Sunday, November 14, 2010

இனவெறியை எதிர்த்துக் களம் கண்ட இந்திய வீராங்கனை: பாத்திமா மீர்

பாத்திமா மீர் (Fatima Meer) இன ஒதுக்கல் (apartheid) எனப்படும் நிறவெறி, இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக, தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தில் முன்னணியில் நின்று, வெள்ளையர் இனவெறி ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிய இந்திய வீராங்கனை.

குஜராத் மாநிலத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று குடியேறிய இந்திய மரபுவழி இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஓர் அறிவுஜீவி, எழுத்தாளர், கல்வியாளர், செயல்வீரர் எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது போராடியவர்.
1956இல் நேட்டால் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராகச் சேர்ந்த பாத்திமா மீர்தான், தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியில் அமர்த்தப்பட்ட வெள்ளையர் இனத்தவர் அல்லாத முதல் பெண். பின்னாளில், அவரே அங்கு கறுப்பினத்தவர் குறித்த புகழ்பெற்ற ஆராய்ச்சி மையத்தை 1972இல் தொடங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
"பெரும்பாலான இந்தியப் பெண்கள் சமையலறையில் சமோசா செய்யும் பணியில் அவரவர் அம்மாக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த காலத்தில், அந்த இளம் இந்தியப் பெண் வீதியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். உலகிலேயே மிகக் கொடுமையான அடக்குறை ஆட்சி அமைப்புக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தார்'' என்று பாத்திமா மீரைப் பற்றி அவரின் நெருங்கிய தோழியும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியுமான வின்னி மண்டேலா குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தியான பாத்திமா மீரின் தாத்தா இஸ்மாயில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரை நகரான சூரத் நகரில் இருந்து ஒரு வியாபாரியாக 1880களில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர். பாத்திமா மீரின் தந்தையான மூசா மீர், தென்னாப்பிரிக்காவில் உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த "இந்தியன் வியூஸ்' வார இதழின் ஆசிரியராக இருந்தவர். பாத்திமா மீரின் தாய் ஆமினா, முதலில் ராச்சேல் என்ற பெயர் கொண்ட வெள்ளையர் இனப் பெண் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. மீரின் குடும்பம், முஸ்லிம் குஜராத்தி மரபுகளும், ”தந்திரமான அரசியல் செயல்பாடுகளும் கலந்த ஒரு சங்கமம் ஆக இருந்தது. அந்த இரண்டு பண்புகளும் பின்னிப் பிணைந்த இணைப்பாக பாத்திமா மீர் திகழ்ந்தார்.
டார்ட்நெல் கிரசென்ட் பள்ளியில் பயின்றபோதுதான் பாத்திமா மீரின் அரசியல் ஈடுபாடு தொடங்கியது. இனவெறி அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக மாணவ, மாணவியரின் அமைதிவழி கிளர்ர்ச்சிக் குழு ஒன்றை அங்கு அவர் உருவாக்கினார். நேட்டால் இந்திய காங்கிரஸ் அமைப்பு நடத்திய பேரணியில், தனது 17ஆம் வயதில் பாத்திமா மீர் முதன் முதலாக மேடையேறிப் பேசினார்.
அக்காலத்தில் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய தனது தாய் மாமா அகமது மீர் மற்றும் மாமாவின் இரண்டாவது மகனான சட்டக்கல்லூரி மாணவரும், நேட்டால் இந்திய காங்கிரசு தலைவருமான இஸ்மாயில் மீர் ஆகியோரின் அரசியல் செயல்பாடுகள் பாத்திமாவுக்கு பெரிதும் ஆதர்சமாக இருந்தன. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள விட்வாட்டர்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பயிலும்போது மாமா மகன் இஸ்மாயில் மீருடன் பாத்திமா காதல்வயப்பட்டார்.
அவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் தோழர்கள், சமகாலத்தவர்கள். பாத்திமா மீரை எப்போதும் பாத்திமாபென் (சகோதரி பாத்திமா) என்றுதான் நெல்சன் மண்டேலா அழைப்பார்.
பல்கலைக்கழகப் படிப்பை டர்பன் நகரில் பாத்திமா நிறைவு செய்தார். பாத்திமாவும் இஸ்மாயில் மீரும் 1952இல் திருமணம் செய்து கொண்டனர். 1950ஆம் ஆண்டுகள், பாத்திமா மீர் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். மக்கள் சமூகங்களை இன அடிப்படையில் பிரித்து வைத்த பாஸ்போர்ட் சட்டம், குழுப் பகுதிகள் சட்டம் போன்ற வெள்ளைச் சிறுபான்மை அரசின் முடிவுகளை எதிர்த்து அவர் போராடினார். அந்தச் சட்டங்களின் விளைவாக பாத்திமா மீரின் குடும்பம் உள்பட ஏராளமான இந்தியர்களின் குடும்பங்கள் "வெள்ளையர்களுக்கு மட்டும்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வீடு வாசல்களையும் தொழில்களையும் விட்டு விரட்டி, வெளியேற்றப்பட்டனர்.
பொது ஒழுங்குக்கும், அமைதிக்கும் ஆபத்து எனக் குற்றம் சாற்றி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் பாத்திமா மீருக்கு எதிராக மூன்று முறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத மற்றவர்களுக்கு எதிராக அந்தக் கொடிய சட்டத்தின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப் பட்டபோது, அதன்படி முதலில் தடை செய்யப்பட்டவர்களில் பாத்திமா மீரும் ஒருவர். கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது, அறிக்கைகள் வெளியிடக் கூடாது, தடை செய்யப்பட்டுள்ள மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பவை அந்தத் தடை உத்தரவின் கீழ் பாத்திமா மீருக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள்.
முதலில் 1955இல் 2 ஆண்டுகளுக்கும், பிறகு 1976இல் வின்னி மண்டேலாவுடன் சேர்த்து 5 ஆண்டுகளுக்கும், மீண்டும் 1981இல் மேலும் 5 ஆண்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆண்டுகளுக்கு பாத்திமா மீருக்கு வெள்ளை இனவெறி அரசு தடை விதித்திருந்தது. எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்தந்த வழிகளில்எல்லாம் அந்தத் தடை உத்தரவுகளை பாத்திமா மீர் மீறினார்.
1977இல் பாத்திமா மீரை படுகொலை செய்வதற்கு வெள்ளை இனவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். 1976இல் பாத்திமா மீரின் மகன் ரஷீத் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி லண்டனுக்குப் போய் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 14 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்த ரஷீத், இனவெறி ஆட்சி அகன்ற பிறகுதான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார். ஆனால் வருந்தத் தக்க வகையில் ஒரு கார் விபத்தில் ரஷீத் அகால மரணமடைந்தார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸும், நேட்டால் இந்திய காங்கிரஸும் பாத்தி மீர் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடியபோதிலும் பாத்திமா மீர் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை.

1988இல் வெளியான, நெல்சன் மண்டேலாவின் முதல் அதிகாரபூர்வ சுயசரிதையான "ஹையர் தேன் ஹோப்ஸ்' (Higher than Hopes) என்ற நூலை பாத்திமா மீர்தான் எழுதினார். இந்த நூல் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் 40க்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
காந்தியடிகளின் வாழ்க்கை குறித்து "அப்பரென்டிஸ்ஷிப் ஆப் மகாத்மா' (Apprenticeship of a Mahatma) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல்தான் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகலின் இயக்கத்தில் "தி மேக்கிங் ஆப் மகாத்மா' ( The Making of Mahatma ) என்ற பெயரில் திரைப்படமாக உருவெடுத்தது. இதற்கான திரைக்கதையையும் பாத்திமா மீர்தான் எழுதியிருந்தார். இது இந்தியா தென்னாப்பிரிக்கா கூட்டுத் தயாரிப்பில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத் தக்கது.
பாத்திமா மீரின் கணவர் இஸ்மாயில் மீர் கடந்த 2000 ஆண்டில் இறந்தார். பாத்திமா மீருக்கு ஷமீம், ஷெகனாஸ் என்ற இரண்டு மகள்களும், 5 பேரக் குழந்தைகளும் உள்ளனர். ஷெகனாஸ் நீதிபதியாகவும், ஷமீம் சமூக அறிவியல் ஆலோசகராகவும் உள்ளனர்.
1928 ஆகஸ்ட் 12இல் பிறந்த பாத்திமா மீர் அவரது 81ஆம் வயதில் இந்த ஆண்டு (2010) மார்ச் 12இல் காலமானார்.

பாத்திமா மீர் எழுதிய நூல்கள்:
Portrait of Indian South Africans
Apprenticeship of a Mahatma
Race and Suicide in South Africa
Documents of Indentured Labour
The South African Gandhi: The Speeches and Writings of M.K.Gandhi
Resistance in the Townships
Passive Resistance
Higher than Hopes (the first authorized biography of Nelson Mandela)


தொகுப்பு: ஜெயநடராஜன்
(ஆதாரம்: "கார்டியன் நியூஸ்பேப்பர்' நாளேட்டில் அர்ஜுமாண்ட் வாஜித் எழுதிய கட்டுரை. இக்கட்டுரை 2010 மார்ச் 31இல் "தி ஹிந்து' நாளிதழில் வெளியானது).

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP