூகத்தில் சமரசம் செய்துகொள்ளாத (uncompromising) எழுத்தாளர்கள் வெற்றிபெற முடியாது.

கேள்வி: தமிழ்நாட்டில் சில பகுதியினர் தொடர்ந்து மும்மொழித்திட்டத்தை எதிர்த்துவருகின்றரே, இதுகுறித்துத் தங்களின் கருத்து?

ஜெயகாந்தன்: நடைமுறையில் மும்மொழித்திட்டம்தான் இருக்கிறது. இதை எதிர்ப்பது அரசியல். அவர்களும்கூட மும்மொழித்திட்டத்தைத்தான் தமது சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள். மொத்தத்தில், மொழிப்பகைமை இல்லாதிருப்பது நல்லது.மும்மொழி என்ன-பன்மொழிக்கலப்பே அவசியம் என்று சொல்வேன்.

கேள்வி: இணையதளம் வலைதளம் ஆகியவற்றைத் தவறாகப் பிரயோகிப்பது குறித்துக் கவலை எழுப்பப்படுகிறது. சமூக ஊடகங்களைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்க நடவடிக்கைகளைக்கூட சிலர் ஆதரிக்கின்றனரே?

ஜெயகாந்தன்: தவறுகளை அனுமதியுங்கள். மனித சமூகம் ஆரம்பத்தில் எதையும் தவறாகப் பயன்படுத்தும். எது அவசியமோ, எது தேவையோ, எது வளர்ச்சிக்கு உதவுமோ அதுவே நிலைக்கும். இதனுடைய 'negative' (எதிர்மறை) அம்சங்கள் காலப்போக்கில் அவர்களாலேயே கைவிடப்படும் என்று நம்புவோமாக!

கேள்வி: கலாசாரக் காவலர்கள் எனும் போர்வையில் செயல்படுவதும், காதலர் தினம், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்குபெறும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள்மீது தாக்குதல் தொடுப்பதுமான சம்பவங்கள் சில பெரிய நகரங்களில் அதிகரித்துவருகின்றனவே?

ஜெயகாந்தன்: ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு மற்றொரு மனிதனின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது; ஏனெனில், அது சமூகப்பிரச்சனை ஆகிவிடும். சுயமரியாதை உள்ளவர் எவரும் இதுபோன்ற காரியங்களில் இறங்க மாட்டார்கள்.

கேள்வி: மாநிலப் பிரச்சனைகள் தீர்க்கப்படாத காரணத்தால் இந்தியா சிதறுண்டுபோய்விடும் என்று சில குழுக்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனவே, அத்தகைய அச்சத்திற்கு ஏதேனும் அடிப்படை உண்டா?

ஜெயகாந்தன்: எதனாலும் இந்தியா துண்டுதுண்டாகிவிடாது. அதுமாதிரி பயமுறுத்திப் பேசுவது ஒரு அரசியல். இவற்றை மாநிலப் பிரச்சனையாகப் பார்க்காமல் தேசியப்பிரச்சனையாகப் பார்த்தால் இதைத்தவிர்க்கலாம்.

கேள்வி: சரித்திர நாவல்களை எழுதும்போது முற்போக்கு எழுத்தாளர்கள் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்?

ஜெயகாந்தன்: இதில் எழுத்தாளர்களுக்கு ஒருங்கிணைந்த/முழுமையான (comprehensive) பார்வை வேண்டும். சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்துகொண்டு...அதிலும் பிரச்சனை இருக்கிறது..எல்லாவற்றைப்பற்றியும் ஒட்டுமொத்தமான பார்வை இதில் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் சமதளத்தில் (balanced) பார்க்க வேண்டும். ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால் தப்பாகிப்போய்விடும். ஆனால் எதார்த்தத்தில் எப்படி இருக்கிறது என்று சொல்வது முக்கியம்.இதற்கு இலக்கிய விமர்சனம், பரிமாற்றம் அதிகம் தேவைப்படுகிறது.

எழுத்தாளன் ஏதாவதொரு பிரச்சனையைத் தொட்டுத்தான் தனது இந்த முயற்சியைத் தொடங்கவேண்டும். பின்னர், சமூகத்தில் இதற்குத் தொடர்புடைய விஷயங்களுடன் இதனை இணைக்கவேண்டும். இதைத்தான் நாம் சமூக-ஆன்மீக அணுகுமுறை என்கிறோம்.

தனிமனிதனின் பிரச்சனகளை அலசுவதில் இந்தப் பணியை நீங்கள் தொடங்கினாலும், எழுத்தாளர் என்ற முறையில், இது சமூக எதார்த்தத்தின் அங்கமாக இதனைப் பார்க்கும் பாங்கு வேண்டும்.

COURTESY: FRONTLINE/OCTOBER 5, 2012


Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP