Tuesday, April 22, 2014

பல்லாண்டு பல்லாண்டு-7:

பல்லாண்டு பல்லாண்டு-7:
சாப்ளினின் ‘லைம் லைட்’...
ஜே.கே. கண்களில் ஈரம்   
பி.ச.குப்புசாமி
        ருமுறை அவர் திருப்பத்தூருக்கு வந்து சென்ற பின்பு, நாங்கள் பலமுறை சென்னைக்குச் சென்று அவரைச் சந்தித்து வரும் படலங்கள் ஆரம்பமாயின.
          அப்பொழுதெல்லாம் நாங்கள் பெரும்பாலும் எழும்பூர் ஹை ரோட்டுக்குச் சென்று, அங்கே ஜெயகாந்தனின் வீட்டுக்கு மூன்று நான்கு கட்டிடங்கள் முன் கூட்டியே இருந்த கோவர்த்தன் சிமெண்ட் ஏஜென்ஸியில் அதிகாலையிலேயே போய் நின்று, தந்த சுத்தி ஸ்நானாதிய காரியங்களைச் செய்து கொள்வோம். அங்கு மேனேஜராயிருந்த, ஜெயகாந்தனையும் நன்று அறிந்த திரு.ஒய்.ஆர்.கே.சர்மா அவர்களால் எங்களுக்கு இத்தகைய பல சௌகரியங்கள் அமைந்தன.
          அதற்கப்புறம் ஜெயகாந்தனைப் பயபக்தியோடு சென்று பார்ப்போம். இந்தப் பயபக்தியில் என்ன ஒரு விசேஷம் என்றால், அது பல்லாண்டுகளுக்குப் பிறகும் இப்போதுதான் முதல் தடவை என்பது போல் அப்படியே ஒரு பதத்தில் இருப்பதுதான்.
          அவர் எங்களை வரவேற்று, அந்த வீட்டின் முன் பகுதிக்கு அழைத்து வருவார். அங்கே சுமார் மூன்றடி அகலத்துக்கு வராந்தா மாதிரி வழி இருக்கும். அதன் இருபுறமும் ஒன்றரை சாண் அகலமுள்ள ஒட்டுத் திண்ணைகள் உண்டு. எதிர்த்திண்ணையில் எங்களை உட்கார வைத்து விட்டு ஒரு திண்ணையில் தான் உட்கார்ந்து கொள்வார்.
          அப்படி ஓர் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் தமிழ் இலக்கிய உலகின் மிக உயரிய கோபுரங்களைக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்.
          வீட்டுக்கு எதிரே, அகலம் குறைந்த அந்தச் சாலையின் மறு புறத்தே காய்கறிக் கூடைக்காரிகளின் வரிசை ஒன்று இருந்தது. அவர்களையெல்லாம் எங்களுக்குக் காட்டினார். அவர்களுக்கிடையே சண்டை மூண்டுவிடும் போது அவர்களின் பாஷை அடைகிற உக்கிரத்தையெல்லாம் அவர் கவனிப்பாராம். அவர்களிடம் இருந்தும் நான் பாஷை கற்றேன்என்றார். அந்தக் காய்கறிக் கூடைக்காரிகள் எல்லாம் கூட ஏதோ அதிசயம் போல் தோன்றுமளவுக்கு அவர் இந்த வாழ்க்கையை எங்களுக்கு விண்டு காட்டினார்.
          சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பங்கஜா லாட்ஜ்என்று பெயர் கொண்டு நிற்கிற ஒரு சிறு ஹோட்டலுக்குப் போய் அங்கே காபி சாப்பிடுவோம்.
          ஒரு காலத்தில் சென்னையில் ஒரு ரூபாய் இருந்தால் என்னென்ன செய்யலாம் என்று பட்டியல் போட்டுச் சொல்லுவார். பிராட்வேயில் ஆரிய பவனில் ஒரு தோசை, வாசற்கடையிலேயே ஒரு பீடா, இரண்டு சிகரெட்டுகள், தீப்பெட்டி, ஏன் ஒரு வாழைப்பழமும் கூட என்று இப்படியெல்லாம் செலவழித்தும் காசு கொஞ்சம் எஞ்சி நிற்குமாம்.
          மறுபடியும் வந்து திண்ணையிலேயே உட்காருவோம். அந்திவேளை என்றால் எக்மோர் ஹைரோடின் முனைக்குப் போய், இன்று உலகப் பல்கலைக் கழக நிறுவனமாக நிற்கும் கட்டிடங்களைக் கட்டுவதற்காகக் கொட்டி வைத்திருக்கும் சுகமான மணல் பீடத்தின் மீது அமர்ந்து பேசுவோம்.
          இதற்கிடையில் 1961 ஆம் ஆண்டு நானும் நண்பர் வையவனும் அரசினர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தோம். அவருக்குக் காட்பாடி, எனக்குப் போளூர்.
          ஆசிரியப் பயிற்சியின் போது ஓர் ஆண்டுக்கு ஒரு மாதம் மெடிக்கல் லீவு தருவார்கள். அப்பொழுதும், காலாண்டு அரையாண்டு விடுமுறை நாட்களிலும் முடிந்த போது நாங்கள் சென்னைக்குச் செல்வதுண்டு.
          காட்பாடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்குத் திடீரென்று ஜெயகாந்தனே ஒரு நாள் வந்து நின்ற விந்தைகளெல்லாம் நிகழ்ந்த காலம் அது. அந்தப் பயிற்சிப் பள்ளியில் வையவனைத் தவிர்த்து இன்னொரு ஆத்மாவும் எங்களுக்காகக் காத்துக் கிடந்தது. அவர்தான், வெள்ளக்குட்டையைச் சேர்ந்தவரும் எங்கள் அரும்பேறுகளில் ஒருவருமான நண்பர் ஆறுமுகம்.
          நான் மட்டும் ஒருநாள் தனியாகச் சென்னை சென்று என் சிறிய பாட்டனார் வீட்டில் தங்கிக் கொண்டு, ஜெயகாந்தனைச் சென்று பார்த்தேன். சென்னையில் அதைவிட வேறு என்ன பெரிய லட்சியம் நமக்கு!
          அன்று ஞாயிற்றுக்கிழமையானதால், காலையில் ஒரு செய்தித்தாளை ஆய்ந்து கண்டுபிடித்து, காஸினோ தியேட்டரில் காலைக்காட்சியாகத் திரையிடப்பட்ட சார்லி சாப்ளினின் லைம் லைட்படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். படத்தின் இடையே, சார்லி சாப்ளின் ஒரு ரோஜாப்பூவை எடுத்துப் பார்த்து அதை இரக்கமில்லாமல் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிற காட்சியின் போது, என்புறம் மெள்ளச் சாய்ந்து, “அந்த ரோஜாப்பூ கலையின் உருவகம்”! என்றார்.
          இன்னும் கொஞ்சம் பொறுத்து, படத்தை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று பார்க்கும் ஆவலில் நான் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்த போது ஒரு முறை, அந்தத் திரையின் மெல்லிய இருளில் அவர் கண்களின் ஈரம் மட்டும் பளபளப்பாய்த் தெரிந்தது.
          அப்புறம் ஒரு முறை பிராட்வே பக்கம் போன போது, “தாம்பத்யம்கதையின் களன் ஆகிய அந்த லோன்ஸ்குயர் பார்க்கைக் காட்டினார்.
          நான் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே கல்கியில் என்னுடைய பேசாத உறவுஎன்று ஒரு கதை பிரசுரமானது. அதன் பிறகு ஒரு முறை நான் ஜெயகாந்தனைப் பார்க்கச் சென்ற போது, திரைக்குப் பின்னால் படுத்திருந்த அவர் அப்படியே என்னைக்  கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டார். அவ்வளவு சௌஜன்யமாகி விட்டது எங்கள் நட்பு.
          படுத்திருந்தவாறே அவர், “உங்க பேசாத உறவு கதை நல்லா இருந்ததுஎன்று சொன்னார். நான் என்னமோ உடம்பு கூசுவது போல் நெளிந்தேன். ஆனா உங்ககிட்ட தாகூரின் பாதிப்பு அதிகமா இருக்குது. யார் பாதிப்பும் நம்ம கிட்ட இருக்கக் கூடாது. நம்மது தனியா இருக்கணும்!” என்றும் அவர் சொன்னார்.
          அவர் சொன்னதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். உண்மையில் நான் பாரதிக்கு முன்பாகவே தாகூரில்தான் அதிகம் தோய்ந்திருந்தேன். பாரதியிடம் வராமலேயே தாகூரிடம் போவது என்பது ஒரு தமிழ் இலக்கிய மாணாக்கன் செய்யும் பெரும்பிழை அல்லவா? எப்படியோ, வெகு சீக்கிரமாகவே பாரதியின் சொரூபம் எனக்குத் தெரிந்து விட்டது. அந்த அகண்ட ஜோதியில் ஐக்கியமான போது, தாகூரை ரசிக்கிற பழக்கம் கொஞ்சங் கொஞ்சமாக மங்கிப் போயிற்று. ஆனால் பாரதியார் மொழி பெயர்த்த தாகூர் சிறுகதைகளைப் படித்தால் இருவரையும் பிடித்துப் போகும்.
          1961 - 1963 ஆகிய இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் கழிந்தன. நாங்கள் சந்திப்பதற்கு மாதக் கணக்கில் இடைவெளி விழும் காலமாக இருந்தது அது.
          சந்தித்தபோது நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்போம்.
          விக்டோரியா ஹாலில் இருந்த ஓவியங்களை ஒரு நாள் பார்வையிட்டோம். ரவிவர்மாவின் சகுந்தலைஓவியம் அவருக்கும் பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.
          பழைய கடலையும் அவ்வப்பொழுது சென்று குசலம் விசாரிப்பதுண்டு.
          ஜெயகாந்தன் ஒவ்வொரு கதையாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பத்திரிகையும் அவரிடம் விரும்பிக் கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. தமிழ் இலக்கியக் கடற்கரையில் ஒவ்வொரு கதையும் ஒரு பெரிய அலைபோல் வந்து மோதின.
          நாங்கள் எங்கள் ஆசிரியப் பயிற்சிக் காலத்தை முடித்துவிட்டு, உத்தியோகம் பார்க்கும் காலத்தில் புகுந்தோம்!

Read more...

பல்லாண்டு பல்லாண்டு-6:

-->
பல்லாண்டு பல்லாண்டு-6:
பி.சி.ஜோஷியின் இளம் தோழர்
           பி.ச.குப்புசாமி
 
  னால், அவரை மறுபடியும் காண்பதற்கு நாங்கள் சென்னை செல்ல வேண்டியிருக்கவில்லை. கிட்டத்தட்ட  ஒரு  மாதத்துக்குள்ளாகவே அவர் திருப்பத்தூர் மண்ணில் மறுபடியும் கால்பதித்தார். ஹிந்தி டியூஷன் வகுப்பில் இருந்த நண்பர் வையவன் முன் வந்து திடீரென்று தோன்றினார்.
          ஒரு திரைக்கதையைச் செப்பனிட்டுத் தருவதற்காகப் பெங்களூர் சென்ற அவர், சட்டென்று நினைத்துக் கொண்டு, அங்கிருந்து சென்னை திரும்பும் வழியில், இடையிலே ஜோலார்ப்பேட்டை ஜங்ஷனில் இறங்கித் திருப்பத்தூர் வந்துவிட்டார்.
          எங்கள் எல்லாருக்கும் எதிர்பாரா ஆச்சரியமும் ஈடு இணையற்ற சந்தோஷமும்!
          இந்தமுறை, ஒருநாள் திருப்பத்தூரில் இருந்துவிட்டு, “திருவண்ணாமலை போகலாமா? நான் அங்கிருந்து சென்னைக்குப் போய்விடலாம்!என்று தன் யோசனையைத் தெரிவித்தார். அவருடன் செல்ல, நண்பர் வையவனும்,  ‘வாசீவே’ என்று அழைக்கப்படும் நண்பர் வா.சீ.வேங்கடாசலமும் தயாராயினர்.
          என்ன காரணத்தினாலோ - வேறென்ன? காசில்லாத காரணம்தான்! ஒரு பையனாக இருந்த நான் அப்பொழுது ஒரு பயணத்துக்குச் செலவு செய்யும் நிலையில் இல்லாமல் இருந்தேன் - அந்தத் திருவண்ணாமலை நோக்கிய பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.
          நண்பர்கள் திரும்பி வந்து, வெகு ரசமான சம்பவங்களையெல்லாம் சொன்னார்கள்.
          அவர்கள் திருவண்ணாமலைக்கு மட்டும் போகவில்லை. சாத்தனூர் அணைக்கும் போயிருக்கிறார்கள். அணைகள் எல்லாம் நிரம்பி நிற்கும் காலமல்லவா அது! அங்கே கொட்டும் மழையில் அவர்கள் நனைந்த கும்மாளத்தையெல்லாம் கேட்டபோது எனக்கு ஏக்கமாகப் போயிற்று. சினிமாவில் யாரோ கேட்டார்கள் என்பதற்காக எப்பொழுதோ ஜெயகாந்தன் எழுதிய பாடலையும் அங்கே பாடிக்காட்டியிருக்கிறார். சந்திரபாபு பாடுவதற்கேற்ற பாடல் அது. பொண்ணாட்டம் பொன்னுமேனி ... கன்னம் ரெண்டும் செம்மாங்கனி!என்பது அதன் முதல்வரி. கையைக் கையைத் தட்டிக் கொண்டு துள்ளல் இசையில் அவர் பாடியதை நண்பர்கள் அப்படியே அபிநயித்துக் காட்டினர். அவர்கள் தங்கள் பேச்சுவாக்கில் பகிர்ந்து கொண்டவற்றைக் கொஞ்சங் கொஞ்சமாக ஞாபகம் செய்து செய்து கூறினர்.
          அப்பொழுதெல்லாம் நண்பர் வையவன்தான் ஜெயகாந்தனிடம் அதிகம் பேச்சுக் கொடுப்பார்! வருவோர் போவோரிடம் நிகழும் கேள்வி பதில்களைக் கடந்த ஆழ்ந்த தருணத்தில் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றிச் சொல்லுவார்! குப்பா ... அது ரொம்ப டீப் அப்பா ... ஆழமா, ஆழமா, ரொம்ப ஆழமா போயிடுச்சி அந்தப் பேச்சி!என்பார். நான் கொஞ்சம் மிரண்டுதான் போவேன். அப்போதெல்லாம் நான் வாயை அடக்கிக்கொண்டு, சும்மா இருந்த காரணம் அதுதான்.
          சாத்தனூரிலும் அத்தகைய சம்பாஷணைகள் நிகழ்ந்ததாக வையவன் கூறினார். அப்புறம் திருவண்ணாமலை விஜயம். அங்கே தங்குவதற்காக ஒரு சத்திரத்துக்குச் சென்றபோது, அவர்கள் எதிர்பாராத ராஜமரியாதையைச் சத்திரத்துக் காப்பாளர் தந்து தக்க உதவிகளைச்செய்திருக்கிறார்.
          திருவண்ணாமலையில் ஜாதிக்கொரு சத்திரம் இருக்கும். அவற்றின் காலவரலாறு கேட்கப்போனால் கணக்கற்ற கதைகள் இருக்கும். நண்பர்கள் தங்கச் சென்ற சத்திரம், பேச்சுவழக்கில் எங்களிடமிருந்து பெரிதும் மாறுபட்ட, தமிழகத் தென்கோடியில் உள்ளதொரு ஜாதிக்குச் சொந்தம் போலும். ஜெயகாந்தன், அதே பேச்சுவழக்கில், அந்த ஜாதிக்காரர் போலவே, சத்திரத்துக் காப்பாளரிடம் உரையாடிச் சமாளித்த ரஸமான அனுவத்தை நண்பர்கள் அடிக்கடி நினைவு கூர்ந்து எனது ஞாபகத்தில் பதித்தனர்.
          திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ஜெயகாந்தனை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு நண்பர்கள் திரும்பினர்.
          பெங்களூரிலிருந்து சென்னை செல்ல எத்தகையை மார்க்கம் பாருங்கள்! ஜோலார்ப்பேட்டையில் இறங்கி, திருப்பத்தூர், திருவண்ணாமலை வழியாகச் சுற்றிக்கொண்டு சென்னைக்கு! முன்கூட்டியே திட்டமிடப்படாமல் தற்செயலாக அமையும் சுற்றுவழிப் பயணங்கள் சுவை மிகப் பயப்பவைதான்!
          இந்தமுறை அந்தப் பயணத்தில் நான் சேர்ந்து கொள்ளாமல் போனது பற்றிச் சில காலம் வரை நான் வருந்தவே செய்தேன்!
          அதற்கப்புறம், காலவெள்ளம் பல அற்புதமான அனுபவங்களுக்கெல்லாம் எங்களைக் கணக்கின்றி இழுத்துச் சென்ற காரணத்தால் அந்த வருத்தம் மெல்ல மெல்லக் காலாவதியாகிவிட்டது.
          அடுத்தமுறை அவரை எப்பொழுது சந்தித்தோம்?
          முறைகள் மறந்து போகிற ஒரு கட்டத்துக்கு வந்துவிட்டோம். காலவரிசைக் கிரமத்தையெல்லாம்  இனிமேல் கடைப்பிடிக்க முடியாது. மனித ஞாபகம் என்கிற மாபெரும் விருட்சத்தில் ஏறி, அக்கிளைக்கும் இக்கிளைக்கும் மாறி மாறிச் சென்று, கொத்துக் கொத்துக்களாகப் பூப்பறிக்க வேண்டியதுதான்.
          பல சம்பவங்கள் தங்கள் தேதிகளை இழந்துவிட்டன. வரிசை முறைகளும் முன்னர் பின்னராய், பின்னர் முன்னராய்ப் பின்னிப்பின்னி வரலாம்.
          “வாணியம்பாடியிலே பாலாத்துல வெள்ளம் வந்தப்போ இது நடந்துச்சி!என்று எங்கள் பக்கம் எல்லாம் ஒரு கால அடையாளம் காட்டுவார்கள்.
          ஜெயகாந்தனுடன் எங்களுடைய நெடிய நட்புறவில் அப்படியெல்லாம் கால அடையாளம் காட்டுவதற்கு ஏகப்பட்ட சம்பவங்கள் வாய்த்திருக்கிற காரணத்தால், நான் இனிமேல் குறிப்பிடும் விஷயங்கள் எல்லாம் எப்பொழுது நடந்ததோ என்று நாம் அதிகம் குழம்பிக் கொள்ள வேண்டாம். அவற்றைச் சற்றேறக் குறைய கண்டுபிடித்துவிடலாம்.
          மூன்றாவது நான்காவது என்று எங்கள் சந்திப்புகள் முன்னேறிக்கொண்டிருந்தன.
          எங்கள் நட்புறவில் அவர் காட்டிய ஈடுபாட்டினை, கலைமகள் எங்களுக்குத் தந்த வரப்பிரசாதமாகக் கருதிக்கொண்டோம்.
          ஏனெனில், அவர் அப்பொழுதே ஒரு நட்சத்திரம்! நாங்கள் அனைவருமே சிறு பொறிகள்! நமக்கு இவர் கவர்ச்சியாக இருப்பதில்வியப்பில்லை. அனால், நாங்கள் எதனால் அவரைக் கவர்ந்தோம்?
          பல சந்திப்புகளில் நன்கு பழகிய பிறகு அவரிடமே ஒருநாள் இதைக் கேட்டோம்! எங்களிடம் நீங்கள் கண்ட சிறப்பு என்ன?” என்பதுபோல் இருந்தது அந்தக் கேள்வி.
          அவர் அதற்கு வெகு இயல்பாகவும் சீக்கிரமாகவும்பதிலளித்தார்.
          “இதுக்கு முன்னாலே எனக்கு நண்பர்களாயிருந்தவங்க எல்லாம் என்னைவிடப் பெரியவங்கப்பா! என்னைவிடச் சின்னவயதிலே எனக்குக் கிடைத்த முதல் நண்பர்கள் நீங்கள்தான்!
          உங்களுக்கு வள்ளலாரிடம் பரிச்சயமிருந்தால், இப்பொழுது சட்டென்று அவருடைய, “சின்ன வயதில் என்னையாண்ட திறத்தை நினைக்குதே!என்கிற வரி கவனம் வர வேண்டும்.
          அப்புறம், தான் சொன்ன பதிலை அவர் விளக்கினார். பி.சி,ஜோஷியும், ஜீவானந்தமும், எஸ்.ராமகிருஷ்ணனும், பாலதண்டாயுதமும், ஆர்.கே.கண்ணனும் - ஏன், தமிழ் ஒளியும் கூட அவரை விட வயதில் மூத்தவர்கள். பி.சி.ஜோஷி, ஜனசக்தி அலுவலகம் வரும்போது, அங்கே ஆபிஸ் பையனாயிருந்த ஜெயகாந்தனின் தோள் மீது கைபோட்டு, “ஹலோ ... யங் காம்ரேட்!...என்பாராம்! தோழர் ஜீவானந்தத்தைத் தான் உரிமையோடு கலாய்த்ததையெல்லாம் ஜெயகாந்தன் ரஸமாகச் சொல்வார்.
          எந்த நட்புக்கும் காரணமாக எங்களுக்கு யாரும் இதுவரை சொல்லியிராத உதாரணம் அது!
          அவரது அந்தக் கூற்றை என்று நான் உள்வாங்கினேனோ, அப்போதிலிருந்து அது என்னுள் நன்கு ஊறித் தங்கியிருந்து, வாழ்நாள் பூராவும் நான் என் நட்புவட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் பெரிதும் உதவி செய்து வருகிறது. சமகாலத்து நண்பர்களும் உண்டுதான் என்றாலும், என்னைச் சுற்றி எப்பொழுதும் இளைஞர்களே இயல்பாக வந்து சேருகிறார்கள். அவர்களிடம் நான் சொல்வதுண்டு.
          “நானே ஒரு கிழவன். கிழவர்களையே கூட வைத்துக் கொண்டிருந்தால் கிழத்தனம் மேலும் கூடிவிடும். உங்களை மாதிரி இளைஞர்களின் சகவாசமே எனக்கு மிகுந்திருப்பதால், மழை பெய்தால் சுவரில் ஈரஓதம் ஏறுவது போல், முதுமையிலும் என்னால் இளமையான மனோபாவம் கொள்ளமுடிகிறது!...
          இவையெல்லாம், குருவருள் என்று கொண்டாட வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். அவர் நமக்குக் கொடுத்தார். நாம் அதைப்பிறர்க்குக் கொடுக்கிறோம்.
          ஆரம்பத்திலேயே அவருடைய தன்னம்பிக்கையும், மனோதிடமும், எல்லாவற்றுக்கும் மேலே புருஷலட்சணமான அந்த தைரியமும் எங்களுக்குத் தரிசனமாகிவிட்டன.
          “ஒருமுறை, திருப்பத்தூரில் தான், நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர், பணம் என்னய்யா பணம்?” என்று அதை அலட்சியப்படுத்திப் பேசி, ஒரு காலை நீட்டி இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஒதுக்குவது போல் காற்றில் உதைத்துக் காட்டி, “இது கார் வாங்க ... இது பங்களா வாங்க... என்று இந்த மாதிரி ஒதுக்க என்னால் முடியும்!என்றார்.
          ஆனந்த விகடன் பத்திரிகையில் அவரை சினிமாவுக்குக் கதை கொடுக்கிற  எண்ணம் உண்டா?” என்று கேட்டதற்கு, “கொடுக்கிற உத்தேசமில்லை. சினிமாவே எடுக்கிற உத்தேசம் உண்டு!என்று பதிலளித்தார்.
          யாருமே இதைக் கொஞ்சம் மிகை என்று கருதிக் கொள்ளலாம். ஆனால், திருப்பத்தூரில் சொல்லி இரண்டு மூன்று வருஷங்களில் கார் வாங்கி விட்டார். ஆனந்த விகடனில் சொல்லி ஒரு வருடத்துக்கெல்லாம் உன்னைப் போல் ஒருவன்”  சினிமா எடுத்துவிட்டார்.
          பணமோ, சமூகத்தில ஓர் உயர்ந்த இருக்கையோ, விருதோ, புகழோ - இவையெல்லாம் எட்ட முடியாத விஷயங்கள் இல்லை என்கிற தெளிவான உறுதியும், இவற்றுக்காக நான் அலையமாட்டேன் என்கிற பெருமிதமும் அவரை அப்பொழுதிருந்தே அணி செய்து வருகின்றன.
          திருப்பத்தூரில் நாங்கள் நடத்திவந்த இளங்கோ இலக்கியமன்றத்தில் ஜெயகாந்தன் வந்து பேசிவிட்டுச் சென்ற பிறகு, நாங்கள் வேறு யாரையும் பேச அழைக்கிற பழக்கத்தைக் கைவிட்டுவிட்டோம்.
          அவர் திருப்பத்தூர் வருகிறபோது, அவரை வைத்து மட்டும் அவ்வப்பொழுது கூட்டம் போட்டு விடுவோம்.
          ”மெல்லத் தமிழ் இனிச்சாகும்!”, “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!”, ”புதிய ரசனை!”, ”இறப்பின்றித் துலங்குவாயே!”என்பன அந்தக் கூட்டங்களின்தலைப்புகளில் சிலவாகும்!
          “இறப்பின்றித் துலங்குவாயே!”என்பது இந்திராவைப்பற்றியது.

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP