Wednesday, December 30, 2009

லிங்கன்-200

















அடிமை விலங்கொடித்த

காவிய நாயகனும்

கம்யூனிச சிற்பியும்




மெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்து, ஆண்டான்-அடிமை முறைக்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்திற்குத் தலைமையேற்று அதில் வெற்றியும் கண்டவர் ஆபிரகாம் லிங்கன். அவர், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகர் காரல் மார்க்சின் சமகாலத்தவர் ஆவார். அவரது அரும்பணியை மனதாரப்பாராட்டி 1865-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் நாள், லண்டனில் அமெரிக்கத் தூதராக இருந்த சார்லஸ் ஃப்ரான்சிஸ் ஆடம்ஸ் மூலமாக ஆபிரகாம் லிங்கனுக்குக் கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம், இண்டர்னநேஷனல் ஒர்க்கிங்க் மென்ஸ் அசோசியேஷன் சார்பாக அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதத்திற்கு, தூதரின் மூலம் தனது கருத்தைத் தெரிவித்தார் லிங்கன். 1864-ஆம் அண்டு நவம்பர் மாதம் 22 & 29 ஆகிய தேதிகளுக்கு இடையே இக்கடிதத்தை மார்க்ஸ் எழுதியதாகக் கருதப்படுகிறது.
முதன் முதலில், 1865-ஆம் ஆண்டு நவம்பர் 7-ல் 'தி பீ-ஹாய்வ் நியூஸ்பேப்பர்' என்கிற பத்திரிக்கையில் இது வெளியானதாகவும், ஆனால், புகழ்பெற்ற கம்யூனிச சித்தாந்தவாதியான வில்லெம் லீஃப்னெஹ்ட், 'சோஷியல் டெமாக்ரட்' என்னும் ஜெர்மானிய சஞ்சிகையில் இதனை பிரசுரித்தபின்னர்தான், அறிவுஜீவிகள் மத்தியிலும், தொழிலாளர் இயக்கத்திலும் லிங்கனின்பால் அளவிடற்கரிய மதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்கூறப்பட்ட இரு கடிதங்களையும் தமிழில் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதிலும், நிறவெறியர்களின் தோட்டாவுக்குப் பலியான லிங்கனின் 200-ஆம் ஆண்டு பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இந்தப் பணி நமக்கு நிறைவு தருகிறது. [கடிதங்களின் தமிழாக்கம்: விதுரன்]

தொழிலாளிவர்க்கத்தின் அருந்தவப் புதல்வர்...
[ஆபிரகாம் லிங்கனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம் வருமாறு:]

ஐயா,

மிகப்பெரும்பான்மையான வாக்குகள் பெற்று நீங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதற்காக அமெரிக்க மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். அடிமைகளை அடக்கி ஆளுவதன்மூலம் ஆதிக்கம் செலுத்துவது என்னும் போக்கினை எதிர்த்து நிற்றல் உங்கள் முதல் தேர்தலின் தாரக மந்திரம் எனில், அடிமை முறைக்கு சாவுமணி அடித்தல் தங்களது மறுதேர்வின் போர்முழக்கம்.

அமெரிக்காவில் முரண்பாடுகள்-மோதல்கள் தொடங்கியவுடனேயே, நட்சத்திரங்கள் பதித்த பதகைதான் தமது வர்க்கத்தின் கதிப்போக்கை நிர்ணயிக்கப்போகிறது என்பதை ஐரோப்பாவின் உழைப்பாளி மக்கள் உணர்ந்துவிட்டனர். பிரதேசங்களுக்கான போட்டி, தீவிரமான போர்ப்பரணி இசைக்க வழிவகுத்துவிட்டது. இது, பரந்துவிரிந்த பூமியின் கன்னி நிலம் உழைப்பாளி மக்களுக்குச் சேரவேண்டுமா அல்லது சீலமற்ற எஜமானர்களின் ஆதிக்கத்தில் சிக்கிச் சீரழியவேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான போரா அல்லவா?

உலக வரலாற்றில் முதல் முறையாக எங்கே ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் ஜனநாயகக்குடியரசு என்னும் கருது முகிழ்த்ததோ-

எங்கிருந்து முதல் மனித உரிமைப்பிரகடனம் வெளியிடப்பட்டதோ-

எங்கிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பியப் புரட்சிக்கு முதல் உந்துதல் கிடைத்ததோ-

அதே இடத்தில்,

எப்போது அடிமைகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த, 3,00,000 எஜமானார்கள், அடிமைமுறைக்கான கலகப்பதாகையைத் தூக்கிப்பிடித்தார்களோ-

எப்போது எதிர்ப்புரட்சி சக்திகள் திட்டமிட்ட துல்லியத்துடன் "பழைய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது விளைந்த கருத்துக்கள் காலாவதியாகிவிட்டன" என்று மகிழ்ச்சியில் திளைத்தார்களோ-

எப்போது உழைப்பின்பால் மூலதனத்தின் உறவுக்கான பழைய தீர்வாக "நன்மைபயக்கும் ஓர் அமைப்பு" என அவர்கள் அடிமை முறையைக் கொண்டாடினார்களோ-

எப்போது மனிதனிடமுள்ள ஆஸ்திதான் "புதிய அமைப்பின் அஸ்திவாரம் "என வக்கரித்துப்போய்க் கொக்கரித்தார்களோ-

அப்போதே,

அதாவது, நிலவுடைமை கனதனவான்கள் நம்பிக்கையிழந்து ஈனஸ்வரத்தில் எச்சரிக்கை செய்வதற்கு முன்பே, உழைப்புக்கு எதிராகச் சொத்துடைமை நடத்துகிற பெரும்போரின் அபாய அறிவிப்புதான் இந்த ஆதிக்க எஜமானர்களின் கலகம் என்பதையும்,

உழைப்பாளி மக்களைப் பொறுத்தவரை, அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபுறத்தில் வெடித்துள்ள பெரும் மோதலினால் தமது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கைகளும், தாம் ஏற்கனவே பெற்ற வெற்றிகள்கூட ஆபத்தில் உள்ளன என்பதையும் ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தினர் உடனேயே புரிந்துகொண்டனர்.

இதனால்தான் அனைத்துப்பகுதிகளிலும் பருத்தி நெருக்கடியால் ஏற்பட்ட இன்னல்களை அவர்கள் தாங்கிக்கொண்டார்கள்; ஆதிக்கவாதிகள் அடிமை முறைக்கு ஆதரவாகத் தலையிட்டபோது அதனை முழுமூச்சுடன் எதிர்த்தார்கள்; ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நல்ல நோக்கத்திற்காக அவர்கள் தமது பங்கிற்குக் குருதி சிந்தினார்கள்.

வடபகுதியின் உண்மையான அரசியல் சக்திகளான தொழிலாளர்கள் தமது சொந்தக்குடியரசினைத் தாழ்த்தும் வகையில் அடிமை முறையை அனுமதித்த அதே வேளையில், தம் சம்மதம் இல்லாமலேயே நீக்ரோக்கள் அடிமைப்படுதப்படுவதும் விற்கப்படுவதும் நடந்தபோது அந்த வெள்ளைத் தொழிலாளர்கள் தமது உழைப்பை யாரிடம் விற்பது என்பதையும் அவர்தம் எஜமானர்கள் யார் என்பதையும் தீர்மானிக்கின்ற மகத்தான உரிமைத் தமக்கு உள்ளதாக மார்தட்டிக் கொண்ட அதே நேரத்தில், அவர்கள் மெய்யான உழைப்பின் விடுதலையை அடைய முடியாதவர்களாக இருந்தனர்; விடுதலை பெறுவதற்காக அவர்தம் ஐரோப்பிய சகோதரர்கள் நடத்துகின்ற போராட்டத்தை ஆதரிக்க இயலாதவர்களாகவும் இருந்தனர். ஆனால், முன்னேற்றத்திற்குக் குறுக்கே நின்ற இந்தத் தடைகள், உள்நாட்டுப்போர் என்னும் செங்கடலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

அமெரிக்காவின் சுதந்திரப் போரானது எவ்வாறு மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி என்கிற புதிய அத்தியாயத்திற்கு அச்சாரம் போட்டதோ அதைப் போன்றே அடிமை முறைக்கு எதிரான அமெரிக்காவின் போர் தொழிலாளிவர்க்கதின் எழுச்சிக்கு வழிவகுப்பது நிச்சயம் என்று ஐரோப்பாவின் தொழிலாளர்கள் உணர்கிறார்கள்.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட இனத்தை விடுவிக்கவும், சமத்துவ சமுதாயத்தை மறுநிர்மாணம் செய்வதுற்குமான ஈடு இணையற்ற போராட்டத்தை நடத்துகின்ற பெரும் பொறுப்பு தொழிலாளிவர்க்கத்தின் அருந்தவப்புதல்வர் ஆபிரகாம் லிங்கனின் தோள்களில் என்பது இந்த யுகத்தின் விழைவு என்று அவர்கள் கருதுகிறார்கள்.

உங்கள் உணர்வுகள் என் மனதில்...

[காரல் மார்க்சின் கடிதத்திற்கு அமெரிக்கத் தூதரின் பதில் கடிதம் வருமாறு:]

அமெரிக்கத் தூதரகம்,
லண்டன், 28, ஜனவரி,1865

ஐயா,

உங்களது அமைப்பின் மத்தியக்குழுவினது சார்பில் இந்தத் தூதரகத்தின் மூலமாக அனுப்பப்பட்ட கடிதம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதிக்கு முறையாகக் கொண்டு சேர்க்கப்பட்டு, அவரும் அதைப்பெற்றுக்கொண்டார். இதனைத் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

தனது நாட்டு சகப் பிரஜைகளும் உலகமுழுவதிலுமுள்ள மனிதநேய, முற்போக்கு எண்ணம் கொண்ட நண்பர்களும் அவர் மீது அண்மையில் கொண்ட நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இல்லாமல் போய்விடலாகாது என்கிற மெய்யான அக்கரையுடன் கூடிய ஆர்வத்தினால், தங்களது கடிதத்தில் அவருக்குத் தனிப்பட்டவிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசைப்பொறுத்தவரை, அதன் கொள்கைகள் ஒருபோதும் பிற்போக்கானதாக இருக்கவில்லை; இருக்கவும் முடியாது என்பதில் தெளிவாக உள்ளது. அதே நேரத்தில், அது ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட கொள்கைவழியின் அடிப்படையில் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக்களைத் திணித்தல், சட்டத்திற்கு முரணாகத் தலையிடுதல் ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கும். அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான மெய்யான நீதியை அளித்து,அதன் ஆக்கபூர்வமான விளைவுகளைச் சார்ந்து, உள் நாட்டில் ஆதரவு பெற, உலகெங்கிலும் மதிப்பும் நல்லெண்ணமும் ஈட்டப் பாடுபடும்.

தேசங்கள் தமக்காக மட்டுமேயல்லாமல், தர்ம சிந்தனையுடன் செயல்படுதல், முன்னுதாரணமாகத் திகழ்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தின் நல்வழ்வையும் மகிழ்ச்சியையும் வளர்ப்பதற்காகவே ஜீவித்திருக்கின்றன. இத்தகு அணுகுமுறையினாலேயே, அடிமை முறையை எதிர்த்து நிற்கும் பணியில், உள்நாட்டுக் கலகத்தைச் சமாளித்தலை மனித இயல்பின் அடிப்படையிலானது என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கருதுகிறது; எமது தேசத்தின் அணுகுமுறைக்கு ஐரோப்பியத் தொழிலாளர்களின் அறிவார்ந்த அங்கீகாரமும் ஆழ்ந்த ஆதரவும் உள்ளது என்பதை உணர்ந்து, உங்களின் கடிதம் மூலமாக அவற்றைப்பேணிக்காக்க நாங்கள் உத்வேகம் பெறுகிறோம்.

உங்களுக்குக் கண்ணியமிக்க ஊழியராக இருப்பதில் பெருமைப்படும்,

சார்லஸ் ஃப்ரான்சிஸ் ஆடம்ஸ்சார்சார்லஸ் ஃப்ரான்சிஸ் ஆடம்ஸ்


(KARL MARX'S LETTER TO ABRAHAM LINCOLN/1864-1865)

Read more...

Monday, December 28, 2009

மரணம் ஒரு தண்டனை அல்ல...



மரணம் ஒரு தண்டனையல்ல...


ல்லாத் தரப்பிலும். எல்லா நிலைகளிலும் வன்முறை தவிர்த்த சமுதாயத்தில்தான் இந்த மரணதண்டனை ஒழிப்பு என்கிற மகத்தான சித்தாந்தம் செயல்பட முடியும்.

இதைத் தனிப்பட்ட கொலைகாரர்களுக்கும், கொலைகாரச் சமூகத்துக்கும், தங்களுக்கு வேண்டியவர்களைத் தப்புவிக்கும் மார்க்கமாகக் கொள்ளுகிற சாதுர்யம் முதலில் ஒழி
ல் வேண்டும்.

வன்முறை சார்ந்த இயக்கங்கள் இருக்கிறவரை, வன்முறையைச் சித்தாந்தமாகக் கொண்ட போராட்ட வடிவங்களும், வீரப்பிரதாப அரசாங்கங்களும் இருக்கிற வரை ரஜோகுணமான கொலைப்பண்பு இந்த சமூகத்தி
ல் கூடுதலாகத்தான் இருக்கும்.
 
சாத்வீகப் பண்பையே சமுதாயப் பண்பாகக் கொள்ளுகிற ஒரு சூழ்நிலை இந்தியாவில்தான், மானுடகுல வரலாற்றிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
 

மன்னிக்கும் பண்பை மனிதர்கள் மட்டுமல்ல சமுதாயமே ஒரு பண்பாகக் கொள்ள வேண்டும். தனித்தனியாக, அமைதியிலும் நட்பிலும் மகிழ்ச்சியுறுகிற மனிதர்கள் கும்பலாகக் கூடி விட்டால் கொடிய விலங்குகளாக ரசமாற்றம் பெறுகிற கொள்கைகளிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
 
அல்லாத பட்சத்தில், "கொல்லுபவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே!" என்று கீதோபதேசம் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
நினைவிருக்கட்டும்: கீதை, போர்க்களத்தில் வாளெடுத்து நிற்கிற க்ஷத்திரிய
சகோதரர்களுக்கு உபதேசிக்கப்பட்டது. இன்றைக்கு க்ஷத்ரியர்களும் இல்லை; க்ஷத்ரிய தர்மமும் இல்லை. கொலை மட்டும் நடக்கிறது.
 
இது குறித்து எந்த மனிதனின் மனசாட்சியும் மரண தண்டனையை அங்கீகரிக்க முடியாது. அங்கீகரிப்பதும் இல்லை.

 
ஆனால் நடக்கிறது; நடக்கட்டும்! எதுவரை நடக்கிறதென்று பார்ப்போம்!
கொல்லாமலே சாவது மனிதனின் விதி.

 
மரணத்துக்குப் பயந்தல்ல; மரணம் ஒரு தண்டனையுமல்ல! மானுடகுல மேன்மைக்கேனும் மரண தண்டனை, இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்!
இன்ஷா அல்லாஹ்!

- ஜெயகாந்தன்

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP