Thursday, April 9, 2020

அஜய் குமார் கோஷ்: வாழ்வும் பணியும்


அஜய் கோஷ்: வாழ்வும் பணியும்

அனில் ரஜிம்வாலே


[தோழர் அனில் ரஜிம்வாலே, புகழ்மிக்க 

மார்க்சிய சிந்தனையாளர்;  இந்தியக் 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில்  ஒருவர். 

அவரது ஆங்கிலக் கட்டுரைகள் சில ஏற்கனவே 

தமிழாக்கம் செய்யப்பட்டு, சஞ்சிகை 

வலைப்பூவில் வெளிவந்துள்ளன.  

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வார ஏடான ‘நியூ ஏஜ்’ 

2020 ஏப்ரல் 5-11 இதழில், தோழர் அஜய் கோஷ் அவர்களைப் பற்றி 

தோழர் ரஜிம் வாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 

இங்கே தரப்படுகிறது.  தமிழாக்கம்: எஸ்.துரைராஜ்]


    ஜய் கோஷ், தலைசிறந்த கம்யூனிஸ்ட்; தேசியவாதி; மிகவும் இடர்மிகு காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்.

     வங்கத்தில் ஓடும் அஜய் நதியின் கரையில் அமைந்த மிஹிஜம் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில், பிரம்ம சமாஜ வழிநடந்த அறிவாற்றல்மிகு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், 1909 பிப்ரவரி 20-ஆம் நாள் பிறந்தார் அவர். அதனால்தான் ‘அஜய்’ எனப் பெயரிடப்பட்டார். அந்நாள் மிஹிஜம் இப்போது புகழ்மிக்க சித்தரஞ்சன்.

            அவரது குடும்பம், கான்பூருக்கு இடம் பெயர்ந்தது; அங்கே அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரது ஆசிரியர் சுரேஷ் பட்டாச்சார்யா அவர்களால் பள்ளிக்கூடத்தில் நிறுவப்பட்ட ‘தருண் சங்கம்’ எனும் புரட்சிகர அமைப்பில் இணைந்தார். எதிர்காலத்தில் புரட்சியாளர்களாகப் பரிணமிக்கவிருந்த பிஜாய் குமார் சின்ஹா, பாதுகேஷ்வர் தத் ஆகியோரும்கூட இந்த தருண் சங்கத்தில் இணைந்திருந்தனர்.

            1924 ஆம் ஆண்டு, கான்பூரின் க்ரைஸ்ட் சர்ச் கல்லூரியில் (Christ Church College) அனுமதிக்கப்பட்ட அஜய், 1926-ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.  இந்து விடுதியில் தங்கியிருந்தார் அவர். பகத் சிங், சந்திரசேகர ஆசாத், சிவ வர்மா உள்ளிட்ட பிற புரட்சியாளர்கள் அவரது அறையில் சந்தித்தனர். மெய்யாகவே புரட்சிகர சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை அது!

பகத்சிங்குடன் சந்திப்பு

     பகத் சிங்கை முதன் முதலில்  1920-ஆம் ஆண்டு அவர் சந்தித்தார்; அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது 1928-ல். இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் அமைப்பில், தலைமறைவாக குண்டுகள் தயாரிக்கும் பிரிவின் ஓர் அங்கமானார் அவர்.

     1930 அக்டோபரில் கைதுசெய்யப்பட்ட அஜய் கோஷ், பகத் சிங் மற்றும் சகப்புரட்சியாளர்களுடன்  லாகூர் கோட்டை சிறையிலடைக்கப்பட்டார். அங்கு, புரட்சியாளர்கள் மேற்கொண்ட இரண்டுமாத உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

     தாம் விடுவிக்கப்பட்டவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என பகத் சிங், அஜய் கோஷ், சிவ வர்மா மற்றும் பிற புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். மிக துரதிருஷ்டவசமாக, பகத் சிங்கும் அவரது தோழர்கள் இருவரும் (சுகதேவ், ராஜகுரு) தூக்கிலிடப்பட்டனர். [கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என்கிற] அவர்களது அவா நிறைவேறாமல் போனது.

     போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அஜய் கோஷ் 1931 அக்டோபரில் விடுவிக்கப்பட்டார்.

            மீண்டும் 1932-ல் கைதுசெய்யப்பட்ட அவர், ஓராண்டு கான்பூர் சிறையிலும், அதன் பிறகு ஆறு மாதங்கள் ஃபெய்சாபாத் சிறையிலும் அடைக்கப்பட்டார். அங்கு, அஜய் கோஷ் அவர்களுடன் எஸ்.ஜி.சர்தேசாயும் ஒரே கொட்டடியில் இருந்தார். இருவரும் இணைந்து மார்க்சின் மூலதனத்தைக் கற்றனர். 1933-ல் சிறைவாசம் நிறைவுற்று, உறுதிமிகு கம்யூனிஸ்டாக வெளிவந்த அஜய், அதே ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில்

            பம்பாயில், 1934-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜய் கோஷ், கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்க பி.சி.ஜோஷி, ஆர்.டி.பரத்வாஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு உதவலானார். 1935-ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் சூரத்தில் நடைபெற்றதொரு கூட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பி.சி.ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936-ல் தோழர் அஜய் கோஷ், கட்சியின் பொலிட்பீரோவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரபூர்வ ஏடான ‘தேசிய முன்னணி’ (National Front ) 1938 பிப்ரவரி 3-ல் தொடங்கப்பட்டது. நாடுமுழுவதிலும் ஸ்தாபன மற்றும் அரசியல் பணிகளில் பி.சி.ஜோஷி ஈடுபட்டிருந்த நிலையில், அஜய் கோஷ்தான் அந்த ஏட்டை நடத்தும் கடமையை நிறைவேற்றினார்.

     தேச விடுதலைப் போராட்டம் ஓங்கி வளர்ந்துகொண்டிருந்த பின்னணியில், ஐரோப்பாவில் நாஜிசமும், பாசிசமும் தலைவிரித்தாடியதால் பாசிச அபாயம் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில், ‘தேசிய முன்னணி’ என்னும் வியூகமும் உத்தியும் வகுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றிக் கொண்டிருந்த காலம் அது. ஜியார்ஜி திமித்ரோவ் விடுத்த ஐக்கிய முன்னணிக்கான அறைகூவல், உலகெங்கிலும் பாசிச-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களுக்கு உத்வேகம் அளிப்பதாய் அமைந்தது.

            அஜய் கோஷ், 1940-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தியோலி தடுப்புக்காவல் முகாமில் அடைக்கப்பட்டார்.

     இதற்கிடையே, அவருக்குக் காசநோய் ஏற்பட்டு அவரது நுரையீரல்கள் இரண்டும் கிட்டத்தட்ட முற்றாக பாதிக்கப்பட்டன.

            அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் 1943 மே-ஜூனில் பம்பாயில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் காங்கிரசில் அஜய் கோஷ் பங்கேற்க இயலாமல் போனது; ஆயினும் மத்தியக் குழுவுக்கும் பொலிட்பீரோவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     1945-47 பேரெழுச்சியின் விளைவாக இறுதியில் 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. இந்த மகத்தான போராட்டத்திற்குத் தனது பங்களிப்பை நல்கியவர் அஜய் கோஷ்.

ரணதிவே வழியை எதிர்த்தவர் 

            1948-ஆம் ஆண்டு பிப்ரவரி கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலும் அஜய் கோஷ் பங்கேற்க இயலவில்லை. பி.சி. ஜோஷிக்கு பதிலாக பி.டி.ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோஷிக்கு எதிராகச் சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. ஆழமான நெருக்கடியில் கட்சி மூழ்கடிக்கப்பட்டது; சாகசவாதமும் சுய-அழிப்பும் மேலோங்கி நின்றன. சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டதை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், ஆயுதந்தாங்கிய போராட்டத்தின்மூலம் நேரு சர்க்காரைத் தூக்கியெறிய வேண்டும் என்றும், சோஷலிஸப் புரட்சியை நடத்தவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

            கட்சி முற்றாகத் தனிமைப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் (1948-1950) கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்திலிருந்து வெறும் 9000 (ஒன்பதாயிரம்!) ஆகச் சுருங்கிப்போனது.கோழைகள்’ என இழித்துரைத்து ஆயிரக்கணக்கானவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பெரும் எண்ணிக்கையிலானவர்கள், நம்பிக்கையிழந்து கட்சியைவிட்டு வெளியேறினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் போலீசாரால் கொல்லப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.

            அஜய் கோஷ், 1948-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். சாகசவாத வழிமுறைக்கு எதிராக ஒளிவுமறைவற்ற தெளிவான நிலையெடுத்தார் அவர். அஜய் கோஷ் (தலைமறைவு வாழ்க்கையில் அவர் பெயர் ‘பிரபோத் சந்திரா’), எஸ்.ஏ.டாங்கே (‘பிரபாகர்’). எஸ்.வி.காட்டே (‘புருஷோத்தமன்’) ஆகியோருடன் இணைந்து, ‘பி’ எனும் ஆங்கில எழுத்தில் தொடங்கும் புனைப்பெயர்கள் கொண்ட மூன்று கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகழ்மிக்க கடிதத்தைத் (Three P’s Letter) தயாரித்தார்.  பி.டி.ஆர். வழிமுறையை (BTR line) முறையாகத் தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விமர்சனம் செய்வதாய் அக்கடிதம் அமைந்தது; கட்சியின் வழிமுறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அது முக்கியமான பங்கு வகித்தது.

கட்சியின் பொதுச்செயலாளர்

              அஜய் கோஷ், 1950-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1951-ல் கல்கத்தாவில் தலைமறைவு காலத்தில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அவர் ஒருமனதாகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதலாகக் கட்சியின் வழிமுறையில் படிப்படியாக மாற்றங்கள் தொடங்கப்பட்டன. முதல் பொதுத் தேர்தலில் (1952) பங்கேற்பது எனக் கட்சி முடிவு செய்தது; இது கட்சியின் கொள்கை வழிமுறையில் பெரிய மாற்றமாகும். மக்களைவையில் 27 இடங்களை வென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 1948-50 காலகட்டத்தில் சுய-அழிப்பு அரசியல் பாதையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் கட்சி இதைக் காட்டிலும் மிக அதிகமான தொகுதிகளில் எளிதாக வென்றிருக்கும்.

            உலக சமாதானம், உணவு, விலைவாசி உயர்வு, பொதுத்துறை, தேசவுடைமை, புதுச்சேரி மற்றும் கோவா விடுதலை, மாநில மறுசீரமைப்பு, ஜமீன்தாரி முறைக்கு எதிரான போராட்டம் போன்ற பிரச்சனைகளில் கட்சி பல வெகுஜன இயக்கங்களை நடத்தியது.

            1956-ல் பாலகாட்டில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசும், 1958-ல் அமிர்தசரசில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். சோஷலிசத்தை எட்டுவதற்கான பாதையில் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கட்சி வலியுறுத்தியது. 1957-ல் கேரளத்தில் உருவான கம்யூனிஸ்ட் அரசாங்கம், தேர்தல் வழிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. வியூகத்தையும் உத்தியையும் மாற்ற வேண்டியது அவசியம் ஆயிற்று. எந்தவிதமான நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொண்டது.

     இருப்பினும், செக்டேரியன் மற்றும் ‘கண்மூடித்தனமான காங்கிரஸ்-எதிர்ப்பு’ வறட்டுத்தன நிலைபாடுகளைக் கட்சியில் ஒரு பகுதி விட்டொழிக்க இன்னும் மறுத்தது.

            1955 ஜூன் மாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப்பின் பத்திரிகையாளர்கள், நேரு சர்க்காரை மாற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கதாது ஏன்? என்று வினவினர். அதற்கு விடையளித்த அஜய் கோஷ், அவ்வாறு செய்யும் பட்சத்தில், ஆர்.எஸ்.எஸ்.-ஜனசங்கம் ஆட்சிக்கு வந்துவிடும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதனை அனுமதிக்காது என்றார். காங்கிரசில் உள்ள முற்போக்குப் பகுதியினர் உள்ளிட்ட பரந்துவிரிந்த ஜனநாயக முன்னணிதான் நேரு சர்க்காருக்கு மாற்றாக வரவேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

     ஜனநாயகத்துக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் போராட்டம், மார்க்சியத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சி ஆகியவை குணரீதியான புதியதொரு கட்டத்தை எட்டியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் காங்கிரஸ் (1958) உணர்த்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புவிதிகளில் (constitution) புதிதாகச் சேர்க்கப்பட்ட ‘முன்னுரை’ (preamble)யிலும், கட்சியின் இதர ஆவணங்களிலும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் கருத்து கைவிடப்பட்டது; விரிவான மூன்றடுக்கு தலைமை உருவாக்கப்பட்டது; இந்திய அரசியல் சட்டத்தின் கேந்திரமான பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டது; எதிர்காலத்தில் இந்தியாவில் அமையவிருக்கும் சோஷலிச சூழலில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பதற்கான வழிவகை செய்யப்பட்டது; ஆயுதங்களை ஏந்தாமல் அமைதிபூர்வமாக சோஷலிசத்தை எட்டுதல் எனும் கருத்தமைவு ஏற்கப்பட்டது.

     இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவதில் அஜய் கோஷ் தலையாய பாத்திரம் வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சரித்திரபூர்வமான மாற்றத்தை எட்ட இருந்த தருணம் அது.

மாஸ்கோ மாநாடும் அஜய் கோஷும்

     உலகில் உருவாகிவரும் புதிய நிலைமை, கம்யூனிஸ்டுகளின் வியூகம், உத்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் பொருட்டு 1957, 1960 மற்றும் 1969 ஆகிய வருடங்களில் மூன்று பெரும் உலகக் கம்யூனிஸ்ட் மாநாடுகள் நடைபெற்றன. 1960 நவம்பர் மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற 81 கட்சிகளின் மாநாட்டில் அஜய் கோஷ் கலந்துகொண்டார். சமாதான சகவாழ்வு, அமைதிபூர்வமான சமுதாய மாற்றம், வளர்ந்துவரும் நாடுகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஜனநாயகப் பாத்திரம், தேசிய ஜனநாயகம், நாடாளுமன்றப் பாதையின் திறன் ஆகியவை சம்பந்தமான அந்த மாநாட்டின் முடிவுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அந்த மாநாட்டின் ஆவணங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது.

மாவோயிசமும் கட்சியில் பிளவும்

            81 கட்சிகளின் அறிக்கையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டபோதிலும், வெகுவிரைவில் அதிலிருந்து பின்வாங்கி, ‘லெனினியம் நீடூழி வாழ்க’ என்னும் தலைப்பில் ஒரு போட்டி ஆவணத்தை அது வெளியிட்டது. சீனத்தில் மாவோயிசம் தலைதூக்கியது; உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சீர்குலைக்கின்ற அத்தியாயம் அரங்கேறவிருப்பதற்குக் கட்டியம் கூறியது.

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுதல் என்னும் ஆபத்து, 1961-இல் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் ஆறாவது காங்கிரசில், பூதாகரமாய் உருவெடுத்து நின்றது. அந்த மாநாட்டில், அஜய் கோஷ் கலக்கமற்ற, அனைத்துக் கருத்தோட்டங்களுக்கும் உரிய இடமளிக்கின்ற பாரபட்சமற்ற உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் புதிய கருத்து நிலைகள் பொதிந்திருந்தன; செக்டேரியன் புரிதல்களிலிருந்து அது விலகி நின்றது. காங்கிரசின்பால் ‘ஒன்றுபடுதலும் போராடுதலும்’ எனும் நிலையை அவர் மேற்கொண்டார்.

     அஜய் கோஷ், உடல்நலம் குன்றியிருந்தார். அவரது உரை ஒருமனதாக ஏற்கப்பட்டது; அதன் வெளிச்சத்தில் அரசியல் தீர்மானத்தைத் திருத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

            கட்சி பிளவுபடுதல் தற்காலிகமாக மட்டுமே தவிர்க்கப்பட்டது. 1962 அக்டோபரில் இந்தியாவை சீனா ஆக்கிரமித்தது; அதன் விளைவாகக் கட்சிக்குள்ளேயும் நாட்டிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

            [எனினும் அஜய் கோஷ் மறைவுக்குப் பின்] மூன்றில் ஒரு பகுதி தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி, போட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதால் 1964 ஏப்ரலில் கட்சி பிளவுண்டது; அந்தப் போட்டி கட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என பின்னர் நாமகரணம் சூட்டப்பட்டது.

சரித்திர நாயகர்

     இடர்மிகு சூழலில், 1962 பொதுத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார் அஜய் கோஷ்; நாடாளுமன்ற மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் அதிக இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சியாக ஆனது. உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்யலானார். இதனைத் தொடர்ந்து, 1962 ஜனவரியில் அவருக்கு மோசமான மாரடைப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு நடப்பதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 1962 ஜனவரி 13ஆம் நாள் அவர் அமரரானார்.

            மிகவும் கொந்தளிப்பான, இன்னல்மிகு காலகட்டத்தில், இந்திய நிலைமையின் பிரத்யேகமான நிலைக்கேற்ப வெற்றிகரமாக மார்க்சியத்தைப் பிரயோகித்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்தினார் அஜய் கோஷ். ஒரு தேசமாக இந்தியாவைப் புரிந்துகொண்ட அவர், தேசத்திற்கான கடமைகளையும், வர்க்கக் கடமைகளையும் ஒருங்கிணைத்தார்.

            கம்யூனிஸ்டுகள் அழிவு சக்தியல்ல; தேசத்தை ஜனநாயகரீதியில் மறுநிர்மாணம் செய்யவே அவர்கள் போராடியவர்கள் என்பதை அவர் நிரூபித்தார். மதவெறிக்கு எதிராகவும், மதவெறி பாசிசத்தால் ஏற்படும் அபாயங்களையும் எதிர்த்துப் போராடினார் அவர்.

            அஜய் கோஷ், சீர்மிகு கம்யூனிஸ்ட் மட்டுமல்ல; அவர் மகத்தான தேசியவாதி;, ஜனநாயகப் பண்பாளர்; மனிதருள் மாணிக்கம்!




Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP