Monday, March 11, 2013

வாழ்க நீ சாவேஸ்!

[லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபரும், வெனிசுலா ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும், கியூபாவின் புரட்சி விடிவெள்ளியாம் ஃபிடல் காஸ்த்ரோ அவர்களின் உயிர் நண்பரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவருமான ஹ்யூகோ சாவேஸ், தனது 58-வது வயதில் மார்ச் 5, 2013-ல் மறைந்தார். புற்றுநோய் அவரை பலிகொண்டாலும், உலகெங்கிலும் உள்ள முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்டவர்களின் நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்வார்.

மறைந்த தலைவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் புகழ்மிகு எழுத்தாளரும், சிந்தனையாளருமான பத்ரி ரெய்னா அவர்கள், மெயின்ஸ் ட்ரீம் ஆங்கில வார இதழில் எழுதிய கவிதை இதோ இங்கே தமிழில். தமிழாக்கம்: விதுரன்.]



வாழ்க நீ சாவேஸ்!


வலுத்தவன் பிடரியைப் பிடித்து உலுக்கினாய்

தோலுரித்தாய் அவன் கபடத்தனத்தை.



உன்னைச் சுற்றிலும் கூடிய மக்கள்

லட்சோப லட்சம் - எங்கும்

பொறுத்தது போதும்

பொங்கியெழு எனும் முழக்கம்!



உடைமைகள் அனைத்தும்

உமக்கே உமக்கு என்றாய்.



சகோதரனே சாவேஸ்

எமை வழிநடத்த வாராய்!

வெற்றி பெறும்வரை -நாங்கள்

ஓய்வதுமில்லை, தலை சாய்வதுமில்லை!!

என்றே முழங்கினர் மக்கள்.



சாமான்யர்கள் திரளில்

நடுநாயகம் நீ!

அங்கிருந்தே ஜனித்தன

சீரிய உன் முடிவுகள்.



இஷ்டம் போலத் தாக்குவேன்

நிர்மூலம் ஆக்குவேன்-எனப்

படபடக்கும் வல்லூறின்

பகையறுப்பது எப்படி?



ரத்தப்பசி கொண்ட கழுகினை விரட்டிட

லட்சோப லட்சம் குருவிகள்கூடி

விஸ்வரூபம் எடுப்பது எங்ஙனம்?

இப்படியெல்லாம் கேள்விகள்.

பாட்டாளிக் கூட்டத்தில் ஒவ்வொருவரும்

பட்டவர்த்தனமாய் விளக்கம்பெற

ஒடுக்குமுறையின் அவலங்களை

ஓதி உணர்த்தினாய் நீ!



எண்ணை வளம்தனை எடுத்தாண்டு

எண்ணிலா நன்மைகள்

அரங்கேற்றியவன் நீ!

அவை அனைத்தைக் காட்டிலும்

துரோக வரலாற்றின் கொடூரந்தனை

துல்லியமாய் விளக்கினாய்

ஒரு கண்டம் முழுமைக்கும்.

மிதிபட்டுத் துவண்டுபோன

மனிதப் பயிர்கள்

மாண்புடன் தலைநிமிரச் செய்தாய்!

வெல்லமுடியாத தெளிந்த நெஞ்சங்களை

உருவாக்கி வெற்றிகண்டாய்.

அதுமட்டுமே புரட்சியின் அசைக்கவொணா

அஸ்திவாரமெனக் கொண்டாய்.



சகோதரனே சாவேஸ்,

எத்துணை தூரம் இத்தனை விரைவில்

நீ சென்று மறைந்தாலும்

ஓரணியில் நின்று நாங்கள் ஆற்றும் பணிகளில்

அரிய உன் சாதனைக்கதிர்கள்

என்றென்றும் ஓளிபாய்ச்சும்,

உண்மை இது!



TAGS: MAINSTREAM/MARCH 9, 2013/VIVA CHAVEZ/BADRI RAINA

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP