Friday, July 25, 2014

“நான் ஒருபோதும் வறட்டுக் கம்யூனிஸ்டாக இருந்ததில்லை!!”

“மனிதாபிமானமே என் எழுத்துக்களின் அடிநாதம்!” 
கே.ஏ.அப்பாஸ் பேட்டி!

னது மரணத்துக்குப் பின்னர் என்னைச் சந்திக்க விரும்பினால், நான் எழுதியிருக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படியுங்கள்; அவ்வாறில்லையெனில், நான் தயாரித்த அல்லது வசனமெழுதிய திரைப்படங்களில் ஒன்றைப் பாருங்கள்; பழுப்பேறிய செய்தித்தாள்கள் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாதெனில், நூலகத்துக்குச் சென்று நான் எழுதிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கட்டுரைகளை வாசியுங்கள். அங்கே நான் உங்களுடன் இருப்பேன்”—இவ்வாறு தனது உயிலில் எழுதிவைத்திருக்கிறார் குவாஜா அகமது அப்பாஸ்.
  இன்றைய ஹரியானா மாநிலத்தின் பானிப்பட்டில், 1914-ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் பிறந்த அப்பாஸ், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பல பாத்திரங்களை வகித்தும் புகழேணியின் உச்சிக்குச் சென்றவர்.
  தனது ஐம்பதாண்டுகாலப் பொதுவாழ்வில், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் அவலம் போக்கவும், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் எழுதுகோல் ஏந்திப் போராடியவர் அவர். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் சோவியத் யூனியனின் நண்பராகவும் இறுதிவரை வாழ்ந்தவர் அப்பாஸ்.
  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பில்லா தலைவர் தோழர் பி.சி.ஜோஷியால் ஆகர்ஷிக்கப்பட்டு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், இந்திய மக்கள் நாடக மன்றத்திலும் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். செக்டேரியன் வறட்டுவாதத்துக்கு அவர் என்றும் பணிந்தாரில்லை.
  மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, தனது பாட்டனாரும் உருதுக் கவிஞருமான அல்டாஃப் ஹுசைன் ஹாலி ஆகியோர் அவரது ஆதர்ச புருஷர்கள்.
 1970-களின் இறுதியில்,  ‘இந்தியன் லிட்டரரி ரெவ்யூ’வுக்கு அவர் அளித்த பேட்டி, எழுத்துலகு, திரையுலகு உட்பட அவரது  பல்துறை ஞானத்தின்பால் ஒளிபாய்ச்சுகிறது.
  பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. தமிழாக்கம்: விதுரன்.
கேள்வி: திரு அப்பாஸ் அவர்களே, 1937-ல் தங்களுடைய முதல் நூல் பிரசுரமானது. அது தொடங்கி எண்ணற்ற படைப்புகளை நல்கிய மகத்தான எழுத்தாளர் நீங்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டுக்கும் மேலாகத் திரைப்படங்களையும் உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால், பத்திரிகையாளர் என்பதுதான் உங்கள் தொழில் என்று எங்கேயோ சொல்லியிருக்கிறீர்கள். பலதுறைகளிலும் தங்களுக்குள்ள ஆர்வத்தை ஒருங்கிணைத்தது எங்ஙனம்?
கே.ஏ.அப்பாஸ்: எடுத்த எடுப்பிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். 1937-க்கு முன்னதாகவே நான் எழுத்தாளனாகிவிட்டேன். ஆரம்ப காலத்தில், கையெழுத்துப் பிரதிகளில் எழுதத் தொடங்கிய நான், அலிகாரில், பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோதே, ‘அலிகார் ஒப்பீனியன்’ (Aligarh Opinion) எனும் பத்திரிகையைப் பதிப்பிக்கலானேன். என்னை நான் பத்திரிகையாளன் என்று வர்ணித்துக்கொள்வதில்லை; கருத்துப்பகிர்வாளன் (communicator) என்றுதான் சொல்வேன். பிறருடன் எனது கருத்துக்களை, உணர்வுகளை, சித்தாந்தங்களைப் பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன். எனது எழுத்துக்களாக இருந்தாலும், திரைப்படம் அல்லது நாடக உலகாக இருந்தாலும் இதுவே எனது அடிப்படை ஆர்வம். எனவே, ‘பிளிட்ஸ்’ பத்திரிகைக்கு எழுதுவதாகட்டும் அல்லது திரைக்கதை தீட்டுவதாகட்டும்; கதை எழுதுவதாகட்டும், நாவல்கள் படைப்பதாக அல்லது அரசியல் நூல் எழுதுவதாகட்டும்; அவற்றுக்கிடையே எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. அவை அனைத்துமே கருத்துப்பகிர்வின் அங்கங்கள்.
கேள்வி: அப்படியானால், பத்திரிகைத் துறை என்பது எழுத்தாளனுக்கு ஒரு மதிப்புமிகு பயிற்சிக்களமாக இருப்பினும், படைப்பிலக்கியத்திற்குத் தேவையான உயிர்ச்சாற்றை அது உறிஞ்சுவதற்கு முன்னதாகவே அதிலிருந்து அவன் வெளிவந்துவிடவேண்டும் என்கிற டிக்கன்ஸ், ஸ்டெயின்பெக், மார்க் ட்வெய்ன் போன்ற எழுத்தாளர்களின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
அப்பாஸ்: அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், நல்ல ‘ஜர்னலிசம்’ (இதழியல்), இலக்கியமாகிறது; மோசமான இலக்கியமோ ‘ஜர்னலிசம்’ ஆகிவிடுகிறது. நான் வியந்துபோற்றும் எழுத்தாளர்களில் பலர் பத்திரிகையாளர்களாகவே இருந்திருந்திருக்கிறார்கள். தமது சிருஷ்டிபூர்வமான எழுத்தாற்றலுக்கான உத்வேகத்தை ஜர்னலிசத்திலிருந்து பெற்ற அவர்கள், தொடர்ந்து நல்ல எழுத்தாளர்களாகவும் விளங்கினார்கள் என்பது நிச்சயம்.
கேள்வி: படித்தலோடு இணைந்தது எழுத்து. யார் உங்களைக் கவர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்கள்?
அப்பாஸ்: முதலில் நான் படித்தது ரதன் நாத் சர்ஷாரின் எழுத்துக்களைத்தான். எனது போர்வைக்குள் ஒரு விளக்கை வைத்துக்கொண்டு, எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல், அவரது ‘ஃபசானா-இ-ஆசாத்’ எனும் நாவலைப் படித்தேன். நான் படித்த முதல் உருது படைப்புக்கள், பிரேம்சந்தின் கைவண்ணத்தில் உருவானவை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்களின் உருது நூல்களைத்தான் முதலில் படித்தேன்; பிறகுதான், முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தேன். நான், பி.ஏ. படித்தபோதே டிக்கன்ஸ், ஹார்டி ஆகியோர் எழுதிய அனைத்தையும், ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களையும், கால்ஸ்வொர்தியின் ஒட்டுமொத்த நாடகங்களையும் படித்துமுடித்துவிட்டேன். கார்க்கியின் அனைத்து நாவல்களையும், டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’ மற்றும் அவர் எழுதிய கதைகளையும் படித்துவிட்டேன்.
அமெரிக்க எழுத்தாளர்களில், நான் மிகுந்த ஆதர்சம் பெற்றது அப்டான் சிங்க்ளேரிடம்தான். அந்த எழுத்தாளரையே நான் மனப்பூர்வமாக முன்மாதிரியாகக் கொண்டேன். லட்சிய வேட்கைகொண்ட அந்த எழுத்தாளரும், ஜர்னலிசத்திலிருந்து உத்வேகம் பெற்றவர். 1938-ல், லாஸ் ஏஞ்சல்சில் அவரை நான் சந்தித்தேன்; கலிஃபோர்னியாவுக்கு நான் சென்றதன் நோக்கம், ஹாலிவுட்டைக் காண்பதன்று; அவரைச் சந்திப்பதே!
சிங்க்ளேர், தனது படைப்புக்களைத் தானே பதிப்பித்தார்; அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்தார்; கலிஃபோர்னியாவின் கவர்னர் பொறுப்புக்கும் போட்டியிட்டார். சமாதான இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் ஈடுபாடுகொண்டிருந்தார். ‘லானி பட்’ (Lanny Budd) எனும் தலைப்பில் அவர் படைத்த நாவல் வரிசை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூஸ்வெல்ட், சர்ச்சில், ஸ்டாலின் போன்ற நிஜ பாத்திரங்கள் உலாவந்த அந்த நாவல்களில், எதார்த்தத்தையும், கற்பனையையும் நுட்பமாக, ஆனால், வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இணைத்தார். அதுவே எனது ‘இன்குலாப்’ (Inquilab) நாவலுக்கு முன்மாதிரியாக அமைந்தது; அதில், அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் எனக் கற்பனைப் பாத்திரங்களையும், ஜவகர்லால் நேரு, காந்திஜி, முகமது அலி, ஷவுகத் அலி எனும் நிஜப் பாத்திரங்களையும் நான் இணைத்திருந்தேன்.
கேள்வி: இந்தியாவில், 1936-ல் உதயமான முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் தங்கள்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதா? எழுத்தாளராக நீங்கள் உருவாவதற்கு உறுதுணையாக நின்றதா?
அப்பாஸ்: ஆமாம்; அது உண்மைதான். முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் மூலம்தான் இடதுசாரி இயக்கத்தின்பாலும், கம்யூனிசம், மார்க்சியம் ஆகியவற்றின்பாலும் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது என்பேன். நான் ஒருபோதும் கரடுதட்டிப்போன கம்யூனிஸ்டாக இருந்ததில்லை; கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சோஷலிஸ்ட் கட்சி அல்லது சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவோகூட ஆனதில்லை; இருப்பினும்,
ஆரம்பத்திலிருந்தே அவை அனைத்துடனும் வேறுபாடு கொண்டிருந்த நான், என்மீது எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததில்லை. ஆனால், முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் என்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை; ஏனெனில், நான் எழுதியவற்றை, முற்போக்கு எழுத்தாளர்களின் கூட்டத்தில்தான் படித்துக்காட்டுவேன்.
கேள்வி: முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் நீங்கள் இருந்திருக்கிறீகளல்லவா?
அப்பாஸ்: ஆம்; அந்த சங்கத்தின் செயலாளராகவும் இருந்திருக்கிறேன்.
கேள்வி: கடந்த காலத்தை இப்போது திரும்பிப் பார்க்கையில், 1940-களில் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின்பால் கம்யூனிஸ்ட் கட்சி செலுத்திய  ஆதிக்கமிகுதியின் விளைவாக, முற்போக்கு எழுத்தாளர் மத்தியில், தாம் சொல்வதே சரி என்கிற போக்கும், வறட்டுவாதமும் மேலோங்கி நின்றதாகத் தோன்றுகிறது. குறிப்பாக, 1947-ல் வெடித்த மதக்கலவரங்கள் போன்ற தேசியப் பிரச்சனைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நிலை இந்தப் போக்குகளைத் தெளிவாகக் காட்டின. ஓர் எழுத்தாளன் வகிக்கவேண்டிய பாத்திரத்தின்பால் இத்தகைய வறட்டு அரசியலைத் திணித்தல், அவன் கொண்டிருக்கும்  கொள்கை நெறிகளைத் தோற்கடிப்பதாகாதா?             
அப்பாஸ்: நீங்கள் சொல்வதில் உடன்படுகிறேன்; ஆனால், 1947 வகுப்புக் கலவரங்கள் விஷயத்தில் அவர்கள் மேற்கொண்ட நிலை தவறென்று நான் நினைக்கவில்லை. மதக்கலவரங்கள் வெடித்த நிலையில், இந்திய மக்களிடையே, மனிதாபிமானத்தையும், விவேகத்தையும் மீண்டும் ஏற்படுத்த, முற்போக்கு எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்கள்.  ‘ஹம் வஷி ஹம்’ எனும் கிஷன் சந்தரின் சிறுகதைத் தொகுப்பும், குறிப்பிட்டதோர் அளவுக்கு ‘மெய்ன் கவுன் ஹன்’ மற்றும் ‘சர்தார்ஜி’ எனும் எனது சிறுகதைகளும் அந்த காலகட்டத்தில் மக்களிடம் நிதானத்தை ஏற்படுத்த சிறிதளவு உதவின என்றே நினைக்கிறேன்.
 ஆக, மதக்கலவரங்கள் விஷயத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் மேற்கொண்ட நிலை தவறல்ல; கம்யூனிஸ்டுகளிடம் அவர்கள் மட்டுமீறிய பணிவு காட்டியதுதான் தவறு. பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கிஷன் சந்தரும், சர்தார் ஜாஃப்ரியும் நானும் ஆசிரியர் குழுவாக இருந்து பதிக்கப்பட்ட ‘நயா ஆதப்’ (Naya Adab) எனும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சஞ்சிகையிலிருந்து நான் விலக நேர்ந்தது. ராமானந்த சாகரின், ‘அவுர் இன்சான் மர் கயா’ (Aur Insaan Mar Gaya) எனும் நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை மீதுதான் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அந்த அணிந்துரை வெளியானபோது, அதில், இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு, சாத்தான் உறையும் இடம் எதுவெனக் காண முற்படவேண்டும்; சாத்தான் ஒளிந்திருப்பது அவர்களின் நெஞ்சக்குகையில்தான் என்று எழுதியிருந்த காரணத்தால், நான் ’மார்க்சிய விரோதி’ என்றும், ’மக்கள் விரோதி’ என்றும் சாடப்பட்டு, கூக்குரல்கள் எழுப்பப்பட்டன. 
கேள்வி: முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவோ, ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவோ, எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்கவோ தயாராக இருக்கவில்லை என்று கொள்ளலாமா?
அப்பாஸ்: அப்படி இல்லை; நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் பழிசொல்லவில்லை. அனைத்து மக்களும் தவறிழத்ததை சுட்டிக்காட்டினேன்; அதனால்தான் அவர்கள் என்னை மக்களுக்கு எதிராக நின்றேன் என்றார்கள்.
கேள்வி: முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள் அல்லவா?
அப்பாஸ்: அதுவா, இதுகுறித்துப் பலவாறான செய்திகள் புழங்கின. நான் வெளியேற்றப்பட்டேன் என்றனர் சிலர்; வெளியேற்றப்படவில்லை என்றனர் வேறு சிலர். ஒருவேளை முறையாக நான் வெளியேற்றப்படாமல் இருந்திருக்கக்கூடும்!
கேள்வி: ஒருவேளை அதன் செயல்பாடுகளே முடங்கிப்போகும் நிலைக்கு வந்ததோ?
அப்பாஸ்: அது முடங்கித்தான் போகவேண்டியதாயிற்று; ஏனெனில், நான்தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தேன். அந்தப் பத்திரிகை நிர்வாகத்திலிருந்து என் பெயரை நான் விலக்கிக்கொண்டதும் அது நின்றுபோய்விட்டது.  சர்தார் ஜாஃப்ரி சிறைக்குச் சென்றுவிட்டதால் இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்தார்; கிஷன் சந்தர், மதில்மேல் பூனையாக இருந்தார். பிவானியில் நடைபெற்ற மாநாட்டில் நான் கலந்துகொள்ளவில்லை; ஆனால், என்னைப்பற்றியும், அந்த நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரைபற்றியும் அங்கு  நிறைய பேசப்பட்டது. இஸ்மத் சுகாட்டாய் போன்றவர்கள், நான் பிற்போக்குவாதியாகவும் பூர்ஷ்வாவாகவும் ஆகிவிட்டதாகச் சாடியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பத்தாண்டுகளுக்குப் பின், எனது முன்முயற்சியின் விளைவாக பாகிஸ்தானிலிருந்து சஜ்ஜாத் ஜாகீர் திரும்பியதும் அவரால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புத்துயிரூட்டப்பட்டது. பண்டிட்ஜியிடம் சென்று, ‘தயவுசெய்து மீண்டும் இந்தியா திரும்ப அவரை [சஜ்ஜாத் ஜாகீரை] அழையுங்கள்’ என்று கோரியவன் நானே என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கேள்வி: ‘நயா ஆதப்’ பத்திரிகை நிறுத்தப்படுவதற்குச் சற்று முன்னதாக, தங்களது எந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதோ, அதே கட்டுரை சர்தார் ஜாஃப்ரியால் தொடங்கப்பட்ட புதிய பத்திரிகையான ‘குஃப்டாகூ’ (Guftagoo) வில் பிரசுரமானது என்கிற செய்தி உண்மையா?
அப்பாஸ்: ஆமாம்; நான் ஏதேனும் அவர்களுக்கு எழுத வேண்டுமெனில், முன்னதாக அவர்கள் வெளியிட மறுத்ததை இப்போது பிரசுரிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதனைப் பிரசுரிக்கும் நல்ல மனம் சர்தார் ஜாஃப்ரிக்கு இருந்தது. மற்றோர் ஆர்வத்தைத் தூண்டும் செய்தியும் இருந்தது; அதை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கான இயக்கம் தொடங்கியபோது, கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சஜ்ஜாத் ஜாகீர்; அதற்கு விசேஷ அழைப்பாளாரக அழைக்கப்பட்டேன். அந்தக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன்; முன்னர் எனக்கு எதிராகக் கூறப்பட்டவற்றுக்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
கேள்வி: ஒருவேளை அந்த காலகட்டத்தில், தாங்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேசமும்-வெறுப்பும் பிணைந்த உறவினைக் கொண்டிருந்தீர்களா, இன்னும் சொல்லப்போனால், வெறுப்பைக் காட்டிலும் நேசம் அதிகம் கொண்டிருந்தீர்களா?
அப்பாஸ்: ஆம், அது உண்மைதான்.                       
கேள்வி: பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலைபெற்று முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன; கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இருந்தபோதிலும், ஒரு சோஷலிஸ்ட் நாடாக ஆகும் நிலையை நாம் நெருங்கியிருக்கிறோமா?
அப்பாஸ்: இல்லை; அந்த நிலையை நாம் எட்டவில்லை. ஆனால் அது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குற்றமல்ல. நமது ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் சூழல்-உண்மையில் நமது மக்களின் சமூக நிலை-ஆகியவைதான் இதற்குக் காரணம்.
கேள்வி: இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது; அது சற்றுமுன்னர் குறிப்பிடப்பட்ட ‘சர்தார்ஜி’ எனும் கதைபற்றியது; அந்தக் கதையை எழுதியதற்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு நீங்கள் ஆளானீர்கள்; ‘கொலைசெய்யப்படத்தக்க நபர்’ எனத் தூற்றப்பட்டீர்கள்; நீதிமன்றத்துக்கும் இழுக்கப்பட்டீர்கள். இந்திய வாசகர்களுக்கு மிகவும் நுட்பமான கதையை நீங்கள் அறியாத்தனமாக எழுதிவிட்டீர்கள் என்று திருமதி சரோஜினி நாயுடு அப்போது கூறியது இப்போது தங்களுக்குச் சரியெனப்படுகிறதா?
அப்பாஸ்: இல்லை; அவரது அந்தக் கருத்தில் எனக்கு அப்போதும் உடன்பாடில்லை; இப்போதும்கூட உடன்பாடில்லை. நான் அப்போது கொலைசெய்யப்பட்டு விடுவேனோ என்ற கவலையில்—அத்தகைய ஆபத்து இல்லாவிடினும்—எழுத்தாளன்மீது தனது அன்பை வெளிப்படுத்தும் அவரது கரிசனம் அது. நான் கொலைசெய்யப்படவேண்டும் எனக்கூறியதாக சீக்கியர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது; குருத்வாராக்களில் சிலர் அவ்விதம் பேசியதான காரியங்களும் நடந்தன. அந்தக் கதையின் முதல் வரியைக் கண்டு அவர்களது உள்ளம் கொந்தளித்திருக்கிறது.
கேள்வி: அதனை ஒரு கட்டுரை என்று சிலர் தவறாகக் கருதிவிட்டனரோ?
அப்பாஸ்: ஆம். எனக்கு எதிராக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. நான் ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகவும், ‘மெய்ன் சிக்கோன் சே நஃப்ரட் கர்த்தா தா’ (‘சீக்கியர்களை வெறுப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்’) என்று அதனை நான் ஆரம்பிப்பதாகவும் சொல்லப்பட்டது.
கேள்வி: இது தொடர்பாக, சீக்கியர்களை  நேருக்கு நேர் சந்தித்ததுண்டா?
அப்பாஸ்: முதலாவதாக, நீண்ட தாடி வைத்திருந்த, வயதுமுதிர்ந்த ஒரு சர்தார்ஜியை நீதிமன்றத்தில் சந்தித்த சுவையான அனுபவத்தைக் கூறுகிறேன்: சாட்சி சொல்வதற்காக அவர் நீதிமன்றம் வந்திருந்தார். ஜான்சியிலிருந்து இந்த வழக்கினை அவர் தொடுத்திருந்தார். (இவ்வாறு ஆங்கிலத்தில் பேட்டியளித்துக் கொண்டிருந்த திரு. அப்பாஸ், இங்கே இந்துஸ்தானிக்கு மாறலானார்; தொடர்ந்து தனது அனுபவத்தை சிறிது விளக்கலானார்...)
நான் அவரை [வயது முதிர்ந்த சர்தார்ஜியை] சந்தித்தபோது, ‘எங்களுக்கு எதிராக இந்தக் கதையை ஏன் எழுதினீர்கள்’ என்று கேட்டார்.
‘சர்தார்ஜி, என்னைப்பற்றிய தங்கள் கருத்து ஒருவேளை தவறானதாக இருக்கக்கூடும். என்னிடமிருந்து எனது கதை முழுவதையும் நீங்கள் கேட்கவேண்டும் என விரும்புகிறேன்; இதற்காக ஒருமணி நேரம் ஒதுக்க இயலுமா? எனது முழுக்கதையையும் கேட்கும்வரை கோபப்படாமல் இருப்பீர்களா?’ என அவரிடம் கேட்டேன்.
இதனைத் தொடர்ந்து, அவர் என்னுடன் என் வீட்டுக்கு வந்து ஒருமணி நேரம் இருந்தார். அந்தக் கதை முழுவதையும் அவருக்குப் படித்துக் காட்டினேன்.
 கதையைக் கேட்டுமுடித்தவுடன், அவரது கண்கள் குளமாயின. தன் இருக்கையிலிருந்து எழுந்த அவர் என்னை ஆரத்தழுவிக்கொண்டார்; ‘இந்தக் கதையை எழுதிய எழுத்தாளருக்குப் பதக்கம் அளித்து கெளரவிக்க வேண்டும்’ என்றார். பின்னர் நீதிமன்றம் சென்ற அவர், ‘எனது குற்றச்சாட்டுகளை நான் விலக்கிக்கொள்கிறேன்; ஜான்சிக்குத் திரும்புகிறேன். அப்பாஸ் அவர்கள் நல்ல கதையை எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்’ என்றார்.
எனக்கு ஏற்பட்ட மற்றொரு அனுபவம் காஷ்மீரத்து எல்லைப்பகுதியில்; அப்போது அங்கே போர் நடந்துகொண்டிருந்தது. எல்லைப்பகுதிக்குச் சென்ற பத்திரிகையாளர் குழுவில் நானும் இருந்தேன். படைவீரர்களின் வெவ்வேறு காவல் முகாம்களுக்கு நாங்கள் அனுப்பிவைக்கப்பட்டோம். மூன்று சர்தார்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட ஒரு காவல் முகாமிற்கு நான் தனியாகச் செல்ல நேர்ந்தது. பாட்டிலில் செருகிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தியுடன் அவர்கள் ஒரு பதுங்கு குழியில் அமர்ந்திருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில், எனது கதை குறித்து ஏதேனும் பிரச்சனை வந்தால், படித்துக் காட்டிவிடலாம் என்பதற்காக அதனை எனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பது வழக்கம்.
கேள்வி: சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நீங்கள் கண்டுபிடித்த உபாயமா அது?
அப்பாஸ்: ஆம்; ஒருவேளை அப்படிக்கூட இருக்கலாம். ‘ஆப் கா நாம் க்யா ஹே?’ என்று அந்த சீக்கிய அதிகாரி கேட்டார்.
கேள்வி: ஏதோ கோளாறு இருப்பதாக அவர் கண்டுபிடித்துவிட்டாரா?
அப்பாஸ்: இல்லை; என் பெயர் என்ன என்று கேட்டார்; அவ்வளவே! (இங்கே மீண்டும் அப்பாஸ் இந்துஸ்தானியில் பேசத் தொடங்கிவிட்டார்).
‘என் பெயர் குவாஜா அகமது அப்பாஸ்’ என்றேன். அவர்கள் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர். அவர்களில் ஒருவர். ‘நீங்கள் கதை எழுதுவீர்களோ?’ எனக் கேட்டார் ‘ஆமாம், நான் கதை எழுதுபவன்தான்; நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், ‘சர்தார்ஜி’ கதையை எழுதியவன் நான்தான்’ என்றேன். ‘எங்களுக்கு எதிராக ஏன் அந்தக் கதையை எழுதினீர்கள்?’ என்று அவர்கள் கேட்டனர். ‘அந்தக் கதையை செவிமடுக்க நீங்கள் தயாரா? இப்போதே அதனை உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்’ என்றேன். ‘நாங்கள் கேட்கிறோம்’ என்றனர். ‘கதையைக் கேட்டு முடிக்கும்வரை நீங்கள் என்னைக் கொன்றுவிடக்கூடாது; என்ன, கொல்லாமல் விட்டுவைப்பீர்களா?’ எனக்கேட்டேன். ‘இல்லையில்லை, உங்களைக் கொல்லமாட்டோம்’ எனச் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
பின்னர் அவர்களுக்கு அந்தக் கதையைப் படித்துக் காட்டினேன். நீதிமன்றத்துக்கு வந்த சர்தார்ஜியைப் போன்றே இவர்களும் கதையைக் கேட்டு உணர்ச்சிவயப்பட்டனர். கைகுலுக்கி என்னைப் பாராட்டினார்கள்; முன்னதாக, எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று மறுத்துவிட்ட நிலையிலும், அவர்களுடன் சேர்ந்து ரம் பருகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
கேள்வி: உண்மைதான்; அந்தக் கதையைப் படித்த எவரும், அது, அண்டைவீட்டில் வசித்த முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்குத் தனது உயிரையே பணயம் வைத்ததொரு சர்தார்ஜியின்மீது எத்துணை பரிவுணர்வுடன், புரிதலுடன் எழுதப்பட்டது என்பதை உறுதிசெய்வார்கள ன்றோ?
அப்பாஸ்: சொல்லப்போனால், இது ஓர் உண்மைக் கதை; எனது உடன்பிறந்தவர்களின் மகள்களையும், எனது பெற்றோரின் உடன்பிறந்தார் பிள்ளைகளையும் காப்பாற்றியவர் ஒரு சர்தார்ஜிதான். அவர் உயிர்துறக்கவில்லை என்பதுதான் நிஜ நிகழ்விற்கும் எனது கதைக்கும் உள்ள வேறுபாடு. [மதக்கலவரம் வெடித்த] அந்த நேரத்தில், நகரத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலொன்று எனது உறவினர்களின் சொத்துக்களையும் கபளீகரம் செய்தது. கொள்ளையில் பங்குகொள்வதுபோல் அந்த இடத்திற்குச் சென்று தங்களால் முடிந்த அளவுக்குப் பொருள்களை எடுத்துவருமாறு தன் பிள்ளைகளைப் பணித்தார் அந்த சர்தார்ஜி. இதன் விளைவாகத்தான் அவற்றில் ஒரு சில பொருள்களையாவது எனது உறவினர்களால் காப்பாற்ற முடிந்தது. சர்தார்ஜியின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பொருள்கள் எனது உறவினர்கள்வசம் ஒப்படைக்கப்பட்டன. அவை சமையலறையில் கொண்டுபோய் வைக்கப்பட்டன; பின்னர், கையில் பிச்சுவா ஏந்திய அந்த சர்தார்ஜி, ‘ஜப் தக் ஹம் ஜிந்தா ஹய்ன் தும் கோ கோய் ஹாத் நஹீன் லகா சக்தா’ (நான் உயிரோடு இருக்கும்வரை எவரும் உங்கள்மேல் கைவைக்க முடியாது) என்றார். அதனால்தான், அவர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என எனது கதையின் முடிவை எழுத எனக்கு உத்வேகம் கிடைத்தது.
கேள்வி: பொதுவாகத் தங்களின் நாவல்களைக்காட்டிலும் உமது சிறுகதைகள் சிறந்த கதையோட்டமும் மன நிறைவளிக்கத் தக்கவகையில் அழகியல் உணர்வும் கொண்டுள்ளன எனச் சொல்வது சரிதானா?
அப்பாஸ்: நான் அப்படிச் சொல்வதற்கில்லை; ஏனெனில், எனது நாவலான ‘இன்குலாப்’ சிறந்த கதையோட்டம் கொண்டது; எனினும், எனது அனைத்து நாவல்கள் குறித்தும் நான் அவ்வாறு கூறுவதற்கில்லை. மனந்திறந்து சொல்வதானால், எனது திரைப்படங்களுக்குத் தேவையான நிதிக்காக சில நாவல்களை நான் எழுதியது உண்மைதான்; இதனால் எனது சில திரைக்கதைகளை நாவலாக மாற்றித் தர நேர்ந்தது; அவை அவசரகதியில் எழுதப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; ஆயினும் எனது எல்லா நாவல்களும் மோசமான கட்டுக்கோப்பைக் கொண்டவை என்று நான் சொல்லமாட்டேன். கதையோட்டத்துக்காகப் பாராட்டு பெற்ற எனது கதைகளில் ஒன்று, அவுரங்காபாத்தில் ஒரே அமர்வில் எழுதிமுடிக்கப்பட்டது. ‘அஜந்தா’ எனும் அந்தக் கதையை அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் எழுதத்தொடங்கினேன்; பம்பாய் வரையிலான அந்தப் பயணத்தின்போது தொடர்ந்து எழுதினேன்; பம்பாய் சென்றடைந்தபோது அதை எழுதிமுடித்துவிட்டேன். நீண்ட சிறுகதைகளையும் சிறிய நாவல்களையும் எழுதுவதன்மூலம் சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையேயான வேறுபாட்டைப் போக்குவதற்கு நானே  சொந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, எனது சிறு நாவலான ‘கண்ணாடிச்சுவர்கள்’,( The Walls of Glass) சிறந்த கதையோட்டம் கொண்டது என்றே நினைக்கிறேன். இதுபற்றிய ஒரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னர் இதனை உருது மொழியில் எழுதினேன்; பழைய காகிதக் குவியலில் இதன் எழுத்துப் பிரதியைக் கண்டெடுத்தபின், கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நான் கனடா சென்றிருந்தபோது அதனை எழுதிமுடித்தேன். பின்னர், அதனை மொழிபெயர்த்து, பிரசுரம் செய்ய அனுப்பினேன்.
கேள்வி: கதையின் கருப்பொருளைத் தேடுவதுதான் சிலசமயம் ஹெமிங்வேயின் உத்தியாக இருக்கிறதென்று வாதிக்கப்படுகிறது. உங்கள் படைப்புக்களின் கருப்பொருள் ஆழமானதாகவும் பல்வகைப்பட்டதாகவும் இருந்தபோதிலும், நீங்கள் கையாளும் உத்தி அப்படிப்படாதாக இல்லை என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதுபற்றிச் சொல்லுங்களேன்?
அப்பாஸ்: ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் எனது உத்திகளை மாற்றி அமைப்பதற்கு முயன்றிருப்பதாகவே கருதுகிறேன். உத்தி என்பது, குறிப்பிட்டதொரு நாவல் அல்லது கதையின் கருவைச் சார்ந்துள்ளது. எடுத்துக் காட்டாக, ‘ஒரு சக்ரவர்த்தியின் சாந்தம்’ எனும் எனது புதிய கதையில் நான் பயன்படுத்தியிருக்கும் உத்தியொன்றும் பழமையானதல்ல.
கேள்வி: ‘நாக்குஷ்’ (Naqush) பத்திரிகையில் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் உங்கள் சிறுகதை வெளிவந்ததல்லவா? ‘ஏக் பச்சே கா காத் மகாத்மா காந்தி கே நாம்’ (மகாத்மா காந்திக்கு ஒரு குழந்தையின் கடிதம்) என்பதுதானே அதன் தலைப்பு?
அப்பாஸ்: ஆம், அது சரிதான்...
கேள்வி: அதைத் தாங்கள் எழுதுகையில் வார்த்தைகள் முற்றுப்பெறாமல், ஏறத்தாழ ஒரு குழந்தையின் நெஞ்சத்திலிருந்து வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றனவே?
அப்பாஸ்: நான் உங்களுக்கு இன்னொரு அனுபவத்தைச் சொல்கிறேன். ‘ரூபியா, அணா, பைய்’ (ரூபாய், அணா, பைசா) எனும் கதையை எழுதினேன். யாரோ ஒருவரது கணக்குப் பேரேட்டில் நான் கண்டெடுத்த துண்டுதுக்காணிகளின் கதை அது; முழுக்கதையும் ஒருமனிதன் பேரேட்டில் எழுதிவைத்த தினசரி கணக்குவழக்கைச் சுற்றி வலம் வருகிறது. கடைசியாக அவன் எழுதியது, ஒரு சீசா விஷம் வாங்கியதற்கான கணக்கு. ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கதையை ’ஃப்ரீ பிரஸ்’ பத்திரிகைக்கு அனுப்பிவைத்தேன். மூன்றாம் நாளே சுவரில் அடித்த பந்துபோல எனக்கு அது திரும்பி வந்தது; ஏதோ பேரேட்டில் எழுதிவைத்த கணக்கின் பகுதிகளை எடுத்து நான் அனுப்பிவைத்துவிட்டதாக அதன் ஆசிரியர் எனக்குக் கடிதமும் எழுதியிருந்தார். விஷயத்தை நான் அவருக்கு விளக்கிய பின்னர், இதனை கணக்குப் பேரேட்டின் பகுதியாகத் தாம் முன்னர் தவறாகக் கருதியதாக ஒரு குறிப்புடன் இந்தக் கதையை வெளியிட்டார் பத்திரிகையின் ஆசிரியர்.
கேள்வி: ஒருமுறை கற்பனை செய்தித்தாளில் வெளியான செய்திகளைப் பயன்படுத்தி நீங்கள் கதைப்பின்னலை உருவாக்கினீர்களோ?
அப்பாஸ்: கிஷன் சந்தரும் நானும் ’நயீ கஹானியான்’ (Nai Kahaniyan) பத்திரிகைக்கு எழுதிய கதைப்பகுதி அது. செய்தித்தாள் நறுக்குகளை வைத்து எழுதப்பட்ட கதைகள் அல்ல அவை; மாறாக, ‘போல்தி கத்ரானே’ (Bolti Katrane) என்றழைக்கப்பட்ட அவை, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகள். இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இதனை நாங்கள் எழுதினோம் என்றெண்ணுகிறேன்.
 “ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் எனது உத்திகளை மாற்றி அமைக்க  முயன்றிருப்பதாகவே கருதுகிறேன்”
கேள்வி: இந்திய சமூகத்தின் எதார்த்த நிலை குறித்த அக்கறை உங்கள் எழுத்துக்களில் தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது. எழுத்தாளராக நீங்கள் பரிணமிப்பதற்கும் உங்கள் எழுத்துக்களில் தெளிவாக மிளிரும் இந்த அம்சத்திற்கும் எந்த அளவு தொடர்பிருக்கிறது? அல்லது தங்களது சுயசரிதையில், ‘நான் ஒரு தீவல்ல’ என்றும், ‘வளர்ச்சியடைவதற்கு விருப்பமில்லாத சிறுவனான பீட்டர் பான்’ என்றும் முன்னர் சொல்லியுள்ளதுபோல் இப்போதும் சொல்வீர்களா?
அப்பாஸ்: அது வேறொரு சூழலில் சொல்லப்பட்டது. நான் எழுத்தாளனாக வளரவில்லை என்று சொல்லமாட்டேன்; ஆனால், நான் அவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கிறேனா இல்லையா என்பதை உங்களைப்போன்ற விமர்சகர்கள்தான் சொல்லவேண்டும்.
கேள்வி: மனிதாபிமானமிக்க அக்கறையும், வாழ்வின்பால் பரிவுணர்வும்தான் உமது எழுத்துக்களின் அரசியல் மற்றும் சமூக கருக்களின் அடிநாதமாக விளங்குகின்றன அல்லவா?
 அப்பாஸ்: சாதாரண மக்களிடம் மனிதாபிமான அக்கறையும், பரிவுணர்வும் எல்லா எழுத்துக்களிலும்—எனது படைப்புக்களில் மட்டுமல்ல—எல்லா எழுத்துக்களிலும் மிளிரவேண்டும் என்றே நினைக்கிறேன். வாழ்க்கை எதார்த்தத்தின்பாலும், மனிதகுலத்தின் பிரச்சனைகள்பாலும் இருக்கவேண்டிய இந்த அக்கறையே அனைத்து மகத்தான இலக்கியங்களின் அடிநாதம்.
கேள்வி: பொதுவாக, தங்களது கதைக்கருக்கள் இயல்பாக வளர்ந்து அவை அறிவுக்குப் பொருத்தமான முடிவுகளை எட்டக்கூடியவை; எடுத்துக்காட்டாக, ‘சிட்டுக்குருவிகள்’ (Sparrows),  ‘ஊமைப் பசு’  (The Dumb Cow), ஆகாசக்கோட்டை (Aasman Mahal) மற்றும் ‘அன்ஹோனீ’ (Anhonee) ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால், தாங்கள் தேர்வுசெய்யும் கருப்பொருள் அவ்வப்போது தங்களை இடறச் செய்து, கலாரீதியான அணுகுமுறையைக் கைவிடக் காரணமாகிறதல்லவா?
அப்பாஸ்: படைப்பிலக்கியமான சிறுகதைகளிலிருந்தும், வணிக நோக்கிலான ஃபார்முலாவாக அன்றி திரைக்கதைக்கேற்ற ஃபார்முலாக்களைக் கொண்ட திரைப்படங்களிலிருந்தும் நீங்கள் உதாரணம் காட்டுகிறீர்கள்.
கேள்வி: நமக்கிடையே பிரச்சனை, ‘ஆஸ்மான் மஹல்’ போன்ற படங்களின் முடிவைப்பற்றியதல்ல. ‘பம்பாய் ராத் கி பஹோன் மெய்ன்’ (Bombai Raat Ki Bahon Mein), தோ பூந்த் பானி (Do Boond Paani) ஆகிய படங்களை மனதில் வைத்துதான் இதைக் கேட்கிறோம். ஏனெனில், முந்தைய படம், மனம் ஏற்கத்தக்க வகையில் முன்னேறிச்சென்றாலும், இறுதிக் காட்சியில் மூன்று கார்கள் மோதுகின்றன. நியாயத் தீர்ப்பாக அது அமைந்தாலும், அது ஒரு விபத்துதானே?                      
அப்பாஸ்: அந்த விபத்து, பைத்தியக்காரத்தனமான பந்தயத்தில் பொதிந்திருக்கிறது. அவனது காருக்கு முன் இந்தப் பெண் வரவில்லையென்றாலும், அந்த வாகனம் எங்காவது மோதியிருக்கும்; ஏனெனில், கிறுக்கனைப்போல் அவன் டிரைவ் செய்துகொண்டிருந்தான். மற்றொரு அப்பாவி பாத்திரத்தை பலிகொடுப்பதற்கு பதிலாக ஏற்கனவே உலவவிட்டிருந்த இந்த பெண்ணை அங்கு கொண்டுவந்தேன். இருப்பினும், கதை சொல்லும் நீதியை வெளிக்கொணர அல்லது படத்தின் உச்சகட்டத்தை எட்ட சிலசமயங்களில் முடிவைக் கொஞ்சம்  புகுத்தவேண்டியிருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இவை செயற்கையாகத் திணிக்கப்பட்டதாக நான் கருதவில்லை.
கேள்வி: உங்கள் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை என்று ஏதெனும் உண்டா?
அப்பாஸ்: மனம் திறந்து கூறுவதானால், எனக்கு அப்படி எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் கடைசியாக எழுதிய கதைதான் சிறந்தது என்பேன்; ஆனால், விமர்சகர்களுக்கு அது வேறொன்றாக இருக்கக்கூடும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில விமர்சகர்கள், எனது முதல் சிறுகதையான 'ஸ்பேரோஸ்' (Sparrows) தான் சிறந்த கதை என்கிறார்கள். மேற்கு ஜெர்மனியில் பதிப்பிக்கப்பட்ட உலகின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. அத்தொகுப்பில் மூன்றே இந்தியக் கதைகள்தான் இடம்பெற்றுள்ளன: ஒன்று, தாகூர் எழுதிய கதை; மற்றொன்று, முல்க்ராஜ் ஆனந்த் எழுதியது; மூன்றாவது எனது இந்தக் கதை.
கேள்வி: இந்தி, உருது, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சமமான இலகுவுடன் எழுதுபவர் நீங்கள். ஆங்கிலத்தில் எழுதுகையில், எழுத்தாளன் தனக்குச் சொந்தமில்லாத மொழியில், தனது சொந்த ஆன்மாவை வெளிப்படுத்த வேண்டியுள்ளதான பிரச்சனைபற்றி [எழுத்தாளர்] ராஜா ராவ் குறிப்பிடுகிறாரே அந்தக் கருத்தை எந்த அளவு நீங்கள் ஏற்பீர்கள்?
அப்பாஸ்: அப்படிப்பட்ட பிரச்சனையை எதிர்கொண்ட அனுபவம் எனக்கில்லை. என்னைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதுவது சுலபமாக இருக்கிறது; சிலவற்றை உருதுவிலும் சிலவற்றை இந்தியிலும் எழுதுவது சுலபமாக இருக்கிறது. உருது மொழி இந்தியைப் போன்றதே எனக் கருதுகிறேன். நான் உருதுவில் எழுதுவதை ஒருவர் தேவநாகரி எழுத்து வடிவத்தில் கொண்டுவருகிறார். தேவநாகரி வடிவிலும் என்னால் எழுத இயலுமென்றாலும், அதை மிக மெதுவாகவே எழுதமுடிகிறது. அரசியல் பதங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், அரசியல் சம்பந்தமான நூல்களை ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு எளிதாக இருக்கிறது. மேலும், மேற்கத்திய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளையும் ஆங்கிலத்தில் எழுதுவது எனக்குச் சுலபமாகிறது; அவற்றைப் பின்னர் இந்தி அல்லது உருதுவில் மொழிபெயர்த்துவிடுகிறேன். ஆயினும், குறிப்பிட்ட சில உணர்ச்சி ததும்பும் கதைகளை உருது அல்லது இந்தியில் என்னால் சிறப்பாக எழுதமுடிகிறது; அவற்றைப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்கிறேன். எடுத்துக்காட்டாக, ‘கண்ணாடிச்சுவர்கள்’ என்னும் கதை முதலில் உருதுவிலும் இந்தியிலும் எழுதப்பட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது; ஆனால், ‘சக்ரவர்த்தியின் சாந்தம்’, ‘விசிறி’ ஆகியவை முதலில் ஆங்கிலத்தில்.  எழுதப்பட்டவை. ஆறு அல்லது ஏழு கதைகளைத்தான் நான் ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன் என்று நினைக்கிறேன்.
கேள்வி: தங்களது நூல்கள் அவசரகதியில் எழுதப்பட்டவை என்றும், அவை, இலக்கியம் என்ற போர்வையில் உலாவரும் பத்திரிகைக் கட்டுரைகள் என்றும் உமது விமர்சகர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால் தங்களது பல்துறை ஆர்வம் பற்றி அறிந்த அபிமானிகளோ, அவசரக் குடுக்கைகள் போலவோ அல்லது அத்தனை சிறப்பில்லாத  படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு உங்களை எடைபோடக்கூடாது என்று அந்த விமர்சகர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். இதுகுறிந்து உங்கள் கருத்தென்ன?
அப்பாஸ்: நீங்களே இதற்கு பதிலிறுத்துவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன். விரைந்து எழுதுதல் அல்லது நேரம் எடுத்துக்கொண்டு எழுதுதல் என்பதெல்லாம் படைப்பில் பெரிய மாற்றத்தை நிகழ்த்திவிடாது என்பது என் கருத்து. தேவையான ஆதர்சம் இருக்கும்பட்சத்தில், தலைசிறந்த படைப்பை விரைந்து எழுதிவிடமுடியும். அதே சமயம், பத்தாண்டுக்காலம் எடுத்துக்கொண்டு எழுதினாலும் மோசமான படைப்பில் முடிந்துவிடுவதுண்டு. பத்திரிகையாளனாகப் பயிற்றுவிக்கப்பட்டவன் நான்; பத்திரிகைத் துறையில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எழுதிக்கொடுத்துவிட வேண்டும்; எனவே, வேகமாக எழுதுவதற்குப் பழக்கப்பட்டுவிட்டவன் நான்.
கேள்வி: நீங்கள் எழுதுவதை மீள்பார்வை செய்வதுண்டா?  தான் ஆதர்சம் பெற்றதாகக் கருதும் எழுத்தாளன் நல்ல இலக்கியப் படைப்பை விரைந்து எழுதிவிடமுடியும் என்பது உண்மைதான். ஆனால், சிலசமயம் மறுபடியும் படித்துப்பார்த்து அதில் மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். தாம் எழுதுவதை மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்து மாற்றங்கள் செய்யும் பொருட்டு, பல எழுத்தாளர்கள், தமது படைப்புகளின் முன்வரைவுகளுக்கு மேல் முன்வரைவுகளைத் தயாரித்திருக்கிறார்களே?
அப்பாஸ்: அந்த அர்த்தத்தில் நான் மீள்பார்வை செய்வதில்லை. எழுதும்போதே நான்  செழுமைப்படுத்திக் கொள்வேன். எழுதிய வார்த்தையை நீக்கிவிட்டு, வேறு சொல்லை அந்த இடத்தில் போடுவேன்; இவ்வாறு செய்துகொண்டேயிருப்பேன்.
கேள்வி: அதாவது, எழுதும்போதே மீள்பார்வை செய்துகொள்வீர்கள் அப்படித்தானே?
அப்பாஸ்: சரியாகச் சொன்னீர்கள்!
கேள்வி: புள்ளிவிபர பாணியில் பேசுவதானால், ஒவ்வொரு படைப்புக்கும் இரண்டு முன்வரைவுகள் இருக்கும் எனக் கொள்ளலாமா?
அப்பாஸ்: இல்லை; ஒரே முன்வரைவுதான். அதில் வார்த்தைகள்தான் மாறும். தட்டச்சில் தயார் செய்த முன்வரைவிலும்கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக மாற்றங்கள் செய்வேன்; ஆனால் அவை அடிப்படையான மாற்றங்களன்று.
கேள்வி: காலத்தால் அழியாத இலக்கியப் படைப்பு எப்படி உருவாகிறது என்று சொல்லுங்களேன்?
அப்பாஸ்: நன்று; இலக்கியப் படைப்பை அமரத்துவம் பெறச்செய்பவர்கள் வாசகர்களும் விமர்சகர்களுமே. காலத்தால் அழியாத இலக்கியப் படைப்பைத் திட்டமிட்டு எவரும் உருவாக்க இயலாது. எழுத்தாளன் தனது படைப்பைச் சமர்ப்பித்துவிட்டு அதனை மறந்துவிடவேண்டும்.
கேள்வி: காலத்தின் சோதனையைக் கடந்து நிற்றல் என்றவொன்று இருக்கிறதென நீங்கள் நினைக்கவில்லையா? குறிப்பிட்டதொரு இலக்கியப் படைப்பு 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தாலும் இன்னும்கூட அது தற்காலத்துக்குப் பொருந்தியதாக இருக்கக்கூடும் அல்லவா?
அப்பாஸ்: அவ்வாறான இலக்கியப்படைப்புகள் உண்டுதான்; ஆனால், எனது படைப்புகளில் அத்தகையவற்றை உங்களால் காண இயலும் என நான் கருதவில்லை.
கேள்வி: திரு.அப்பாஸ் அவர்களே, தங்களது படைப்பாற்றலை திரைப்படங்கள், எழுத்து எனும் இரு துறைகளிலும் வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறீர்கள். இவற்றில் உங்களை மிகவும் கவர்ந்த ஊடகம் எது?

அப்பாஸ்: இரண்டுமேதான். திரைப்படங்களை உருவாக்குகையில் எழுத்தின்பால் ஈர்க்கப்படுகிறேன்; எழுதும்போது திரை உலகம் என்னைக் கவர்ந்திழுக்கிறது. இந்தப் பிரிவு என் சோர்வை அகற்றவல்லதாயிருக்கிறது என்று நினைக்கிறேன்.
கேள்வி: உங்கள் திரைக்கதையில் முதலில் உருவான ‘நயா சன்சார்’ திரைப்படம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்துத் தாங்கள் கொண்ட அதிருப்தியின் விளைவாகத்தான் நீங்களே உங்கள் படங்களைத் தயாரிக்க நேர்ந்தது என்பதை அறிவோம். உங்கள் கதையான ‘அச்சானக்’, குல்சார் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கு வந்தது; இது எந்த அளவு உங்களுக்கு மன நிறைவை அளித்துள்ளது?
அப்பாஸ்: அதாவது, அதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. அதில் பாருங்கள், காலத்திற்கேற்ப ‘நயா சன்சார்’ சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால், அதற்குப்பின்னர், தொடர்ந்து ‘நயீ’, ‘நயா’ என்ற பெயர் தாங்கி வரிசையாகப் பல படங்கள் தயாரிக்கப்படலாயின.
கேள்வி: ஒருவகையில் இது ஒரு புதிய பாணிக்கு அடிகோலியது என்று எடுத்துக்கொள்ளலாமா?
அப்பாஸ்: ‘நயா சன்சார்’-ஐத் தொடர்ந்து நான் எழுதிய திரைக்கதைகளுக்கு ‘நயா தரானா’ என்றோ ‘நயீ கஹானி’ என்றோ நான் நாமகரணம் சூட்டவில்லை.  ‘நயா சன்சார்’ சிறப்பாக ஓடியதால், ‘நயா தரானா’வும் வெற்றிப்படமாகும் என்று சொல்லி தயாரிப்பாளர்கள்தான் அப்படிப் பெயர்வைத்தார்கள். இதனால், அது எனது அதே கதைதான் என்பதைக் கண்டுபிடிப்பதே எனக்குச் சிரமமாகும் அளவுக்குக் கதையை மாற்றினார்கள்.
கேள்வி: அப்படியென்றால், ‘நயா சன்சார்’ அளவுக்குத் தங்களது பிற கதைகள் படமாக்கப் படவில்லையோ?
அப்பாஸ்: அந்தக் கதைகளை மோசமாக மிதித்துத் துவைத்துவிட்டார்கள். இதுகுறித்து இயக்குநரிடம் கேட்டபோது, ‘உனது கதைகளை மாற்றக்கூடாது என்றால் நீயே இயக்குநராக ஆகிவிடவேண்டியதுதானே?’ என்று எனக்குச் சவால் விடும் பாணியில் கூறிவிட்டார். அதுதான் நான் டைரக்டர் ஆன கதை.
கேள்வி: குல்சாரின் தயாரிப்பான ‘அச்சானக்’ பற்றி மீண்டும் பேசுவோமா?
அப்பாஸ்: ‘அச்சானக்’ நல்லமுறையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது-இறுதிப்பகுதி நீங்கலாக; எனது கதைக்கு மாறாக அது அமைந்துவிட்டது.
கேள்வி: உங்கள் கதையில், கதாநாயகன் தூக்கிலிடப்படுகிறான் அல்லவா?
அப்பாஸ்: அவன் தூக்கிலடப்படுகிறான்தான்; ஆனால் அதனை ஒரு குறியீட்டுடன் நான் முடித்திருந்தேன். நான் எழுதியது ஒரு இந்தியனைக் குறித்தல்ல. அவன் எந்த நாட்டையும் சேர்ந்த எந்த மனிதனாகவும் இருக்கக்கூடும். அவன் அளித்த பத்திரிகையாளர் கூட்டம் மிகவும் முக்கியமானது; ஆனால் அது திரைப்படத்தில் இடம் பெறவில்லை. உலகில் முதன் முதலில் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளி அவன். இது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் அவனிடம் பேட்டி எடுக்கிறார்கள். ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘நான் நன்றாக இருக்கிறேன். மற்றொருவரின் இதயம் என்னுள் பொருத்தப்பட்டிருக்கிறது; அது வேலை செய்துகொண்டிருக்கிறது’ என்கிறான் அவன். ஆனால், அவனுக்கு இதயத்தைப் பொருத்தியது எதற்கெனில், தூக்கிலடப்படும்வரை அவன் ஜீவித்திருக்கவேண்டு மென்பதற்காகத் தான். திரைப்படதைக் காட்டிலும் மூலக்கதையில் அங்ககத்தின் வேகம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. படத்தின் இறுதியில், விண்ணில்  நாரைகள் கேள்விக்குறிபோன்ற வடிவில் பறப்பதாக எழுதியிருந்தேன். அந்த வினாக்குறியுடன் படம் முடியவேண்டும் என  விரும்பினேன். அவன் தூக்கிலிடப்படுகையில், சுருக்குக் கயிறுக்கும் மேலே சென்று விண்ணை நோக்கி காட்சி  உயர்கிறது; அங்கே தென்படுகிறது அந்தக் கேள்விக்குறி. அதுதான் அந்த மனிதன் காணும் கடைசிக் காட்சி.

கேள்வி: தங்களது கதைகளான ‘பாபி’ (Bobby), ‘மேரா நாம் ஜோக்கர்’ (Mera Naam Joker) ஆகியவற்றைத் திரைப்படங்களாக ராஜ் கபூர் தந்த விதம் ‘ஆவாரா’ (Awara), ’ஸ்ரீ 420’ (Shri 420) போன்றே சிறப்பாக இருந்ததா அல்லது வீழ்ச்சிமுகம்  கண்டதா?
 
அப்பாஸ்: வீழ்ச்சி தொடர்கதையாகிவிட்டது. எனது அனைத்து கதைகளிலும் ராஜ் கபூரால் மிகச்சிறந்த முறையில் கையாளப்பட்டது ‘ஆவாரா’ தான். ‘பாபி’யோ மிக மோசமாகக் கையாளப்பட்டது. ‘பாபி’க்கு வசனமெழுதியது நானல்ல; வேறொருவர்; அவர் சில மாறுதல்களைச் செய்துவிட்டார். ராஜ்கபூரும் சில மாற்றங்களைப் புகுத்தியதோடு, மேலும் மேலும் பாடல்களையும் நடனங்களையும் சேர்த்துக்கொண்டேபோனார்.
கேள்வி: ராஜ் கபூர் ப்ரொடக்‌ஷன்சைப் பொறுத்தவரை, ‘ஆவாரா’ மற்றும் ‘ஸ்ரீ 420’க்குப் பின்னரும் ‘ஜாக்தே ரஹோ’ (Jagte Raho)  அவரது கலையுலக நேர்மையை உறுதிசெய்கிறதல்லவா? தானே டைரக்ட் செய்யாதபோதிலும், அந்தப் படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததே?
அப்பாஸ்: ‘ஜாக்தே ரஹோ’ படத்திற்காக நானொன்றும் பெருமை பீற்றிக்கொள்ள விரும்பவில்லை; ஆனால் அந்தப் படத்தின் கதையை எழுதியவர்கள் எனது நண்பர்களான ஷம்பு மித்ராவும், அமித் மித்ராவும்தான். பம்பாய்க்கு வந்த ஷம்பு மித்ரா அந்தக் கதையை எனக்குச் சொன்னார். படத்தயாரிப்புக்கான நிதியை வங்கத்தில் அவர்களால் திரட்ட இயலவில்லை என்றும், அந்தக் கதையைக் கேட்டுவிட்டு, படம் தயாரிக்க யாரேனும் ஆர்வம் காட்டுவார்களா என்று கூறும்படியும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்தக் கதையைக் கேட்ட நான், நேரே ராஜ் கபூரிடம் அவரை அழைத்துச் சென்றேன். உடனே அந்தக் கதையை வாங்கிக்கொண்ட ராஜ் கபூர், அவர்களையே அந்தப் படத்தை டைரக்ட் செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
கேள்வி: சாதாரண திரைப்படமான ‘ஷெஹர் அவுர் சப்னா’ (Shehar Aur Sapna), வசூலில் சுமாரான வெற்றியை ஈட்டியதோடு ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றது. ஆனால் கலாரீதியில் மிகச் சிறந்த படைப்பான ‘ஆஸ்மான் மஹல்’ தோல்வியைத் தழுவியது; மேலும், அதுபோன்று எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?                       
அப்பாஸ்: முதலாவதாக, வணிகரீதியில் பெற்ற வெற்றியை ஜனாதிபதியின் விருதுடன் ஒருசேர இணைத்துப் பார்க்கும் உமது அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. ‘ஆஸ்மான் மஹல்’ தோல்விப்படம் என்றும், ‘ஷெஹர் அவுர் சப்னா’ மிதமான வெற்றிப்படம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை நஷ்டம் இருபடங்களிலும் ஒரே மாதிரியானது. ‘ஷெஹர் அவுர் சப்னா’ தயாரிக்கப்பட்ட விதம் வேறு. அதில் பங்கேற்ற பெரிய கலைஞர்களும், டெக்னீஷியன்களும் எந்தக் கட்டணமும் கேட்கவில்லை. விநியோகஸ்தர்களிடமிருந்து வந்த பணம் சமமாக அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதனால்தான் அதனை சுமாரான வெற்றி என்கிறீர்கள்போலும்!
கேள்வி: ‘ஷெஹர் அவுர் சப்னா’ வின் வெற்றிக்கு ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் ஊக்கமளித்தது என்று தாங்கள் கருதவில்லையா?
அப்பாஸ்: நிச்சயமாக. ஆனால், விருது வெல்வதென்பது அந்தப் படத்தின் தயாரிப்பாளரது தகுதியை நிர்ணயிக்க உதவாது. வகுப்பில் நீ முதல் மாணவனாக இருக்கிறாய் என்றால், பிற மாணவர்கள் கற்பதில் மந்தமானவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்பார் எனது தந்தை. விருதுக்குப் படங்களைத் தேர்வுசெய்யும் குழுக்களின் தீர்ப்பை நான் விமர்சிக்கவில்லை; ஒருவேளை குறிப்பிட்ட அந்த வருடத்தில் ’ஷெஹர் அவுர் சப்னா’ சிறந்த படமாக இருந்திருக்கக்கூடும்; மற்றோர் ஆண்டில் ‘ஆஸ்மான் மஹால்’ சிறந்த படமாக இல்லாமலிருந்திருக்கக்கூடும்.
கேள்வி: தற்போது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயத்துக்கு வருவோம். திரைப்படங்களிலும் இலக்கியத்திலும் செக்ஸ் மற்றும் வன்முறை ஆகிவற்றைக் கையாளும் முறை எப்போது விதிகளை மீறும் அனுமதிச்சீட்டாக  மாறிவிடுகிறது என நினைக்கிறீர்கள்?
அப்பாஸ்: எழுத்தாளர்கள் அல்லது திரைப்படத் தயாரிப்பாளர்களின் வியாபார நலன்களுக்குத் துணைபோகும்பொழுதும், வாசகர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதன்மூலம் மேலும் சில புத்தகப் பிரதிகளை அல்லது டிக்கட்டுகளை விற்றுவிடும் நோக்குடன் செயல்படும்போதும் அது அத்தகைய லைசென்சாக ஆகிவிடுகிறது.
கேள்வி: இறுதியாக திரு அப்பாஸ் அவர்களுக்கு ஒரு கேள்வி; இப்போது நீங்கள் தயாரிக்கும் படம் எது? அதைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
அப்பாஸ்: நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படம், ‘நக்சலைட்ஸ்’—அது ஒரு அபாயகரமான படம்.  அது நக்சலைட்டுகளின் புகழ்பாடவுமில்லை; அவர்களைக் கேவலப்படுத்தவுமில்லை; இருந்தபோதிலும், இருமுனைகளிலிருந்தும் நான் தாக்கப்படக்கூடும் என அஞ்சுகிறேன். எனது ‘சர்தார்ஜி’ கதையைப் போன்று இதுவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படாது என்றே நம்புகிறேன். 
கேள்வி: நக்சலைட்டுகள் பற்றி படம் எடுக்கவேண்டும் என்னும் எண்ணம் தங்களுக்கு எப்படி வந்தது?
அப்பாஸ்: இவர்கள், ‘செய் அல்லது செத்துமடி’ என்பதற்கும, ‘கொல் அல்லது மரணத்தைத் தழுவு’ என்பதற்கும் தயாராக இருப்பது எனக்கு மனக்கிளர்ச்சியூட்டியது. இதோ ஒரு மகத்தான நிகழ்வுக்கான களம் இங்கே...என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
கேள்வி: அது ஒரு மாபெரும் மனக்கிளர்ச்சியூட்டும் விஷயமா?
அப்பாஸ்: கொல்லுதல் அல்லது கொல்லப்படுதல் எனும் லட்சியத்துக்கு மக்கள் உந்தப்படுமாறு, தம் வாழ்வை அர்ப்பணிக்குமளவுக்குச் செல்வார்களேயானால், அது மாபெரும் எழுச்சியூட்டுகிற விஷயமாகும். அந்தப் பிரச்சனை ஆராயப்படுவதற்குத் தகுதியானது என்று நான் எண்ணினேன்; மேலும், எனக்கு ஒரு கருத்து உண்டு; அது முழுவதும் எனது தன்னுணர்வு சார்ந்த கருத்தாகவும் இருக்கக்கூடும்; அதாவது, 1943-ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தில் இந்தப் பிரச்சனையின் வேர் இருக்கிறது; முதலில் உருவான நக்சலைட்டுகள் அப்போது குழந்தைகளாக இருந்திருப்பார்கள்; அவர்தம் ஆழ்மனதில், கல்கத்தாவின் நடைபாதைகளில் விளைந்த கசப்புணர்வு உறைந்துபோயிருக்கும். அதைத்தான் இந்தப் படத்தில் காட்ட முயன்றிருக்கிறேன்.

நன்றி: ’காலமும் கருத்தும்’ (ஜூலை, 2014 இதழ்).  தொடர்புக்கு: ஆசிரியர்: மு.பழநியப்பன், 69, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை-600 041. MOBILE: 98403 79064

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP