Wednesday, December 4, 2013

ஜனநாயகத்துக்குப் பேராபத்து!


நாடாளுமன்றத்தை முடக்குதல்:
ஜனநாயகத்துக்குப் பேராபத்து!
அனில் ரஜிம்வாலே 
  [நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வுகாணவேண்டியது நாடாளுமன்றத்தின் கடமை. அதன் நடவடிக்கைகளை முடக்குவது நகைப்புக்குரிய விஷயமல்ல; அது, ஜனநாயகத்தின் முதுகெலும்பில் விழுகின்ற சம்மட்டி அடி! மக்களின் பிரதிநிதிகள், தமது கடமை மறந்து மக்கள் பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் குரல்வளையை நெரிக்கின்ற கொடுஞ்செயல், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது. எதிர்க்கட்சிகள், பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகளும்கூட, மக்களுக்கு எதிரிக்கட்சிகளாக மாறிவிட்ட அவலம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும்-ஏன், உள்ளாட்சி மன்றங்களிலும்கூட அன்றாடக் காட்சியாகிவிட்டது. இந்த அரசியல்-பண்பாட்டுச் சீரழிவின் காரணங்கள், அதன் பின்னணி, அதன் படுபாதக விளைவுகள், அதனைக் களைவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை 2012 அக்டோபர் 6ல் ‘மெயின்ஸ்ட்ரீம்’ ஆங்கில வார ஏட்டில் பிரசுரமான இக்கட்டுரையில் விளக்குகிறார் மார்க்சீய அறிஞர் தோழர் அனில் ரஜிம்வாலே. படித்துப் பயன்பெறுவோம்; சம்பந்தப்பட்டவர்கள் விழிப்புணர்வு கொள்ளச்செய்வோம். தமிழில்: விதுரன்]

  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீர்குலைப்பது, அவற்றுக்கு இடையூறு செய்வது என்கிற வினோதமான, மனத்திற்குக் கவலை அளிக்கக்கூடிய போக்கினை இந்தியப் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் அண்மைக் காலத்தில் கண்டுகொண்டிருக்கிறோம். நேர்மையான உள்ளம்கொண்ட ஒவ்வொருவரும் இந்தப் போக்கினைக்கண்டு மிகுந்த மனக்கலக்கம் அடைந்துள்ளார்கள்; அண்மையில் வெளிவந்த ‘மெயின்ஸ்ட்ரீம்இதழ்களில் காணப்படும் எண்ணற்ற விமர்சனங்களும்கூட இதனைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.
நாள் ஒன்றுக்கு 170 கோடி
  தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எந்த அலுவலும் கொஞ்சமும் மேற்கொள்ளப்படவில்லை. ஏதாவதொரு விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் சபைகள் ஒவ்வொருமுறை கூடும்போதும், அங்கு எழுப்பப்படும் கூச்சல், கோஷமிடுதல் ஆகியவற்றில் அவை உடனே அமிழ்ந்து போய்விடுகின்றன; அந்தக் காட்டுக்கூச்சலிலும், இரைச்சலிலும் எதுவும் காதில் விழுவதில்லை. இது ஏதோ ஓரிரு நாட்கள் மட்டுமல்லாமல், பல நாட்கள் தொடர்ந்தது.  இந்தக் கூட்டத்தொடருக்காக, நாளொன்றுக்கு 170 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவழிக்கப்பட்டது; ஆனால் இந்தத் தொகை முற்றாக வீணாக்கப்பட்டது. சில விதிவிலக்குகள்மட்டும் நீங்கலாக கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும் அனைத்து வகைகளையும் சேர்ந்த நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கொஞ்சமும் பண்பற்ற நடத்தையின் விளைவாக வாக்காளர்களுக்கும் வரிசெலுத்தும் பொதுமக்களுக்கும் கிஞ்சிற்றும் நன்மை கிட்டுவதில்லை.  இந்த மாபெரும் வீணடிப்பைப்பற்றியோ அல்லது அதைக்காட்டிலும் நமது மிகவுயர்ந்த ஜனநாயக அமைப்பிற்கு ஏற்படும் ஆபத்து, சீரழிவு ஆகியவை குறித்தோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
தேர்ந்தெடுக்கப்படுதல் எதற்காக?
  நாடாளுமன்றத்திற்கும் அதுபோன்ற இதர அவைகளுக்கும் எம்.பி.க்களும் மற்ற பிற பிரதிநிதிகளும் எதற்காகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்? மக்களின், வாக்காளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் என்னும் கட்டளை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவுயரிய நாடாளுமன்ற அவைகளின் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவோ, நிச்சயமாக நாட்டின், மக்களின் பெருமதிப்பு வாய்ந்த நிதியை வீணடிக்கவோ அவர்களுக்கு அனுமதியில்லை.
 இதே கனவான்களும் பெண்களும் எதுகுறித்துப் பேசுகிறார்கள்? ஊழல், பணம் பண்ணும் மோசடிகள், ‘மக்களின்நிதியை வீணடித்தல் இத்யாதி, இத்யாதி விஷயங்களைத்தான்! இந்தக் காரியத்தைச் செய்கையில், ஒவ்வொரு நாளும் அவர்கள் விரையமாக்குவது லட்சக்கணக்கன ரூபாயை அல்ல; பல கோடிக்கணக்கான ரூபாயை! தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலேயே ஜனநாயகம் எப்படி கேலிக்கூத்தாக்கப்படுகிறது பார்த்தீர்களா?  எதைத்தான் அவர்கள் விவாதித்திருப்பார்கள்?  எதையேனும் அவர்கள் விவாதித்திருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், யார் எதைச் சொன்னார்கள்; ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் எவை; இன்னும் இதுபோன்ற விஷயங்கள் எதுவுமே நமக்குத் தெரியாது. எந்தக் கட்சி எத்தகைய தீர்வுகளை முன்மொழிந்தது; முன்வைக்கப்பட்ட வாதங்கள் எவை; எதிராகச் சொல்லப்பட்ட வாதங்கள் எவை என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.
 ஊடகங்களில் விஷயங்கள் பதிவாகின்றன என்பது உண்மைதான்; பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள் கூறிய கருத்துக்களை எடுத்துரைப்பதோடு, தமது சொந்த ‘செய்திக் கட்டுரைகள்போன்றவற்றையும் அவை வெளியிடுகின்றன. ஆனால், ஊடகங்கள், நாடாளுமன்ற அமைப்புகளுக்கு மாற்று அல்ல; அப்படி ஆகவும் முடியாது.
ஜன சமூகத்தின் கடமை
 இங்குதான் ஜன சமூகத்துக்குத் தெளிவானதொரு கடமை காத்திருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பினையே கட்டிக்காத்து வளர்ச்சியடையச் செய்வதுதான் அது. சுதந்திர இந்தியாவில் மக்கள் ஈட்டிய விலைமதிப்பற்ற சாதனைகளில் ஒன்று, நாடாளுமன்ற அமைப்புகளை நிறுவியதாகும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலத்திலிருந்தே இதற்காக நாம் போராடிவந்திருக்கிறோம். 
 எந்தவிதமான பாரபட்சமும், வேறுபாடும் இன்றி, வயதுவந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கின்ற தன்னேரில்லா ஆவணமாகும். இந்திய அரசியல் சட்டம். இதற்கு இணையான வேறு அரசியல் சட்டம் எதுவுமில்லை. வகுப்புவெறி, வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய சீர்குலைவுகள்; இந்தியாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்காத பெரும்பான்மையான சுதேச சமஸ்தானங்களின் சதிகள்; காந்தியடிகள் படுகொலை; ஜனநாயகம் ஓங்கி வளர்வதைத் தடுத்து நிறுத்துவதற்கான சதி; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் தடைக்கற்களைப் போடும் முயற்சி ஆகிய இடர்ப்பாடுகள் மிகுந்த சூழலில் நமது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவை அத்தனையையும் தாண்டி, ஜனநாயகம் இங்கு சீராக வேர்பிடித்து வளர்ந்தது; தமது விருப்பங்களையும் உறுதிமிகு எண்ணங்களையும் வெளிப்படுத்த, ஏன்-அரசாங்கங்களையும் ஆட்சிகளையும்கூட மாற்றவல்ல வீரியமிக்கப் போராட்ட ஆயுதம் இந்திய மக்களுக்குக் கிட்டியது.
இந்திய மக்களின் சக்தி
  இந்திய வாக்காளர்கள், பொதுவாக இந்திய மக்கள், அநீதியைச் சகித்துக்கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள் என்பதையும், எண்ணற்ற ஜனநாயக மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள் தம் வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் சுதந்திர இந்தியாவின் வரலாறு உணர்த்துகிறது.
 பாகிஸ்தான் மற்றும்பிற அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புக்களின் பரந்துவிரிந்த வலைப்பின்னலின் மகத்தான தேவை மற்றும் அவற்றின் ஆக்கபூர்வமான பாத்திரம் ஆகியவை பளிச்சென நமக்குப் புரிந்துவிடும். ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதற்குக்கூட வேறுபல நாடுகள் இன்னும் போராடிக் கொண்டுதான் உள்ளன.  நம்மைப் பலவாறாகவும் சீர்படுத்தியுள்ள அரசியல் ஜனநாயகத்தில் நமது நாடு மிகவும் முன்னணியில் உள்ளது. வேறு சில நாடுகளில் காணப்படும் நிலைக்கு மாறாக, இங்கு அதனூடாக வெகுஜனங்கள் மகத்தான பாத்திரம் வகிக்கின்றனர்.
சமூக அமைப்புசார்ந்த குறைபாடுகள்
 இந்திய நாடாளுமன்ற அமைப்பில் பல குறைபாடுகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை; இவை பெரும்பாலும், பெரும் வர்த்தகர்களுக்குச் சாதகமான இடம் அளிக்கின்ற நமது சமூக-பொருளாதாரத்தின் வர்க்க அமைப்பினால் ஏற்படுபவையாகும். இருப்பினும், அரசியல்சட்டமும் நாடாளுமன்ற அமைப்புகளும் சலுகைபெற்ற வர்க்கத்தினருக்கு மட்டும் சொந்தமல்ல; அவை மக்களின் அங்கங்களாகவும் விளங்குகின்றன என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துவந்துள்ளனர். பல மாநிலங்களில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் மக்கள் சார்ந்த ஆட்சிகள் பலமுறை நிறுவப்பட்டதானது இக்கருத்தை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எத்தகைய மாற்றம் தேவை?


 இந்த அமைப்பில் முன்னேற்றம் காண்பதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்கும், சொல்லப்போனால் புதிய அம்சங்களை உருவாக்குவதற்கும்கூட நாம் செய்யவேண்டியது ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டாக, மக்களை இதைக்காட்டிலும் நல்லமுறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நமது தேர்தல் முறையின் பல அம்சங்களில் மாற்றம் கொண்டுவரவேண்டியுள்ளது. ஊழலை நாம் வேரறுக்கவேண்டியுள்ளது. மக்களின் பிரதிநிதித்துவத்தை நாம் அதிகரிக்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற பல கடமைகள் நம்முன்னே உள்ளன.

 இத்தகைய மாற்றங்களை நாம் கொண்டுவரும்போது, அவை இந்த அமைப்புகளில் முன்னேற்றம்காணுகிற, முன்னோக்கிக் கொண்டுசெல்கிற திசைவழியில் இருக்கவேண்டுமேதவிர அவற்றை பலவீனப்படுத்துவதாகவோ அழித்தொழிக்கக்கூடியதாகவோ அமைந்துவிடக்கூடாது.
சில விந்தை மனிதர்கள்
 இந்த நாட்டில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள், தாம் தேர்ந்தெடுக்கப்பட வில்லையெனில், பாராளுமன்ற அமைப்புமுறையைப் பயனற்றது என்றும், கவைக்கு உதவாதது என்றும் சாடக்கூடியவர்கள். இது வினோதமான, குறுகிய தன்னலம்கொண்ட வாதமாகும்.
 நாடாளுமன்றமும் அதுபோன்ற பிற அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவருக்குமானது; அவற்றின் வரம்புக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தமது நடத்தை நெறிகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளில் உள்ள சில குறிப்பிட்ட பகுதியினரும் தாம் நடந்துகொள்வதற்கு மக்களின் அங்கீகாரம் எதுவுமின்றி பகிரங்கமாக, விமர்சனத்துக்கு ஆளாவோமே என்ற கவலையெதுவுமின்றி நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை முற்றிலுமாகச் சீர்குலைக்கும் காரியத்தில் இறங்குகிறார்கள்.
  கோபத்தை வெளிப்படுத்துதல், சொல்லப்போனால் சபையின் அலுவல்களைத் அடையாளபூர்வமாக நிறுத்துதல் அல்லது வெளிநடப்பு செய்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், சீர்குலைவு பாணியையும், பழக்கத்தையும் இந்த அமைப்பிற்குள் புகுத்துகின்ற வகையில் அமைந்திருப்பதால், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முடக்குதல் அனுமதிக்க இயலாத ஒன்று.
 பொதுவாக மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் எதனை அவர்கள் சொல்லித்தர விரும்புகிறார்கள்? கூச்சலும் சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பதைக்காட்டிலும், அவை இருப்பதுதான் நாடாளுமன்ற செயல்பாடுகள் என்றாகிவிட்டது.
 வலதுசாரிப் பிற்போக்கு சக்திகளும், அதிதீவிர ‘இடதுசாரி சக்திகளும் தமது கைவரிசையைக்காட்டி ஜனநாயக எதிர்ப்புக் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளை ‘நிறுவிக்கொள்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறுவதற்குத்தான் இது வழிவகுக்கும்.
தருணம் இதுதான் வாரீர்!
 இது மிகவும் அபாயகரமானது. ஊழலை எதிர்த்துப் ‘போராடுவதாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு பல இயக்கங்கள் தோன்றியதை அண்மையில் நாம் கண்டோம்; உண்மையில் அவை குறிவைத்ததோ பாராளுமன்ற அமைப்புகளை; ஆனால், பொருளாதார மற்றும் நகர் நிர்வாக மேம்பாட்டுத்திட்டங்கள் அவற்றிடம் இல்லாத காரணத்தால் அவை தமது வீச்சை இழந்துபோயின.
 நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் இன்னும் இவைபோன்ற பிற அமைப்புகளின் வடிவில் உள்ள நமது தனிச்சிறப்புவாய்ந்த ஜனநாயக அமைப்புகளைக் கட்டிக்காக்கவும், வளர்த்தெடுக்கவும் ஜனசமூகமும் அரசியல் இயக்கங்களும், வாக்காளர்களும், நுகர்வோர், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், பொதுவாக மக்கள் அனைவருமே போராடுவதற்கான தருணம் இதுவே. 
  இது சாத்தியமாக வேண்டுமெனில், நமது எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், பிற மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும், தமது செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்; ஜனநாயகபூர்வமாக நடந்துகொள்ளவேண்டும்.
(Disruption of Parliament: Threat to Democracy: "Anil Rajimwale)
Courtesy: Mainstream, VOL L No 42, October 6, 2012

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP