Monday, December 23, 2013


 
காம்ரேட் ரொபுதாவின் கதை
சங்கர் ரே
[தனது சிதார் நாதத்தால் உலகையே மெய்மறக்கச் செய்தவர் இசைமேதை பண்டிட் ரவி சங்கர். கடந்த ஆண்டு (2012) டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் அவர் தனது 92-ஆம் வயதில் மறைந்தபோது, “சிதாரின் நரம்புகள் அறுந்துவிட்டன என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது புகழ்பெற்ற இந்து (The Hindu) ஆங்கில நாளிதழ். முற்போக்கு கலை உலகில் விடிவெள்ளியாகத் திகழ்ந்த அவர், இந்திய மக்கள் நாடக மன்றத்தின்மூலம் எத்தகைய சிறந்ததோர் பாத்திரம் வகித்தார் என்பதையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈடுஇணையற்ற தலைவர் தோழர் பி.சி.ஜோஷி, கலைஞர்களை எத்தனை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றினார் என்பதையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையின் ஆசிரியர் சங்கர் ரே, கல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர்.]
  1971-ஆம் ஆண்டு; நியூயார்க் நகரின் மாடிசன் சதுக்கத் தோட்டம்; பண்டிட் ரவி சங்கரும், அவரது சீடரும் பீட்டில்ஸ் இசைக்குழுவில் கிட்டார் (guitar) வாத்தியக் கலைஞருமான ஜார்ஜ் ஹாரிசனும், ‘வங்கதேசத்துக்கான இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்கள். வங்கதேச யுத்தத்தினாலும் பஞ்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு இந்துஸ்தானி அல்லது கர்நாடக இசை உலகத்தைச் சேர்ந்த இந்த ஒரு மேதை மட்டும் இத்தகு தனிச்சிறப்புவாய்ந்த மனிதநேய முயற்சியில் இறங்குகிறாரே இதற்கு என்ன காரணம் என்று கம்யூனிஸ்ட் கலை இலக்கியத் தத்துவாசிரியர் காலஞ்சென்ற சின்மோகன் செஹனாபிஸ் அவர்களை அதுசமயம் கேட்டேன்.
  “அவர் (பண்டிட் ரவி சங்கர்), இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (Indian People’s Theatre Association-IPTA) ஆரம்ப நாட்களிலேயே அதில் இணைந்து பணியாற்றியவராயிற்றே என்று புன்னகை பூத்தபடியே பதிலிறுத்தார் சின்னுதா (சின்மோகன்).
  1946-ஆம் ஆண்டில், ‘இப்டா (IPTA) வின் இசையமைப்பாளராக ரவி சங்கர் பொறுப்பேற்றபோது, அந்த இடதுசாரி சார்பு கொண்ட முற்போக்கு கலாசார அமைப்பினைப் பரிபாலிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முக்கிய நிர்வாகியாக விளங்கினார் சின்னுதா. இருபதாம் நூற்றாண்டின் சமூக, கலை, வணிக அரங்குகளில் ஏற்பட்ட திருப்பங்களுக்கு மத்தியில் ஒரு மைல் கல்லாகத் திகழ்ந்தது 1971-ஆம் வருடத்திய அந்தக் இசை நிகழ்ச்சி. தெற்கு ஆசியாவில் நிகழ்ந்த ஒரு மெய்யான விடுதலைப் போராட்டத்துடன் ஒருமைப்பாடு தெரிவித்ததன்மூலம் [இந்த
விஷயத்தில் உலகுக்கு] வழிகாட்டினார் அந்த சிதார் மேதை.
  “சாரே ஜஹான் சே அச்சா; இந்தோஸ்தான் ஹமாரா எனும் இக்பாலின் பாடலுக்கு இசை அமைத்தமை, ‘இப்டாவின் தொடக்க காலத்தில் ரவிசங்கர் ஆற்றிய மங்காப்புகழ்பெற்ற பங்களிப்புகளில் ஒன்றாகும். அந்த சமயம், பம்பாய் நகரின் அந்தேரி பகுதியில் அமைந்திருந்த ‘இப்டா கம்யூனின் முழு நேரக் கலைஞராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரராகவும் விளங்கிய ப்ரீத்தி சர்க்கார் இந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். தற்போது 90 வயதாகும் அவர், ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
 “1945-ல் மலாத் பகுதியில் பண்டிட்ஜி தங்கியிருந்த போது, ‘சாரே ஜஹான் சே அச்சா பாடலுக்கு இசை அமைக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டது ‘இப்டா. ‘ரொபுதா-இப்படித்தான் அவரை நாங்கள் அழைப்போம்-இதற்கு உடனே ஒப்புக்கொண்டார். அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நான் சென்றேன். சிதாரில் அந்தப் பாடலை அவர் இசைத்தார்; தன்னுடன் சேர்ந்து அதனைப் பாடுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அந்தப் பாடலைக் கற்றுக்கொண்டுவந்த நான், அந்தேரி கம்யூனுக்குத் திரும்பினேன்; அங்கு அனைவர் முன்னிலையிலும் அதனைப் பாடினேன். கேட்ட அனைவரும் அதில் சொக்கிப்போனார்கள்; என்னிடமிருந்து அதைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டனர். பிறகு, அதுவே ‘இப்டா நிகழ்ச்சிகள் தொடங்கும்போது பாடப்பெறும் முதல் பாடலாயிற்று.
  “இப்போதெல்லாம், நாம் அதனைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறோம்; இதற்கான பெருமையெல்லாம் ரவி ஷங்கர் அவர்களையே சாரும்.  
‘புதிய தொடுவானம்
  சிறந்த நாடாளுமன்றவாதியும், பேரறிஞருமான ஹிரேந்திரநாத் முகர்ஜி, 1990களின் தொடக்கத்தில், ‘இப்டா கலைஞர்களின் குழுவொன்றிடம், “இது, உலகை வெல்வதற்கான பாடல். ரவி சங்கர், சரோத் கலைஞரான டீமிர் பரண், நாட்டிய மேதை சாந்தி பர்தான், அவர்தம் சமகாலத்தவரான தலைசிறந்த பல கலைஞர்களை ‘இப்டாவின் அரவணைப்புக்குள் கொண்டுவர வழிவகுக்கும் புதிய தொடுவானத்தை அது தோற்றுவித்தது என்றார்.
  அந்த நாட்களில், “தன் மனைவி அன்னபூர்ணாவுடனும், மகன் சுபேந்திர சங்கருடனும் ‘இப்டா கம்யூனுக்கு அடிக்கடி விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரவி சங்கர் என நினைவு கூர்கிறார் ப்ரீத்தி தி. பண்டிட்ஜி, முறையாக ‘இப்டாவில் இணைவதற்கு முன்பிருந்தே இது நடந்தது. “1946-ல் ‘இப்டாவில் அதன் இசையமைப்பாளராக இணைந்தார் பண்டிட் ரவி சங்கர். நாடுமுழுவதிலுமிருந்த கிராமியப் பாடல்களின் இசையை ‘இப்டா பாடல்களின் ராகங்கள் பெரிதும் சார்ந்திருந்தன. அமர் பாரத் (அழியாப்புகழ்மிகு பாரதம்) எனும் நாட்டிய நாடகத்துக்கு அவர் முதலாவதாக சிருஷ்டிபூர்வமான பங்களிப்பை எங்களுக்கு நல்கினார். அதன் இசை முழுவதையும் அவரே அமைத்தார். அவரைப்போன்ற இசை மேதையின் கைவண்ணத்தால் சாஸ்த்ரீய மற்றும் கிராமிய இசை நதிகள் இரண்டும் சங்கமித்து, அந்த நாட்டிய நாடகத்தை ஈடு இணையற்ற புகழின் உயரத்துக்குக் கொண்டுசென்றன. இந்திய கலாசார நாதத்தின் சாரத்தையும் பன்முக ஆற்றலையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டது இப்டா என்று, மேற்கு வங்க ‘இப்டா கிளையின் பொன்விழா சிறப்பு மலரில் அவர் எழுதினார்.
  ‘இப்டாவிலும் முற்போக்குக் கலாசாரத்திற்கான அதன் பணிகளிலும் முற்றாக ஈடுபாடுகொண்டு மூழ்கிவிட்டார் ரவி சங்கர்.
   “பருவமழையை வரவேற்பதற்கு உரிய ராகங்களைக் கையாண்டு எங்களுக்கு உத்வேகமளித்தார் அவர். அவற்றைக் கேட்டு நாங்கள் கிறுகிறுத்துப் போனோம்; இசையெனும் மந்திரத்தில் கட்டுண்டவர்களானோம். ஆனால் ஒருபோதும் நாங்கள் களைத்துப் போவதேயில்லை. அவர் எங்களுக்குக் கடுமையான பயிற்சி அளித்தார்; சிலசமயம் அது பகல் முழுவதும்-ஏன், இரவிலும்கூட-தொடர்வதுண்டு. பொதுவாக, அவர் முதலில் எனக்குத்தான் பயிற்சி அளிப்பார்; ரொபுதா எனக்குக் கற்றுத் தந்ததைப் பாடிக்காட்டி அதனைப் பிறருக்கும் கொண்டு சேர்ப்பேன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான கலந்தர் (Kalantar) ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் ப்ரீத்தி தி.
  ரவி சங்கர் ‘இப்டாவில் இருந்தபோது, மாக்சிம் கார்க்கியின் ‘அதல பாதாளம் (Lower Depths) நாடகத்தின் இந்தி தழுவலான சேத்தன் ஆனந்தின் நீச்சா நகர், (Neecha Nagar) போன்ற சில படங்களுக்கு இசையமைத்தார். குவாஜா அகமது அப்பாசின் ‘தர்த்தி கி லால் (Dharti ke Lal) படத்திற்கு அவர் இசையமைத்த பாடல்களில் ஒன்று, ‘நான் ஓயமாட்டேன் தலை சாயமாட்டேன் (‘hum rukenge nahin/hum jhukenge nahin) எனும் பாடலாகும்.
உன்னதக் கலைஞர்கள்
  ரவி சங்கர் மட்டுமல்லாது, டீமிர் பரண், சாந்தி பர்தான், சச்சின் சங்கர், அபானி தாஸ்குப்தா, சம்பு மித்ரா, சோபா சென், த்ருப்தி மித்ரா, ஜோதிப்ரசாத் அகர்வால், அன்னா பாவ் சாத்தே, வள்ளத்தோல், டாக்டர் ராஜா ராவ், எம்.நாகபூஷணம், பால்ராஜ் சஹானி, எரிக் சைப்ரியன், பிமல் ராய், தேராசிங் சான், கே.சுப்ரமணியம், தினா காந்தி (பதக்) மற்றும் ‘நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் (Ningal Enne Communist Aakki) நாடகத்தைப் படைத்த தோப்பில் பாசி எனும் அற்புதமான கலைஞர்களும்  ‘இப்டாவில் இணைந்தனர்.
  இவர்கள் மட்டுமல்லாது, பிஜன் பட்டாச்சார்யா, நேமி சந்திரா ஜெயின், வெங்கட்ராவ் கண்டில்கெர், சலீல் சவுத்ரி, ஹேமங்கோ பிஸ்வாஸ், ஜோதிர் இந்திர மெய்த்ரா மற்றும் அமர் ஷேக் ஆகியோரும் அந்த அமைப்பில் இருந்தனர்.
யார் அந்த மைய சக்தி?
  இவர்களைக் கவர்ந்திழுக்கும் மைய சக்தியாக இருந்தது யார்? சந்தேகத்திற்கு இடமில்லாமல், அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷிதான். முற்போக்கு வங்காள இலக்கிய ஏடான, ‘பரீச்சாய் (Parichay) க்கு அளித்த பேட்டியில், ஹேமாங்கோ பிஸ்வாஸ் ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்திருக்கிறார்: “ரவி சங்கர், டீமிர் பரண், சச்சின் சங்கர், சாந்தி பர்தான் இன்னபிறரின் அரசியல் பார்வையில் குறைபாடுகள் உள்ளன; வகுப்புகள் எடுப்பதன்மூலம் அவர்களை அரசியல் நெறிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் இதுகுறித்து ‘பி.சி.ஜே. (பி.சி.ஜோஷி)க்குத் தான் எழுதப்போவதாகவும் இப்டாவில் இருந்த [கம்யூனிஸ்ட்] கட்சியின் பெரிய தலைவரான பினாய், ஒரு நாள் என்னிடம் சொன்னார் என்பதே அது.
  சொல்லியவாறே அவர் எழுதவும் செய்தார்; அன்று மாலையே ஜோஷியிடமிருந்து பதில் கடிதமும் வந்தது: “அவர்கள்தான் உங்கள் அரசியல் தலைமைக் குழு (polit bureau). அவர்களிடம் அடிபணிந்து கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த பதில். அப்படிப்பட்ட சிறப்புக்கு உரியவர்தான் கலையுலக ஜாம்பவான்களையெல்லாம் ‘இப்டாவுக்கு ஈர்த்துவந்த ஜோஷி!
செக்டேரியன் பாதை
  1949-க்கு முன்னதாகவே ‘இப்டாவிலிருந்து விலகிய ரவி சங்கர், 1950-ல்அகில இந்திய வானொலியில் இசையமைப்பாளராகச் சேர்ந்தார். 1948-ல் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் எடுக்கப்பட்ட செக்டேரியன் பாதையின் விளைவாகச் சிறந்த பல கலைஞர்களும் விலகினர். இன்னொரு பி.சி.ஜோஷிதான் இல்லையே! இருப்பினும், ‘இப்டா யுகத்தில் தாம் உள்வாங்கிய மனிதநேய லட்சியங்களுக்குப் பல கலைஞர்களும் விசுவாசம் கொண்டவர்களாகவே இறுதிவரை வாழ்ந்தார்கள். இதற்குப் பிரகாசமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் ரவி சங்கர்.
தமிழில்: விதுரன்
Courtesy: THE HINDU/When Ravi Shankar was Comrade Robuda/Sankar Ray

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP