Wednesday, January 13, 2010

மகலனோபிஸ்

b



இந்தியாவின் வளர்ச்சிக்கோலத்துக்குப்



புள்ளிவைத்தவர்




கலனோபிஸ் என்ற பெயரைக்கேட்டாலே நம் நினைவுக்கு வருவது அவர் நிறுவிய உலகப் புகழ்பெற்ற இந்திய புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகம்; அடுத்து நினைவுக்குவருவது சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்; பிலாய், ரூர்கேலா, பொக்காரோ போன்ற உருக்காலைத் திட்டங்கள்!

அவர் நிறுவிய புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகம்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட, அன்றிருந்த சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்து தொகுத்துத் தந்தது.

நமது நாட்டின் பிறப்பு-இறப்பு, நோய்நொடி என்னென்ன என்று விரிவாகப் பகுப்பாய்வு செய்து கொடுத்தது இந்தக் கழகம்தான்.

இந்தியக் குடும்பங்கள், அவற்றின் வரவு-செலவு, தனிமனித செலவு, குடும்பத்தில் உணவு, உடை, மருந்துகளுக்கு ஆகும் செலவுகள் என்ன என்பது பற்றியெல்லாம் ஆதியோடந்தமாகச் சேகரித்துக் கொடுத்தது.

யார் அந்த மகலனோபிஸ்?

1893 ஜூன் 29-ஆம் தேதி வங்கத்தில் இருந்த அறிவார்ந்த குடும்பத்தில் பிறந்தார் பிரச்சந்த சந்திர மகலனோபிஸ். இவரது தாத்தா குருசரண் மகலனோபிஸ், ராஜாராம் மோகன்ராய் வழியில் அக்காலத்திலேயே ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டவர். குருசரணுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுபோத் சந்திர மகலனோபிஸ். இவர் மருத்துவம் படித்து இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று, மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வுகள் நடத்தி அங்குள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் உடல்கூறு இயல் துறையின் தலைவரானார். பின்னர் கல்கத்தா வந்து பிரசிடென்சி கல்லூரியில் அந்தத் துறையை நிறுவினார்.

குருசரண் மகலனோசின் இரண்டாவது மகன் பிரயோக் சந்திர மகலனோபிஸ், தனது தந்தையின் மின்சாதன விற்பனைக் கூடத்தில் பணியாற்றிவிட்டுத் தனியாக கிராமஃபோன் இசைத்தட்டுக்களை விற்பனை செய்யும் நிலையத்தை நிறுவினார். பின்னர் கல்கத்தாவிலேயே பெரிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் விற்பனை நிலையமாக அதை உருவாக்கிச் சிறந்த விற்பனையாளராகத் திகழ்ந்தார்.

இவரது கம்பெனி மூலமாகத்தான் ரவீந்திரநாத் தாகூரின் உலகப்புகழ்பெற்ற பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்தன. இவரது பிள்ளைதான் பிரச்சந்த் சந்திர மகலனோபிஸ்.

தனது தாத்தா குருசரண் நிறுவிய பள்ளியிலேயே படித்த பி.சி.மகலனோபிஸ், கல்லூரிவரை கல்கத்தாவில் படித்துப் பட்டம் பெற்று, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சுற்றுலா சென்ற மகலனோபிஸ், அங்கே உள்ள கிங்ஸ் கல்லூரியில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

கணிதம், இயற்கை விஞ்ஞானம், இயற்பியல் இவர் எடுத்துக்கொண்ட பாடங்கள். இவர் அக்கல்லூரியில் சேர்ந்து ஓராண்டுக்குப்பின் தமிழ் நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ராமானுஜம் அக்கல்லூரிக்குக் கணிதம் கற்கச்சென்று மகலனோபிசின் நெருங்கிய நண்பரானார்.

மகலனோபிஸ், இயற்பியலில் முதல் வகுப்பில் தேறி, அனைவரது பாராட்டையும் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் அவருக்குப் புள்ளிவிவரத் தொகுப்பியலைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

நாடு திரும்பிய பி.சி. மகலனோபிஸ், தனது பெரிய தந்தையின் மூலம் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக 33 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் அக்கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியப் புள்ளிவிபரத் தொகுப்பியல் கழகத்தை நிறுவி உலகப் பிரசித்தி பெற்றார்.

பிரபல கல்வியாளரும், கல்கத்தா சிட்டி கல்லூரியின் முதல்வருமான ஹெரம்ப சந்திர மொய்த்ரா அவர்களின் புதல்வி ராணி என்கிற நிர்மல் குமாரி மொய்த்ராவை மணந்தார்.

கவியரசருடன்...

சதாரன் பிரம்மோ சமாஜ் என்கிற அமைப்பில் ரவீந்திரநாத் தாகூரை உறுப்பினராக்கும் விஷயத்தில் ராணியின் தந்தைக்கும் மகலனோபிஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகலனோபிசைக் கரம் பிடிக்க ராணிக்கு ஏழு ஆண்டுகளாயிற்று.

தாகூரை சமாஜ் உறுப்பினராக்குவதில் வெற்றியடைந்த மகலனோபிஸ், கவியரசரிடம் நெருக்கமான உறவு கொண்டார்.

தாகூர் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்தபொழுது, மகலனோபிசும் ராணியும் சேர்ந்து சென்று இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்து வந்தனர்.

பின்னர், அமெரிக்கா, சோவியத் யூனியன், ஸ்வீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று தாகூரைப்பற்றி பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார் மகலனோபிஸ். பல ஆண்டுகள் தாகூருடன் சேர்ந்து வசித்தனர் மகலனோபிஸ் தம்பதியினர்.

'அம்ரபாலி' என்ற தமது புது இல்லத்தில் தாகூர் வந்து தங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் வீடு கட்டி முடியுமுன்னே தாகூர் காலமாகிவிட்டார்.

புள்ளிவிவரத் தொகுப்பியலில் மூழ்கியிருந்த மகலனோபிஸ், இந்தியாவில் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச்செய்ய முனைந்தார். 1922-இல் வடக்கு வங்கத்திலும், 1926-இல் ஒரிசாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வெள்ளத்தடுப்புக்கு வழிவகை காண மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். வங்காளத்திலும், ஒரிசாவிலும் மழை எந்த அளவு பெய்கிறது; வெள்ளப்பெருக்கு எப்படி ஏற்படுகிறது என்பதைக்காண 60 ஆண்டுகளாக ஏற்பட்ட மழை-வெள்ள அளவுகளைக் கணக்கிட்டார். பின்னர் அவர் கொடுத்த தீர்வின் அடிப்படையில்தான் இரண்டு நீர்மின் நிலயங்கள் மற்றும் பாசன வசதி தரக்கூடிய தாமோதர் பள்ளத்தாக்கு, ஹராடுட் நீர்த்தேக்கத் திட்டங்கள் வந்தன.

1927-இல் இங்கிலாந்து ரொனால்டு அய்ல்மேன் பிஷர் என்னும் அறிஞருடன் சேர்ந்து புள்ளிவிவரத் தொகுப்பியல் ஆய்வில் பல முன்னேற்றங்களைக் கண்டறிந்தார் மகலனோபிஸ். அதையொட்டி விவசாயம் சம்பந்தமான விவரங்களைச் சேகரித்தார்.

இதன் தொடர்ச்சியாகப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தைத் தொடங்கினார்.

இந்திய சணல் தொழில் மையம் உருவானபோது, சணல் பயிர் விளைச்சல் பற்றி சர்வே செய்து புள்ளிவிவரங்ககளைச் சேகரித்துக் கொடுத்தார் மகலனோபிஸ். அரசாங்க அதிகாரிகளுக்கே புலப்படாத பல விஷயங்களைக் கண்டறிந்து கூறினார்.

1942-இல் இந்திய விஞ்ஞான மாநாடு நடந்தபோது, அதில் கணிதத்துக்கும், புள்ளிவிவரத் தொகுப்பியலுக்கும் தனிப்பிரிவுகள் அமைக்க வலியுறுத்தி வெற்றிகண்டார் மகலனோபிஸ். அப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்கவும் ஒப்புக்கொண்டார்.

இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தின் வளர்ச்சியை முன்கொண்டுசெல்ல ஒரு பத்திரிகை அவசியம் எனக்கருதினார். 'சங்கயா' எனப்பெயரிடப்பட்ட அந்தப் பத்திரிகை, புள்ளிவிவரங்கள் பற்றிய பல்வேறுவித நடைமுறைகளை உருவாக்கிக் கொடுத்தது. முதலில் ஒரு அச்சகத்தினரின் உதவியுடன் வெளிவந்த அந்த சஞ்சிகை, பின் அதற்கென ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் வெளிவந்தது..

அந்த அமைப்புதான் புள்ளிவிவரவியல் கழகம். இது, இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தின் இணை அமைப்பாக விளங்கியது. பின்னர் அந்தப் பதிப்புக்கழகம் ஒரு அச்சகத்தையே தனக்கென நிறுவ வேண்டியதாயிற்று.

நேருவின் நட்பு-சோவியத்துடன் உறவு

இதன் வளர்சியே பின்னர் 1967 அக்டோபரில் சோவியத் யூனியன் விஞ்ஞானக் கல்வியகத்துக்கும், இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்புக் கழகத்தின் பதிப்பகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு ஒரு அச்சகம் நிறுவப்படக் காரணமாயிற்று. இதற்கு சோவியத் யூனியன் அன்பளிப்பாக அச்சக இயந்திரங்களைக் கொடுத்தது. சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் வெளியான விஞ்ஞானக் குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிருந்து வெளியிடப்பட்டன.

1946-இல் மகலனோபிஸ், .நா. சபையின் புள்ளிவிவர இயல் துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அதன்பிறகு உலகத்தின் பல நாடுகளுக்கும் விஜயம் செய்தார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பண்டித நேரு அவர்கள் ரவீந்திரநாத் தாகூரைப் பார்க்கச்சென்ற போதெல்லாம் பலமுறை நேருவை மகலனோபிஸ் சந்தித்தித்தார்.

1940-இல்தான் நேருவின் இல்லத்தில் ஒரு நாள் தங்கி அவருடன் பல்வேறு விஷயங்களை விவதிக்கும் வாய்ப்பு மகலனோபிசுக்குக் கிடைத்தது. புள்ளிவிவரங்களுடன் திட்டமிடுதலின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது. 1938-இல் பண்டித நேரு தலைமையில் தேசிய திட்டக்குழுக் கூட்டத்தில் புள்ளிவிவரத் தொகுப்பியல் பற்றிப் பேசப்பட்டு, இதுகுறித்து ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

1946-இல் தேர்தல் பணிக்காக ஒரு வாரகாலம் பண்டித நேரு கல்கத்தாவில் தங்கியிருந்தார். மகலனோபிஸ் செயலாளராக இருந்த இந்திய விஞ்ஞானக் காங்கிரசுக்கு நேரு தலைமை வகித்தார். அந்த ஒரு வாரமும் அவருக்கு நிற்க நேரம் இல்லாமல் இருந்ததால், மகலனோபிஸ் விவாதிக்க என்ன செய்வது என்று யோசித்து, அவரது வீட்டுக்கே வந்து சேர்வதாக நேரு கூறினார். மகலனோபிசுக்குக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி!

தன் வீட்டுக்கு வந்த நேருவை வரவேற்று, அவருக்கு இந்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் கழகத்தைச் சுற்றிக்காட்டினார். அங்கு நடைபெற்ற பணிகளை எடுத்துரைத்து இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் புள்ளிவிவரத் தொகுப்பியல் எவ்வளவு முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது என்று எடுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு திறமை மிக்க மாணவர்களை அனுப்பி வையுங்கள்; அவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்து அனுப்புகிறேன் என்றார் மகலனோபிஸ்.

இதனை ஏற்று, பீதாம்பர் பந்த் என்கிற தனது செயலாளரை அனுப்பிவைத்தார் நேரு. 1946 அக்டோபரில் அமெரிக்காவுக்குச் செல்லும்போது பீதாம்பர் பந்த் அவர்களும் உடன் சென்றார். அன்றிலிருந்து சுமார் 20 ஆண்டுக்காலம் பீதாம்பர் பந்த் மகலனோபிசுடன் பணிபுரிந்தார். பின்னர் அவர் திட்டக்குழுவின் தொலைநோக்குத் திட்டப்பிரிவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.

1947 ஆகஸ்டில், நாடு சுதந்திரம் அடைந்தபோது, பொருளாதார செயல் திட்டக்குழு ஒன்றை நேரு தலைமையில் அமைத்தது காங்கிரஸ் கட்சி. 1948 ஜனவரியில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி நிரந்தரத் திட்டக்குழு ஒன்று நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதலாவது ஐந்தாண்டுத்திட்டம் உருவாயிற்று. இத்திட்டத்தில், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

உருக்குப்பற்றாக்குறை நிலவிய காலம் அது. அதன் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிடப்பட்டது. இதே நேரத்தில், மத்திய அரசின் ஆலோசகராக மகலனோபிஸ் நியமிக்கப்பட்டார். மத்தியப் புள்ளிவிவரத் தொகுப்பியல் குழுத் தலைவராகவும் தேசிய வருமானக்குழுவின் தலைவராகவும் மகலனோபிஸ் நியமிக்கப்பட்டார்.

நேருவின் விருப்பப்படி நாடு முழுவதும் ஆண்டுதோறும் சமூக-பொருளாதார நிலை, பிறப்பு-இறப்பு, நோய்கள் பற்றியப் புள்ளி விவரங்கள் கணக்கிடப்பட்டன. உலகத்திலேயே பிரம்மாண்டமானதொரு செயல்பாடு இது.

தேசிய வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்; வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்; வேலையின்மைக்குத் தீர்வு காண வேண்டும்; ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும் என்பன போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடுதல் நடைபெற்றது. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தை மகலனோபிஸ் உருவாக்கினார். தேசிய வருமானத்தை 5 சதவீதம் உயர்த்துவது, சுமார் ஒரு கோடிபேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது என்ற அடிப்படையில் இத்திட்டம் இருந்தது.

உருக்கு, இரும்பு அல்லாத உலோகங்கள், கனரக இரசாயனங்கள், கனரக இயந்திரங்கள், உரங்கள் போன்ற அடிப்படைத் தொழிற்சாலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டது. அவைபோக, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் சிறு தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலிமிருந்து பொருளாதார நிபுணர்களை அழைத்து இது குறித்தெல்லாம் விவாதித்தார் மகனலோபிஸ்.

முதல் ஐந்தாண்டுத்திட்ட இறுதியில் இருந்த பல பிரச்சனைகளை மகலனோபிஸ் அறிந்திருந்தார். மக்கள் தொகைப்பெருக்கம் ஆண்டுக்கு 45 லட்சமாக இருந்தது. பெருமளவு வேலையின்மை இருந்தது. வேலையில் இருப்பவர்களில் ஆண்டில் பாதி நாட்கள் வேலை இல்லாமல் இருப்பவர்களும் இருந்தார்கள். குறைந்த பட்சம் ஆண்டுக்கு 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளையாவது உருவாக்க வேண்டியிருந்தது. வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருந்தது. நல்ல வீடு, உடல் நலம், கல்வி கற்க வாய்ப்பு போன்றவை ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டியிருந்தது. குறுகிய காலத்திலேயே இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று மகலனோபிஸ் விரும்பினார்.

எனவே, பல்வேறு தரப்பினருடன் இதுபற்றி விவாதித்தார். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். எல்லோரும் எதார்த்த நிலைமையையும் திட்டங்களையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

ஒரு குடும்பத்தின் வரவு-செலவு, குறிப்பிட்ட காலத்தில் தனிநபரின் செலவு, உணவு, உடை, மருந்து ஆகியவற்றுக்கு ஆகும் செலவு என ஒவ்வொரு கீழ்மட்ட அளவிலும் புள்ளி விவரங்களைக் கணக்கிட விரும்பினார் மகலனோபிஸ். மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துத் துறைகளையும் அவர் ஆராய்ந்து முடிவு காண முயன்றார்.

இவர் நிறுவிய இந்தியப் புள்ளி விவரத் தொகுப்பியல் கழகத்தில் பயிற்சி பெற உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து 885 பேர் வந்து பயிற்சி பெற்றுச் சென்றார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் விருதுகள் இவரைத் தேடி வந்தன.

சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த மகலனோபிஸ், தனது 79-ஆவது வயதின் இறுதி நாளன்று 1972 ஜூன் 28-ஆம் நாள் கல்கத்தாவில் காலமானார்.

தமிழில்: மு..

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP