Tuesday, July 19, 2016

இர்ஃபான், சயீரா ஹபீப் கடிதம்

*மதவெறி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை முறியடிக்க

*காங்கிரசுடன் கரம் கோர்த்துச் செயல்பட  

*கம்யூனிஸ்ட் அறிவுஜீவிகளின் அறைகூவல்!
 
 
[போற்றுதலுக்குரிய வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப். இவரது மனைவி, சயீரா ஹபீப் புகழ்மிகு பொருளாதார நிபுணர். அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இவ்விருவரும் பேராசிரியர்கள்.
  ஹபீப் தம்பதியினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ல் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுகிறவர்கள்.  நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழலின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவுக்கு ஜூன் 26ம் நாள் மிக முக்கியமான கடிதம் ஒன்றினை அவர்கள் அனுப்பிவைத்துள் ளனர். அக்கடிதத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. தமிழில்: எஸ்.துரைராஜ்]

  2016 ஜூன் 18 முதல் 20 வரை நடந்த மத்தியக் கமிட்டி கூட்ட நிகழ்வுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கை, நாட்டில் நிலவும் இன்றைய நிலையின் இன்றியமையாத அம்சங்கள் எவை என்பது குறித்து  விவாதிக்காமல், பல்வேறு பிரச்சனைகள் பற்றி வகை வாரியாக விளக்குகிறது; இதன் விளைவாக, தற்போதைய நிலைமைக்கு உகந்த அரசியல் உத்தியை முன்வைக்க அது தவறுகிறது.

  பாரதீய ஜனதா அரசை விமர்சிக்கிற மத்தியக் கமிட்டி அறிக்கை, மத்தியில் இப்போதுள்ள அரசாங்கம், ஏதோ நாடாளுமன்றத் தேர்தல் முறையில் பதவிக்கு வந்துள்ளதொரு பூர்ஷ்வா அரசியல் கட்சியின் அரசாங்கம் மட்டுமே அல்ல; மாறாக, இந்த அரசாங்கம், ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் அரைப் பாசிச சித்தாந்தத்தைப் பகிரங்கமாகத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்ற ஆட்சிமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டத் தவறுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பொரேட் துறையின் உச்சபட்ச கோரிக்கைகள் அனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்ற உறுதிபூண்டுள்ள அரசாங்கம் அது. மிக அப்பட்டமான முறையில், (கல்வியைக் காவிமயமாக்குவது, புதிது புதிதாய் மதவெறிப் பிரச்சனைகளைக் கிளப்புவது என்பன போன்றவற்றின் மூலம்) நமது தேசத்தின் சமயச்சார்பின்மையின் அடிப்படைக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்து ஊறுவிளைவிக்கிறது. (அருணாச்சலப் பிரதேசத்திலும், உத்தராகண்டில் மூக்குடைபட்ட சம்பவத்திலும் நிகழ்ந்தது போன்று) அரசியல் சட்டத்துக்குப் புறம்பான தலையீடுகள்மூலம் அல்லது அசாம் மாநிலத்தில் செய்தது போன்று அதிதீவிர வெறியுணர்வையும் வகுப்புவாதத்தையும் கிளப்பிவிடுவதன்மூலம் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியைக் கைப்பற்ற அது முயற்சிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பா.ஜ.க.வின் எதிர்த்தாக்குதல் மற்றும் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றுவதற்கான அதன் சதிமுயற்சியை உறுதியாக ஒன்றுபட்டு நின்று முறியடிப்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளின் முழுமுதற்கடமை ஆகும்.
  
  எனவே, எந்த அளவு முடியுமோ அந்த அளவு பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்துவதும், இன்னும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள மாநிலங்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்கான பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை முறியடித்து, இறுதியில், 2019ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் தோல்வியை உத்திரவாதப்படுத்தும் வகையில் இதர அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பரந்துவிரிந்த ஐக்கிய முன்னணியை உருவாக்குவதும்தான் நிச்சயமாக நமது கட்சியின் பிரதானமான இலட்சியமாக இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக நமது கட்சியின் அதிகாரபூர்வமான அரசியல் உத்தி, இதற்கு நேர்மாறாக உள்ளது.
  
  பீகார் மாநிலத்தில் 2015ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியுடனும் மட்டும் ஒன்றுபட்டிருந்தோம்; ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் அணியுடன் எவ்வித தேர்தல் உடன்பாடு கொள்வதையும் நாம் நிராகரித்தோம்.  இதன் விளைவாக, தேர்தலில் நமது கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை; அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கு எதிரான, நாம் புறக்கணித்த, மக்களின் எழுச்சி அலைகாரணமாக அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது; அந்தத் தேர்தல் முடிவை நாம் வரவேற்றோம். ஆனால், நமது தேர்தல் உத்தி முழுவதும் மிக அபாயகரமான வகையில் தவறாக வகுக்கப்பட்டது; பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளைத் தீங்கு விளைவிக்கும் வகையில் அது பிரித்திருக்கக்கூடும் என்கிற உண்மையை மத்தியக் கமிட்டி ஒருபோதும் நேர்மையாக எதிர்கொள்ளவில்லை.
  
 
  மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நாம் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் இருந்திருப்போமேயானால், திரிணாமுல் காங்கிரஸ் தொடுத்த கொடுந்தாக்குதலால் நமது தோல்வி மிக மோசமானதாய் ஆகியிருந்திருக்கும்; நமது கட்சியும், அதன் உறுப்பினர்களும் இன்னும் பெரிய தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பர்; பா.ஜ.க.வை பிரதான எதிர்க்கட்சியாக நாம் ஆக்கியிருப்போம். திரிணாமுல் ஆட்சிக்கு எதிரான ஒரு மெய்யான மாற்றை மக்கள் முன் வைக்கும் வகையில் காங்கிரசுடன் ஒரு பொதுத் திட்டத்தை உரிய காலத்தில் உருவாக்காமல் போனதுதான் நாம் இழைத்த தவறு என்பது நிச்சயம்.
  
  “இடதுசாரி” கட்சிகள் மற்றும் மக்களால் அதிகம் அறியப்படாத சின்னஞ்சிறு கட்சிகளுடன் மட்டுமே தேர்தல் அணி அமைப்பது என்கிற நமது கொள்கையால் நமது முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராய் ஆகிப்போனதற்குத் தமிழ்நாடு மற்றுமொரு எடுத்துக்காட்டு. திமுக-காங்கிரஸ் அணியுடன் உடன்பாடு கொண்டிருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்காதா? கட்சியின் அதிகாரபூர்வமான “தேர்தல் உத்தி” தேவதா விசுவாசமாகப் பின்பற்றப்பட்ட தமிழ்நாட்டில், நமது அனுபவத்திலிருந்து மத்தியக் கமிட்டி பாடம் எதனையும் கற்றுக்கொள்ளாததும் துரதிருஷ்டவசமானதே.
  
  அசாமிலும்கூட நாம் அதிகாரபூர்வமான தேர்தல் உத்தியைப் பின்பற்றினோம்; தேர்தல் உடன்பாடு கொள்ள வருமாறு காங்கிரஸ் விடுத்த பகிரங்க அழைப்பினை உதறித்தள்ளினோம்; பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு நம்மாலான சிறிய கைங்கர்யத்தையும் செய்தோம். அசாமில் “அதிகாரத்திலிருந்து காங்கிரசை அகற்ற வேண்டும்” என விடுக்கப்பட்ட மத்தியக் கமிட்டியின் அறிக்கை மனக்கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது; காரணம், காங்கிரசுக்கு ஒரு மாற்றாக உருவாவது இருக்கட்டும்; ஒரே ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலையில் இடதுசாரிகள் இருக்கும்போது, இதனால் அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் வகையில்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.         
  
  கேரளாவில், நமது கட்சியின் தலைமையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி பெற்றுள்ள வெற்றி, அண்மையில் நடந்த தேர்தல்களில் நமக்குக் கிட்டிய ஒளிவீசும் ஒற்றைத்தனி நட்சத்திரம் ஆகும். ஆனால், கேரளாவில், “பா.ஜ.க.வும் காங்கிரசும்” நமது பிரதான எதிரிகள் என்று இவ்விரு கட்சிகளையும் மத்தியக் கமிட்டி சமநிலையில்வைத்துப் பார்ப்பது துரதிருஷ்டவசமானது. வகுப்புவெறியற்ற பிற அரசியல்வாதிகளையும் ஆதரவாளர்களையும்கூட உள்ளடக்கியதோர் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கேரளத்தில் உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கேரளாவில், பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரான போராட்டத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்புக் கட்சிகளுடனும், பிறருடனும் ஒத்துழைப்பதற்கு நியாயமான தேர்தல் ஆதாயங்கள் இடையூறு ஏற்படுத்த நாம் அனுமதிக்கலாகாது.
  
  விவேகமோ அல்லது நியாயப்படுத்துவதற்கான முன் அனுபவ நிகழ்வோ இல்லாத ஒரு கொள்கையைப் பின்பற்றுவதன் பொருட்டு, கடந்த கட்சிக் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் எனும் நுட்பமான காரணத்தைக் காட்டாமல், மத்தியக் கமிட்டியும் பொலிட்பீரோவும் நமது உத்தி குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். லோகியா கொண்டிருந்ததைப் போன்ற “காங்கிரஸ்-எதிர்ப்பு” நமக்குப் பெரிதும் பயன்படப்போவதில்லை.
  
  பீகாரில் நாம் கண்டதைப்போன்று, பா.ஜ.க.வின் நோக்கங்கள், செயல்பாடுகள் மீது நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் பலவற்றின் மத்தியில் ஏற்கனவே கடும் வெறுப்புணர்வு வெடித்துள்ளது. தேசிய அளவில் இன்னும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த இயக்கத்தில் இணைந்திருக்கின்ற காரணத்தால் அதனின்றும் நாம் ஒதுங்கி நிற்க இயலுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், காங்கிரசுடன் நாம் வேறுபடுகிற விஷயங்களை எதிர்க்காமல் இருக்கவேண்டும் என்பதோ, எல்லா இடங்களிலும், அந்தக் கட்சி எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு அதனுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதோ யாருடைய  நிலைபாடாகவும் இருக்க இயலாது.
  
  மேலே குறிப்பிட்டவற்றுக்கு, நமது கட்சியையும் அதன் வெகுஜன அமைப்புக்களையும் கட்டுவது முக்கியமான பணி அல்ல என்று பொருள் கொள்ளவும் கூடாது. ஆனால், “வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக” கட்சியைக் கட்டவேண்டும் என்று தமிழ்நாட்டிலும் அசாமிலும் பிற இடங்களிலும் (மத்திய கமிட்டி) வெறுமனே அழைப்புகள் மட்டும் விடுப்பது போதுமானதல்ல. அதற்கு சித்தாந்த ரீதியான கல்வியும், ஸ்தாபன ரீதியான முயற்சியும் தேவை; ஆனால், நமது மக்களில் ஆகப்பெரும்பாலானவர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லதோர் அரசியல் உத்தியை நமது கட்சி கொண்டிருக்கும்போதுதான் இவையும்கூட மெய்யாகவே வெற்றிபெறும். பிற பிரதான மதச்சார்பற்ற கட்சிகளின்பால் செக்டேரியன் அணுகுமுறையைக் கொண்டிருப்பது சாதாரண மக்கள் மத்தியில் நமக்குப் பெருமளவில் ஆதரவு கிட்ட வழிவகுக்காது.

   தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கட்சியைக் கட்டவியலாது என்பதையும் நாம் உணரவேண்டியது அவசியம். ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டுவதென்றால்கூட குறிப்பிட்ட தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆதரவையும், ஆலைக்கு வெளியே உள்ள மக்களின் அனுதாபத்தையும் பெற்றிருப்பது அவசியமாகிறது. மக்களுக்கு உடனடி நிவாரணத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைக் கட்சி கொண்டுள்ளது என்பதை உணரும்போதுதான் தனது லட்சியத்துக்காக அனுதாபிகளைக் கட்சி வசீகரிக்கும்; விரிந்து பரந்ததொரு ஐக்கிய முன்னணியால் மட்டுமே இத்தகைய சரியான பார்வையைத் தரவியலும். கட்சியின் மெய்யான வளர்ச்சிக்கு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது அவசியம் என்பதை உலகெங்கிலும் அனுபவம் உணர்த்துகிறது.   
  
  சொல்லப் போனால், 1930களின் இறுதியிலும், 1940களிலும் தேசிய இயக்கத்தின் போர்க்குணமிக்க படைப்பிரிவாகத் தன்னைக் கருதிச் செயல்பட்ட காலத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகப்பெரும் வளர்ச்சி கண்டது: கட்சி என்றுமே போற்றிப் புகழ்கின்ற தத்-பிராட்லி ஆய்வறிக்கையிலிருந்து நிச்சயம் நாம் படிப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், பொலிட்பீரோவும் மத்தியக் கமிட்டியும் எமது கருத்துக்களை உரிய முறையில் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.
  
  -இர் ஃபான் ஹபீப்
  
  -சயீரா ஐ ஹபீப்

   ஜூன் 26, 2016

Read more...

Sunday, March 27, 2016

மார்க்சியம் பற்றி டெர்ரி ஈகிள்டன்

வன்முறையாளர்களா மார்க்சீயவாதிகள்?
    -டெரி ஈகிள்டன்-

[மார்க்சீயம், விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்ட மெய்ஞ்ஞானம். ஆனால்,  எதனிடமோ சிக்கிய பூமாலை போன்று சிலரின் கையில் சிக்குண்டு அது படாதபாடு படுகின்றது. சோவியத் நாட்டில், ஜோசஃப் ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்த நெஞ்சம் பதறவைக்கும் கொடுஞ்செயல்கள்; செஞ்சீனத்தில் மா-சே-துங் மேற்பார்வையில் ‘கலாசாரப் புரட்சி’ எனும் பெயரில் நடந்தேறிய அலங்கோலங்கள்; கம்பூச்சியாவில் போல் பாட் தலைமையின்கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகார அட்டூழியங்கள்; ஏன் –இந்தியாவிலும்கூட தலைமறைவு காலத்தில் அரங்கேற்றப்பட்ட தீச்செயல்கள் என அனைத்துமே மார்க்சீயத்தின் பெயரால்தான் நடத்தப்பட்டன.

எந்தவொரு விஞ்ஞானத் தத்துவமும் கோட்பாடும் தார்மீக நெறி நின்று செயலாக்கப்படுத்தப் படவில்லையெனில் அது இதே நிலையைத்தான் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்.

ஒப்பில்லாத அந்த சமூகவிஞ்ஞானத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், அதனை மெய்யாகப் பின்பற்றுபவர்களுக்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்ததுடன், மார்க்சீயத்தின் எதிரிகள், தமது விஷப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்குத் தூண்டுகோல்களாகவும் ஆகிவிட்டன எனில் அது மிகையாகாது.

ஆனால், மார்க்சீயத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நேர் எதிர்கொண்டு, முறியடிக்க வேண்டியது எப்போதைக்காட்டிலும் இப்போது அவசர அவசியமாகிறது. அந்த தர்மயுத்தத்தில் முன்னணி வீரராக நின்று மார்க்சீய தத்துவ வாளைச் சுழற்றுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் டெரி ஈகிள்டன். நாற்பதுக்குமேற்பட்ட தத்துவார்த்த, இலக்கிய விமர்சன நூல்களை எழுதியுள்ள அவர், இன்றைய உலகின் ஈடுஇணையற்ற இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் கோட்பாட்டாளராகத் திகழ்கிறார்; உலகின் தலைசிறந்த பல பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

2011 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘மார்க்சீயம் சரியான பாதையே-ஏன்?’ (Why Marx was right) எனும் நூல், மார்க்சீயத்தின் எதிரிகளை எதிர்கொள்வதற்குப் பேராயுதமாக விளங்குகிறது. மார்க்சீயத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளைப் பத்து கேள்விகளுக்குள் அடக்கி, அவை எவ்வளவு ஆதாரமற்றவை என்பதை மிகச்சாதுர்யமாக அம்பலப்படுத்தியுள்ளார் இந்த நூலில்.

(1). அனைத்தையும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகத் தாழ்த்திவிடுகிறது மார்க்சீயம்.
  
(2). மார்க்சீயம் இன்றைய நிலைக்குப் பொருந்தாதது; கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாகிவிட்டது.

(3). தத்துவம் என்ற அடிப்படையில் அது சிறந்ததாக இருந்தாலும் செயல்படுத்த லாயக்கற்றது.

(4). வரலாற்றின் கருவிகளாகத்தான் மக்களை மார்க்ஸ் காண்கிறார்; அவர்களின் தனித்துவத்தைப் பறித்துவிடுகிறார்.

(5). மார்க்சீயம் ஒரு கற்பனாவாதக் கனவு

(6). பொருள்முதல்வாதியான மார்க்சுக்கு மனிதகுலத்தின் ஆன்மிக அம்சங்களில் ஈடுபாடில்லை

(7). வர்க்கத்தைப் பற்றியே சதாசர்வகாலமும் எண்ணிக்கொண்டிருப்பதால் இன்றைய உலகிற்கு மார்க்சீயம் லாயக்கில்லாததாகிவிடுகிறது

(8). மார்க்சீயவாதிகள் பெரும்பாலும் வன்முறையையே ஆதரித்து நிற்பவர்கள்

(9). சர்வ அதிகாரம் படைத்த அரசு நிர்மாணிக்கப்படுவதை மார்க்சீயம் ஆதரிக்கிறது

(10). அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அனைத்து முற்போக்கு இயக்கங்களும் மார்க்சீயத்திற்கு வெளியிலிருந்தே முகிழ்த்துள்ளன.

மேற்கண்ட இந்த பத்து அவதூறுகளையும் இந்த நூலின்மூலம் தகர்த்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார் பேராசிரியர் ஈகிள்டன்.

இதில் எட்டாவதான மார்க்சீயத்தையும் வன்முறையையும் இணைத்துப் பரப்பப்படுகின்ற அவதூறை நிர்மூலமாக்கும் அவரது பதில் இங்கே நமது வாசகர்களுக்குத் தமிழில் தரப்படுகிறது.

1943 பிப்ரவரி 22ஆம் நாள் பிறந்த ஈகிள்டன் இவ்வாண்டு 71 வயதை நிறைவு செய்கிறார். அவருக்கு வாழ்த்துகூறும் வகையில் இது பிரசுரமாகிறது. கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுவோமாக! தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், விதுரன்]



  “மார்க்சீயவாதிகள், வன்முறைசார்ந்த அரசியல் நடவடிக்கையை ஆதரிப்பவர்கள்.  அவர்கள், நிதானமிக்க, படிப்படியாக சீர்திருத்தம் கொண்டுவருகிற விவேகமிக்க பாதையை நிராகரிக்கிறார்கள்; இதற்கு மாறாக, ரத்தக்களரியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் புரட்சிப்பாதையைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு சிறிய குழுவினரான புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்து, அரசைத் தூக்கியெறிந்து, தமது விருப்பத்தைப் பெரும்பான்மை மக்கள்மீது திணிக்கிறார்கள். மார்க்சீயமும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமாக வாளை உருவி நிற்பதற்கான அநேக காரணங்களில் இதுவும் ஒன்று. ஒழுக்கநெறியினை வெற்று சித்தாந்தமாக வெறுத்தொதுக்குகின்ற மார்க்சீயவாதிகள், குறிப்பாகத் தமது அரசியலானது மக்கள்மீது எத்தகைய பேரழிவினைக் கட்டவிழ்த்துவிடும் என்பதை எண்ணி மனங்கலங்குவதில்லை. இறுதி லட்சியம், அதை எட்டுவதற்கான பாதையை நியாயப்படுத்தட்டும்; இதில் எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற நிலையெடுப்பவர்கள் அவர்கள்.”—[இது மார்க்சீயவாதிகளுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.]

  புரட்சி என்றதுமே வன்முறையும் குழப்பமும்தான் வழக்கமாக மனக்கண்முன் தோன்றும் காட்சிகள். இதற்கு மாறாக, அமைதிபூர்வமாகவும், நிதானமிக்கதாகவும் படிப்படியாகவும் நடைபெறக்கூடியது சமூக சீர்திருத்தம் என்று கருத முனைவது நம் இயல்பு. ஆனால், இது தவறான எண்ணப்போக்கு. பல சீர்திருத்த இயக்கங்கள், அமைதிபூர்வமற்ற வழியிலேயே அரங்கேறியுள்ளன. அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராட்டம்பற்றி எண்ணிப்பாருங்கள்: புரட்சிக்கும் அதற்கும் வெகுதூரம் என்றாலும், அதில்தான் எத்தனை மரணங்கள்; எத்துணை தாக்குதல்கள்; கொலைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள்! காலனியாதிக்கத்தின்கீழ் சிக்குண்டிருந்த லத்தீன் அமெரிக்காவில், பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், மிதவாத சீர்திருத்தத்துக்கான ஒவ்வொரு முயற்சியும் வன்முறைமிகுந்த சமூக மோதல்களுக்கு வழிவகுத்தன.

போல்ஷெவிக் புரட்சி-நடந்தது என்ன?

   இவற்றுடன் ஒப்புநோக்குகையில், சில புரட்சிகள் அமைதிவழியிலேயே நடந்துள்ளன. வரலாற்றில் மென்மையாக நடந்தேறிய புரட்சிகளுமுண்டு; வன்முறைவழிப் புரட்சிகளுமுண்டு. அயர்லாந்துக்கு ஓரளவு சுதந்திரம் கிட்டுவதற்கு அடிகோலிய 1916 டப்ளின் புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. 1917-ல் ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில் மிகக் குறைந்த அளவே குருதி சிந்தப்பட்டது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். சொல்லப்போனால், மாஸ்கோவின் கேந்திரமான தளங்களைக் கைப்பற்றும் காரியம், துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாகூட வெளியேறாமலேயே செய்துமுடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. கிளர்ச்சியாளர்களுக்கு மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது; இதனால், [போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்மிக்க மார்க்சீய சிந்தனையாளரான] ஐசக் டாய்ஷர் கூறியதைப்போன்று, 'மெதுவாக நெட்டித் தள்ளியதுமே பொத்தென்று வீழ்ந்துபட்டது அரசாங்கம்'. மூர்க்கத்தனமான மோதல் வரலாற்றைத் தன்னகத்தேகொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் அமைப்புமுறையானது பொலபொலவென வீழ்ந்தபோது, அது நிர்மாணிக்கப்பட்ட நாளில் சிந்திய குருதியைக்காட்டிலும் மிகக் குறைந்த அளவே ரத்தம் சிந்தப்பட்டது.

   போல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து ரத்தக்களரி ஏற்படுத்திய உள்நாட்டுப்போர் வெடித்தது உண்மையே. ஆனால், வலதுசாரி சக்திகளும், அந்நிய படையெடுப்பாளர்களும், அங்கு உதயமான புதிய சமூகமுறைமைக்கு எதிராகத் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்தான் இதற்குக் காரணம். பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகள், எதிர்ப்புரட்சியாளர்களாம் வெண்படையை ஆனமட்டும் ஆதரித்து நின்றனர். 

சமுதாய மாற்றம் நெடிய பணி
 
எந்த அளவுக்கு வன்முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதைவைத்துப் புரட்சியின் தன்மையை மார்க்சீயம் தீர்மானிப்பதில்லை. அதனை சர்வாம்சம் கொண்ட திடீர் மாற்றமாகவும் அது பார்ப்பதில்லை. போல்ஷெவிக் புரட்சி நடந்த மறுநாள் விடிந்தவுடனேயே, சந்தை உறவுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுவுடைமை ஆகிவிடவில்லை. மாறாக, போல்ஷெவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் கணிசமான காலம் சந்தைகளும், தனியுடைமையும் பிழைத்திருந்தன; படிப்படியாக அவற்றைக் களைவதற்கான அணுகுமுறையை போல்ஷெவிக்குகள் மேற்கொண்டனர். விவசாயிகள் விஷயத்திலும் இதேபோன்றதோர் அணுகுமுறையைத்தான் அக்கட்சியின் இடதுசாரிப் பிரிவு மேற்கொண்டது. கூட்டுப்பண்ணைகளில் விவசாயிகளை விரட்டிக்கொண்டுபோய்விடுதல் என்ற பேச்சுக்கே அவர்கள் இடமளிக்கவில்லை; மாறாக, படிப்படியாகவும், அவர்களிடம் கருத்தொற்றுமை, மனமாற்றம் ஏற்படுத்துவதன்மூலமும் இதனை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
   வழக்கமாகப் புரட்சிகள் கருவாகி உருவெடுப்பதற்கு நீண்ட நெடுங்காலமாகும்; அவை தம் லட்சியத்தை எட்டுவதற்கோ நூற்றாண்டுகள் ஆகலாம். ஐரோப்பிய மத்தியதரவர்க்கம், நிலப்பிரபுத்துவத்தை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது குறுகிய காலத்தில் நடக்கக்கூடியது; ஆனால், ஒரு சமுதாயத்தின் மரபார்ந்த நெறிமுறைகள், நிறுவனங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் மாற்றம் கொணர்வது நீண்டகாலம் பிடிக்கின்ற காரியமாகும். அரசாங்க ஆணையின்மூலம் நீங்கள் ஆலைகளை சமூகத்தின் உடைமையாக்க இயலும்; ஆனால், தமது முன்னோர்களின் பழக்கவழக்கங்களிலிருந்து மாறுபட்ட ஆண்களையும் பெண்களையும் சட்டத்தின் மூலமாக மட்டுமே உருவாக்கிவிடமுடியாது. கல்வியிலும், கலாசாரத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருகிற நீண்ட நெடிய பணியாக அது உள்ளது.

   இத்தகைய மாற்றம் சாத்தியம்தானா என்று சந்தேகம் கொள்பவர்கள் தம்மைத்தாமே உற்று நோக்கிக்கொள்ள வேண்டும். இன்று நவீன பிரிட்டனில் வாழ்கின்ற நாம், பதினேழாம் நூற்றாண்டில் வெடித்த நீண்ட நெடிய புரட்சியின் தோன்றல்கள்; அந்தப் புரட்சி வெற்றிபெற்றதன் பிரதானக் குறியீடு, அதை நாம் முற்றிலும் அறியாதவர்களாக இருப்பதுதான். எந்தப் புரட்சிகள், தாம் உருவானதன் சுவடுகள் அனைத்தையும் துடைத்தெடுத்து விடுகின்றனவோ அவைதான் வெற்றிகரமான புரட்சிகள். அவ்வாறு செய்வதன்மூலமாக, எத்தகைய நிலைமையை உருவாக்க அவை போராடினவோ அந்த நிலைமை இயல்பானதாகத் தோற்றம்கொள்ளச் செய்கின்றன. இந்தவகையில், அவை மகப்பேறு போன்றவை. இயல்பான'  மனிதர்களாக நாம் செயல்பட வேண்டுமேயானால், பிறக்கும்போது நாம் பட்ட வேதனையையும், துன்பத்தையும் மறந்தேயாகவேண்டும். தனிமனிதனாக இருந்தாலும் அல்லது அரசுகளாக இருந்தாலும் பிறப்பு என்பது துயர்மிகுந்ததாக இருப்பது இயல்பே. விவசாயிகளாக இருந்து தொழிலாளர்களாக மாறியவர்களைக் கொடும் சுரண்டலுக்கு ஆளாக்கி, அந்தச் சுரண்டல் அஸ்திவாரத்தின்மீது கட்டப்பட்ட நவீன பிரிட்டிஷ் அரசு உருவானபோது அதன் சருமத்தின் வியர்வைத்துளை ஒவ்வொன்றிலிருந்தும் ரத்தமும் அழுக்கும் கசிந்ததை 'மூலதனம்' நூலில் நினைவுபடுத்துகிறார் மார்க்ஸ். ரஷ்ய விவசாயிகளை நிர்ப்பந்தமாக நகர்மயமாக்கலுக்கு ஆளாக்கிய ஸ்டாலினின் திட்டத்தைக் கண்டிருந்தால் அவர் துடிதுடித்துப் போயிருப்பார் என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பெரும்பாலான அரசுகள், புரட்சி, படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, தட்டிப்பறித்து தனதாக்கிக்கொள்வது அல்லது (அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற சமூகங்களில் நிகழ்ந்தது போன்று) மனிதர்களைப் பூண்டோடு அழித்தல் ஆகியவற்றின் மூலமே உருவாகின. இந்த ரத்தக்கறைபடிந்த வரலாற்றை மக்களின் நினைவிலிருந்து அகற்ற முடிந்த அரசுகளே வெற்றிகரமான அரசுகள். இது சாத்தியமாகாத அளவு மிக அண்மையில் அநீதியில் பிறந்த—எடுத்துக்காட்டாக, இஸ்ரேல், வடக்கு அயர்லாந்து போன்ற—அரசுகள், அரசியல் மோதல்களால் துயரத்துக்கு ஆளாகக்கூடும்.

    மிகவுயர்ந்த வெற்றியை ஈட்டிய புரட்சியில் விளைந்தவர்கள் நாம் என்ற நிலையிருக்கும் பட்சத்தில், அனைத்துப் புரட்சிகளும் தோல்வியைத்தான் தழுவும் என்றும், முன்னர் இருந்த அதே நிலைமைக்கே அவை நம்மைக் கொண்டுசெல்லும் என்றும், முன்னர் இருந்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மோசமான நிலைமையை ஏற்படுத்திவிடும் என்றும், தன் மகவுகளையே காவு கொள்ளும் என்றும் பழமைவாதிகள் கொட்டிமுழக்குகின்ற குற்றச்சாட்டுகளுக்கு நமது வெற்றியே தக்க பதிலாக அமையும். ஆனால், நிலப்பிரபுத்துவ கனதனவான்களை பிரான்ஸ் அரசாங்க சிம்மாசனத்தில் மீண்டும் அமரவைத்ததாகவோ அல்லது ஜெர்மனி, நிலவுடைமை பெருந்தனக்காரர்களை ஆட்சிபீடத்தில் மறுபடியும் கொண்டு அமர்த்தியதாகவோ தெரியவில்லை. ஒருவேளை இதுபோன்ற அறிவிப்புகளைப் பத்திரிகைகளில் நான் சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டேனோ என்னவோ! பிரபுக்களின் சபை முதல் அரசகுடும்பத்தால் செய்யப்படும் ‘பிளாக் ராட்’ (Black Rod) எனும் அதிகாரியின் நியமனம் வரை மற்றெந்த நவீன நாடுகளைக்காட்டிலும் பிரிட்டனில், நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச-சொச்சங்கள் அதிகமாக இருப்பது உண்மைதான்; ஆனால், ஆளும் மத்தியதர வர்க்கத்தினர்க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதுதான் பெரும்பாலும் இதற்குக் காரணம். மன்னராட்சியைப் போன்றே, மக்களில் பெரும்பாலோரை ஓர் எல்லைக் கோட்டுக்கு வெளியே நிறுத்தியும், மிரட்சிகொள்ளச் செய்யவுமான ஒரு நிலையை அது தோற்றுவிக்கிறது. ஆயினும், பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் இளவரசர் ஆண்ட்ரூவிடம் கவர்ந்திழுக்கக்ககூடிய ரகசியத்தையோ புதிரையோ காணாத நிலையில், ஆட்சியிலிருப்பவர்கள், தமது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு மேலதிக நம்பகமான வழிகள் இருக்கக்கூடும்.

ஐரோப்பிய மக்களின் இரட்டை நிலை

   இன்று ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தாம் புரட்சிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை அவர்கள், சில புரட்சிகளுக்கு எதிரானவர்கள்; மற்றவர்களின் புரட்சிகளுக்கு ஆதரவானவர்கள் என்பது இதன் பொருளாக இருக்கலாம். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது, நம் சொந்த உணவைக் காட்டிலும் பிறரது உணவு கவர்ச்சிகரமானதாகத் தோன்றுவதுபோல், பிற மக்களின் புரட்சியும் அப்படித்தான் நமக்குத் தோன்றும். இந்த மக்களில் பெரும்பாலானவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிந்த புரட்சியை அல்லது காலனியாதிக்கத்திலிருந்த அயர்லாந்து, இந்தியா தொடங்கி கென்யா, மலேசியா வரை நாடுகள் இறுதி விடுதலை அடைந்ததையும் அங்கீகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், சோவியத் முகாம் வீழ்ந்தபோது, அவர்களில் பலர் கசிந்துருகி கண்ணீர்விட்டிருக்க மாட்டார்கள்.
ஸ்பார்டகஸ் தொடங்கி, அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் நடந்ததுவரை அடிமைகளின் எழுச்சியை அவர்கள் அங்கீகரித்திருக்கக்கூடும்.
ஆனால், இந்தக் கிளர்ச்சிகள் யாவற்றிலும் வன்முறை இருந்தது; இவற்றுள் சில போல்ஷெவிக் புரட்சியைக்காட்டிலும் அதிகமான வன்முறையைக் கொண்டிருந்தன. எனவே, இத்தகைய நிலையெடுப்பவர்கள், தாமாகவே முன்வந்து, தாங்கள் எதிர்ப்பது சோஷலிஸ்ட் புரட்சியைத்தான் என்றும், அடிப்படையில் புரட்சியையே அல்ல என்றும் ஒப்புக்கொள்வது இன்னும் நேர்மையானதாக இருக்குமல்லவா?

   வன்முறையை ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்ற, சாத்வீகக் கொள்கையாளர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிறுபான்மை மக்கள் பகுதியினர் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையான சாடுதலுக்கு ஆளானபோதிலும், அவர்கள் தம் கொள்கையில் தீரத்துடனும், மனவுறுதியுடனும் இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், சாத்வீகக்கொள்கை உடையவர்கள் மட்டும் வன்முறையை வெறுக்கிறார்கள் என்றில்லை. மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் கொடியவர்கள், மக்களைத் தாக்கித் துன்புறுத்துகின்ற மன நோய்க்கு ஆளானவர்கள் சிலரைத்தவிர மக்கள் ஒவ்வொருவருமே வன்முறையை நிராகரிக்கிறார்கள். சாத்வீகக் கொள்கை விவாதிக்கத்தக்கதாக தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டுமெனில், போர் என்பது மனவெறுப்பைத்தருகின்றது என்கிற புனிதமான பிரகடனத்தைச் செய்வதோடு நின்றுவிடக்கூடாது. எவ்வளவுதான் சரியானதாக இருப்பினும் இதுபோன்ற நிலைபாடுகள் மனதிற்கு சலிப்பை ஏற்படுத்துபவை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். வன்முறையை முற்றும் முழுவதுமாக நிராகரிக்கின்ற சாத்வீகக் கொள்கையாளர் எவரோ அவர் மட்டுமே விவாதிக்கத் தகுதியானவராகிறார். யுத்தங்களையும் புரட்சிகளையும் நிராகரிக்கிறவராக மட்டுமின்றி, சிறையிலிருந்து தப்பிய கொலைகாரன் ஒருவன், சின்னஞ்சிறு குழந்தைகள் இருக்கின்ற வகுப்பறையில் நுழைந்து தன்னிடமுள்ள எந்திரத்துப்பாக்கியை இயக்கமுயலும்போது அவனைக் கொல்லாமல் அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துமளவுக்குமட்டும் கபாலத்தில் ஒரு அடிகொடுக்கக்கூட மறுப்பதற்கு இணையாகும் இது. இத்தகைய நிலைமையை எதிர்கொண்ட எவனாவது இப்படிக் கடமை தவறியிருப்பானேயானால், அடுத்த பெற்றோர்-ஆசிரியர் கழகக்கூட்டத்தில் அவன் விரிவான விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்.  எந்தக் கறாரான அர்த்தத்தில் பார்த்தாலும், சுத்த சாத்வீகம் என்கிற பதம் மிகமோசமான வகையில் அறநெறிகளுக்கு எதிரானதாகும். நிலைமை எல்லைகடந்து போகிறபோது, தவிர்க்கமுடியாத சூழலில் வன்முறையைப் பிரயோகிக்கவேண்டியுள்ளது என்பதை அநேகமாக அனைவருமே ஏற்றுக்கொள்வர். ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்கள், ஆக்கிரமித்த நாட்டுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுவதை ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் அனுமதிக்கிறது. அத்தகைய ஆக்கிரமிப்புகள் எதுவாயினும், சில கடுமையான நிபந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட வேண்டியுள்ளது.  பிரதானமாக, அது ஆக்கிரமிப்பு செய்த நாட்டின் தற்காப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்; எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பலனில்லாமல் போனதால் கடைசியில் இந்த வழியில் இறங்கவேண்டியதாயிற்று என்றிருக்கவேண்டும்;  குறிப்பிட்டதொரு பேராபத்தைக் களைவதற்கு இது ஒன்றுதான் வழி என்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும்; அது தேவைக்கு ஏற்ப பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்; அதன்மூலம் ஓரளவு வெற்றியை ஈட்டத்தக்கதாக இருக்கவேண்டும்; அப்பாவி மக்களைக் கொன்றுகுவிப்பதாக அது ஆகிவிடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

ரத்தக்கறை படிந்த காலம்

   மார்க்சீயத்தின் வாழ்க்கைப் பயணத்தில் ரத்தக்கறைபடிந்த காலம் மிகக் குறுகியதெனினும், அது மிகக் கோரமான வன்முறையைக் கொண்டது. ஸ்டாலின், மா-சே-துங் இருவருமே அநேகமாக, கற்பனைக்கு எட்டாத வகையில் பெருமளவுக்கு மக்களைக் கொன்றுகுவித்தவர்களாவர். இருப்பினும், நாம் ஏற்கனவே கூறியவாறு, மிகச் சில மார்க்சீயவாதிகளே இன்று இந்தக் கோரக் கொலைகளை நியாயப்படுத்த முனைவார்கள்; ஆனால், மார்க்சீயவாதிகளல்லாதவர்கள் பலரும், ட்ரெஸ்டன் அல்லது ஹிரோஷிமா நகரங்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவினை நியாயப்படுத்துவர். ஸ்டாலின் போன்றவர்களால் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்கள் எதனால் ஏற்பட்டன; அவை மீண்டும் நிகழாமல் தடுப்பது எங்ஙனம் என்பதுகுறித்தெல்லாம் வேறு எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவர்களைக் காட்டிலும், மார்க்சீயவாதிகள், மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் என்பதனை நான் முன்னமே குறிப்பிட்டுள்ளேன்.  ஆனால், முதலாளித்துவம் இழைத்த கொடுமைகளை என்னென்று சொல்வது?
ஏகாதிபத்திய நாடுகள், பிரதேசங்களைக் கைப்பற்றும் அகோரப்பசிக்காக முதலாம் உலகப்போர் எனும் கொடூரமான ரத்தக் களரியில், தொழிலாளிவர்க்கத்து ராணுவ வீரர்களை உயிர்ப்பலி வாங்கிய கொடுமையை ஏதென்று சொல்வது? உலகுதழுவிய யுத்தம், காலனியாதிக்கச் சுரண்டல், இனப்படுகொலை, தவிர்த்திருக்கக்கூடிய பஞ்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையும் முதலாளித்துவத்தின் சரித்திரத்தில் அடங்கும். மார்க்சீயத்தின் திரிபால் விளைந்தது ஸ்டாலினிச அரசு என்றால், முதலாளித்துவத்தின் அதிதீவிர மரபியல் மாற்றத்தால் ஜனித்ததல்லவா பாசிஸ்ட் அரசு? 1840களில் அயர்லாந்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்துக்குப் பத்து லட்சம் ஆண்களும் பெண்களும் பலியானார்கள் எனில், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், தனது மோசமான நிவாரணக் கொள்கையில், தாராள சந்தை சட்டங்களைப் பின்பற்றவேண்டும் என வற்புறுத்தியதுதான் அதற்குப் பெருமளவு காரணம். இங்கிலாந்தின் விவசாயிகள் எவ்வாறு ரத்தம் சிந்தவைக்கப்பட்டனர்; இழுத்தடிக்கப்பட்டு தம் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்பதைக் கண்டு வெகுண்டெழுந்த காரல் மார்க்ஸ், தன் கோபத்தைக் கொஞ்சமும் மறைக்காமல் அதுகுறித்து மூலதனத்தில் எழுதுகிறார் என்பதை நாம் கண்டோம். வன்முறைமூலம் உடைமை பறிக்கப்பட்ட இந்த வரலாறுதான் இங்கிலாந்தின் கிராமியப் பசுமைவெளிகளில் நிலவும் அமைதிக்குக் கீழே படுத்துறங்குகிறது. நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த இந்த கொடூர சம்பவத்தோடு ஒப்பிட்டால் கியூபாவின் புரட்சிபோன்றதொரு சம்பவம் தேநீர் விருந்தையொத்த மிகச் சிறிய நிகழ்வேயாகும்.    

வன்முறைக்கு முற்றுப்புள்ளிவைப்பவர்கள்

   மார்க்சீயவாதிகளைப் பொறுத்தவரை, பகை முரண் (antagonism) என்பது முதலாளித்துவத்தின் இயல்பிலேயே பொதிந்து கிடப்பதாகும். அதிலிருந்து உதயமாகிற வர்க்க மோதலில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ நாடுகள் உலகளாவிய வளங்களைக் கைப்பற்றவும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அவை நடத்துகின்ற யுத்தங்களிலும் இந்த உண்மை அடங்கியுள்ளது. இதற்கு மாறாக, சர்வதேச சோஷலிஸ்ட் இயக்கத்தின் உடனடி லட்சியங்களில் ஒன்றாக இருப்பது சமாதானமாகும். போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்ததுமே, முதல் உலகப்போரின் கொலைபாதகச் செயல்களிலிருந்து ரஷ்யாவை அவர்கள் விலக்கிக்கொண்டனர். யுத்தவெறி, குறுகிய வெறியுணர்வுகள் ஆகியவற்றின்பால் வெறுப்புகொண்டதால் சோஷலிஸ்டுகள்,  நவீன வரலாறு முழுதும், பல சமாதான இயக்கங்களில் முக்கிய பாத்திரம் வகித்துவந்துள்ளனர். தொழிலாளிவர்க்க இயக்கம் என்பது வன்முறைக்கான இயக்கமல்ல; அது வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இயக்கமாகும்.

   தான் செய்கின்ற காரியத்தின் விளைவைப்பற்றிக் கவலைகொள்ளாமல், அரசின் மிகப்பெரும் படைகளுக்கு எதிராகப் புரட்சியாளர்களின் சின்னஞ்சிறு குழுவைக் கொண்டு நிறுத்தும் “சாகசத்திருவிளையாடலை” யும் மார்க்சீயவாதிகள் காலங்காலமாக எதிர்த்துவந்துள்ளனர். போல்ஷெவிக் புரட்சியை நடத்தியது, சதிகாரர்களைக் கொண்ட சின்னஞ்சிறு ரகசியக் குழுவன்று; சோவியத்துக்கள் எனும் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்குப் பகிரங்கமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தனிநபர்கள்தான் அதை நடத்தினார்கள். டாங்கிப் படைகளுக்கு எதிராகக் கோபக்கனல் தெறிக்கும் முகத்துடன், கையில் வைக்கோல்வாரும் கம்புகளை ஏந்திச்செல்லும் போராளிகளைக் கொண்ட போலித்தனமான வீரஎழுச்சிகளைத் தீர்மானகரமாக எதிர்த்து நின்றவர் மார்க்ஸ். வெற்றிகரமான புரட்சிக்குக் காரியசாத்தியமான சில முக்கியமான முன்தேவைகள் அவசியம் என்பது அவரது கருத்து. இதற்கு உருக்கு போன்ற உள்ளமும் மிக அதிகமான வீரமும் இருந்தால் மட்டும் போதாது. அரசாங்கம் செழிப்பிலும், அதற்கு எதிரான சக்திகள் நாடிதளர்ந்துபோய் சுக்குநூறான நிலையிலும் இருக்கின்ற சந்தர்ப்பத்தைக்காட்டிலும், பெரும் நெருக்கடியான சூழலில் சிக்குண்ட ஆளுகின்ற வர்க்கம் வலுவிழந்து பிளவுபட்ட நிலையிலும் சோஷலிஸ்ட் சக்திகள் வலிவுடன், மிக நல்லமுறையில் திரட்டப்பட்ட நிலையிலும் இருக்கின்றபோது புரட்சிகர சக்திகள் நல்லமுறையில் சாதிக்கமுடியும் என்பது வெள்ளிடைமலை. இந்த வகையில், மார்க்சின் பொருள்முதல் வாதத்திற்கும்-சமூகத்தில் செயல்படும் பொருளாதய சக்திகளைப்பற்றிய ஆய்வு அவசியம் என அவர் வலியுறுத்துவது-புரட்சிகர வன்முறைபற்றிய பிரச்சனைக்கும் தொடர்பு உள்ளது.
  சார்ட்டிஸ்டுகள் இயக்கம் முதலாக, 1930-களில் நடைபெற்ற பட்டினிப் பேரணிகள் ஈறாக
பிரிட்டனில் நடந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதிபூர்வமாகவே நடந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஆத்திரமூட்டலுக்கு ஆட்படுத்தப்பட்டால் அல்லது மிகவும் அவசியத் தேவை ஏற்பட்டால் அல்லது அமைதிபூர்வமான போராட்டமுறைகள் சுத்தமாகத் தோல்வியைத் தழுவினால்மட்டுமே தொழிலாளி வர்க்க இயக்கங்கள் வன்முறையில் இறங்கியுள்ளன.  இதே உண்மை, [பிரிட்டனிலும் அமெரிக்கவிலும் 19-20 ஆம் நூற்றாண்டுகளில் வாக்குரிமைகோரி நடந்த] 'சஃப்ராகெட்ஸ்' (Suffragettes) இயக்கத்துக்கும் பொருந்தும்.   குருதி சிந்தப்படுவது கூடாது என உழைக்கும் மக்கள் உறுதிகாட்டும் அதே நேரத்தில், அவர்களின் எஜமானர்கள், சாட்டைகளைச் சுழற்றவும், துப்பாக்கிகளை இயக்கவும் முனைப்புகாட்டுவது பட்டவர்த்தனமான முரண்பாடாகும். முதலாளித்துவ அரசுகளின்வசம் இருக்கின்ற சக்திவாய்ந்த ராணுவ வசதிகள் எதுவும் உழைக்கும் மக்களிடம் இருப்பதில்லை. அமைதியாக வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவோர்மீது தனது ஆயுதங்களை ஓர் அடக்குமுறை அரசு கட்டவிழ்த்துவிடுவது உலகில் நாம் சர்வசாதாரணமாகக் காணும் காட்சியாகும். ஜெர்மானிய தத்துவவியலாளரான வால்டர் பெஞ்சமின் கூறுவதைப்போல, புரட்சி என்பது தறிகெட்டு ஓடுகின்ற ரயில்வண்டியல்ல; அது அத்தகைய ஓட்டத்தைத் தடுக்கின்ற அவசரத் தடை (emergency brake) போன்றதாகும். சந்தைப் பொருளாதார சக்திகளால் உந்தித் தள்ளப்படுகிற முதலாளித்துவம்தான் தனது கட்டுப்பாட்டை இழந்து செல்கிறது; வெறியாட்டம் போடுகின்ற இந்த விலங்கை நேர்த்தியாகக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான மக்களின் கூட்டு முயற்சியில் சோஷலிசம்தான் ஈடுபடுகிறது.

புரட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல
   
  பொதுவாக, சோஷலிஸ்ட் புரட்சிகள் வன்முறை வடிவம் எடுப்பதற்குக் காரணம், சொத்துடைய வர்க்கத்தினர் போராட்டத்தில் இறங்காமல் தமது பிடிமானங்களை விட்டுக்கொடுக்கப் பெரும்பாலும் முன்வராததேயாகும். இருப்பினும், இத்தகைய பலாத்காரத்தை மிகக் குறைந்த அளவு கட்டுக்குள் வைத்திருக்கமுடியும் என்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஏனெனில், மார்க்சீயத்தைப் பொறுத்தவரை புரட்சி என்பது ஆட்சிக்கவிழ்ப்பு போன்றதோ அல்லது மனவெறுப்பினால் தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்புவதோ அல்ல. புரட்சிகள், ஆட்சியைக் கீழே இறக்குவதற்கான முயற்சிகள் மட்டுமல்ல. வலதுசாரி ராணுவக் கிளர்ச்சி இதனை செய்யக்கூடும்; ஆனால் மார்க்சீயவாதிகள், புரட்சி என்று கருதுவது இதை அல்ல. முழுமையான அர்த்தத்தில் கூறுவதானால், ஒரு சமூக வர்க்கம், மற்றொரு வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அது இருந்த இடத்தில் தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டும்போதுதான் புரட்சி கைகூடுகிறது.

   
   ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம், தனது பல்வேறு நேசசக்திகளுடன் இணைந்து, பூர்ஷ்வா வர்க்கத்திடமிருந்து அல்லது முதலாளித்துவ மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஆட்சியைக் கைக்கொள்வதுதான் சோஷலிஸ்ட் புரட்சியாகும். முதலாளித்துவ சமுதாயத்தில் இருக்கும் ஆகப்பெரிய வர்க்கமாகத் தொழிலாளி வர்க்கத்தைக் கருதினார் மார்க்ஸ். ஆக, இங்கே நாம் பெரும்பான்மையாக உள்ளவர்களின் செயல்பாடுகளைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறோமேதவிர, கலகக்காரர்களின் சிறியதோர் குழுவின் நடவடிக்கைகளை அல்ல. சோஷலிசம் என்பது மக்களின் சொந்த அரசாங்கம் பற்றிய விஷயமாதலால், உங்கள் சார்பில் யாரும் சோஷலிஸ்ட் புரட்சியை நடத்த இயலாது; சீட்டு விளையாட்டில் எவ்வாறு உங்கள் சார்பில் எவரும் விளையாடி வல்லுநர் ஆகமுடியாதோ அதேபோலத்தான் இதுவும். மக்களின் இத்தகைய சுய-தீர்மானம், “ஒருவர் தனது காதல் கடிதத்தைத் தானே எழுதுவது போன்றது; தனது நாசியை தானே சுத்தப்படுத்திக் கொள்வதையொத்தது. எவ்வளவுதான் மோசமான முறையில் இந்தக் காரியங்களை ஒருவர் செய்தாலும் அதை அவரேதான் செய்ய வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம்”  என்கிறார் ஆங்கில எழுத்தாளர் ஜி.கே.செஸ்டெர்டன் (G.K.Chesterton). என்னைக்காட்டிலும் என்னுடைய உதவியாள் மிக மிக நேர்த்தியாக எனது மூக்கை சுத்தப்படுத்தக்கூடும்; ஆனால், எனது கண்ணியம் கருதி அந்த வேலையை நானே செய்துகொள்வதுதான் சரியாக இருக்கும் அல்லது (நான் இளவரசர் சார்ல்ஸ் ஆக இருக்கும்பட்சத்தில்) குறைந்தபட்சம் அவ்வப்போதாவது அதை நான் செய்துகொள்ள வேண்டும். கட்டுக்கோப்பாகச் செயல்படுகின்ற சதிகாரர்களின் முன்னணிப்படையினரால் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கப்படக் கூடியதல்ல புரட்சி. இதல்லாமல், லெனின் சுட்டிக்காட்டியதைப்போல அது வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு—கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலின் செய்ததுபோன்று—துப்பாக்கிமுனையில் திணிக்கப்படக் கூடியதுமல்ல. பதப்படுத்தப்பட்ட சுறாமீனைக்கொண்டு செய்யப்படும் சிக்கலான கலைப்படைப்பைத் தன் பெயரில் உருவாக்கிடத் தனது உதவியாளர்களை ஏவிவிடுகின்ற கலைஞரைப் போலன்றி (நாவலாசிரியர்களும்கூட சீக்கிரத்தில் இதே காரியத்தைச் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை) நீங்களே இதனை [சோஷலிஸ்ட் புரட்சியை] உருவாக்குவதற்குத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால்தான், ஒருகாலத்தில் ஒப்புநோக்கில் சக்தியற்றவர்களாக இருந்தவர்கள் அனுபவம் பெற்று, நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தன்னம்பிக்கை கொண்டு சமுதாயம் முழுவதையுமே மாற்றியமைப்பதற்கு முன்னோக்கி நடைபோடச் செய்ய இயலும். சோஷலிஸ்ட் புரட்சிகள் ஜன நாயகரீதியிலானவையாக மட்டுமே இருக்கமுடியும். ஆளும் வர்க்கம்தான் ஜன நாயகமற்ற சிறுபான்மையாக உள்ளது. அதீதமாகப் பிரயோகிக்கப்படும் பலாத்காரத்துக்கு எதிரான அரணாக இதுபோன்ற எழுச்சிகளில் ஈடுபடுத்தப்படும் பெருமளவிலான வெகுஜனங்கள் இருப்பது இயல்பே.
இந்த அர்த்தத்தில் நோக்கும் போது, வெற்றிகரமாக அமையக்கூடிய புரட்சிகள், மிகக்குறைவான வன்முறையையே கொண்டிருக்கும்.

   புரட்சிகளுக்கு எதிராக பயங்கரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் தயாராக இருக்கும் கிலிகொண்ட அரசாங்கங்களிடமிருந்து எதிர் விளைவாக ரத்தக் களரி ஏற்பட அந்தப் புரட்சிகள் காரணமாக அமைந்துவிடாது என்று இதற்குப் பொருளல்ல. எவ்வளவுதான் மனவெறுப்பு கொண்டதாகவும், தற்காலிகத்தன்மை கொண்டதாகவும் இருந்தபோதிலும், தம்மால் ஆளப்படுகின்றவர்களின் செயல்முனைப்பற்ற ஓரளவு சம்மதத்தை சார்ந்துதான் சர்வாதிகார அரசுகள்கூட இயங்கவேண்டியுள்ளது. ஆட்சிக்கு எதிரான வெறுப்புணர்வு நிரந்தரமாகக் குடிகொண்டது மட்டுமல்லாமல், ஆட்சியின்மீதான நம்பிக்கை கிஞ்சிற்றும் இல்லாத நிலையில் எவரும் ஒரு நாட்டை தேவையான அளவு சிறப்பாக நிர்வகிக்கமுடியாது. சிலரை சிலகாலம் சிறையில் அடைக்கலாம்; ஆனால், எல்லா மக்களையும் எல்லா காலத்திலும் அவ்வாறு காரக்கிருகத்தில் தள்ளமுடியாது. நீண்ட காலத்திற்கு அத்தகைய அவப்பெயர் அடைந்த அரசுகள் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது சாத்தியமே. எடுத்துக்காட்டாக இன்று பர்மாவில் அல்லது ஜிம்பாப்வேயில் இருக்கும் அரசுகளை நினைத்துப்பாருங்களேன்.
கொடுங்கோலர்களுக்கும் கூட இறுதியில் சுவரில் எழுதப்பட்டிருப்பது என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிடும். எவ்வளவுதான் கொடூரமானதாகவும் கொலைகாரத்தனம் கொண்டதாகவும் தென்னாப்பிரிக்க நிறவெறி தாண்டவமாடியபோதிலும், அது இனிமேலும் நீடிக்கமுடியாது என்பதை இறுதியில் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. போலந்து, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா மற்றும் சோவியத் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிற தேசங்களின் சர்வாதிகாரங்களுக்கு 1980களின் இறுதியில் நிகழ்ந்ததும் இதற்குப் பொருந்தும். பல்லாண்டுகளாக ரத்தம் சிந்தியதற்குப்பின்னர் [வடக்கு அயர்லாந்தின்] உல்ஸ்டர் யூனியனிஸ்டுகள் பலரும்கூட கத்தோலிக்கப் பிரஜைகளை ஒதுக்கிவைப்பது இனிமேலும் சாத்தியமற்றது என்பதை அங்கீகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளதும் உண்மையே.

புரட்சியை நாடுவது ஏன்? 

   இதெல்லாம் இருந்தாலும், நாடாளுமன்ற ஜனநாயகம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றைக் காட்டிலும் மார்க்சியவாதிகள், புரட்சியை நாடுவதற்குக் காரணம் என்ன? அவர்கள் அப்படி செய்வதில்லை அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அனைவருமே அப்படிச் செய்வதில்லை என்பதுதான் இந்தக் கேள்விக்கான விடை. அதிதீவிர இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டுமே அத்தகைய நிலையை மேற்கொள்கின்றனர். ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த சட்டங்களில் ஒன்று மரணதண்டனையை ரத்து செய்வதற்கானதாகும். சமூக சீர்திருத்தவாதியாகவோ அல்லது புரட்சியாளராக இருப்பதென்பது [இங்கிலாந்தில் எதிரும் புதிருமாகக் கால்பந்தாடும்] எவர்டன் அல்லது ஆர்சனல் டீம்களை ஆதரிப்பது போன்ற செயலல்ல. புரட்சியாளர்கள் விழைவது ஏதோ பத்தாம்பசலி சீர்திருத்தத்தையோ அல்லது அரசியல் சர்வரோக சஞ்சீவினியாக சீர்திருத்தவாதத்தையோ அல்ல; மாறாக, நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ மாற்றம் எந்த அளவு வேகமாக ஏற்பட்டதோ அந்த அளவு விரைவாக சோஷலிச மாற்றம் வரவேண்டுமென்பதையே புரட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கே அவர்கள் சீர்திருத்தவாதிகளிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்று பார்க்கையில், எடுத்துக்காட்டாக, முக்கியமானதான புரட்சியிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடும் என்பதால், மருத்துவமனைகளுக்கு மூடுவிழாசெய்வதை எதிர்த்துப் போராடமாட்டோம் என்ற நிலை எடுத்து அவர்கள், கருத்துவேறுபாடு கொள்வதில்லை. உண்மையில் சொல்வதானால், அத்தகைய சீர்திருத்தங்களைத் தொலைநோக்குப் பார்வைகொண்டு, முற்போக்கான புரிதலுடன் அவர்கள் அணுகுகிறார்கள். சீர்திருத்தம் அத்தியாவசியமானதுதான்; ஆனால், தற்போதுள்ள சமூக அமைப்பு அதற்கு இடம் தர மறுக்கிற முட்டுச் சந்தாக இருப்பதை ஒருகட்டத்தில் உணர்வீர்கள்; உற்பத்திமுறையில் உள்ள சமூக உறவுகள் என இதைத்தான் மார்க்சிசம் சொல்கிறது. இதைவிட இன்னும் நளினமும் நுட்பமும் குறைவான வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதாய வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு ஆதிக்க வர்க்கம், அவற்றைத் தருவதற்கு மிகவும் முரண்டுபிடிக்கும். அந்த கட்டத்தில்தான், சீர்திருத்தமா அல்லது புரட்சியா-இவற்றில் எதனைத் தேர்வு செய்வது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால், [ஆங்கிலேய] சமூக வரலாற்றாசிரியரான ஆர்.எச்.டாவ்னி ( R.H.Tawney) குறிப்பிட்டதைப்போன்று வெங்காயத்தை நீங்கள் அடுக்கடுக்காக உரித்துவிடலாம்; ஆனால், புலியின் நகத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுக்கமுடியாது. வெங்காயத்தை உரிப்பது என்று கூறுகையில், சீர்திருத்தம் என்பது மிகவும் எளிதான காரியம் என்பதுபோல் தொனிக்கிறது. ஆனால், இன்று தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட மிதவாத சமுதாயத்தின் மிகவும் போற்றிப் பாதுகாக்கத்தக்க அம்சங்களாக நாம் கருதும்-வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, அனைவருக்கும் கல்வி, பத்திரிகை சுதந்திரம், தொழிற்சங்க உரிமை, இன்னபிற உரிமைகள் உட்பட-பெரும்பாலான சீர்திருத்தங்கள், ஆளும்வர்க்கத்தின் கொடூரமான தாக்குதல்களை எதிர்த்து நடத்தப்பட்ட மக்களின் போராட்டங்களால் வென்றெடுக்கப் பட்டவையாகும்.

   புரட்சியாளர்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்தேயாக வேண்டுமென்பதுமில்லை.அவர்தம் லட்சியங்களை எட்டுவதற்கு அது உதவும் பட்சத்தில், அந்த அளவுக்கு அதனை ஏற்பது நல்லது. இருப்பினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின்பால் மார்க்சீயவாதிகள் தயக்கம் காட்டுவதற்கு அதன் ஜனநாயகத்தன்மை காரணமல்ல; மாறாக, அது போதுமான அளவு ஜனநாயகத்தன்மை கொண்டிருக்கவில்லை என்பதுதான் காரணம். நாடாளுமன்ற அமைப்புகள், தமது அதிகாரத்தை நிரந்தரமாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைப்புகள் என மக்களுக்கு நம்பிக்கையூட்டப்படுகிறது; எனினும், அவற்றின்மீது அவர்கள் மிகச்சொற்பமான கட்டுப்பாடே செலுத்தமுடியும். பொதுவாக, புரட்சி என்பது ஜனநாயகத்துக்கு நேர் எதிரானதென்றும், பெரும்பான்மையினரின் விருப்பத்தை சீர்குலைப்பதற்காகத் தலைமறைவாக இயங்கும் சிறுபான்மை மக்களால் நடத்தப்படுகின்ற தீய நோக்கம்கொண்ட சதிவேலை அது என்றும் கருதப்படுகின்றது. உண்மையில், ஆடவரும் பெண்டிரும் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளான கவுன்சில்கள் மற்றும் அசெம்பிளிகளின் மூலமாக அதிகாரத்தை மேற்கொள்ளுதல் என்பதுதான் தற்போதுள்ள நிலையில், எதைக்காட்டிலும் மிகவும் ஜனநாயக வாய்ப்பாகும். போல்ஷெவிக்குகளைப் பொறுத்தவரை, அவர்தம் அணிகளுக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளை பகிரங்கமாக விவாதித்தல் எனும் போற்றத்தக்க வரலாறு உண்டு; மேலும், தாம் மட்டுமே நாட்டை ஆளுகின்ற ஒரே அரசியல் கட்சியாக இருக்கவேண்டுமெனும் கருத்து அவர்களது மூலத்திட்டத்தில் இல்லை. அதுமட்டுமின்றி, பின்னர் நாம் விவாதிக்கவிருப்பதைப் போன்று, நாடாளுமன்றங்கள் அரசின் அங்கம்; பெரும்பாலும் உழைப்பின்மீதான மூலதனத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதே அதன் பணியாக உள்ளது. இது மார்க்சீயவாதிகளின் கருத்து மட்டுமல்ல. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விமர்சகர் எழுதியதைப் போன்று, ஆங்கிலேய நாடாளுமன்றம்,  “உடைமையைக் கட்டிக் காக்கும் அரணாக” உள்ளது. இறுதியில், தனியுடைமையின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்குப் பொதுமக்களின் நலனை நாடாளுமன்றமோ அல்லது அரசோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்கிறார் மார்க்ஸ்.  [நாம் ஏற்கனவே இந்த நூலில் குறிப்பிட்டவாறு] சிசெரோவும் (Cicero) இந்தக்கருத்தை இதயபூர்வமாக அங்கீகரிக்கிறார்.  சுயநல சக்திகளின் பேரதிகாரத்தை எதிர்கொள்வதற்கு முதலாளித்துவ அமைப்பிலுள்ள எந்த நாடாளுமன்றமும் துணியாது. மிகவும் முற்போக்கான முறையில் தலையிடப்போவதாக அது அச்சுறுத்தும் பட்சத்தில், அதற்கு விரைந்து கல்தா கொடுக்கப்பட்டுவிடும். அப்படியிருக்கையில், இத்தகு விவாத மன்றங்களை, தமது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பல வழிகளில் ஒன்றாகக் கொள்ளாமல், அவற்றை அத்தியாவசியமான கருவியாக சோஷலிஸ்டுகள் கருதுவது வினோதமாகத் தோன்றும்.

மார்க்ஸ் காட்டிய அமைதி வழி                                                                                                
  
ஆயினும், இங்கிலாந்து, ஹாலந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், அமைதிவழிகளின் மூலமாகவே சோஷலிஸ்டுகள் தமது லட்சியங்களை எட்டமுடியுமென்று மார்க்சும் கருதியதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்தையோ சமூக சீர்திருத்தத்தையோ தேவையற்றவை என அவர் நிராகரித்துவிடவில்லை. தொழிலாளிவர்க்கத்தில் பெரும்பாலானோரின் ஆதரவுடன்தான் சோஷலிஸ்டு கட்சி ஆட்சியில் அமரமுடியும் என்றும் அவர் கருதினார். தொழிலாளிவர்க்க அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கங்கள், கலாசார அமைப்புகள் மற்றும் அரசியல் செய்தித்தாள்கள் போன்ற சீர்திருத்தவாத அங்கங்களை அவர் உற்சாகமாக ஆதரித்தார். வாக்குரிமையை விரிவாக்குதல், வேலை நேரத்தைக் குறைத்தல் போன்ற குறிப்பிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். வயதுவந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டால், அதுவே முதலாளித்துவ ஆட்சியைப் படிப்படியாக பலவீனப்படுத்திவிடும் என உண்மையில் ஒருகட்டத்தில் நம்பிக்கைமிகு கருத்துகொண்டிருந்தார் அவர். அவரது சகதோழரான ஃப்ரெடரிக் எங்கெல்சும்கூட அமைதிபூர்வமான சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்; வன்முறையற்ற புரட்சி ஈடேற விழைந்தார்.
சோஷலிஸ்ட் புரட்சியின் பிரச்சனை
   சோஷலிஸ்ட் புரட்சிகளின் பிரச்சனைகளில் ஒன்று என்னவெனில், தாக்குப்பிடித்து நிற்பதற்கு மிகவும் கடினமான இடங்களில் அவை வெடிப்பதற்கான சாத்தியக்கூறு கொண்டிருப்பதேயாகும். போல்ஷெவிக் எழுச்சி விஷயத்தில் இந்த முரண் நிலையைக் குறிப்பிடுகிறார் லெனின். குரூரமான ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்ட, அரைப்பட்டினியால் அவதியுறுகின்ற ஆடவரும் பெண்டிரும், புரட்சியில் ஈடுபடுவதால் தாம் இழப்பதற்கு எதுவுமில்லை என எண்ணக்கூடும். மாறாக, நாம் கண்டவாறு, அவர்கள் எழுச்சிகொள்வதற்குக் காரணமாக அமைந்த பின்தங்கிய சமூக நிலைமைகள் சோஷலிசக் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு மிகவும் சாத்தியமில்லாத இடமாக அமைந்துள்ளன. இத்தகு நிலைமைகளில், ஒரு அரசைத் தூக்கியெறிவது சுலபமாக இருக்கலாம்; ஆனால், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதோர் மாற்று அமைப்பை உருவாக்குவதற்கு வழிவகைசெய்கின்ற வளங்கள் அங்கிருப்பதில்லை. தாம் இருக்கும் நிலையில் திருப்தி கொண்ட மக்கள் புரட்சியை நடத்துவதற்கில்லை. நம்பிக்கை வறண்டுபோன மக்களும் இதைச் செய்யப்போவதில்லை. நிலவும் சூழலில் இன்னும் தமக்கென்று ஏதேனும் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையில் அந்த சூழலை மாற்றுவதற்கு ஆடவரும் பெண்டிரும் மிகமிகத் தயக்கம் காட்டுவார்கள் என்பது சோஷலிஸ்டுகளுக்கான கெட்ட செய்தியாகும்.
   தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பாராமுகத்தை சுட்டிக்காட்டி சிலசமயம் மார்க்சீயவாதிகள் ஏளனத்துக்கு ஆளாக்கப்படுவதுண்டு. தம்மை அலட்சியப்படுத்துகின்ற அரசின் அன்றாட அரசியலை சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது இயல்பே. ஆனால், அவர்களுக்கான மருத்துவமனைகளை மூடிவிடவும், அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளை அயர்லாந்தின் மேற்குப்பகுதிக்கு மாற்றிவிடவும், அவர்களது புறக்கடைத் தோட்டம் இருக்கும் பகுதியில் ஒரு விமான நிலையத்தைக் கட்டவும் அரசு முனையுமேயானால், அவர்கள் கொந்தளித்து செயலில் இறங்கக்கூடும். ஒருவிதத்தில் மக்களிடம் காணப்படும் அலட்சியமானது, முற்றும் முழுவதுமாக பகுத்தறிவுக்கு உகந்ததாகவே இருக்கக்கூடும் என்பதை வலியுறுத்துவது அவசியம். ஒரு சமூக அமைப்பானது தனது பிரஜைகளுக்கு சில குறைந்தபட்ச திருப்தியளிக்கும் காரியங்களை செய்துதரும்வரை, நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் ஆபத்துகளை எதிர்கொண்டு பாய்வதைக் காட்டிலும், அந்த அமைப்பினையே ஒட்டி ஒழுகுவது அவர்களைப் பொறுத்தவரையிலும் நியாயமற்றதாகாது. இத்தகைய பழமைவாதத்தை நாம் ஏளனப்படுத்திவிடமுடியாது.

      எப்படியிருப்பினும், தாக்குப்பிடித்து நிற்பதற்கான முயற்சிகளில் அநேகம்பேர் மூழ்கியிருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய லட்சிய நோக்கங்களில் கவனம் செலுத்துவதில் அவர்கள் நாட்டம் கொள்வதில்லை. சமூக அமைப்பில் ஏற்படும் நிலைகுலைவுகளை ஆரத்தழுவிக்கொள்வதற்குப் பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது நமக்குப் புரியத்தான் செய்கிறது. சோஷலிசம் என்பது நல்ல கருத்துபோன்று தோன்றுகிறது என்பதால் மட்டும் அவர்கள் நிச்சயம் அதனை ஏற்கமாட்டார்கள். தீவிரமான மாற்றத்தினால் ஏற்படுகின்ற கஷ்டநஷ்டங்களைக் காட்டிலும், தற்போதுள்ளதைவிட வறுமையடைதல் என்பது மோசமானது என்பதை உணரும் நிலை தோன்ற ஆரம்பித்ததும், நல்ல எதிர்காலத்திற்குள் பிரவேசித்தல் நியாயமான யோசனை என்பது புலப்படத்தொடங்கும்.
தற்போதுள்ள சமூக அமைப்புக்கு எந்த மாற்றாக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதே எனும் நிலைமையை கிட்டத்தட்ட நெருங்கும்போதுதான் புரட்சிகள் வெடிக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமையில், கிளர்ந்தெழாமல் இருப்பது அறிவுக்கு ஒவ்வாதது.
நூற்றாண்டுகளாக சுயநலத்தின் மேலாதிக்கத்தைக் கவர்ந்திழுத்த முதலாளித்துவம், அதன் ஏவலாளிகள், ஒரு மாற்றத்திற்காக வேறு உபாயத்தைக் கையாள முனைவதில்தான் தமது ஒட்டுமொத்த சுயநலமும் அடங்கியுள்ளது என்பதை அங்கீகரிக்கும்போது குறைபட்டுக்கொள்ள முடியாது.

     சீர்திருத்தமும், சமூக ஜனநாயகமும் நிச்சயம் புரட்சியை விலைகொடுத்து வாங்கிவிடமுடியும். விக்டோரியா காலத்து பிரிட்டனில் இத்தகைய போக்கின் தோற்றங்களை மார்க்ஸ் தானே காணும் காலம் வரை வாழ்ந்திருந்தார்; ஆயினும் அதன் தாக்கம் முழுவதையும் பதிவு செய்யும் அளவுக்கு நீண்டகாலம் அவர் வாழ்ந்திருக்கவில்லை. வர்க்க சமுதாயமொன்று, தனது கைத்தடிகளுக்கு ஓட்டை உடைசல்களையும், மிச்ச மீதங்களையும் தேவையான அளவு அள்ளித் தருமானால், தற்காலிகமாக அது பாதுகாப்பாக இருக்கக்கூடும். அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் (இது எந்தவகையிலும் தவிர்க்க இயலாது என்று சொல்லமுடியாவிட்டாலும்) தோல்விமுகத்தில் இருப்பவர்கள், நிர்வாகத்தைக் கைப்பற்ற எத்தனிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அவர்கள் அப்படி செய்யக்கூடாதா என்ன? ஓட்டை உடைசல்களும், மிச்சமீதங்களும்கூட இல்லாததைக் காட்டிலும் ஏதேனும் மோசமான நிலை இருக்கக்கூடுமோ? இந்தக் கட்டத்தில், ஒரு மாற்று எதிர்கால நிலைக்காகத் துணிந்து இறங்குதல் மிகச்சிறந்த அறிவுபூர்வமான முடிவாகும்அறிவுபூர்வமான நிலை மனிதர்கள் மத்தியில் அடியாழம்வரை செல்லாவிட்டாலும், எதிர்காலத்துக்காகத் தற்போதைய அமைப்பைக் கைகழுவுதல் தமது நலனுக்கு உகந்ததே என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு அது திடமாகவே உள்ளது.
    
 
முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவது யார் என்ற வினாவை எழுப்புபவர்கள், ஒருவகையில் இந்தக் கேள்வி தேவையற்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். அதன் எதிரிகள், லேசாகப்பிடித்துத் தள்ளாமலேயே, தனது சுய முரண்பாடுகளின் விளைவாகப் பொலபொலவென வீழுகின்ற பெருமை முதலாளித்துவத்துக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய நிலையை சந்திக்கக்கூடிய சூழலை அது மிக நெருங்கிவந்தது. ஒரு மாற்று அமைப்பை உருவாக்கித் தருவதற்கான ஸ்தாபனரீதியில் அமைக்கப்பட்ட அரசியல் சக்தி இல்லாத நிலையில், இருக்கின்ற அமைப்பு ஒட்டுமொத்தமாக உள்ளார்ந்த தகர்வுக்கு ஆளாக்கப்படுமேயானால், சோஷலிசம் வராதது மட்டுமல்ல; காட்டுமிராண்டித்தனமான நிலைமை ஏற்படவே அது வழிவகுக்கும். முதலாளித்துவம், சர்வ வல்லமை கொண்ட நெருக்கடியை சந்திக்கின்றபோது, சிலர் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகவும், அனைவருக்கும் நன்மைதருகின்ற புதியதோர் அமைப்பு [முதலாளித்துவத்தின்] இடிபாடுகளிலிருந்து முகிழ்த்தெழவும் வழிவகுக்கின்ற அத்தகு ஸ்தாபன அமைப்பு அவசர அவசியமாகிறது.

தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், விதுரன்





Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP