Thursday, September 15, 2011

சதுரானன் மிஷ்ரா





சதுரானன் மிஷ்ரா:



ஓர் ஆக்கபூர்வமான கம்யூனிஸ்ட்





அனில் ரஜிம்வாலே



இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த மார்க்சீய அறிஞர்களில் முதல் வரிசையில் இருப்பவர் அனில் ரஜிம்வாலே என்றால் மிகையாகாது. அவரது எழுத்துக்கள், சிந்தனைகள் பலராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. மெயின்ஸ்ட்ரீம் (Mainstream) வார ஏட்டின் சுதந்திர தின சிறப்பிதழில் (ஆகஸ்ட் 13, 2011) அவர் எழுதிய கட்டுரை (Chaturanan Mishra: A Constructive Communist) முதுபெரும் கம்யூனிஸ்ட்-தொழிற்சங்கத்தலைவரும், மத்திய அமைச்சரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவருமான அமரர் சதுரானன் மிஷ்ராவுக்குப் புகழ்மாலை சூட்டுவதாக மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இயக்கத்தில் இருப்பவர்கள் விவாதித்துச் செயல்படுத்த வேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்றவேண்டிய மெய்யான கம்யூனிஸ்டுகள் அவசியம் படிக்க இதோ அதன் தமிழ் வடிவம்:


ஓர் ஆக்கபூர்வமான கம்யூனிஸ்ட்


இந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு, இதென்ன வினோதமாக இருக்கிறதே; அப்படியென்றால், 'ஆக்கபூர்வமல்லாத' கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நீண்ட நெடுங்காலமாக ஸ்டாலினிசம், மாவோயிசம் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டதன் விளைவாக, "கம்யூனிஸ்ட்" என்ற கருத்தே பதம்கெட்டுத் திரிந்துபோய், அழித்தல் தொழிலுக்கு அழுத்தம் கொடுப்பதாகிவிட்டது. இதை நிர்மூலமாக்கு; அதை நாசமாக்கு என்றும், முதலாளித்துவத்தைத் 'தூக்கியெறி', ஏகாதிபத்தியத்தைத் 'தகர்த்துப்போடு', அது-இது-எதுவோ அத்தனையையும் அழித்துப்போடு--இப்படிச்செய்தால்தான் சோஷலிசத்தை 'நிர்மாணிக்க'த் தொடங்குவாய் என்றெல்லாம் சொல்லப்பட்டு, கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிசம் என்னும் பதங்கள், அழித்தல் நடவடிக்கைகளைக் குறிப்பதாக மட்டுமே தாழ்த்தப்பட்டுவிட்டன.

ஆக, கம்யூனிஸ்ட் என்றாலே அழிவைத்தான் குறிக்கும் எனும் பொதுவான அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான தவறான கருத்தை எதிரிகளும், நண்பர்களும்கூடப் பரப்பிவருகிறார்கள். மார்க்சீயத்திற்குத் தரப்பட்ட இந்த எதிர்மறை வியாக்யானத்தின் மோசமான தாக்கத்தை தற்போதைய சோஷலிஸ்ட் நாடுகள் தாங்கவேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, பல நாடுகளில், இதனால், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எதார்த்தத்தில், விபரமான, பயனுள்ள கருத்துப் பகிர்வுகளும், விவாதங்களும், நடத்தப்படவேண்டிய விஷயம் இது. (இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது).

ஏதோ தொலைதூரத்தில் உள்ள எதிர்கால அமைப்பில்லாமல், இப்போது இருக்கக்கூடிய அமைப்பு முறைக்குள்ளிருந்தே ஆக்கபூர்வமாக சிந்திக்கவும், செயல்படவும்கூடிய கம்யூனிஸ்டுகளில் சதுரானன் மிஷ்ராவும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. எதிர்காலத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிற மகத்தான பண்பாகும் அது. சுற்றிச்சுற்றி வலம் வந்த செக்குமாட்டுப் பாதையிலிருந்து விலகி, வேறுமாதிரியாக சிந்திக்கத் தயாராக இருந்த ஒரு சில இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் அவரும் ஒருவர். இதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இதுவே அவரது மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயமுமாகும். வலதுசாரிப் பிற்போக்குசக்திகளும், இன்னும் சொல்லப்போனால், பரந்த மனம்கொண்ட பூர்ஷ்வா சக்திகளும் முன்கையெடுக்க விட்டுவிடாமல், முதலாளித்துவ அமைப்பின் முழுத்திறமையையும் பயன்படுத்தி மெய்யான திறன்மிகு சோஷலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைக் கட்டக்கூடியதாகக் கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.

சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய அரசுகளும் வீழ்ந்ததன்பின்னர், புரட்சி, சோஷலிசம், 'ஜனநாயக மத்யத்துவம்' அல்லது அதுபற்றிய வியாக்யானங்கள், வெகுஜனக்கட்சி, சட்டபூர்வ அமைப்பைப் பயன்படுத்துதல், இத்யாதி விஷயங்களில் காலங்காலமாக இருந்துவந்த புரிதல்கள் மற்றும் கருத்துக்களையும் மறுசிந்தனைக்குள்ளாக்கத் தொடங்கினார் அவர். குறிப்பாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், அதன் சிந்தனைப்போக்கையும் ஜனநாயகப்படுத்த வேண்டியதுகுறித்து அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். சோஷலிசம் குறித்த புதிய கருத்துக்களை அவர் விவாதிக்கலானார்.

இவர் மறைவதற்குச் சிலகாலத்திற்கு முன்னதாக இயற்கை எய்திய மற்றொரு புகழ்மிகு தலைவரும், நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்டுமான ஜகன்னாத் சர்க்காரும், மார்க்சியம் நிலைகுத்திப்போன தத்துவமா என்று கேட்க முனைந்தார்.

எதுகுறித்தும் வினா எழுப்புவதென்பது, மார்க்சீயவாதியின் அடிப்படைப் பண்பாகும். அத்தகையவர்களில் சிலர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களது கருத்துக்களைப் போதுமான அளவு விவாதிப்பதில்லை. இதன் விளைவாக இயக்கத்தின் வளர்ச்சி குன்றிப்போய்விட்டது.

முதல் கம்யூனிஸ்ட் மத்திய அமைச்சர்கள்:

மார்க்சீய தத்துவத்தின்பால் மிகவும் தீர்க்கமான, ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு செயல்வடிவத்தை இப்போது காண்போம். மத்திய அரசில் முதன்முதலாகக் கம்யூனிஸ்ட் அமைச்சர்களாக இருந்தவர்கள் சதுரானன் மிஷ்ராவும், இந்திரஜித் குப்தாவும். எப்படிப்பார்த்தாலும், இது மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலமே அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்த இரு அமைச்சர்களும் வியக்கத்தக்க பணியாற்றினர்.

ஆனால், இதுகுறித்துக் கம்யூனிஸ்ட் இயக்கமோ அல்லது பொதுவாக அரசியல் வட்டாரமோ ஏதேனும் நடைமுறை, தத்துவார்த்த முடிவுக்கு வந்தனவா? குறிப்பாக, மார்க்சீயத்தையும் பொதுவாக, அரசியல் தத்துவத்தையும் செழுமைபெறச் செய்யும் வகையில் இதுகுறித்துத் தேவையான முடிவுகளுக்கு வரவேண்டியது அரசியல் தத்துவவியலாளர்களின் கடமைப் பொறுப்பா அல்லவா? ஆனால், சரித்திரவானில் இந்த நிகழ்வு மங்கி மறைந்துபோக அனுமதிக்கப்பட்டது. அரசியல் சக்திகளின் அலட்சியப் போக்கைத்தான் இது காட்டுகிறது.

ஜனநாயக அமைப்பின் மையத்தில் பிரவேசிப்பது மட்டுமல்ல; மக்களுக்குப் பயன்படும் பல ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள கம்யூனிஸ்டுகளால் முடியும் என்பதையல்லவா இந்த நிகழ்வு உணர்த்துகிறது? உழைக்கும் வெகுஜனங்களுக்கு ஆதரவாகவும், பழைமைவாதப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் அரசியல் அதிகாரத் தராசு சாய்வதற்கல்லவா இது வழிவகுத்தது?

விவசாயத் துறை அமைச்சர் என்ற முறையில் தொடர் திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார் சதுரானன் மிஷ்ரா. அந்தத் திட்டங்கள் அமலாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பல அம்சங்களில் இந்தியாவின் கிராமப்புற முகமே மாறியிருக்கும். பல பிரச்சனைகளில் அவருக்குத் தெளிவான புரிதல் இருந்தது; பீகாரின் விவசாய நிலை, அதன் கட்டமைப்பு ஆகியவைகுறித்து மிகவும் அற்புதமான திட்டங்களை அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

பல சீர்திருத்தங்களும் வளர்ச்சிகளும் ஏற்படுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இரு அமைச்சர்களுமே பொறுப்பாவார்கள். ஆனால், இது மூடிமறைக்க எத்தனிக்கப்பட்டது. சிறிய கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட சிறிய தொடக்க முயற்சிகளின்பால் விவசாய வெகுஜனங்களைத் திருப்ப விரும்பினார் மிஷ்ரா. இத்தகைய திட்டம், பெரிய சுயநல சக்திகளின் கொட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கும். பெருமுதலாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு இதைவிட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இந்தியாவின், குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவின் அரசியல் வாழ்வை ஜனநாயகப்படுத்த அவர் விழைந்தார். இது, தாராளமயம், உலகமயம் ஆகியவற்றுக்கு எதிரான பொதுவான கோஷங்கள் எழுப்புவதாக இல்லாமல், தெளிவான செயல் நடவடிக்கைகளாக அமைந்தன.

முற்றும் முழுவதுமாக, உலகப்பொருளாதரத்திலிருந்து தனிமைப்பட்டு நிற்பதை எதிர்த்த சதுரானன் மிஷ்ரா, மக்களுக்கும், [நாட்டின்] பொதுவான பொருளாதாரத்திற்கும் பயனளிக்கின்ற ஆக்கபூர்வமான அம்சங்களைத் தேர்ந்து தெளிந்து ஏற்பதற்கு ஆதரவாக இருந்தார்.

வித்தியாசமான மார்க்சீயவாதி:

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அமைப்பு, சிந்தனை, செயல்முறை ஆகியவற்றை ஜனநாயகமயமாக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியவர் சதுரானன் மிஷ்ரா. இந்திய அரசியல் சட்டரீதியான அமைப்பின் மெய்யான பல திறன்களைக் கண்டுணர்ந்த அவர், அதில் கம்யூனிஸ்டுகளும், இடதுசாரி அமைப்புகளும் தமக்குரிய இடத்தில் அமர்ந்து, மக்கள்பக்கம் அரசியல் சக்திகளைத் திருப்ப இயலும் என்று கணித்தார். ஏறக்குறைய இதுபோன்ற நிலைதான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுகிறது.

தற்போதுள்ள அமைப்பை, 'முதலாளித்துவம்' என்று சுளுவாக வர்ணித்துவிட்டு அலட்சியப்படுத்திவிடாமல், மார்க்சீய/கம்யூனிச செயல்முறைகளின் மூலமாக அதன் ஜனநாயக உள்ளடக்கத்தை செழுமைப்படுத்த முடியும். 'முதலாளிகள்' -'முதலாளிகள்' என்று சொல்லும்போது இனம்பிரித்து உணரவேண்டும். ஒரு விவசாயி அல்லது ஒர்க் ஷாப் சொந்தக்காரர் அல்லது கடைக்காரர்கூட முதலாளி என்றுதான் அழைக்கப்படுகிறார். அனைத்து முதலாளிகளிடமும் ஒரேமாதிரியான அணுகுமுறையை மேற்கொள்வது சரியல்ல.

இன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக வழிமுறையில்/கட்டமைப்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பு நல்குவது மட்டுமல்ல; அதை மேலும் ஜனநாயக மயமாக்குவதற்குத் தீவிரப்பணியாற்ற முடியும். இதற்கு மார்க்சீய தத்துவத்தை மேலும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அன்டொனியோ கிராம்சியும், மார்க்சீய தத்துவாசிரியர்கள் பலரும் முன்னோக்கிக் கண்டுணர்த்திய உண்மையாகும் இது. அவர்கள் அளித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை முக்கியத்துவம் இன்று உண்மையாகியிருக்கிறது.

வெகுஜனங்களின் உணர்வுநிலை சார்ந்துதான் பெரும்பாலும் நாட்டின் அரசியல் போக்கு வடிவெடுக்கிறது. அது போட்டிமிகு தளம்; அதில் தமக்கென இடம்பிடிக்க அரசியல் சக்திகள் முட்டிமோதுகின்றன.இதனால் ஏற்படும் பதற்றம்தான் அரசியலையும், இப்போது, ஃபாஷனாக சிவில் சொசைட்டி (civil society) என்று அழைக்கப்படுகின்ற மக்கள் சமூகத்தையும் உந்தி முன்செலுத்துகிறது.

அரசியல் தத்துவங்கள், ஆக்கபூர்வமான கருத்துமோதல்களைத் தோற்றுவித்து, ஆரோக்யமான விவாதங்களுக்குத் தேவையான கருத்துவெளியீடுகளுக்கு வழிகோலுகின்றன. ஜனநாயக அமைப்பில் சமுதாயத்தை முன்னோக்கிய பாதையில் இட்டுச்செல்லவும், கருத்துமோதல்களுக்கு உயர்நிலையில், ஆரோக்யமானமுறையில் தீர்வு காணவும் உதவுகின்றன.

பரந்த மனம்கொண்ட அரசியல், சமுதாயத்தை முன்னுக்குச் செலுத்துகிற வகையில் அவ்வபோது அணிசேரும் சரித்திர சக்திகளைக்கொண்ட ஐக்கிய முன்னணியின் விரிவான, சிருஷ்டிபூர்வமான தன்மையை வெளிப்படுத்துகிறது. அதுதான், அரசியல் அமைப்பின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் சிறந்த அறிகுறியாகும். மக்கள் மற்றும் நவீன ஊடகங்களின் பங்கேற்பு, ஜனநாயகரீதியிலான மாற்றங்களுக்கு இந்தக் களத்தைத் தயார் செய்துள்ளன.

முற்போக்கு சக்திகளின் பரந்துவிரிந்த களத்தில் தோன்றியுள்ள புதிய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது சதுரானன் மிஷ்ரா வகித்த பொறுப்பு. சில அரசியல் திட்டங்களின் வலிமையை அவர் பிரநிதித்துவப்படுத்தினார். இந்த வளர்ச்சிப்போக்குகளின் பின்னணியில் மேலும் அதிக தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் திறன்கள் மறைந்துள்ளன.

கிராம்சியின் வழியில் மார்க்சீயத்தை நாம் ஜனநாயகப்படுத்த இயலும். ஆமாம்; மார்க்சீயவாதி ஆக்கபூர்வமானவரே; அழிவுசக்தியல்ல.

தமிழில்: விதுரன்.

Read more...

Friday, September 9, 2011

கவிழ்ப்புப்புரட்சி கற்றுத்தரும் பாடம்







பரந்துவிரிந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தைப் பிடித்து உலுக்கி, சடசடவென 'ஜார்' முறியக் காரணமானதோடு,
உலகைக்குலுக்கி விழித்தெழச்செய்து, "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு" எனும் அற்புத சமூகக் கட்டமைப்பை உருவாக்கி,
பாரெங்கும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் முகிழ்த்தெழ வழிவகுத்து,
அரசியல்-சமூக-பொருளாதாரச் சமநீதியைத் தாங்கி நிற்கும் சோஷலிச முகாமை வலிமைபெறச் செய்த அற்புதத்தின் வித்து 1917 நவம்பர் 7ல் நிகழ்ந்த யுகப்புரட்சியெனில்,
அரும்பாடுபட்டுப் பாட்டாளிவர்க்கமும் அதன் நேச சக்திகளும் உருவாக்கிய சோஷலிஸ்ட் முகாமைத் தகர்த்துத் தரை மட்டமாக்க விஷ வித்து ஊன்றப்பட்டதும் அதே ரஷ்ய மண்ணில்தான்!
"சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!" எனும் தோழர் லெனின் அவர்களின் தாரக மந்திரத்தைச் சிரமேற்கொண்டு, மக்களுக்குச் சகல அதிகாரங்களையும் அளிக்கும் வகையில், கரடு தட்டிப்போன, தலைமையிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை மீட்டெடுக்கவும், மக்களை செம்மைப்படுத்தும் மெய்யான சோஷலிச ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், பெரிஸ்த்ரோயகா (மறுகட்டமைப்பு), 'க்ளாஸ்னாஸ்ட்' (வெளிப்படையான அணுகுமுறை) எனும் உத்திகளைத் தீர்க்கமாகச் செயல்படுத்த முற்பட்டவர் சோவியத் ஜனாதிபதியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராகவுமிருந்த தோழர் மிகையீல் கொர்பச்சேவ்.
சோவியத் யூனியனையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் மீட்கின்ற புனிதப்போரை நடத்துவதாகக் கூறிக் கவிழ்ப்புப்புரட்டைச் செய்தனர் மாற்றத்தை விரும்பாத கட்சி மற்றும் அரசு அதிகார வர்க்கத்தினர்.
விளைவு: "பொக்கென ஓர் கணத்தே யாவும் போகத் தொலைத்துவிட்டோம்!" வீழ்ந்தது சோவியத் யூனியன்; சோஷலிச முகாம்.
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம், உலக மக்களின் விடுதலை இயக்கம், நடுநிலை நாடுகளின் இயக்கம் கலகலத்துப்போயின.
முன்னேறிச் செல்வதற்கான வழிதெரியாது விழிபிதுங்கி நிற்கிறது உலகில் பல நாடுகளின் முற்போக்கு இயக்கங்கள்.
இந்த வன்கொடுமை எந்தப் பின்னணியில், யாரால், எப்படி நிகழ்த்தப்பட்டது? மறுகட்டமைப்பு இயக்கத்துக்குத் தலைமையேற்ற தானும் மற்ற தன் தோழர்களும் செய்த தவறுகள் என்ன? ரஷ்யாவுக்கு எதிர்காலம் உண்டா?--இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதரும் வகையில், 'தி வாஷிங்டன் போஸ்ட்' (The Washington Post) பத்திரிகையின் 21.08.2011 இதழில், "கவிழ்ப்புப் புரட்சி கற்றுத்தரும் பாடம்" (Lessons from the USSR coup attempt) என்ற தலைப்பில் கொர்பச்சேவ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே. தமிழில்: விதுரன்.]


ருபது ஆண்டுகளுக்கு முன் இதேபோல [1991 ஆகஸ்ட் மாதத்தின்] கடைசிவாரத்தில்தான் அது நிகழ்ந்தது; ஆம், கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களையும் சோவியத் அரசின் அதிகாரிகளையும்கொண்ட குழு ஒன்று கவிழ்ப்புப் புரட்சியை நடத்த முயன்ற சம்பவத்தைத்தான் நான் குறிப்பிடுகிறேன்."அவசரநிலைக்கான கமிட்டி" என்னும் சட்டவிரோத அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினார்கள்; சோவியத் குடியரசின் தலைவரைத் தனிமைப்படுத்தி, பதவிப் பொறுப்பிலிருந்து நீக்கவும் செய்தார்கள்.

சோவியத் யூனியனில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எமது முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் நடந்த உக்கிரமான அரசியல் போராட்டத்தின் விளைவுதான் அந்த ஆகஸ்ட் மாத சம்பவங்கள்

மறுகட்டமைப்பு (perestroika) நடைபெற்ற ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் எமது நாட்டில் நிகழ்ந்தன. வெளிப்படையான அணுகுமுறை (glasnost) யை; சுதந்திரமான, வேட்பாளர்கள் களம்காண்கிற தேர்தல்களை; சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிச்செல்வதற்கான தொடக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள். ஆனால், இத்தகு மாற்றங்களால் தமது பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அதிகாரவர்க்கம் கலக்கமடைந்தது.

மிகப்பெரிய, பல இனக்குழுக்களைக் கொண்ட, ராணுவமயமாக்கப்பட்ட, சர்வ அதிகாரங்களும் ஆட்சியாளர்களிடம் குவிந்துகிடந்த நாட்டில் அவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. மறுகட்டமைப்பு தலைவர்களாகிய நாங்களும் எங்கள் பங்குக்கு சில தவறுகளைச் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்துவதற்கான பணியை நாங்கள் மிகக் காலந்தாழ்ந்து மேற்கொண்டோம். இதன் விளைவாக, மறுசிந்தனையின் என்ஜினாக செயல்பட்டிருக்கவேண்டிய கட்சி, அதற்குத் தடையேற்படுத்தும் 'ப்ரேக்' ஆக மாறிவிட்டது; கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த என்மீது கட்சி அமைப்புகள் தாக்குதல் தொடுத்தன; 1991 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் இது உச்சகட்டத்தை எட்டியது. இந்தக் கொடிய தாக்குதலின் விளைவாக நான் ராஜினாமா செய்வதாக அறிவித்தேன்.

சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நாங்கள் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைளைத் தீர்க்கும்பொருட்டு என்னை நிர்ப்பந்தப்படுத்தி, அவசரகால நடவடிக்கைகளை அங்கீகரிக்கச்செய்துவிடலாம் என்று எனக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள் கனவுகண்டு கொண்டிருந்தனரல்லவா, அவர்களுக்கு எனது அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. பலமணிநேரம் விவாதித்த பொலிட்பீரோ, எனது ராஜினாமாவைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, அமர்வுக்குத்திரும்புமாறு கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். என்னை எப்படியாவது பதவியிறக்கம் செய்துவிட முயற்சிகள் நடந்துகொண்டிருந்த அந்த சூழலில் எனது முடிவில் உறுதியாக இருந்திருக்கவேண்டும்.

ஜூலை மாதம் மற்றொரு சம்பவம் நடந்தது: அன்றைய பிரதமர் வாலன்டின் பாவ்லொவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி யாசொவ், கே.ஜி.பி. (KGB) அமைப்பின் தலைவர் விளாதிமீர் க்ரியுஷ்கொவ் ஆகியோர்,, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில பிரதமருக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்கள். இவையனைத்தும் நான் அவையில் இல்லாதபோது நடந்தேறின. அதே நேரத்தில், குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில், சோவியத் குடியரசுகளுக்கிடையே ஏற்படவிருந்த புதிய [சோவியத்] ஒன்றியத்துக்கான ஒப்பந்தத்தைத் தயாரிக்கும் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நான் கலந்துகொண்டிருந்தேன்.

மறுநாள், நாடாளுமன்றத்தில் உரையற்றியபோது, "அவசரத் தீர்வுகளை" நான் எதிர்ப்பதாகக் கூறினேன்; உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள்.

பகிரங்கமாக நடந்த போராட்டத்தில், மறுசிந்தனையின் எதிர்ப்பாளர்கள் தோற்றுப்போனார்கள்.கடுமையான சூழல் நிலவியபோதிலும், மக்கள், பிரஜைகளாகி மாற்றத்தை ஆதரிக்கலாயினர். பால்டிக் பிரதேசக் குடியரசுகள் உட்பட அனைத்து குடியரசுகளுமே அமல்படுத்தத் தயாராக இருந்த நெருக்கடியைச்சமாளிக்கும் பொருளாதாரத்திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாள், புதிய [சோவியத்] யூனியன் வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்தது. இதனைத்தொடர்ந்து கட்சியின் சிறப்பு மாநாடும் கூட்டப்படவிருந்தது; இது சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்பவர்கள்-எதிர்ப்பவர்கள் எனக் கட்சியில் உள்ளவர்களை இனம்பிரித்துக் காட்டவிருந்தது.

புதிய ஒன்றியத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம்; சோவியத் நாட்டுத் தலைமையில் பெரிய மாற்றங்களைக் கொணரவும் திட்டமிட்டிருந்தோம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், கிரிமியாவுக்குச் சிறு விடுப்பில் செல்வதற்கு முன்னர், ரஷ்யக் குடியரசின் அதிபர் போரிஸ் எல்த்சின் மற்றும் கஜாக்கிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் ஆகியோருடன் இதுகுறித்து விவாதித்தேன்.

பலமாதங்களாக நடந்த கடுமையான போராட்டங்களின் விளைவாக நான் மிகவும் களைத்துப்போயிருந்தேன்; ஆனால் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பைக் குறைத்துக் மதிப்பிட்டுவிட்டேன். நான் விடுப்பில் செல்வதைத் தள்ளிபோட்டிருக்க வேண்டும்.

புதிய யூனியன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிவிபரங்கள் இறுதியாக்கப்படுவது பற்றி எனது உதவியாளர்களிடமும் எல்த்சினிடமும் ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். ஆகஸ்ட் 19-ஆம் நாள் மாஸ்கோவுக்குப் பறந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்கத்திட்டமிட்டிருந்தேன்; ஆனால், அழையா விருந்தாளிகளாக ஒரு கோஷ்டியினர் என் வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். அந்தக் கவிழ்ப்புப் புரட்சியின் நாயகர்கள் அங்கு வந்துசேர்வதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்பதாக நகரில் எனது அனைத்துத் தொலைபேசி லைன்களும், அதிகாரபூர்வத் தொலைபேசிகளும், கேந்திரமான தொடர்பு லைனும் துண்டிக்கப்பட்டன. முற்றிலுமாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். பொலிட்பீரோவிலும், அரசாங்கத்திலும் இருந்த எனது எதிரிகள், கவிழ்ப்புப்புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிவிட்டது.

அன்றைய நிலையில்,எமது நாட்டையும், எங்களையும் பெரும் ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன; முடிவு என்ன ஆகும் என்றே எனக்குத்தெரியவில்லை என்று எனது குடும்பத்தாரிடம் கூறினேன். இந்த நபர்களுடன் [கவிழ்ப்புப் புரட்சியாளர்களுடன்] சேர்ந்து செயல்பட சம்மதிப்பதில்லை எனும் என் நிலையைத் தெளிவுபடுத்தினேன். எதுவந்தாலும் சரி; நாங்கள் உங்களுக்குத் துணைநிற்போம் என்று என் மனைவி ரெய்சாவும் எனது குடும்பத்தினரும் உறுதி கூறினார்கள்.

எனது அதிகாரங்களைத் தற்காலிகமாகத் துணை ஜனாதிபதி கென்னடி யானயேவ் வசம் ஒப்புவிக்கவேண்டும் அல்லது நான் ராஜினாமா செய்யவேண்டும் என வந்த கோஷ்டியினர் என்னை வற்புறுத்தினார்கள். இதனைத் திட்டவட்டமாக மறுத்த நான், மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை நடத்த வேண்டும் அல்லது சுப்ரீம் சோவியத்தின் அமர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கோரினேன்.

முடிவுகள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை; என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற பாணியில் நான் பம்மிக்கொள்ள முற்பட்டதாகச் சிலர் குற்றம் சொன்னார்கள்; ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை; சேற்றைவாரி இறைக்கும் தன்மைகொண்டவை.

கவிழ்ப்புப் புரட்டாளர்களுக்கு நான் சொன்ன பதில், அவர்களது திட்டங்களின்மீது விழுந்த முதல் அடியாகும். அவர்களால் மக்களை அச்சுறுத்திப் பணியவைக்கமுடியவில்லை என்பது இதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. துணிந்து எதிர்கொள்ளவும், எதிர்த்து நிற்கவும், கோரிக்கைகளை எழுப்பவும் எமது சமூகம் கற்றுத் தேறியிருந்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியைக் கண்டனம் செய்தும், சதிகாரர்களின் நடவடிக்கைகளைக் கவிழ்ப்புப் புரட்சி என்று சாடியும் உறுதியான நிலையெடுத்தார் ரஷ்ய ஜனாதிபதி எல்த்சின். அந்த நாட்களில் எல்த்சினின் நடவடிக்கைகளுக்காக அவரை நான் பாராட்டினேன்; புகழ்ந்துரைத்தேன்.

எமது [சோவியத்] யூனியனைப் பாதுகாக்கத்தான் இவ்வாறு தாம் செயல்பட்டதாகச் சதியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்; இன்னும்கூட சிலர் அப்படிச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்ததைப்போல, அவர்களின் நடவடிக்கை, நாட்டை நிர்மூலப்படுத்துவதில்தான் முடிந்தது. கவிழ்ப்புப் புரட்சி மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதென்னவோ உண்மைதான்; ஆனால், [ஒன்றிணைக்கும்] பொது அரசு என்னும் கோட்பாட்டை அது பாழ்படுத்திவிட்டது. கவிழ்ப்புப்புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்பே ரஷ்யத் தலைவர்கள் தொடங்கிவைத்திருந்த "[சோவியத்] யூனியனிலிருந்து விலகுவது" என்னும் போக்கினை இது விரைவுபடுத்தியது. குடியரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக, சுதந்திரப்பிரகடனம் செய்யலாயின.

அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த நிலை மிகவும் ஆபத்தானதுதான். இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை எங்களால் கூட்டமுடிந்தது; பெரும் சமஷ்டி அரசு என்னும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு ஒன்றியம் உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கான புதிய வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியை அது அங்கீகரித்தது. எல்லாவிதமான பிரச்சனைகளையும் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது; ஆனால் விரைவிலேயே புதிய வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, குடியரசுகளுக்குச் சமர்ப்பிக்கப்படலாயிற்று.

நெருக்கடிகளை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் நாங்கள் இணைந்து செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை மீீண்டும் துளிர்விடத்தொடங்கியது. ரஷ்யா, உக்ரைன், பெலாருஸ் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் மட்டும் பெலொவெஷ்ஸ்க்யா புஷ்ச்சாவில் கூடிச்சதி செய்திருக்காவிடில், 1991-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும். சுயாதிபத்தியம் கொண்ட அரசுகளின் ஒன்றியம் (Union of Sovereign States) என்னும் பெயரில், புதிய வடிவில், குடியரசுகளுக்கு மேலும் அதிக அதிகாரங்களுடன் [சோவியத்] யூனியன் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அது மெய்ப்பட்டிருந்தால், பொருளாதார சீர்திருத்தங்களை ஓரளவு கஷ்டங்களுடன் நிறைவேற்றியிருக்கமுடியும்; தொழில் உற்பத்தியின் வீழ்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்; ரஷ்யாவின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான சரிவு நிகழ்ந்திருக்காது என்பது உறுதி.

கடந்த 20 ஆண்டுகளாகப் பற்பல இன்னல்களைத் தாண்டிவந்துள்ளது ரஷ்யா. சுதந்திரத்திற்காக அது கொடுத்த விலை அளப்பரியது; அதை அடைவதற்கான பாதையோ, நாம் அதில் அடியெடுத்து வைத்தபோது அனுமானித்ததைக் காட்டிலும் மிகக்கடுமையானது. இப்போதும்கூட நாம் ஸ்திரமான ஜனநாயகத்தைப் பாதியளவுதான் எட்டியிருக்கிறோம். ஆனால் இந்தப் பாதையைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.

வருகின்ற ஆண்டுகளில் நாம் விரைந்து முன்னேற வேண்டும். இது நிகழ வேண்டுமானால், ரஷ்யாவில் மென்மேலும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மாற்றங்களை ஆதரிக்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும்.

இது சாத்தியம்தான் என்று நம்புகிறேன். இதற்கான வாய்ப்பு நம் கைகளில்; இதை நாம் நழுவவிடக்கூடாது.

Read more...

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே அம்பலமாகிறார்





நான்அன்னாஹசாரேயாகஇருக்கமாட்டேன்






அருந்ததி ராய்







புகழ்மிகு எழுத்தாளர் அருந்ததி ராய், கலை-இலக்கியம் மட்டுமின்றி, அரசியல்மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான சமுதாயப் பிரச்சனைகள் குறித்துத் தன்கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்துபவர். அன்னா ஹசாரேயைமுன்னிறுத்தி இப்போது நடந்துவரும் கிளர்ச்சிபற்றி ஹிந்து நாளிதழில் (THE HINDU) 22.08.2011-ல் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. தமிழில்: விதுரன்





நாம் தொலைக்காட்சியில் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிற காட்சிமெய்யாலுமே புரட்சியெனில், அது, இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கின்ற,அறிவுபூர்வமற்ற அண்மைக்கால சம்பவங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.'ஜன் லோக்பால்' மசோதா குறித்து உங்களுக்கு எத்தனையோ கேள்விகள்இருக்கலாம்; ஆனால், கட்டத்திற்குள் 'சரி' என்று குறியிட்டு ஆமோதிக்கின்றவகையில், (அ).வந்தே மாதரம் (ஆ). பாரத மாதாவுக்கு ஜே (இ). அன்னாதான்இந்தியா-இந்தியாதான் அன்னா (உ). ஜெய் ஹிந்த் என்பவைதான் உங்களுக்குஅளிக்கப்படும் விடைகளாக இருக்கும்.




முற்றிலும் வேறுபட்ட காரணங்கள், முற்றிலும் மாறுபட்ட வழிமுறைகளைக்கொண்டிருந்த போதிலும், மாவோயிஸ்டுகளுக்கும் ஜன் லோக்பால்மசோதாவுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு: அவை இரண்டுமே, இந்தியஅரசைத் தூக்கியெறியத் துடிக்கின்றன. இவற்றில் ஒன்று, பெரும்பாலும்ஏழைகளிலும் பரம ஏழைகளான ஆதிவாசிகளின் படையைக் கொண்டு, கீழிருந்து மேலாகநடத்தப்படுகின்ற ஆயுதப் போராட்டம். மற்றதோ, புத்தம் புதிதாகவார்த்தெடுக்கப் பட்டிருக்கும் புனிதப்பெருமகனார் ஒருவரின் தலைமையில்,பெரும்பாலும் நகரவாசிகளையும் நிச்சயம் வசதிபடைத்தவர்களையும் கொண்டபடையினால் மேலிருந்து கீழாக காந்திய பாணியில் கத்தியின்றி-ரத்தமின்றிநடத்தப்படுகின்ற கவிழ்ப்புப் புரட்சியாகும். (இந்த விஷயத்தில் தன்னைத்தூக்கியெறிவதற்கு ஏதுவாகத் தன்னால் இயன்ற அனைத்து வசதிகளையும் செய்துஒத்துழைக்கிறது அரசு).

தனது கவுரவத்தைத் தகர்த்துவிட்டிருந்த பெரும் ஊழல்களிலிருந்து கவனத்தைத்திசை திருப்ப ஏதேனும் வழியை அரசு தேடிக்கொண்டிருந்த நேரம் அது. அதாவது,ஏப்ரல் 2011-ல் சில நாட்கள் அன்னா ஹசாரே "சாகும் வரை உண்ணாவிரதம்" இருந்தசமயம். புதிய ஊழல் தடுப்பு சட்ட முன்வடிவைத் தயாரிப்பதற்கானகூட்டுக்குழுவில் இடம்பெறுமாறு "டீம் அன்னா" (Team Anna) என்று தனக்குத்தானே நாமகரணம் சூட்டிக்கொண்ட சிவில் குழுவை அரசு அழைத்தது.

இதன்பிறகு, இரண்டாவது முறையாக அன்னா ஹசாரே "சாகும்வரை உண்ணாவிரம்"மேற்கொள்ளவிருந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள், உண்ணாவிரதம் தொடங்குவதற்குமுன்னதாகவே அல்லது சட்டவிரோத நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதற்குமுன்பாகவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், ஜன்லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம், எதிர்ப்பைக்காட்டுவதற்கான உரிமைக்கான போராட்டத்துடனும், ஜனநாயகத்திற்கானபோராட்டத்துடனும் இணைக்கப்படலாயிற்று.

இந்த 'இரண்டாம் சுதந்திரப்போராட்டம்' தொடங்கிய சில மணிநேரத்திலேயே அன்னா விடுதலை செய்யப்பட்டார்.சமர்த்தராக அவர் சிறயை விட்டு வெளியேவர மறுத்துவிட்டார். திகார் சிறையில்கவுரவ விருந்தினர் போலத் தங்கியிருந்த அவர், பொது இடம் ஒன்றில்உண்ணாவிரதம் இருப்பதற்கான உரிமைகோரி சிறையிலேயே பட்டினிப் போரைத்தொடங்கினார். மூன்று நாட்களாகக் கூட்டமும், தொலைக்காட்சி வேன்களும்வெளியே காத்துக்கொண்டிருந்தபோது, தேசியத் தொலைக்காட்சி சானல்கள்அனைத்திலும் ஒளிபரப்பப்படுவதற்கான அன்னாவின் செய்திகளடங்கிய விடியோசுருள்களை ஏந்திக் கொண்டு 'டீம் அன்னா' உறுப்பினர்கள், மிகவும்பாதுகாப்புமிக்க அந்த சிறைக்குள் நுழைவதும், வெளியில் வருவதுமாகப்பரபரப்புடன் காணப்பட்டார்கள். (இதுபோன்ற வசதிவாய்ப்பு வேறு எவருக்கும்அளிக்கப்படுமா என்ன?)

இதற்கிடையே, வாரக்கடைசியில் நடக்கவிருந்த மாபெரும்காட்சிகளை அரங்கேற்றுவதற்கு வசதியாக, சேறும் சகதியுமாகக் காணப்பட்டராம்லீலா மைதானத்தைச் செப்பனிடும் பணியில் இரவு-பகல் பாராமல் டெல்லிமுனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்; 15லாரிகள், ஆறு மண்ணள்ளி இட்டு நிரப்பும் இயந்திரங்களும்பயன்படுத்தப்பட்டன. பசிநோக்காமல், கண்துஞ்சாமல் கால்கடுக்க நின்றுகோஷங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் கூட்டமும், நவீன கிரேன்காமிராக்களும் பார்த்துக்கொண்டிருக்க, இந்தியாவிலேயே அதிக ஃபீஸ்வாங்கும் டாக்டர்களின் கவனிப்புடன் அன்னா ஹசாரேயின் "சாகும்வரைஉண்ணாவிரதம்" மூன்றாம் கட்டத்தில் நுழைந்திருக்கிறது. "காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரை இந்திய தேசமே ஓரணியாகத் திரண்டுள்ளதைப் பாரீர்!" எனத்தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னா ஹசேரேயின் வழிமுறைகள் வேண்டுமானால் காந்தீய வழிமுறைகளாகஇருக்கலாம்; ஆனால் அவரது கோரிக்கைகள் அப்படிப்பட்டவை அல்ல என்பதுநிச்சயம். அதிகாரத்தைப் பரவலாக்குவதுகுறித்த காந்திஜியின்கருத்துக்களுக்கு முரணாக, ஜன் லோக்பால் மசோதா என்பது, மிகக் கொடூரமானஊழல் எதிர்ப்புச் சட்டமாகும்; இது, மிகவும் கவனமாகப்பொறுக்கியெடுக்கப்பட்ட மிகச்சிலரால் நிர்வகிக்கப்படுகின்ற,பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட, பூதாகாரமான அதிகாரவர்க்கஅமைப்பைக்கொண்டது; பிரதமர், நீதித்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொடங்கி, சாதாரண கீழ்மட்ட அரசு அதிகாரிகள் உட்பட அதிகார வர்க்கம்முழுவதையுமே ஊடுருவிக் கண்காணிக்கின்ற அதிகாரம் படைத்தது. விசாரணைநடத்துதல், வேவுபார்த்தல், குற்றம்சாட்டுதல் ஆகிய அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் . அதற்கென்று சிறைச்சாலைகள் மட்டும்தான் இருக்காது;மற்றபடி, ஏற்கனவே நம்மிடம் உள்ள ஊதிப்பெருத்து, செய்யும்காரியங்களுக்குப் பொறுப்பேற்காத, ஊழல் மலிந்த நிர்வாகத்தை எதிர்கொண்டுமுறியடிப்பதற்கானதொரு சுதந்திரமான நிர்வாகம் இது என்றுசொல்லப்படுகிறது.

இதனால் பயன் ஏற்படுமா இல்லையா என்பது, ஊழல் குறித்த நம் பார்வையில்தான்உள்ளது. ஊழல் என்பது சட்டம் சார்ந்த ஒரு விஷயம் மட்டும்தானா; நிதிமுறைகேடும் லஞ்ச லாவண்யம் மட்டும்தானா அல்லது சிறிய அல்லது மிகச்சிறியகுழுக்களிடம் அதிகாரம் குவிந்துள்ள படுமோசமான சமத்துவமற்ற சமுதாயஅமைப்பில் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சமூகரீதியிலானபரிவர்த்தனையா? எடுத்துக்காட்டாக, பெரிய விற்பனைக்கூடங்கள் (shopping malls) நிறைந்ததொரு நகரத்தில் நடைபாதை வியாபாரம் தடைசெய்யப்பட்ட நிலையைநினைத்துப் பாருங்கள். பெரிய விற்பனைக் கூடங்களில் பொருட்களை வாங்கஇயலாத மக்களிடம் தனது பொருட்களை விற்கும் பொருட்டு, சட்ட மீறல்செய்வதற்காக, நடைபாதை வியாபாரியொருவர், குறிப்பிட்டபகுதியில் பணியில்உள்ள காவலருக்கும், நகராட்சி ஊழியருக்கும் லஞ்சம் கொடுக்கிறார் என்றுவைத்துக்கொள்வோம். அது அப்படியொரு பயங்கரமான விஷயமா என்ன?வருங்காலத்தில் அவர், லோக்பால் பிரதிநிதிக்கும் பணம்கொடுக்கவேண்டியிருக்குமோ?

சாதாரண மக்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகளுக்கான தீர்வு, சமுதாய அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வைநீக்குவதில் இருக்கிறதா அல்லது இன்னுமொரு அதிகார அமைப்பை ஏற்படுத்தி அதைமக்கள் சகித்துக்கொள்ளச்செய்வதில் இருக்கிறதா?

அன்னாவின் புரட்சிக்காக நிகழ்த்தப்படும் ஆட்டபாட்டங்கள், தீவிரதேசியவாதம், கொடியசைப்பு அனைத்துமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரானபோராட்டங்கள், உலகக்கோப்பை வெற்றி பவனிகள், அணுகுண்டு சோதனைசம்பந்தமான கொண்டாட்டங்கள் ஆகியவற்றிடமிருந்து கடன் பெறப்பட்டவை. அந்தஉண்ணாவிரதத்தை நாம் ஆதரிக்காவிட்டால், நாம் 'உண்மையான இந்தியர்கள்' அல்லஎன்று அவை நமக்குச் சமிக்ஞை காட்டுகின்றன.

இவர்கள் சொல்லும் 'உண்ணாவிரத' இலக்கணத்துக்குள், சந்தேகத்துக்குஆட்பட்டால்போதும் சுட்டுத்தள்ளி விடலாமென்கிற அதிகாரத்தை மணிப்பூரில்ஜவான்களுக்கு அளிக்கின்ற ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை(Armed Forces Special Powers Act) எதிர்த்துப் பத்தாண்டுகளுக்கும் மேலாகஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இரோம் ஷர்மிளாவின் (இவருக்கு இப்போதுகட்டாயப்படுத்தி உணவளிக்கப்படுகிறது) விரதம் வராது; கூடங்குளத்தில்அணுமின் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் பத்தாயிரம்பேர் உண்ணாவிரதம்இருக்கிறார்களே அதுவும் இந்த இலக்கணத்தில் அடங்காது. "மக்கள்" என்றுஇவர்களால் அழைக்கப்படுபவர்களில், இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரததைஆதரிக்கும் மணிப்பூர் மக்கள் வரமாட்டார்கள். ஜகத்சிங்க்பூரில் அல்லதுகலிங்கநகரில் அல்லது நியாம்கிரியில் அல்லது பஸ்தாரில் அல்லதுஜெய்தாபூரில் ஆயுதம் தாங்கிய போலீசாரையும், சுரங்கங்களைக்கொள்ளையடிக்கும் கும்பலையும் எதிர்த்து நிற்கிறார்களே அவர்களை இவர்கள்மக்களாக ஏற்க மாட்டார்கள். போபால் விஷவாயுக் கசிவினால்பாதிக்கப்பட்டவர்களும், நர்மதா பள்ளத்தாக்கில் வீடுவாசலை இழந்து இடம்பெயரச்செய்யப்பட்டவர்களும் இவர்களுக்கு மக்களாகத் தோன்றுவதில்லை.நொய்டாவிலும், புனேயிலும், அரியானாவிலும், நாட்டின் வேறெந்த பகுதியிலும்நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து நிற்கும் விவசாயிகளும் அவர்களைப்பொறுத்தவரை மக்களாக மாட்டார்கள்.

ஜன் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுநிறைவேற்றப்படவில்லையென்றால், பட்டினிகிடந்து மரித்துப்போவேன் என்றுஅச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற 74 வயது முதியவரை அவதானிப்பதற்காகக் கூடிநிற்கிறார்களே அந்தப் பார்வையாளர்கள்தான் இவர்களைப் பொறுத்தமட்டில்'மக்கள்'. பசித்த மக்களின் வயிற்றை நிரப்ப ஒருசில மீன்களையும்,ரொட்டித்துண்டுகளையும் பன்மடங்காகப் பெருகச் செய்தாரே ஏசுநாதர்,அதனைப்போன்றே, பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களைப் பத்துலட்சம்பேராக மாற்றிக்காட்டும் அற்புதத்தை நமது தொலைக்காட்சி சானல்கள்நிகழ்த்திக்கொண்டிருந்தன. "நூறு கோடி மக்களின் குரல் இங்கேஎதிரொலிக்கிறது" என்றும் "இந்தியாதான் அன்னா" என்றும் நமக்குச்சொல்லப்படுகிறது.

மக்களின் குரல் என்று வர்ணிக்கப்படும் இந்த நவீன அவதாரப்புருஷர் யார்என்றுதான் பார்க்கலாமே! விசேஷம் என்னவென்றால், உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான பிரச்சனைகள்குறித்து இவர் குரல்கொடுத்து நாம்கேட்டதே இல்லை. அவர் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயேநடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், இன்னும்கொஞ்சம் அப்பால் [மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்படும்] 'ஆபரேஷன்கிரீன் ஹன்ட்' (operation green hunt) என்னும் நடவடிக்கைகுறித்தும் அவர்வாய்திறக்க மாட்டார். சிங்கூர், நந்திகிராம், லால்கர், பாஸ்கோபிரச்சனைகள் குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் பேசுவதற்குஅவரின் நா எழாது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள காடுகளில்ராணுவத்தை அனுப்புவது குறித்த அரசின் திட்டம் குறித்து அவருக்குக்கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ராஜ் தாக்ரேயின் மராட்டிய மகிமைகுறித்த வெறியுணர்வுப் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அவர், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 2002-ல்நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மேற்பார்வையிட்ட அந்த மாநில முதல்வரின்'வளர்ச்சி முன்மாதிரி'யை வானளாவப்புகழ்ந்திருக்கிறார். (வெளிப்படையாகஎதிர்ப்புக்குரல்கள் எழும்பியவுடன், தனது அறிக்கையைத்திரும்பப்பெற்றுக்கொண்டபோதிலும், அவரது வியப்புக்குரிய பாராட்டைதிரும்பப்பெற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை).ஆர்ப்பாட்டக் கூக்குரல்கள் எழுப்பப்படும் இந்த நிலையிலும், நிதானமானபத்திரிகையாளர்கள் தமக்குரிய கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அன்னாவின் பழைய தொடர்புகள்பற்றிய தகவல்கள்இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. ராலேகான் சித்தி கிராமத்தில் அன்னாஅறிமுகம் செய்த கிராம சமூகத் திட்டத்தை ஆய்வு செய்த முக்குல் சர்மா,கடந்த 25 வருடங்களாக அந்த கிராமத்தில் ஊராட்சி மன்றத்திற்கோ அல்லதுகூட்டுறவு சங்கங்களுக்கோ தேர்தல் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றுகூறக்கேட்டிருக்கிறோம்.

'அரிஜனங்கள்' குறித்த அன்னாவின் கருத்தும்நமக்குத் தெரியும்."காந்தி கண்ட கனவின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் ஒருசமார், சுனார், கும்ஹார் மற்றும் இத்யாதி ஜாதியினர் இருக்கவேண்டும்.அவரவர்கள் தம் தொழிலுக்கேற்பத் தம் வேலைகளைச் செய்துவரவேண்டும்; இதனால்,கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் நாங்கள் ராலேகான் சித்தியில்நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் அன்னா.'சமத்துவத்திற்கான இளைஞர் இயக்கம்' என்ற பெயரில் இயங்கும் இடஒதுக்கீட்டுஎதிர்ப்பு ("தகுதி"க்கு ஆதரவு) இயக்கத்தினருடன் அன்னா டீம்கூடிக்குலாவுவதில் வியப்பேதும் இருக்கிறதா என்ன?

'கோகா-கோலா' மற்றும்'லெமன் ப்ரதர்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தாராளமாக நிதியைப்பெறும் தொண்டுநிறுவனங்களின் பிடியில் இருக்கும் சிலரால் இந்தப்போராட்டம் வழிநடத்தப்படுகிறது. டீம்அன்னாவின் முக்கியப் புள்ளிகளானஅர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிஸோதியா ஆகியோர் நடத்துகின்ற'கபீர்' எனும் தொண்டு நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபோர்டுஃபவுண்டேஷனிடமிருந்து 4,00,000 டாலர் நிதி பெற்றுள்ளது.

'ஊழலுக்கு எதிராகஇந்தியா' (India Against Corruption) இயக்கத்திற்கு நிதியளிக்கும்அமைப்புகளில், அலுமினியம் உற்பத்தி செய்கிற, துறைமுகங்களைஉருவாக்குகின்ற, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கவல்ல, ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை நடத்துகின்ற கம்பெனிகளும்,ஃபவுண்டேஷங்களும் உண்டு. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை உடையநிதி சாம்ராஜ்யங்களைக் கட்டியாளும் அரசியல்வாதிகளுடன் இந்தக்கம்பெனிகளும் ஃபவுண்டேஷங்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை.இவற்றில் சிலவற்றுக்கு எதிராக ஊழல் சம்பந்தமாகவும், இதரகுற்றங்களுக்காகவும் இப்போது விசாரணை நடந்துவருகிறது. இந்த நிறுவனங்கள்மத்தியில் இப்போது உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதேன்?

விக்கிலீக்ஸ் மூலமான இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கும் தகவல்கள்வெளியான அதே நேரத்தில்தான், பெரிய கார்ப்பரேஷன்களும், மூத்தபத்திரிகையாளர்களும், அரசின் அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதீயஜனதாக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பலவிதங்களில் கூட்டுசேர்ந்துசெயல்பட்டதன் விளைவாக மக்களின் நிதியிலிருந்து லட்சக்கணக்கானகோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக உறிஞ்சியெடுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றைஉள்ளிட்ட பல பெரிய ஊழல்கள் வெடித்துக்கிளம்பிய அதே காலகட்டத்தில்தான்,ஜன் லோக்பால் மசோதாவுக்கான இயக்கமும் வலுப்பெறலாயிற்று என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக, பத்திரிகையாளர்களாகஇருந்துகொண்டே பேரம் பேசியவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரிய அதிபர்கள் சிறையில் கம்பி எண்ணவேண்டியதாயிற்று. இது உண்மையா அல்லவா?

தனது மரபார்ந்த பொறுப்புக்களிலிருந்து அரசு கழன்றுகொள்ள, (குடிநீர்விநியோகம், மின்சாரம், போக்குவர்த்து, தொலைத்தொடர்பு, சுரங்கம்,மருத்துவம், கல்வி) ஆகிய பணிகளை பெரும் கார்ப்பரேஷன்களும், தொண்டுநிறுவனங்களும் மேற்கொள்ளத்தொடங்கியுள்ள இந்த சமயத்தில், கார்ப்பரேட்நிறுவனங்களுக்குச் சொந்தமான பயங்கரசக்தியும் வீச்சும் கொண்ட செய்திநிறுவனங்கள், மக்களின் எண்ணவோட்டங்களைக் கட்டுப்படுத்த எத்தனிக்கின்றஇந்த நேரத்தில், இத்தகு அமைப்புகள்-அதாவது, கார்ப்பே ரஷன்கள், ஊடகங்கள்,தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் லோக்பால் மசோதாவின் வரம்புக்குள்கொண்டுவரப்பட வேண்டும் என்று எவரும் எதிர்பார்ப்பது இயல்புதானே? ஆனால்,இவர்கள் முன்மொழிந்திருக்கிற மசோதாவில் இந்த அமைப்புகள் அனைத்தும்விடப்பட்டிருக்கின்றன.

மற்ற அனைவரைக் காட்டிலும் உரத்துக் குரல் கொடுப்பதன் மூலமாகவும்,மோசமான அரசியல்வாதிகள், அரசின் ஊழல் ஆகிய விவகாரங்களைப் பற்றிக்கொட்டிமுழக்குவதன் மூலமாகவும், இந்த அமைப்புகளை மிகத்திறமையாக நழுவவிட்டிருக்கிறது டீம் அன்னா. அரசைமட்டுமே மோசமாகச் சித்தரிப்பதன்மூலம்,பொதுப்பணிகளிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டுமெனவும், மேலும்தனியார்மயமாக்க வேண்டும்; பொதுக்கட்டுமானங்களை, இயற்கை வளங்களைப்பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுக்கும்நோக்கில், தமக்கென்று உயர்பீடமொன்றை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், கார்ப்பரேட் ஊழல் என்பதுசட்டரீதியாக்கப்பட்டு, பேரத்திற்கான கட்டணம் என்றுகூட அதற்குப் புதியநாமகரணம் சூட்டிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுகின்ற 830 மில்லியன்மக்கள், அவர்களை மேலும் வறியவர்களாக்குகின்ற, இந்த நாட்டை ஒரு உள்நாட்டுயுத்தத்திற்கு இட்டுச்செல்கின்ற கொள்கைகளுக்கு வலுவூட்டுவதன்மூலம்உண்மையிலேயே பயன் பெற இயலுமா என்ன?

நாடாளுமன்ற சட்டமன்ற அமைப்புகள், கிரிமினல்களையும், மக்களுடன் தொடர்புஅறுந்துபோன கோடீஸ்வர அரசியல்வாதிகளையும் கொண்டவையாக உள்ள நிலையில்,இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தோல்விதான் இந்த மோசமானநெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்த சூழலிம் எந்தவொரு ஜனநாயகஅமைப்பும் சாதாரண மக்கள் எளிதாக அணுகத்தக்கதாக இல்லை.

டீம் அன்னாவைச்சேர்ந்தவர்கள் கொடியை வேகமாக அசைத்துக் காட்டுவதைக் கண்டு ஏமாந்துபோய்விடாதீர்கள். ஒருவிதமான மேலாதிக்கப் படுகுழியில் இந்தியாவைத்தள்ளிவிடுவதற்கான போர்க்களத்தை இப்போது நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இது, ஆப்கானிஸ்தானத்து போட்டித் தளகர்த்தர்கள் நடத்துகின்ற யுத்தத்திற்கு இணையான, அதைவிடவும் மோசமான இழப்பினை ஏற்படுத்திவிடக் கூடியயுத்தமாகும்.


Read more...

Monday, March 21, 2011

எஸ்.ஆர்.கே.









இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே.

கிருங்கை சேதுபதி


பொதுவுடைமை நெறிநின்று கம்பனைப் புதுவிதமாக அணுகிய இருபெரும் இலக்கிய மேதைகள் தோழர் ஜீவாவும் எஸ்.ஆர்.கே.யும். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இரு கண்களாய்க்கொண்டு எண்ணம், எழுத்து, பேச்சு என எல்லா நிலைகளிலும் தன்னை நிறுத்திக்கொண்டு சமுதாயப் பிணிகளுக்கு மாற்றுத்தேடிப் போராடிய இலக்கிய வேந்தர் எஸ்.ஆர்.கே. என்னும் எஸ்.இராமகிருஷ்ணன்.

தமிழும் ஆங்கிலமும் தாய்மொழிகள் எனப் பிரவகிக்கும் இவரது உரையால், நாட்டரசன்கோட்டையில் பள்ளிப்படைகொண்ட பாட்டரசன் கம்பன் எழுந்துவந்து மில்டனோடு கைகுலுக்கிக் கொண்டது வரலாறு. கால காலத்திற்கும் இந்த உறவு நிலைகொள்ள இவர் முனைந்து எழுதி வழங்கிய ஒப்பீட்டு ஆய்வுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பி.எச்.டி. பட்டத்தை, "செம்புலமை மெய்க்கீர்த்தி' எனத் தமிழில் சுட்டி, கம்பனடிப்பொடி, எஸ்.ஆர்.கே.யை வாழ்த்தி ஒரு வெண்பா பாடினார்.

பாரதி மரபில் கம்பனோடு வள்ளுவனையும் இளங்கோவடிகளையும் தமது ஆய்வுத்தமிழால் அழகாகப் பதிவுசெய்தார் எஸ்.ஆர்.கே. கூடவே, பல படைப்புகளை மூல நூல்கள் எனக் கொள்ளும் வகையில் தமிழில் திறம்பட மொழிபெயர்ப்புச் செய்தவர்.÷ விடுதலைப்போரில் ஈடுபட்டு மும்முறை சிறைவாசம் ஏற்றவர்: பொதுவுடைமை நெறிதாங்கிப் போராடிய காலத்தில் நான்காண்டுகளுக்கு மேல் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். வீரம் செறிந்த இவரின் வரலாறு, இந்தியத் தமிழ் இலக்கியப் பொதுமை வரலாறு.

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கி(ள்)ளிமங்கலம் என்ற சிற்றூரில் வி.கே.சுந்தரம் - மங்களம் தம்பதியருக்கு 1921-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி மகவாகத் தோன்றியவர் எஸ்.ஆர்.கே. ஆரம்பக் கல்வியை மாயவரத்தில் பெற்ற இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இந்திய விடுதலை முழக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த அக்காலத்தில் தமது தோழர் கே.பாலதண்டாயுதத்துடன் விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கினார் எஸ்.ஆர்.கே.÷1936-களில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் விடுதலை முழக்கிய இவர், மார்க்சியத் தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1940-41-இல் காசி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவராகச் சேர்ந்தார். அங்கும் மாணவர் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு இயங்கினார். கனல் கக்கும் மொழியில் இந்திய விடுதலை உணர்வை எடுத்துமொழிந்த அவரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்து காசிச்சிறையில் தள்ளியது. பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றம் பெற்றார். விடுதலைபெற்றும் சில காலம் வீட்டுக்காவலில் வைக்கப் பெற்றார்.

பின்னர், சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் தென்மண்டல மாநாட்டில், பங்கேற்ற எஸ்.ஆர்.கே., சம்மேளனத்தின் செயலாளரானார். 1942-இல் திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்ற எஸ்.ஆர்.கே., ஆகஸ்ட் போராட்டத்தில் தீவிரமாக இயங்கினார். பிறகு, படிப்பை உதறிவிட்டு, மாணவர் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1943 ஜனவரியில் சென்னை சென்றார். ஜனசக்தியில் "தேசபக்தன்', "டைரி', "ஈட்டிமுனை' ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதினார்.

தந்தையார் மறைந்த பின்னர் தம் பங்காக வந்த சொத்தை விற்று, முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே அளித்த எஸ்.ஆர்.கே., அக்கட்சியின் சாதாரண முழுநேர ஊழியனாக, ஒரு சிறு தொகையைப் பெற்றார். அவருடன் இணைந்து களப்பணி ஆற்றிய டாக்டர் கமலா என்பவரைக் காதலித்து, 1944-இல் கரம் பற்றினார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.

கட்சியில் முழுநேரப் பணியாற்ற முடியாத நிலையில், 1953-இல் மதுரைக்குக் குடிபெயர்ந்த எஸ்.ஆர்.கே., 1953-இல் பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரியில் பணியைத் தொடர்ந்தார். முற்றுப்பெறாது நின்ற தம் பட்டப்படிப்பை முடிக்கும் நோக்கோடு, வடநாட்டில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நேபாளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர், தமது "கம்பனும் மில்டனும்' ஒப்பீட்டு ஆய்வுக்காக மதுரைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
தாம் பெற்ற அறிவைத் தம்மைச் சார்ந்தவர்களும் பெறுதற்குரிய வழியாகத் தனிப்பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியப்பணி மேற்கொண்டார். சிறந்த பொழிவாளராகவும், சீரிய பத்திரிகையாளராகவும், இனிய மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த எஸ்.ஆர்.கே.யைப் பெருமைமிக்க பேராசிரியராக உயர்த்தி மதுரை பேறு பெற்றது.

தந்தை நிகர்த்த தோழராகவும் தாயினும் மிக்க அன்புடையவராகவும் மனிதநேய மேருவாகவும் இவர் விளங்கிய பெற்றியை அவர் காலத்து அறிஞர் உலகம் அனுபவித்து உணர்ந்தது; உயர்ந்தது. வடமொழியோடு, தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி, சமகால இலக்கியம் வரை ஆழ அறிந்திருந்த எஸ்.ஆர்.கே., ஜீவாவின் தோழர்; ஜெயகாந்தனின் ஆசான்; எத்தனையோ இலக்கியவாதிகளுக்கு இனிய வழிகாட்டி.

உலக சமாதான இயக்கத்துக்குத் தம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்த எஸ்.ஆர்.கே., ஐப்சோவின் தமிழ் மாநிலத் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். உலக சமாதான இயக்கத்தின் சார்பில், 1982-இல் பாரதி நூற்றாண்டுவிழாவை உலகமெங்கும் கொண்டாடப் பெருமுயற்சி மேற்கொண்டார். புதுதில்லியில், 64 நாடுகள் பங்குகொண்ட சர்வதேச பாரதி நூற்றாண்டுவிழாவை சிறப்புற நடத்தினார். அதனை ஒட்டி அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்தான், Bharati: Patriot poet Prophetஅதுசமயம், சோவியத் யூனியன், பின்லாந்து, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஹங்கேரி நாடுகளுக்கெல்லாம் சென்று பாரதியின் புகழைப் பரப்பினார். பிராக், கோபன்ஹேகன் நகரங்களில் நடந்த சர்வதேச சமாதான மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இவர்தம் நூல்கள், வள்ளுவன் கண்ட வாழ்வியல், திருக்குறள் - ஒரு சமுதாயப் பார்வை, திருக்குறள் ஆய்வுரை, இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு, கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்று அற்புத நூல்களை ஆக்கித்தந்தார். The Epic Muse: The Ramayana And Paradise Lost என்ற ஆங்கில நூலையும் படைத்தளித்தார். சீதை குறித்து, "கற்பின் கனலி' என்றும், வாலி குறித்து, "சிறியன சிந்தியாதான்' என்றும், கம்பன் கண்ட அரசியல், கம்பசூத்திரம் ஆகிய நூல்களையும் ஆய்வுலகுக்கு வழங்கினார். ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றையும், மார்க்சியப் பொருளாதாரப் பார்வையும் இவர் அளித்த தமிழ்க் கொடைகள்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினி பாமி தத் எழுதிய India Today என்னும் ஆங்கில நூலைத் தமிழில் "இன்றைய இந்தியா' என்று வழங்கினார். ரஷ்ய எழுத்தாளர் ஆஸ்திரோவ்ஸ்கி இருபாகங்களாக எழுதிய How the Steel was Tempered என்ற நாவலைத் தமிழில் "வீரம் விளைந்தது' என்ற தலைப்பில் தந்தார். "பள்ளித்தோழன்' என்பது இவர்தம் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல்.

வடக்கும் தெற்கும் அரசியல் நோக்கில் பகைமை வளர்க்கும் எதிர்முனைகளாகக் கருதப்பட்ட காலத்தில், சமயவாழ்வில் வடக்கும் தெற்கும், இந்தியப் பண்பாடும் தமிழரும் என்று இருபெரும் நூல்களை எஸ்.ஆர்.கே. எழுதினார்.

1983-இல் பார்க்கின்சன் என்னும் நோய் அவரைத் தாக்கியபோதிலும், கணினியின் துணைகொண்டு ஆள்காட்டி விரலால் தட்டித் தட்டித் தம்படைப்புகளைத் தமிழுலகுக்குத் தந்தார். தனக்கு வந்த நோயின் கூறு பற்றியும் அதற்கான சிகிச்சை குறித்தும், அமெரிக்கப் பயணத்தின்போது அங்குள்ள நூல்களைப் படித்துப் புரிந்துகொண்ட அவர், மருத்துவரான தம் துணைவியாரோடு இணைந்து "உங்கள் உடம்பு', "நமது உடல்' ஆகிய உடலியல் தொடர்பான அறிவியல் நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். பாரதிதாசனைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமலேயே, 1995-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பயணப்படி பெறாமல் சொல்மாலை சூட்ட, நாட்டரசன்கோட்டைக்கு வரும்போதெல்லாம், கம்பநாடனுக்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து மணமிக்க ரோஜா மலர்மாலை கொண்டுவந்து அணிவிக்கும் எஸ்.ஆர்.கே.யின் நினைவு கம்பநேயர்களுக்குள் எப்படி எழாமல்
இருக்கும்? இன்று நாட்டரசன்கோட்டையில் கம்பன் விழா.


தினமணி தமிழ் மணி 20 .03 . 2011

Read more...

Sunday, January 9, 2011

ஜென்னி மார்க்ஸ்


காதல் ஒருவனைக் கைப்பிடித்து-அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து... மனைவியாக மட்டுமின்றி, மார்க்ஸ் மாமுனிவரை மார்க்சிஸ்ட் ஆக்கியதில் பெரும்பங்கு வகித்த உற்ற தோழியாகவும் வாழ்ந்தவர் ஜென்னி மார்க்ஸ்.
'தினமணி கதிர்' 09.01.2011 இதழில் 'முரண்சுவை' பகுதியில் ஜென்னி மார்க்ஸ் குறித்து திரைக் கலைஞர் ராஜேஷ் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு மறுபிரசுரம் ஆகிறது...

முரண்சுவை:

மார்க்ஸின் ஜென்னி!


"மூலதனம்' நூலை எழுதி "கம்யூனிஸத்தின் தந்தை' என்று பெயரெடுத்த கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர்தான் ஜென்னி. மார்க்சை அறிந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் அவரது மனைவி ஜென்னியைப் பற்றியும் அறிவர். அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று குறிப்பிட்டார் மார்க்ஸ். மார்க்சைவிட ஜென்னி 4 வயது மூத்தவர். ஜென்னியின் அழகு, அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு ஆகியவை கார்ல் மார்க்சைப் பெரிதும் கவர்ந்தது.

மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர். மனிதன் தன்னுடைய சக மனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும், பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான். பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடைச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது. மார்க்ஸின் புரட்சிகரமான பணிகளால் காவல்துறை ஜென்னியையும் கைது செய்தது. அவர் இருண்ட சிறைக்குள் தள்ளப்பட்டார். அந்தச் சிறையில் வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், நீசத்தனமான கெட்ட நடத்தை உள்ள பெண்கள் ஆகியோர் காவலில் வைக்கப்படும் இடத்தில் ஒரு நாள் இரவைக் கழித்தார்.

மார்க்சின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அதை யாரும் எளிதில் படிக்க முடியாது. அந்தக் கையெழுத்தைப் படித்து, அதைப் பிரதிகள் எடுக்க வேண்டிய வேலையையும் ஜென்னி செய்து வந்தார். அவருடைய கையெழுத்து மோசமாக இருந்ததால்தான், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை.

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி, தோல் வெடித்து விட்டது. அதனால் நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது என்று மனம் திறந்து குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிட்டார்.

ஒரு நேரத்தில் மார்க்ஸ் குடும்பம் உணவின்றித் தவிக்க ஆரம்பித்தது. மார்க்சின் கோட்டும் பேண்டும், அடகுக் கடைக்குப் போய்விட்டன. எனவே அவர் வெளியே வர முடியாமல் இருந்தார். கடிதம் எழுதுவதற்குக் கூட வெள்ளைத் தாள் வாங்க முடியாத நிலையில் இருந்தனர். வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த இந்த நேரத்தில் அவர்களுடைய சின்னஞ்சிறு மகள் பிரான்சிஸ்கா மரணமடைந்தாள். அந்த மகளைப் புதைப்பதற்குக் கூட இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். அதுவும் கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையின்போதுதான் மரணமடைந்தாள்.

அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு அகதி ஒருவர் இங்கிலாந்தின் பணமான இரண்டு பவுண்டு கொடுத்து உதவினார். அந்தப் பணம் தான் சவப்பெட்டி வாங்குவதற்குப் பயன்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தபொழுது தொட்டில் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் முடியவில்லை என்கிறார் ஜென்னி.

இதன்பிறகு எட்கர் என்ற பெயருடைய அவர்களுடைய எட்டு வயது மகன் ஒரு வருடம் நோயினால் அல்லல்பட்டு மரணமடைந்தார். உருக்கு போன்ற எதற்கும் கலங்காத நெஞ்சுரமுள்ள மார்க்சையே மகனின் மரணம் நிலைகுலையச் செய்துவிட்டது. 1880-ம் ஆண்டில் ஜென்னியை நுரையீரல் நோய் பாதித்தது. பிறகு அது ஈரல் புற்றுநோயாக மாறியது.
அந்தப் புற்றுநோயின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலமானார். புற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட வேதனைகளையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜென்னியின் நகைச்சுவை குணம் ஒரு வினாடி கூட அவரைவிட்டு அகலவில்லை.

உயிர்போகும் கடைசி வினாடி வரை நல்ல நினைவுடன் இருந்தார். கடைசியாகத் தன் கணவர் மார்க்சிடம் என்னுடைய பலம் குறைந்து வருகிறது என்று கூறினார். ஜென்னி இறந்ததைக் கண்ட மார்க்சின் உயிர் நண்பர் ஏங்கல்ஸ், "மார்க்ஸ் செத்து விட்டார்' என்று குறிப்பிட்டார். டிசம்பர் 5-ம் தேதி லண்டனில் ஏழை, எளிய சாமான்ய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹைகேட் என்னுமிடத்திலுள்ள கல்லறையில் ஜென்னி மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் லண்டன் சென்ற சமயம், அந்தக் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். உயிருக்குயிராக நேசித்த மனைவியின் இறுதி ஊர்வலத்தில் மார்க்ஸ் கலந்து கொள்ள முடியாதபடி மிகவும் பலவீனமாக அதுவும், மயங்கிய நிலையில் இருந்தார்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.
நன்றி: தினமணிகதிர்
09.01.2011

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP