Wednesday, December 6, 2017

ஜனநாயகத்தின்பால் சோஷலிசத்தின் பற்றுறுதி:

ஜனநாயகத்தின்மீது தனக்குள்ள உறுதிப்பாட்டை சோஷலிசம் ஒருபோதும் கைவிடமுடியாது!

ஜான் பாக்டெல்

[ஜான் பாக்டெல், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர். முன்னதாக, கட்சியின் இலினாய்ஸ் அமைப்பாளராகத் திகழ்ந்து, தொழிலாளர், சமாதானம் மற்றும் நீதிக்கான போராட்டங்களில் செயல்துடிப்புடன் ஈடுபட்டிருக்கிறார். ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த அவர், சிகாகோவில் வாழ்கிறார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் வோர்ல்டு’ (PEOPLE'S WORLD) நவம்பர் 8 இதழில், யுகப்புரட்சியின் நூற்றாண்டுகுறித்து அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் நமது வாசகர்களுக்காகத் தரப்படுகிறது. தமிழில்: எஸ்.துரைராஜ்]

   நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1917 நவம்பர் 7ஆம் நாள் பூத்தது ரஷ்யப் புரட்சி. இன்று சோவியத் யூனியன் இல்லாமல் போயினும், அதனை ஈன்றெடுத்த புரட்சியானது, 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றைப் புரட்டிப்போடுகின்ற மகத்தான சம்பவங்களில் ஒன்றாக இன்னும் ஜீவத்துடிப்புடன் இலங்குகிறது.

  லட்சோப லட்சம் ருஷ்யத் தொழிலாளர்களும் விவசாயிகளும் அடிமைத்தளையினின்றும் தம்மைத் தாமே விடுவித்துக் கொண்ட அருஞ்செயல் அது. அதனைத் தொடர்ந்து விளைந்த அனைத்தும், 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசத்தை விழைவோர்க்கு, அதன் சாதனைகள் மற்றும் தவறுகள் மூலம் அளப்பரிய பாடங்களை அள்ளித் தந்தன.
  
   முதல் உலகப்போரும், ஏழ்மையும், வறுமையும், கலகமும் கோரத் தாண்டவமாடிய கொந்தளிப்பான, அபாயகரமான, காலகட்டத்தில் நடந்தேறியது அக்டோபர் புரட்சி. அதனை உந்தித்தள்ளிய கோரிக்கைகள் எளிமையானவை: சமாதானம், நிலம், உணவு ஆகியவையே அவை.
  உலக முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து கட்டறுத்துக்கொள்கிற முதல் நடவடிக்கையை, உலகின் முதல் மகத்தான சோஷலிஸ்ட் பரிசோதனையின் தொடக்கத்தை அது குறித்தது. லட்சோப லட்சம் சாமான்ய உழைக்கும் ஆடவரும் பெண்டிரும், அதுகாறும் கண்டிராத புதிய பாதையை வகுக்கத் தொடங்கினார்கள். அவர்களிடம் இதற்கான எந்த விரிவான திட்ட வரைபடமும் இல்லை; தாம் விரும்பித் தேர்வு செய்துகொள்ளாத நிலைமைகள் இருந்தபோதிலும், சோஷலிசத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கினார்கள். நிலப்பிரபுத்துவத்தின் பின்விளைவுகள், மதவாத ஆட்சிமுறை, வன்முறையையும் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்ட எதேச்சாதிகார அரசு எனும் கடுமையான சூழல்களே தோன்றிய நாள்தொட்டு, சோவியத் யூனியனின் வளர்ச்சிப்பாதையை செதுக்கலாயின.
   அதன் கையில் கிடைத்த ருஷ்யா, மற்ற தேசிய இனங்களையும் மக்களையும் மூர்க்கத்தனமாக ஒடுக்கிச் சுரண்டிய, “தேசங்களின் சிறைக்கூடமாக” இருந்தது. பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குதல், யூதர்களுக்கு எதிராகப் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடுதல், இஸ்லாத்துக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாளுதல் எனும் குணக்கேடுகளைக் கொண்ட பூமியாக அது இருந்தது. ஆலையில் பணியாற்றிய தொழிலாளிவர்க்கத்தின் எண்ணிக்கையோ மிகச் சிறிதாகவே இருந்தது; தொழில் வளர்ச்சியும் குறைவாகவே இருந்தது. லட்சோபலட்சம் மக்கள் எழுத்தறிவு இல்லாதவர்கள் என்பது நியதியாகவே இருந்தது; சிவில் சமூக அமைப்புகளின் எண்ணிக்கையோ சொற்பமே; ஜனநாயக அமைப்புகள் என்று சொல்லப்படுபவை சூன்யமாகவே இருந்தன.
   அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளின் பகையுணர்வு கொண்ட முற்றுகை, படையெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தன்னைக் காத்துக்கொள்ளும் அதே நேரத்தில், முதல் உலகப் போரின் பேரழிவிலிருந்து மறுநிர்மாணம் செய்கிற இடைவிடாத பணியில் ஈடுபடும் நிர்ப்பந்தத்தித்திற்கு ஆளானது சோவியத் யூனியன்.
   சோவியத் யூனியனுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் அரசியல் அதிகாரம் தமக்கு இல்லாத நிலையிலும், சோவியத் நாட்டுடன் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்த அமெரிக்க உழைக்கும் மக்கள் பலர், அமெரிக்காவின் தலையீட்டையும் எதிர்த்தனர்.
ஆரம்பகால உத்வேகமும் பின்னடைவும்
   நம்புதற்கரிய சிரமங்கள் எதிர்கொண்டபோதிலும், அக்டோபர் புரட்சியானது, நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்தது; ஆக்கபூர்வமான சக்தியைப் பீறிட்டெழச்செய்தது. புதியதோர் சமுதாயத்தைப் படைக்கும் வேள்விக்கு லட்சோப லட்சம் தொழிலாளர்களும், விவசாயிகளும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
   உலகம் இதுகாறும் கண்டிராத மிக முற்போக்கான ஜனநாயக அரசியல் சாசனத்தை லெனின் மற்றும் போல்ஷெவிக்குகளின் தலைமையில் சோவியத் யூனியன் உருவாக்கியது. தொழிலாளர்கள், விவசாயிகளால் தலைமைதாங்கப்பட்ட அரசாங்கத்தை அது பிரதிநிதித்துவப்படுத்தியது; புதிய ஜனநாயக வடிவங்களை நிறுவியது; பெண்கள் மற்றும் முன்னர் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு சமத்துவத்தை அளித்தது; உடல் நலம், கல்வி, வீட்டுவசதி ஆகியவற்றை அது உறுதிசெய்தது. நாட்டின் பரந்த இயற்கை வளங்களின் பராமரிப்பாளர்களாக மக்கள் விளங்குவார்கள் என அது பிரகடனம் செய்தது.
   புரட்சி பாதுகாக்கப்பட்டவுடன், ஆரம்ப கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர், புதிய பொருளாதாரக் கொள்கை (என்.இ.பி)யால் வழிநடத்தப்பட்ட கலப்புப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் பணியில் சோவியத் யூனியன் முனைந்தது. ஏதோ கற்பனையான அல்லது புதிரான நிலைமையாக அல்லாமல், அன்றைய ருஷ்யா எதிர்கொண்டிருந்த மெய்யான வளர்ச்சி நிலைமைக்கு பொருத்தமானதாக இருந்தது புதிய பொருளாதாரக் கொள்கை. குறிப்பாகச் சிறு நிலவுடைமை மற்றும் அந்நிய முதலீடு ஆகிய தனிச்சொத்து உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்துடைமை வடிவங்களை அது சட்டபூர்வமாக்கியது. சோஷலிசக் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பணி; சோஷலிஸ்ட் புரட்சிக்குப் பின்னரும்கூட எல்லாவிதமான தனது தடைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட வர்க்க சமுதாயம், வரக்கூடிய பல்லாண்டுகளுக்கு சோஷலிச நிர்மாணத்தின் ஓர் அம்சமாக இருந்துவரும் என்பதை அந்தக் கொள்கை அங்கீகரித்தது.
   லெனின் வாழ்ந்திருந்தால், வரலாறு ஒருவேளை வேறுமாதிரியாக அமைந்திருக்கக்கூடும். ஆனால், அவர் 1924-ல் அகால மரணம் அடைந்தார்; ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,  நிர்ப்பந்தப்படுத்தி விளைநிலங்களின்மீதான உரிமை பறிக்கப்படுதல், கூட்டுப்பண்ணை முறையைத் திணித்தல், மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுதல், தொழில்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அரசுமயமாக்கப்படுதல் ஆகியவற்றுக்குச் சாதகமாக புதிய பொருளாதாரக் கொள்கை ரத்துசெய்யப்பட்டது.
   ஜெர்மனியில் பாசிச அபாயம் தலைதூக்கிக் கொண்டிருந்த நிலையில், உலகின் முதல் சோஷலிஸ்ட்பாணி குடியரசை நிர்மூலமாக்குவதை அதன் ராணுவ எந்திரம் முழுமுதல் நோக்கமாகக் கொண்டிருந்த நிலையில், முடுக்கிவிடப்பட்ட வளர்ச்சியில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட பயணம், ஸ்டாலினது தலைமையின்கீழ், சிலவேளை மெய்யான, பலசமயங்களில் கற்பனை செய்துகொள்ளப்பட்ட அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளைப்பற்றிய அச்சத்துடன் பிணைக்கப்பட்டது. அரசியல் கருத்துவேறுபாடுகள், அரசியல் அச்சுறுத்தல்களாகக் கருதப்பட்டன; ஒரேமாதிரியாக இருத்தல் எனும் கலாசாரம் மேலோங்கி நின்றது.  கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆட்சி நிர்வாகம் செய்கிற ஒரே அமைப்பு என்பதை அரசியல் சாசனத்தில் பொறிக்கச்செய்கிற நிலைக்கும், ஸ்டாலினைச்சுற்றி தனிநபர் வழிபாடு உருவாவதற்கும் எதேச்சாதிகாரம் இட்டுச் சென்றது.
   இந்த பயபீதிப் பிரச்சாரம், கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட 1937-38ஆம் ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது; இந்த காலகட்டத்தில்தான், ராணுவ அதிகாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கணிசமான பகுதியினர் உட்பட எண்ணிலடங்கா சோஷலிஸ்ட் தேசபக்தர்கள் கொல்லப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.
   1930களில் நிகழ்த்தப்பட்ட கொடூரத்துக்கும் அப்பால், அப்போது தொழில்மயமாகியிருந்த சோவியத் யூனியன், இரண்டாவது உலகப்போரில் பாசிசம் முறியடிக்கப்படுவதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்தது. ஆனால், சோவியத் மக்கள் சொல்லொணா துயரத்தைச் சுமந்தனர்: இரண்டுகோடியே இருபது லட்சம் மக்களை யுத்தம் காவுகொண்டது; நாட்டின் பெரும்பாலான தொழில் மற்றும் விவசாய உள்கட்டமைப்பும், நகரங்களும், கிராமங்களும், பண்ணைகளும் நாசமாகின.
   இரண்டாவது உலகப்போர் ஏற்படுத்திய இடிபாடுகளிலிருந்து மீண்டெழுந்து தன்னை புனர்நிர்மாணம் செய்துகொள்வதற்குள்ளாகவே, அமெரிக்காவுடனான பனிப்போரின் ஆயுதப் போட்டிக்கும், உலக முதலாளித்துவத்துடனான போட்டியை அதிகப்படுத்துவதற்கும் தனது வளங்களைத் திருப்பிவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டது சோவியத் யூனியன்.
       புதிய தேசத்தின் வாழ்வில் முதல் சில தசாப்தங்களில் தொடுக்கப்பட்ட கடும் தாக்குதல்கள், உலகின் முதல் சோஷலிஸ்ட் சோதனைக்குக் கிட்டத்தட்ட சாத்தியமற்ற சூழல்களைத் தோற்றுவித்தன. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்தின்மீதும், அதன் அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின்மீதும் அவற்றின் தாக்கம் உணரப்பட்டது. அங்கு நிலவிய நம்பிக்கையற்ற சூழலும், போதிய வளர்ச்சியற்ற நிலையும், அவற்றால் விளைந்த குழப்பமும் ஸ்டாலின் மேலோங்கிவருவதற்கும், அதனைத் தொடர்ந்து நடந்த குற்றங்கள், சிறைத்தண்டனைகள், மரணதண்டனைகளுக்கும் உரமாய் அமைந்தன.
ஸ்டாலினுக்கும் அப்பால்...
   சோவியத் யூனியன், ஸ்டாலினையும் மீறி ஜீவித்திருந்தாலும் அதற்காக அது ஒரு விலை கொடுக்கவேண்டியிருந்தது. சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் தோற்றமும், ஜனநாயகம் மற்றும் தார்மீக உரிமையின்பால் அவற்றின் உறுதிப்பாடும் அளவிடமுடியாத வகையில் பாதிக்கப்பட்டன. ஆக்கபூர்வமான சிந்தனை ஊற்றான மார்க்சீயம், கேலிக்குரிய தாக்குதல்களுக்கு இலக்கானது; கரடுதட்டிப்போன கோட்பாடு என சாடப்பட்டது.
   சோஷலிசத்தின் ஜனநாயக, மனிதநேய லட்சியங்களுடன் முரண்பட்டதாகத் தோன்றிய இந்த பின்விளைவுகளும், அவற்றிலிருந்து முற்றும் முழுவதுமாக மீளமுடியாமையும்கூட சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய முகாமிலும் சோஷலிசம் வீழ்ச்சியுற்றதற்கு முக்கியமான காரணங்களாக அமைந்தன.
   இத்துணை எதிர்மறை அம்சங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவை எதிர்த்து ஈடுகொடுக்கத்தக்க நவீன தொழில் உற்பத்தி; மக்களுக்கு உணவும், உடையும், வீடும் அளிக்கின்ற வல்லமை; உயர் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி; அனைவருக்கும் எழுத்தறிவு, சுகாதார வசதி, கல்வி; வளர்ச்சியுற்ற கலைகள், விளையாட்டு மற்றும் கலாசாரம்; பெண்களுக்கும், முன்னர் ஒடுக்குதலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கும் சமூக-பொருளாதார சமத்துவம்-என அரும்பெரும் சாதனைகள நிகழ்த்தியமைக்காக சோவியத் மக்கள் பெருமைகொள்ள முடியும்.
   வியத்நாம், கியூபா உள்ளிட்ட தேசவிடுதலை மற்றும் காலனியாதிக்க-எதிர்ப்பு இயக்கங்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கும் அளப்பரிய உதவிகளை அது அள்ளித் தந்தது. வளர்முக நாடுகளுக்கு அது துணை நின்றது; அந்த நாடுகளில், நவீன உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தது; உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இன்னபிற பணியாளர்களை அது பயிற்றுவித்தது.
   உலகில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஈடுகொடுக்கின்ற எதிர்சக்தியாக சோவியத் யூனியனும் சோஷலிஸ்ட்-பாணி அரசுகளும் செயல்பட்டன. 1980களில், அணு ஆயுத சோதனைகளை நடத்துவதில்லை என தானாகவே முன்வந்து அறிவித்ததன்மூலமாகவும், ராணுவத்தினர் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பெருமளவுக்குக் குறைத்ததன்மூலமாகவும் கெடுபிடி யுத்த ஆயுதப்போட்டிக்கு முடிவுகட்ட முதல் நடவடிக்கைகளை எடுத்தது சோவியத் யூனியனே.
   சுரண்டலை சட்டவிரோதமாக்கிய, கார்ப்பொரேட் நிறுவனங்களின் லாபங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மக்கள் நலனைப் பிரதானமாகக் கொண்டதோர் பொருளாதார அமைப்புடன் போட்டிபோட வேண்டியிருந்ததால், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் உட்பட உலகெங்கிலுமிருந்த முதலாளித்துவ நாடுகள், தொழிலாளர் கோரிக்கைகளின் அடிப்படையில் சலுகைகளை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கபடத்தனம் அம்பலமாகிவிடக்கூடாது என்பதற்காக இன சமத்துவம் சம்பந்தமான பிரச்சனைகளிலும் அந்த நாடுகளில் சலுகைகள் அளிக்கப்பட்டன.
   இத்துணை வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இந்த காலகட்டத்திலும்கூட  தவறுகள் பல இழைக்கப்பட்டன என்பதில் வியப்பொன்றும் இல்லை. சோஷலிஸ்ட் வளர்ச்சியின் நிலையைக் கணித்தமை, அகாலமாக சமத்துவத்தை அறிவித்தமை, ஊதியங்களை சமனப்படுத்தியமை, தேசிய இன சமத்துவம் எட்டப்பட்டது எனப் பிரகடனம் செய்தமை, ரஷ்யர்கள் மகத்தானவர்கள் எனும் பேரினவாதம் தொடர்ந்து நீடித்தமை, பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரப் பரவலை நோக்கி நகர இயலாமை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது ஆகியவை இதில் அடங்கும்.
   கீழ்மட்ட அளவில் மெய்யான ஜனநாயக அமைப்புகளை போதுமான அளவுக்கு சோவியத் யூனியன் ஒருபோதும் உருவாக்கவில்லை; மாறாக, நிர்வாக வழிமுறைகளைத்தான் அது சார்ந்திருந்தது. பன்மைத்துவ அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அங்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. மத நம்பிக்கைகள் களங்கமாகக் கருதப்பட்டன; தேவாலயங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நுட்பமான கருத்துமோதல்கள், ஜனநாயக சிவில் சமூகத்தில் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்புக்கு மாற்றாக, எதிர்க்கருத்து நசுக்கப்பட்டது. குறிப்பாக, இணையதளமும் சமூக வலைதளங்களும் ஓங்கி நிற்கும் இன்றைய காலகட்டத்தில், இவை [நுட்பமான கருத்து மோதல்கள், பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல்] எத்துணை முக்கியத்துவம் பெறுகின்றன என்பது வெள்ளிடைமலை. உத்தரவுகளுக்கு மாறாக விவாதத்தையே தகவல் புரட்சி விரும்புகிறது; இதை அணுகுவதில்தான் சோவியத் யூனியனுக்குப் பிரச்சனை.
   எந்த பொருளாதார-அரசியல் அமைப்பு, நாட்டை எதிர்நோக்கிய புறவயமான எதிர்மறை அம்சங்களுடன் இணைந்து 1970களிலும் 1980களிலும் நெருக்கடியான காலகட்டத்தைத் தோற்றுவித்ததோ, அதிலிருந்து தீர்மானகரமாக விடுபடுவதற்கு இயலாமல் தவித்தது சோவியத் யூனியன். இதன் எதிரொலியாக, சோவியத் தலைவர் மிகையீல் கோர்பச்சேவின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை சீர்திருத்தங்களைக் கொண்டதோர் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த சீர்திருத்தங்கள், குறைந்த பட்சம் முதல்கட்டமாக, பணியிடங்கள் உட்பட நாட்டில் சோஷலிஸ்ட் ஜனநாயகத்தை ஆழப்படுத்துதல், சுதந்திரமான ஊடகங்களை அனுமதித்தல், நாட்டை இராணுவமயமற்றதாக்குதல், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தன.
   மேலும், ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில், மிகையீல் கோர்பச்சேவ், தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்; ஆனால், அவை யாவும் திசைமாறி தறிகெட்டு ஓடலாயின. ஆனால், அவசியம் தேவையான இந்த சீர்திருத்தங்களின் பின்னணியில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட சோவியத் தலைவர்கள் ஆழ்ந்த வேறுபாடு கொண்டிருந்தார்கள்; வலுவிழந்துபோயிருந்தார்கள்; முடங்கிவிட்டிருந்தார்கள். இந்த சமயத்தில், அதிகாரவர்க்கம் ஆழ வேரோடி ஸ்திரம் பெற்றிருந்தது; பிழைப்புவாதம் பல்கிப்பெருகியது; மத்தியப்படுத்தப்பட்ட அமைப்பு அசைக்கமுடியாத அளவுக்கு உரம் பெற்றிருந்தது; மாற்றத்திற்கான எதிர்ப்பு ரொம்பவும் ஆழமாகியிருந்தது; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்மீதான வெறுப்பு மிகப் பரவலாகியிருந்தது.
       பொருளாதாரத்தை ராணுவமயமற்றதாக்கும் முயற்சி முடங்கிப்போனது; சோவியத் குடியரசுகளின் இறுக்கமற்ற சம்மேளனம் அமைத்தல் உள்ளிட்ட பிற சீர்திருத்தங்கள் கட்டுப்பாடு இழந்து கலகலத்துப்போயின. வர்க்கப் போராட்டத்தை கோர்பச்சேவ் குறைத்துமதிப்பிட்டதும், தொழிலாளர்களின் சுய-நிர்வாகம், அரசு நிறுவனங்களின் சுயாட்சி, சந்தை நிர்வாக வழிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை ஏடாகூடமான முறையில் அறிமுகப்படுத்தியவிதமும் பலவீனமாக அமைந்தது; குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தக் குழப்பங்களின் விளைவாக, போரிஸ் யெல்த்சின் போன்ற முதலாளித்துவ ஆதரவு, தேசியவாத சக்திகளும், ஊழல் பெருச்சாளிகளும் இறுதியில் ஆதிக்கம் செலுத்தலாயினர்.
   1991-ஆம் ஆண்டு, 74 ஆண்டுகளுக்குப்பின், நொறுங்கிப்போனது சோவியத் யூனியன். அதன் மரணம், மனிதகுலத்துக்கு மாபெரும் துயரத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியது; உலக பிற்போக்காளர்களுக்கும், யுத்தத்திற்கும், சோஷலிஸ்ட் எதிர்ப்புக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகளுக்கும் உத்வேகம் அளித்தது.
   அனைத்திற்கும் மேலாக, சோவியத் மக்களுக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது. அதன் வீழ்ச்சியின் காரணமாக, அதிக சலுகைகளைக் கொண்ட செல்வாக்குமிக்க ஒலிகார்க் மேட்டுக்குடி வர்க்கத்தினர்முளைத்தனர்; சோவியத் மக்கள் உருவாக்கி வைத்திருந்த பரந்துவிரிந்த செல்வாதாரங்களைக் கபளீகரம் செய்தும், சுரண்டலை மீண்டும் புகுத்தியும் அவர்கள் தம்மை வளப்படுத்திக் கொண்டனர். இன்றோ ரஷ்ய மக்கள் வறுமையில், அடக்குமுறை எதேச்சாதிகார ஆட்சியின்கீழ் அவதியுறுகின்றனர்.
   சோவியத் அனுபவங்களிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்
   மக்கள் தவறிழைப்பதுண்டு; அதில் புரட்சியாளர்களும் அடக்கம். ஆனால், புரட்சிகர இயக்கங்களும் அவற்றின் தலைமைகளும் நிதானமான சுயபரிசோதனைக்கும், இறுக்கமான கோட்பாடு தவிர்த்த நெகிழ்வுத் தன்மைக்கும் அவர்களை ஊக்குவிக்கும்பட்சத்தில், தேவையான சீர்திருத்தங்களின்மூலம் அந்தத் தவறுகளை சரிசெய்துகொள்ள முடியும்.
     மக்கள், தாமே தேர்வு செய்யாத சூழலில்தான் சோஷலிசக் கட்டுமானத்தை மேற்கொள்கிறார்கள். தேசத்தின் வரலாறு, வர்க்க மற்றும் சோஷலிச உணர்வு நிலை-ஒற்றுமை, பொருளாதய வளர்ச்சி, வளங்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்ட சூழல்களில் சோஷலிஸ்ட் புரட்சிகள் நிகழ்கின்றன. தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும், சோஷலிஸ்ட் வளர்ச்சியை எட்டவும் நிரந்தரமான முன்மாதிரிகள் எதுவும் கிடையாது.
   எமது அரசியல் மற்றும் சரித்திரபூர்வமான எதார்த்தங்கள், எமது நாட்டில் சாதிக்கப்பட்ட கலாசார-பொருளாதய வளர்ச்சியின் உயர் நிலை, ஜனநாயக உரிமைகளை விரிவாக்குவதற்கான போராட்டத்தின் நெடிய வரலாறு ஆகியவற்றை அமெரிக்க சோஷலிசம் அடிப்படையாகக் கொண்டிருக்கும். உலகத் தொழிலாளிவர்க்கத்தின், மக்களின் அரிய படிப்பினைகளை அது கருத்தில் கொண்டிருக்கும்.
   பொருளாதார மற்றும் அரசியல் ஜனநாயகத்தை விரிவாக்குவதற்கும்; சமூக, இன, பால் அசமத்துவத்திற்குத் தீர்வுகாணவும்; தற்போதுள்ளதைக் காட்டிலும் சிறந்த, மேலும் பாதுகாப்பான மனிதவாழ்வையும் சிருஷ்டிபூர்வமான பணியை எட்டவும்; இயற்கைக்கு ஊறுசெய்யாத வளர்ச்சிப் பாதையை மேற்கொள்ளவும், பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் ராணுவமயமாக்காமல் இருக்கவும், பல இனங்களைக் கொண்ட அமெரிக்க மக்களால் மேற்கொள்ளப்படும் உணர்வுபூர்வமான நடவடிக்கையால் அது வடிவமைக்கப்படும்.
   அமைதிவழியில், ஜனநாயகபூர்வமாக, தேர்தல் களத்தின்மூலம் அமெரிக்காவில் சோஷலிசத்தை வென்றெடுக்கமுடியும். அதனை சாதிப்பது, பல நிலைகளை உள்ளடக்கியதோர் நீண்ட நெடிய வழிமுறையாகும். துப்பாக்கிக் குழாயின் மூலமாக அது நிகழ்வதில்லை. சொல்லப்போனால், 1880களின் இறுதியிலே அனைவருக்கும் வாக்குரிமை வென்றெடுக்கப்பட்டபோதே பிரடெரிக் எங்கெல்ஸ் இதனை சுட்டிக்காட்டினார்: “தடையரண்களைத் தாக்கும் காலம் மலையேறிவிட்டது” என்பது அவர் வாக்கு.
   சோஷலிசம் மற்றும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் தேவைகுறித்து விழிப்புணர்வுகொண்ட மிகப்பெரும்பான்மையான அமெரிக்க மக்களது வெகுஜனப் போராட்டம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையை முதலாளித்துவ வர்க்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், இதனை மறுக்கிற அல்லது வன்முறையைப் பிரயோகிக்கிற அதன் திறனைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் நிர்ப்பந்திக்க முடியும்-நிர்ப்பந்திக்க வேண்டும்.  
   ஜனநாயகம், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளின் விரிவாக்கம், அரசியல் நடவடிக்கைகளிலும் சிவில் சமூகத்திலும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஈடுபடுத்தி உணர்வுபூர்வமாகப் பங்குகொள்ளச் செய்தல் ஆகியவற்றுக்கான போராட்டமே இவை அனைத்தின் மையம் என்பது நிச்சயம்.
   அக்டோபர் புரட்சி ஏற்றிவைத்த தீபம், நூறு ஆண்டுகளைக் கடந்தும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. எதிர்கால சோஷலிசத்திற்காக அதனை நேர்மையாக ஆய்வுசெய்து, அதன் சாதனைகளும் குறைகளும் தருகிற பாடங்களை கற்றுத் தேர்வது நமது கடமையாகும்!   



Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP