Tuesday, July 19, 2016

இர்ஃபான், சயீரா ஹபீப் கடிதம்

*மதவெறி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை முறியடிக்க

*காங்கிரசுடன் கரம் கோர்த்துச் செயல்பட  

*கம்யூனிஸ்ட் அறிவுஜீவிகளின் அறைகூவல்!
 
 
[போற்றுதலுக்குரிய வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப். இவரது மனைவி, சயீரா ஹபீப் புகழ்மிகு பொருளாதார நிபுணர். அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இவ்விருவரும் பேராசிரியர்கள்.
  ஹபீப் தம்பதியினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ல் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுகிறவர்கள்.  நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழலின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவுக்கு ஜூன் 26ம் நாள் மிக முக்கியமான கடிதம் ஒன்றினை அவர்கள் அனுப்பிவைத்துள் ளனர். அக்கடிதத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. தமிழில்: எஸ்.துரைராஜ்]

  2016 ஜூன் 18 முதல் 20 வரை நடந்த மத்தியக் கமிட்டி கூட்ட நிகழ்வுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கை, நாட்டில் நிலவும் இன்றைய நிலையின் இன்றியமையாத அம்சங்கள் எவை என்பது குறித்து  விவாதிக்காமல், பல்வேறு பிரச்சனைகள் பற்றி வகை வாரியாக விளக்குகிறது; இதன் விளைவாக, தற்போதைய நிலைமைக்கு உகந்த அரசியல் உத்தியை முன்வைக்க அது தவறுகிறது.

  பாரதீய ஜனதா அரசை விமர்சிக்கிற மத்தியக் கமிட்டி அறிக்கை, மத்தியில் இப்போதுள்ள அரசாங்கம், ஏதோ நாடாளுமன்றத் தேர்தல் முறையில் பதவிக்கு வந்துள்ளதொரு பூர்ஷ்வா அரசியல் கட்சியின் அரசாங்கம் மட்டுமே அல்ல; மாறாக, இந்த அரசாங்கம், ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் அரைப் பாசிச சித்தாந்தத்தைப் பகிரங்கமாகத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்ற ஆட்சிமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டத் தவறுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பொரேட் துறையின் உச்சபட்ச கோரிக்கைகள் அனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்ற உறுதிபூண்டுள்ள அரசாங்கம் அது. மிக அப்பட்டமான முறையில், (கல்வியைக் காவிமயமாக்குவது, புதிது புதிதாய் மதவெறிப் பிரச்சனைகளைக் கிளப்புவது என்பன போன்றவற்றின் மூலம்) நமது தேசத்தின் சமயச்சார்பின்மையின் அடிப்படைக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்து ஊறுவிளைவிக்கிறது. (அருணாச்சலப் பிரதேசத்திலும், உத்தராகண்டில் மூக்குடைபட்ட சம்பவத்திலும் நிகழ்ந்தது போன்று) அரசியல் சட்டத்துக்குப் புறம்பான தலையீடுகள்மூலம் அல்லது அசாம் மாநிலத்தில் செய்தது போன்று அதிதீவிர வெறியுணர்வையும் வகுப்புவாதத்தையும் கிளப்பிவிடுவதன்மூலம் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியைக் கைப்பற்ற அது முயற்சிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பா.ஜ.க.வின் எதிர்த்தாக்குதல் மற்றும் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றுவதற்கான அதன் சதிமுயற்சியை உறுதியாக ஒன்றுபட்டு நின்று முறியடிப்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளின் முழுமுதற்கடமை ஆகும்.
  
  எனவே, எந்த அளவு முடியுமோ அந்த அளவு பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்துவதும், இன்னும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள மாநிலங்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்கான பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை முறியடித்து, இறுதியில், 2019ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் தோல்வியை உத்திரவாதப்படுத்தும் வகையில் இதர அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பரந்துவிரிந்த ஐக்கிய முன்னணியை உருவாக்குவதும்தான் நிச்சயமாக நமது கட்சியின் பிரதானமான இலட்சியமாக இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக நமது கட்சியின் அதிகாரபூர்வமான அரசியல் உத்தி, இதற்கு நேர்மாறாக உள்ளது.
  
  பீகார் மாநிலத்தில் 2015ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியுடனும் மட்டும் ஒன்றுபட்டிருந்தோம்; ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் அணியுடன் எவ்வித தேர்தல் உடன்பாடு கொள்வதையும் நாம் நிராகரித்தோம்.  இதன் விளைவாக, தேர்தலில் நமது கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை; அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கு எதிரான, நாம் புறக்கணித்த, மக்களின் எழுச்சி அலைகாரணமாக அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது; அந்தத் தேர்தல் முடிவை நாம் வரவேற்றோம். ஆனால், நமது தேர்தல் உத்தி முழுவதும் மிக அபாயகரமான வகையில் தவறாக வகுக்கப்பட்டது; பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளைத் தீங்கு விளைவிக்கும் வகையில் அது பிரித்திருக்கக்கூடும் என்கிற உண்மையை மத்தியக் கமிட்டி ஒருபோதும் நேர்மையாக எதிர்கொள்ளவில்லை.
  
 
  மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நாம் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் இருந்திருப்போமேயானால், திரிணாமுல் காங்கிரஸ் தொடுத்த கொடுந்தாக்குதலால் நமது தோல்வி மிக மோசமானதாய் ஆகியிருந்திருக்கும்; நமது கட்சியும், அதன் உறுப்பினர்களும் இன்னும் பெரிய தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பர்; பா.ஜ.க.வை பிரதான எதிர்க்கட்சியாக நாம் ஆக்கியிருப்போம். திரிணாமுல் ஆட்சிக்கு எதிரான ஒரு மெய்யான மாற்றை மக்கள் முன் வைக்கும் வகையில் காங்கிரசுடன் ஒரு பொதுத் திட்டத்தை உரிய காலத்தில் உருவாக்காமல் போனதுதான் நாம் இழைத்த தவறு என்பது நிச்சயம்.
  
  “இடதுசாரி” கட்சிகள் மற்றும் மக்களால் அதிகம் அறியப்படாத சின்னஞ்சிறு கட்சிகளுடன் மட்டுமே தேர்தல் அணி அமைப்பது என்கிற நமது கொள்கையால் நமது முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராய் ஆகிப்போனதற்குத் தமிழ்நாடு மற்றுமொரு எடுத்துக்காட்டு. திமுக-காங்கிரஸ் அணியுடன் உடன்பாடு கொண்டிருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்காதா? கட்சியின் அதிகாரபூர்வமான “தேர்தல் உத்தி” தேவதா விசுவாசமாகப் பின்பற்றப்பட்ட தமிழ்நாட்டில், நமது அனுபவத்திலிருந்து மத்தியக் கமிட்டி பாடம் எதனையும் கற்றுக்கொள்ளாததும் துரதிருஷ்டவசமானதே.
  
  அசாமிலும்கூட நாம் அதிகாரபூர்வமான தேர்தல் உத்தியைப் பின்பற்றினோம்; தேர்தல் உடன்பாடு கொள்ள வருமாறு காங்கிரஸ் விடுத்த பகிரங்க அழைப்பினை உதறித்தள்ளினோம்; பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு நம்மாலான சிறிய கைங்கர்யத்தையும் செய்தோம். அசாமில் “அதிகாரத்திலிருந்து காங்கிரசை அகற்ற வேண்டும்” என விடுக்கப்பட்ட மத்தியக் கமிட்டியின் அறிக்கை மனக்கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது; காரணம், காங்கிரசுக்கு ஒரு மாற்றாக உருவாவது இருக்கட்டும்; ஒரே ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலையில் இடதுசாரிகள் இருக்கும்போது, இதனால் அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் வகையில்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.         
  
  கேரளாவில், நமது கட்சியின் தலைமையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி பெற்றுள்ள வெற்றி, அண்மையில் நடந்த தேர்தல்களில் நமக்குக் கிட்டிய ஒளிவீசும் ஒற்றைத்தனி நட்சத்திரம் ஆகும். ஆனால், கேரளாவில், “பா.ஜ.க.வும் காங்கிரசும்” நமது பிரதான எதிரிகள் என்று இவ்விரு கட்சிகளையும் மத்தியக் கமிட்டி சமநிலையில்வைத்துப் பார்ப்பது துரதிருஷ்டவசமானது. வகுப்புவெறியற்ற பிற அரசியல்வாதிகளையும் ஆதரவாளர்களையும்கூட உள்ளடக்கியதோர் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கேரளத்தில் உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கேரளாவில், பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரான போராட்டத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்புக் கட்சிகளுடனும், பிறருடனும் ஒத்துழைப்பதற்கு நியாயமான தேர்தல் ஆதாயங்கள் இடையூறு ஏற்படுத்த நாம் அனுமதிக்கலாகாது.
  
  விவேகமோ அல்லது நியாயப்படுத்துவதற்கான முன் அனுபவ நிகழ்வோ இல்லாத ஒரு கொள்கையைப் பின்பற்றுவதன் பொருட்டு, கடந்த கட்சிக் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் எனும் நுட்பமான காரணத்தைக் காட்டாமல், மத்தியக் கமிட்டியும் பொலிட்பீரோவும் நமது உத்தி குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். லோகியா கொண்டிருந்ததைப் போன்ற “காங்கிரஸ்-எதிர்ப்பு” நமக்குப் பெரிதும் பயன்படப்போவதில்லை.
  
  பீகாரில் நாம் கண்டதைப்போன்று, பா.ஜ.க.வின் நோக்கங்கள், செயல்பாடுகள் மீது நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் பலவற்றின் மத்தியில் ஏற்கனவே கடும் வெறுப்புணர்வு வெடித்துள்ளது. தேசிய அளவில் இன்னும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த இயக்கத்தில் இணைந்திருக்கின்ற காரணத்தால் அதனின்றும் நாம் ஒதுங்கி நிற்க இயலுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், காங்கிரசுடன் நாம் வேறுபடுகிற விஷயங்களை எதிர்க்காமல் இருக்கவேண்டும் என்பதோ, எல்லா இடங்களிலும், அந்தக் கட்சி எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு அதனுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதோ யாருடைய  நிலைபாடாகவும் இருக்க இயலாது.
  
  மேலே குறிப்பிட்டவற்றுக்கு, நமது கட்சியையும் அதன் வெகுஜன அமைப்புக்களையும் கட்டுவது முக்கியமான பணி அல்ல என்று பொருள் கொள்ளவும் கூடாது. ஆனால், “வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக” கட்சியைக் கட்டவேண்டும் என்று தமிழ்நாட்டிலும் அசாமிலும் பிற இடங்களிலும் (மத்திய கமிட்டி) வெறுமனே அழைப்புகள் மட்டும் விடுப்பது போதுமானதல்ல. அதற்கு சித்தாந்த ரீதியான கல்வியும், ஸ்தாபன ரீதியான முயற்சியும் தேவை; ஆனால், நமது மக்களில் ஆகப்பெரும்பாலானவர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லதோர் அரசியல் உத்தியை நமது கட்சி கொண்டிருக்கும்போதுதான் இவையும்கூட மெய்யாகவே வெற்றிபெறும். பிற பிரதான மதச்சார்பற்ற கட்சிகளின்பால் செக்டேரியன் அணுகுமுறையைக் கொண்டிருப்பது சாதாரண மக்கள் மத்தியில் நமக்குப் பெருமளவில் ஆதரவு கிட்ட வழிவகுக்காது.

   தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கட்சியைக் கட்டவியலாது என்பதையும் நாம் உணரவேண்டியது அவசியம். ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டுவதென்றால்கூட குறிப்பிட்ட தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆதரவையும், ஆலைக்கு வெளியே உள்ள மக்களின் அனுதாபத்தையும் பெற்றிருப்பது அவசியமாகிறது. மக்களுக்கு உடனடி நிவாரணத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைக் கட்சி கொண்டுள்ளது என்பதை உணரும்போதுதான் தனது லட்சியத்துக்காக அனுதாபிகளைக் கட்சி வசீகரிக்கும்; விரிந்து பரந்ததொரு ஐக்கிய முன்னணியால் மட்டுமே இத்தகைய சரியான பார்வையைத் தரவியலும். கட்சியின் மெய்யான வளர்ச்சிக்கு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது அவசியம் என்பதை உலகெங்கிலும் அனுபவம் உணர்த்துகிறது.   
  
  சொல்லப் போனால், 1930களின் இறுதியிலும், 1940களிலும் தேசிய இயக்கத்தின் போர்க்குணமிக்க படைப்பிரிவாகத் தன்னைக் கருதிச் செயல்பட்ட காலத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகப்பெரும் வளர்ச்சி கண்டது: கட்சி என்றுமே போற்றிப் புகழ்கின்ற தத்-பிராட்லி ஆய்வறிக்கையிலிருந்து நிச்சயம் நாம் படிப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், பொலிட்பீரோவும் மத்தியக் கமிட்டியும் எமது கருத்துக்களை உரிய முறையில் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.
  
  -இர் ஃபான் ஹபீப்
  
  -சயீரா ஐ ஹபீப்

   ஜூன் 26, 2016

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP