Monday, December 23, 2013


 
காம்ரேட் ரொபுதாவின் கதை
சங்கர் ரே
[தனது சிதார் நாதத்தால் உலகையே மெய்மறக்கச் செய்தவர் இசைமேதை பண்டிட் ரவி சங்கர். கடந்த ஆண்டு (2012) டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் அவர் தனது 92-ஆம் வயதில் மறைந்தபோது, “சிதாரின் நரம்புகள் அறுந்துவிட்டன என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது புகழ்பெற்ற இந்து (The Hindu) ஆங்கில நாளிதழ். முற்போக்கு கலை உலகில் விடிவெள்ளியாகத் திகழ்ந்த அவர், இந்திய மக்கள் நாடக மன்றத்தின்மூலம் எத்தகைய சிறந்ததோர் பாத்திரம் வகித்தார் என்பதையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈடுஇணையற்ற தலைவர் தோழர் பி.சி.ஜோஷி, கலைஞர்களை எத்தனை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றினார் என்பதையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையின் ஆசிரியர் சங்கர் ரே, கல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர்.]
  1971-ஆம் ஆண்டு; நியூயார்க் நகரின் மாடிசன் சதுக்கத் தோட்டம்; பண்டிட் ரவி சங்கரும், அவரது சீடரும் பீட்டில்ஸ் இசைக்குழுவில் கிட்டார் (guitar) வாத்தியக் கலைஞருமான ஜார்ஜ் ஹாரிசனும், ‘வங்கதேசத்துக்கான இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்கள். வங்கதேச யுத்தத்தினாலும் பஞ்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு இந்துஸ்தானி அல்லது கர்நாடக இசை உலகத்தைச் சேர்ந்த இந்த ஒரு மேதை மட்டும் இத்தகு தனிச்சிறப்புவாய்ந்த மனிதநேய முயற்சியில் இறங்குகிறாரே இதற்கு என்ன காரணம் என்று கம்யூனிஸ்ட் கலை இலக்கியத் தத்துவாசிரியர் காலஞ்சென்ற சின்மோகன் செஹனாபிஸ் அவர்களை அதுசமயம் கேட்டேன்.
  “அவர் (பண்டிட் ரவி சங்கர்), இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (Indian People’s Theatre Association-IPTA) ஆரம்ப நாட்களிலேயே அதில் இணைந்து பணியாற்றியவராயிற்றே என்று புன்னகை பூத்தபடியே பதிலிறுத்தார் சின்னுதா (சின்மோகன்).
  1946-ஆம் ஆண்டில், ‘இப்டா (IPTA) வின் இசையமைப்பாளராக ரவி சங்கர் பொறுப்பேற்றபோது, அந்த இடதுசாரி சார்பு கொண்ட முற்போக்கு கலாசார அமைப்பினைப் பரிபாலிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முக்கிய நிர்வாகியாக விளங்கினார் சின்னுதா. இருபதாம் நூற்றாண்டின் சமூக, கலை, வணிக அரங்குகளில் ஏற்பட்ட திருப்பங்களுக்கு மத்தியில் ஒரு மைல் கல்லாகத் திகழ்ந்தது 1971-ஆம் வருடத்திய அந்தக் இசை நிகழ்ச்சி. தெற்கு ஆசியாவில் நிகழ்ந்த ஒரு மெய்யான விடுதலைப் போராட்டத்துடன் ஒருமைப்பாடு தெரிவித்ததன்மூலம் [இந்த
விஷயத்தில் உலகுக்கு] வழிகாட்டினார் அந்த சிதார் மேதை.
  “சாரே ஜஹான் சே அச்சா; இந்தோஸ்தான் ஹமாரா எனும் இக்பாலின் பாடலுக்கு இசை அமைத்தமை, ‘இப்டாவின் தொடக்க காலத்தில் ரவிசங்கர் ஆற்றிய மங்காப்புகழ்பெற்ற பங்களிப்புகளில் ஒன்றாகும். அந்த சமயம், பம்பாய் நகரின் அந்தேரி பகுதியில் அமைந்திருந்த ‘இப்டா கம்யூனின் முழு நேரக் கலைஞராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரராகவும் விளங்கிய ப்ரீத்தி சர்க்கார் இந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். தற்போது 90 வயதாகும் அவர், ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
 “1945-ல் மலாத் பகுதியில் பண்டிட்ஜி தங்கியிருந்த போது, ‘சாரே ஜஹான் சே அச்சா பாடலுக்கு இசை அமைக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டது ‘இப்டா. ‘ரொபுதா-இப்படித்தான் அவரை நாங்கள் அழைப்போம்-இதற்கு உடனே ஒப்புக்கொண்டார். அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நான் சென்றேன். சிதாரில் அந்தப் பாடலை அவர் இசைத்தார்; தன்னுடன் சேர்ந்து அதனைப் பாடுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அந்தப் பாடலைக் கற்றுக்கொண்டுவந்த நான், அந்தேரி கம்யூனுக்குத் திரும்பினேன்; அங்கு அனைவர் முன்னிலையிலும் அதனைப் பாடினேன். கேட்ட அனைவரும் அதில் சொக்கிப்போனார்கள்; என்னிடமிருந்து அதைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டனர். பிறகு, அதுவே ‘இப்டா நிகழ்ச்சிகள் தொடங்கும்போது பாடப்பெறும் முதல் பாடலாயிற்று.
  “இப்போதெல்லாம், நாம் அதனைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறோம்; இதற்கான பெருமையெல்லாம் ரவி ஷங்கர் அவர்களையே சாரும்.  
‘புதிய தொடுவானம்
  சிறந்த நாடாளுமன்றவாதியும், பேரறிஞருமான ஹிரேந்திரநாத் முகர்ஜி, 1990களின் தொடக்கத்தில், ‘இப்டா கலைஞர்களின் குழுவொன்றிடம், “இது, உலகை வெல்வதற்கான பாடல். ரவி சங்கர், சரோத் கலைஞரான டீமிர் பரண், நாட்டிய மேதை சாந்தி பர்தான், அவர்தம் சமகாலத்தவரான தலைசிறந்த பல கலைஞர்களை ‘இப்டாவின் அரவணைப்புக்குள் கொண்டுவர வழிவகுக்கும் புதிய தொடுவானத்தை அது தோற்றுவித்தது என்றார்.
  அந்த நாட்களில், “தன் மனைவி அன்னபூர்ணாவுடனும், மகன் சுபேந்திர சங்கருடனும் ‘இப்டா கம்யூனுக்கு அடிக்கடி விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரவி சங்கர் என நினைவு கூர்கிறார் ப்ரீத்தி தி. பண்டிட்ஜி, முறையாக ‘இப்டாவில் இணைவதற்கு முன்பிருந்தே இது நடந்தது. “1946-ல் ‘இப்டாவில் அதன் இசையமைப்பாளராக இணைந்தார் பண்டிட் ரவி சங்கர். நாடுமுழுவதிலுமிருந்த கிராமியப் பாடல்களின் இசையை ‘இப்டா பாடல்களின் ராகங்கள் பெரிதும் சார்ந்திருந்தன. அமர் பாரத் (அழியாப்புகழ்மிகு பாரதம்) எனும் நாட்டிய நாடகத்துக்கு அவர் முதலாவதாக சிருஷ்டிபூர்வமான பங்களிப்பை எங்களுக்கு நல்கினார். அதன் இசை முழுவதையும் அவரே அமைத்தார். அவரைப்போன்ற இசை மேதையின் கைவண்ணத்தால் சாஸ்த்ரீய மற்றும் கிராமிய இசை நதிகள் இரண்டும் சங்கமித்து, அந்த நாட்டிய நாடகத்தை ஈடு இணையற்ற புகழின் உயரத்துக்குக் கொண்டுசென்றன. இந்திய கலாசார நாதத்தின் சாரத்தையும் பன்முக ஆற்றலையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டது இப்டா என்று, மேற்கு வங்க ‘இப்டா கிளையின் பொன்விழா சிறப்பு மலரில் அவர் எழுதினார்.
  ‘இப்டாவிலும் முற்போக்குக் கலாசாரத்திற்கான அதன் பணிகளிலும் முற்றாக ஈடுபாடுகொண்டு மூழ்கிவிட்டார் ரவி சங்கர்.
   “பருவமழையை வரவேற்பதற்கு உரிய ராகங்களைக் கையாண்டு எங்களுக்கு உத்வேகமளித்தார் அவர். அவற்றைக் கேட்டு நாங்கள் கிறுகிறுத்துப் போனோம்; இசையெனும் மந்திரத்தில் கட்டுண்டவர்களானோம். ஆனால் ஒருபோதும் நாங்கள் களைத்துப் போவதேயில்லை. அவர் எங்களுக்குக் கடுமையான பயிற்சி அளித்தார்; சிலசமயம் அது பகல் முழுவதும்-ஏன், இரவிலும்கூட-தொடர்வதுண்டு. பொதுவாக, அவர் முதலில் எனக்குத்தான் பயிற்சி அளிப்பார்; ரொபுதா எனக்குக் கற்றுத் தந்ததைப் பாடிக்காட்டி அதனைப் பிறருக்கும் கொண்டு சேர்ப்பேன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான கலந்தர் (Kalantar) ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் ப்ரீத்தி தி.
  ரவி சங்கர் ‘இப்டாவில் இருந்தபோது, மாக்சிம் கார்க்கியின் ‘அதல பாதாளம் (Lower Depths) நாடகத்தின் இந்தி தழுவலான சேத்தன் ஆனந்தின் நீச்சா நகர், (Neecha Nagar) போன்ற சில படங்களுக்கு இசையமைத்தார். குவாஜா அகமது அப்பாசின் ‘தர்த்தி கி லால் (Dharti ke Lal) படத்திற்கு அவர் இசையமைத்த பாடல்களில் ஒன்று, ‘நான் ஓயமாட்டேன் தலை சாயமாட்டேன் (‘hum rukenge nahin/hum jhukenge nahin) எனும் பாடலாகும்.
உன்னதக் கலைஞர்கள்
  ரவி சங்கர் மட்டுமல்லாது, டீமிர் பரண், சாந்தி பர்தான், சச்சின் சங்கர், அபானி தாஸ்குப்தா, சம்பு மித்ரா, சோபா சென், த்ருப்தி மித்ரா, ஜோதிப்ரசாத் அகர்வால், அன்னா பாவ் சாத்தே, வள்ளத்தோல், டாக்டர் ராஜா ராவ், எம்.நாகபூஷணம், பால்ராஜ் சஹானி, எரிக் சைப்ரியன், பிமல் ராய், தேராசிங் சான், கே.சுப்ரமணியம், தினா காந்தி (பதக்) மற்றும் ‘நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் (Ningal Enne Communist Aakki) நாடகத்தைப் படைத்த தோப்பில் பாசி எனும் அற்புதமான கலைஞர்களும்  ‘இப்டாவில் இணைந்தனர்.
  இவர்கள் மட்டுமல்லாது, பிஜன் பட்டாச்சார்யா, நேமி சந்திரா ஜெயின், வெங்கட்ராவ் கண்டில்கெர், சலீல் சவுத்ரி, ஹேமங்கோ பிஸ்வாஸ், ஜோதிர் இந்திர மெய்த்ரா மற்றும் அமர் ஷேக் ஆகியோரும் அந்த அமைப்பில் இருந்தனர்.
யார் அந்த மைய சக்தி?
  இவர்களைக் கவர்ந்திழுக்கும் மைய சக்தியாக இருந்தது யார்? சந்தேகத்திற்கு இடமில்லாமல், அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷிதான். முற்போக்கு வங்காள இலக்கிய ஏடான, ‘பரீச்சாய் (Parichay) க்கு அளித்த பேட்டியில், ஹேமாங்கோ பிஸ்வாஸ் ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்திருக்கிறார்: “ரவி சங்கர், டீமிர் பரண், சச்சின் சங்கர், சாந்தி பர்தான் இன்னபிறரின் அரசியல் பார்வையில் குறைபாடுகள் உள்ளன; வகுப்புகள் எடுப்பதன்மூலம் அவர்களை அரசியல் நெறிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் இதுகுறித்து ‘பி.சி.ஜே. (பி.சி.ஜோஷி)க்குத் தான் எழுதப்போவதாகவும் இப்டாவில் இருந்த [கம்யூனிஸ்ட்] கட்சியின் பெரிய தலைவரான பினாய், ஒரு நாள் என்னிடம் சொன்னார் என்பதே அது.
  சொல்லியவாறே அவர் எழுதவும் செய்தார்; அன்று மாலையே ஜோஷியிடமிருந்து பதில் கடிதமும் வந்தது: “அவர்கள்தான் உங்கள் அரசியல் தலைமைக் குழு (polit bureau). அவர்களிடம் அடிபணிந்து கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த பதில். அப்படிப்பட்ட சிறப்புக்கு உரியவர்தான் கலையுலக ஜாம்பவான்களையெல்லாம் ‘இப்டாவுக்கு ஈர்த்துவந்த ஜோஷி!
செக்டேரியன் பாதை
  1949-க்கு முன்னதாகவே ‘இப்டாவிலிருந்து விலகிய ரவி சங்கர், 1950-ல்அகில இந்திய வானொலியில் இசையமைப்பாளராகச் சேர்ந்தார். 1948-ல் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் எடுக்கப்பட்ட செக்டேரியன் பாதையின் விளைவாகச் சிறந்த பல கலைஞர்களும் விலகினர். இன்னொரு பி.சி.ஜோஷிதான் இல்லையே! இருப்பினும், ‘இப்டா யுகத்தில் தாம் உள்வாங்கிய மனிதநேய லட்சியங்களுக்குப் பல கலைஞர்களும் விசுவாசம் கொண்டவர்களாகவே இறுதிவரை வாழ்ந்தார்கள். இதற்குப் பிரகாசமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் ரவி சங்கர்.
தமிழில்: விதுரன்
Courtesy: THE HINDU/When Ravi Shankar was Comrade Robuda/Sankar Ray

Read more...

Tuesday, December 17, 2013

மாவோயிசம்: ஒருவகையான அராஜகவாதம்
அனில் ரஜிம்வாலே
சமுதாயத்தில் நிலவும் அவலங்களுக்கு மருந்து தோட்டாதான் என்றும், துப்பாக்கியைத் தூக்குவதுதான் புரட்சி என்றும் தவறான கருத்தால் உண்மையான புரட்சி வழியிலிருந்து திசைமாறிச் செல்கின்ற மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் குறித்து 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 30-இல் வெளிவந்த ‘மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார இதழில் தோழர் அனில் ரஜிம் வாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே நமது வாசகர்களுக்காகத் தரப்படுகிறது. இந்தப் பாதை எவ்வளவு தவறானது என்பதை மார்க்சீய-லெனினிய மூலவர்கள் முதல் பகத் சிங் வரை சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
 நீண்டகாலத்திற்கு முன்பே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரால் தகர்த்தெறியப்பட்ட அராஜகவாதத்தின் ஒரு நவீன வகைதான் மாவோயிசமும், நக்சலிசமுமே தவிர வேறல்ல. பகூனின், க்ரோபாட்கின், லாசலே, ப்ரெளதான், நரோத்னிக்குகள் மற்றும் இதர அராஜகவாதிகளின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளைப்பற்றிய அவர்களது [மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரது] விமர்சனத்தை நன்கு அறிந்தவர்கள், இன்று இந்தியாவில் உள்ள மாவோயிசத்தின்பால் ஈர்க்கப்படமாட்டார்கள்.
அராஜக அதிதீவிரப் புரட்சிக்கு எதிரான மார்க்சின் போராட்டம்
  மார்க்ஸ், எங்கெல்ஸ் உருவாக்கிய விஞ்ஞான சோஷலிசத்தை எதிர்ப்பதற்காகக் குட்டிபூர்ஷ்வா அதிதீவிர புரட்சிகரபோக்காக 19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளிவர்க்க இயக்கத்தில் அராஜகவாதம் தலைகாட்டியது. சோஷலிசம், கற்பனாவாத நிலையிலிருந்து விஞ்ஞானபூர்வமாக மாற்றம் கொள்வதை மார்க்ஸ் உணர்ந்தார். ஏழைகள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், அடித்தட்டு மக்கள் மற்றும் சுரண்டப்படுவோர் ஆகியோரைப்பற்றி மார்க்சும் எங்கெல்சும் போதுமான அளவு கவலைகொள்ளவில்லை என்பது சரியன்று. ஆனால், ஏழைகளின்பால் போலியான அனுதாப உணர்வை வெளிப்படுத்தவோ அல்லது தாம் அவர்களது நலனைக் காக்கப் பரிந்து செயல்படுபவர்கள் என்று அவர்கள் தம்பட்டமடித்துக்கொள்ளவோ இல்லை. தத்துவம், அரசியல் பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில் யுகம் ஆகியனபற்றிய சமச்சீரான, விருப்பு வெறுப்பற்ற விஞ்ஞானபூர்வமான ஆய்வின்மூலம் மார்க்சும் எங்கெல்சும் அந்த மக்களது துயர நிலைக்கு விடைகாண முற்பட்டனர். அதனால்தான் அவர்கள் மெய்யான புரட்சிக்காரர்கள். பரபரப்பை ஏற்படுத்தும்வகையில் தம்மைச்சுற்றி ரகசிய வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல், ஆயுதபாணியாதல், வெற்று வீராவேசம், அடக்குமுறையை விலைகொடுத்து வாங்குதல் போன்ற காரியங்களை அவர்கள் உறுதியாக எதிர்த்தார்கள்.
  ப்ரெளதானின் வறுமைபற்றிய தத்துவத்திற்கு ‘வறுமையின் தத்துவம்எனும் புகழ்பெற்ற தனது நூலின்மூலம் பதிலிறுத்த காரல் மார்க்ஸ், அராஜகத்தின் சிந்தனை மற்றும் தத்துவத்தில் எந்த அளவுக்கு மோசமான வறட்சி தாண்டவமாடுகிறது என்பதைத் தனது கூரிய விமர்சனம் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு முதலில் விஞ்ஞானரீதியான தத்துவமும் சரியான கோட்பாடும் அவசியமாகிறது. அவை இருந்தால் மட்டுமே விஞ்ஞான அடிப்படையில் தொழிலாளர்களின் வெகுஜன இயக்கத்தை உருவாக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே ‘புரட்சிஎனக் கூவிக்கதறாதீர்கள்; கூப்பாடு போடாதீர்கள்; அவ்வாறு செய்தால் அது வந்து உங்கள் வீட்டுக்கதவைத் தட்டுமா? மார்க்ஸ் ஒருபோதும் இத்தகு உத்தியைக் கையாண்டதில்லை. எனினும் அவர் மகத்தான புரட்சியாளராகத் திகழ்கிறார். இதுகுறித்து மாவோயிஸ்டுகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். தனது வரலாற்றுப்புகழ்மிக்க ‘கற்பனா சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்என்கிற நூலில், கற்பனா சோஷலிசத்தில் காணக்கிடக்கும் தத்துவத்தின் வறுமையை அவர் அம்பலப்படுத்தினார்; மெய்யாகவே சமூக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால், விஞ்ஞான கருத்துருவை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புரட்சியின் விஞ்ஞானத்தன்மை பற்றி மார்க்ஸ்
  மார்க்சைப் பொறுத்தவரை, புரட்சி என்பது ஆழ்ந்த முனைப்புடன் செய்துமுடிக்கப்படவேண்டிய பணியாகும்; அது ஒன்றும் விளையாட்டல்ல. தன்னலமற்ற புரட்சியாளரான அவர், ன் வாழ்நாளிலேயேபுரட்சியைக் காணத்துடித்துப் போராடவில்லை. அவரைப் பொறுத்தவரையில் சோஷலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் மாறிச்செல்லுதல் என்பது வரலாற்றுச் சகாப்தம்; நிலைமைகள் பக்குவப்படும்போது அவை கைகூடும். அரசியல் சதுரங்கப்பலகையில், கல்வியறிவற்ற, ஏழைகளை, அவர்களது பிரச்சனைகளை, உணர்வுகளைப் ‘புரட்சிவிளையாட்டின் சதுரங்கக் காய்களாக அவர் பயன்படுத்தவில்லை.
  காரல் மார்க்ஸ், புரட்சியாளர்களின் முன் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்: அவர்களின் நோக்கங்கள் மற்றும் லட்சியங்கள், போராட்ட முறைகள், ஜனநாயக உரிமைகளக் கையாளுதல், பிரச்சாரம், புரட்சியின் தன்மை, தொழிலாளிவர்க்க அமைப்பு போன்றவை அந்தப் பிரச்சனைகள். ஐரோப்பாவின் பின்தங்கிய பகுதிகளில் பக்கூனின் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமைதாங்கி வழிநடத்திய அராஜகவாதிகளின் தலைமறைவுக் குழுக்கள் பிரயோகித்த வன்முறையை அவர் எதிர்த்தார். அவர்கள், புரட்சியுடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறும், முதல் [கம்யூனிஸ்ட்] அகிலத்தின் வடிவில் உள்ள சர்வதேசத் தொழிலாளிவர்க்க இயக்கத்தின் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அராஜகவாதிகள், முதலாம் அகிலத்தை சீர்குலைத்தார்கள்; ‘வரலாற்றின் தேவைஎன்ற பெயரில், தமக்காகவே ‘அராஜகவாதிகளின் அகிலம்என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
  அராஜகவாதிகளின் நடவடிக்கைகள், பூர்ஷ்வா அரசை வலுப்படுத்தவே உதவுகிறது என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.
  பொதுவாக நிலவுகின்ற அபிப்ராயத்துக்கு மாறாக, மார்க்சும் எங்கெல்சும் சோஷலிசத்திற்கு இட்டுச்செல்கின்ற பாராளுமன்றப் பாதை இருப்பதையும் கண்டுணர்த்தினார்கள். ஜெர்மனியில் புரட்சியின் சாத்தியக்கூறுகள் பற்றி 1890-ல் எழுதும்போது, அதுபோன்ற வழியைக் குறிப்பாக எங்கெல்ஸ் வலியுறுத்தினார்.
  அராஜகமும், அதிதீவிரப்புரட்சியும் குட்டிபூர்ஷ்வா போக்குகள்தான்; அவை, மக்களின் பின்தங்கிய நிலைமைகளைப் பயன்படுத்தி விளையாடுகின்றன; புரட்சியைப்பற்றி பொய்யான வாக்குறுதிகளை உதிர்க்கின்றன; தமது குறுகிய குழு நலன்களுக்காகச் சாகசவாத செயல்களில் இறங்குகின்றன என்பதை மார்க்சும் எங்கெல்சும் சுட்டியுணர்த்தினர்.
மாவோயிசத்தின் தோற்றம்
  இன்றைய சீனம், மாவோயிசத்தைப் புறந்தள்ளிவிட்டது என்பதை எடுத்த எடுப்பில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
  சீனாவில் ஏற்பட்ட சில அரசியல் மாற்றங்களினால், 1950-களின் இறுதியிலும், 1960-களிலும் மாவோயிசம் உதயமாகியது; இதன் போக்கில், [சீனக் கம்யூனிஸ்ட்] கட்சியில் மா-சே-துங்கின் கை ஓங்கியதுடன், கட்சியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. குட்டிபூர்ஷ்வா அதிதீவிர-இடதுசாரி சோஷலிச சித்தாந்தம் ஆட்சிபுரியத் தொடங்கியது; அது, முதலில் சோஷலிசம், அதன் பின்னர் 15 ஆண்டுகளில் கம்யூனிசமும் நிர்மாணிக்கப்படும் என உறுதி அளித்தது; இதையடுத்து மூன்று ஆண்டுகளில், அதாவது ‘பெரும் பாய்ச்சல்’ (‘great leap’) என்று கூறப்பட்ட காலத்தில் மாவோயிசம், அடக்குமுறை அடிப்படையிலான நிர்ப்பந்த சோஷலிசத்தைத் திணித்தது. அதன் பின்னர், இகழ்ச்சிக்குரிய ‘கலாசாரப்புரட்சிதொடங்கியது.
  மாவோயிசம், தனக்கேயுரிய புரட்சி வகையறாவை உலகெங்கிலும் திணிக்கவும், உலகக் கம்யூனிச, புரட்சிகர இயக்கங்களை சீர்குலைக்கவும் எத்தனித்தது. உண்மையில், புரட்சிகர அணிகளைப் பிளவுபடுத்துவதன் மூலமே அது தனது புரட்சியைஉய்த்துணரமுடியும். ஆயுதமேந்திய போராட்டம் மட்டுமே புரட்சிப்பாதை என்றும், சீனப்புரட்சி ஒன்றே முன்மாதிரி என்றும் அவர்கள் கூறினார்கள். இதை அடையும் பொருட்டு, மிகவும் பின்தங்கிய, தீவிரமான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட, ஆனால் அதேசமயம் சித்தாந்த பயிற்சி இல்லாத சக்திகளை அறைகூவியழைத்தார்கள்.
   இன்றையதினம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கலாசாரப்புரட்சி மற்றும் இத்யாதி விஷயங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நிலைமைகளில் போராட்ட வடிவங்கள்
  எப்பொழுது, எதற்காக ஆயுதமேந்தவேண்டும்? மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஏன்—மா-சே-துங்கும்கூட பல சந்தர்ப்பங்களில் இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்கள். பூர்ஷ்வா ஜனநாயக உரிமைகள் அறியப்படும் அந்த ஜனநாயக உரிமைகளுக்காக, மார்க்சீயவாதிகள் எப்பொழுதும் போராடுவார்கள். இதைப்பயன்படுத்தி, மக்கள் இயக்கத்தை உருவாக்கமுடியும். பொதுமக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடையாது; கட்சிகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது; தேர்தல்களில் போட்டியிடமுடியாது; பேரணிகள் நடத்த இயலாது என்பன போன்ற எந்த உரிமைகளும் இல்லாததொரு சூழ்நிலையின் கட்டாயத்தினால்தான் சீனாவில் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என மா-சே-துங்கும் சீனப்புரட்சியின் இதர தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்தான் புரட்சியாளர்கள், ஜனநாயகவாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆயுதப்போராட்ட்த்தில் ஈடுபடவேண்டியதாயிற்று. அவ்வாறிருந்தும்கூட, மா-சே-துங் பல சந்தர்ப்பங்களில், அமைதிவழியைப் பின்பற்ற முயற்சித்தார். அவர் எந்த சக்திகளை எதிர்த்துப் போராடினாரோ அவற்றுடன் இணைந்து 1946-ல் கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றார்.
  இந்த விஷயத்தில், இந்தியாவில் முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலை உள்ளது. இந்தியாவில் நன்கு உருவாக்கி வளர்க்கப்பட்ட பாராளுமன்ற அரசியலமைப்புசட்ட ரீதியான பின்னல் அமைப்பு அடிமட்டத்தில் கிராமங்கள்வரை உள்ளது. மக்கள் இயக்கங்களின் பின்புலத்துடன் இணைந்த தேர்தல்முறை, மத்தியிலும், மாநிலங்களிலும், கீழ்மட்டம்வரையிலும் முக்கிய ஆட்சி மாற்றங்களைக் கொண்டுவருவதற்குக் காரணிகளாக உள்ளது. இதைக் கண்டுணராத எந்த புரட்சியாளனும் கண்ணிருந்தும் குருடனே. செயலூக்கமுள்ள, துடிப்பான, இடதுசாரி, ஜனநாயக இயக்கத்தை இந்தியா கண்டுள்ளது; 1957-ல் கேரளா தொடங்கி, பல மாநிலங்களில்      அது ஆட்சி அமைக்கவும் முடிந்துள்ளது. உண்மையில் மக்களின் ஜனநாயகப் போராட்டங்கள் விளைவாக வந்தவைதான் இந்த அரசியல் சட்டரீதியான உரிமைகள். ஒரு புரட்சியாளன் என்ன செய்ய வேண்டும்? இந்த உரிமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு காட்டுக்குள் புகுந்துகொள்வதா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில், இந்த உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டும்.
  நம் நாட்டில் முப்படைகளும், அரசியல் சட்டரீதியான ஆட்சிமுறையையும் தேர்தல் முடிவுகளையும் மதிக்கின்றன; மேலும், அவை அரசியலில் தலையீடு செய்வது கிடையாது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்டு பல நாடுகளிலிருந்து இது வித்தியாசமானது. ஜனநாயக, மக்கள் இயக்கங்களுக்கு இந்த அம்சம் மிகமிக சாதகமானதாகும். ஆனால், மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தங்களின் சிந்தனையற்ற செயல்களால் ராணுவத்தையும், அரசு யந்திரத்தையும் வலிய அழைத்துவந்து அவற்றை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே உதவுகிறார்கள். இந்த மிகவும் அறிவுபூர்வமற்ற அணுகுமுறை, பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவுவதாக மட்டுமே அமையும்.
   நக்சல் பிரச்சனைக்கு ராணுவரீதியான நடவடிக்கை தீர்வாகாது என்பது உண்மைதான்; அரசியல், பொருளாதார, சித்தாந்த ரீதியாக அது தீர்க்கப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் ஆயுதப்படைகளுக்கு ஆத்திரமூட்டுவதன்மூலம், அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, அதன் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. எந்த அறிவார்ந்த புரட்சியாளனும் இந்த காரியத்தைச் செய்யமாட்டான்.
  சாதுர்யமற்ற நக்சலைட் நடவடிக்கைகள், ஒவ்வொரு பிரதேசமாக போலீஸ் மற்றும் ராணுவத்தை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவுமே உதவியுள்ளன. ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட் மற்றும் இதர மாநிலங்களிலுள்ள பரந்துபட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் ராணுவம் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. அண்மைக்காலம்வரை, அங்கு பகிரங்கமான மக்கள் இயக்கங்களை நடத்துவது எளிதாக இருந்தது. ஆனால், மாவோயிஸ்டுகளின் விவேகமற்ற வன்முறையால் இனிமேல் அது சாத்தியமல்ல என்றாகிவிட்டது. ஆதிவாசிகளும், நகரவாசிகளும் வெளிப்படையான மக்கள் போராட்டம் என்கிற ஆயுதத்தை நக்சலைட்டுகளால் மெய்யாகவே பறிகொடுத்துவிட்டார்கள். இது ஒருவகையான அராஜகம்; நீண்டகாலத்திற்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் விமர்சித்த அராஜகவாதத்தின் அப்பட்டமான வடிவம் இது.
  புரட்சியாளனின் அடையாளம் ஆயுதங்களைப் பயன்படுத்துவதல்ல; இன்றைய அராஜகவாதிகளைக் காட்டிலும் குறைந்து போகாத புரட்சியாளரான பகத்சிங்கே இதனைக் கூறியுள்ளார்.
அராஜகவாதம்: ஒருவகையான சந்தர்ப்பவாதம்
  விடுவிக்கப்பட்ட மண்டலங்கள்என்று அழைக்கப்படும் பகுதிகளில் போராடுவதற்கான உரிமைகளை மக்களிடமிருந்தும், இடதுசாரி மற்றும் ஜனநாயக்க் கட்சிகளிடமிருந்தும் பறித்துக் கொண்டனர் மாவோயிஸ்டுகள்; இதுபோன்ற காரியத்தைப் பிற்போக்குவாதிகளிடம்தானே எதிர்பார்க்க முடியும்? மாவோயிசத்தின் தர்க்கவியல், அதன் தடத்திலேயே செல்வதால், அவர்கள் மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்; தமது ஆணைகளுக்கு இணங்க செயல்படுமாறு மக்களின் ஸ்தாபனங்களையும், கட்சிகளையும் அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். நரோத்னிக்குகளுக்கு எதிரான தனது புகழ்மிக்க விவாதத்தில், நரோத்னிக் அராஜகவாதிகளை நிர்மூலமாக்கிய லெனின், அன்றைய ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி நிலையை அவர்கள் கற்று அறிய வேண்டும் என்றார். இந்தியாவிலும், உலக அளவிலும் முதலாளித்துவத்தைப்பற்றி மாவோயிஸ்டுகள் கற்று அறிந்தது என்ன?
  நக்சல்பாரிகளும் மாவோயிஸ்டுகளும் ‘இடதுசாரி இளம்பிள்ளைக் கோளாறுஎன்பதிலிருந்து இன்றளவும் மீளவில்லை. இதன் விளைவாக, இந்தக் கோளாறு, கொடிய நோயாக உருவெடுத்துவிட்டிருக்கிறது. பல தசாப்தங்கள், நூற்றாண்டுகளைக் கடந்தபின் சரித்திரம் அறிந்த தவறுகளை மீண்டும் செய்வது வரலாற்றை கேலிக்கூத்தாக்குவதாகும். அதுமட்டுமன்றி அதன் இயல்பான விளைவாகப் படுமோசமான சந்தர்ப்பவாத வடிவங்கள் தோன்றும்.
  நக்சல்பாரி குழுக்கள், தேர்தல் முறையை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தொடர் பிளவு ஏற்படுவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்றாக ஆகியிருக்கிறது. பெரும்பாலான மாவோயிஸ்டுகள்/நக்சல்பாரிகள்பூர்ஷ்வாக்களின் ஏமாற்றுவித்தைஎன்று தேர்தல்களுக்கு எதிராக உரத்துக்குரல் எடுத்துப் பேசுகிறார்கள். இருப்பினும், அவர்களில் பலர், இடதுசாரிகளுக்கு எதிராக, எந்த பூர்ஷ்வா கட்சிகளை மிகவும் நிந்தித்துவருகிறார்களோ அந்த பாரதீய ஜனதாக் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு அவர்களுக்கு வாக்களிக்க ஒப்புக்கொள்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்! இது சந்தர்ப்பவாதம் இல்லையா?
ஆதிவாசிகள் பரிசோதனைப் பிராணிகளா?
  ஆதிவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்கும்பொருட்டு உருவான உண்மையான அறிவுத்தெளிவுடன், நிதானமாகச் செயல்படக்கூடிய இயக்கங்கள், பெரிதாகப் பெருமையடித்துக்கொள்ளும் மாவோயிஸ்டுகளின் சீர்குலைவு வேலைகளால் ஓரங்கட்டப்பட்டுவருகின்றன. சிந்தனைத் தெளிவற்ற தம் புரட்சிசோதனைகளுக்குப் பரிசோதனைப் பிராணிகளாக ஆதிவாசிகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, சீர்குலைவும், குழப்பமும் ஏற்பட்டு ஆதிவாசிகளின் வெகுஜன இயக்கம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இந்த மக்கள்பகுதியினரின் பிரச்சனைகளை வேறுபட்ட சூழலில் பார்க்கவேண்டியுள்ளது; முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றால் தோன்றும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் தனிமைப்பட்டு நிற்க இயலாது. இதற்குத் தீர்க்கமானதோர் மார்க்சீய பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இன்றைக்கு, இந்திய மற்றும் உலக முதலாளித்துவ வளர்ச்சி, விஞ்ஞான-தொழில் நுட்பப் புரட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஆதிவாசிகள் சம்பந்தமான பிரச்சனை அணுகப்படவேண்டும். இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஓரங்கட்டப்பட்டுவருகின்றன; புரட்சிகரமானவையாகத் தோன்றும் பொய்யான உறுதிமொழிகள் என்னும் பாதையில் அந்த மக்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர்.
  ஆதிவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடுமையான சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை; ஆனால் எதார்த்தவயமற்ற சில பரிசோதனைகளுக்காக அவர்களைச் சோதனைப் பிராணிகளாகப் பயன்படுத்தமுடியாது. பொதுத்துறை வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் உட்பட பரந்துபட்ட முன்னேற்றத்துடன் பின்னிப்பிணைந்த ஒருபகுதியாகும் அவர்தம் பிரச்சனை. தொழிலாளி வர்க்கத்தின் நெடிய போராட்டங்கள், தியாகங்களின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் பொதுத்துறை. துரதிருஷ்டவசமாக, இந்த நவீன வர்க்கத்தின் சாதனைமீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது நக்சல் இயக்கம். இவ்வாறாக, புரட்சிபற்றிய தனது குறுகிய குட்டிபூர்ஷ்வா பார்வையை அது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இன்றைய மாவோயிசம், நக்சலிசம்: திவாலான தத்துவம்
  1967-ல் தொடங்கிய காலத்திலிருந்து மாவோயிசமும் அதன் இந்திய வகையறாவான நக்சலிசமும் நெடுந்தூரம் பயணித்துவிட்டன. அன்று முன்வைக்கப்பட்ட புரட்சிகரக் கோட்பாடுகளுக்கும் இன்றைக்குள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அதன் நிறுவனத் தலைவர்களான கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்றவர்களே ஒப்புக்கொண்டார்கள். எண்ணற்ற பிரிவுகளாக, ஒருவேளை நூற்றுக் கணக்கான குழுக்களாக நக்சல் இயக்கம் பிளவுபட்டு நிற்கிறது. அதன் அணிகளுக்கு ஏற்பட்டுள்ள முழுவதுமான சித்தாந்தக் குழப்பம், இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பீதி ஆகியவையே இதன் காரணமாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் காலத்தில் அராஜகவாதிகள் செய்ததுபோன்று, சிறியதோர் நொண்டிச்சாக்கின் பேரில் மாவோயிஸ்டுகள் பிளவுண்டு போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.
  மோசமாகப் பிளவுண்டுபோயிருக்கும் மாவோயிசம், அந்த இயக்கத்தின் நோக்கங்கள், லட்சியங்களின்பால் முற்றாகக் குழம்பிப்போயிருக்கிறது. மேலும், பாகூனின் பாணியில், குறிப்பிட்ட சில மக்கள் பகுதியினரின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, அதன்மூலம் வளர்ச்சிகாணுகிற அப்பட்டமான குட்டிபூர்ஷ்வா போலி-புரட்சிவாதமாகும் இது. மக்கள், எந்த விஷயஞானமும் இன்றி, துடைத்தெடுக்கப்பட்ட சிலேட்டுப் பலகைகளாக இருக்கவேண்டுமெனவும், அப்படி இருக்கும்பட்சத்தில், தான் விரும்பியதையெல்லாம் அதில் எழுதிக்கொள்ளலாம் என்றும் மாவோயிசம் விரும்புகிறது. இது, மார்க்சும் லெனினும் வகுத்த வழிமுறையன்று. புத்தம்புதிய கருத்துக்களைக் கொண்டு சித்தாந்த ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் மக்களுக்கு ஞானம் நல்கவேண்டுமென அவர்கள் விழைந்தார்கள். வெகுஜனங்கள், எந்தவித விஞ்ஞானபூர்வமான சித்தாந்தத்தையும் கைக்கொள்ளாமல் இருக்கச்செய்ய வேண்டுமென விரும்புகிற நக்சல்கள், மார்க்சீய தத்துவம்பற்றிய அறிவு மக்களுக்குக் கிட்டாவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள்.புரட்சியாளர்கள்என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிற அவர்கள், விவேகமற்ற வன்முறையைப் புகுத்துவதற்கு இது உதவுகிறது.
  விஞ்ஞான சோஷலிஸ்ட் தத்துவத்தின்பால் பிடிப்பை இழந்துவிட்ட மாவோயிஸ்டுகள், உண்மையிலேயே முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள முடியாமல்போய், இறுதியில் பூர்ஷ்வா அரசை வலுப்படுத்துகிற நிலையை அடைகிறார்கள்.
  நக்சலிசம், மாவோயிசம் ஆகிய வடிவங்களிலுள்ள நவீன அராஜகவாதத்தின் குட்டிபூர்ஷ்வா போலி-புரட்சிவாதத்திற்கு எதிராகத்  தத்துவார்த்த, சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவேண்டியது முழுமுதல் அவசியமாகிறது.
தமிழில்: இளசை மணியன், விதுரன்.
  'MAOISM: A VARIETY OF ANARCHISM': ANIL RAJIMWALE
COURTESY: MAINSTREAM/OCTOBER 30, 2010

  .

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP