Thursday, December 5, 2013

ஆரம்பகால முயற்சிகள்

-->
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம்:

ஆரம்பகால முயற்சிகள்

சோகன் சிங் ஜோஷ்
   
மார்க்சீய சித்தாந்தம் பல்வேறு வழிகளின் மூலமாக இந்தியாவினுள் பிரவேசிக்க தொடங்கியது. தகவல் சாதனங்கள் அனைத்தையும் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமே தன் கட்டுபாட்டின்கீழ் வைத்திருந்தது. பிரிட்டிஷ் கட்டுபாட்டின்கீழ் இருந்த அனைத்து தகவல் நிறுவனங்களும் 1918-ஆம் ஆண்டில் ஒருவித சோவியத் எதிர்ப்புப் பாரபட்ச உணர்வோடும் துவேஷ எண்ணத்தோடும் சோவியத் புரட்சியைப் பற்றிய அனைத்து செய்திகளையும் திரித்துக் கூறலாயின. சோவியத் கம்யூனிஸ்டுகள் கொலைகாரர்கள் என்றும், சதிகாரர்கள்என்றும், இன்னும் மோசமான முறையிலும் வர்ணிக்கப்பட்டனர். ஆனால் ரஷ்யாவில் செஞ்சேனை வீரர்களை எதிர்த்துப் போரிட்ட இந்திய சிப்பாய்கள் கூறிய கதையோ வேறுவிதமாக அமைந்திருந்தது. போல்ஷெவிக்குகளைப் பற்றி அவர்கள் நல்வாக்கு கூறினார்கள். கம்யூனிஸ்டுகள் ஏழைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மக்கள் அரசொன்றை ரஷ்யாவில் நிறுவியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள்.
  இந்தியாவில் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் பற்றி சந்தேகம் எழலாயிற்று. சோவியத் புரட்சியைப்பற்றிய அனைத்து செய்திகளும், படிக்கத் தெரிந்த மக்களால் குறை நீக்கி பொருள் கொள்ளப்பட்டது. செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்களை ஆதாரமாக் கொண்டு இந்திய தினசரிப் பத்திரிகைகள் தவறான செய்திகளைத் தாங்கிவந்தன. ஆனால் அவற்றின் விமர்சனங்களும் தலையங்கங்களும் உண்மையானவை என மக்கள் ஏற்கவில்லை. தமது எதிரியைத் தோற்கடிப்பதிலும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், அதனை நிர்வகிப்பதிலும் போல்ஷெவிக்குகள் காட்டிய தீரத்தைத் தணிவான குரலில் போற்றிப் புகழும் வகையில் எதிர்மறைச் செய்திகளை நன்முறையில் மாற்றி அவர்கள் பொருள் கொண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு நேர் எதிரானவையே உண்மை என்பது இந்திய அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதல் கம்யூனிஸ்ட் குழுக்கள்
  1921-ஆம் ஆண்டுவாக்கில் பல நகரங்களில்—முதலாவதாக, தொழில் நகரங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் முகிழ்க்க தொடங்கின. ஆக்காலத்தில் இத்தகைய குழுக்கள் பம்பாய் கல்கத்தா மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் தோன்றின. பின்பு, அவை லாகூரிலும் சென்னையிலும் நிறுவப்பட்டன. வளர்ச்சிக்குரிய மகத்தான திறனுடன் இந்த மார்க்சிஸ்ட் குழுக்கள் இந்தியாவில் புதியதோர் சக்தியாகப் பரிணமித்தன. தனிப்பட்ட அறிவு ஜீவிகள் மார்க்சீயத்தைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் தொடங்கினர். மார்க்சீயம்  இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது. தொழிலாளிவர்க்க இளைஞர்களாலும் குட்டிபூர்ஷ்வா அறிவு ஜீவிகளாலும் அதன்மீதான விவாதம் அரும்பியது.
  எஸ் .ஏ. டாங்கே பம்பாயிலும், முசாபர் அகமது கல்கத்தாவிலும் என இரண்டு தொழில் கேந்திரங்கள் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்குவதில் முதன் முதலில் முன்கையெடுத்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்காகப் பணியாற்றியவர்களில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு. இதைக் காட்டிலும், தமது வாழ்நாள் முழுவதும் கம்யூனிசத்தின்பால் அவர்கள் விசுவாசம் கொண்டிருந்தார்கள் என்கிற மிகப்பெரிய பெருமையும் அவர்களுக்கு உண்டு.
 ஆனால், அக்காலத்தில் இந்தக் குழுக்களின் பணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. பிற்காலத்தில் அவை வளர்ச்சியுற்றன. இதனைப் பின்பு நாம் காண்போமாக.
 உண்மைச் செய்தியையும் கம்யூனிச சித்தாந்தத்தையும் பரப்புவதில் ரஷ்யப் புரட்சியின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேரார்வம் கொண்டிருந்தனர். அது, அவர்கள் ஆற்றவேண்டியச சர்வதேசக் கடமையாக இருந்தது. தமது புரட்சியின் வைரிகளுக்கு எதிராகத் தமது கரத்தைப் பலப்படுத்திக் கொள்ளமட்டும் அது அவர்களுக்கு உதவவில்லை; மாறாக, ஆதரவாளர்களையம் தோழர்களையும் அது அவர்களுக்குத் தேடித் தந்தது. இதன் விளைவாக, இந்தியாவிலும் பிற தேசங்களிலும் கம்யூனிஸ்டுகளின் பணி வலுப்பெற இது உதவியது.
எம்.என்.ராய் ஆற்றிய பணி
  மாஸ்கோவிலும் ஜெர்மனியிலும் கட்சிக் குழுக்களை உருவாக்கி, இந்த வகையில் மகத்தான பணியாற்றியவர் எம். என். ராய் ஆவார். இந்திய நிலைமையை அறிந்துவரவும், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியாவிலுள்ள நண்பர்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தெரிவித்து வரவம் நளினி குப்தாவை அவர் அனுப்பி வைத்தார்.
  அரசாங்கத்தின் ரகசியக் குறிப்புகள், அவரது நடவடிக்கைகள் குறித்துப் பல தகவல்களைத் தருகின்றன. இந்தியத் தொழிலாளர் தலைவர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்; மாறிச் செல்லும் நிலையில் இந்தியா,இந்தியாவின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும், நாம் எதை விரும்புகிறோம்?என்னும் தலைப்புகளில் சிறு பிரசுரங்களை அவர் எழுதியுள்ளார். இந்தப் பிரசுரங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் பல பிரதிகள் தடையை மீறி உள்புகலாயின. ஏந்தவித வெறுப்புணர்வையும் ஏற்படுத்தாத பெயரைத் தாங்கி முறையானதோர் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் நிறுவவேண்டுமென இந்தியத் தோழர்களுக்கு அவர் அறிவுரை கூறினர். சுட்ட ரீதியாகவும் தலைமறைவாகவும் இயங்கவல்ல இரட்டை ஸ்தாபன அமைப்பைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, மக்கள் கட்சிஎன்னும் பெயரைச் சூட்டவேண்டுமென அவர் ஆலோசனை கூறினர். (எம்.என்.ராய் பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த இயக்கத்திலிருந்து விலகிய அவர், தீவிர மனிதாபிதமான இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த ஸ்தாபனம், இறுதியில் காற்றில் கரைந்துபோனது).
பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள்
  ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள காலனி நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்;சிகளைக் கட்டி வளர்ப்பது அவற்றின் கடமை என்கிற மூன்றாவது அகிலத்தின் முடிவைத் தொடர்ந்து, இந்தியத் தொழிலாளி வர்க்கம் இந்தப் பாதையில் நடைபோட உதவுவதற்கு பிரிட்டிஷ்  கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.  பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள், இந்தியத் தொழிலாளிவர்க்கத்தின் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார்கள்; தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டினார்கள்; இந்தியாவின் தொழில் கேந்திரங்களில் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்குவதற்கு உதவினார்கள். மிகவும் கடினமான பணியை அவர்கள் நிறைவேற்ற வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு வருவதைப் பொறுத்தவரையில், பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டது. பெரும் இன்னல்களுக்கிடையே பிரிட்டிஷ்  கம்யூனிஸ்டுகளில் சிலர்தான் இந்தியாவுக்குள் வரமுடிந்தது. மிக விரைவிலேயே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆஷ்லி கைது செய்யப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கேம்ப் பெல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பென் பிராட்லி பிலிப் ஸ்ப்ராட், லெஸ்டெர் ஹட்சின்சன் ஆகியோர் உண்மையான பாஸ்போர்ட்டுகளுடன் இந்தியாவுக்குவருவதில் வெற்றி கண்டனர். இந்தியத் தொழிற்சங்க, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்காக அவர்கள் சீரிய பணியாற்றினார்கள்.
  உண்மையில், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு—குறிப்பாக, இங்கிலாந்துக்குச் சென்ற பல இந்திய மாணவர்களைக் கம்யூனிசத்தின்பால் கவர்ந்திழுப்பதில் வெற்றிகண்ட ஆர்.பி.தத் அவர்களுக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் பெரும் கடமைப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் சிலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவும் அனுதாபிகளாகவும் ஆனார்கள். தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் பல்வேறு துறைகளில் மதிப்பிற்குரிய தலைவர்களாகக் கட்சியில் அவர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில்: விதுரன்
From ‘THE GREAT ATTACK’ : SOHAN SINGH JOSH /1979

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP