Sunday, April 14, 2013

யுகப்புரட்சியின் நாயகர்


வரலாற்றில் முத்திரைபதித்த

மாபெரும் புரட்சியாளர்


அனில் ராஜிம்வாலே
வ்வுலகில், 54 ஆண்டுகளே வாழ்ந்தார் லெனின். வரலாற்றில் அவரைப் போன்று இன்னொரு லெனினைக் காண்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல. வாழ்ந்த 54 ஆண்டுகளுக்குள், உலக வரலாற்றில் அவர் ஆழமான தாக்கத்தை உருவாக்கினார். அவர், தத்துவங்களை ஆய்வு செய்த்தோடு, அவற்றை நடைமுறைப்படுத்தி, இதுவரை உலகம் கண்டிராத மகத்தான புரட்சியை நடத்தியவர்.
லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிறந்தார். மிகக் கடுமையான முரண்பாடுகளை அவர் முற்றாக உணர்ந்துகொண்டார். எனவேதான் அவரால் மார்க்சியத்தை மேலும் உயர்மட்டங்களுக்கு வளர்த்தெடுத்துச் செல்லவும், ஒருசமூக- அரசியல் மாற்றத்திற்குத் தலைமையேற்கவும் முடிந்தது.

அவருக்கு இது எவ்வாறு சாத்தியமாயிற்று? அவர் இயக்கவியலைக் கற்றுத் தேர்ந்தது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஹெகல் பற்றிய கட்டுரை ஒன்றில், மார்க்சியவாதிகள் ஹெகல்பற்றிய புரிதல் இன்றியே பணியாற்றிவந்துள்ளனர் எனக் குறிப்பிட்டதோடு,  இது உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் எனவும் கூறினார். எனவே, அவர் ஹெகலைக் கற்றுணரத் தலைப்பட்டார். ஹெகலின் இயக்கவியலைக் கற்றுணர்ந்த வெகுசிலரில் லெனினும் ஒருவர். லெனினது தொகுப்புநூல்களின் 38வதுதொகுதி இதற்குச் சான்றாக விளங்குகிறது. இவ்வாறாக, அரிஸ்டாடில், ஹெகல், மார்க்ஸ் ஆகியோரைப் போன்று மிகப்பெரிய தத்துவஞானியாக லெனின் திகழ்ந்தார்.

உலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறிவரும் காலத்தில் லெனின் வாழ்ந்தார். மற்றெல்லோரைக் காட்டிலும் இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு ஏகாதிபத்தியம் பற்றிய சில முடிவுகளை மேற்கொண்டார். ஏகாதிபத்தியம் பற்றி அவர் மேற்கொண்ட முடிவுகள் இன்றுவரை தத்துவம் மற்றும் நடைமுறைப் பணிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை அவர் ஐரோப்பிய நாடுகளில் கழித்தார். அவர் மிகுந்த ஆர்வத்தோடும், மிக ஆழமாகவும், மிக வேகமாகவும் படித்து, தனது காலத்தில் உருவாகிவரும் மிகப் பெரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டார். அதனையொட்டி ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியதோடு, அக்கட்சியை வழி நடத்தினார். அதே வேளையில் அவர், இரண்டாவது அகிலத்திலும் பங்கேற்றுச் செயல்பட்டார். இரண்டாவது அகிலத்தில் பணியாற்றும் வேளையில்தான், தொடங்கவிருந்த முதல் உலகப்போருக்கான எதிர்ப்பை முறைப்படுத்த முயன்றார். அதோடு புரட்சிகர நெருக்கடியை இணைத்தார். இது மேற்கு ஐரோப்பாவில் புரட்சி உருவாக வழி வகுத்து, புகழ்வாய்ந்த ரஷ்யப் புரட்சியையும் வழி நடத்தியிருக்கும்.

ஏகாதிபத்தியச் சங்கிலியின்பலவீனமான கண்ணிஎன லெனின் ரஷ்யாவை அடையாளம்கண்டிருந்தார். இதனால் மேற்கத்தியத் தலைவர்கள் லெனினை எதிர்த்ததோடு, முதலாளித்துவ அமைப்பின் எதிரி என அவரைச்சாடினர். இது லெனினது ஆற்றலுக்கும் வரலாற்றில் அவர் வகித்த பங்கிற்குமான புகழாரமாகும்.
1905-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தோல்விக்கு முன்னரே, லெனின் ரஷ்யாவின் விவசாய உறவுகள் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டார். முதலாளித்துவ உறவுகள் எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகின்றன என்பதைத் தனது ஆய்வில் அவர் எடுத்துக்காட்டினார். இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதற்காக அவர் நரோத்னிக்குகளை விமர்சித்தார். அந்த விமர்சனம் நமது நாட்டின் இன்றைய போலி புரட்சியாளர்களுக்குப் பொருந்தும். இந்த விமர்சனத்தை அவரது பிரபலமானமக்களின் நண்பர்கள் யார்?என்ற நூலில் குறிப்பிட்டார். இதனுடைய தொடர்ச்சியாகரஷ்யாவில்  முதலாளித்துவ வளர்ச்சிஎன்ற ஆய்வை மேற்கொண்டார்.

இந்த நெருக்கடிக்களுக்கிடையே லெனின் மற்றொரு நெருக்கடிமீதும் கண்வைத்திருந்தார். அது அணுபற்றியது. சித்தாந்தத்திலும் அவரது பார்வை பதிந்தே இருந்தது. அவரது  ‘பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற நூலைப்படிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது. அவரது காலத்தில் இயற்பியலில்  எந்தவொரு கோட்பாட்டையும் அதன் விளைவாக உருவாகும் சிந்தாந்த முரண்பாடுகளையும் அவர் கவனத்தில் கொண்டிருந்தார். சித்தாந்தம் நெருக்கடியில் இருந்தது. அனைத்து இயற்கை விஞ்ஞானக் கோட்பாடுகளையும் கற்றறிந்தபின் அவர் பொருள்முதல்வாதத்திற்கு ஆதரவாக நின்றார். தனது நூலினைக் கட்சி உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார். இது 1909- ஆம் ஆண்டில் நடந்தது.
தொழிலாளி வர்க்கத்திற்கு தேவையானது தெளிவான சித்தாந்தமே தவிர, குழப்பம் அல்ல என்றநிலையை லெனின் மேற்கொண்டார். 
ரஷ்ய சோவியத் புரட்சியின் தலைமையில் லெனின் இருந்தார். 1917- ஆம் ஆண்டு நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், தொழிலாளி- விவசாயி ஆட்சிக்கான மாற்றம் உருவாகும் என அவர் உணர்ந்தார். அவரது  ஏப்ரல் ஆய்வுரைகளில், இரட்டை அதிகாரத்தலைமை பற்றிக் குறிப்பிட்டார். வரலாற்றிலேயே இது பற்றிக் குறிப்பிட்ட ஒரே மனிதராக அவர் இருந்தார். இயற்கையான இயக்கவியலின்படி, இந்த இரட்டை அதிகாரத் தலைமை ஒரு புதிய புரட்சியை உருவாக்கும் என லெனின் கூறியது அக்டோபரில்புதிய காலண்டர் படி நவம்பர்) நிகழ்ந்தது. 1917-ஆம் ஆண்டு இயக்கவியலின் தொகுப்பாக விளங்குகிறது. அந்த ஆண்டு ஏற்பட்ட மிகக் கடுமையான புரட்சிகர மாற்றங்களை லெனின் ஒருவர்மட்டுமே புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீர்வுகண்டிருக்கமுடியும்.

ரத்ததாகம் கொண்ட புரட்சியாளர் என்று சிலர் லெனினைப் பற்றிக் கூறிய பிரச்சாரம் உண்மையானதல்ல. 1917-ஆம் ஆண்டில் அமைதியான முறையில் அதிகாரமாற்றம் ஏற்பட இரண்டுமுறை லெனின் முயன்றார். உண்மையில், ரஷ்யப்புரட்சியை மிக அமைதியான ஆயுதப்புரட்சி என்றுதான் லெனின் கூறினார். ரஷ்யாவைப் பார்த்து, அதே போன்ற வழியைப் பின்பற்ற வேண்டாம் என மேற்கத்திய நாடுகளின் க்ம்யூனிஸ்டுகளுக்கு எடுத்துக்கூறிய லெனின், தேர்தல்கள் போன்ற ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்குமாறும் கூறினார். ஆசியக்கண்டத்தின் புரட்சியாளர்களுக்கும் இதே அறிவுரையைத்தான் வழங்கினார்.

லெனின் ஒருபோதும் கட்சியில் எந்தப் பொறுப்பையும் வகித்ததில்லை. கட்சி, கூட்டுத்தலைமையின்கீழ் இயங்கியது. கட்சியின் தலைவர்களுக்குப் பொறுப்புகள் சுழல்முறையில் அளிக்கப்பட்டன. லெனினது தலைமை, தத்துவார்த்த, அறிவார்ந்த, தூண்டுதல் அளிக்கும் தலைமையாக இருந்தது. மிகுந்த வற்புறுத்தல்களுக்குப் பின்னர் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர்  வகித்த பொறுப்பு  நமது நாட்டில் பிரதமர் வகிக்கும் பொறுப்பிற்குச் சமமானதாகும். பதவிகளைப் பிடிப்பதையும், தனிநபர் வழிபாட்டையும் அவர் வெறுத்தார். 1922-ஆம் ஆண்டில்தான் கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதுவும், கட்சியின் மத்தியக் குழுவின் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பாகவே உருவாக்கப்பட்டது. பின்னர் உருவான வரலாறு, லெனின் எச்சரித்தபடி, இதிலிருந்து மாறுபட்டதாக அமைந்தது. சோவியத் ஆட்சியில் வளர்ந்துவந்த அதிகாரவர்க்கப் போக்குகள் குறித்து அவர் மிகவும் கவலைகொண்டார்.
புதிய சர்வதேசப் பொருளாதார ஒழுங்குமுறைஎன்ற  வாதத்தைத் துவக்கியவர் லெனின் என்பது பொரும்பாலோருக்குத் தெரியாது. ((இதனை 1922-ஆம் ஆண்டில் அவர் உருவாக்கினார். மேற்கத்திய நாடுகளோடு இத்தகையதொரு பொருளாதார ஒழுங்குமுறையை உருவாக்கும் பணியில் சோவியத் ரஷ்யா பங்கேற்கத் தயார் என லெனின் கூறினார். எத்தகைய தீர்க்கதரிசனமான சிந்தனையோட்டம்!

காலனி நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களோடு நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், புதிய உலகு ஒன்றை உருவாக்கவும், சரியான தத்துவார்த்த நிலையை உருவாக்கியதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இருந்த லெனினின் பங்களிப்பை நாம் மறந்துவிடக்கூடாது. பிற்காலத்தில் உருவான இந்திய- சோவியத் நட்புறவு போன்றும், இதர நாடுகளோடு நட்புறவுகள் உருவாக  லெனின் அடித்தளமிட்டார். அதோடு  பரந்த அளவில் விடுதலைப் போராளிகளின் தலைமுறைகளை உருவாக்குவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பரந்த கூட்டணியின்மூலம் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்டு, புதிய, நியாயமான உலகத்திற்கான மாற்றம் உருவாகும் என்பதை லெனின் உணர்ந்திருந்தார். இவ்வகையில் ஒரு சகாப்தம் முழுமைக்குமான ஒரு சித்தாந்தவாதியாக அவர் திகழ்ந்தார்.
லெனினது ஆலோசனைகளும், அவர் உருவாக்கிய தத்துவக் கோட்பாடுகளும் செவிமடுக்கப்பட்டிருந்தால் பின்னாளில், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிஸ்ட் நாடுகளிலும் நிகழ்ந்த தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இருப்பினும், லெனின் உலக வரலாற்றில், என்றென்றைக்குமான முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றுள்ளார்.

(நன்றி:நியூ.ஏஜ்’, ஏப்ரல் 17-23, 2011)
தமிழில்: வீ. ராஜமோகன்
COURTESY: NEW AGE/APRIL 17-23, 2011

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP