Saturday, January 2, 2010

மாக்சிம் கார்க்கி குறித்து மகாத்மா

                    
 

                  மாக்சிம் கார்க்கி குறித்து மகாத்மா


 சோவியத் இலக்கியத்தின் பிதாமகன் மாக்சிம் கார்க்கி. ரஷ்யப்புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன் எழுத்துலகில் பிரவேசித்த அவர், எத்தனையோ தலைமுறை எழுத்தாளர்களின் ஆதர்சமாகத் திகழ்கிறார். அந்த மாபெரும் எழுத்தாளரைப்பற்றி காந்தியடிகள் குஜராத்தி மொழியில் எழுதிய இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம், 'இந்தியன் ஒப்பீனியன்' ஏட்டில் 1-7-1905-இல் வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இதோ இங்கே...


ரஷ்ய மக்களின் நிலைமையையும் நமது மக்களின் நிலைமையையும் ஓரளவு ஒப்பிட்டு நோக்க முடியும். நாம் எப்படி ஏழைகளாக இருக்கிறோமோ அதுபோல் ரஷ்ய மக்களும் ஏழைகளாகவே உள்ளனர்.
அரசு நிர்வாகத்தை நடத்துவதில் நமக்கு எவ்விதப்பங்கும் இல்லை; எந்தவித முணுமுணுப்புமின்றி வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். ரஷ்ய மக்களின் நிலைமையும் அப்படித்தான்!


இத்தகையக் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது சில ரஷ்யர்கள் வீறுகொண்டு எழுவதுண்டு.


சிறிது காலத்திற்கு முன்னால் ரஷ்யாவில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்களில் மாக்சிம் கார்க்கியும் ஒருவர்.
மிகுந்த ஏழ்மையான சூழலில் தோன்றிய அவர், முதலில் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர், கார்க்கியைப் பணிநீக்கம் செய்தார்.


இதனைத்தொடர்ந்து, சிலகாலம் ராணுவ வீரராகப் பணியாற்றினார். ராணுவத்தில் இருந்தபோது கல்வி கற்க விழைந்தார். ஏழ்மையின் காரணமாக நல்லதொரு பள்ளியில் அவரால் சேர இயலாமல் போயிற்று. பின்னர், வழக்கறிஞர் ஒருவரிடம் அவர் வேலைக்குச் சேர்ந்தார். இறுதியில், ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனையாளராகச் செயல்பட்டார்.


இத்தனை அனுபவங்களினூடே தனது சொந்த முயற்சியால் தொடர்ந்து கல்வி பயின்றார்.


அவரது முதல் நூல் 1892-இல் வெளிவந்தது. அற்புதமான அந்தப் படைப்பு, அவருக்குப் புகழை ஈட்டித்தந்தது. தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் எழுதினார்.


தம்மைப் பாடாய்ப் படுத்தும் கொடுங்கோன்மைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச்செய்தல், அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தல், இயன்றவரைப் பொதுத்தொண்டு ஆற்றுதல் போன்றவையே அவரது எழுத்துக்களின் அடிநாதமாய்த் திகழ்ந்தன.


பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கம் இன்றி, வீரத்தையும், கசப்பையும் உமிழ்ந்த அவரது எழுத்துக்கள், அதிகார வர்க்கத்தின் கொடிய பார்வையை அவர்மீது திருப்பச் செய்தன.


மக்கள் சேவையில் பங்கேற்ற அவர், சிறைவாசத்தையும் சந்திக்க நேர்ந்தது. காராக்ருகம் என்பது தனக்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்றே கருதினார் அவர்.


மாக்சிம் கார்க்கியைப் போன்று மக்கள் உரிமைக்காகச் சமர் புரிந்த ஐரோப்பியப் படைப்பாளிகள் எவருமிலர் என்றே கூறப்படுகிறது! [MAHATMA GANDHI ON MAXIM GORKY/தமிழில்: விதுரன்]

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP