Thursday, March 21, 2013

இலங்கை: ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சி வலை!



இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.இ.டபிள்யூ குணசேகரா. இவர், இலங்கை அரசின் மனித வளத்துறை மூத்த அமைச்சராகவும், வெளிவிவகார இலாகாவின் தற்காலிக அமைச்சருமாக செயல்பட்டுவருகிறார். இலங்கைத் தீவில் மனித உரிமைப் பிரச்சனைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அமர்வில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர் அளித்த பேட்டியில், தனது தேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தம் கருத்தைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மனித உரிமை மீறல் என்பதை முன் நிறுத்தி, மேற்கத்திய நாடுகள் பின்னுகின்ற சதிவலை, தமிழகத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சி மேலீடுகளின் பின்னணி, தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல், தென்னாசியப் பகுதியில் பெரும் சக்திகளாக சீனமும் இந்தியாவும் வளர்ந்து வருதல், இலங்கையின் சில உள்நாட்டுப் பிரச்சனைகள் பற்றி இந்த பேட்டியில் அலசப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரசுரமாகும் "சண்டே அப்சர்வர்" (SUNDAY OBSERVER) பத்திரிகையின் மார்ச் 17, 2013 இதழில் பி.கிருஷ்ணஸ்வாமி கண்டு வெளியான அந்த பேட்டியின் சில பகுதிகள் சஞ்சிகை வாசகர்களுக்காகத் தமிழில் தரப்படுகிறது. தமிழாக்கம்: விதுரன்.



ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சி வலை!


கேள்வி: ஜெனீவாவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகளில் மனித உரிமைப் பிரச்சனைகள் என்று சொல்லப்படுகின்ற விஷயங்கள் குறித்தும், எல்.எல்.ஆர்.சி. எனப்படும் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"வின் பரிந்துரைகளை அமல்படுத்தாமை குறித்தும் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தனது இரண்டாவது தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறதே, இது நமது எதிர்காலத்தின்மீது ஏதேனும் தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா?

குணசேகரா: பன்னெடுங்காலமாக நாட்டில் தலைவிரித்தாடிய பயங்கரவாத நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும், நாட்டின் முகத்திலிருந்து பயங்கரவாதத்தின் ரேகைகளைத் துடைத்தெறிவதற்கு அரசு மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனங்களையும் உற்று நோக்கும்போது, அரசை மாற்றுவதற்காக அமெரிக்கா தனக்கேயுரிய திட்டங்களைத் தீட்டிவந்திருப்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் முற்போக்கான அல்லது மைய-இடதுசாரி அரசு அதிகாரத்திற்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற சதிகள், சூழ்ச்சிகள், திருகுதாளங்களில் ஏகாதிபத்திய நாடுகள் ஈடுபடும் என்பதை நமது கடந்த கால அனுபவங்களிலிருந்து அறிகிறோம். இது இலங்கையில் மட்டுமின்றி எல்லா வளர்முக நாடுகளின்பாலும் அவர்கள் பின்பற்றிவரும் கொள்கை வழியாகும். உலகில் ஓற்றை சக்தியின் ஆதிக்க முறைமை நிலவுகின்ற சூழலில், குறிப்பாக அமெரிக்கா தானடித்த மூப்பாகச் செயல்படுவதை வெளிநாட்டுக் கொள்கையாகவும், பிறருக்கு சந்தர்ப்பம் அளிக்காமல் முளையிலேயே கிள்ளுவதைப் பாதுகாப்புக் கொள்கையாகவும் கொண்டு ஒழுகிவருகிறது. ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இதை இறுக்கமாகப் பின்பற்றிவந்தார். பராக் ஒபாமா நிர்வாகமானது அதே கொள்கையை வேறுபாணியில், கொஞ்சம் கூடுதலான நீக்குபோக்குடன் செயல்படுத்திவருகிறது. இது அவர்களின் உலகளாவிய பாதுகாப்பு உத்திகள், பூகோள-பொருளாதாரம், பூகோள-பாதுகாப்பு நலன்களால் வழிநடத்தப்படுகின்றது. அவர்கள் ஏற்கனவே உள்நோக்கத்துடன் வகுத்துவைத்த திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றனர். இந்தப் பின்னணியில் அமெரிக்கா கொண்டுவருகின்ற தீர்மானம், கடுமையான வாசகங்களைக் கொண்டதாகவும், மனித உரிமைப்பிரச்சனகளுக்கும் எல் எல் ஆர் சி பரிந்துரைகளை அமல்படுத்தாமை என்று சொல்லப்படுவதற்கும் சிறப்பு அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்றே கருதுகிறேன். நமக்கு இதனால் தீவிர விளைவுகள் எதுவும் தற்போதைக்கு ஏற்படுமென்று நான் கருதவில்லை.


கேள்வி: ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கும், இனப்பதற்றத்திற்கும், அந்த மக்களின் சொத்துக்கள் நிர்மூலமாவதற்கும், அவர்கள் இடம்பெயர்ந்து அல்லல் படுவதற்கும் எல்.டி.டி.இ. [விடுதலைப்புலிகள்] தான் பிரதான காரணி, பொறுப்பு என்பதை வசதியாக மறந்துவிட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே உள்பட மேற்கத்திய நாடுகள் பலவும் எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான, தமிழர்களுக்கு சார்பான நிலை எடுத்துள்ளன. சுயாதீனம் கொண்டதோர் ஜனநாயக நாட்டிற்கு எதிராக அவை இப்படி சார்பு நிலை எடுப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

குணசேகரா: தமிழர்களின் நிலை குறித்தோ, மனித உரிமைப்பிரச்சனைகள் குறித்தோ அவர்கள் மெய்யாக, விசுவாசப்பூர்வமாகக் கவலை கொண்டிருப்பதாக நான் நம்பவில்லை. தமது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்தகொள்ளும் வகையில், இந்த விஷயங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டுமென்றே அவற்றைப் பெரிதாக்கி, பூதாகாரப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. கடந்த முப்பதாண்டுக்கால மோதல்களின்போது, அடுத்தடுத்து வந்த அரசுகளும் அக்கிரமங்கள் நிகழ்த்தியுள்ளன. 1983 ஜூலையில் நடத்தப்பட்ட கொலைபாதக ரத்தக்களரி ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தின்போது கட்டவிழ்த்துவிடப்பட்டதாகும். அப்போதெல்லாம் இதே மேற்கத்திய நாடுகள் வாய்மூடி இருந்தன; அவர்களின் மௌனம் பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது. முப்பதாண்டுக்காலமாக கண்மூடிக்கிடந்த அவர்கள், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 2009 மே மாதத்தில் மோதல்கள் முடிவுக்கு வந்த நிலையில், கும்பகர்ணத்தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டதுபோல் மனித உரிமைப்பிரச்சனைகளை எழுப்பி, கடுமையான எதிர்ப்புக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் தலையீடு செய்வதற்கான வாய்ப்பையும் நமது அரசு அளிக்கவில்லை. இத்தனை விரைவில் இத்துணை வேகமாக விடுதலைப் புலிகள் வீழ்த்தப்படுவார்களென்றோ, இந்த தேசத்தின் முகத்திலிருந்து பயங்கரவாதமெனும் கறை அகற்றப்படுமென்றோ அவர்கள் விரும்பவும் இல்லை; ஒருபோதும் எதிர்பார்க்கவுமில்லை. அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். அவர்களின் கணக்குத் தப்புக்கணக்காகிவிட்டது. அவர்கள் பெரிய சக்திகள் என்பதால், அவர்கள் விரும்பிய வகையில்தான் அனைத்தும் நடக்கவேண்டுமென விரும்புகிறவர்கள்; எனவே, தமக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கமுடியாமல், கோபத்தீயை உமிழும் வகையில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் அவர்கள் எழுப்பக்கூடும். அவர்கள் கொடுத்த நெருக்கடிகளுக்கு நாம் பணியவில்லை. ஆப்கனிஸ்தான், இராக், லிபியா பிரச்சனைகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் (UNHRC) மனித உரிமைப் பிரச்சனைகளை ஒருபோதும் எழுப்பவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஏன் இந்த இரட்டை நிலை? இது கபடத்தனத்தின் உச்ச கட்டம்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் நடத்துகின்ற கிளர்ச்சிகள், பெரும்பான்மையினர் [சிங்களர்கள்] மத்தியில் தமது எதிர்காலம் குறித்த ஐயங்களையும் அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் எப்போதும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. மாணவர்களும்கூட இந்த எதிர்ப்புகளில் இணைந்து, சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தும் அளவுக்கு இந்தக் கிளர்ச்சிகள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அவர்கள் உண்மையிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

குணசேகரா: தமிழ்நாடு அரசியல், தனக்கேயுரிய சிறப்பம்சங்களையும், பிரத்யேக வினோதங்களையும் கொண்டது. பிரதேசக் கட்சிகளின் ஆளுகைக்குக்கீழ் தமிழகம் வரத்தொடங்கிய 1967-ஆம் ஆண்டிலிருந்து நாம் இதனைக் கண்டுவருகிறோம். தி,மு.கவுக்கும், அ.இ.அ.தி.முகவுக்கும் இடையேயான போட்டி-அரசியல், சித்தாந்த ரீதியில் அல்லது கொள்கை ரீதியில் அல்லாமல் தலைவர்களின் ஆளுமையை மையமாகக் கொண்டது. இப்பூவுலகில் காணக்கிடக்கும் அனைத்து விஷயங்களிலிருந்தும் அரசியல் ஆதாயம் எடுக்க இவ்விரு கட்சிகளுமே விழைகின்றன. இப்போது இலங்கை, இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் அவர்களின் பார்வை விழுந்திருக்கிறது. [இலங்கையில்] மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்தப் போட்டி- அரசியல் திடீரென வெடித்து விண்ணை எட்டியிருக்கிறது. அரசியல் ஆதாயம் காணும்பொருட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைக்காட்டிலும், மேலதிகமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையினை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், இனவுணர்வுகளைக் கிளப்பிவிடும் முயற்சியாக, 2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த லோக்சபா தேர்தலில், பிரதான கோஷமாக அவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மதிமுக தலைவரான வைகோ போன்ற இனவுணர்வில் இறுகிப்போனவர்கள்தான் 30 ஆண்டுக்கால போரின்போது இனவெறியை விடாப்பிடியாகப் பின்பற்றி அதற்கு விசுவாசம் காட்டியவர்கள். திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகளைப் பொறுத்தவரை அரசியல்தான் குறி. இந்தப் பின்னணியில், இந்திய மத்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்தக் காரணத்தால்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களின் சமீபத்திய அறிக்கையை நான் மிகவும் பாராட்டினேன். உணர்ச்சிமேலீடுகளுக்கு இடம்கொடுப்பதற்கு பதிலாகத் தமிழகத்தில் நிலவும் எதார்த்த நிலையை நாம் மனதில் கொள்ளவேண்டுமென நான் மீண்டும் மீண்டும் எச்சரித்துவருகிறேன். நாம் விடுதலைபெற்ற காலந்தொட்டு தமிழகத்தைப் பொறுத்த நமது ராஜீய அணுகுமுறையில் நாம் தவறிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் தவறுக்காக வரலாறு நம்மைத் தான் குறைகூறும்.

கேள்வி: இலங்கையின்கடல் வளத்தையும், வடக்குப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் தீவிரமாகப் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்கள் பல்லாண்டுகளாக எல்லை மீறி மீன் பிடிப்பது தொடர்கிறது. ஆனால், இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டுத் தலைவர்கள், இந்தப் பிரச்சனையில் வாய்மூடி மௌனம் சாதிக்கிறார்கள். இது அவர்களது இரட்டை நிலையைக் காட்டுகிறதா?

குணசேகரா: இந்தியா மற்றும் இலங்கை என இருதரப்பிலும் உள்ள மீனவர் பிரச்சனை மிகவும் உணர்ச்சிபூர்வமான பிரச்சனை; இதை நாம் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய மத்திய அரசுடன் நாம் தொடர்பு கொண்டு பேச வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மீனவர்கள் எல்லைமீறி மீன்பிடிப்பது என்பது உலகமுழுவதும் கடலோர நாடுகள் எதிர்கொள்கிற பிரச்சனையாகும். ஆனால், இருநாடுகளிலும் உள்ள மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டு பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சனைப் பயன்படுத்தப்படலாம்.

கேள்வி: இந்தப் பிரதேசத்தில், குறிப்பாக இலங்கையில், சீனா வலுவாகப் பிரசன்னமாகியிருத்தலால் இருபெரும் வல்லரசுகளுக்குமிடையே நலன்களில் மோதல் ஏற்பட்டு, அதன் விளைவாக எதிர்காலத்தில் நமது நாட்டிற்கு மோசமான விளைவுகள் ஏற்படுமா?

குணசேகரா: உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக ஆசியப் பகுதியில், சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே எழுச்சியுற்றுவரும் பெரும் சக்திகளாகும். உலகில் பல-துருவ நிலைகள் தோன்றிவரும் இந்த சூழலில், மேற்கத்திய அசுர பொருளாதார சக்திகள், வளர்ந்துவரும் பொருளாதாரப் பெரும் சக்திகளிடையே போட்டி பொறாமையை அதிகரிக்கச் செய்ய தமது பூகோள உத்திகளையும், பூகோள அரசியல் சதித்திட்டங்களையும் பயன்படுத்த முனைவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஆசியாவின் இருபெரும் பொருளாதார சக்திகளின்பால் சமதூர உறவைப் பேணும் நாம், மேற்கத்திய நாடுகள் தமது போர்த்தந்திரத் திட்டங்களுக்கான ஆடுகளமாக நம் எல்லையைப்  பயன் படுத்த அனுமதித்துவிடலாகாது. கேந்திரமான பகுதியில் நமது நாடு அமைந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: அண்மை மாதங்களில், பொது பால செனா (BBS) அமைப்பினர், முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால் வகுப்புரீதியிலான பதற்றம் தோன்றுகிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை எப்படி அணுகவேண்டுமெனத் தாங்கள் கருதுகிறீர்கள்?

குணசேகரா: இது துரதிருஷ்டவசமான, மிகுந்த கவலையளிக்கக் கூடிய போக்காகும். நான்கு ஈழப்போர்களை எதிர்கொண்டும், முறியடித்தும் கடந்த 30 ஆண்டுக்கால மோதல்களினால் போதும்-போதும் என்று சொல்லும் அளவுக்கு இன்னல்களை அனுபவித்துவிட்டோம். கிழக்கு மாகாணத்தில் ஈழம் வேண்டுமெனும் கோரிக்கையை எழுப்புமாறு முஸ்லிம் மக்களை நாம் உந்தித் தள்ளப்போகிறோமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பதற்றத்தை நாம் தணித்தாக வேண்டும். நிலைமையைத் தணிப்பதற்கு சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை அறிந்து நான் மகிச்சி அடைகிறேன். உணர்ச்சிபூர்வமான இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நாம் உறுதிபூண்டிருப்பதால், இந்த இக்கட்டான சூழலில் நான் எந்த விமர்சனக்கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: முன்னாள் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே பதவி பறிப்பு விஷயத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிற அங்கத்துவக் கட்சிகளின் நிலைபாட்டுக்கு முற்றிலும் வேறுபட்ட நிலையை உங்கள் [கம்யூனிஸ்ட்] கட்சி எடுத்திருக்கிறது. இதே கருத்து நிலை இன்னும் தொடர்கிறதா?

குணசேகரா: இது எனது கட்சியின் நிலை. தலைமை நீதிபதி நெவில் சமரக்கோன் பதவிபறிப்புக்கு ஆட்படுத்தப் பட்டபோதும்கூட இதே நிலையைத்தான் எனது கட்சி எடுத்தது.

கேள்வி: பயங்கரவாதப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் எப்போதும் இலங்கை அரசின் பக்கம் நின்றுவரும் இந்தியாவின் ஜனதாக் கட்சித் தலைவரான சுப்ரமணிய சுவாமி, பிரசித்திபெற்ற அரசியல் ஆய்வாளர்; கல்வியாளர். இவர், அமெரிக்கா [ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில்] கொண்டுவரும் தீர்மானம், விடுதலைப்புலிகள் புனர்ஜென்மம் எடுப்பதற்கு வழிவகுத்துவிடும் என்று அண்மையில் கூறியுள்ளார். இதுபற்றித் தங்கள் கருத்தென்ன?

குணசேகரா: இது விடுதலைப்புலிகளை அதீதமாக மதிப்பிட்டு, அமெரிக்கத் தீர்மானத்தின் பின்புலத்தில் மறைந்துள்ள உள்நோக்கத்தைக் குறைத்து மதிப்பீடு செய்கின்ற அடித்தளத்தில் அமைந்த எதார்த்தத்திற்குப் புறம்பான கணிப்பாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி: பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் எப்போதுமே இலங்கை அரசுக்கு எதிராகத்தான் இருந்து வருகிறது. அந்த மரபை அடியொற்றி, சானல்-4 நிறுவனமும், சர்வதேச அரங்கில் நமது அரசுக்கும் நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதற்குத் துடியாய்த் துடிக்கிறது. இப்போது வலம் வந்துகொண்டிருக்கும் விடியோ காட்சித் துண்டுச் சுருள், விரைந்து பணம் பண்ணத் துடிக்கின்ற நேர்மையற்றவர்களின் தில்லுமுல்லு. இந்த ஆவணம் ஆதாரபூர்வமானது என்று கருதுகிறீர்களா?

குணசேகரா: ஒரு வலதுசாரி அல்லது பழமைவாதக் கட்சி அதிகாரபீடத்தில் இருக்கும்போது பிபிசி நிறுவனம் இவ்வாறு நடந்துகொள்வதில்லை என்பதை மீண்டும் நான் சொல்லியாக வேண்டும். மற்ற பிற மின்னணு ஊடகங்களைப்போலவே, தனக்கே உரிய அரசியலையும் திட்டத்தையும் கொண்டதுதானே பிபிசி நிறுவனமும். எப்போதெல்லாம் முற்போக்கான அரசுகள் ஆட்சியில் இருக்கின்றனவோ அப்போதெல்லாம் ஸ்திரத்தன்மையைக்குலைகின்ற பங்கு பாத்திரம் [இத்தகைய] ஊடக ஒலிபரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கான பாதையில் பயன்படுகின்ற கருவிகளாகவும், வாகனங்களாகவும் சானல்-4 தொடர்கள் யாவும் அமைந்துள்ளன.ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கான பாதையில் பயன்படுகின்ற கருவிகளாகவும், வாகனங்களாகவும் சானல்-4 தொடர்கள் யாவும் அமைந்துள்ளன. அவர்களுக்கு, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரிக்கின்ற காட்சிகளைக் காட்டுவதற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடந்து முடிந்த பின் நான்காண்டுகள் பிடித்திருக்கின்றது. இது மிகவும் திறமையாகத் தயாரிக்கப்பட்ட புனைவு; இதில் உண்மையில்லை.


COURTESY: SUNDAY OBSERVER/MARCH 17, 2013

Read more...

Monday, March 11, 2013

வாழ்க நீ சாவேஸ்!

[லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபரும், வெனிசுலா ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும், கியூபாவின் புரட்சி விடிவெள்ளியாம் ஃபிடல் காஸ்த்ரோ அவர்களின் உயிர் நண்பரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவருமான ஹ்யூகோ சாவேஸ், தனது 58-வது வயதில் மார்ச் 5, 2013-ல் மறைந்தார். புற்றுநோய் அவரை பலிகொண்டாலும், உலகெங்கிலும் உள்ள முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்டவர்களின் நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்வார்.

மறைந்த தலைவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் புகழ்மிகு எழுத்தாளரும், சிந்தனையாளருமான பத்ரி ரெய்னா அவர்கள், மெயின்ஸ் ட்ரீம் ஆங்கில வார இதழில் எழுதிய கவிதை இதோ இங்கே தமிழில். தமிழாக்கம்: விதுரன்.]



வாழ்க நீ சாவேஸ்!


வலுத்தவன் பிடரியைப் பிடித்து உலுக்கினாய்

தோலுரித்தாய் அவன் கபடத்தனத்தை.



உன்னைச் சுற்றிலும் கூடிய மக்கள்

லட்சோப லட்சம் - எங்கும்

பொறுத்தது போதும்

பொங்கியெழு எனும் முழக்கம்!



உடைமைகள் அனைத்தும்

உமக்கே உமக்கு என்றாய்.



சகோதரனே சாவேஸ்

எமை வழிநடத்த வாராய்!

வெற்றி பெறும்வரை -நாங்கள்

ஓய்வதுமில்லை, தலை சாய்வதுமில்லை!!

என்றே முழங்கினர் மக்கள்.



சாமான்யர்கள் திரளில்

நடுநாயகம் நீ!

அங்கிருந்தே ஜனித்தன

சீரிய உன் முடிவுகள்.



இஷ்டம் போலத் தாக்குவேன்

நிர்மூலம் ஆக்குவேன்-எனப்

படபடக்கும் வல்லூறின்

பகையறுப்பது எப்படி?



ரத்தப்பசி கொண்ட கழுகினை விரட்டிட

லட்சோப லட்சம் குருவிகள்கூடி

விஸ்வரூபம் எடுப்பது எங்ஙனம்?

இப்படியெல்லாம் கேள்விகள்.

பாட்டாளிக் கூட்டத்தில் ஒவ்வொருவரும்

பட்டவர்த்தனமாய் விளக்கம்பெற

ஒடுக்குமுறையின் அவலங்களை

ஓதி உணர்த்தினாய் நீ!



எண்ணை வளம்தனை எடுத்தாண்டு

எண்ணிலா நன்மைகள்

அரங்கேற்றியவன் நீ!

அவை அனைத்தைக் காட்டிலும்

துரோக வரலாற்றின் கொடூரந்தனை

துல்லியமாய் விளக்கினாய்

ஒரு கண்டம் முழுமைக்கும்.

மிதிபட்டுத் துவண்டுபோன

மனிதப் பயிர்கள்

மாண்புடன் தலைநிமிரச் செய்தாய்!

வெல்லமுடியாத தெளிந்த நெஞ்சங்களை

உருவாக்கி வெற்றிகண்டாய்.

அதுமட்டுமே புரட்சியின் அசைக்கவொணா

அஸ்திவாரமெனக் கொண்டாய்.



சகோதரனே சாவேஸ்,

எத்துணை தூரம் இத்தனை விரைவில்

நீ சென்று மறைந்தாலும்

ஓரணியில் நின்று நாங்கள் ஆற்றும் பணிகளில்

அரிய உன் சாதனைக்கதிர்கள்

என்றென்றும் ஓளிபாய்ச்சும்,

உண்மை இது!



TAGS: MAINSTREAM/MARCH 9, 2013/VIVA CHAVEZ/BADRI RAINA

Read more...

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP