Thursday, April 9, 2020

அஜய் குமார் கோஷ்: வாழ்வும் பணியும்


அஜய் கோஷ்: வாழ்வும் பணியும்

அனில் ரஜிம்வாலே


[தோழர் அனில் ரஜிம்வாலே, புகழ்மிக்க 

மார்க்சிய சிந்தனையாளர்;  இந்தியக் 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில்  ஒருவர். 

அவரது ஆங்கிலக் கட்டுரைகள் சில ஏற்கனவே 

தமிழாக்கம் செய்யப்பட்டு, சஞ்சிகை 

வலைப்பூவில் வெளிவந்துள்ளன.  

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வார ஏடான ‘நியூ ஏஜ்’ 

2020 ஏப்ரல் 5-11 இதழில், தோழர் அஜய் கோஷ் அவர்களைப் பற்றி 

தோழர் ரஜிம் வாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 

இங்கே தரப்படுகிறது.  தமிழாக்கம்: எஸ்.துரைராஜ்]


    ஜய் கோஷ், தலைசிறந்த கம்யூனிஸ்ட்; தேசியவாதி; மிகவும் இடர்மிகு காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்.

     வங்கத்தில் ஓடும் அஜய் நதியின் கரையில் அமைந்த மிஹிஜம் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில், பிரம்ம சமாஜ வழிநடந்த அறிவாற்றல்மிகு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், 1909 பிப்ரவரி 20-ஆம் நாள் பிறந்தார் அவர். அதனால்தான் ‘அஜய்’ எனப் பெயரிடப்பட்டார். அந்நாள் மிஹிஜம் இப்போது புகழ்மிக்க சித்தரஞ்சன்.

            அவரது குடும்பம், கான்பூருக்கு இடம் பெயர்ந்தது; அங்கே அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரது ஆசிரியர் சுரேஷ் பட்டாச்சார்யா அவர்களால் பள்ளிக்கூடத்தில் நிறுவப்பட்ட ‘தருண் சங்கம்’ எனும் புரட்சிகர அமைப்பில் இணைந்தார். எதிர்காலத்தில் புரட்சியாளர்களாகப் பரிணமிக்கவிருந்த பிஜாய் குமார் சின்ஹா, பாதுகேஷ்வர் தத் ஆகியோரும்கூட இந்த தருண் சங்கத்தில் இணைந்திருந்தனர்.

            1924 ஆம் ஆண்டு, கான்பூரின் க்ரைஸ்ட் சர்ச் கல்லூரியில் (Christ Church College) அனுமதிக்கப்பட்ட அஜய், 1926-ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.  இந்து விடுதியில் தங்கியிருந்தார் அவர். பகத் சிங், சந்திரசேகர ஆசாத், சிவ வர்மா உள்ளிட்ட பிற புரட்சியாளர்கள் அவரது அறையில் சந்தித்தனர். மெய்யாகவே புரட்சிகர சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை அது!

பகத்சிங்குடன் சந்திப்பு

     பகத் சிங்கை முதன் முதலில்  1920-ஆம் ஆண்டு அவர் சந்தித்தார்; அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது 1928-ல். இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் அமைப்பில், தலைமறைவாக குண்டுகள் தயாரிக்கும் பிரிவின் ஓர் அங்கமானார் அவர்.

     1930 அக்டோபரில் கைதுசெய்யப்பட்ட அஜய் கோஷ், பகத் சிங் மற்றும் சகப்புரட்சியாளர்களுடன்  லாகூர் கோட்டை சிறையிலடைக்கப்பட்டார். அங்கு, புரட்சியாளர்கள் மேற்கொண்ட இரண்டுமாத உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

     தாம் விடுவிக்கப்பட்டவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என பகத் சிங், அஜய் கோஷ், சிவ வர்மா மற்றும் பிற புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். மிக துரதிருஷ்டவசமாக, பகத் சிங்கும் அவரது தோழர்கள் இருவரும் (சுகதேவ், ராஜகுரு) தூக்கிலிடப்பட்டனர். [கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என்கிற] அவர்களது அவா நிறைவேறாமல் போனது.

     போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அஜய் கோஷ் 1931 அக்டோபரில் விடுவிக்கப்பட்டார்.

            மீண்டும் 1932-ல் கைதுசெய்யப்பட்ட அவர், ஓராண்டு கான்பூர் சிறையிலும், அதன் பிறகு ஆறு மாதங்கள் ஃபெய்சாபாத் சிறையிலும் அடைக்கப்பட்டார். அங்கு, அஜய் கோஷ் அவர்களுடன் எஸ்.ஜி.சர்தேசாயும் ஒரே கொட்டடியில் இருந்தார். இருவரும் இணைந்து மார்க்சின் மூலதனத்தைக் கற்றனர். 1933-ல் சிறைவாசம் நிறைவுற்று, உறுதிமிகு கம்யூனிஸ்டாக வெளிவந்த அஜய், அதே ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில்

            பம்பாயில், 1934-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜய் கோஷ், கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்க பி.சி.ஜோஷி, ஆர்.டி.பரத்வாஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு உதவலானார். 1935-ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் சூரத்தில் நடைபெற்றதொரு கூட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பி.சி.ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936-ல் தோழர் அஜய் கோஷ், கட்சியின் பொலிட்பீரோவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரபூர்வ ஏடான ‘தேசிய முன்னணி’ (National Front ) 1938 பிப்ரவரி 3-ல் தொடங்கப்பட்டது. நாடுமுழுவதிலும் ஸ்தாபன மற்றும் அரசியல் பணிகளில் பி.சி.ஜோஷி ஈடுபட்டிருந்த நிலையில், அஜய் கோஷ்தான் அந்த ஏட்டை நடத்தும் கடமையை நிறைவேற்றினார்.

     தேச விடுதலைப் போராட்டம் ஓங்கி வளர்ந்துகொண்டிருந்த பின்னணியில், ஐரோப்பாவில் நாஜிசமும், பாசிசமும் தலைவிரித்தாடியதால் பாசிச அபாயம் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில், ‘தேசிய முன்னணி’ என்னும் வியூகமும் உத்தியும் வகுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றிக் கொண்டிருந்த காலம் அது. ஜியார்ஜி திமித்ரோவ் விடுத்த ஐக்கிய முன்னணிக்கான அறைகூவல், உலகெங்கிலும் பாசிச-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களுக்கு உத்வேகம் அளிப்பதாய் அமைந்தது.

            அஜய் கோஷ், 1940-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தியோலி தடுப்புக்காவல் முகாமில் அடைக்கப்பட்டார்.

     இதற்கிடையே, அவருக்குக் காசநோய் ஏற்பட்டு அவரது நுரையீரல்கள் இரண்டும் கிட்டத்தட்ட முற்றாக பாதிக்கப்பட்டன.

            அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் 1943 மே-ஜூனில் பம்பாயில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் காங்கிரசில் அஜய் கோஷ் பங்கேற்க இயலாமல் போனது; ஆயினும் மத்தியக் குழுவுக்கும் பொலிட்பீரோவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     1945-47 பேரெழுச்சியின் விளைவாக இறுதியில் 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. இந்த மகத்தான போராட்டத்திற்குத் தனது பங்களிப்பை நல்கியவர் அஜய் கோஷ்.

ரணதிவே வழியை எதிர்த்தவர் 

            1948-ஆம் ஆண்டு பிப்ரவரி கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலும் அஜய் கோஷ் பங்கேற்க இயலவில்லை. பி.சி. ஜோஷிக்கு பதிலாக பி.டி.ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோஷிக்கு எதிராகச் சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. ஆழமான நெருக்கடியில் கட்சி மூழ்கடிக்கப்பட்டது; சாகசவாதமும் சுய-அழிப்பும் மேலோங்கி நின்றன. சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டதை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், ஆயுதந்தாங்கிய போராட்டத்தின்மூலம் நேரு சர்க்காரைத் தூக்கியெறிய வேண்டும் என்றும், சோஷலிஸப் புரட்சியை நடத்தவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

            கட்சி முற்றாகத் தனிமைப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் (1948-1950) கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்திலிருந்து வெறும் 9000 (ஒன்பதாயிரம்!) ஆகச் சுருங்கிப்போனது.கோழைகள்’ என இழித்துரைத்து ஆயிரக்கணக்கானவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பெரும் எண்ணிக்கையிலானவர்கள், நம்பிக்கையிழந்து கட்சியைவிட்டு வெளியேறினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் போலீசாரால் கொல்லப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.

            அஜய் கோஷ், 1948-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். சாகசவாத வழிமுறைக்கு எதிராக ஒளிவுமறைவற்ற தெளிவான நிலையெடுத்தார் அவர். அஜய் கோஷ் (தலைமறைவு வாழ்க்கையில் அவர் பெயர் ‘பிரபோத் சந்திரா’), எஸ்.ஏ.டாங்கே (‘பிரபாகர்’). எஸ்.வி.காட்டே (‘புருஷோத்தமன்’) ஆகியோருடன் இணைந்து, ‘பி’ எனும் ஆங்கில எழுத்தில் தொடங்கும் புனைப்பெயர்கள் கொண்ட மூன்று கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகழ்மிக்க கடிதத்தைத் (Three P’s Letter) தயாரித்தார்.  பி.டி.ஆர். வழிமுறையை (BTR line) முறையாகத் தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விமர்சனம் செய்வதாய் அக்கடிதம் அமைந்தது; கட்சியின் வழிமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அது முக்கியமான பங்கு வகித்தது.

கட்சியின் பொதுச்செயலாளர்

              அஜய் கோஷ், 1950-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1951-ல் கல்கத்தாவில் தலைமறைவு காலத்தில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அவர் ஒருமனதாகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதலாகக் கட்சியின் வழிமுறையில் படிப்படியாக மாற்றங்கள் தொடங்கப்பட்டன. முதல் பொதுத் தேர்தலில் (1952) பங்கேற்பது எனக் கட்சி முடிவு செய்தது; இது கட்சியின் கொள்கை வழிமுறையில் பெரிய மாற்றமாகும். மக்களைவையில் 27 இடங்களை வென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 1948-50 காலகட்டத்தில் சுய-அழிப்பு அரசியல் பாதையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் கட்சி இதைக் காட்டிலும் மிக அதிகமான தொகுதிகளில் எளிதாக வென்றிருக்கும்.

            உலக சமாதானம், உணவு, விலைவாசி உயர்வு, பொதுத்துறை, தேசவுடைமை, புதுச்சேரி மற்றும் கோவா விடுதலை, மாநில மறுசீரமைப்பு, ஜமீன்தாரி முறைக்கு எதிரான போராட்டம் போன்ற பிரச்சனைகளில் கட்சி பல வெகுஜன இயக்கங்களை நடத்தியது.

            1956-ல் பாலகாட்டில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசும், 1958-ல் அமிர்தசரசில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். சோஷலிசத்தை எட்டுவதற்கான பாதையில் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கட்சி வலியுறுத்தியது. 1957-ல் கேரளத்தில் உருவான கம்யூனிஸ்ட் அரசாங்கம், தேர்தல் வழிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. வியூகத்தையும் உத்தியையும் மாற்ற வேண்டியது அவசியம் ஆயிற்று. எந்தவிதமான நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொண்டது.

     இருப்பினும், செக்டேரியன் மற்றும் ‘கண்மூடித்தனமான காங்கிரஸ்-எதிர்ப்பு’ வறட்டுத்தன நிலைபாடுகளைக் கட்சியில் ஒரு பகுதி விட்டொழிக்க இன்னும் மறுத்தது.

            1955 ஜூன் மாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப்பின் பத்திரிகையாளர்கள், நேரு சர்க்காரை மாற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கதாது ஏன்? என்று வினவினர். அதற்கு விடையளித்த அஜய் கோஷ், அவ்வாறு செய்யும் பட்சத்தில், ஆர்.எஸ்.எஸ்.-ஜனசங்கம் ஆட்சிக்கு வந்துவிடும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதனை அனுமதிக்காது என்றார். காங்கிரசில் உள்ள முற்போக்குப் பகுதியினர் உள்ளிட்ட பரந்துவிரிந்த ஜனநாயக முன்னணிதான் நேரு சர்க்காருக்கு மாற்றாக வரவேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

     ஜனநாயகத்துக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் போராட்டம், மார்க்சியத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சி ஆகியவை குணரீதியான புதியதொரு கட்டத்தை எட்டியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் காங்கிரஸ் (1958) உணர்த்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புவிதிகளில் (constitution) புதிதாகச் சேர்க்கப்பட்ட ‘முன்னுரை’ (preamble)யிலும், கட்சியின் இதர ஆவணங்களிலும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் கருத்து கைவிடப்பட்டது; விரிவான மூன்றடுக்கு தலைமை உருவாக்கப்பட்டது; இந்திய அரசியல் சட்டத்தின் கேந்திரமான பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டது; எதிர்காலத்தில் இந்தியாவில் அமையவிருக்கும் சோஷலிச சூழலில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பதற்கான வழிவகை செய்யப்பட்டது; ஆயுதங்களை ஏந்தாமல் அமைதிபூர்வமாக சோஷலிசத்தை எட்டுதல் எனும் கருத்தமைவு ஏற்கப்பட்டது.

     இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவதில் அஜய் கோஷ் தலையாய பாத்திரம் வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சரித்திரபூர்வமான மாற்றத்தை எட்ட இருந்த தருணம் அது.

மாஸ்கோ மாநாடும் அஜய் கோஷும்

     உலகில் உருவாகிவரும் புதிய நிலைமை, கம்யூனிஸ்டுகளின் வியூகம், உத்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் பொருட்டு 1957, 1960 மற்றும் 1969 ஆகிய வருடங்களில் மூன்று பெரும் உலகக் கம்யூனிஸ்ட் மாநாடுகள் நடைபெற்றன. 1960 நவம்பர் மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற 81 கட்சிகளின் மாநாட்டில் அஜய் கோஷ் கலந்துகொண்டார். சமாதான சகவாழ்வு, அமைதிபூர்வமான சமுதாய மாற்றம், வளர்ந்துவரும் நாடுகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஜனநாயகப் பாத்திரம், தேசிய ஜனநாயகம், நாடாளுமன்றப் பாதையின் திறன் ஆகியவை சம்பந்தமான அந்த மாநாட்டின் முடிவுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அந்த மாநாட்டின் ஆவணங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது.

மாவோயிசமும் கட்சியில் பிளவும்

            81 கட்சிகளின் அறிக்கையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டபோதிலும், வெகுவிரைவில் அதிலிருந்து பின்வாங்கி, ‘லெனினியம் நீடூழி வாழ்க’ என்னும் தலைப்பில் ஒரு போட்டி ஆவணத்தை அது வெளியிட்டது. சீனத்தில் மாவோயிசம் தலைதூக்கியது; உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சீர்குலைக்கின்ற அத்தியாயம் அரங்கேறவிருப்பதற்குக் கட்டியம் கூறியது.

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுதல் என்னும் ஆபத்து, 1961-இல் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் ஆறாவது காங்கிரசில், பூதாகரமாய் உருவெடுத்து நின்றது. அந்த மாநாட்டில், அஜய் கோஷ் கலக்கமற்ற, அனைத்துக் கருத்தோட்டங்களுக்கும் உரிய இடமளிக்கின்ற பாரபட்சமற்ற உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் புதிய கருத்து நிலைகள் பொதிந்திருந்தன; செக்டேரியன் புரிதல்களிலிருந்து அது விலகி நின்றது. காங்கிரசின்பால் ‘ஒன்றுபடுதலும் போராடுதலும்’ எனும் நிலையை அவர் மேற்கொண்டார்.

     அஜய் கோஷ், உடல்நலம் குன்றியிருந்தார். அவரது உரை ஒருமனதாக ஏற்கப்பட்டது; அதன் வெளிச்சத்தில் அரசியல் தீர்மானத்தைத் திருத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

            கட்சி பிளவுபடுதல் தற்காலிகமாக மட்டுமே தவிர்க்கப்பட்டது. 1962 அக்டோபரில் இந்தியாவை சீனா ஆக்கிரமித்தது; அதன் விளைவாகக் கட்சிக்குள்ளேயும் நாட்டிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

            [எனினும் அஜய் கோஷ் மறைவுக்குப் பின்] மூன்றில் ஒரு பகுதி தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி, போட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதால் 1964 ஏப்ரலில் கட்சி பிளவுண்டது; அந்தப் போட்டி கட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என பின்னர் நாமகரணம் சூட்டப்பட்டது.

சரித்திர நாயகர்

     இடர்மிகு சூழலில், 1962 பொதுத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார் அஜய் கோஷ்; நாடாளுமன்ற மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் அதிக இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சியாக ஆனது. உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்யலானார். இதனைத் தொடர்ந்து, 1962 ஜனவரியில் அவருக்கு மோசமான மாரடைப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு நடப்பதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 1962 ஜனவரி 13ஆம் நாள் அவர் அமரரானார்.

            மிகவும் கொந்தளிப்பான, இன்னல்மிகு காலகட்டத்தில், இந்திய நிலைமையின் பிரத்யேகமான நிலைக்கேற்ப வெற்றிகரமாக மார்க்சியத்தைப் பிரயோகித்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்தினார் அஜய் கோஷ். ஒரு தேசமாக இந்தியாவைப் புரிந்துகொண்ட அவர், தேசத்திற்கான கடமைகளையும், வர்க்கக் கடமைகளையும் ஒருங்கிணைத்தார்.

            கம்யூனிஸ்டுகள் அழிவு சக்தியல்ல; தேசத்தை ஜனநாயகரீதியில் மறுநிர்மாணம் செய்யவே அவர்கள் போராடியவர்கள் என்பதை அவர் நிரூபித்தார். மதவெறிக்கு எதிராகவும், மதவெறி பாசிசத்தால் ஏற்படும் அபாயங்களையும் எதிர்த்துப் போராடினார் அவர்.

            அஜய் கோஷ், சீர்மிகு கம்யூனிஸ்ட் மட்டுமல்ல; அவர் மகத்தான தேசியவாதி;, ஜனநாயகப் பண்பாளர்; மனிதருள் மாணிக்கம்!




Read more...

Tuesday, February 11, 2020

ஜெயகாந்தன் நினைவு முதல் சொற்பொழிவு

மதவெறி பாசிசத்தை முறியடிக்க ஓரணியில் திரள்க!
மார்க்சிய சிந்தனையாளர் அனில் ரஜிம்வாலே அறைகூவல்!!
[தோழர் ஜெயகாந்தன் நினைவு முதல் சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் ஜனவரி 22, 2020 அன்று நடைபெற்றது. அனைத்திந்திய முற்போக்குப் பேரவை, இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பு இந்நிகழ்ச்சியை நடத்தியது. மார்க்சிய சிந்தனையாளரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான தோழர் அனில் ரஜிம்வாலே, ‘சுதந்திர இந்தியாவின் சாதனைகளும் சவால்களும்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையின் பெரும்பகுதி தமிழில் இங்கு தொகுத்துத் தரப்படுகிறது.]

   லைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியை அனைத்திந்திய முற்போக்குப் பேரவையும், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகமும், ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்வில், ‘சுதந்திர இந்தியாவின் சாதனைகளும் சவால்களும்எனும் தலைப்பில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியும் பேருவகையும் கொள்கிறேன்.
     தமிழகத்தில் சென்னைக்கும் வேறு பல இடங்களுக்கும் நான் வந்திருக்கிறேன். தமிழகத்து அறிவுஜீவிகள், செயல்துடிப்புடன் விளங்குகிறார்கள்; நமது நாட்டின் எதிர்காலம் குறித்த சமூகப் பிரச்சனைகளை அறிவுபூர்வமாகவும், செயலூக்கத்துடனும் அவர்கள் அணுகுவது கண்டு மெய்யாகவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
     நண்பர்களே, இந்திய அரசியல் சட்டத்தின் 70-வது ஆண்டினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் இந்த மாபெரும் சாதனைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல்கள் கருமேகங்களாய்ச் சூழ்ந்துள்ளன.
மக்கள் நல்கிய கொடை
     அரசியல் சாசனம் என்பது, குறிப்பாக நமது நாட்டில் மக்களின் போராட்டம் நல்கிய கொடையாகும். சுதந்திரத்துக்காக, தேச விடுதலைக்காக, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்து நமது நாடு நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியுள்ளது. நமது அரசியல் சட்டத்துக்காக நடந்த போராட்டம் இந்தப் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்ததாகும்.
     பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்போது நமது நாட்டில் சர்வாதிகாரமும் கொடிய அடக்குமுறையும் கோலோச்சின. எனவே, நாட்டின் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும் விடுதலை இயக்கத்தை வழிநடத்திய தலைவர்கள், வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தார்கள். மக்கள் அனைவரும் ஜனநாயக உரிமை படைத்தவர்களாக, ஜனநாயக அபிலாசை கொண்டவர்களாக, கருத்து வேற்றுமைகளை வெளிப்படுத்தவும், ஒன்றுபடவும், வேறுபடவும் மீண்டும் ஒன்றுபடவும் சுதந்திரம் கொண்டவர்களாக இலங்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழும் நிலை சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் விழைந்தார்கள்.
     சுதந்திரத்துக்கு முன்னர், நமது நாட்டில் சட்டபூர்வமான அமைப்புகளும் ஜனநாயக அமைப்புகளும் மிகவும் பலவீனமானவையாகவே இருந்தன. காலனியாதிக்கச் சுரண்டல் ஆட்சியின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வேயும், மேற்கத்திய கல்வியும், ஓரளவு தொழில் வளர்ச்சியும் நவீன ஜனநாயக உணர்வுக்கு வழிவகுத்தன. ஆம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நினைத்தது ஒன்று; உண்மையில் நடந்தது வேறு! காலனியாதிக்க ஆட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் மேற்கத்திய கல்வியைக் கொணர்ந்தார்கள். அந்தக் கல்வியின் மூலமாக நமது நாட்டின் தேசிய இயக்கத்து அறிவுஜீவிகள், படித்த நடுத்தர வர்க்கத்தினர், புரட்சிகளின் சரித்திரத்தையும், ஜனநாயகத்தின் வரலாற்றையும், மக்களது போராட்டப் பின்னணிகளையும் கற்றுத் தேர்ந்தனர்.
     இதுதான், புதியதோர் ஜனநாயக தேசிய உணர்வு நமது நாட்டில் உதித்ததன் வரலாறு.
     ஆனால், தமது முகாமில் ஒரு தேசபக்தத் தியாகியைக்கூட கொண்டிராத, நாட்டின் விடுதலைக்காக எந்தத் தியாகத்தையும் செய்திராதவர்கள், தேசத்தின் சுதந்திரப் போரில் பங்குகொள்ளாத கும்பல் இன்று தேசம், தேசியம் என்பன குறித்தெல்லாம் கொக்கரிக்கிறார்கள்; சான்றிதழ்கள்வேறு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
முதல் சுதந்திரப் போர்
     1857-ல் வெடித்த இந்தியாவின் முதல் சுதந்திரப்போர்தான் இந்த நாட்டின் முதல் விடுதலைப் போராட்டமாகும். அதில்தான் இந்தியா என்பது ஒரு தேசமாக முதன்முதலில் ஒன்றாக உருவெடுத்து நின்றது. இவ்வாறுதான் அந்தப் போராட்டத்தின் போக்கில் இந்திய தேசமும் தேசியமும் பிறந்தன. அந்தப் போராட்டத்தின் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி சக்கரவர்த்தியான பகதூர்ஷா ஜாபர்தான் அவர்.
     இந்திய தேசம் உருவானதற்கு மற்றொரு  காரணமும் உண்டு. அதனைப்பற்றி காரல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதுதான் ரயில்வேயின் அறிமுகம். 1853-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ரயில்வே முதன்முதலில் அறிமுகமானபோது, இந்திய விடுதலை இன்னும் வெகுதொலைவில் இல்லை என தீர்க்கதரிசனத்துடன் கணித்தார் மார்க்ஸ். ரயில்வே அறிமுகத்தின் விளைவாக உருவாகப்போகின்ற செய்தித் தொடர்பு, தொழில்மயமாக்கம் ஆகியவற்றால் புதிய சமூக சக்திகள், வர்க்கங்கள் தோன்றி, இந்திய சமுதாயத்தில் தேசிய உணர்வையும் சமூகப் புரட்சியையும் விளைவிக்கும் என்றார் அவர். அவரது கணிப்பு 95 ஆண்டுகளுக்குப்பின் மெய்ப்பிக்கப்பட்டது.
     1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலையை வென்றெடுத்தது. மிகச்சில நிலப்பிரபுக்கள், உலகக் காலனியாதிக்க சக்திகளைச் சார்ந்திருந்த ஒட்டுண்ணி பெருவணிகர்கள் நீங்கலாக, ஆலை முதலாளிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், குட்டிபூர்ஷ்வாக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துப் பகுதியினரும் ஒன்றிணைந்து சுதந்திரப்போரில் குதித்தனர்; தியாக வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர்.
எதிர்கால இந்தியா பற்றிய கனவு
     நண்பர்களே, இதே காலகட்டத்தில்தான் தேசிய தலைமை புதிய இந்தியா குறித்து சிந்திக்கத் தொடங்கிற்று. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பண்டிட் நேரு, பெரியார், ம.சிங்காரவேலர், எஸ்.வி.காட்டே, பி.சி.ஜோஷி, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் நவபாரதம் குறித்து தீட்சண்யமிகு பார்வை கொண்டிருந்தனர். புதிய இந்தியா பற்றி கனவு கண்டனர். பகத் சிங், சந்திரசேகர ஆசாத், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா போன்ற விடுதலைப்போர் வீரர்களும் இதுகுறித்து சிந்திக்கலாயினர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து திட்டமொன்றைத் தயாரிக்கலாயினர். அதன் ஒரு பகுதிதான் மக்களுக்கு அரசியல் சட்டபூர்வமான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளைக் கிட்டச் செய்வதாகும்.
     ஏகாதிபத்தியமும், காலனியாதிக்கமும் பிற நாடுகளில் மக்களின் அரசியல்சட்டரீதியான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் தன்மை கொண்டவை. பிரிட்டன் போன்ற காலனியாதிக்க சக்திகள், தமது சொந்த நாட்டில் ஜனநாயக அமைப்புமுறையைக் கொண்டிருந்தாலும், அடிமைப்படுத்தப்பட்ட காலனி நாட்டு மக்களுக்கு அந்த உரிமைகளைத் தர மறுத்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில்தான், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்கள் ஜனநாய உரிமைகளுக்காகவும், அரசியல்சட்ட ரீதியிலான உரிமைகளுக்காகவும், வாக்குரிமைக்காகவும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்காகவும் போராடினர்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவம்
     நாடாளுமன்ற அமைப்புகளும், நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும், குறிப்பாக இடதுசாரி சக்திகள் புரிந்துகொள்வது அவசியம். முறையான ஜனநாயக அமைப்புகளின்றி இடதுசாரி இயக்கமோ, ஜனநாயக சக்திகளோ முன்னேறிச் செல்ல இயலாது. பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் இந்தியாவில் மிகச் சில தேர்தல்களே நடந்துள்ளன. 1926, 1937, 1946 ஆகிய ஆண்டுகளில்தான் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் நாட்டு மக்களில் 14 சதவீதத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். 1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 9-ல் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. சுதந்திரத்துக்காகப் போராடியவர்களைத் தேர்ந்தெடுத்ததன்மூலம் மக்கள் தமது ஜனநாயக உரிமை வேட்கையை உறுதியுடன் வெளிப்படுத்தினார்கள். வருங்கால இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே மேன்மையுற்ற அமைப்பாக இருக்கும் என்பதை அறிவிக்கும் மக்களின் குரலாய் இது அமைந்தது. இந்திய மக்களும், அவர்தம் பிரதிநிதிகளும் படிப்படியாகக் காலனியாதிக்க, ஏகாதிபத்திய அமைப்பினை ஆட்டங்காணச் செய்தனர். இது ஒரு மாபெரும் சாதனையாகும்.
     பல அம்சங்களிலும், இந்தியா தனிச்சிறப்பு வாய்ந்த நாடு என்பதை உணரவேண்டும். ஆயுதம் தாங்கிய போராட்டம், சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் என சீர்மிகு இயக்கங்கள் சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அழிக்கமுடியாத தடங்களைப் பதித்த நாடு இது. அதே நேரத்தில், நமது நாட்டில் அரசியல் சட்டரீதியான சீர்திருத்தங்கள், அரசில் இந்திய மக்கள் பங்கேற்று அதனை நடத்துதல் ஆகியவற்றுக்கான போராட்டமும் இவற்றுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
     நாடு விடுதலை பெறுவதற்கு ஓராண்டு முன்னதாகவே ஜவகர்லால் நேரு அரசியல் நிர்ணயசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமரானார். இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை வடிப்பதுதான் அரசியல் நிர்ணயசபையின் பிரதான பணியாகும். மூன்றாண்டு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் சாசனங்களை அலசி ஆராய்ந்த பின்னர், கடுமையான முயற்சிகளைத் தொடர்ந்து 1950 ஜனவரி 26-ல் இந்தியாவின் அரசியல் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
புரட்சிகரமான அரசியல் சாசனம்
     உலகிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது நமது அரசியல் சட்டம். 21 வயது பூர்த்தியான அனைத்து மக்களுக்கும் ஒரே நாளில் வாக்குரிமை அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டது நமது அரசியல் சட்டம். ஜாதி, இனம், மதம், பால், பொருளாதார நிலை ஆகிய வேறுபாடுகளையெல்லாம் கடந்து அனைத்து மக்களுக்கும் இந்த உரிமையை அளித்தது நமது அரசியல் சட்டத்தின் தனிச்சிறப்பாகும். அந்த வகையில் அது ஜனநாயகபூர்வமான அரசியல் சட்டமட்டுமல்ல; புரட்சிகரமான அரசியல் சட்டமுமாகும்.
     உலகில் எந்தவொரு நாட்டின் அரசியல் சட்டமும் இத்தகைய உரிமையை அனைத்து மக்களுக்கும் ஒரே நாளில் அளிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சோவியத் யூனியன், சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்கான ஜனநாயகபூர்வமான வாக்குரிமையைப் பல்வேறு கட்டங்களில்தான் உலக நாடுகள் வழங்கியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் 1965-ல்தான் வாக்குரிமை பெற்றனர். இங்கிலாந்தில் தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. எனவேதான், தொழிலாளி வர்க்கத்தின் இந்தக் கோரிக்கையையும், பத்துமணிநேர வேலை நாள் எனும் கோரிக்கையையும் வலியுறுத்தி 1840களில் நடந்த சார்டிஸ்ட் இயக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கள் வாக்குரிமை பெறுவதற்காக இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரையிலும் போராட வேண்டியதாயிற்று.
     அதனால்தான், உழைக்கும் மக்கள் ஜனநாயக உரிமைகளும் வாக்குரிமையும் பெறவேண்டியதன் அவசியத்தை மார்க்சும், எங்கெல்சும் லெனினும் வலியுறுத்தினர். வாக்குரிமை என்பது ஒரு போராட்ட ஆயுதம் என்பதால் அவர்கள் இதனை வலியுறுத்தினர். இதனை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
     அரசியல் சட்டம், தேர்தல்கள், வாக்குரிமை ஆகியவை மக்களின் கரங்களில் கிடைத்த போராட்டக் கருவிகள். அவற்றை வழங்கியது பூர்ஷ்வா அமைப்பாக இருக்கலாம். ஆயினும் உழைக்கும் ஜனத்தொகுதியும், மக்களும் அவற்றைப் பயன்படுத்துகின்றபோது அவை புரட்சிகர ஆயுதங்களாக, ஜனநாயக ஆயுதங்களாக ஆகிவிடுகின்றன.
     இதனை நாம் மறந்துவிட்டால், பாசிசத்துக்கு நாம் நடைபாவாடை விரித்தவர்களாவோம். இந்த விலைமதிப்பில்லா ஆயுதங்களை அதிதீவிர வலதுசாரிகள்வசம், பாசிச சக்திகள்வசம் நாம் ஒப்படைப்பது போலாகிவிடும். இத்தாலியிலும், ஜெர்மனியிலும், ஸ்பெயினிலும் இன்னபிற நாடுகளிலும் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்கள் இதனை உறுதி செய்கின்றன.
தனிச்சிறப்புமிகு நாடாளுமன்ற அமைப்பு
     தனிச்சிறப்புவாய்ந்த நமது அரசியல் சட்டம் உருவாக்கிய நாடாளுமன்ற அமைப்பு தனக்கே உரிய சிறப்பம்சங்களைக் கொண்டது.
                இந்தியாவில் ஏறத்தாழ இரண்டரை டஜன் மாநிலங்கள் உள்ளன. இவற்றை வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆளுகின்றன. சில மாநிலங்கள் இடதுசாரிகளாலும், சில நடுவாந்தரக் கட்சிகளாலும், சில வலதுசாரிகளாலும் ஆளப்படுகின்றன. இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி, மாநிலக் கட்சிகள் என வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ளன.
     வேற்றுமை எனும் வளமிகு நாடு இந்தியா. பல்வேறு அரசியல் கட்சிகள், கலாச்சாரங்கள், நூற்றுக்கணக்கான மொழிகள், பலப்பல மதங்கள், குழுக்கள், சாதிகள் என, பண்பாடு ரீதியிலும், மொழி அடிப்படையிலும், பொருளாதார, சமூக அடிப்படையிலும் வேற்றுமைகள் கொண்ட நாடு இது. இன்னும் சொல்லப்போனால், சாதியும் சாதியவாதமும் இந்தியாவில் மட்டுமே நிலவுகின்ற அம்சங்கள்.
மதமும் மனித வாழ்வும்
     வேற்றுமைமிகு இந்நாட்டில், மக்கள் தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையோராக உள்ள இந்த நாட்டில், சீக்கியர் ஒருவர் பிரதமராக இயலும்; முகமதியர் குடியரசுத் தலைவராக முடியும். மற்ற நாடுகளில் இது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கெல்லாம் இதுபோல் நிகழ்ந்திருந்தால் முரண்பாடுகள் முட்டியிருக்கும்; மோதல்கள் வெடித்திருக்கும்.
     இந்தியாவில் இது அமைதிபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வகுப்பினரும், மதத்தினரும், கலாச்சாரங்களும், வர்க்கத்தினரும், தேசிய இனங்களும், துணை தேசிய இனங்களும், பூர்வகுடியினரும், பழங்குடியினரும் இன்னபிறரும் ஒன்றுபட்டு ஒரு தேசமாக இங்கே உருவாகியிருக்கின்றனர். தேசம் என்பது மக்கள் ஜீவித்திருத்தலுக்கான ஒரு வடிவம். ஒரு சமூக-பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கான நீண்ட வரலாற்றிலிருந்து, ஏகாதிபத்தியத்திற்கும், சுரண்டலுக்கும் எதிரான, குறிப்பாக சுதந்திரத்துக்கான போராட்டத்தின் நெடிய சரித்திரத்திலிருந்து முகிழ்ப்பது அது. இந்தியா, சீனா, வியத்நாம், தென்கிழக்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றில் உயிர்த்துடிப்புடன் வாழ்தலுக்கான போராட்டத்திலிருந்து தோன்றியதுதான் தேசம். அதற்குள்ளேதான் அனைத்துவிதமான முரண்களும், இயங்கியல் ரீதியிலான, வர்க்க அடிப்படையிலான முரண்களும், தேசியவாதமும், சர்வதேசியவாதமும், ஜாதி, மத, இன அடையாளங்களும் அடங்கியுள்ளன. எனவே, தேசம் என்பது ஜீவித்திருத்தலின் பல பக்கங்களைக் கொண்ட முரண்பாடுகளின் வடிவம்; அது, மக்கள் வாழ்வின் ஒரு வடிவம். அது, தேசிய, கலாச்சார, சமூக, இன மற்றும் தனிமனித வாழ்வின் ஒரு வெளிப்பாடு.
     இந்தப் பின்னணியில் நோக்குங்கால், மதம் என்பது கலாச்சார வாழ்வின் ஒரு வடிவம் என்பது புரியும். அதுபோன்றே மத-மறுப்பும்கூட கலாச்சார வாழ்வின் ஒரு வடிவமே! கடவுள் மறுப்பினை ஜனநாயக உரிமைக்கான போராட்ட வழியாகக்கொண்ட பெரியார் வாழ்ந்த இதே நாட்டில்தான் லட்சோப லட்சம் மக்கள் இறை நம்பிக்கையும் மத நம்பிக்கையும் கொண்டவர்களாய் வாழ்கின்றனர். இங்கே கடவுள்மீது நம்பிக்கை கொண்ட மதங்களும் உண்டு; கடவுளை ஏற்காத மதங்களும் உண்டு. ஆக, தேசம் என்பது முரண்பாடான நம்பிக்கைகள் கொண்டதோர் அமைப்புமுறை. இந்தக் கருத்து வேறுபாடுகளை, இந்த முரண்பாடுகளின் ஒற்றுமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அனைவரும் மதித்து நடந்துகொள்ள வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் சாரம்.
     சுதந்திரப்போராட்ட காலத்தில் தேசமே ஓருரு கொண்டு எழுச்சிபெற்ற நிலையில் மதமும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கியது. எனவே மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, கடவுள் நம்பிக்கை கொள்வதற்கான உரிமை ஆகியவையும் ஜனநாயக உரிமைகள் ஆகின்றன. எவ்வாறு மதநம்பிக்கையும் இறை நம்பிக்கையும் கொண்ட மக்கள் விடுதலைப் போரில் பங்குகொண்டார்களோ, அதுபோன்றே இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் அப்போரில் பங்கேற்றனர்.
     நம் தேசத்தின் இந்த ஜனநாயகத் தன்மை, விடுதலைப் போராட்டத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. இதனை நமது அரசியல் சாசனமும் பிரதிபலிக்கலாயிற்று.
     எனவேதான், நமது அரசியல் சட்டம் நான்கு அடிப்படையான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது: இறையாண்மை, சோஷலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், ஆகியவையே அவை.
ஜனநாயகத்தின் மாண்பு
     ஜனநாயகம், நமது அரசியல் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகும். ஜனநாயகம் என்பது வெறுமனே வாக்குரிமையை அளிப்பது மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையை அளிப்பதாய் அது இருக்க வேண்டும். கருத்து மாறுபாடுகளுக்கு இடமில்லையேல் அது ஜனநாயகமன்று. கருத்து வேறுபாடு இல்லையெனில், எதிர்வாதமோ, விவாதமோ, கருத்துப் பரிமாற்றமோ இருக்கவியலாது. கருத்துப் பரிமாற்றம் என்பது நமது தொன்மைக்கால சமுதாயத்திலேயே காணப்பட்டது. நவீன அமைப்பில் அது வளர்ச்சிபெற்று உயர்நிலையிலான ஜனநாயகத் தன்மை பெறுகின்றது. ஜனநாயகம் என்பது பரஸ்பரம் சகிப்புத்தன்மை பாராட்டுவது மட்டுமன்று; அது, ஒருவரையொருவர் மதித்து நடத்தலாகும். பரஸ்பரம் கற்றுக் கொள்ளுதலாகும்; கூட்டாக உண்மையைத் தேடி கண்டுணர்தலாகும். அவ்வாறு செய்கையில் அது அறிவியல்பூர்வமான உண்மையை, எதார்த்தத்தை, பகுத்தறிவை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது. இது பல கட்டங்களில் நடந்தேறக்கூடியது. எனவே, ஜனநாயகம் நமது அரசியல் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.
மதச்சார்பின்மையின் மகத்துவம்
     அடுத்து, மதச்சார்பின்மை. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான் தேர்ந்தெடுக்கிற மதத்தினைப் பின்பற்றுவதற்கு உரிமை உள்ளவன். இது நமது சுதந்திர இயக்கத்தின் மகத்தான பாரம்பரியத்திலிருந்து முகிழ்த்தது. அதன் வரலாறு, மிகுந்த ஆர்வமூட்டுவதாகும். வெவ்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்கள் அந்த தேசிய இயக்கத்தில் பங்கேற்றனர்.
     அதுமட்டுமின்றி, தமது சொந்த அனுபவத்தின்மூலம் சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் மதத்தினை அதற்கு உரிய இடத்தில் எங்ஙனம் வைப்பது என்கிற ஞானத்தைக் கற்றறிந்தார்கள். ‘பசியால் வாடும் மனிதனுக்கு உணவை அளிக்காத மதம் எனது மதமல்ல’ என்பார் அவர். மதத்தின் பொருளாதார உள்ளடக்கத்தைக் கண்டுணர்ந்த அவர், பொருளாதார அடித்தளம்தான் சமுதாயம் முழுவதன் அடிப்படை என்பதை ஆய்ந்து அறிந்தார். தன் வாழ்வின் இறுதிக் காலத்தை அவர் நெருங்கியபோது, பொருளாதார சக்திகளின் இயக்கத்துக்கே அவர் முன்னுரிமை அளிக்கலானார். இன்னும் பத்தாண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால், ஆன்மிக உரிமைகளுக்காகப் போராடுவதைவிட, மக்களின் பொருளாதார உரிமைகளுக்காகத்தான் அவர் முதலில் போராடியிருப்பார் என்பது உறுதி.
உண்மை பக்தர்—போலி பக்தர்கள்
     இந்த நாட்டின் வினோதத்தைப் பாருங்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர், ராமபிரானின் பெயரை உச்சரித்தார்; வர்ணாசிரமத்தை ஆதரித்தார்; இந்து மதத்தைப் பின்பற்றினார். அதே நேரத்தில், விடுதலைப் போருக்குத் தலைமையேற்ற அவர், காலனியாதிக்கத்தின் வேரைப் பிடித்து உலுக்கி அதனை ஆட்டம்காணச் செய்தார். வெகுஜன விவசாயிகள் மற்றும் குட்டிபூர்ஷ்வா வெகுஜனப் பிரிவினரின் பொருளாதார அபிலாசைகளைப் பிரதிபலித்ததன் விளைவே அவரது இந்த சாதனைக்குக் காரணம். பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலம் தொடங்கி, இன்றுவரை இது கைவினைஞர்களின், சிறு விவசாயிகளின், சிறு உற்பத்தியாளர்களின் தேசமாகவே உள்ளது. அதனால்தான் இதனை நன்குணர்ந்த காந்தியடிகள், கைராட்டை, அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற முழக்கங்களை முன்வைத்தார். நம் நாட்டில் குறியீடுகளுக்கு முக்கியமான இடமுண்டு. அந்த வகையில் குட்டி பூர்ஷ்வாக்கள் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் உற்பத்தி சாதனங்களைத் தொடர்புபடுத்துவதில் தனிச்சிறப்பு மிக்கவராக காந்தி விளங்கினார். விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர் வர்க்கம், அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள் என தேசமே அவரது தலைமையின்கீழ் அணிதிரண்டது.
     இராமனையும் இந்து மதத்தையும் பின்பற்றிய அவரைப் போலி இந்துமத பக்தர்கள், இந்துமதத்தையும் வரலாற்றையும் திரித்துக் காட்டியவர்கள், சுட்டு வீழ்த்தினர்.
     மதத்தைத் திரித்துக் காட்டுவதன்மூலமே மதவெறி ஜனிக்கிறது. இது காலனியாதிக்கத்துக்கு வாகாக அமைந்ததொரு ஆயுதமாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் வலதுசாரிப் பிரிவினர், விடுதலை இயக்கத்தை உடைப்பதற்கு எப்போதுமே வகுப்புவாதத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
     இந்த வகுப்புவாதிகள்தான் காந்தியைப் படுகொலை செய்தனர். அவரைக் கொலை செய்வதன்மூலம், இந்திய விடுதலை இயக்கத்தின் பாரம்பரியத்தை வீழ்த்த அவர்கள் எத்தனித்தனர். இதே சக்திகள்தான் இந்திய விடுதல இயக்கத்தை பாசிசமயமாக்க முனைந்தனர். பாசிசமயமாக்குவதும், ஜனநாயகக் கோட்பாடுகளை அழித்தொழிப்பதும் அதிதீவிர வலதுசாரி சக்திகளின் கடைந்தெடுத்த பாசிச குணாம்சமாகும்.
     இதனால்தான் இந்துமதத்தின் போலி பக்தர்கள், உண்மையான பக்தரைக் கொன்றுவிட்டனர். காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமைதாங்கினார் என்பதற்காக, அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக நின்றார் என்பதற்காக, காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியமக்கள் அனைவரையும், அனைத்து வர்க்கத்தினரையும் திரட்டி வழிநடத்தினார் என்பதற்காக அவர்கள் அவரைப் படுகொலை செய்துவிட்டனர்.
     இது முக்கியமானதொரு இந்திய முரண் ஆகும்.
     அதனால்தான், மதச்சார்பின்மை நமது அரசியல் கலாச்சாரத்தின் அடிப்படையாக விளங்குகிறது. அந்த அரசியல் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண் நமது சுதந்திர இயக்கம். அந்த சுதந்திரப்போரில் அனைத்து மக்கள் பகுதியினரும், அனைத்து மதத்தினரும், மத நம்பிக்கை அற்றவர்களும் காலனியாதிக்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
     அப்படி உருவான மதச்சார்பின்மைதான் இப்போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஏனெனில், மதவெறி சக்திகளின் பேயாட்டத்துக்குப் பிரதான தடையாக இருப்பது மதச்சார்பின்மையே! இதனால்தான், அதிதீவிர வலதுசாரி சக்திகள் உள்ளார்ந்த இந்திய ஒற்றுமையை, வலுவாகப் பின்னப்பட்டிருக்கும் கலாச்சார ஒருமைப்பாட்டை சிதைத்து சின்னபின்னமாக்க முனைந்திருக்கிறார்கள்.
நோக்கு-இலக்கு சோஷலிசம்
     அடுத்து, மற்றொரு கோட்பாடான சோஷலிசம் பற்றிக் காண்போம். இது இந்திய அரசியல் சாசனத்தின் நான்காம் தூணாக உள்ளது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இடதுசாரி முகாமைச் சேர்ந்த பலரும், வேறு சிலரும்கூட இதனை ‘போலித்தனமான சோஷலிச கோஷம்’ என்று இழித்துரைத்துள்ளனர். ஆனால், இங்கே நாம் மனதில் இருத்த வேண்டியது, இந்த முழக்கம் அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதையே!
     இங்கு மற்றொரு விஷயத்தை எடுத்துக்கூற விரும்புகிறேன். பகத் சிங்கும் அவரது தோழர்களும் தமது கட்சியை நிறுவியபோது,  ‘இந்துஸ்தான் ரிபப்ளிகன் ஆர்மி’ என்றுதான் அதற்கு முதலில் பெயரிடப்பட்டது. ஆயினும், பகத் சிங்கும், சந்திரசேகர ஆசாத்தும், அந்த அமைப்பின் பெயரில், ‘சோஷலிஸ்ட்’ எனும் பதத்தை இணைத்தார்கள். இது ஒரு குணரீதியான மாற்றமாகும். அவ்வாறு செய்ததனாலேயே அந்த அமைப்பிலிருந்த அனைவரும் சோஷலிசத்தைப் புரிந்துகொண்டார்கள் அல்லது ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று பொருளல்ல. சோஷலிசம்தான் எமது இலக்கு என்று அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இறுதியில், பகத் சிங் கிட்டத்தட்ட விஞ்ஞான சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தார்; கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என்றும் முடிவு செய்தார். துரதிருஷ்டவசமாக அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவரது நெருங்கிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர், சிலர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும், பலர் காங்கிரஸ் கட்சியின் இடதுசாரி அணியிலும் தம்மை இணைத்துக் கொண்டனர்.
     இவ்வாறுதான் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப விஞ்ஞான சோஷலிசம் நமது நாட்டில் வேரூன்றலாயிற்று.
     எனவே, இந்திய அரசியல் சாசனத்தில் சோஷலிசத்தை இணைத்தமை, நோக்கு-இலக்கு எனும் அடிப்படையில் சோஷலிச சக்திகளுக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும்.
     ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடலாகாது. இந்தியாவின் முதல் பிரதமர் இறை நம்பிக்கை இல்லாதவர். இருப்பினும், பலப்பல மதங்களைக் கொண்ட இந்திய நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நாட்டின் நவீன ஆலயங்களாம் கனரகத் தொழில்களை அவர் நிறுவச் செய்தார்; வலிமையான பொதுத் துறையைக் கட்டினார். நவீன இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இவையே அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளன. இந்தியா இனியும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்கிற நாடல்ல; அது, அதிநவீன பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடாகப் பரிணமித்துள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னைய இந்தியாவின் மகத்தான சாதனையாகும் இது.
     இந்தியத் திருநாட்டின் ஜனநாயகம், சோஷலிச நோக்கு ஆகியவற்றின் விளைவாக சில மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்துக்கு வர முடிந்தது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சிபுரிய இயன்றது. இது ஓர் உலக சாதனையாகும்.
     1957 தேர்தலையடுத்து, முதன்முதலில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த நிலையில் மற்ற எவரைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகளே பெருத்த வியப்புக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1957க்கு முன்புவரை, இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை தேர்தல் என்பது ஓர் ‘ஏமாற்று வேலை’ என்ற ஆய்வு முடிவில் இருந்தவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் என்பதுதான் இதற்குக் காரணம். தேர்தல் ‘ஏமாற்றுவேலை’ என்றால், கம்யூனிஸ்டுகள் எப்படி நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? கம்யூனிஸ்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்குகொண்டது எங்ஙனம்?
     இந்தப் பின்புலத்தில், கம்யூனிஸ்டுகள் தமது ஆய்வு முடிவினை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. இந்திய அரசியல் சட்டத்தின் மகத்தான முக்கியத்துவத்தை அவர்கள் உணரவேண்டியதாயிற்று. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஏற்க வேண்டியதாயிற்று. இதன் விளைவாக ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளும் நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் இடம்பெறலாயினர்.
ஜெர்மனி-இத்தாலி எச்சரிக்கை
     இது இந்திய ஜனநாயக அமைப்பின் மகத்தான சக்தியாகும். ஜனநாயக சக்திகள், புரட்சிகர சக்திகள், சோஷலிச சக்திகள், பூர்ஷ்வா வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவினர், புரட்சிகரத் தொழிலாளர் வர்க்கத்தினர், புரட்சிகர விவசாயிகள் வர்க்கத்தினர், அறிவுஜீவிகள், இன்ன பிறர் என அனைவரையும் இணைக்கக்கூடிய சக்தியாகும்.
     அதே நேரத்தில், மற்றொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதே ஜனநாயக அமைப்பின் உள்ளேயே மற்ற சக்திகளும் தலைதூக்கியுள்ளன.
     புகழ்மிகு மார்க்சிய சிந்தனையாளரான ரஜனி பாமி தத், “நீங்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தயங்குவீர்களேயானால் உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையே பாசிசம்” என்பார்.
     இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு, இத்தாலியில் 1920-ல் நடந்த நிகழ்வுகளாகும். அந்த நாட்டிலிருந்த ஆலைகள் அனைத்தையும் தொழிலாளர் வர்க்கம் கிட்டத்தட்ட கைப்பற்றி விட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து என்ன செய்வது எனத் தெரியாத நிலையில், இத்தாலியின் ஜனநாயக அமைப்பின் தன்மை அதற்குப் புரியாத காரணத்தால், உலகின் முதல் பாசிசக் கட்சியை நிறுவிய முசோலினி ஆட்சியைக் கைப்பற்றும் அவலம் அங்கு நேர்ந்தது. ஆட்சிக்கு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயக நிறுவனங்களை அழிக்கத் தொடங்கியது முசோலினி ஆட்சி.
     காலமும் நிலைமையும் மாறுபட்டிருந்தாலும், ஜெர்மனி நாட்டின் நிகழ்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் சில படிப்பினைகளைத் தந்துகொண்டுதானிருக்கின்றன.
     அந்த நாட்டில், 1932-ல் நடந்த தேர்தல்தான் இட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நடந்த கடைசி தேர்தல். அந்தத் தேர்தலில்கூட சமூக ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் பெற்றிருந்த வாக்குகளைச் சேர்த்துப் பார்க்கும்போது, அவை இட்லரின் நாஜிக் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் அதிகம். ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வேறுபட்டு நின்றதன் விளைவாக இட்லர் அந்த நாட்டின் ஆட்சிபீடத்தில் அமரும் கொடுமை அங்கே அரங்கேறியது.
     ஏகபோக முதலாளித்துவத்தின் அதிதீவிர வலதுசாரிப் பிரிவினர், குட்டிபூர்ஷ்வாக்களையும் வேலையில்லா இளைஞர்களையும் பயன்படுத்தி, போலித்தனமான தேசியவாதத்தை மூர்க்கத்தனமான வடிவங்களில் உசுப்பிவிட்டுப் பேரழிவை ஏற்படுத்துவதுதான் பாசிசம்.
     பாசிசத்தின் தன்மையைச் சரியாகப் புரிந்துகொண்டால் அதனை முறியடித்துவிடலாம் என்பார் ஜியார்ஜி திமித்ரோவ். அதற்கு அடிப்படைத் தேவை, பாசிச-எதிர்ப்பு சக்திகளை ஓர் ஐக்கிய முன்னணியின்கீழ் திரட்டுவதே என்பார் அவர்.
மூவர்ண தேசியக்கொடி துச்சமல்ல
     சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பாசிசப் போக்குகள் நம் நாட்டில் தலைகாட்டி வந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. டெல்லி செங்கோட்டையில், மூவர்ண தேசியக் கொடி பறப்பதை சகித்துக்கொள்ள முடியாத அதிதீவிர வலதுசாரி வகுப்புவாத சக்திகள், 1948-ல் நாட்டின் பல பகுதிகளிலும் தேசியக் கொடியை எரித்தன. ஆனால், தேசிய மூவர்ணக் கொடியின் முக்கியத்துவத்தைப் புரட்சிகர இயக்கத்திலுள்ள சிலர் புரிந்துகொள்ளவில்லை. அது, 1908-ல் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் மாநாட்டில் காமா அம்மையார் ஏற்றிவைத்த கொடியாகும். தேசியக் கொடி, துச்சமாக எண்ணத்தக்கதல்ல. தொழிலாளர் வர்க்கமும், புரட்சிகர சக்திகளும் அதனைப் போற்ற வேண்டும்.
     அதே மாநாட்டில் உரையாற்றிய லெனின், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு இயன்ற வகையில் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கமும், சர்வதேசத் தொழிலாளர் வர்க்கமும் ஆதரவு நல்கும் என உறுதியளித்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
     கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டின்போது, மகாத்மா காந்தியை இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் என வர்ணித்தார் லெனின். புரட்சியாளர் என்றால், இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ சோஷலிசப் புரட்சியை நிகழ்த்திவிட வேண்டும் என்று பொருளல்ல. புரட்சியாளரின் முழுமுதல் கடமை ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் பங்கு கொள்வதாகும்.
     இந்தியாவில் ஜனநாயகம் இல்லாவிடில் புரட்சியும் நிகழாது; சோஷலிசமும் கைகூடாது. இதனை இடதுசாரி சக்திகளைக் காட்டிலும் வலதுசாரி சக்திகள் நன்கு அறிந்துள்ளன.
     இந்தியாவில், 2004-ல் மத்தியில் நிகழ்ந்தது சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சிபீடம் ஏறியுள்ள கட்சி, அரசின் அனைத்து அமைப்புகளிலும்—இராணுவம், போலீஸ், அரசு நிர்வாகம், உளவுத்துறை, கல்வி, சுகாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம்—ஆகிய அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவுவதை இலக்காகக் கொண்டிருக்கும் கட்சியாகும். உயர்கல்வி நிறுவனங்களும், விஞ்ஞான-தொழில்நுட்ப நிறுவனங்களும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. மக்களை மதரீதியாகப் பிரித்து நமது நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை நிர்மூலமாக்க சிவில் சமூகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் கைதேர்ந்தவர்கள் அதிதீவிர வலதுசாரி சக்திகள்.
     மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடங்கி இன்றுவரை, அதிதீவிர வலதுசாரி சக்திகள் திட்டவட்டமான உத்தியையும் வியூகத்தையும் வகுத்துச் செயல்படுத்திவருகின்றன.
மனவுணர்வுகளை வென்றெடுப்பீர்
     கலாச்சாரம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் மனவுணர்வுகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் அதனையும் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை சறுக்கி விழச்செய்து, தவறுகள் இழைக்கச் செய்து, தவறான அறிக்கைகளை விடுக்கச் செய்து ஆதாயம் தேடுகின்றன அந்த சக்திகள். இது சாதாரணமான பொருளாதாரத் தாக்குதலோ அரசியல் தாக்குதலோ மட்டுமல்ல; இந்திய வெகுஜனங்களது மனவுணர்வுகளின்மீது தொடுக்கப்பட்ட மாபெரும் சித்தாந்தத் தாக்குதலாகும்.
     இந்தியக் கலாச்சாரம் என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததல்ல; ஒற்றைக் கலாச்சாரம்; ஒரே சமூகத்தின் ஒற்றைத் தன்மை கொண்ட மனவுணர்வுதான் வேண்டும் எனவும் அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். இது மத்தியதர வர்க்கத்தினருக்கு, அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்புடைத்தாக உள்ளது. இவ்வாறு, அந்த சக்திகள் மக்களின் மனங்களில், குறிப்பாக இளைஞர்களின் நெஞ்சங்களில் பாசிச நஞ்சைக் கலக்கின்றன.
     இதனால்தான், இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளரான அண்ட்டோனியோ கிராம்சி, மக்களின் மனவுணர்வுகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
ஒன்றுபட்டுப் போர்புரிவோம்
     சுதந்திரத்துக்குப்பின் இந்தியா மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. அண்மைக் காலத்தில் அவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
     இந்த அபாயத்தை ஜனநாயக சக்திகளும், இடதுசாரி சக்திகளும் குறைத்து மதிப்பிட்டுவிட்டன.
     அதிதீவிர வலதுசாரி வகுப்புவாத சக்திகளை முறியடித்திட, வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்குவது அவசர அவசியம். இந்த சக்திகள் அனைத்தும் தமது நீண்டகால மற்றும் குறுகிய காலத் திட்டங்கள் எதுவாக இருப்பினும் ஓரணியில் திரள வேண்டும். நமது ஜனநாயகத்தை பெரும் அபாயம் சுற்றிச் சூழ்ந்துள்ளது. என்ன விலை கொடுத்தாவது அதனைக் காக்க வேண்டும்.
     இந்தப் போரில், தகவல் தொழில்நுட்பம் எனும் ஆயுதத்தை ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகள் ஏந்த வேண்டும்.
     நாம் மிகவும் விசேஷமானதொரு காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். அனைத்து புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டால்தான் நமது நாட்டின் ஜனநாயகத்தையும், விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியத்தையும் காத்து முன்னேற முடியும்.
     நாட்டில் இப்போது சாதகமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாடெங்கிலும் மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டகளத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவேண்டியது பரந்த சமூக அரசியல் மற்றும் சித்தாந்த அடிப்படையிலான ஆரோக்கியமிகு சக்திகளைக் கொண்ட ஐக்கிய முன்னணியின் கடமை ஆகும்.
(உரை தொகுப்பு: எஸ்.துரைராஜ்)

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP