Wednesday, March 14, 2018

கம்யூனிஸ்டுகளுக்கு ஓர் அறைகூவல்!

வியூகத்தை மாற்றுவீர் தோழர்களே!

அனில் ரஜிம்வாலே

[தோழர் அனில் ரஜிம்வாலே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினர். தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவரது இந்தக் கட்டுரை, ‘மெயின்ஸ்ட்ரீம்’ (MAINSTREAM) ஆங்கில வார ஏட்டின் மார்ச் 12, 2018 இதழில் வெளியானது. அதன் தமிழ் வடிவம், இங்கே ‘சஞ்சிகை’ வாசகர்களுக்காக:]

   நடைமுறைச் செயலாக்கம்தான் உண்மையின் உரைகல் என்பார் லெனின். இடதுசாரிகள், அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் தமது உத்தியை மட்டுமல்லாது வியூகத்தையும் தீவிரமாக மறுசீரமைத்துக் கொள்வதற்கான அவசியத்தை திரிபுரா அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. ஏற்கனவே தெள்ளத் தெளிவாகத் தோன்றுவதைத்தான் திரிபுரா மீண்டும் அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஜனநாயக சக்திகள், குறுகிய மனப்பாங்குடன் கூடிய செக்டேரியன் அணுகுமுறையை நிராகரிக்க வேண்டும்; தம்மை மறுசீரமைத்துக்கொண்டு பரந்த அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை அது நிதர்சனமாக்கியிருக்கிறது.
   முன்னதாக மேற்கு வங்கத்தில் நடந்ததுபோன்று, எதைச் செய்யவேண்டும் என்பதையும், எதைச் செய்யலாகாது என்பதையும் திரிபுரா தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
   குறுகிய பார்வையால் விளைந்த கேட்டினை இந்தத் தேர்தல் முடிவுகளும், 2014 முதலாக வந்த தேர்தல் முடிவுகளும் உணர்த்துகின்றன; அத்துடன், வலதுசாரி வகுப்புவெறியைத் தடுத்து நிறுத்தவும், இந்தியாவை மீண்டும் ஜனநாயகத் திசைவழியில் பயணிக்கச் செய்யவும், மதவெறி பாசிசத்தின் விளிம்பிலிருந்து அதை மீட்டெடுக்கவும் எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு பரந்துபட்ட அரசியல், சிவில் சமூக ஒற்றுமையை, ஒத்துழைப்பை, இணக்கத்தை உருவாக்கவேண்டுமென்பதன் அவசியத்தையும் அவை சுட்டுகின்றன.
   இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் வியப்புக்குரியவையுமல்ல; எதிர்பாராதவையுமல்ல; இடதுசாரி முகாமில் பலரால் இவை எதிர்பார்க்கப்பட்டவைதான். வாக்கு வித்தியாசம்தான் எதிர்பார்த்ததையும் விஞ்சியது. சொல்லப்போனால், மேற்கு வங்கத்தில் தொடங்கியதன் தொடர்ச்சியாகவே அது ஆகிப்போனது. அடுத்து நிற்பதோ கேரளம். திரிபுராவில், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக சக்திகளிடையே ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருக்குமேயானால் இத்தகைய தேர்தல் முடிவினைத் தடுத்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதி ஆழமான அரசியல் ஞானம் தேவைப்படாது. வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. தேர்தல் நடைபெற்ற வேறுபல இடங்களிலும் மாநிலங்களிலும்கூட இதுவே உண்மை.
   பரந்த, அகில இந்திய அளவிலான, இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்று அவசர அவசியம்.
   நாடுமுழுவதிலுமுள்ள பரந்துவிரிந்த முற்போக்குப் பகுதியினரை, ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கான முன்முயற்சியை இடதுசாரிகள் மேற்கொள்வதற்கான தருணம், மிகச்சரியான தருணம் இதுவே. ஜனநாயக முகாமிற்குக் குந்தகம் விளைந்துவிடும் வகையில் இடதுசாரிகள், குறிப்பாக அதன் சில பகுதியினர், இத்தகு பாத்திரம் வகிக்க மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இப்போது இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் கேரளாவைக் காப்பாற்ற வேண்டும்.

வலிமையாகக் காலூன்றிய வலதுசாரிகள்

   இந்த தேர்தல் முடிவுகள், எதிர்காலத்தில் மிகத்தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. முற்போக்கு சக்திகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்ற வகையில், இதுகாறும் கால்பதிக்காத பகுதிகளுக்கும் சங் பரிவாரம் மேலும் பற்றிப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. வலதுசாரிகளின் இத்தகைய முன்னேற்றத்துக்கு திரிபுரா வீழ்ச்சி பிரதான காரணமாகியுள்ளது. பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் தலைமையிலான வலதுசாரிகள், நாடு சுதந்திரம்பெற்றதற்குப் பின்னர் முதன்முதலாக வடகிழக்கில் வலுவாகக் காலூன்றுவதற்கு வாகான பிடிமானத்தைப் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், நேரடியான யுத்தத்தில், இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியிலிருந்து நன்கு நிறுவப்பட்ட இடதுசாரிகளை அவர்களின் கோட்டையான திரிபுராவில் வீழ்த்தியுள்ளனர். இதை அடைவதற்காக அந்த வலதுசாரிகள் திட்டமிட்டு செயலாற்றினர். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்வோமாக.

   திரிபுராவிலும், வடகிழக்கிலும் உண்மையில் இடதுசாரிகள் என்னதான் செய்துகொண்டிருந்தார்கள் எனும் வியப்புக்குரிய கேள்வி எழுகிறது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தமது முழு வேகத்தையும், பலத்தையும் அந்த யுத்தத்தில் பிரயோகித்திருந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் மத்திய தலைவர்கள் திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் மிகச் சொற்ப அளவிலேயே பங்கேற்றதும் அல்லது முற்றிலுமாகப் பங்கேற்காததும் வியப்பினை ஏற்படுத்துகிறது. மத்தியிலிருந்து இடதுசாரித் தலைவர்கள் அங்கே ஏன் முகாமிடவில்லை? இடதுசாரிகள் தம் பலத்தை ஏன் ஒருங்கு திரட்டவில்லை? குறைந்த பெரும்பான்மையிலேனும் தாம் வெல்லப்போவது உறுதி எனக் கணக்கிட்டு அவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டனர் என்பது தெளிவு. எவ்வாறு இவ்வளவு மோசமான கணிப்பில் அவர்கள் இறங்கினர்? அதுவும்கூட இத்துணை மனமுதிர்ச்சி பெற்ற (?) தலைவர்கள் எங்ஙனம் இவ்வாறு கணித்தனர்? இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதிலும், புதிய வளர்ச்சிப் போக்குகளை, புதிய சக்திகளை, புதிய தலைமுறையை, இளைஞர்களை, சமூகக் கலவையில் தோன்றிய மாற்றங்களை இடதுசாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர்.
   மார்க்சிய-லெனினியவாதி செய்யவேண்டியது என்ன? மார்க்சியத்தின் அடிப்படைகளுக்குத் திரும்பவேண்டும்; லெனினிய உத்திகளைக் கற்க வேண்டும்; லெனினிய ஆய்வு முறையினைக் கைக்கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியினை லெனின் எப்படி ஆய்வு செய்தார்; ரஷ்யப் புரட்சியின்போது, புரட்சிகர சோஷலிஸ்ட் ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உத்தியை அவர் எவ்வாறு உருவாக்கினார், மாற்றியமைத்தார் என்பதையெல்லாம் கற்றுணர வேண்டும். அண்மையில் கொண்டாடப்பட்ட ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டிலிருந்து இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும் எதனையும் கற்கவில்லை என்பது மெய்யாகவே வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.
   காலத்தின் வளர்ச்சிப்போக்கில், வடகிழக்கிலும், திரிபுராவிலும் சமுதாயம் அடிப்படை சமூக-பொருளாதார மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்திய மற்றும் உலக சமுதாயத்தின் அங்கம் அவர்கள். இதில் முக்கியமானதொரு மாற்றம், புதிய தலைமுறை இளைஞர்களின் உதயமாகும்; அவர்கள் இடதுசாரி ஜனநாயக இயக்கத்திலிருந்து முழுவதுமாகத் தனிமைப்பட்டுப் போயிருக்கிறார்கள்; அந்நியப்பட்டும் போயிருக்கிறார்கள்.
   தாம் கொண்டிருந்த முனைப்பையும், தமது பெரும் செல்வாக்கினையும் கம்யூனிஸ்ட் இயக்கமும் இடதுசாரிகளும் மெத்தனமாக இருந்து தாரைவார்த்துவிட்டனர் என்பதை உணரமுடிகிறது. சொல்லப்போனால், இடதுசாரிகள் திரிபுராவில் மிகப் பலமான சக்தியாக இருந்தனர்; இருக்கின்றனர். மணிப்பூரில் பலம் பொருந்தியவர்களாகவும், அசாமிலும் மேகாலயாவிலும் கணிசமான செல்வாக்கு கொண்டவர்களாகவும் உள்ளனர். அந்த அஸ்திவாரத்தின்மீது கட்டி எழுப்புவதுதான் அவர்கள் செய்யவேண்டிய வேலை. இதற்கு மாறாக, சம்பவங்கள் நிகழும்போது மவுனித்துப்போன பார்வையாளர்களாக இருந்த அவர்கள், லெனின் சொல்வதுபோல, தானாக நடப்பது நடக்கட்டும் (voluntarism) எனும் போக்கின் பாதிப்புக்கு ஆளானார்கள்.
   வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ்.-ம், சங் பரிவாரமும் ஊடுருவி செல்வாக்கு பெற்றுக் கொண்டிருந்தன என்பதை இடதுசாரிகள் ‘அறிந்திருக்கவில்லை’ என்பது அரசியல்/சித்தாந்த பொது அறிவுக்கு ஏற்புடைத்தன்று. இதில் அவர்களை (வலதுசாரிகளை)க் குற்றம் சொல்லிப் பயனில்லை; அவர்கள் அவர்களது வேலையைக் காட்டுகிறார்கள். ஆனால், இடதுசாரிகள் தம் பணியை ஏன் நிறைவேற்றவில்லை? இந்த அச்சுறுத்தலை சந்திக்கவும், ஆர்.எஸ்.எஸ்.-பாஜக செல்வாக்கினை விரிவாக்கிக் கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவும் உரிய காலத்தில் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இதற்கு விளக்கம்தான் என்ன? விஞ்ஞான சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அரசியல் நிலவரத்தை விஞ்ஞானபூர்வமாகப் புரிந்துகொள்வதினின்று வெகுதூரம் விலகி நின்றுவிட்டனர் என்பது நிரூபணமாகிறது. உள்ளூர் பழங்குடியின மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் தோற்றுவித்த சிக்கல்கள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை; ஆயினும் அது மற்றபிற கட்சிகளுக்கும்கூடப் பொருந்துமல்லவா?
   பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் காங்கிரஸ் கட்சியைப் போன்றவை அல்ல என்பதை இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருமுறை ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார்களேயானால், அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் எதையும் செய்வார்கள்; அடுத்தவர்கள் ஆட்சிக்குவர அனுமதிக்க மாட்டார்கள். ஜனநாயக சக்திகளை அவர்கள் அழித்தொழித்து நிர்மூலமாக்கிவிடுவார்கள்; ஆணி அடித்ததுபோல் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வலதுசாரி பிற்போக்கு வழிமுறைகளைக் கையாளுவார்கள். திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக நுழைந்து, வலிமையாகக் காலூன்றி நிற்க அனுமதித்தது மாபெரும் தவறாகும். இதற்காக, இடதுசாரிகள் வருந்துவார்கள்.
இடதுசாரி தளங்களின் பாத்திரம்

     இடதுசாரிக் கோட்டைகள் மற்றும் தளங்கள் வகிக்கவேண்டிய பாத்திரம் என்ன? இடதுசாரிகள் செய்த காரியம் என்ன தெரியுமா? தமக்கேயுரிய பிரதேசங்களிலிருந்தெல்லாம் பின்வாங்கிக்கொண்டு, அவற்றை வலதுசாரிப் பிற்போக்காளர்களுக்குத் தாரைவார்த்துவிட்டனர்.
  
    கேரளம், வங்கம், திரிபுரா, மணிப்பூர், பீகார், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் வலிமைமிக்க தளங்களைக் கொண்டிருந்தார்கள்; இன்னும் கொண்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கும் விரிவாக்கும் வகையில் இந்த அரசாங்கங்களும் தளங்களும் நிச்சயம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நோக்கத்தை எட்டும் வகையில் இடதுசாரிகள் அகில இந்திய அளவிலான வியூகம் கொண்டிருக்கவில்லை. இது ஒரு மாபெரும் அரசியல் தவறாகும்.

   அதுமட்டுமின்றி, மிக அண்மைக் காலத்தில்தான் இடதுசாரிகள் 62 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தார்கள்; அவர்கள், இந்திய அரசியலின் எதிர்காலத்தையே புரட்டிப்போடுகிற நெம்புகோலைத் தம் வசம் வைத்திருந்தார்கள். இந்திய அரசியலின் எதிர்காலத்திற்கான திறவுகோல் இடதுசாரிகளிடம் இருந்தது. வலதுசாரி மதவெறி சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்த எண்ணிக்கையையும் ஸ்தானத்தையும் அவர்கள் பயன்படுத்தியிருக்க முடியும்; மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டு, தமது காலடித்தடங்களை வேறுபகுதிகளிலும் பதித்திருக்க முடியும்; அவ்வாறு செய்வதன்மூலம் காங்கிரசுக்கு இணையான பலத்தையும் பெற்றிருக்க முடியும்.

   ஆனால், கண்மூடித்தனமான காங்கிரஸ்-எதிர்ப்பு அதனைத் தடுத்துவிட்டது. முக்கியமற்றதொரு பிரச்சனைக்காக ஐக்கிய முற்போக்கு அணி-I  (UPA-I)க்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வது என அவர்கள் முடிவெடுத்தார்கள்; அவ்வாறு செய்வதன்மூலம், வலதுசாரிப் பிற்போக்காளர்களுக்கு அவர்கள் மடைதிறந்துவிட்டார்கள்.

கண்மூடித்தனமான
காங்கிரஸ்எதிர்ப்பைக் கைவிடுக

   காங்கிரசுடனும் இதர ஜனநாயக சக்திகளுடனும் ஒத்துழைப்பு கொள்வது என்கிற பிரச்சனை இன்று மிக முக்கியமான பிரச்சனையாகும். இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளிடையே மிக மோசமான பிளவு ஏற்பட்டுள்ளது. ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் ஒற்றுமை என்று ஒவ்வொருவரும் பேசுகிறார்கள்; ஆனால், அந்தத் திசைவழியில் ஸ்தூலமான நடவடிக்கை ஒன்றைக்கூட எவருமே எடுப்பதில்லை. ஏன்? அதனை யார் தடுக்கிறார்கள்? மதவெறி, வலதுசாரி சக்திகளிடமிருந்து நாட்டுக்கு ஆபத்து வந்திருப்பதாக சில இடதுசாரி சக்திகள் ஒப்புக்கொள்கின்றன; இந்த விஷயத்தில் ஒற்றுமை தேவை என்றுகூட அவர்கள் பேசுகின்றனர். பாசிசப் போக்குகளிடமிருந்து வருகின்ற ஆபத்துகள் குறித்து முழுமையான புரிதல் உள்ள, ஆழ்ந்த சிந்தனையும் உணர்வும் கொண்ட ஒவ்வொரு கட்சியும் ஒற்றுமை அல்லது ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்துகொண்டுள்ளன. ஆயினும், அவை ஒன்றுபடுவதற்கு அல்லது ஒத்துழைப்பதற்கும் பரஸ்பரம் புரிந்துணர்வு கொள்வதற்கும் தடையாக இருப்பது எது?
   அத்தகைய ஒற்றுமை ஏற்படாததற்கு, சில இடதுசாரி சக்திகளிடம் நிலவுகிற கண்மூடித்தனமான காங்கிரஸ்-எதிர்ப்புதான் காரணம்; இதன் விளைவாக, வலதுசாரிப் பிற்போக்கு சக்திகள் ஓங்கி வளர்கின்றன; பற்றிப் பரவுகின்றன. இதைப் புரிந்துணர வேண்டும்; சரிப்படுத்த வேண்டும்.
   மற்ற எந்தக் கட்சிக்கும் இடமில்லாத, ஒற்றைக்கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஆகியவை செயல்பட்டுவருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதப் படைகளிடம் ஒன்றுபட்ட தலைமையைக் கொண்ட, மிகவும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட மதவெறி-பாசிச ஒற்றைக்கட்சி ஆட்சியை நோக்கித்தான் அவை நகர்ந்துகொண்டிருக்கின்றன; பிற்போக்கான, மதவெறிகொண்ட முறையில் இந்திய அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள் அல்லது தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழித்தொழிப்பதற்கு அல்லது போராடுவதற்குத் திராணியற்றவையாக்கும் வகையில் அவற்றை பலவீனபடுத்துவதற்கு அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் திசைவழியில் நிகழ்வுகளை நகர்த்துவதற்கு அவர்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது பொருந்தும்’’’ ‘2019 தேர்தல்’, முற்றும் முழுவதுமாக அவர்களது கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் நடத்தப்படவேண்டும் என பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டு விரும்புகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளை ஒவ்வொன்றாகப் பிரித்து, அவற்றை அழிக்க ஆளும் கட்சி விரும்புகிறது.
    வலதுசாரிப் பிற்போக்கு மற்றும் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிரான சாத்தியமான அளவு மிகப்பரந்து விரிந்த அணியே இன்று நமக்குத் தேவை. மிக ஆழமான, நன்கு யோசித்து வகுக்கப்பட்ட கொள்கைகளும் உத்திகளும் உருவாக்கப்பட வேண்டும்.
    நாட்டில் நிலவும் புறச்சூழல், இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்குச் சாதகமாகவே உள்ளது.
   இடதுசாரிகளில் ஒரு பிரிவினர் மற்றும் சில மாநிலக் கட்சிகளின் மத்தியில் காணப்படுகிற கண்மூடித்தனமான காங்கிரஸ்-எதிர்ப்புதான் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற சக்திகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்குப் பெருந்தடையாக உள்ளது. உண்மையில் இது விநோதமானது; துரதிருஷ்டவசமானது. ஆர்.எஸ்.எஸ்.-பாஜக ஆகியவைதான் பிரதான ஆபத்தைத் தோற்றுவிக்கின்றன; நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கும் ஜனநாயக அமைப்புக்கும் வேட்டுவைக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், சில தலைவர்களும், கட்சிகளும் இதர ‘பூர்ஷ்வா’ சக்திகளுடன், குறிப்பாகக் காங்கிரசுடன் புரிந்துணர்வை எட்டுவதற்கு மறுக்கின்றனர். தாம் எந்த அளவுக்கு கேடு விளைவிக்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை.
   சுதந்திரப் போரில் ஜனனம் எடுத்த காங்கிரஸ், இந்திய நாடு தழுவிய மிகப்பெரிய மதச்சார்பற்ற சக்தியாகும். எந்த முற்போக்கான சாதனைகளை இன்று பிற்போக்கு சக்திகள் அழித்துக் கொண்டிருக்கின்றனவோ, எந்த முற்போக்கு சாதனைகளைக் காப்பாற்ற நாம் போராடிக் கொண்டிருக்கிறோமோ அவற்றில் பலவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களும், முற்போக்கு சக்திகளும் இதில் பெரிய பாத்திரம் வகித்தனர் என்பதும் உண்மையே.
   தனது நீண்ட நெடிய ஆட்சியின்போது நாட்டில் நிகழ்ந்த பல தவறுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் நிச்சயம் காங்கிரஸ்தான் பொறுப்பு என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவற்றுக்காக அது விமர்சிக்கப்பட வேண்டும்; அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். நாட்டின் அமைப்பை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்கு அத்தகைய போராட்டம் அவசியம். ஆனால், அதற்காக காங்கிரசையும் பாஜகவையும் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று பொருளல்ல. அவை இரண்டும் ஒன்றல்ல. காங்கிரஸ், ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சி; பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஆகியவையோ வலதுசாரி வகுப்புவாத சித்தாந்தத்தைக் கொண்ட, பாசிச சிந்தனையிலிருந்து உத்வேகம் பெறுகின்றதோர் மதவெறி-பாசிசக் கலவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வேறு எந்தக் கட்சியும், ‘ஆர்.எஸ்.எஸ்.’ ஐ அடிப்படையாகவோ அல்லது வழிகாட்டியாகவோ கொண்டிருப்பதில்லை. ஆகவே, காங்கிரசின் தவறான கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில், வலதுசாரிப் பிற்போக்கு தோற்றுவிக்கின்ற பிரதான அபாயத்தை முறியடிக்கும் விஷயத்தில் காங்கிரசுடன் அரசியல் கட்சிகள் இணங்கிச் செல்லவேண்டும் அல்லது ஒத்துழைக்க வேண்டும்.
     பாஜக ஆட்சிக்கு வருவதென்பது ஏதோ ஒரு கட்சிக்கு பதிலாக மற்றொரு கட்சி ஆட்சியில் வந்து அமர்வது என்பது போன்ற சாதாரணமான மாற்றமல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே கணித்துக் கூறியது. முதன் முறையாக ஒரு வலதுசாரிப் பிற்போக்குக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது; அந்த வலதுசாரிக் கட்சி, பாசிசத் தன்மையுடன் கூடிய போக்குகளை வெளிப்படுத்துகிற கட்சியாக அல்லது மதவெறி பாசிசக் கட்சியாக உள்ளது எனவும் கணித்தது. இத்தகு ஆய்வின் அடிப்படையில், ஆற்றவேண்டிய கடமைகள் முன்மொழியப்படுகின்றன. மதவெறி பாசிச அபாயத்தை முறியடிப்பதற்குப் பரந்த மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மேடை அமைக்கப்பட வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காலத்திற்குகந்த அறைகூவல் விடுத்துள்ளது.
   காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளின் ஐக்கிய முன்னணி, காலத்தின் தேவை. மாநிலக் கட்சிகளையும், அனைத்து சாத்தியமான சக்திகளையும் அது உள்ளடக்கியிருக்க வேண்டும். மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை எதிர்த்து நிற்பதில் சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறது; லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், வேறு பல கட்சிகள், சக்திகளும் அவ்வாறே செயல்பட்டுள்ளன. சிவ சேனா, தெலுங்கு தேசம் கட்சி போன்ற பாஜகவின் நேசக் கட்சிகளும்கூட அசெளகரியப்பட்டு, பாஜகவுக்கு எதிராகப் பகிரங்கமான நிலையெடுத்துள்ளன. நாட்டில் பாஜக ஆட்சிக்கு எதிராகப் பரவலான அதிருப்தி நிலவுகிறது. தொழில் முனையும் வர்க்கமும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் பகுதியினரும்கூட கோபம் அடைந்துள்ளனர். இளைஞர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாயையிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
   இத்தகைய நிலையில், வலதுசாரி மதவெறி அபாயத்தை எதிர்த்துப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்கிற புரிதலின் அடிப்படையில், விரிந்துபரந்த அணியில் ஒன்றுசேர வாரீர் என அனைத்து முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுப்பதன்மூலம் தமது வரலாற்றுப்பூர்வமான அரசியல் கடமையை இடதுசாரிகள் நிறைவேற்ற வேண்டும். ‘இடதுசாரி ஒற்றுமை’ யின் பிரதான கடமையும் பணியும் இதுவே. இடதுசாரி ஒற்றுமை என்பது எங்கோ அந்தரத்தில் தனியே இருப்பதல்ல; அது ஸ்தூலமானது. இதுவே அதன் ஸ்தூலமான பணி; இதனைச் செய்தால்தான் அது வளர இயலும்.
     இவ்வாறு சொல்வதனால், நாம் முன்மொழிகிற விரிவான முன்னணியில் வேறுபாடுகளே இல்லை என்று பொருளாகாது. அந்த ஜனநாயக முகாமில் பங்குபெறும்/உறுப்புக் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்தலாகாது என்றோ அல்லது அவை தத்தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றோ பொருளாகாது. ஆனால், இது இடதுசாரிகள் மேற்கொள்ள வேண்டிய ஜனநாயக அணிதிரட்டலுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது.
   ஒற்றுமையின்மையை அவற்றின் மத்தியில் விதைப்பதன்மூலம் இடதுசாரிகள், காங்கிரஸ், மாநிலக் கட்சிகள், குழுக்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக, தனித்தனியே அழித்தொழிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கூட்டு விரும்புகிறது. இந்த விஷயத்திலும், இந்திய அரசியல் சாசனத்தைக் காக்கும் பிரச்சனையிலும் ஒற்றுமையின்மை ஏற்படுமேயானால், அது வலதுசாரிப் பிற்போக்கிற்கும் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கும் உதவுவதாக மட்டுமே அமையும்.
  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ல் தோன்றியுள்ள கருத்து வேறுபாடுகள், ஆக்கபூர்வமான முறையில் தீரும் என்று நம்புவோமாக. இன்றைய சூழலில் அது அவசியமானது. தற்போதைய நிலையில், பூர்ஷ்வா கட்சிகளுடன், குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு கொள்கிற அல்லது ‘அணிசேர்ந்து செல்கிற’ விஷயம் வாத, விவாதப் பொருளாக ஆகியிருப்பது துரதிருஷ்டவசமானது. நம்மைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களும் சூழ்நிலையும் இந்தக் கேள்விக்கு ஏற்கனவே விடையளித்தாகிவிட்டது. முறையான அணியொன்றை அமைக்காவிட்டாலும், பரஸ்பரம் இணங்கி ஒத்துழைப்பதைத் தவிர முற்போக்கு சக்திகளுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை வருங்காலத்தில் ஒரு பரந்த, முறையான, இறுக்கமில்லாத முன்னணிகூடத் தேவைப்படலாம். முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டுமென்பது நிலவும் புறச்சூழலின் அவசியத் தேவையாகிறது. குறைந்த அளவே ஆயினும், திரிணாமுல் காங்கிரசும், சிவ சேனாவும்கூட தமது பாத்திரத்தை வகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய முன்னெடுப்பிலிருந்து இடதுசாரிகள் தம் கடமைப்பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடாமல் நிறைவேற்றவேண்டும். இடதுசாரிகள் வளர்ச்சியடையவும், தேசியக் கட்சிகளின் நீரோட்டத்தில் அவை தமது உரிய பங்கினைச் செலுத்தவும் இது உதவும். அத்தகைய பாத்திரம் வகிக்காமல் இடதுசாரிகள் வளர்ச்சியடைவோம் என நம்ப இயலாது.
   இந்த விஷயத்தில் நமது நாட்டிலும், வெளியிலும் அதிக அனுபவங்கள் உண்டு. பூர்ஷ்வா சக்திகளுடன் அணிசேரும் விஷயத்தில் பொறுப்பை லெனின் தட்டிக்கழிக்கவில்லை; “தனித்தனியே அணிவகுப்போம், ஆனால் (பிரதான எதிரிக்கு எதிராக)  ஒன்றுசேர்ந்து தாக்குவோம்” என அந்த சக்திகள் அனைத்துக்கும் அறைகூவல் விடுத்தார் அவர். சீனாவில் எந்த சக்திகளுக்கு எதிராக (1946ல்) ஆயுதப் போராட்டம் நடத்தினாரோ, அவற்றுடனேயே ‘கூட்டணி அரசு‘ அமைக்க முழக்கமிட்டார் மாவோ. பாசிசத்துக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஐக்கிய முன்னணி அமைக்க (தனது 1935ஆம் வருடத்திய ஆய்வில்), மகத்தான அறைகூவல் விடுத்தவர் ஜியார்ஜி டிமிட்ரோவ். இந்த ஆய்வறிக்கையும், முறையாக மற்றும், அதிகாரபூர்வமற்ற வகையில் அமைக்கப்பட்ட முன்னணியும்தான் நாஜிசத்தையும் பாசிசத்தையும் முறியடிப்பதை சாத்தியமாக்கின.
இறுக்கமான சூழல்

   இந்தியா மிக ஆபத்தானதொரு கட்டத்தில் நிற்கிறது; நிலைமை விரும்பத்தகாததாக உள்ளது. ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகள் ஒன்றுபடவில்லையெனில் வரலாறு அவர்களை மன்னிக்காது. மிகச்சிறிதே கால அவகாசம் உள்ளது அல்லது கொஞ்சம்கூட அவகாசமே இல்லை எனலாம். வலதுசாரி, கார்ப்பொரேட், மதவெறி சக்திகள் அரசிலும், சமுதாயத்திலும், கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் துறைகளிலும், அனைத்து நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், பள்ளிகளிலும், செய்தி நிறுவனங்களிலும், ஓரளவு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எண்ணங்களிலும் உணர்வுநிலைகளிலும் ஊடுருவிவிட்டன. சமுதாயத்தை மதவெறிமயமாக்குவது, நிதிமயமாக்குவது, பாசிசமயமாக்குவது மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. வலதுசாரிப் பிற்போக்கின் கையில் அரசாங்கம் இருக்கிறது. இப்போது அரசையும் சிவில் சமூகத்தையும் அது ஊடுருவித் துளைத்துக் கொண்டிருக்கிறது.

   மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி முற்போக்கு சக்திகள் நாட்டைக் காக்க இப்போது ஒன்றுபட வேண்டும். மற்ற பிற அனைத்து முரண்பாடுகளும் வேறுபாடுகளும் அதற்கு உள்ளேதான் இருக்கிறது; வெளியே இல்லை; அவற்றைப் பின்னர் போராடித் தீர்த்துக் கொள்ள முடியும்.

தமிழில்: எஸ்.துரைராஜ்

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP