Thursday, January 21, 2010

இலங்கை நிலவரம்

மோதல்கள் முடிந்தன!


முன்னோக்கி நடைபோடுவோம்!!




இலங்கை கம்யூனிஸ்ட் தலைவரின் அறைகூவல்!!




(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. இ. டபிள்யூ. குணசேகரா, அந்த நாட்டின் அரசியல் சட்ட இலாகாவின் அமைச்சராகவும் உள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பணியாற்றும் அவர், இந்த ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் நகரில் ஒரு கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவரது சிந்தனையைத் தூண்டும் உரையின் தமிழாக்கம் இங்கே. படித்துப் பயன் பெறுவோமாக! தமிழில்: விதுரன் )





பெருமதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே,



ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குமுன், 1982-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஹெக்டர் கொப்பெகடுவாவுக்கு ஆதரவு திரட்டும்பொருட்டு வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்ததற்குப் பின்னால் இப்போது தோழர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மன அமைதியோடும், உணர்ச்சிபூர்வமாகவும் மகிழ்ச்சிப்பெருக்குடனும் உரையாற்றுகிறேன்.



அன்று கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஹெக்டர் கொப்பெகடுவாவை ஆதரித்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜே.ஆர். ஜெயவர்தெனாவும் இதர வேட்பாளர்களான குமார் பொன்னம்பலம், டாக்டர் கொல்வின் ஆர். தெ சில்வா, வாசுதேவ நாணயக்காரா மற்றும் ரோஹனா விஜெவீரா களத்தில் நின்றனர்.



இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது--எப்படி வடக்குப்பகுதி (யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச்சேர்ந்த) மக்கள் எமது அறைகூவலை ஏற்று மிக உயர் விருப்ப வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவாவுக்கு 1,00,521 வாக்குககளை அளித்தார்கள் என்பது. இந்தத் தேர்தலில் குமார் பொன்னம்பலம் 98,784 வாக்குகளும், ஜே.ஆர்.ஜெயவர்தெனா 77, 614 வாக்குகளும் பெற்றார்கள். வடக்குப்பகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 67 சதவீதம் வாக்குகள் சிங்கள வேட்பாளர்களுக்கு ஆதரவானவை. அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் தேச ஒற்றுமை மேலோங்கி இருந்த காலம் அது. மக்கள் மத்தியில் தேச ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் உச்சநிலையில் மேவிநின்றன. 1983-ஆம் வருடத்தில் நிகழ்ந்த கறுப்பு ஜூலை இந்த ஒற்றுமையை நிர்மூலமாக்கிவிட்டது. கட்ந்த 26 ஆண்டுகளில் ஸ்ரீலங்காவில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டது.



துக்ககரமான நினைவுகளுடன், ஆனால் முழு நம்பிக்கையுடன் இன்று மீண்டும் வடக்குப் பகுதியில் நாம் அரசியல் பிரவேசம் செய்திருக்கிறோம். அந்த மனவருத்தமளிக்கின்ற, துன்பகரமான கடந்த காலத்தை மனப்புண்கள் ஆறுகின்ற, மனச்சாந்தி நிகழ்கின்ற இத்தருணத்தில் நினைவுக்குக் கொண்டுவர நான் விரும்பவில்லை.



தோழர்களே, நண்பர்களே, வடக்குப்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிர்மாணித்த, மிகச்சிறந்த தலைவர்களைத் தொடக்கத்திலேயே மதிப்பு, மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன். தோழர்கள் டி.துரைசிங்கம், எ.வைத்தியலிங்கம், பி.கந்தையா, எஸ்.ஜெயசிங்கம், என்.சண்முகதாசன், எ.அரியநாயகம், வி.பொன்னம்பலம், எம்.கார்த்திகேசு, எஸ்.பி.நடராஜா, எம்.சி.சுப்ரமணியம் உள்ளிட்ட தலைவர்கள், வடக்குப்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிக்காத்து வளர்த்தவர்கள். முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான கே.சி.நித்யானந்தன், சி.குமாரசாமி, எஸ்.செல்லையா, எஸ்.கதிர்வேல், கே.நவரத்னம், எஸ்.விஜயானந்தன் ஆகியோர் இடதுசாரி இயக்கத்துடன் இணந்து பணியாற்றியவர்கள்.



வடக்குப்பகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இடதுசாரி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்--வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பேர் --பி.கந்தையா, எம்.சி.சுப்ரமணியம் மற்றும் கே.நவரத்னம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.



இருப்பினும், இங்கே இடதுசாரி இயக்கத்தின் தோற்றம் இன்னும் பழைமையானது; அது 1920களில் வேர் பிடித்தது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க கண்டங்களில் தேசிய விடுதலை இயக்கத்திற்கான போராட்ட சகாப்தம் தொடங்குவதற்குக் காரணியாக அமைந்த 1917-ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நிகழ்வை மக்கள் அறியச்செய்த முதல் இலங்கைப் பிரஜை பொன்னம்பலம் அருணாசலம்தான் என்பதை மிகச்சிலரே அறிவர்.



இந்தப் பின்னணியில்தான், 1924-இல் ஒரு தீவிர செயல்திட்டத்துடன் ஜனித்தன ஹண்டி பேரின்பநாயகம் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட யாழ் மாணவர் காங்கிரசும், அதனைத் தொடர்ந்து யாழ் இளைஞர் காங்கிரசும். 1931-இல் உருவான அனைத்து இலங்கை இளைஞர் காங்கிரசும், 1933-இல் தோற்றுவிக்கப்பட்ட சூரியமால் இயக்கமும் பரிபூரண சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வளர்ச்சிப்போக்குகளாக அமைந்தன. எமது கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்கே இந்த இரு இயக்கங்களின் தலைவராகவும் விளங்கினார்.



1935-இல் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியும் பின்பு 1943-இல் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த இயக்கத்திலிருந்து இன்னும் உறுதியான சித்தாந்த வடிவுடன் கிளைத்தவையே.



இருபத்தாறு ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்ததற்குப்பின்னால் இப்போது நாம் யாழ்ப்பாணத்தில் கூடியிருக்கிறோம். பயங்கரவாதம் 30 ஆண்டுகள் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றுக்காக யாரும் மகிழ்ச்சி அடைய முடியாது. இன்னுயிர்களின் இழப்பு, உடைமைகள் நாசம், பொருளாதாரம் பாழ், மக்கள்- குறிப்பாக சமுதாயத்தின் அடித்தளத்து மக்களின் நீடித்த துயரம், பண்பாட்டுச் சீரழிவு, வன்முறைக்கலாசாரத்தின் தோற்றம், நல்லாட்சியின் வீழ்ச்சி, தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு சர்வநாசம், நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் இனவெறியின் தலைதூக்கல், சட்டவிரோதக் கும்பல்களின் தோற்றம்--இவை அனைத்தும் இதனைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகளாகும்.



எந்த ஒரு சமூகத்தின் மறைந்த தலைவரையோ அல்லது நமது நாடாம் ஸ்ரீலன்ங்காவை வழிநடத்திய ஆட்சியாளர்களையோ நான் இழித்துப் பேச விரும்பவில்லை. இது மனப்புண்களை ஆற்றுகின்ற மனச்சாந்தி ஏற்படுத்துகின்ற தருணம். பழைய, துரதிருஷ்டவசமான சம்பவங்களை மீண்டும் கிளரிவிட நான் விரும்பவில்லை. ஆனால், (நாம் மன்னித்தால் கூட) வரலாற்று உண்மைகளை நாம் மறந்துவிட முடியாது; அதுமட்டுமன்றி, இந்தப் பேரழிவிலிருந்து மீண்டு, நாம் முன்னோக்கி நடைபோடவேண்டுமெனில் இவற்றிலிருந்து தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.



வரலாற்று மாணவன் என்கிற வகையில் திரும்பிப் பார்க்கின்ற போது ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டு அதை வெளியில் சொல்லியாகத்தான் வேண்டும்-அதாவது, நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து, தேசக்கட்டுமானப் பணியில் தலைமையேற்க நமது தேசியத் தலைவர்கள் தவறி விட்டார்கள் என்பதுதான் அது. வரலாறு நமக்குப் பல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது: ஆனால் அவை அனைத்தையும் நாம் தவற விட்டுவிட்டோம்.



தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படாததுதான் இன்றுவரை நம் தோல்விக்குப் பிரதான காரணமாக உள்ளது.



இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இ.ந்த தேசியப் பிரச்சனையை அதன் கருவிலிருந்தே இனம் கண்டுகொண்டோம். உண்மையில் சொல்லப்போனால், (இன்றைய சூழலில் அதிகாரப் பரவல் என்று சொல்லப்படுகிற) பிரதேச சுயாட்சி என்னும் கருத்தை நாட்டின் நவ அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே நமது கட்சிதான். இது, சமூக-பொருளாதார-கலாசார உண்மைகளை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், சர்வதேச அனுபவத்தின் அடிப்படையிலும், உருவானது.



நாட்டு விடுதலைக்குப் பின்னர் தொடங்கி, ஆட்சியிலிருந்த பூர்ஷ்வா அரசியல் கட்சிகள் இந்த எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டன; மேலும், குறுகிய அரசியல் ஆதாயங்களால் அவை ஈர்க்கப்படலாயின. தேசக் கட்டுமானத்தில் தமக்குள்ள சரித்திரபூர்வமான பொறுப்பினைக் கைவிடலாயின.



நாட்டின் வடக்குப் பகுதியில் (தமிழ் காங்கிரஸ் மற்றும் ஃபெடரல் கட்சி இரண்டையும் சேரந்த) பூர்ஷ்வா வர்க்கத் தமிழர் தலைவர்களுக்கும் இது பொருந்தும். அரசியலில் பத்தாம்பசலியான அல்லது பிற்போக்கான பாத்திரம் வகித்த இவர்கள், தமது குறுகிய வர்கக நலன்களுக்கேற்ப த்மது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டனர்.



இயல்பாகவே, அவர்கள், பிற்போக்கு பத்தாம்பசலி அரசியல் நிலைபாடுகளுடன் இணைத்துக் காணப்பட்டனர்; முற்போக்கான அனைத்தையும் எதிர்த்து நின்ற அவர்கள், தெற்குப்பகுதி மக்களிடமிருந்து தம்மை விலக்கியே வைத்துக் கொண்டனர்.



தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணத்தவறியதன் விளைவாகத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு, 1980களில் அது பூர்ஷ்வா வர்க்கத் தலைமையிலிருந்து குட்டி பூர்ஷ்வா வர்க்க்கத்தின் கைகளுக்குச் சென்றது.



துரதிருஷ்டவசமாகக் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் வலதுசாரிகள், தலைமையைக் கைப்பற்றி, பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் தாம்தான் என்று தம்பட்டம் அடிக்கலாயினர். வன்முறை, பயங்கரவாதம், அதிதீவிர தேசிய இனவாத அடிப்படையிலான பிரிவினைவாதம், இன்னும் சொல்லப்போனால் இனவெறி எனும் பாதையில் அவர்களின் பயணம் தொடங்கியது.



தேச ஒற்றுமை, ஜனநாயகப் பாதையிலான வளர்ச்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணுதல் என்னும் கருத்துக்களை முன்வைத்து செயல்பட்ட இடதுசாரி கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன, இல்லாமல் ஆக்கப்பட்டன அல்லது நிர்மூலமாக்கப்பட்டன. மிதவாத பூர்ஷ்வா தலைவர்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. மக்கள் மட்டத்திலும், முற்போக்கு சக்திகள் மட்டத்திலும், நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் உறவுப் பாலங்கள் அனைத்தும் தகர்ந்துபோயின. தோன்றிய காலம் தொட்டு தேசிய சிறுபான்மையினரின் நலனுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், 13-ஆம் அரசியல் சட்டத் திருத்ததிற்காகவும் தம் இன்னுயிரை ஈந்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சிகளைக் கொண்ட இடதுசாரி இயக்கத்தினரான நாங்களும் விட்டுவைக்கப் படவில்லை. பல்வேறு பொறுப்புகளில் பல துறைகளில் செயலாற்றிக் கொண்டிருந்த 54 தலைவர்கள் ஜனதா விமுக்தி பெரமுனையாலும், எல்.டி.டி.யாலும் படுகொலை செய்யப்பட்டனர்.



அகுரெஸ்ஸாவில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் விடுதலைப் புலிகளால் கொலையுண்ட கடைசி ஐந்து பேர் எமது கட்சியின் இளம் மாவட்டத் தலைவர்கள்; அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.



இதில் ஆச்சரியத்துக்குரியதும், புரியாத புதிராக இருப்பதுவும் என்னவென்றால், தமிழர்களுக்கு எதிராக, இந்தியாவுக்கு எதிராக, விடுதலைப்புலிகளுக்கும் எதிராக விஷத்தைக் கக்குகிற அரசியல் நிலைபாட்டினை மேற்கொள்ளும் ஜே.வி.பி.ஐத் தொட்டதாக எல்.டி.டி.யின் வரலாற்றில் சான்றுகளே இல்லை என்பதுதான்.



கடந்த 30 ஆண்டுகளில், இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகளை வீழ்த்துவதன் மூலமே தெற்கில் சிங்கள இனவெறியும், வடக்கில் தமிழ் இன வெறியும் நீடித்து, நிலைத்து வளர்ச்சி பெற்றன. இதன் விளைவு: நாடு எங்கே போவது என்ற திசைவழி தெரியாமல் நின்றது; இடித்துரைக்க ஆளில்லாமல் போயிற்று; சரியான நிலை எடுக்க வழியற்றுப் போனது; நல்லிணக்கமின்றித் தவித்தது; ஒற்றுமை உணர்வும் இல்லாமல் போனது.



ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பயங்கரவாதத்தையோ அல்லது வன்முறையையோ எமது கட்சி ஒருபோதும் தழுவியதில்லை. எமது நோக்கங்களை நிறைவேற்ற தடித்தன அடாவடி, அச்சுறுத்திப் பணியவைத்தல், வன்முறை ஆகியவற்றில் நாங்கள் இறங்கியதே இல்லை. எங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்ததுமில்லை.



எமது கட்சி என்றுமே தேசபக்தி கொண்டது. அதற்கு இணையாக சர்வதேசியத்தில் நம்பிக்கை கொண்டது. தேசபக்தியும், சர்வதேசியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-ஏனெனில் நாங்கள் மனிதநேயத்திற்காக நிற்பவர்கள்.



இந்த நாட்டிற்கு சோஷலிசக் கருத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். இதேபோல் மற்றொரு உண்மை என்னவெனில், சோஷலிச நாடுகளை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்ததும் எமது கட்சிதான். நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல் அமைப்பான சாதிய முறையை எதிர்த்து தெற்கிலும் வடக்கிலும் போராட்டங்களைத் தொடங்கியதும் எமது கட்சிதான்.



மக்களின் மனங்களிலிருந்து கட்டுக்கதைகளையும், வினோதமான நம்பிக்கைகளையும், மூட எண்ணங்களையும் அகற்றி, அவர்களுக்கு மேலும் அறிவொளியூட்டினோம் நாங்கள்.



இப்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேச ஒற்றுமைக்காகப் போராடுவதற்கு, பாகுபாடுகளையும் அநீதியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, சமத்துவம், சமூக நீதி, சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப் படுத்துவதற்கு வரலாறு மேலும் ஒரு வாய்ப்பை-பொன்னான சந்தர்ப்பத்தை-நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.



போரின் முடிவில், ஒட்டுமொத்த தேசியப் பொருளாதார வளர்ச்சியில், வடக்கின் பங்கு 2.9. சதவீதம்தான். போர் நடைபெற்ற பகுதியை அடுத்திருந்த வட மத்திய மற்றும் உவா மாகாணங்களின் பங்கோ வெறும் 4 சதம்தான். போரின் தாக்கம் வடக்கு-கிழக்குடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதே நேரத்தில், தேசியப் பொருளாதார வளர்ச்சியில் மேற்கு மாகாணத்தின் பங்களிப்பு 51 சதவீதமாகும். இது யுத்தத்தின் விளைவு மட்டுமல்ல; ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகம் செய்த புதிய தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவுமாகும்.



கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் கொள்கை மாற்றங்களின் மூலம், கிராமப் பொருளாதார விரிவாக்கம், பிரதேச வளர்ச்சி, உள்கட்டுமான வளர்ச்சி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி என இந்த நிலையில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.



இதன் காரணமாகவே வடக்கிலும் கிழக்கிலும் உள்கட்டுமான வளர்ச்சிக்கு நாங்கள் மிக உயரிய முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கிறோம். இங்கு அரசு சேவை நிர்வாகம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அடிப்படையான நிர்வாக அமைப்புகளில் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.



தமிழை அதிகாரபூர்வ மொழியாகச் செயல்படுத்துவதில் எமது அரசு துணிச்சலான, தீர்மானகரமான நடவடிக்கைகளைக் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் எடுத்துள்ளது என்பதை அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக இருப்பவன் என்கிற வகையில் தெரிவிக்க விரும்புகிறேன். இப்பொழுது அது இன்னும் வேகத்துடன் செயல்படுத்தப் பட்டுவருகிறது.



நீடித்த அரசியல் தீர்வுக்கான நமது தேடல்களுக்கு வசதியாக நல்ல சூழலை இத்தகைய நடவடிக்கைகள் உருவாக்கிக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிடையே பெரிய இடைவெளி உள்ளது என்பது உண்மைதான். மக்கள் மட்டத்தில் இந்த இடைவெளியைப் போக்கவேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவை நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பு சம்பந்தமான கவலைகள் இருந்தபோதிலும், போர் தீவிரமடைந்த காலத்திலும்கூட தமிழ் பேசும் ம்க்களில் 61 சதவீதம்பேர் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்ந்துவந்தனர் என்பதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது.



அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். இந்த 13-வது அரசியல் சட்டத் திருத்தம், (1) தமிழை ஆட்சிமொழியாக்குவது, (2) அதிகாரப் பரவலாக்கம் செய்தல் என்கிற இரண்டு அம்சங்களைக் கொண்டது.



இந்த 13-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கும் மேலாகச் செல்ல வேண்டும் என்பதுதான் எமது கட்சியின் நிலை. இதை நாங்கள் பற்றி நிற்போம்; இதில் உறுதியாக இருக்கிறோம்.



அரசு சேவையில் புதிதாக சேர்பவர்களுக்குத் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றாக்குவதில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார். இந்த விஷயத்தில், அவருக்கு முன்னால் பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் இதனை செயல்படுத்தத் தவறிவிட்டனர் அல்லது செயல்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று.



தமிழை ஆட்சிமொழியாக்கும் விஷயத்தில் மூன்றாண்டுக் காலத்தில் எந்த ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் இந்த அளவுக்குச் செய்ததில்லை.தற்போது அமல்படுத்தப் பட்டுவரும் குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுக்கும்பட்சத்தில் மொழிப் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும். 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை விரைந்தும், முழுவதுமாகச் செயல் படுத்துவதற்குத் தற்போது நல்ல சூழல் நிலவுகிறது.



எல்லா சமூகத்தவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் நாம் தேசிய இனப்பிரச்சனைக்கு நீடித்த தீர்வைக் காண்பதற்கு நல்ல சூழல் நிலவுவதாக நான் நம்புகிறேன்.



யாரை நம்புவது-மகிந்தா ராஜபக்சாவையா அல்லது தளபதி சரத் பொன்செகாவையா?



மகிந்தா ராஜபக்சா ஏற்கனவே நாம் கண்ட, சோதித்துப் பார்க்கப்பட்ட தலைவர். 40 நாட்கள் மட்டுமே அரசியல் அனுபவம் கொண்ட ஒரு ராணுத் தலைவரை நீங்கள் நம்ப முடியுமா?



அரசியலை ராணுவ மயமாக்குதல் மட்டுமல்லாமல், ராணுவத்தில் அரசியலைக் கலத்தல் என்னும் புதிய பரிமாணம் தளபதி பொன்செகாவின் அரசியல் பிரவேசத்தால் நமது அரசியலுக்கு வந்துள்ளது.



தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி, முற்போக்கு, தீவிரக்கொள்கைப்பற்றுள்ள சக்திகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம்தான் நாம் விரும்புகின்ற தேசஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. பயங்கரவாதமும், யுத்தமும் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களை பலவீனப்படுத்திவிட்டன.



சர்வதேச அரங்கில் நிகழ்ந்துவரும் பெரிய மாற்றங்களைப் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்.



இருபது வருடங்களுக்கு முன்னால், அதாவது, 1989-இல் பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னர் (அதாவது, சோஷலிச கிழக்கு ஜெர்மனி வீழ்ந்ததற்குப்பின்), இதையடுத்து சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப் பின்பு, சோஷலிசம் முடிவுக்கு வரப்போகிறது என்று பூர்ஷ்வா தலைவர்கள் ஆருடம் கூறினார்கள்.



சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார சக்திகளாகத் தலையெடுத்ததையடுத்து நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலக அரங்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மேற்கத்திய சக்திகள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தியதற்குப் பின்னர் இப்போது உலகப் பொருளாதாரத்தின் மையம் ஆசியா கண்டத்திற்கு மாறியுள்ளது.



உலகப் பொருளாதார நெருக்கடி மோசமானதன் விளைவாக உலக முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் நொறுங்கி விழுந்துள்ளன.



லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சி 13 இடதுசாரி மற்றும் இடது ஆதரவுக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. அமெரிக்க கண்டத்தில் சக்திகளின் பலாபல நிலைமைகளை இது மாற்றியுள்ளது.



லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆசியாவில் சீனா, இந்தியாவுடன் யுரேஷியாவில் ரஷ்யா எனப் புதிய பொருளாதார மையங்கள் உலகப் பொருளாதார சக்திகளின் பலாபல நிலையை முழுவதுமாக மாற்றியுள்ளது.



டாலரின் சக்தி குறைந்துள்ளது. உலகின் அந்நிய செலாவணி இருப்பில் 75 சதவீதம் இன்று வளர்முக நாடுகளைச் சேர்ந்தது. உலகில் அந்நிய செலாவணி இருப்பில் மூன்றில் ஒரு பங்கு சீனாவுக்குச் சொந்தம்.



உலகின் வளர்ச்சிகளில் இவை புதிய எதார்த்தங்கள். இலங்கை சம்பந்தமாக அண்மையில் நடைபெற்ற அமர்வுகளில் தங்கள் இஷ்டப்படி மேற்கத்திய நாடுகள் நடந்து கொள்ள முடியாமல் போனதற்கு இதுதான் காரணம்.



உலக இடதுசாரி இயக்கமும் புனருத்தாரணம் பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே ஒருமைப்பாடு என்பது இன்று உலகமயமாகியுள்ளது.



சிங்கள இனவெறி, இந்தியாவின் மண்ணாதிக்கம் என்கிற பொய்ப்பிரச்சாரம் ஆகிய அலைகளால் உந்தித் தள்ளப்பட்டு உச்சாணிக்கொம்பில் இருந்தது ஜே.வி.பி. இயக்கம்.



அந்தப் போக்கு தற்போது இறங்கு முகத்தில் உள்ளது. ஜே.வி.பி.யில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளால் அது பல பிளவுகளைச் ச்ந்தித்துள்ளது. ஒரு ராணுவத் தலைவரின் தலைமையின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இப்போது அணிசேர்ந்துள்ளது அந்த இயக்கம்.



மகிந்தா ராஜபக்சாவுக்கு ஆதரவாக நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி சக்திகள் இணைந்து குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. உலக சக்திகளின் பலாபல நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், இலங்கையின் அரசியல் மற்றும் சமூக சக்திகளின் பலாபல நிலை, கடந்த நான்காண்டு காலத்தில் மஹிந்தா ராஜபக்சா அரசின் செயல்பாடுகள், தளபதி பொன்செகாவின் பிரவேசத்தால் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், இலங்கையின் விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தலையிடுதல், தெற்கு-வடக்குப்பகுதிகளைத் தழுவிய ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கத்துக்கான வளர்ந்துவரும் தேவை--எனப் புறவய எதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இதற்கு மாற்று எதுவும் இல்லை.



நாட்டிற்கு அதி அவசியத் தேவையான தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கு வடக்கில் உள்ள மக்கள், தெற்கில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு இந்த சந்தர்ப்பத்தில் அறைகூவி அழைக்கின்றேன்.



நமது நாட்டின் இடதுசாரி இயக்கத்தை மீண்டும் கட்டி, மீண்டும் ஒன்றிணைக்க முன்வருமாறு வடக்கில் உள்ள நமது தோழர்களையும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து சக்திகளையும் தோழமையுடன் அழைக்கிறேன். இது ஒரு தீர்மானகரமான அம்சமாகும்.



உறுதியான நிலையில் நின்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மறுசிந்தனையில் இறங்கியுள்ளனர். ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாய்ப்பைக் கைக்கொண்டு செயல்படுவோமாக!



நன்றி!



0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP