Sunday, January 31, 2010

மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பதில் மகத்தான பங்கு வகித்தவர் ஜோதிபாசு



[சரித்திரத்தை உருவாக்குகிறவர்கள் மக்கள்தான். ஆனால், சரித்திரத்தில் தனிநபர் வகிக்கும் பாத்திரம், குறிப்பாக அரசியல் துணிவும், சித்தாந்த வலிமையும், தேசபக்தியும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களின் பங்களிப்பு அலட்சியப்படுத்த முடியாதது. அந்த வகையில், இந்தியாவில் மதச்சார்பின்மையைக் கட்டிக்காப்பதில், மிக இக்கட்டான காலகட்டத்தில் பெரும்பணியாற்றி அண்மையில் மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜோதிபாசு பற்றிய தன் கருத்தை இங்கே வெளிப்படுத்துகிறார் பத்திரிகையாளர் கரிமலா சுப்ரமணியம் அவர்கள்.]
=====================================================
இந்தியாவின் மிகவுயர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜோதிபாசு ஆற்றிய அரும்பணிகளுக்காக அவரது தாய் ஸ்தாபனமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ம், மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் களும் புகழாரம் சூடியுள்ளனர்.

ஆனால், நாட்டில் மதச்சார்பின்மையைக் கட்டிக் காப்பதில் அவர் எடுத்த சமரசமற்ற நிலையும், அந்த நோக்கத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட எதார்த்தமான அரசியல் உடன்பாடுகளும், எல்லாவற்றுக்கும் மேலாக முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசைத் தோற்றுவிப்பதில் அவரது பங்களிப்பும், பாசுவை சராசரி இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கச் செய்தன.

தேசப் பிரிவினையின்போது ரத்தக் களரியைச் சந்தித்த மேற்கு வங்க மாநிலத்தை, 1984-இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு நாட்டின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராகப் படுகொலைகள் நடத்தப் பட்ட நேரத்திலும், சமூக அமைதி மற்றும் சகவாழ்விற்கான பாலைவனச் சோலையாக மாற்றிய பெருமைக்குரிய அவரால், நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகளை வாய்மூடி மவுனியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா?

நாடு முழுவதும் நீரூபூத்த நெருப்பாக மதவெறி அரசியல் அணிசேர்க்கைகள் 1990களில் தோன்றி, அதன் உச்சகட்டமாக பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நேரத்திலும், 2001-இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் குண்டுகளால் தரைமட்டமாக்கப் பட்டதன் பின்னணியில் பாசிச மற்றும் நவீன பழமைவாத சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் விளைவாக அது மேலும் பற்றிப்பரவி, குஜராத்தில், நரேந்திர மோடி அரசின் சார்பில் நிகழ்த்தப்பட்ட வகுப்புவாதக் கொடூரப் படுகொலைகளில் அது எதிரொலித்த போதும் ஜோதிபாசு அவ்வாறு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, பாரதீய ஜன சங்கத்தின் இன்றைய அவதாரமான பாரதீய ஜனதாக் கட்சி, 1996 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமில்லாத அளவுக்கு 160 இடங்களைப் பெற்றுத் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. சாதாரண பெரும்பான்மையுடன் அரசு அமைக்க மேலும் 100 இடங்களுக்குமேல் தேவைப்பட்ட போதிலும், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையில் முயன்று 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் நீடித்தது.

ஆனால், அதிதீவிர வலதுசாரிசக்திகளின் அரசியல் முன்னேற்றத்திற்கு பதிலடியாக, அந்த சிறிய கட்சிகள் ஐக்கிய முன்னணியின்கீழ் அணிசேர்ந்து, அப்போது ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முனைப்புடன், அந்தக் கூட்டணி அரசையும், தேசத்தையும் வழநடத்த வாருங்கள் என ஜோதிபாசுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த அரசில் நேரிடையாகப் பங்கேற்பதில்லை என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் நிலைபாட்டால், அந்த முயற்சி ஈடேறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.


தனது கட்சி, ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகிப்பதில்லை என்று எடுத்த முடிவு ஒரு "சரித்திரத் தவறு" எனத் தனக்கேஉரிய அச்சமற்ற பாணியில் 1997-இல் அறிவித்ததன் மூலம், அகில இந்திய அளவில் சலனத்தை ஏற்படுத்திவிட்டார் ஜோதிபாசு. தீர்க்க தரிசனமாக அவர் செய்த துயரப் பிரகடனம் மெய்யாகப் போகிறது என்பதை மிகச் சிலரே அனுமானித்திருக்க முடியும்: உதயமான இரண்டு ஆண்டுகளிலேயே அந்த நடுக்கம் கண்ட கூட்டணியாட்சி முடிவுக்கு வந்தது; 1998 தேர்தலுக்குப் பின், பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக அணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது; ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பல கட்சிகள், சித்தாந்த ரீதியில் இல்லாவிட்டாலும், அரசியல் ரீதியாக பாரதீய ஜனதாக் கட்சியின் திட்டத்திற்குத் துணைபோக உறுதியளித்தன.


பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தியவாறு, "சரித்திரத் தவறு" எனும் பாசுவின் பிரகடனம், காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் சமதூரத்தில் விலகி நிற்பது என்கிற நிலை சரியானதுதானா என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கக் காரணமாயிற்று. 1997-க்குப்பின், இது போன்ற மாற்றம் தேவை எனும் கருத்தை பாசுவே இரண்டுமுறை வெளிப்படுத்தினார். இதில் முதலாவது, 1998 நவம்பர் 13-ஆம் நாள், 'இந்தியாவும், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சவால்களும்' என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய 30-வது ஜவகர்லால் நேரு நினைவுப் பேருரை. பெரும்பான்மை மதத்தினரின் பெயரால் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை மற்றும் கொடூரத்தாக்குதல் குறித்து உரையின் தொடக்கத்தில் கவலை தெரிவிக்கும் அவர், இந்த விஷத்தை முறிப்பதற்கு, தற்போதுள்ள அரசியல் உறவுநிலையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார்.

அவர் தனது உரையில், "1980-களிலிருந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் சரியான எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளுக்கும் பெருங்கவலை அளிப்பதாக உள்ளன. 1992-இல் மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வெறுத்தொதுக்கத்தக்க காரியமான பாபர் மசூதி இடிப்பும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களும் இந்தியாவின் மாண்புக்கு மாசு ஏற்படுத்திவிட்டன. பா.ஜ.க.வினால் தலைமை தாங்கப்பட்ட அரசானது, மெய்யான மதசார்பின்மையைக் காப்பாற்றப்போவதாகப் பிரகடனம் செய்துள்ளபோதிலும், உண்மையில் அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட மதசார்பின்மைக் கருத்தை மாற்றுவதற்கான அறைகூவலாகும். மதசார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதித்தல் எனும் பொருள்கொண்டது; ஆனால், பா.ஜ.க.வின் செயல்பாடுகள், மதசார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுபவையாகும். இந்தியாவில் நீண்டகாலமாகப் போற்றிப் பாதுகாத்துவரும் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், சகிப்புத்தன்மை ஆகிய மரபுகளைக் குலைக்கும் விதத்தில் வகுப்புவாத, செக்டேரியன் அரசியல் போக்கு அச்சுறுத்திவருவது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இந்து மதத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது பா.ஜ.க. இந்து மதபோதகர்கள், பிற மதங்களின்பால் வெறுப்பு கொள்ளவதையோ, அவர்களது வழிபாட்டுத் தலங்களை நிர்மூலமாக்குவதையோ ஆதரித்ததில்லை" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், "சங்பரிவார் அமைப்புகள் நெடுங்காலமாகவே முஸ்லிம்கள் மீது கோபக்கனலைக் கக்கிவருகின்றன; அண்மைக் காலமாக அவை கிறித்துவ மதத்தினர் மீதும் தமது ஆத்திரத்தைத் திருப்பியுள்ளன. இத்தகைய செயல்கள் எந்த ஒரு நாகரிகமான சமுதாயத்தின் நியதிகளுக்கும் உட்படாதவை. ரவீந்திர நாத் தாகூரால் போற்றிப் புகழப்பட்ட 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் லட்சியத்தை புறந்தள்ளி, அந்த இடத்தில், இந்து தேசியவாதம் என்கிற போலியான ஒரு கருத்தைத் திணிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. இந்த நடவடிக்கையானது, நிச்சயம் இந்திய ஒற்றுமையைத் தகர்த்துப் பொடியாக்கிவிடும்" என்றும் கூறுகிறார்.

அவரது உரையில் மிகவும் முக்கியமான பகுதி இதுதான்: "இந்தியா ஒரு தேசமாக நிலைத்திருக்க வேண்டுமானால், செக்டேரியன் அரசியலை நாம் முழுமூச்சுடன் எதிர்கொண்டு முறியடித்தேயாக வேண்டும். அரசியல் களம் மென்மேலும் கூர்மையாகப் பிளவுபடுகின்ற இந்த சூழலில், பழைய உறவுநிலைகளில் தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன; புதியததோர் கருத்தொற்றுமையும் உருவாகிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சிகளாக இருந்தாலும், மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் அவை மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், முக்கியமான கொள்கைகள் மற்றும் பிரச்சனைகளில் முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்."

இந்த விஷயத்தில் அவர் கொண்டிருந்த கவலைகள், 2002 மே மாதம் 18-ஆம் தேதி அவர் நிகழ்த்திய ஏழாவது ஜி.வி. மாவ்லங்கர் நினைவுப் பேருரையிலும் எதிரொலித்தன. "எனக்கு வருத்தமாகவும், அவமானமாகவும் இருக்கிறது, கோபம்கூட வருகிறது; ஆனால் இருட்டு சக்திகளால் வீழ்த்தப்படுவதற்கு நான் உடன்பட மறுக்கிறேன். கோத்ராவில், சில குற்றவாளிகளால், கரசேவகர்களின்மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதலையடுத்து, மாநில பா.ஜ.க. அரசின் துணையுடனும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஒப்புதலுடனும் முஸ்லிம் மக்கள் அனைவரின்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடுமுழுதும் கருத்தொற்றுமை ஏற்பட்டுவருவது வரவேற்கத்தக்கதாகும். ஜனநாயகமும் நாகரிகமும் நிலைக்கும்" என்று அவர் தன் உரையில் குறிப்பிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகள், முதலாவது ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு அமைக்க வழிவகுத்ததில் வியப்பொன்றுமில்லை. தற்போதுள்ள இரண்டாம் ஐ.மு.மு. அரசுக்கு இடதுசாரிகளின் சித்தாந்த ஆதரவும் இல்லை; குறைந்தபட்சப் பொதுத்திட்டமும் இல்லை. அதிதீவிர வலதுசாரிகள் சந்தித்துவரும் அரசியல்/தேர்தல் சரிவுகளைத்தான் (சமூக-கலாசார வீழ்ச்சியல்ல) மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியினை மத்தியத்துவ சக்திகள் மட்டுமே செய்து முடிக்க இயலும் என்று எதிர்பார்ப்பது மிகவும் சாத்தியமில்லாத விஷயமாகும். இந்த வகையில், தோழர் ஜோதிபாசுவையும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் நாம் இழந்து நிற்கிறோம்!

(cartoon/ courtesy: THE HINDU)


0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP