Wednesday, October 30, 2013

பல்லாண்டு பல்லாண்டு-3

-->
-->
பல்லாண்டு பல்லாண்டு-3
பி.ச.குப்புசாமி
  னது கடற்கரை அனுபவங்கள் சொற்பமானவை. அவற்றுள் இன்றளவும் பிரகாசமாய்த் திகழ்வது அன்றைய கடற்கரை அனுபவந்தான்.
  அன்றைக்கு ஒரு பெரிய நிலவு வானத்தில் இருந்தது.
  ஜெயகாந்தன், நண்பர் வையவன், நான் என மூவரும் ஓர் ஒதுக்கமான இடத்தில் போய் உட்கார்ந்தோம். பேச ஆரம்பித்தோம். அந்த கடற்கரையின் பிற ஓசைகள் எல்லாம் எங்கள் காதில் படாமல் போயின.
  அன்று பகல் பூராவும் தார் ரோடு, டவுன் பஸ், பிறரின் பிரஸன்னம் – இவற்றின் ஊடாக நாங்கள் மேற்கொண்ட சிறு சிறு உரையாடல்கள் எல்லாம் எங்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்கனவே உண்டாக்கிவிட்டிருந்தன. அவருக்குப் பிடிக்காதவை எல்லாம் எங்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டன. அவருக்கும் பிடித்தது எல்லாம் எங்களுக்கும் பிடித்துப்போய்விட்டன.
  இப்படிப்பட்ட ஒருவரோடு நிலவு பிரகாசிக்கும் ஒரு கடற்கரையில் அமர்ந்து கடலையும் பிற காட்சிகளையும் மறந்து உரையாடுவது என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!
  ஆரம்பத்தில் ஜெயகாந்தனின் கவனம், வானிலிருந்து பொழியும் நிலவொளியின்பால் சென்றது. தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனமெல்லாம் நிலவை வர்ணிப்பார்கள் என்று அவர் கிண்டலடித்தார்.
  எப்பொழுதுமே அவரது உரையாடல்களின் பல சிறப்பம்சங்களில் ஒன்று அவ்வப்பொழுது பீறிட்டு ஊற்றெடுக்கும் ஹாஸ்ய ரஸம்தான். ஜோக்கராக இல்லாத ஒரு சீரியஸான நபர் இத்தகைய சிரிப்பலைகளை மூட்டிவிடுவதை நான் வேறு யாரிடத்தும் கண்டதில்லை. Wit is the salt of conversation என்று எங்கேயோ படித்தது கவனம் வரும்.
  அன்று அதற்கப்புறம் என்னென்ன  வோ-காந்தியைப்பற்றி, நேருவைப்பற்றி, பாரதியைப்பற்றி, விவேகானந்தரைப்பற்றி, கம்யூனிஸ்டுக் கட்சியைப்பற்றி, அங்கே அவருக்கு நேர்ந்த அருந்தோழமைகள்பற்றி, அவரது இளம்பிராயம் மற்றும் அவர் எழுத வந்ததுபற்றியெல்லாம் பேசியபின், நாங்கள் அன்று பகல் பூராவும் அறியாதுபோன ஜெயகாந்தப் புஷ்பத்தின் இன்னொரு மடல் அவிழ்ந்தது. அவர் பாடலானார். அவர் பாடியது, ஒரு பல்லக்குக்கட்டி, கடலுக்கும் நிலவுக்கும் வானுக்கும் மேலே எங்களைத் தூக்கியதுபோல் இருந்தது.
  நாடு வளர்ந்து செழிக்குது – புது
   நம்பிக்கைகள் பிறக்குது
என்று ஒரு வரி பாடினார். அது ஒரு காலத்தில் இவரே இயற்றிக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மேடைகளில் பாடிய பழம் பாடலாம். இப்போது அவர் பாடுகிறபொழுது ஒரு நம்பிக்கையின் த்வனி ஆகாயமெல்லாம் பரவியதுபோல் பட்டது.
  “கத்தும் கடல்தன் மடியின் செல்வம்
   வித்திட நம்மை அழைக்குது!
   முத்தும் பவளமும் மூலப்பொருள்களும்
    தெற்குக் கரையினில் கிடைக்குது!
-இந்த வரியை அவர் பாடியபொழுது, நாங்கள் தென்னிந்தியக் கடற்கரைகள் அத்தனையின் ஆகாசத்திலும் நீந்தினோம்.
  “மிக விரைவாக இயங்கி அதிர்ந்திடும்
  யந்திர ஆலைகள் முழங்குது!
  முகிலெனத் திரண்ட பஞ்சிலிருந்து
  துகில் இழை மழையென வழங்குது!
--இதன் முதல் வரியை அவர் பாட ஆரம்பித்த உடனேயே எங்களுக்கு யந்திரங்களின் ஓசைகள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
“மிக விரைவாக இயங்கி அதிர்ந்திடும்...” கம்பீரமான அந்தக்குரல் இன்னும் காதில் அதிர்கிறது.
  அப்புறம், ஜெயகாந்தன், கவிஞர் தமிழ் ஒளியைப்பற்றிப் பிரஸ்தாபித்து அவருடைய “விதியோ? வீணையோ?”-வில் வரும் கீழ்க்கண்ட வரிகளைப் பாடினார்:
 “காவிரி மங்கை நடந்து கடற்கரை
  கண்டு குளிக்கும் இடம்!
 பூவிரி தாழைகள் என்றுஅவள் ஆடை
 களைந்து புனைந்த இடம்!
 நீவு நெடுந்திரை யோடுகடல் விளை
 யாடிய நெய்தல் இடம்!
 யாவும் விதிக்கிரை யாகும்எனக் கடல்
 ஆடிய கானல் இடம்!
என்று அவர் பாடக்கேட்டு மனப்பாடமான இந்த வரிகள் ஐம்பத்துமூன்று வருஷங்களாகியும் மறவாமல் இருக்கின்றன.
  அவரது சங்கீத ஞானம் அவருக்கு அமைந்த ஒரு மகாபாக்கியம் என்று நான் கருதுகிறேன். எழுத்தாளர்களுக்கு இசை ஞானம் என்பது கலைமகள் அளிக்கும் அரிய பரிசாகும். மனோபாவனைகளை முழுக்கவும் சிறப்பாகவும் ஊகித்து உணர அது அவர்களுக்கு வழியமைத்துத் தருகிறது என்றெல்லாமும் நான் கருதுவதுண்டு.
  பின்னால் நிகழ்ந்த பல சந்திப்புகளில், “பாடுங்கள்.....என்று நாங்கள் வேண்ட, அவர் குரலெடுத்துப் பாடுவார்! தனது தனிமையில் தோய்ந்து தோய்ந்து அவ்வப்பொழுது தானாகவும் பாடுவார். இந்த அற்புதமான அனுபவங்களுக்கெல்லாம் அன்று அந்தக் கடற்கரையில் ஓர் இறை ஆசியோடுகூடிய ஆரம்பம் நிகழ்ந்ததெனலாம்.
  அந்தக் கடற்கரை அனுபவத்தை நான் மறுபடியும் விதந்தோத விழைகிறேன்.
  அது என்னால் என்றைக்கும் முழுமையாக வர்ணிக்க முடியாததாயிருக்கிறது. ஓர் அபூர்வ இலக்கிய ஆளுமை, தன்னைச் சரியாகத் தீட்டமுடியாத ஒரு கன்றுக்குட்டி ஓவியனுக்குத் தரிசனம் தந்ததுபோல் இருக்கிறது. விட்டுவிட்டு எழுதினால் மறுபடியும் தொட்டுத் தொட்டுப் பார்ப்பதற்கான இடங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது.
  காலம் என்பது எப்பொழுதுமே மனிதர்களைக் கட்டாயப் படுத்துவதாகவேயிருக்கிறது. எனவேதானே அன்று கடற்கரையிலிருந்து நாங்கள் எழுந்தோம்?
   திருவல்லிக்கேணியில் ஒரு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தோம்.
  திருப்பத்தூரில் பாரதிவிழா ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றால், தான் சனிக்கிழமையே வந்துவிடுவதாக ஜெயகாந்தன் கூறினார்.
  பிராட்வேக்குப் போகிற ஒரு டவுன்பஸ்ஸில் எங்களை ஏற்றினார். அப்புறம் அவர் தான் போகவேண்டிய பஸ்ஸிற்குப் போனார்.
  நானும் நண்பர் வையவனும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, “ரொம்ப நல்லவர் இல்லே?என்று இருவருமே சொன்னோம்.
  மறுநாள் நாங்கள் திருப்பத்தூர் போய்ச்சேர்ந்தோம்.
  எங்கள் நண்பர்கள் எங்களைப் பார்த்து, “என்னப்பா? ஜெயகாந்தன் என்ன சொன்னான் – வர்றானாமா?என்று கேட்டனர்.
  ஜெயகாந்தனுக்கு, ‘அன்விகுதி போட்டு அவர்கள் பேசியது எங்கள் காதுகளில் ‘நாராசமாய்விழுந்தது. “அவர் ரொம்ப நல்லவர்ப்பா!என்று அவர்களை முதலில், ‘அர் விகுதிக்கு மாற்றினோம். (இன்னும்)

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP