Tuesday, April 30, 2013

மேதினி போற்றும் மேதினம்:





தொழிலாளர் மற்றும் மே தினங்கள்:

ஓரளவு தெரிந்த சில தனிச்சிறப்புகள்


அனில் ரஜிம்வாலே

ர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மேதினம் பற்றி நாம் அறிந்திராத சில தனிச்சிறப்புகள் உள்ளன; சில புனைந்துரைகளை அல்லது செவிவழிக்கதைகளை விளக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஓரளவு தெரிந்த உண்மைகளை விரித்துரைக்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் தினம் மேதினமாக உருவாகவில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான். மேதினம் தொடங்குவதற்குச் சற்று முன்னரே-சொல்லப்போனால், அமெரிக்காவில் தொழிலாளிவர்க்க இயக்கம் தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பதை நீண்ட பாரம்பர்யமாகக் கொண்டிருந்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி பல்வேறு இடங்களில் தோன்றிய மக்கள் எழுச்சி ஆகியவற்றின் ஓர் அங்கமாகத் தொழிலாளிவர்க்க இயக்கம் விளங்கியது. 1770களில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப்போரிலும், 1860களில் அங்கு நடந்த உள் நாட்டுப்போரிலும் அது பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டிருந்தது.
வேறெங்கும் தோன்றுவதற்கு முன்னரே இங்கிலாந்தில் தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. 18-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் என அதைச் சொல்லலாம். ஐரோப்பாவின் பல நாடுகளில் இத்தகு அமைப்புகள் தோன்ற ஆரம்பித்தபோது, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவடையத் தொடங்கின.
அக்காலகட்டத்தில்தான், அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படலாயின. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதல் தொழிற்சங்கங்கள் அமெரிக்காவில் அமைக்கும் பணி தொடங்கிற்று. சான்றாக, 1792-ல் ஃபிலடெல்ஃபியாவின் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு, பால்டிமோரின் தையல் தொழிலாளர்களுக்கு, நியூயார்க்கின் அச்சகத் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் அமைக்கப்பட்டன. 1796 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளில், நியூயார்க்கில் முறையே தளவாட மரச்சாமான்கள் செய்யும் தொழிலாளர்களுக்கும், கப்பல் கட்டுமானத் தொழிலாளர்களுக்குமான சங்கங்கள் அமைக்கப்பட்டன. வேலைநிறுத்தத்தைத் தகர்ப்பதை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இது அந்த நாட்டின் தொழிலாளர் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வேலைநிறுத்தத்தைத் தகர்ப்பது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. அப்படித் தகர்ப்பவர்கள் சங்கங்களிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்கள்.
1830-களில், குறிப்பாக, 1833-1837-ஆம் ஆண்டுகள் அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் மிக வேகமாக விரிவடைந்த காலம். நெசவாளர்கள், புத்தகங்கள் பைண்ட் செய்வோர், தையல் தொழிலாளர்கள், காலணி தயாரிப்பவர்கள், பெண் தொழிலாளர்கள் உட்பட ஆலைத் தொழிலாளர்கள் அவர்களில் உண்டு.
அந்த காலகட்டத்தில், தொழிலாளர் அமைப்புகளின் உள்ளூர் சங்கங்கள் முதன்முதலில் அமைக்கப்பட்டன. ஃபிலடெல்ஃபியாவின் இயந்திரப்பட்டறைத் தொழிலாளர் சங்கம் (1827), பால்டிமோர், நியூயார்க், போஸ்டன் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற சங்கங்களும் இதில் அடங்கும். 1836-ஆம் ஆண்டில், ஒன்றோடொன்று தொடர்புகொண்ட தொழிற்சங்கங்கள் 13 நகரங்களுக்கிடையே இருந்தன. நியூயார்க்கில் (1833-ல்) அமைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பொதுத் தொழிற்சங்கங்கமும் இதில் அடங்கும். இச்சங்கம் மிகத் திறனுடன் செயல்பட்டது. வேலை நிறுத்தத்திற்கென்றே நிரந்தர நிதியை அது கொண்டிருந்தது. நாளிதழையும் வெளியிட்டது. மற்ற நகரங்களிலும் தொடர்பு வைத்திருந்தது. தேசிய அளவில் அமைப்புகள் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக, 1834-ல் தேசிய தொழில் கூட்டமைப்பு (ந்ஏஷனல் டிரேட்ஸ் யூனியன்) தோற்றுவிக்கப்பட்டது.
வேலை நேரத்தைக் குறைக்க சில ஆரம்பகால போராட்டங்கள்:
வேலை நேரத்தைக் குறைப்பதற்கான போராட்டமே அமெரிக்கத் தொழிலாளிவர்க்கம் நல்கிய ஆரம்பகால, திறன்மிகு பங்களிப்பாகும். 1832-ல் வேலை நேரத்தைப் பத்து மணியாகக் குறைக்க நியூ இங்கிலாந்து ஆண் தொழிலாளர் சங்கம் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தியது. இந்த இயக்கத்தின் தலைவர்கள், ஏற்கனவே அரசியல் முழக்கங்களை எழுப்பிவந்தனர். இந்த சங்கத்தில் சேத் லூதர் போன்ற தலைவர்கள், இங்கிலீஷ் தொழிற்சாலை முறைமையை அப்படியே அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதை எதிர்த்தார்கள். அமெரிக்கத் தொழிலாளிவர்க்கம், சுதந்திரப் பிரகடனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. மேலும், தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப் படவேண்டுமானவும் கோரியது.
இங்கு முக்கியமானதொரு வரலாற்று உண்மையைக் குறிப்பிட்டாக வேண்டும். 1776 அமெரிக்கப் புரட்சியில் உழைக்கும் மக்களும், கறுப்பின மக்களும் நெருங்கிய இணைப்பும் ஆர்வமும் கொண்டிருந்தார்கள். பெரிய அளவில் அடிக்கடி நடைபெற்ற அதன் கொண்டாட்டங்களில் பொதுவான தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.
சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பரந்த அளவில் பங்கேற்றனர். எடுத்துக்காட்டாக, பெனிசில்வேனியா 11-வது படைப்பிரிவின் வீரர்களில் மிகப்பலர் தொழிலாளர்களே! ரூடி தீவு மற்றும் 72 மசாசூசெட்ஸ் நகரங்கள், பெனிசில்வேனியா ஆகிய பகுதிகளிலிருந்தும், கறுப்பின மக்கள், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் ராணுவத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
அமெரிக்கப் புரட்சியின் ராணுவம், மக்கள் ராணுவமாகும். அதுமட்டுமின்றி, அதன் முழக்கங்களும், நோக்கங்களும் அமெரிக்கத் தொழிலாளிவர்க்க இயக்கத்தில் அழிக்கவொண்ணா முத்திரை பதித்தன.
பல தலைமுறைகளாக, ஜூலை 4-ஆம் நாள், உழைக்கும் மக்கள் தினம் போன்றே கொண்டாடப்பட்டது. கூட்டங்கள், வரவேற்புக்கள், விழாக்கள், அணிவகுப்புகள், பேரணிகள் ஆகியன இதன் அங்கமாக இருந்தன. தொழிலாளர்களின் கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் அதுபோழ்தில் முன்வைக்கப்பட்டன.
1835-ஆம் ஆண்டுவாக்கிலேயே, அமெரிக்காவில் சில பகுதிகளில் அந்நாட்டுத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலை என்பது சாத்தியமாகியது. அந்த ஆண்டில், ஃபிலதெல்ஃபியாவில் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாளொன்றுக்கு 10 மணி நேர வேலை என்பதை நகர நிர்வாகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது, இந்தக் கோரிக்கைக்கான நாடுதழுவிய இயக்கத்திற்கு வழிகோலியது. இதன் விளைவாகப் பெரும் எழுச்சி பிரவகித்தது.
பத்து மணி நேர வேலை நாள் நியூ ஹாம்ஷைர் சட்டமன்றத்தில் 1847-ல் முதன்முதலாகச் சட்டமாக்கப்பட்டது. பின்பு, 1848-ல் பெனிசல்வேனியா, மைனி ஆகிய மாகாணங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. 1860-களில், அமெரிக்கா முழுவதும் 10 மணி நேர வேலைநாள் சட்டவிதியாக அமலுக்கு வந்தது.
அரசியல் அமைப்புகள்:
தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் கட்சிகள், ஐரோப்பாவில் தோன்றுவதற்குச் சற்று முன்னரே, அமெரிக்காவில் முகிழ்க்கலாயின. அமெரிக்காவில் கற்பனா சோஷலிச (உடோபியன் சோஷலிசம்) இயக்கத்திற்கு வலுவான பாரம்பர்யம் உண்டு; இந்தக் கற்பனாவாத, தற்சார்புகொண்ட காலனிகளைப் பரிசோதித்துப்பார்ப்பதற்கு ஏதுவான அதன் விரிந்துபரந்த பூகோளப்பரப்பு இதற்குரிய காரணிகளில் ஒன்றாகும். தாமஸ் ஸ்கிட் மோர், ஜார்ஜ் ரிப்ளே, ஃப்ரான்சிஸ் ரைட், ராபர்ட் டேல் ஓவன் (புகழ்பெற்ற ராபர்ட் ஓவனின் மகன்), ஹோரேஸ் க்ரீலே மற்றும் பலர் அன்றைய காலத்தில் அமெரிக்கத் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் தலைவர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள். ஓவன், பவுரியர் மற்ற பிறரின் செல்வாக்கால் அநேக கற்பனாவாத சோஷலிஸ்ட் அமைப்புகள் தோன்றலாயின. இதற்குப் பின்பு, முதலாவது அகிலத்தின் தாக்கத்தால் பெரும்பாலோர் மார்க்சீயத்தையும் விஞ்ஞான சோஷலிசத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
1828-ல் ஃபிலதெல்ஃபியாவில் முதன்முதலில் தொழிலாளர்களின் அரசியல் கட்சி (அமெரிக்காவில்) அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆறு ஆண்டுகளில், அறுபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் தொழிலாளர் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. பத்துமணி நேர வேலை நாள், குழந்தைகளின் கல்வி, கட்டாய ராணுவ சேவையைக் கைவிடுவது, திவாலான கடனாளிகளுக்குச் சிறைத் தண்டனையை நீக்குவது, ஊதியத்தைப் பணமாக வழங்குவது, வருமான வரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற சமூக, அரசியல் ரீதியிலான அவர்களின் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
நகராட்சி மற்றும் மாநில சட்டமன்றம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர் கட்சிகள் போட்டியிட்டன. ஃபெடரல் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவோடு 1829-ல் தொழிலாளர் கட்சிகளின் இருபது வேட்பாளர்கள் ஃபிலதெல்ஃபியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பத்துமணி நேர வேலைக்கான போராட்டத்தின் பயனாக, நியூயார்க்கில் உழைக்கும் ஆண்கள் கட்சி தொடங்கப்பட்டது. 1829-ல் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்தன; அதன் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பேட்டர்சன், நியூஜெர்சி ஆகிய நகரங்களிலிருந்த ஆலை உரிமையாளர்கள், இரவு உணவு நேரத்தை 12 மணியிலிருந்து 1 மணிக்கு மாற்ற முனைந்தபோது, 1828-ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தொழிலாளர்களில் அதிகம்பேர் சிறார்கள். இப்படியே போனால், சாப்பாட்டு நேரத்தையே நிர்வாகம் நீக்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடமிருந்தது. வேலை நிறுத்தத்தை உடைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
1820, 1830-களில் நடைபெற்ற பல போராட்டங்களில் பெண்கள் முன்னணியில் இருந்தார்கள். இதனால் ஆலைகளில் கூட பெண்கள் சங்கம் 1834-ல் அமைக்கப்பட்டது.
பிற கட்சிகள் பலவற்றிலும், அதிலும் குறிப்பாக-ஜனநாயக, குடியரசுக் கட்சிகளிலிருந்த தொழிலாளர்கள் முனைப்பாக இருந்தார்கள். உண்மையில், இக்கட்சிகள் பெருமளவு தொழிலாளர்களைச் சார்ந்திருந்தன. அன்றைய காலத்தில், இக்கட்சிகள் பிற்காலத்தில் மாறியதுபோல் அல்லாமல், தொழிலாளர்கள், அவர்தம் கோரிக்கைகள் மற்றும் இயக்கத்தோடு நெருங்கியிருந்தன.
நாம் ஏற்கனவே கூறியபடி, மேதினம் கொண்டாடப்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே, அமெரிக்காவில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கும் மரபு இருந்தது. மீண்டும் மீண்டும் தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக, செப்டம்பரில் ஒரு நாள், அதிலும் குறிப்பாக முதல் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கும் பழக்கம் இருந்தது. இவை பெரும் விழாக்கள் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களாக அமைந்தன. தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் ஊர்வலமாக வருவதும், கூட்டங்கள் நடத்துவதும் இதன் அங்கம். ஜூலை 4-ஆம் தேதியைத் தொழிலாளர் தினமாக அனுஷ்டிப்பது பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம்.
அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்திலும், அவர்களின் தொழிற்சங்கங்களிலும் நடைபெற்ற சில நிகழ்வுகளே தொழிலாளர் தினம், மேதினம் ஆகியவை உருவாவதற்கான உந்து சக்தியாக விளங்கின. அமெரிக்காவில் இரண்டு பெரிய தேசிய தொழிற்சங்கங்கள் இருந்தன: அவற்றில் ஒன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் (Knights of Labour); மற்றொன்று அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் (American Federation of Labour-AFL). தொடக்கத்தில், இது அமெரிக்கா மற்றும் கனடாவின் அமைப்புரீதியான தொழில் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் (Federation of Organised Trades and Labour Unions-FOTLU).
1882 மே 18-ல் நடைபெற்ற நியூயார்க் மத்திய தொழிற்சங்கக் கூட்டத்தில் விழாவாகக் கொண்டாட ஒரு நாளை ஒதுக்க வேண்டுமென பீட்டர் மெக்குயர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். செப்டம்பரில் முதல் திங்கட்கிழமை இதற்கென ஒதுக்கலாம் எனவும் அவர் பரிந்துரை செய்தார். இது ஜூலை நான்காம் தேதிக்கும் அறுவடைத் திருநாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வரும்.
நியூயார்க் நகரிலுள்ள தெருக்களில் செப்டம்பர் 5-ஆம் தேதி, எல்லாத் தொழில்களையும் சேர்ந்த 30,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக வலம் வந்தனர். அங்குதான் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரம் தமது சொந்த வேலை என்ற கோஷம் முழஙகப்பட்டது. 1883-ல் இதே நிகழ்வு மீண்டும் நடைபெற்றது. 1884-ல் நியூயார்க் மத்திய தொழிற்சங்கம் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை (அது செப்டம்பர் முதல் தேதியாகும்) தொழிலாளர் பேரணி நடத்த முடிவு செய்தது. வேறு நகரங்களிலுள்ள தொழிலாளர்களும் இதைப் பொதுவான விடுமுறையைப் போல் கொண்டாடவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பல நகரங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
தொழிலாளர் கூட்டமைப்பு (எஃப்.ஓ.டி.எல்.யு) 1884-ல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையைத் தொழிலாளர்களின் தேசிய விடுமுறை நாள் போன்று அனுஷ்டிக்க வேண்டும் என முடிவு செய்தது. நாடுமுழுவதும் இந்த அறைகூவல் எதிரொலித்தது. செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை முதலில் தேசிய அளவில் அனுஷ்டிப்பதானது 1885 செப்டம்பர் 7-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, மேலும் பல மாநிலங்களில் தொழிலாளர் தினம் விடுமுறை நாளாகப் பின்பற்றப்பட்டது.
இந்த சங்கங்களும் அவற்றின் தேசிய அமைப்புகளும் வர்க்க ஒருமைப்பாட்டை, குறிப்பாக, எட்டுமணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது மே முதல் நாளன்று அனுஷ்டிக்க முடிவு செய்தன. இதை 1886 மே மாதம் முதல் நாள் தொடங்கி  நடத்த அவர்கள் முடிவு செய்தார்கள். சில மாநிலங்களில் 8 மணி நேர வேலை என்பதற்கான சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இதற்கான தேசிய சட்ட அங்கீகாரம் பெறவேண்டியிருந்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 1886 மே முதல் நாள் அமெரிக்கா முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
1886 மே மாதத்திற்கு முன்பு ஒரு சில ஆண்டுகளில் பல்வேறு தேதிகளில் அல்லது நாட்களில் தேசிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பரில் ஒரு நாள், எடுத்துக்காட்டாக, 1884-ஆம் ஆண்டு நடத்த ஆலோசிக்கப்பட்டது. 1885, 1886-ஆம் ஆண்டுகளில்தான் தேசிய தொழிற்சங்கங்கள் தேசிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டிருந்தன.
உண்மையில், 1886 மே மாதத்தில் தேசிய அளவில் நடைபெற்ற இயக்கம், குறிப்பாக, முந்தைய ஆண்டுகளைப்போல் செப்டம்பரில் நடத்தவே ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அது வாணிப சுழற்சிக்காலம் என்பது உட்பட பல்வேறு காரணங்களால் மே மாதத்திற்கு மாற்றப்பட்டது.
இதே காலத்தில்தான், நாளொன்றுக்குப் பத்துமணி நேர வேலை என்பதற்கான போராட்டம், எட்டு மணி நேர வேலை என ஆக்குவதற்கான போராட்டமாக மாற்றம் பெற்றது.
மேதினம் பற்றிய எஞ்சிய வரலாறு நன்கு அறியப்பட்டதுதான் என்பதால் அதனை இங்கு நான் மீண்டும் கூறவில்லை.
எனினும் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. 1886 மேதின நிகழ்வுகளின்போதுதான் செங்கொடி பிறந்தது என்கிற பிரச்சாரம் தவறானது. 1886க்கு முன்னரே அமெரிக்கா முழுவதும் செங்கொடியைப் பரவலாகக் காணமுடிந்தது. 1840, 1850, 1860-களிலேயே கூட்டங்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்களின்போது தொழிலாளர்கள் செங்கொடிகளையும் செம்பதாகைகளையும் ஏந்தி வந்தனர்.
இதுதவிர, ஐரோப்பாவில் 1830-களிலேயே உழைக்கும் வர்க்கத்திற்குரிய பிரத்யேக சின்னமாக செங்கொடி ஆகிவிட்டது. 1832 ஜூனில், தொழிலாளர்கள் தமது அரசியல் குறியீடாகச் செங்கொடியை பாரீஸ் எழுச்சிப் போராட்டங்களின்போது ஏற்றினார்கள்.
இந்தியாவில் மேதினம்:
1862 ஏப்ரல்-மேயில், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்த 1200 தொழிலாளர்கள் சில நாட்கள் செய்த வேலை நிறுத்தத்தை இந்தியாவில் நடைபெற்ற ஆரம்பகால வேலை நிறுத்தங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். இதில் ஆர்வத்துக்குரிய செய்தி என்னவெனில், அவர்களின் கோரிக்கையும், எட்டுமணி நேர வேலை என்பதேயாகும். லோக்கோ பிரிவுத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. எனவே, ஹவுரா ரயில் நிலையத் தொழிலாளர்களும் அதையே கோரினார்கள். அமெரிக்காவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மேதினத்திற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் மேதினம் அனுஷ்டிக்கப்பட்டதற்கான ஆரம்பகாலச் சான்றுகள் சிலவற்றைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம். நாம் அறிந்தவரை, இந்தியாவில் 1923-ல் மேதினம் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொடக்ககால கம்யூனிஸ்டுகளில் சிங்காரவேலு செட்டியாரும் ஒருவர்; தென்னிந்தியாவின் தொழிலாளர் தலைவர் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தில் செல்வாக்குடையவர். உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் கொண்டாடுவதால், இந்தியாவிலும் மேதினம் கொண்டாட வேண்டுமென்று 1923 ஏப்ரலில் ஓர் ஆலோசனையை முன்வைத்தார் சிங்காரவேலு செட்டியார். இந்நிகழ்வின்போது நாடுமுழுவதும் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கூறினார். சென்னையிலும் மேதினம் கொண்டாட வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சென்னையில் அந்த நாளில் பேரணிகளுடன் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன: ஒன்று வடசென்னை தொழிலாளர்கள் கலந்துகொண்ட கூட்டம். இது உயர்நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள கடற்கரையிலும், தென்சென்னைக்குரிய பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் நடைபெற்றன. லேபர் கிசான் கட்சி அமைக்கப்பட்டுள்ளதாக அன்றைய தினம் அறிவித்தார் சிங்காரவேலு செட்டியார். இந்தக் கூட்டங்களில் அநேக காங்கிரசாரும் பங்குகொண்டனர்.
உயர்நீதி மன்றத்திற்கு அருகமைந்த கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிங்காரவேலு செட்டியார் தலைமைவகித்தார். மற்றொரு கூட்டமோ எஸ்.கிருஷ்ணசாமி சர்மா தலைமையில் நடைபெற்றது. லேபர் கிசான் கட்சியின் அறிக்கையை பி.எஸ்.வேலாயுதம் படித்தார்.
இக்கூட்டங்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளியானது. மாஸ்கோவிலிருந்து வெளியான தி வேன்கார்டு பத்திரிகை, இதை இந்தியாவில் நடைபெற்ற முதல் மேதினம் (ஜூன் 15, 1923) என வர்ணித்தது.
1927-ல் மீண்டும் சிங்காரவேலு செட்டியார் முயற்சியால் மேதினம் கொண்டாடப்பட்டது. இம்முறை சென்னையிலுள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. பிற்பகலில் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர் விருந்தளித்தார். மாலையில் ஊர்வலம் நடைபெற்றது. டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டமாக அந்தப் பேரணி மாற்றப்பட்டது. அங்கு உடனே செங்கொடி கிடைக்காததால், சிங்காரவேலு, தமது மகளின் சிவப்பு சேலையைக் கொடியாக்கி அதைத் தனது வீட்டின்மீது ஏற்றினார்.
மேதினம், குறிப்பாக செங்கொடி, தொழிலாளிவர்க்க வரலாறு ஆகியவற்றில் நாம் அறிந்ததைக் காட்டிலும் ஆர்வத்தைத் தூண்டுகிற, அறிவார்ந்த எண்ணிலடங்கா செய்திகள் உண்டு. 
Courtesy: MAINSTREAM, MAY 1, 2010 (LABOUR DAY AND MAY DAY: SOME
 LESSER KNOWN FEATURES/ANIL RAJIMWALE)
 
தமிழில்: இளசை மணியன்
 






0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP