Sunday, February 9, 2014

பீட் சீஜெர்



யுகம் யுகமாய்
நிலைத்து நிற்பாய்!

புகழ்மிகு அமெரிக்க கலைஞர் பீட் சீஜர், தலைசிறந்த இசைவாணராகவும், பாடகராகவும், கிராமிய இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர். “எவரும் வெறுத்தொதுக்கமுடியாத கம்யூனிஸ்ட் எனப் போற்றப்பட்டவர். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். உழைக்கும் மக்களின் நலன் காக்க இறுதிவரை உரத்துக் குரல்கொடுத்த அவர், உலக சமாதானத்துக்கான இயக்கங்களில் முன்னணியில் நின்றவர். அமெரிக்க அரசின் உயரிய விருதினைப் பெற்றவர். அவர் தனது 94-வது வயதில், 2014 ஜனவரி 27-ல் மறைந்தார். அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில், பிஸ்டிர்னா பருவா, த ஹிண்டு (THE HINDU) ஆங்கில நாளிதழில், பிப்ரவரி 9-ம் நாள் எழுதிய கவிதையின் தமிழாக்கம் இங்கே நமது வாசகர்களுக்காக:


பாஞ்சோ வாத்யம்
உன் கையில்
விடுதலை கீதமிசைக்கும்
கருவியானது.
இனிய குரலில் நீ
இசைமழை பொழிந்தபோது
தேனில் கலந்தது இடிமுழக்கம்;
இதயத்துடிப்பின் லயத்தில்
இணைந்து நடைபோட்டனர் மக்கள்.
எல்லோரும்
மறந்துபோன கதைகளை
ஏந்திவந்தன உன் பாடல்கள்.
அவை
உழைத்துக் களைத்த
உழைப்பாளியின் கதைகள்;
கோபம் கொண்ட
உழவனின் கதைகள்;
நாபாம் குண்டின் நாசகாரத் தீயில்
விசனமுற்ற போர்வீரனின் கதைகள்;
விரக்தியில் உழன்று
வீதியில் உலவும் மனிதனின் கதைகள்.
உனது குரலோசையில்
உரத்துக் குமுறியது நிசப்தம்.
காலங்காலமாய்
நிர்ப்பந்தத்தில் அழுந்திய நிசப்தம்.
கொட்டித் தீர்க்கவேண்டிய நிசப்தம்.
போரின் பூட்ஸ் கால்களில்
பொசுங்கும் பூக்கள்பற்றி
பேசினாய் நீ.
வெதும்பலில் மூழ்கிய
நெடிய இரவுகளுக்குப் பின்னால்
விடியும் வறண்டபல காலைப்பொழுதுகளில்
பசுமரத்தாணிபோல்
பதியவைத்தன உன் பாடல்கள்.
நம் எல்லோர் நெஞ்சத்திலும்
சுடரொளிவீசும் குட்டி தீபத்தை,
தடைகளைப் பொடியாக்க
தகிக்கும் உள்ளக்கனலை,
சுட்டி உணர்த்தினாய் நீ.
பீட் சீஜெர்,
வாழ்ந்திருப்பாய் எம் நெஞ்சங்களில்
எம்முள் இருக்கும் எழுச்சியாளர்
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்வரை.
ஏனெனில்,
என்றும் எங்கள் மனசாட்சியின்
எச்சரிக்கை மணியொலி நீ!
மனிதகுலத்தின் குரலோசை நீ!!
தமிழில்: விதுரன்

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP