Thursday, September 15, 2011

சதுரானன் மிஷ்ரா





சதுரானன் மிஷ்ரா:



ஓர் ஆக்கபூர்வமான கம்யூனிஸ்ட்





அனில் ரஜிம்வாலே



இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த மார்க்சீய அறிஞர்களில் முதல் வரிசையில் இருப்பவர் அனில் ரஜிம்வாலே என்றால் மிகையாகாது. அவரது எழுத்துக்கள், சிந்தனைகள் பலராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. மெயின்ஸ்ட்ரீம் (Mainstream) வார ஏட்டின் சுதந்திர தின சிறப்பிதழில் (ஆகஸ்ட் 13, 2011) அவர் எழுதிய கட்டுரை (Chaturanan Mishra: A Constructive Communist) முதுபெரும் கம்யூனிஸ்ட்-தொழிற்சங்கத்தலைவரும், மத்திய அமைச்சரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவருமான அமரர் சதுரானன் மிஷ்ராவுக்குப் புகழ்மாலை சூட்டுவதாக மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இயக்கத்தில் இருப்பவர்கள் விவாதித்துச் செயல்படுத்த வேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்றவேண்டிய மெய்யான கம்யூனிஸ்டுகள் அவசியம் படிக்க இதோ அதன் தமிழ் வடிவம்:


ஓர் ஆக்கபூர்வமான கம்யூனிஸ்ட்


இந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு, இதென்ன வினோதமாக இருக்கிறதே; அப்படியென்றால், 'ஆக்கபூர்வமல்லாத' கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நீண்ட நெடுங்காலமாக ஸ்டாலினிசம், மாவோயிசம் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டதன் விளைவாக, "கம்யூனிஸ்ட்" என்ற கருத்தே பதம்கெட்டுத் திரிந்துபோய், அழித்தல் தொழிலுக்கு அழுத்தம் கொடுப்பதாகிவிட்டது. இதை நிர்மூலமாக்கு; அதை நாசமாக்கு என்றும், முதலாளித்துவத்தைத் 'தூக்கியெறி', ஏகாதிபத்தியத்தைத் 'தகர்த்துப்போடு', அது-இது-எதுவோ அத்தனையையும் அழித்துப்போடு--இப்படிச்செய்தால்தான் சோஷலிசத்தை 'நிர்மாணிக்க'த் தொடங்குவாய் என்றெல்லாம் சொல்லப்பட்டு, கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிசம் என்னும் பதங்கள், அழித்தல் நடவடிக்கைகளைக் குறிப்பதாக மட்டுமே தாழ்த்தப்பட்டுவிட்டன.

ஆக, கம்யூனிஸ்ட் என்றாலே அழிவைத்தான் குறிக்கும் எனும் பொதுவான அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான தவறான கருத்தை எதிரிகளும், நண்பர்களும்கூடப் பரப்பிவருகிறார்கள். மார்க்சீயத்திற்குத் தரப்பட்ட இந்த எதிர்மறை வியாக்யானத்தின் மோசமான தாக்கத்தை தற்போதைய சோஷலிஸ்ட் நாடுகள் தாங்கவேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, பல நாடுகளில், இதனால், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எதார்த்தத்தில், விபரமான, பயனுள்ள கருத்துப் பகிர்வுகளும், விவாதங்களும், நடத்தப்படவேண்டிய விஷயம் இது. (இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது).

ஏதோ தொலைதூரத்தில் உள்ள எதிர்கால அமைப்பில்லாமல், இப்போது இருக்கக்கூடிய அமைப்பு முறைக்குள்ளிருந்தே ஆக்கபூர்வமாக சிந்திக்கவும், செயல்படவும்கூடிய கம்யூனிஸ்டுகளில் சதுரானன் மிஷ்ராவும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. எதிர்காலத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிற மகத்தான பண்பாகும் அது. சுற்றிச்சுற்றி வலம் வந்த செக்குமாட்டுப் பாதையிலிருந்து விலகி, வேறுமாதிரியாக சிந்திக்கத் தயாராக இருந்த ஒரு சில இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் அவரும் ஒருவர். இதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இதுவே அவரது மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயமுமாகும். வலதுசாரிப் பிற்போக்குசக்திகளும், இன்னும் சொல்லப்போனால், பரந்த மனம்கொண்ட பூர்ஷ்வா சக்திகளும் முன்கையெடுக்க விட்டுவிடாமல், முதலாளித்துவ அமைப்பின் முழுத்திறமையையும் பயன்படுத்தி மெய்யான திறன்மிகு சோஷலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைக் கட்டக்கூடியதாகக் கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.

சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய அரசுகளும் வீழ்ந்ததன்பின்னர், புரட்சி, சோஷலிசம், 'ஜனநாயக மத்யத்துவம்' அல்லது அதுபற்றிய வியாக்யானங்கள், வெகுஜனக்கட்சி, சட்டபூர்வ அமைப்பைப் பயன்படுத்துதல், இத்யாதி விஷயங்களில் காலங்காலமாக இருந்துவந்த புரிதல்கள் மற்றும் கருத்துக்களையும் மறுசிந்தனைக்குள்ளாக்கத் தொடங்கினார் அவர். குறிப்பாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், அதன் சிந்தனைப்போக்கையும் ஜனநாயகப்படுத்த வேண்டியதுகுறித்து அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். சோஷலிசம் குறித்த புதிய கருத்துக்களை அவர் விவாதிக்கலானார்.

இவர் மறைவதற்குச் சிலகாலத்திற்கு முன்னதாக இயற்கை எய்திய மற்றொரு புகழ்மிகு தலைவரும், நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்டுமான ஜகன்னாத் சர்க்காரும், மார்க்சியம் நிலைகுத்திப்போன தத்துவமா என்று கேட்க முனைந்தார்.

எதுகுறித்தும் வினா எழுப்புவதென்பது, மார்க்சீயவாதியின் அடிப்படைப் பண்பாகும். அத்தகையவர்களில் சிலர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களது கருத்துக்களைப் போதுமான அளவு விவாதிப்பதில்லை. இதன் விளைவாக இயக்கத்தின் வளர்ச்சி குன்றிப்போய்விட்டது.

முதல் கம்யூனிஸ்ட் மத்திய அமைச்சர்கள்:

மார்க்சீய தத்துவத்தின்பால் மிகவும் தீர்க்கமான, ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு செயல்வடிவத்தை இப்போது காண்போம். மத்திய அரசில் முதன்முதலாகக் கம்யூனிஸ்ட் அமைச்சர்களாக இருந்தவர்கள் சதுரானன் மிஷ்ராவும், இந்திரஜித் குப்தாவும். எப்படிப்பார்த்தாலும், இது மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலமே அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்த இரு அமைச்சர்களும் வியக்கத்தக்க பணியாற்றினர்.

ஆனால், இதுகுறித்துக் கம்யூனிஸ்ட் இயக்கமோ அல்லது பொதுவாக அரசியல் வட்டாரமோ ஏதேனும் நடைமுறை, தத்துவார்த்த முடிவுக்கு வந்தனவா? குறிப்பாக, மார்க்சீயத்தையும் பொதுவாக, அரசியல் தத்துவத்தையும் செழுமைபெறச் செய்யும் வகையில் இதுகுறித்துத் தேவையான முடிவுகளுக்கு வரவேண்டியது அரசியல் தத்துவவியலாளர்களின் கடமைப் பொறுப்பா அல்லவா? ஆனால், சரித்திரவானில் இந்த நிகழ்வு மங்கி மறைந்துபோக அனுமதிக்கப்பட்டது. அரசியல் சக்திகளின் அலட்சியப் போக்கைத்தான் இது காட்டுகிறது.

ஜனநாயக அமைப்பின் மையத்தில் பிரவேசிப்பது மட்டுமல்ல; மக்களுக்குப் பயன்படும் பல ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள கம்யூனிஸ்டுகளால் முடியும் என்பதையல்லவா இந்த நிகழ்வு உணர்த்துகிறது? உழைக்கும் வெகுஜனங்களுக்கு ஆதரவாகவும், பழைமைவாதப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் அரசியல் அதிகாரத் தராசு சாய்வதற்கல்லவா இது வழிவகுத்தது?

விவசாயத் துறை அமைச்சர் என்ற முறையில் தொடர் திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார் சதுரானன் மிஷ்ரா. அந்தத் திட்டங்கள் அமலாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பல அம்சங்களில் இந்தியாவின் கிராமப்புற முகமே மாறியிருக்கும். பல பிரச்சனைகளில் அவருக்குத் தெளிவான புரிதல் இருந்தது; பீகாரின் விவசாய நிலை, அதன் கட்டமைப்பு ஆகியவைகுறித்து மிகவும் அற்புதமான திட்டங்களை அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

பல சீர்திருத்தங்களும் வளர்ச்சிகளும் ஏற்படுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இரு அமைச்சர்களுமே பொறுப்பாவார்கள். ஆனால், இது மூடிமறைக்க எத்தனிக்கப்பட்டது. சிறிய கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட சிறிய தொடக்க முயற்சிகளின்பால் விவசாய வெகுஜனங்களைத் திருப்ப விரும்பினார் மிஷ்ரா. இத்தகைய திட்டம், பெரிய சுயநல சக்திகளின் கொட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கும். பெருமுதலாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு இதைவிட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இந்தியாவின், குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவின் அரசியல் வாழ்வை ஜனநாயகப்படுத்த அவர் விழைந்தார். இது, தாராளமயம், உலகமயம் ஆகியவற்றுக்கு எதிரான பொதுவான கோஷங்கள் எழுப்புவதாக இல்லாமல், தெளிவான செயல் நடவடிக்கைகளாக அமைந்தன.

முற்றும் முழுவதுமாக, உலகப்பொருளாதரத்திலிருந்து தனிமைப்பட்டு நிற்பதை எதிர்த்த சதுரானன் மிஷ்ரா, மக்களுக்கும், [நாட்டின்] பொதுவான பொருளாதாரத்திற்கும் பயனளிக்கின்ற ஆக்கபூர்வமான அம்சங்களைத் தேர்ந்து தெளிந்து ஏற்பதற்கு ஆதரவாக இருந்தார்.

வித்தியாசமான மார்க்சீயவாதி:

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அமைப்பு, சிந்தனை, செயல்முறை ஆகியவற்றை ஜனநாயகமயமாக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியவர் சதுரானன் மிஷ்ரா. இந்திய அரசியல் சட்டரீதியான அமைப்பின் மெய்யான பல திறன்களைக் கண்டுணர்ந்த அவர், அதில் கம்யூனிஸ்டுகளும், இடதுசாரி அமைப்புகளும் தமக்குரிய இடத்தில் அமர்ந்து, மக்கள்பக்கம் அரசியல் சக்திகளைத் திருப்ப இயலும் என்று கணித்தார். ஏறக்குறைய இதுபோன்ற நிலைதான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவுகிறது.

தற்போதுள்ள அமைப்பை, 'முதலாளித்துவம்' என்று சுளுவாக வர்ணித்துவிட்டு அலட்சியப்படுத்திவிடாமல், மார்க்சீய/கம்யூனிச செயல்முறைகளின் மூலமாக அதன் ஜனநாயக உள்ளடக்கத்தை செழுமைப்படுத்த முடியும். 'முதலாளிகள்' -'முதலாளிகள்' என்று சொல்லும்போது இனம்பிரித்து உணரவேண்டும். ஒரு விவசாயி அல்லது ஒர்க் ஷாப் சொந்தக்காரர் அல்லது கடைக்காரர்கூட முதலாளி என்றுதான் அழைக்கப்படுகிறார். அனைத்து முதலாளிகளிடமும் ஒரேமாதிரியான அணுகுமுறையை மேற்கொள்வது சரியல்ல.

இன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக வழிமுறையில்/கட்டமைப்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பு நல்குவது மட்டுமல்ல; அதை மேலும் ஜனநாயக மயமாக்குவதற்குத் தீவிரப்பணியாற்ற முடியும். இதற்கு மார்க்சீய தத்துவத்தை மேலும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அன்டொனியோ கிராம்சியும், மார்க்சீய தத்துவாசிரியர்கள் பலரும் முன்னோக்கிக் கண்டுணர்த்திய உண்மையாகும் இது. அவர்கள் அளித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை முக்கியத்துவம் இன்று உண்மையாகியிருக்கிறது.

வெகுஜனங்களின் உணர்வுநிலை சார்ந்துதான் பெரும்பாலும் நாட்டின் அரசியல் போக்கு வடிவெடுக்கிறது. அது போட்டிமிகு தளம்; அதில் தமக்கென இடம்பிடிக்க அரசியல் சக்திகள் முட்டிமோதுகின்றன.இதனால் ஏற்படும் பதற்றம்தான் அரசியலையும், இப்போது, ஃபாஷனாக சிவில் சொசைட்டி (civil society) என்று அழைக்கப்படுகின்ற மக்கள் சமூகத்தையும் உந்தி முன்செலுத்துகிறது.

அரசியல் தத்துவங்கள், ஆக்கபூர்வமான கருத்துமோதல்களைத் தோற்றுவித்து, ஆரோக்யமான விவாதங்களுக்குத் தேவையான கருத்துவெளியீடுகளுக்கு வழிகோலுகின்றன. ஜனநாயக அமைப்பில் சமுதாயத்தை முன்னோக்கிய பாதையில் இட்டுச்செல்லவும், கருத்துமோதல்களுக்கு உயர்நிலையில், ஆரோக்யமானமுறையில் தீர்வு காணவும் உதவுகின்றன.

பரந்த மனம்கொண்ட அரசியல், சமுதாயத்தை முன்னுக்குச் செலுத்துகிற வகையில் அவ்வபோது அணிசேரும் சரித்திர சக்திகளைக்கொண்ட ஐக்கிய முன்னணியின் விரிவான, சிருஷ்டிபூர்வமான தன்மையை வெளிப்படுத்துகிறது. அதுதான், அரசியல் அமைப்பின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் சிறந்த அறிகுறியாகும். மக்கள் மற்றும் நவீன ஊடகங்களின் பங்கேற்பு, ஜனநாயகரீதியிலான மாற்றங்களுக்கு இந்தக் களத்தைத் தயார் செய்துள்ளன.

முற்போக்கு சக்திகளின் பரந்துவிரிந்த களத்தில் தோன்றியுள்ள புதிய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது சதுரானன் மிஷ்ரா வகித்த பொறுப்பு. சில அரசியல் திட்டங்களின் வலிமையை அவர் பிரநிதித்துவப்படுத்தினார். இந்த வளர்ச்சிப்போக்குகளின் பின்னணியில் மேலும் அதிக தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் திறன்கள் மறைந்துள்ளன.

கிராம்சியின் வழியில் மார்க்சீயத்தை நாம் ஜனநாயகப்படுத்த இயலும். ஆமாம்; மார்க்சீயவாதி ஆக்கபூர்வமானவரே; அழிவுசக்தியல்ல.

தமிழில்: விதுரன்.

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP