Tuesday, July 10, 2012

வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கங்களை உருவாக்கிய மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷி






அனில் ரஜிம்வாலே

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒருவகையான புற்று நோய் செக்டேரியன் போக்கு. களையெடுப்பு என்ற போர்வையிலும். திருத்தல்வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்கிற பெயரிலும், அந்நியவர்க்கப் போக்குகளை வேரறுப்பது என்று சொல்லியும், சொந்த சகோதரர்களைவிடவும், ஒருதாய் மக்களைக்காட்டிலும் சிந்தனையாலும், செயலாலும், சித்தாந்தத்தாலும் இணைந்து செயல்பட்ட தோழர்களை வேட்டையாடித் தம் தலைமைப் பொறுப்பைத் தக்க வைத்துக்கொள்ள எத்தனித்தவர்கள் எத்தனையோபேர். இயக்கத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகத் தீர்த்துக்கட்டும் படலத்தைத் தொடங்கி நடாத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. விழுதுபரப்பிய ஆலமரமாக விரிந்தும் உயர்ந்தும் நின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வேர்களை வெட்டிச் சாய்த்து, அந்த மாபெரும் மக்கள் இயக்கத்தைச் சிமிழுக்குள் அடைத்து அழகுபார்க்கும் இவர்களது வீரப்பிரதாபம் உலகறிந்தது. சோவியத் யூனியனும், சோஷலிஸ்ட் முகாமும் சிதறி சின்னாபின்னமாகி உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய பின்னரும், அந்த மோசமான சரித்திர நிகழ்வுகளிலிருந்து உரிய பாடங்களைக் கற்காதவர்கள் இன்னும் இப்படிப்பட்ட போக்குகளைப் பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் மாறாக, இந்திய நாட்டின் விடுதலை வேள்வியில் ஜனித்து, எமது தேசியமும்-சர்வதேசியமும் ஒன்றுக்கொன்று முரணிக்கொள்ளாதவை என்று பிரகடனம் செய்து, நேச சக்திகளுடன் ஒன்றுபடுதல்-போராடுதல் எனும் பதாகையை உயர்த்திப்பிடித்து, வர்க்க நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும்தொய்வின்றி பணியாற்றி, கம்யூனிஸ்ட் இயக்கம் அளப்பரிய, ஆரோக்கியமான வளர்ச்சிகாணத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த உன்னதத் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பஞ்சமில்லை. அத்தகைய தலைவர்களில் மகத்தானவர் தோழர் பூர்ண சந்திர ஜோஷி (பி.சி.ஜோஷி). வரலாற்றில் சில தனிநபர்கள் வகிக்கும் பாத்திரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்குச் சிறந்த உதாரணம் இயக்கத்திற்கு அவர் நல்கிய பங்களிப்பு. அவரது பிறந்ததின நூற்றாண்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மெயின்ஸ்ட்ரீம் (MAINSTREAM) ஆங்கில வார ஏட்டில் ஏப்ரல் 12, 2008ல் பிரசுரமான தோழர் அனில் ரஜிம்வாலே அவர்களின், 'P.C. Joshi : Organiser of Historic Movements' எனும் கட்டுரையின் தமிழாக்கம் இதோ:

சரித்திர நாயகர் பி.சி.ஜோஷி:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பி.சி.ஜோஷி தலைமை தாங்கிய காலம் (1935-1947), பரந்துபட்ட வெகுஜன இயக்கங்கள் முகிழ்த்தெழுந்த காலம்; அந்த இயக்கங்களில் பல சரித்திரத்தில் தமது அழிக்கமுடியாத முத்திரைகளைப் பதித்துள்ளன. அந்த இயக்கங்களை உருவாக்கிய பெருமை அவருக்குமட்டுமே உரியது என்று சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், மக்களின் இயக்கங்களை நடத்துவதற்குச் சரியான தருணத்தைத் தேர்வு செய்வதும், அதற்குப் பொருத்தமான முழக்கங்களை உருவாக்கித் தருவதும் அவருக்குக் கைவந்த கலை. வெகுஜனத் தலைவர்களையும், தொண்டர்களையும் கண்டுணர்ந்து வளர்க்கும் மாபெரும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்த காலத்தில்தான் மிகப்பெருமளவிலான வெகுஜனத் தலைவர்களை அது தன்னகத்தே கொண்டிருந்தது.

வெகுஜன இயக்கங்கள்:

வரலாற்று ஏடுகளை உற்று நோக்கும்பொழுது நமக்குத் தெளிவாகும் உண்மை இதுதான்: தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், ஆதிவாசிகள், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவர்கள், நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், காவல்துறையினர், முப்படைகளைச் சேர்ந்தவர்கள், இன்னபிறர் என எண்ணற்ற பகுதியினரின் வெகுஜன இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது; அவற்றில் பங்கேற்றது. இவற்றுள் அமைதிவழிப் போராட்டங்களுமுண்டு; ஆயுதம் தாங்கிய போராட்டங்களுமுண்டு.

கான்பூரிலும், பம்பாயிலும், கல்கத்தாவிலும், சென்னையிலும், வேறு பல இடங்களிலும் நடைபெற்ற ஆலைத்தொழிலாளர்களின் போராட்டங்கள் பிரசித்திபெற்றவை. கிர்னி காம்கார் யூனியன் தோற்றுவிக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் நிகழ்வாகும். 1926-29ல் ஜவுளி ஆலைத்தொழிலாளர்களை அமைப்புரீதியாகத் திரட்டும் பணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசும் (AITUC) மறக்கமுடியாத பாத்திரம் வகித்தன. எஸ்.ஏ.டாங்கே, எஸ்,எஸ். மிராஜ்கர் உள்ளிட்டவர்கள் தன்னேரில்லா தலைவர்களாக உருவானார்கள். இதே காலத்தில், பி.சி.ஜோஷி தொழிற்சங்கவாதியாகவும், கம்யூனிஸ்ட் தலைவராகவும் உருவாகிக்கொண்டிருந்தார். முதலில் மாணவர் இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கிய அவர், தொழிற்சங்கத் தலைவராகப் பரிணமித்தார். இந்தியத் தொழிலாளிவர்க்கத்தின் முன்னணிப் படையாக ரயில்வே தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து ஜவுளி ஆலைத்தொழிலாளர்களும் விளங்கினர். கிரேட் இண்டியன் பெனின்சுலா (G.I.P.) ரயில்வே, பெங்கால் நாக்பூர் ரயில்வே (BNR), மெட்ராஸ் அண்டு சவுத் மராட்டா (MSM) ரயில்வே, பாம்பே, பரோடா அண்டு சென்ட்ரல் இந்தியா (BB & CI) ரயில்வே மற்றும் பல ரயில்வே பிரிவுகளிலும் பிரதேசங்களிலும் நினைவில் நீங்காத போராட்டங்களை அவர்கள் முடுக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அந்தத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பல சமயங்களில் வாரக்கணக்கிலும் மாதக் கணக்கிலும் நீடித்தன.


மற்றொரு கேந்திரப் படைப்பிரிவு, பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியின் நரம்பு மண்டலமான தகவல் தொடர்புத் துறையினைச் சேர்ந்த அஞ்சல் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களைக் கொண்டது. துறைமுகத்தொழிலாளர்களின் இயக்கமானது, அந்தத் தொழில் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வருவது. பி.சி. ஜோஷியும் மற்ற தலைவர்களும் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள்.

வெகுஜன அமைப்புகள் உதயம்:
 
1936-ஆம் ஆண்டு மூன்று முக்கியமான வெகுஜன அமைப்புகளான-அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS), முற்போக்கு எழுத்தாளர் சங்கம்(PWA)-ஆகியவை அமைக்கப்பட்டன என்பது அனைவரும் அறிந்த விஷயம். கம்யூனிஸ்டுகள் உட்பட தேசிய இயக்கத்திலிருந்த பல்வேறு போக்குகளைக் கொண்ட வெகுஜன அமைப்புகளாக அவை விளங்கின. இந்த வெகுஜன அமைப்புகளை சாத்தியப்படுத்தியதில் தோழர் பி.சி.ஜோஷியும் இதர தலைவர்களும் ஆற்றிய தீவிர பங்குபணி அதிகம் தெரியாமல் போனது. இந்த அமைப்புகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணியிலும் பிற ஒன்றுபட்ட தேசிய இயக்கங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்த பாத்திரம் வகித்தன.


இதன் உடன் நிகழ்வாக, ஏஐடியுசியின் ஓங்கிவளர்ந்த ஒற்றுமையும் செயல்பாடும் இந்த மக்கள் இயக்கத்திற்குப் பெரிய அளவில் வலுவூட்டின.

தேசிய, வர்க்க, மக்கள் இயக்கங்கள்:

புரட்சியாளர்களை எப்பொழுதும் குழப்பத்தில் ஆழ்த்தும் பிரச்சனை இது. ஆனால், இந்த விஷயத்தில் பி.சி. ஜோஷி தெளிவாக இருந்தார். தேசிய விடுதலை எழுச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக வெகுஜன மக்கள் இயக்கங்களையும் வர்க்க இயக்கங்களையும் மிகத்திறமையாக இணைத்தது அவரது மகத்தானதொரு பங்களிப்பாகும். 1930கள், காலனியாதிக்க மற்றும் ஏகாதிபத்திய நெருக்கடிகள் தீவிரமான காலகட்டமாகும். உலகுதழுவிய அளவில் பாசிச அபாயம் அதிகரித்துக் கொண்டிருந்த காலம் அது. அவரது அரசியல் அணுகுமுறையின் இந்த அம்சம் பலசமயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
 
இத்தகைய சூழலில், விடுதலைச் சமரில் அனைத்து காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைத்துக் களமிறக்க பி.சி.ஜோஷியின் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகப் பணியாற்றியது. 1930கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், [எம்.என்.ராய் அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிய] ராயிஸ்டுகள், ஃபார்வர்டு பிளாக் கட்சியினர், இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் இன்ன பிறர் வேகமாகச் செயலாற்றிய காலமாகும். காங்கிரஸ் இயக்கத்துக்குள் தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட இடதுசாரி சக்திகள், நாடுதழுவிய வகையில், மகத்தான வெகுஜனப் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டன.


இதே காலகட்டத்தில்தான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மாபெரும் வளர்ச்சிகண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால்,1945-47ல் நிகழ்ந்த மக்களின் பேரெழுச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தானதொரு பாத்திரம் வகித்தது. இதற்கான முழுமுதல் பெருமை பி.சி.ஜோஷிக்கே உரித்தானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அமைதிவழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள்:

பி.சி.ஜோஷியை எதிர்த்தவர்கள், பலமுறை அவருக்கு 'சீர்திருத்தவாதி' என முத்திரை குத்துவதுண்டு. இதே 'காரணத்தை'க் காட்டித்தான், [கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து] 1947-48ல் அவர் நீக்கப்பட்டார். இன்றும்கூட, அவரை 'சீர்திருத்தவாதி' என்றும், 'ஓடுகாலி' என்றும் வருணித்துத் தீட்டப்படும் கட்டுரைகள் சில முகாம்களிலிருந்து வெளியாகின்றன.


ஆனால், இதற்கு மாறாகச் சரித்திரம் காட்டும் உண்மை என்னவெனில், நினைவில் போற்றற்குரிய சில முக்கியமான ஆயுதப் போராட்டங்கள், பி.சி.ஜோஷியின் தலைமையின் போதுதான் நடத்தப்பட்டன. உண்மையில், அவரது தலைமைக் காலத்தில்தான், அவருடைய மற்றும் அன்றைய கட்சித் தலைமையின் அனுமதியுடன்தான் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பல இயக்கங்களுக்கு அவர் நேரடியாகவே வழிகாட்டினார். 'ஆயுதப் போராட்டத்துக்கு' இன்று வக்காலத்து வாங்குபவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


வரலாற்றில் நிகழ்ந்த மற்றொரு விந்தை என்னவெனில், 'சீர்திருத்தவாதி' என்ற நாமகரணம் சூட்டப்பட்ட பி.சி.ஜோஷிதலைமையின்கீழ்தான் இன்றும்கூட செயல்படத்தக்க வகையில், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் நீடித்துநிலைத்து நிற்கின்ற தளம் அமைக்கப்பட்டது.


வெளிப்படையான செயல்பாடுகள், வெகுஜன இயக்கங்கள், பத்திரிகைமூலமான நடவடிக்கைகள், வேலைநிறுத்தம் உள்ளிட்ட இன்னபிற போராட்டங்களாக இருந்தாலும், 'தலைமறைவு', ரகசிய, இன்னும் சொல்லப்போனால் ஆயுதபாணி அமைப்பாக இருப்பினும், கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் நடவடிக்கைகள் எந்த வடிவங்களில் இருக்கவேண்டும் என்பதை வகுத்தளிக்கின்ற வல்லமை பெற்றவராக இருந்தார் பி.சி.ஜோஷி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் தலைமைதாங்கியபோது, பெரும்பாலும் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது; அல்லது ஒரளவு தடைநீங்கிய நிலையில் செயல்பட்டது. எனவே, நாடுதழுவிய தலைமறைவு ஸ்தாபன யந்திரத்தையும், 'நுணுக்கமாக' செயல்படத்தக்க அமைப்பையும் திறமையாகத் தோற்றுவித்தார் பி.சி.ஜோஷி. இந்த இரு அமைப்புகளுமே ஒரே நேரத்தில் செயல்படலாயின. ஆயுதம் தாங்கிய மற்றும் தலைமறைவுப் போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் மாபெரும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் அவர். [பிரிட்டிஷாரின்] ராயல் இந்தியன் நேவி (RIN), தெபாகா, தெலிங்கானா எழுச்சிகள் மற்றும் பல போராட்டங்கள், மாநாடுகள், வேலைநிறுத்தங்கள் போன்ற நடவடிக்கைகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.


வெளிப்படையான மற்றும் நீக்குபோக்கான செயல்பாடுகளை அவர் எவ்வாறு திறம்படக் கையாண்டாரோ அதற்கு இணையாக, ரகசிய அமைப்புகளை, ஆயுதம்தாங்கிய போராட்டம் உட்படக் கட்டுக்கோப்பான நடவடிக்கைகளைக் கையாண்டார்; இந்த இருவிதமான பணிகளையும் நுணுக்கமாக ஒருங்கிணைத்தார். இன்றைக்கு நடத்தப்படுகிற 'ஆயுதப்போராட்டங்கள்' அவர் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிடக்கூட அருகதையற்றவை.


மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளின்பாலும், எந்த வெகுஜன அமைப்புகளின்பாலும் தனக்குரிய கடமைகளை அவர் என்றுமே தட்டிக்கழித்ததில்லை.


கையூர், தெபாகா, புன்னப்புரா-வயலார், நீல்கிரி (தற்போது ஒரிசா மாநிலத்தில் உள்ளது), காஷ்மீர் மற்றும் பல சுதேசி சமஸ்தானங்களில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், ஜப்பானுக்கு எதிரான ஆயுதப் படைப்பிரிவுகளின் உருவாக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள், பிகாரில் நிகழ்த்தப்பட்ட 'பாகஷ்த்' விவசாயிகளின் போராட்டங்கள், கப்பற்படை எழுச்சி (RIN), ஜபல்பூரில் வெடித்த ஆயுதப்படை எழுச்சி, சென்னையிலும், குஜரத்தின் ஒரு தொலைதூரப்பகுதியிலும் உருவான கடற்படைக் கலகம், பல்வேறு சுதேச சமஸ்தானங்களில் பிரஜா மண்டல்கள் கூட்டாக நடத்திய ஆயுதப்போராட்டங்கள், இவற்றுள் எல்லாம் மகத்தான, மிகவும் நினைவில் கொள்ளத்தக்க, நாம் பின்னர் தனியே எடுத்துக்கூறவிருக்கின்ற, மாபெரும் தெலிங்கானா ஆயுதப்போராட்டம், ஆகியவை வரலாற்றில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்த ஆயுதப்போராட்டங்களில் தனிச்சிறப்புவாய்ந்த சிலவாகும். இவை அனைத்துமே இந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன. அவரது காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆயுதப் போராட்டங்கள், இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவின; இன்று நடத்தப்படும் ஆயுதப்போராட்டங்களோ இயக்கத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன.


பி.சி.ஜோஷியும், அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையும் அக்காலத்தில் நடந்த மேற்கூறிய போராட்டங்கள் பலவற்றிலும் இன்னும் பிற போராட்டங்களிலும் மிக முக்கியமான பாத்திரம் வகித்தனர். பொதுவாக, போராட்ட வடிவங்கள் குறித்து பி.சி.ஜோஷியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையும் யாந்திரீகமான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. போராட்ட வடிவங்கள் அவ்வபோது நிலவும் ஸ்தூலமான சூழலைச் சார்ந்தது. ஆயுதக் கலாசாரத்தினை கைக்கொண்ட அதிதீவிர அராஜகவாத-புரட்சிகர இயக்கத்திலிருந்து வேறுபட்டு நின்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. பி.சி.ஜோஷியால் தலைமைதாங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, வெகுஜன இயக்கங்களிலும், வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், நிலத்தை மீட்டு விநியோகம் செய்தல் ஆகியவற்றிலும் நம்பிக்கை கொண்டிருந்தது. 1945-47 பேரெழுச்சி இதற்குச் சான்று.


அதே நேரத்தில், சாத்வீகமும் சத்தியாக்கிரகமும்தான் தனது வழிமுறை எனக் கொள்ளவில்லை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த விஷயத்தில், அது காந்தியத்திலிருந்து வேறுபாடு கொண்டது. [வன்முறையை வழியாகக் கொண்டவர்கள், காந்திய பாதையில் பயணித்தவர்கள் என] இருசாராரையும் சேர்ந்த பலர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிமுறைதான் சரியானது என்பதை விவாதத்தினூடாகவும், தமது சொந்த அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தார்கள். இதில் பி.சி.ஜோஷி அற்புதமானதொரு பாத்திரம் வகித்தார். அதனால்தான், பகத்சிங் குழுவைச் சேர்ந்த அஜய் கோஷ் போன்ற தலைவர்களையும், காங்கிரஸ் பின்னணியில் வந்த சர்தேசாய், இ.எம்.எஸ். (EMS) போன்ற தலைவர்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
 
பி.சி.ஜோஷி தலைமையின்கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் அமைதிவழி மற்றும் ஓரளவு அமைதிவழியிலான எண்ணற்ற வெகுஜன இயக்கங்களையும் வழிநடத்தியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. ஆயுதப்போராட்டங்களைப் போலவே இவையும் நினைவில்கொண்டு போற்றத்தக்கவை.

கூட்டுறவு இயக்கம்:
 
இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும்.1946லேயே, கைத்தறி மற்றும் ஜவுளி ஆலைத்தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு அமைப்புகளைத் தோற்றுவிக்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் பி.சி.ஜோஷிதான் என்பது மிகவும் அறியப்படாத விஷயமாகும். ஆந்திர மாநிலம் கடப்பா, தமிழகத்தின் மதுரை, திருச்சி மற்றும் பிற இடங்களில் பல்வேறு சிறிய கூட்டுறவு அமைப்புகள் முகிழ்க்கத் தொடங்கின. அவற்றில் சில இன்னும் ஜீவித்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் நம்மிடையே வாழுகின்ற [அக்காலத்துத்] தொழிலாளர்களும் தலைவர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றனர். இந்த கூட்டுறவு அமைப்புகளுக்கு இருவிதக் கடமைகள் உண்டு: ஒன்று, தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது; மற்றொன்று, அவர்களுக்குச் சொந்தமான உற்பத்தி மற்றும் விற்பனை அமைப்புகளை ஏற்படுத்தப் போராடுவது.

சுதேச சமஸ்தானங்களில் போராட்டம்:

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ஏறத்தாழ 575 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் சில, நிஜாமின் ஐதராபாத், போபால், காஷ்மீர், ஜோத்பூர், கத்தியவார், பாட்டியாலா போன்று மிகப் பெரியவை. மற்றவை மிகச்சிறியவை. அவற்றில் சில அரைமைல் அல்லது அதற்கும் குறைவான சுற்றளவு கொண்டவை! இந்த சுதேச சமஸ்தானங்களில் பெரும் எண்ணிக்கையிலானவை-250க்கும் அதிகமானவை-(இன்றைய குஜராத் மாநிலத்தின்) சௌராஷ்ட்ரா பகுதியில் மட்டுமே இருந்தன.


பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகையின்கீழ் சுதேச சமஸ்தானங்கள் வரவில்லை என்பது நன்கறிந்த விஷயம். பிரிட்டிஷ் ராஜாங்கப் பிரதிநிதி ஒருவர் அங்கே வசிப்பார்; பெரும்பாலும் சில பிரிட்டிஷ் துருப்புகளும் அங்கே நிலைகொண்டிருக்கும். ஆனால், அந்த சமஸ்தானங்கள் முற்றும் முழுவதுமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அடங்கி அடிமைப்பட்டுக்கிடக்கும். அதுமட்டுமல்லாமல், அவை ஏறத்தாழ முழுவதுமாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளின் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும். அங்கு மக்களுக்கு எந்தவிதமான அரசியல் மற்றும் சமூக-பொருளாதார உரிமைகளும் கிடையாது; பத்திரிகை சுதந்திரமோ, வாக்குரிமை உட்பட பிற ஜனநாயக உரிமைகளோ கிஞ்சிற்றும் இல்லை. அரசியல் கட்சிகள் அங்கு செயல்படவில்லை அல்லது மிகவும் பலவீனமாக, கடுகளவு உரிமை தரப்பட்ட நிலையில் அல்லது உரிமைகள் எதுவுமின்றி இருந்தன. வெகுஜன இயக்கங்கள், கூட்டங்கள், வேலைநிறுத்தம் போன்ற இத்யாதி செயல்பாடுகளை மேற்கொள்ள மக்களுக்கு அங்கே உரிமை கிடையாது.


இவற்றில் மோசமானவை ஐதராபாத், தென்கனால், நீல்கிரி, ஜோத்பூர், திருவிதாங்கூர்-கொச்சி, கத்தியவார், ஜுனாகத், தர்பங்கா உள்ளிட்ட பல சமஸ்தானங்கள். கோல்ஹாபூர், திருவாங்கூர், பரோடா போன்ற சில சமஸ்தானங்கள்தான் ஓரளவு நவீன வளர்ச்சியின் வாசனையைக் கண்டிருந்தன. மத்திய காலத்தின் இருளில்தான் சுதேச சமஸ்தானங்கள் மூழ்கிக்கிடந்தன. பிரிட்டிஷ் இந்தியாவுடன் ஒப்பிட்டு நோக்கும்போதுகூட அவை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. அங்கே தொழில் வளர்ச்சி என்பது அரிதிலும் அரிது.


சுதந்திர இயக்கத்தை வலுவிழக்கச்செய்து, இந்தியாவைச் சுக்குநூறாக்கவேண்டுமென விரும்பிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இத்தகைய பிளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. சுதந்திர இயக்கத்திற்கு எதிராக நின்ற இந்த சுதேச சமஸ்தானங்கள், விடுதலைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியபோதெல்லாம் அவற்றை மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நசுக்கின. அந்த சமஸ்தானங்களின் துணையுடன் இந்தியாவை இரண்டாக மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான 'சுதந்திர நாடுகளாக'க் கூறுபோட எத்தனித்தார்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள்.


1947ஆம் ஆண்டு நாடு விடுதலையானபோது, பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. அதனால்தான், இந்தியா சுதந்திரநாடாக ஆனபின்பு, இந்தியாவுடன் இணைவதற்கு அவற்றை இணங்கச்செய்வதற்குக் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. எனவே, இந்தியாவுடன் இணைவதா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக எழுந்து, சுதேச சமஸ்தானங்களில் போராடுவதற்கான மேடையும் அமைந்தது. இந்தப் பிரச்சனைதீர பல ஆண்டுகள் பிடித்தது.
 
இந்த மகத்தான போராட்டங்களில், பி.சி.ஜோஷியால் தலைமைதாங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகமிகத் தனிச்சிறப்பு வாய்ந்த பங்குபணியாற்றியது.


மகத்தான தெலிங்கானா போராட்டமும் பி.சி.ஜோஷியும்:

தெலிங்கானா என்பது இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி. ஆனால், சுதந்திரத்துக்கு முன்னால், அது ஐதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகும். அன்று நாட்டிலிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஆகப்பெரியது ஐதராபாத் சமஸ்தானம்; அதன் மக்கள் தொகை, ஒருகோடியே அறுபது லட்சத்துக்கும் அதிகம்; நிஜாம் அதன் ஆட்சியாளர்.தெலுங்கு பேசுகின்ற தெலிங்கானா, மராத்தி பேசுகின்ற மரத்வாடா, கன்னடம் பேசுகின்ற கர்நாடகம் என அது மொழிரீதியாக மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதேசத்தின் நாற்பது சதவீதப் பகுதியை ஜாகீர்கள் நிர்வகித்து வந்தார்கள். மிகக் காட்டுமிராண்டித்தனமாக ஒரு நிலப்பிரபுத்துவ சர்வாதிகாரி போல நிஜாம் ஆண்டுகொண்டிருந்தார். ரசாக்கர்கள் என்ற (கேவலமான) அவரது குண்டர் பட்டாளம், கொள்ளையடித்தல், தாக்குதல் நடத்துதல், கற்பழித்தல், தீவைத்தல், மக்களையும், எதிர்ப்பாளர்களையும் தம் இஷ்டம் போல் கொன்றுகுவித்தல் என சமஸ்தானம் முழுவதும் கடுமையான பாசிச பாணியில் கோரத்தாண்டவமாடினார்கள்.


புகழ்பெற்ற தெலிங்கானா போராட்டம், பிரதானமாக ஆந்திர மகாசபையால் வழிநடத்தப்பட்டது. ஆந்திர மகாசபா, 1920களில் வேர்பிடித்து வளர்ந்த அமைப்பு. அதன் முதல் மாநாடு, 1930-ல் நடைபெற்றது. கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள், தேசியவாதிகள், சுயேட்சைகள், உள்ளூரைச்சேர்ந்த கட்சிசாரா பல தலைவர்கள் போன்றோரைக் கொண்ட ஒருங்கிணைந்த வெகுஜன அமைப்பாகும் ஆந்திர மகாசபா.


பெரும்பாலும் ரகசியமாகவும் தலைமறைவாகவும் நிகழ்ந்த சரித்திரப்புகழ் மிக்க நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வெகுஜனப் போராட்டங்கள், செயல்பாடுகள் பலவற்றை மகாசபா வழிநடத்தியது. மகாசபா (அல்லது 'பிரஜா மண்டல்') வின் நடவடிக்கைகளிலும், பின்னர் தெலிங்கானா போராட்டத்திலும் முக்கிய செயல்வீரர்களாகத் திகழ்ந்தவர்களில் ரவி நாராயண ரெட்டி, சி.ராஜேஸ்வர ராவ், கே. எல். மகேந்திரா, சுவாமி ராமானந்த் தீர்த் மற்றும் பலரும் உண்டு.
 
கம்யூனிஸ்டுகளும் தெலிங்கானாவும்:

இரண்டாம் உலகப்போர் (1939-45) தொடங்கும் தருவாயிலும், அப்போர் வெடித்த நிலையிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கும், அதன் ஸ்தாபனமும் வளர்ச்சிகாணத் தொடங்கின. [கவிஞர்] மக்தூம் மொகியுதீன், ராஜ்பகதூர் கவுர் இன்னபிறரை முன்னணியினராகக் கொண்ட 'தோழர்களின் சங்கம்' என்னும் அமைப்பு, ஐதராபாத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.


சோஷலிஸ்ட் எண்ணம் கொண்ட இளைஞர்கள் 'வந்தே மாதரம்' இயக்கத்தில் பங்கேற்றிருந்தனர். டி.வெங்கடேஸ்வரராவ், எஸ்.ராமனாதன் ஆகியோர் அந்த இயக்கத்தின் செயலாற்றல் மிக்க பிரமுகர்கள்.


ஆந்திர மகாசபாவின் ஒரு பகுதி தீவிரத்தன்மை பெற்றுக்கொண்டிருந்தது. ரவி நாராயண் ரெட்டி, பட்டம் எல்லா ரெட்டி, ஆருத்லா சகோதரர்கள் மற்றும் பிறர் அதில் இருந்தனர்.


சந்திரகுப்த சௌத்ரி, வி.டி.தேஷ்பாண்டே போன்ற இன்னபிற சோஷலிஸ்ட் எண்ணம் கொண்ட தலைவர்களைக் கொண்டதாக மகாராஷ்ட்ர பரிஷத் விளங்கியது. இந்த நான்கு குழுக்களும் பின்னர், 1939-ல், ஒருங்கிணைந்து நிஜாம் சமஸ்தான கம்யூனிஸ்ட் கமிட்டி உருப்பெற்றது. இதன் முதுகெலும்பாக ஆந்திர கம்யூனிஸ்ட் கமிட்டி இருந்தது. அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான கிளைகளில் ஒன்றாகும்.
 
நாம் இங்கே குறிப்பிடுகின்ற பிரதேசத்தில், பின்னாளில், ஆந்திரா கிளை (ஆந்திர மாகாணக்குழு) தான் பிரதான கட்சி அமைப்பாக ஆனது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முறையாகவோ அல்லது நிர்வாகரீதியிலோ ஆந்திர மாநிலம் அல்லது மாகாணம் என்ற ஒன்று அன்றைக்கு இல்லை. எனவேதான், ஆந்திர மாகாணக்குழு என்பது ஒரு கட்சிக் கிளையாக இருந்தது. ஐதராபாத் சமஸ்தானத்தில், தெலிங்கானா பகுதியில் கட்சியின் முதல் தலைமறைவுக் கிளையை அது அமைத்தது. மரத்வாடா பிரதேசத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையொன்று தோற்றுவிக்கப்பட்டது. தெலிங்கானா மற்றும் மரத்வாடா கிளைகள், அகில ஐதராபாத் தொழிற்சங்க காங்கிரஸை அமைத்தன; இது பின்னர் கர்நாடகா பகுதிக்கும் பரவியது. பிற வெகுஜன அமைப்புகளும் தோன்றலாயின. தெலிங்கானாவிலும், ஐதராபாத்திலும் நிகழ்ந்துகொண்டிருந்த சம்பவங்களை பி.சி.ஜோஷியின் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை உன்னிப்பாகக் கவனித்துவந்தது. ஆந்திர மாகாணக் கமிட்டியுடனும், ஐதராபாத் நகரம் உட்பட இதரக் கிளைகளுடனும் ஜீவனுள்ள தொடர்பு கொண்டிருந்த கட்சித்தலைமை, தொடர்ந்து ஆலோசனையும், வழிகாட்டுதலும் நல்கியது. முதலில் பீப்பிள்ஸ் வார் (People's War) என்ற பெயரிலும் பின்னர் பீப்பிள்ஸ் ஏஜ் (People's Age)எனவும் வெளியிடப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பத்திரிகைகள், ஐதராபாத்திலும் தெலிங்கானாவில் நிகழ்ந்த சம்பவங்களைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிடலாயின.

தெலிங்கானாவில் மக்களின் எழுச்சி:

தெலிங்கானாவிலும், நிஜாமின் ஐதராபாத் சமஸ்தானம் முழுவதிலும் மக்கள் நீண்டகாலமாகவே அவரது எதேச்சாதிகார, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை எதிர்த்துப் போராடிவந்தனர். சமூக-பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில், மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்து அவர்கள் போராடிவந்தனர். ஐதராபாத் சமஸ்தானமுழுவதிலும் வாழ்ந்த மக்கள், நிஜாமின் ஆட்சிக்கு விரைந்து முடிவுகட்ட வேண்டுமென விழைந்தார்கள். அப்போது, அங்கே அசஃப்ஜாஹி மன்னர் பரம்பரையின் ஆட்சி மூன்று நூற்றாண்டுகளையும் கடந்திருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு அது கொடூரமான எடுத்துக்காட்டாக இருந்தது. போலந்தில் அன்று நிலவிய ஒடுக்குமுறையுடன் இதனை ஒப்பிட்டுக் காட்டியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான "பீப்பிள்ஸ் ஏஜ்". 17 மாவட்டங்களையும், ஒருகோடியே பதினேழு லட்சம் மக்களையும் கொண்டு அன்று இந்தியாவிலேயே ஆகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது ஐதராபாத். பல்வேறு பெயர்களில் அறியப்பட்ட நிலப்பிரபுத்துவ எஸ்டேட்டுகளின் கட்டுப்பாட்டில் 40 சதவீதப் பகுதி இருந்தது. ஒரு மாவட்டம் அளவு விஸ்தீரணம் கொண்ட ஜாகீரைத் தனது சொந்த பராமரிப்புக்காகவே வைத்திருந்தார் நிஜாம். சிறிதும் மனிதாபிமானமற்ற, கொடுமையான அரசநிலப்பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டில் மீதமிருந்த 60 சதவீத நிலப்பகுதி இருந்தது, இவைமட்டுமின்றி, நேரடியான மற்றும் மறைமுகமான இடைத்தரகர்களின் எண்ணிக்கையோ அநேகம்.


1946-ல் மக்களின் பெருந்திரள் இயக்கங்கள் தெலிங்கானா பகுதிமுழுவதும், ஏன், சமஸ்தானத்தின் இதர பகுதிகளிலும் காட்டுத்தீ போல் பரவின. 1946-ல் தெலிங்கானாவில் அவ்வாறு மக்கள் எழுச்சி வெடித்துக் கிளம்பக் காரணம் என்ன?


நிஜாமின் ஐதராபாத் உட்பட பல்வேறு சுதேச சமஸ்தானங்களிலும் அன்று நிலவிய சூழலை நுணுகி ஆராய்ந்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அடிப்படையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் சந்தித்த நெருக்கடியின் விளைவுதான் இது. பிரிட்டிஷ் ஆதிக்க ஆட்சி என்ன கதிக்கு ஆளாகப்போகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியலாயிற்று. தமது இறுதி விடுதலைப் போருக்கு இந்திய மக்கள் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைத் துண்டாடிச் சுக்குநூறாக்குவதற்கு வழிகாணத்துடித்துக்கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.
 
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்த இந்தியப்பகுதியில் மட்டுமல்லாது நாடெங்கிலுமிருந்த சுதேச சமஸ்தானங்களிலிருந்த மக்களும் தமது கோரிக்கைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவுமே பெரும் எண்ணிக்கையில் திரளத்தொடங்கினர். நீண்ட நெடுங்காலமாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களுடன் சுதந்திர இயக்கமும் அதன் பேரெழுச்சியும் பின்னிப்பிணைந்தன. நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கம் குணரீதியான புதிய கட்டத்தில் பிரவேசித்தது. இந்தியாவிலிருந்த நிலப்பிரபுத்துவ மன்னர்கள், நிலப்பிரபுத்துவ சுதேச சமஸ்தானங்களின் இளவரசர்கள் ஆகியோரை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய வேண்டுமென மக்கள் கோரினார்கள்.
 
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து ஆய்ந்துகொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை, மக்களின் பேரெழுச்சியை ஆதரிக்கலாயிற்று.
 
1946-ன் மத்திய வாக்கில், நீல்கிரி, ஜோத்பூர், தெங்கனால், திருவிதாங்கூர்-கொச்சின், ஐதராபாத் போன்ற பல சுதேச சமஸ்தானங்களில் மக்கள்திரளின் கலகம் வெடித்தது. ஐதராபாத் மக்களின் எழுச்சிதான், அவற்றுள் மிகப்பெரியது; கடைசியில் நிகழ்ந்த அந்த எழுச்சி, நீண்டகாலம் நீடித்தது.


மக்களின் இயக்கத்திற்கு எதிரான தீவிர தயாரிப்புகளில் இறங்கினார் ஐதராபாத் நிஜாம். அவரும் அவரது குண்டர் 'பட்டாளமும்' ஆயுதங்களைச் சேமிக்கலாயினர்; ஆயுத இறக்குமதியிலும் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கத்துடன், பிரத்தியேகமாக ரகசிய பேரங்களைத் தொடங்கினார் நிஜாம். நவீன ஆயுதங்களையும் அவற்றுக்கான வெடிபொருட்களையும் பெறுவதற்காகஅமெரிக்கா, போர்த்துகீசியம், செக்கோஸ்லேவிகியா போன்ற பிற நாடுகளையும் அவர் தொடர்பு கொள்ளத்தொடங்கினார். உண்மையில், போர்துகீஸ் காலனியான கோவாவிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பெருமளவு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பாசிச ரசாக்கர்கள் பட்டாளம் வலுவூட்டப்பட்டு மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டது.


நாட்டில் விரவிக்கொண்டிருந்த மதவெறிப் பதற்றத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நிஜாமும் அவரது முஸ்லிம் வகுப்புவெறி குண்டர் பட்டாளமும் செயலூக்கம் பெற்றனர். 'அகதிகள்' எனும் போர்வையில் மதவெறிக் கூட்டத்தாரை வெளியிலிருந்து கொண்டுவரத் தொடங்கினார்கள்; பின்பு மக்களுக்கு எதிராகப் பாயவிருந்த நிஜாமின் ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படலாயினர்.


சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ரகசியமான, தீவிரத் துணையுடன், இந்தியாவிலிருந்து பிரிந்து தனி "நாடாக" (!) தன்னைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு நிஜாமின் ஐதராபாத் தயாரிப்புகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தது.

தெலிங்கானாவில் காட்டு தர்பார்:

நிஜாமின் பாசிச பயங்கரவாதப் பட்டாளத்தினர், ஐதராபாத் சமஸ்தானத்தின் தெலிங்கானா பிரதேசத்தை விசேஷமாகக் குறிவைத்துத் தாக்கலாயினர். மக்களின் எழுச்சியும், கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா மண்டல் (அல்லது பரிஷத்), ஆந்திர மகாசபா ஆகியவற்றால் வழிநடத்தப்பட்ட இயக்கங்களும் இந்தப் பிரதேசத்தில்தான் மிக வலுவாக இருந்தன என்பதுதான் இதற்குக் காரணம்.


பி.சி.ஜோஷியால் வழிநடத்தப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமையும், கட்சியின் ஆந்திர மற்றும் தெலிங்கானா கிளைகளும் பெருமளவில் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்துவதென்று இறுதியில் முடிவெடுத்தன. நிலைமையை முறையாக ஆராய்ந்த பின்னர் மத்திய தலைவர்கள் இந்த முடிவை மேற்கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமையகம் இருந்த பம்பாய்க்குச் சென்ற ரவி நாராயண் ரெட்டி, தெலிங்கானா நிலைமையைத் தலைவர்களுக்கு விளக்கிக்கூறினார்.
நிஜாம் விடுத்த சவாலைச் சந்திக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர ஜனநாயகவாதிகளும் முடிவு செய்தனர். நிஜாமின் ரசாக்கர்களும், அவரது மற்ற படையினரும் மக்களுக்கு எதிராகப் படுபயங்கரமான கொடூரத்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டனர்; ரசாக்கர்களின் தாக்குதலுக்குக் குறிப்பாகத் தெலிங்கானா மாவட்டங்கள் இலக்காயின. ஜன்காவ்ம், சூர்யாபெட் தாலுக்காக்களைச் சேர்ந்த காடிவெண்டி, தேவருப்புலா, பாடசூர்யாபெட் ஆகிய கிராமங்கள் சூரையாடப்பட்டன; தீக்கிரையாகின. ஜனகாவ்ம், சூர்யாபெட் என்றாலே காட்டுமிராண்டித்தனத்தின் கோரத்தாண்டவத்தைக் குறிப்பதாயிற்று. பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து மிகுந்த மூர்க்கத்துடன் தாக்கிய ரசாக்கர்கள், பெருமளவில் காட்டுமிராண்டித்தனமான கற்பழிப்பிலும் ஈடுபடலாயினர்.
 
காடிவெண்டி (அல்லது காடவெண்டி) கிராமத்தில்,1946-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள், நிஜாமின் உள்ளூர் பிரபல கையாளான விஸ்னூரு தேஷ்முக்கின் குண்டர்களுடன் மக்கள் மோதியபோது மோசமான [அடக்குமுறை] சம்பங்கள் அரங்கேற்றப்பட்டன. ஊர்வலமொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்ற சங்கத்தின் இளைய தலைவரான டொட்டி கொமரய்யா (Doddi Komarayya) உட்பட பல தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; கொமரய்யா சுட்டு வீழ்த்தப்பட்டார்.


தெலிங்கானா போராட்டத்தின் முதல் களப்பலியானார் டொட்டி கொமரய்யா. அவரது படுகொலை, தெலிங்கானா மக்களின் போராட்டத்தில் புத்தெழுச்சி ஏற்படக் காரணமாயிற்று. அமரத்துவம் பெற்ற காவியநாயகராக அவர் தோன்றினார். போங்கிர், ராமண்ணாபெட், நல்கொண்டா, ஹூசுர்நகர், பலெமுலா ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணற்றபல கிராமங்கள், தாலுகாக்களில் மக்களின் போராட்டங்கள் காட்டுத்தீ போல் பற்றிப்பரவின. பாத சூர்யாபெட் தான் 1946 நவம்பரில் வெடித்த போராட்டங்களின் மையமாகத் திகழ்ந்தது. மக்களின் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பின் பலத்தை உணர்ந்த போலீஸ், (நிஜாமின்) ராணுவத்தைப் பெருமளவில் கொண்டுவரவேண்டியதாயிற்று. மக்கள் தமது போராட்டத்தில் கட்டைகளையும் கற்களையும்கூட ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிர்ப்பை நிலைநாட்டினர்.


அக்னூர், மச்சிரெட்டிபள்ளி கிராமங்களில் வீரஞ்செறிந்த எதிர்ப்பு நிலைநாட்டப்பட்டது. நிஜாமின் போலீசையும், ராணுவத்தையும் எதிர்த்து அவற்றைத் தடுத்து நிறுத்தினர் மக்கள்.
 
இதைப்போன்ற பிற போராட்டங்களும், ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளும் ஏராளம். நிலைமையைப் பரிசீலித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கொரில்லா யுத்தம் உட்பட மக்களின் முறையான ஆயுதந்தாங்கிய எதிர்ப்புப் போராட்டத்துக்கு வடிகால் ஏற்படுத்தி சீரமைத்து நடத்த முடிவுசெய்தது. மரபார்ந்த மற்றும் நவீன ஆயுதங்களைக்கொண்ட தொண்டர்களின் படைப்பிரிவுகள் பரந்த அளவில் அமைக்கப்படலாயின. முதல்கட்டமாக, தம் கைகளில் சிக்கும் எந்த ஆயுதமாக இருந்தாலும், எந்தப் பொருளாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு நிஜாமின் குண்டர்பட்டாளத்தை அடித்து விரட்டுவதற்கு மக்களுக்கு முறையான பயிற்சி அளித்துத் திரட்டப்பட்டார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆந்திர மகாசபாவும், தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து, 1946 அக்டோபர் 17-ஆம் நாளை அடக்குமுறை எதிர்ப்பு தினமாக அனுஷ்டித்தார்கள். மாணவர்களும் இளைஞர்களும்கூட இந்த இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்றனர். சூர்யாபேட்டிலும் இதர பகுதிகளிலும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சூர்யாபேட் ஒரு ராணுவ முகாமாக மாற்றப்பட்டது. சூர்யாபேட்டைச் சேர்ந்த 200 கிராமங்கள், மக்களின் போராட்டத்திற்குப் பாதுகாப்பு அரணாக மாற்றப்பட்டன. ஐதராபாத், ஓளரங்காபாத், குல்பர்கா, நாண்டெட், வாரங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25,000 ஜவுளி ஆலைத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மின்சாரம், பொதுப்பணித்துறை, தொலைபேசித் துறைகளின் ஊழியர்களும் பிற தொழிலாளர்களும் பணியிடங்களிலிருந்து வெளிநடப்பு செய்தனர்; வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் நீடித்த இயக்கங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடலாயினர். 1946-47ல், (சிங்கரேணி, கொத்தகுடெம் போன்ற பகுதிகளிலிருந்த) நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே, ஜவுளி ஆலை, எம்.எஸ்.கே. மில்ஸ், சிமெண்ட், ஆல்வின் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களும், பிற தொழிலாளர்களும் மக்களின் இயக்கத்தில் பங்குகொண்டனர்.


இந்த மாநிலத்தின் தொழிலாளிவர்க்க இயக்கம், தெலிங்கானாவின் ஆயுதம் தாங்கிய விவசாயிகள் போராட்டத்துக்கு நெருங்கிய ஒத்துழைப்பு நல்கி வந்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆலைத்தொழிலாளர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் தெலிங்கானா விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆயுத சேகரிப்பு, நிதி திரட்டுதல் உட்பட பல்வேறு வழிகளில் உதவி வந்துள்ளனர் எனும் உண்மை பொதுவாக கவனிக்கப்படுவதில்லை. ஐதராபாத் நகரிலும், மாநில கட்சி அமைப்பிலுமிருந்த ராஜ்பகதூர் கவுர், கே.எல். மகேந்திரா, ஜாவத் ராஜ்வி போன்ற தலைவர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டவர்களில் அடங்குவர். தெலிங்கானா இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்பதன் மூலமாகவும் அதற்கு அவர்கள் உதவினர். போராட்டம் நடத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தேவையான பெரும் தலைமறைவு வலைப்பின்னலை உருவாக்குவதற்கு அவர்கள் உதவினார்கள்.


மற்றவர்களுடன் இணைந்து, அந்த இயக்கத்தின் தலைமறைவு நுட்பப்பிரிவின் அமைப்பாளராகச் செயல்பட்டார் கே.எல்.மகேந்திரா. 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் தொழிற்சங்க அலுவலகங்களைத் தாக்கிய ரசாக்கர் போலீஸ், நூற்றுக்கணக்கான தலைவர்களையும் தொண்டர்களையும் கைதுசெய்தது.


இதற்குப் பின்னர் சில காலத்திலேயே ஆந்திர மகாசபையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் தடை செய்வதாக நிஜாம் அறிவித்தார். தெலிங்கானா போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும், ஆந்திர மகாசபா, பிரஜா மண்டல் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் மீதும் அவர் தாக்குதல் தொடுக்கலானார். பெரும் எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் கைதுசெய்யப்படலாயினர். நிஜாம் முன்மொழிந்த "சீர்திருத்த" ஆலோசனைகளை காங்கிரஸ் நிராகரித்திருந்தது.

இந்திய சுதந்திரமும், சமஸ்தானங்களில் போராட்டமும்:

1946-47, சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தீவிரமடைந்த காலம். அதே நேரத்தில், இந்தியாவை இருகூறாக மட்டுமின்றி சுக்குநூறாக்குவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். வகுப்புவெறி மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தூண்டுதலால் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மத்தியில் வெடித்த வகுப்புமோதலின் காரணமாக வரலாற்றில் மிகவும் மோசமான இனப்படுகொலை நடந்த காலமும் அதுதான்.
 
1946-இன் மத்தியில் பண்டிட் ஜவகர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. கடினமான அதிகாரமாற்றத்தை அது கண்காணித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளித்தது. மதரீதியில் இந்தியா பிரிக்கப்படுவதையும் இரத்தக்களரி ஏற்படுத்துகின்ற, காட்டுமிராண்டித்தனமான மதவெறிப் படுகொலைகளையும் அது எதிர்த்தது.
 
அறிக்கைகள், கட்டுரைகள் பலவற்றின் வாயிலாக பி.சி.ஜோஷியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைமையும், கனியவிருந்த இந்திய சுதந்திரத்தை1947-இன் முன்பகுதியிலேயே வரவேற்றார்கள். விடுதலையை ஸ்திரப்படுத்துவதற்காகப் புதிய அரசு எடுக்கின்ற அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு நல்க உறுதிபூண்டது.


இத்தகைய சூழலில்தான், சில பெரிய சமஸ்தானங்களின் தேசவிரோத, இந்திய விரோத சதி தெளிவாகத் தெரியலாயிற்று. ஐதராபாத் நிஜாமும், இந்து-முஸ்லிம் என்ற வேறுபாடின்றி, வேறுசில பெரிய சமஸ்தானாதிபதிகளும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் தாம் இந்தியாவுடன் இணையப்போவதில்லை என்று பிரகடனம் செய்தார்கள். தாம் "சுதந்திரநாடாக" தொடர்ந்து இருக்கப்போவதாக சிலரும், பாகிஸ்தானுடன் இணையப்போவதாக சிலரும் அறிவித்தார்கள். 1947 ஆகஸ்ட் 15-க்கு முன்னதாகவே, பிரிட்டிஷாரின் ரகசிய ஒத்துழைப்புடன் தனது சொந்த "விடுதலையை"ப் பிரகடனம் செய்தது நிஜாமின் ஐதராபாத்.


1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியாவின் சுதந்திரப் பிரகடனத்தை மனதார வாழ்த்தி வரவேற்றனர் பி.சி.ஜோஷியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும். நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து, சுதேச சமஸ்தானங்களில் நடைபெற்ற இயக்கங்கள் குணரீதியில் புதிய கட்டத்தை எட்டின. அவை எவ்வாறு இந்தியாவுடன் இணைந்து இரண்டறக் கலப்பது என்பதுதான் அன்றைய பிரதான கேள்வி. இந்தத் திசைவழியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது அவசியமென வலியுறுத்தினார் பி.சி.ஜோஷி. இதர ஜனநாயக சக்திகள், நிலப்பிரபுத்துவ-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்திகளின் ஒத்துழைப்புடன், ஐதராபாத், தெலிங்கானா உட்பட சமஸ்தானங்களில்,மக்களின் பேரெழுச்சி இயக்கங்களைத் தீவிரப்படுத்தியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்தியாவுடன் ஒருங்கிணைவது என்னும் கோரிக்கையை வலியுறுத்தி நிஜாமுக்கு எதிரான இயக்கம், குறிப்பாகத் தெலிங்கானாவில் முடுக்கிவிடப்பட்டது.


சுதேச சமஸ்தானங்களில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் போராட்டங்களை பி.சி.ஜோஷி தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் வழிநடத்தியது; அத்தகு போராட்டங்களில் பங்கேற்றது என்பது நெஞ்சுயர்த்தும் பெருமைக்குரிய விஷயம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். இதற்கும் நாட்டின் பிறபகுதிகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தியதற்கும் காரணமானவர் பி.சி.ஜோஷியே. தேசிய முன்னணி எனும் கொள்கையை உறுதிபட ஆதரித்தவரும், உருவாக்கியவரும் பி.சி.ஜோஷிதான்.


இந்தக் கருத்தமைவுடன் அவரது செயல்பாடுகள் ஒத்திசைந்திருந்தன. சுதேச சமஸ்தானங்களில் (எடுத்துக்காட்டாக பிரஜா மண்டல்கள் அல்லது பரிஷத்துகள் அல்லது சபைகள்) உள்ளிட்ட அனைத்து தேசிய சக்திகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஓன்றுபடுதலின் அவசியத்தைக் குறிப்பாக அவர் வலியுறுத்தினார்.
 
இதன் விளைவாக, ஐதராபாத்தின் முக்கியமான கட்டடங்கள் மற்றும் இடங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான முழுமுதல் முயற்சியை மேற்கொண்டது கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்திய விடுதலையைக் கொண்டாடும் வகையிலும், இந்தியாவுடன் ஐதராபாத் சமஸ்தானத்தை இணைக்க வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபா, அகில ஐதராபாத் தொழிற்சங்க காங்கிரஸ், அகில ஐதராபாத் மாணவர் சங்கம், இன்னபிற அமைப்புகள், தொலைதூர கிராமங்கள், நகரங்கள், சதுக்கங்களில் தேசியக் கொடியைப் பட்டொளிவீசிப் பறக்கச்செய்தனர்; சத்தியாக்கிரகப் போராட்டங்களில் இறங்கினர்; பேரணிகளில் பங்கேற்றனர்; பொதுக்கூட்டங்களை நடத்தினர்.


கிராமம் கிராமமாக நிஜாமின் பதாகை அகற்றப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஐதராபாத் உள்பட பல சுதேச சமஸ்தானங்களில் தேசியக்கொடியை ஏற்றுவதென்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! அந்த அளவுக்கு சுதேச சமஸ்தானாதிபதிகளுக்கு தேசபக்தியும் தேசவுணர்வும் பெருக்கெடுத்தோடியிருந்திருக்கிறது! எல்லா சமஸ்தான ஆட்சியாளர்களுமே மூவர்ணக்கொடியையும், இந்தியாவுடன் இணைவதையும் எதிர்த்தார்கள் என்று சொல்லமுடியாதுதான்.

தமது சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில், தெலிங்கானாவிலும், ஐதராபாத் மாநிலத்திலும் பல இடங்களில் நிஜாமின் நிர்வாகஸ்தலங்களைக் கைப்பற்றிய மக்கள், அரசு தஸ்தாவேஜுகளைக் கைப்பற்றித் தம்வசம்கொண்டனர்; விவசாயிகளின் கடன் மற்றும் நிலுவைகளுக்கான சான்றேடுகள் அல்லது ஜோடிக்கப்பட்ட சான்றேடுகள் உள்ளிட்ட மக்களைக் கொடுமையில் ஆழ்த்தும் பல தஸ்தாவேஜுகளைத் தீயிட்டுக்கொளுத்தினர். அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்ற சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாகும்.


இந்தியாவுடன் இணைய மறுக்கும் தன் நிலையிலிருந்து மக்களின் நிர்ப்பந்தத்தால் பின்வாங்கிய அல்லது அப்படிப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்திய ஐதராபாத் நிஜாம், 1947 நவம்பரில் இந்திய அரசுடன், [காலக்கெடு நிர்ணயிக்கும்] "உறைநிலை ஒப்பந்தம்" (standstill agreement)ஒன்றை செய்துகொண்டார். சந்தேகத்திற்கிடமின்றி, நிஜாமிற்கு எதிரான சக்திகளுக்கு இது ஓரளவு வெற்றியைத் தந்தபோதிலும், நிஜாம் இதனை துஷ்பிரயோகம் செய்யத்தொடங்கினார். இந்திய அரசின் ஊசலாட்டமான, தீர்க்கமற்ற கொள்கைகளும் இதற்குக் காரணமாயிற்று.


இந்த ஒப்பந்தத்தின் காலவரம்பு ஓராண்டு. இதன்படி, வெளிநாடுகளில் தூதரகங்களை அமைத்தல், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லுதல் போன்ற தனது திட்டங்களை நிஜாம் கைவிடவேண்டும். ஆனால் அந்த உறைநிலை ஒப்பந்தத்தில் பல ஓட்டைகள் இருந்தன. ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் வகையில் தனது நிலைகளை ஸ்திரப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார் நிஜாம். ஏதோ சுயேட்சையான ராணுவத்தின் துருப்புகளைப் போல் செயல்படும்வகையில் ரசாக்கர் படைகளின் பொறுப்பு பாசிஸ்ட் காசிம் ரிஜ்விக்கு வழங்கப்பட்டது. பெருமளவுக்கு ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்படலாயின. மஜ்லிகளின் தலைவரான ரிஜ்வி, சமஸ்தானத்தின் ஆயுதப்படைகளுக்குத் 'துணையாக' தனது படைகளை நிலைநிறுத்தினார்.
 
நாட்டில் நிலவிய வகுப்புப் பதட்டநிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை 'இறக்குமதி' செய்ய சதித்திட்டம் தீட்டினார் நிஜாம். மக்களைக் கொன்றுகுவிக்கவும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும், துணைப்படைகளின் ஒரு பகுதியாக அவர்கள் ஏவப்பட்டனர். மதவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தன. சாக்ஷாத் பாசிச கோஷங்கள் போன்று, இந்துக்களை அடித்து விரட்டவும், முஸ்லிம்களின் ஜனத்தொகையைப் பெருக்கவும் அழைப்பு விடப்பட்டது.
 
தனது சமஸ்தானத்தை "முஸ்லிம்களின் சொர்க்கம்" என விளம்பரப்படுத்திய நிஜாம், ஐதராபாத்தை, "தென்னகத்து பாகிஸ்தானாக" ஆக்கத் தான் கனவு காண்பதாகவும்கூட கூறினார்!


ஆர்.எஸ்.எஸ்.-இன் வகுப்புவெறிப் பிரச்சாரத்தைத் தனது சதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் நிஜாம். ஆனால், மக்கள் இந்த சதிகளுக்கு இரையாகவில்லை.

தெலிங்கானா போராட்டத்தில் புதிய கட்டம்:

சுதந்திரத்திற்குப் பின்னைய காலகட்டத்தில், குறிப்பாக, ஐதராபாத்துடன் உறைநிலை ஒப்பந்தம் கையெழுத்தானபின்னர், தெலிங்கானா ஆயுதப்போராட்டத்தில், பொதுவாக ஐதராபாத் மாநிலம் முழுவதிலும் நடைபெற்ற போராட்டத்தில் புதியதோர் நிலை தோன்றியது.
 
மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு நிஜாம் தயாராகிக்கொண்டிருந்ததும், தமது எதிர்த்தாக்குதலை விரிந்துபரந்த மக்கள் பகுதியினர் தீவிரப்படுத்தியதும் வெள்ளிடைமலை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆந்திர மகாசபா போன்ற பல்வேறு நிஜாம்-எதிர்ப்பு சக்திகள் இன்னும் சிறந்த முறையில் தம் யுத்ததை நடத்துவதற்கு அமைப்புரீதியாகத் தம்மை தயார்செய்துகொண்டிருந்தன.


அன்றைய சூழலில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை கவனித்தது. தனது உத்தியை மாற்றிக்கொண்டு, தெலிங்கானாவிலும், ஐதராபாத்திலும் நடந்த போராட்டத்தை உயர்நிலைகளுக்குக் கொண்டுசெல்ல அது முடிவு செய்தது. ஆந்திராவிலும் தெலிங்கானாவிலும் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் நிலவிய சூழலை நன்கு கணித்தன. பெரிய அளவில் கொரில்லா யுத்தத்தை நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது. தெலிங்கானா கட்சிக்கிளையுடன் ஆந்திர மாகாணக்குழு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. நடைமுறையில் தெலிங்கானா போராட்டத்திற்கு உதவும் தளமாக ஆந்திரப்பகுதி விளங்கியது; எண்ணற்ற முன்னணித் தொண்டர்கள் ஆந்திரத்திலிருந்து தெலிங்கானாவுக்கு அனுப்பப்பட்டனர். அதுபோன்றே, எல்லைக்கு அப்பால், மகாராஷ்டிர மாகாணக்குழுவின் உதவியை மரத்வாடா கிளை பெற்றது.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தோழமை அமைப்புகளும் விரிந்துபரந்த கொரில்லா யுத்தத்திற்கு எழுச்சிபூர்வமான அறைகூவல்விடுத்தன. இந்த விஷயத்தில் கட்சி தனிமைப்பட்டுவிடவில்லை. ஆந்திர மகாசபாவினரும், உள்ளூர் காங்கிரசாரும்கூட இதில் பங்கேற்றனர். விவசாயிகளின் பேரெழுச்சியாம் கொரில்லா யுத்தம் காட்டுத்தீபோல் பரவியது.


ரகசியமாகச் செயல்பட்ட சில ஆயுதந்தாங்கிய குழுவினரின் தனிநபர்சார்ந்த அல்லது தனிமைப்படுத்தப்பட்ட ஆயுதத்தாக்குதல் நடவடிக்கையாக இந்த கொரில்லா யுத்தல் இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் இன்னபிறராலும் வழிநடத்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்தமான பகிரங்கக் கலகமும் பேரெழுச்சியுமாகும்.


காலாவதியான, மரபார்ந்த ஆயுதங்கள் [இந்த யுத்தத்திற்குப்] போதுமானவையல்ல. பெரிய அளவில், முறையான, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதக்குழுக்களின் வலைப்பின்னல் இப்போது அமைக்கப்படலாயிற்று. முன்னர் நடைபெற்ற போராட்டமோ பிரதானமாகப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக, தற்காப்பு அடிப்படையில் நடைபெற்றது. உண்மையில், நிஜாம் ஆட்சிக்கு எதிரான அரசியல் யுத்தமாக அது விரைந்து வளர்ந்துகொண்டிருந்தது. ஐதராபாத் இந்தியாவுடன் இணையவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கான போராட்டமாக அது பரிணமித்திருந்தது. அது அரசியல் விடுதலைக்கான போராட்டமாகவும், இதன் விளைவாக நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பினையே தகர்த்தெறியும் போராட்டமாகவும் ஆகியிருந்தது.
 
ஆந்திர மகாசபா புதிய பகுதிகளுக்குப் பரவியது. கொரில்லா படைப்பிரிவுகள் இப்போது வெளிப்படையாகச் செயல்படலாயின; நீரில் நீந்தும் மீன்களைப்போன்று அவை இலகுவாக இயங்கலாயின. மக்கள் இயக்கங்களும், விடுதலைப் படைப்பிரிவுகளும் பெரும் நிலப்பகுதிகளை விடுவித்து, தமது செல்வாக்கை நிலைநிறுத்தத் தொடங்கின. ஆட்சியிலிருந்த காங்கிரசும், நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கத் தொடங்கியது.


குறிப்பாக, நல்லகொண்டா, வாரங்கல் மாவட்டங்களில் ஆயுதப்போராட்டம் வலுவுடன் இருந்தது. ஏறத்தாழ 2500 கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட முப்பது லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும் அது. விடுவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை பின்பு 4000 ஆக உயர்ந்தது. சுமார் பத்து லட்சம் ஏக்கர் நிலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. வாரங்கல், நல்கொண்டா, மேடக், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் விரவிக்கிடந்தன இந்த கிராமங்கள். லட்சக்கணக்கான மக்கள் இந்தப் போரில் பங்குகொண்டார்கள். க்ஷணநேர அழைப்பில், ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டும் வல்லமை காணப்பட்டது. கிட்டத்தட்ட 4000 கொரில்லா போர் வீரர்கள், 15,000 முதல் 20,000 கிராமப் பாதுகாப்புத் தொண்டர்கள் மற்றும் இதர ஊழியர்கள் திரட்டப்பட்டனர். நவீன ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன. மிகப்பெருமளவில் நிதி குவியத் தொடங்கியது. 


இந்த மக்கள் பேரேழுச்சியின் விளைவாக நிஜாமின் நிர்வாகம் ஸ்தம்பித்துபோனது. அதிகாரிகளும், நிலப்பிரபுக்களும், இடைத்தட்டு நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையாளர்களும் நகர்ப்புறங்களுக்கும், ஐதராபாத் நகரத்திற்கு அல்லது இந்திய யூனியன் பிரதேசத்திற்கும் ஓட்டமெடுக்கலாயினர்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் அமைந்த மக்கள் நிர்வாகங்கள், எண்ணற்ற, வரலாறுகாணாத, முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கின. போதுமான இடம் இன்மையால் இதுகுறித்த விபரங்களை இங்கு கூறவில்லை. தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உதவி கிட்டும் என இன்னும் நம்பிக்கொண்டிருந்தார் நிஜாம்.

ஐதராபாத்தில் இந்திய துருப்புகள்; நிஜாம் சரண்:

நிஜாமை சரணடையச் செய்ய தனது துருப்புக்களை ஒருவழியாக இறுதியில் இந்திய யூனியன் அரசு ஐதடாபாத் மாநிலத்துக்குள் அனுப்பவேண்டியதாயிற்று. எதாவதொரு நொண்டிச்சாக்கை சொல்லிக்கொண்டு இந்தியாவுடன் இணைவதற்கான இறுதி முடிவை ஒத்திபோட்டுக்கொண்டே இருந்த நிஜாம், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தார். உறைநிலை ஒப்பந்தத்தின் பல அம்சங்களை அவர் மீறிக்கொண்டிருந்தார்.


1948 செப்டம்பர் 13-ஆம் நாள் நிஜாமின் ஐதராபாத்துக்குள் நுழைந்தது இந்திய ராணுவம். "ராணுவம் மற்றும் போலீஸ் நடவடிக்கை"க்கு ஈடுகட்டமுடியாமல், நிஜாமின் நிர்வாகமும், படைகளும் திணறின; மூன்றே நாட்களுக்குள் அவர் சரணடைந்தார்; அவரது ராணுவமும் நிர்வாகமும் விரைந்து வீழத்தொடங்கின. ரசாக்கர் படைகள் சிதறுண்டு மாயமாகின. காசிம் ரஜ்வி கைதுசெய்யப்பட்டார். நிஜாமின் அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
 
புதிய சூழலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்:

நிஜாம் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்குப் பின்னர், ஐதராபாத்திலும் தெலிங்கானாவிலும் புதியதோர் அரசியல் மற்றும் சமூக நிலை தோன்றியது. எதேச்சாதிகார நிலப்பிரபுத்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது; நிலப்பிரபுத்துவ சமூக-பொருளாதார அமைப்பு பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியது. நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் பிற நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க, ஜனநாயக அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.


ஜனநாயக திசைவழியில் முன்னேறுவதற்கான புதிய பாதையும் வாய்ப்புகளும் தோன்றின. இந்திய ராணுவத்தின் வருகையைப் பரவலாக மக்கள் திரள் வரவேற்றது. ஆயுதப்போராட்டத்தைத் தொடர்வதற்கான காரணமோ அடிப்படையோ எதுவும் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. விவசாயிகளின் திரள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. ஏழைவிவசாயிகள், நிலமற்றவர்களில் மிகச்சிறிய பகுதியினர் மட்டுமே இதனைத்தொடர்ந்தனர்; அதுவும்கூட எங்கும் விரவிக்கிடக்கவில்லை.

ஆயுதப் போராட்டம் தனிமைப்பட்டது:

இதுபோன்ற நிலையில்தான் பி.சி.ஜோஷியின் வழிகாட்டுதல் இல்லாமல் போனது. இந்திய சுதந்திரத்தை வரவேற்றிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வெகு விரைவிலேயே தடம் மாறி, தனது கொள்கைவழியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. கட்சிக்குள்ளேயே ஜோஷிமீதான தாக்குதல் உக்கிரமடைந்தது; அவர் தனிமைப்படுத்தப்பட்டார்; நடைமுறையில், 1947 டிசம்பரிலேயே தலைமைப்பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 1948 பிப்ரவரியில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சிக் காங்கிரசில் அதிகாரபூர்வமாக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார் பி.டி.ரணதிவே.


இதன் விளைவாகக் கட்சிக்கும், வெகுஜன இயக்கத்திற்கும், தெலிங்கானா ஆயுதப்போராட்டத்திற்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியா சுதந்திர நாடாகிவிட்டது என்பதை அங்கீகரிக்க மறுத்தது கட்சி; இந்தப் புரிதலின்மை அதற்கேயுரிய விளைவுகளை ஏற்படுத்தியது.


1948 செப்டம்பரில் இந்தியத் துருப்புகள் நுழைந்தபின் தெலிங்கானா ஆயுதப் போராட்டத்தில் அடிப்படையான மாற்றத்தைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அந்தப் போராட்டத்தின் பயன்பாடு முடிந்துவிட்டது. ஆனால், இந்தியத் துருப்புகள் நுழைந்ததை, ஏகாதிபத்திய அடிவருடிகள் மற்றும் எதிர்ப்புரட்சி சக்திகளின் ராணுவப் பிரவேசமாகக் கணித்தது பி.டி.ரணதிவே (BTR) தலைமை; அதன் காரணமாக அதனை எதிர்த்துப் போராடவும் முடிவெடுத்தது!


உண்மையில், அந்தக் குறிப்பிட்ட சூழலில், அதாவது 1948 செப்டம்பர் 13-ஆம் நாள் ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டிருக்கவேண்டுமென்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்திருந்தது. இதன் பின்னர் காங்கிரஸ் அரசின்மீது நிர்ப்பந்தத்தைக் கொண்டுவரும் வகையில் அமைதிவழிப் போராட்டங்களை மேற்கொள்வதன்பால் கட்சி தன் கவனத்தைத் திருப்பியிருக்க வேண்டும். ஆனால் குறுகிய தத்துவார்த்தப் பார்வை, ஆயுதப்போர் தொடர்வதை மட்டுமின்றி, அதைத் தீவிரமாக்கவேண்டியதையும் நியாயப்படுத்தியது. மேலும், நேருவின் அரசாங்கமானது, ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் ஏவல் அமைப்பு என்று கணிக்கச் செய்த அந்த குறுகிய பார்வை, இதன் காரணமாக, நிஜாம் அரசின்பால் மேற்கொண்ட அதே அணுகுமுறையே இதிலும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு உந்தித் தள்ளியது!


இதன் விளைவாக, மக்களும், சம்பந்தப்பட்ட பிற அமைப்புகளும் ஆயுதப்போராட்டத்தை விலக்கிக்கொள்ளத் தொடங்கிய அதே நேரம் கம்யூனிஸ்ட் கட்சி அதைப்பற்றிப்பிடித்து தொடர்ந்தது. இதனால், அதுகாறும் கிராமங்களில், "மக்கள் மத்தியில்" இயங்கிக்கொண்டிருந்த கட்சி, "அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு" இடம்பெயரவேண்டியதாயிற்று. இவ்வாறாக, ஆயுதப் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டது; ராணுவப்பிரிவுகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அது இறுதியில் நொறுக்கப்பட்டது. அதற்கு அனுதாபம் காட்டிய மக்கள்கூட உதவிக்கரம் நீட்டமுடியாத நிலை ஏற்பட்டது. சராசரி மக்களில் பெரும்பகுதியினர் அதிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டனர். மக்களின் போராட்டமாக இருந்த நிலையிலிருந்து, கட்சியின் போராட்டமாகவும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் உயிரைக்காத்துக் கொள்வதற்கான போராட்டமாகவும் அது சுருங்கிப்போனது. இதன் காரணமாக அது தோல்வியைத் தழுவியே தீரவேண்டியதாயிற்று.


இருப்பினும், அன்றாட நடைமுறை வாழ்வுக்கான கோரிக்கைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதை மக்கள் எதிர்க்கவில்லை.


இதுபோன்றதோர் மோசமான நிலை ஏற்படுவதிலிருந்து (1946-ஆம் வருடத்திய) புகழ்மிக்க தெபாகா இயக்கத்தைக் காப்பற்றியவர் பி.சி.ஜோஷி என்பது வரலாற்றில் அதிகம் அறியப்படாத உண்மையாகும். பிற ஆயுதப்போராட்டங்களை வழிநடத்திய பி.சி.ஜோஷி, அவற்றுக்கு உரிய திசைவழயையும் காட்டினார் எனில், அமைதிப்போராட்டங்களைப்பற்றி சொல்லவேண்டியதேயில்லை.


தெபாகா இயக்கத்தின் ஒருபகுதியினரும்கூட, பெருமளவிலான ஆயுதப்போராட்டத்தை நடத்தி, "கடைசிமூச்சு வரை போராடிப்பார்த்துவிடவேண்டும்" என்று விரும்பினார்கள். பி.சி.ஜோஷியும், பிற தீர்க்கமான பார்வைகொண்ட சக்திகளும் தலையிட்டு, அந்த வழிமுறையைப் பின்பற்றுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நல்வழிப்படுத்தினர். தற்காப்புக்காக சிலசமயம் ஆயுதங்களைப் பயன்படுத்தியும்கூட, வெகுஜனப் போராட்டங்களின் மூலம் தெபாகா இயக்கம் ஏற்கனவே கணிசமாக சாதித்திருந்தது. ஆனால் அதை முற்றும் முழுவதுமாக ஆயுதப் போராட்டமாக நடத்தியிருந்தால், அது அழிவை சந்தித்திருக்கும். குறிப்பாக அந்த இயக்கம் நடந்த பகுதிகளில், இந்த விஷயம் குறித்த உள்கட்சி விவாதம் நடைபெற்றது.


1948-இல் நிலவிய இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் தலைமைப்பொறுப்பில் பி.சி.ஜோஷி இல்லாமல் போனது எத்தகைய வேதனையளிக்கும் விஷயம் பாருங்கள்! அவரது தலைமை தொடர்ந்திருந்தால், அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும்வகையில், வெகுஜன மற்றும் கட்சி உட்பட இயக்கத்தின் வலிமை பாதுகாக்கப்பட்டிருக்கும். தெலிங்கானா போராட்டத்தின் வெற்றிகள் நாசத்தைச் சந்தித்ததற்குப் பதிலாக இன்னும் அதிக வெற்றிகளைக்குவித்திருக்கும்.


1952-இல் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேலதிகமான வெற்றிதனைப் பெற அது வழிவகுத்திருக்கும். நன்கு சிந்தித்து செயல்படுத்தக்கூடிய மார்க்சீய கொள்கையின் அவசியத்தைத் தெலிங்கானா சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டின. 1947-ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் தலைமைப் பொறுப்பிலிருந்து தடாலடியாக நீக்கப்படாமல், கட்சியின் பொதுச்செயலாளராக பி.சி.ஜோஷி தொடர்ந்திருப்பாரேயானால் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பது உண்மையல்லவா?

தமிழில்: விதுரன்

P.C.JOSHI/ANIL RAJIMWALE/MAINSTREAM WEEKLY

Read more...

Monday, May 28, 2012

நாடாளுமன்ற அமைப்புகளும் கம்யூனிஸ்டுகளும் மார்க்சீய சிற்பிகள் காட்டிய வழி என்ன?



அனில் ரஜிம்வாலே



(பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்ற அதிதீவிர இடதுசாரிகளின் கூக்குரல் ஒருபுறம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருமே ஊழல்பேர்வழிகள்; நாடாளத் தகுதியற்றவர்கள் எனும் அன்னா ஹசாரேக்களின் அவலக்குரல் மறுபுறம்; நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பதே தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துப் பெருக்கிக்கொள்ளத்தான் என்ற எண்ணம்கொண்ட சுயநல சக்திகள் இன்னொருபுறம்! நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது பல்முனைத் தாக்குதல் வருகின்றபோது பிரதான இடதுசாரிக் கட்சிகள் கொஞ்சம் அடக்கி வாசித்துவிடுகின்ற அவலமும் தொடர்கிறது. குறிப்பாக இதுபோன்ற சிக்கலான சந்தர்ப்பங்களில், கம்யூனிச இயக்கத்தின் சிற்பிகள் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் ஆகியோரின் மூல நூல்கள் என்றுமே சரியான வழிகாட்டும் ஒளிவிளக்குகள் என்பதை மீண்டும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது தோழர் அனில் ரஜிம்வாலே அவர்களின் இக்கட்டுரை. 'மெயின்ஸ்ட்ரீம்' (Mainstream) ஆங்கில வார இதழில் 'நாடாளுமன்ற அமைப்புகளைப் பயனுறக் கையாளுதல் குறித்து மார்க்சும் ஏங்கல்சும்' (Marx and Engels on the Use of Parliamenrary Institutions) என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே 'சஞ்சிகை' நண்பர்களுக்காகத் தரப்படுகிறது. தமிழில்: விதுரன்)

"வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கின்ற ஜனநாயகத்தை வென்றெடுப்பது போர்க்குணமிக்கப் பாட்டாளிவர்க்கத்தின் முழுமுதற்கடமைகளில் ஒன்று என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஏற்கனவே பிரகடனம் செய்துள்ளது. " (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்னும் நூலுக்கு 1895-ல் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரை. 1973-ல் மாஸ்கோவில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலின் முதற்பகுதியில் 195-ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.)


வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான போராட்டத்தின்பால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதுபற்றி ஏங்கல்ஸ் கூறிய வார்த்தைகள் இவை. வயதுவந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை பெறுவதற்காகப் போராடுவதை மட்டுமல்லாமல், அந்த வாக்குரிமையைக் கைக்கொண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதையும் ஆட்சியைக் கைப்பற்றுவதையும் கூட அவர் ஆதரித்து நின்றார் என்பதை இந்தப் பத்தி முழுவதிலும் அவர் எடுதுக்காட்டுகிறார். பொதுவாக ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தைப்பற்றியும் குறிப்பாக ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத்தைப்பற்றியும் அதில் விவாதிக்கிறார். கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புதல், பாட்டாளிவர்க்கக் கட்சியின் செயல்பாடு ஆகிய இரண்டிலும் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும் என்கிற நிலைபாட்டை மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருமே கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும், வேறு நூல்களிலும் பல சந்தர்ப்பங்களில் இதனை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். வெளிப்படையாகச் செயல்படுவது என்பது கம்யூனிஸ்ட் லீீக்கை அமைக்கும்போது வரித்துக்கொண்ட முன் நிபந்தனைகளில் ஒன்றாகும். தடை எனும் நிலை திணிக்கப்படும்போதுதான் புரட்சியாளர்கள் ரகசியமாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.


அதே நேரத்தில், முழுமையான ஜனநாயக மற்றும் தேர்தல் உரிமைகளுக்காகப் போராடுதல் என்கிற கடமையை மார்க்சும் ஏங்கல்சும் தொடர்ந்து செய்துவந்தனர்; இது, சார்ட்டிஸ்ட் இயக்கம் குறித்தும், மற்ற பிற விஷயங்கள் குறித்தும் அவ்ர்கள் எழுதியவற்றிலிருந்து புலனாகிறது.


மார்க்ஸ்-ஏங்கல்ஸ் குறித்த தவறான சித்திரம்:


இதனைத் தொடர்ந்து வந்த தொழிலாளர் இயக்க வரலாற்றில், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் பற்றிய தவறான, பிழைமிகு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் தவறான சித்திரம் தீட்டப்பட்டதற்கு அவர்களின் எதிரிகளும் ஆதரவாளர்களுமே பொறுப்பாகும். வன்முறைவழிப் புரட்சிக்கு இட்டுச்செல்கின்ற வன்முறைசார் வர்க்கப்போராட்டங்களை அவர்கள் ஆதரித்ததாகச் சித்தரிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் என்றாலே மோசடி எனவும், அதனால்தான் அந்தத் தேர்தல் முறையையே புரட்சியாளர்கள் மார்க்சும் ஏங்கல்சும் எதிர்த்தது போன்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் என்பதே மோசடி-பம்மாத்து என்பதால், 'பலாத்காரம்' இன்றிப் பாட்டாளிவர்க்கம் அதிகாரத்துக்கு வரமுடியாது எனும் பிரச்சாரத்தை அதிதீவிர 'இடதுசாரிகளும்', மாவோயிஸ்டுகளும், பல பிரிவுகளைச் சார்ந்த அராஜகவாதிகளும் கட்டவிழ்த்துவிட்டார்கள்.


இவையெல்லாம், மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் என்றும் புனைந்து கூறப்பட்டன. இந்தக் காரணங்களால்தான் அவர்கள் 'புரட்சியாளர்களாக'க் கருதப்பட்டுவருவதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது!


புரட்சிவழியில் பயணம் மேற்கொண்ட அந்த மாபெரும் தத்துவாசிரியர்கள் குறித்துப் பன்னெடுங்காலமாக இத்தகைய தவறான தோற்றம் உருவாக்கபட்டது. இது முற்றிலும் பிழையான சித்திரமாகும்.


அமைதிபூர்வமான மாற்றம்பற்றி மார்க்ஸ்-ஏங்கல்ஸ்:


அமைதி வழியில் 'சோஷலிசத்திற்கு' மாறிச்செல்லுதலை பல சந்தர்ப்பங்களில் ஆதரித்த மார்க்சும் ஏங்கல்சும் அத்தகைய மாற்றம் சாத்தியமே என்றும் கண்டுணர்ந்தார்கள். இங்கிலாந்து, ஹாலந்து மற்றும் பெல்ஜியத்தில் அமைதி வழியில் புரட்சியின் சாத்தியப்பாடு குறித்து மார்க்ஸ் எழுதியது பிரசித்தம். ஜெர்மனி, ரஷ்யா போன்ற பிற பல நாடுகளிலும் தமது வாழ்நாளிலேயே அமைதிவழி மாற்றம் குறித்து அவரும் ஏங்கல்சும் ஆய்வு மேற்கொண்டார்கள்.


அனைவருக்கும் வாக்குரிமை-தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரம்:


வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது பாட்டாளிகளின் போராட்டத்தில் முற்றிலும் புதியதோர் வழிமுறை என்றும், அதைக் கையாள்வதன்மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவது மட்டுமல்லாமல், சோஷலிசத்தை எட்டுவதற்கும் வழிவகுக்கின்ற வல்லமை கொண்டது அது என்றும் ஏங்கல்ஸ் கருதினார்.


பிரான்சில் வர்க்கப்போராட்டங்கள் என்னும் மார்க்சின் நூலுக்கு (1895) எழுதிய முன்னுரையில், 1866-ல் தம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை எனும் முறையை ஜெர்மன் தொழிலாளர்கள் திறமையாகக் கையாண்டதன் விளைவாக, ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சி (SDP) வியத்தகு வளர்ச்சி கண்டது. அந்தக் கட்சி, தேர்தலில் பெற்ற வாக்குகளை நோக்கும்போது இது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும்: 1871-ல் 1,02,000 வாக்குகள் பெற்ற அந்தக் கட்சி, 1874-ல் 3, 52,000 வாக்குகளையும், 1877-ல் 4, 93,000 வாக்குகளையும் பெற்றது.1878-ஆம் ஆண்டு ஜெர்மனியில் சோஷலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி அமைப்புகளும், தொழிலாளர் வெகுஜன அமைப்புகளும், தடை செய்யப்பட்டன; தொழிலாளர்களின் பத்திரிகைகள் பறிமுதலுக்காளாயின. வெகுதிரள் தொழிலாளர் இயக்கத்திடமிருந்து வந்த நிர்ப்பந்தத்தின் விளைவாக இந்த்ச் சட்டம், 1890-ல் திரும்பப் பெறப்பட்டது.1881-ல் ஏற்பட்ட பின்னடவுக்குப் பின்னால், இந்தச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், சமூக ஜனநாயகக் கட்சி, வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட்டது. 1884 தேர்தலில் அது 5, 50,000 வாக்குகளைப்பெற்றது; 1887-ல் இது 7, 63,000 வாக்குகளாகவும், 1890-ல் 14, 27,000 வாக்குகளாகவும் உயர்ந்தது. ஏங்க்ல்ஸ் வாழ்ந்த காலத்தில் (அவர், 1895-ஆம் ஆண்டு மறைந்தார்)அந்தக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17, 87,000 என்ற நிலையை எட்டியது; இது பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் கால்வாசிக்கும் அதிகமாகும். ஜெர்மனியில் மிகவும் பலம்பெற்ற கட்சியாக சமூக ஜனநாயகக் கட்சி உருப்பெற்றது. 1898-ல் அது பெற்ற வாக்குகள், பதிவான மொத்த வாக்குகளில் 27.2 சதவீதமாகும் (அதாவது, முப்பது லட்சம் வாக்குகளுக்கும் அதிகம்); 1912-ல் இது 34.8 சதவீதமாக (நாற்பது லட்சம் வாக்குகளுக்கும் அதிகம்) உயர்ந்தது. ஜெர்மனியில் மாபெரும் அமைப்பாகவும் நாட்டின் ஆகப்பெரிய கட்சியாகவும் சமூக ஜனநாயகக் கட்சி வளர்ந்தோங்கி நின்றது.1907-ஆம் ஆண்டில் அந்தக் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்தியது!


ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள் குறித்த ஃப்ரெட்ரிக் ஏங்கல்சின் விமர்சனக் குறிப்புகளும் ஆய்வுகளும் ஆர்வத்தைத் தூண்டுபவை; ஆழமானவை. தேர்தல் வழிமுறை மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின்பால் மார்க்சீய கோட்பாடுகளை உருவாக்குபவையாகவும் அவை அமைந்துள்ளன.


வாக்குப் பெட்டி வழியை ஜெர்மானிய தொழிலாளர் வர்க்கம் கையாண்ட பாங்கினை ஏங்கல்ஸ் வெகுவாகப் புகழ்ந்துள்ளார். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் அஸ்திரத்தை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியதன்மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ள அவர்தம் தோழர்களுக்குப் புதியதோர் ஆயுதத்தை, கூரிய ஆயுதங்களில் ஒன்றை ஜெர்மன் தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். "வாக்குரிமையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதன்மூலம், பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் முற்றிலும் புதியதோர் வழி நடைமுறைக்கு வந்தது." இந்த வழிமுறை விரைந்து மேலும் வளர்ச்சிபெற்றது. அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வாய்ப்புகளையும் ஆயுதங்களையும் தொழிலாளர் வர்க்கம் பெற்றது. 'டயட்ஸ்' எனப்படுகின்ற மாநில சட்டமன்றங்களில் குறிப்பிட்ட சிலவற்றுக்கும், நகர்மன்றங்களுக்கும், தொழில் நீதிமன்றங்களுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தொழிலாளர் கட்சியின் சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகளைக் காட்டிலும் சட்டபூர்வ செயல்பாடுகளைக் கண்டு, அதாவது, "கலக நடவடிக்கைகளைக் காட்டிலும் தேர்தல் முடிவுகளைக் கண்டு" பூர்ஷ்வா வர்க்கமும் அரசாங்கமும் அஞ்சி நடுநடுங்கலாயின.


பொதுவாக வீதியுத்தங்கள், தடுப்புகளை ஏற்படுத்தி நடத்தப்படும் முற்றுகை யுத்தங்கள் மற்றும் ஆயுதப்போராட்டங்கள் பற்றிய மாயைகளை விட்டொழிக்கவேண்டுமென ஏங்கல்ஸ் அழைப்புவிடுத்தார்.


"வலிமைமிக்க, சிறந்த கட்டுப்பாடுகொண்ட, மிக வேகமாக வளர்ந்துவரும் சோஷலிஸ்ட் கட்சியை" ஏங்கல்ஸ் உயர்வாகப் பாராட்டினார். ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும், ஆட்சியதிகாரத்தை நோக்கித் தளராது முன்னேற வேண்டிய விஷேசக் கடமை அதற்கு உண்டு என்றும் ஏங்கல்ஸ் கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்களை, உலகத் தொழிலாளர் இயக்கத்தின் 'அதிர்வு சக்தி' என வருணித்தார் ஏங்கல்ஸ். "அந்தக் கட்சிக்காக வாக்களித்த இருபது லட்சம் வாக்காளர்களும், வாக்காளர்களாக இல்லாவிடினும், அவர்களுடன் அணிசேர்ந்து நின்ற இளைஞர்களும் யுவதிகளும், எண்ணிக்கையில் அதிகமான ஒருங்குசேர்ந்த வெகுஜனங்களாவர்; சர்வதேசப் பாட்டாளிவர்க்கப் படையின் தீர்மானகரமான 'அதிர்வு சக்தி'யும் அவர்கள்தான்," என்கிறார் அவர். பதிவான வாக்குகளில் நான்கில் ஒரு பகுதியை ஏற்கனவே இந்த வெகுஜனங்கள் நல்கியுள்ளனர். ஜெர்மன் நாடாளுமன்றமான ரெய்ச்ஸ்டாக்கிற்கு நடந்த இடைத்தேர்தல்கள், மாநிலங்களில் நடைபெற்ற டயெட் தேர்தல்கள், கீீழ்மட்டத்தில் நடந்த பிற தேர்தல்களின் முடிவுகள், அந்த இயக்கம் தொடர்ந்து வளர்ச்சிபெற்று வந்ததைக் காட்டியது."தன்னெழுச்சியாக, நிதானமாக, தடுத்துநிறுத்த இயலாத அளவுக்கு, அதே நேரம் அமைதிபூர்வமாகவும், இயல்பாகவும் அதன் வளர்ச்சி நடந்தேறுகிறது" என்பார் அவர்.


மேலும் இதுகுறித்துக் கூறும்போது, [அந்தக் கட்சிக்கு எதிரான] அரசின் அனைத்துக் குறுக்கீடுகளும் செல்லுபடியாகாமல் போயின என்கிறார் ஏங்கல்ஸ். இந்த வளர்ச்சிப்போக்கு இதேபாணியில் தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில், "சமுதாயத்தின் நடுத்தட்டில் உள்ள பெரும்பகுதினரை, குட்டி பூர்ஷ்வாக்கள் மற்றும் சிறு விவசாயிகளை வென்றெடுத்து, இந்த நாட்டில் தீர்மானகரமான சக்தியாக நாம் வளர்ந்து விடுவோம்; இந்த சக்திக்கு முன்னால் மற்ற சக்திகள் அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலைவணங்க வேண்டியிருக்கும்" என்று (தனது முன்னுரையில்) குறிப்பிடுகிறார் ஏங்கல்ஸ். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தற்போதைய அமைப்புமுறையிலிருந்து உயர்நிலைக்கு மாறிச்செல்கிறவரை தடங்கல்கள் எதுவுமின்றி இந்த சக்தியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார் அவர். இந்த விஷயத்தில் அவரது அறிவுறுத்தல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தடையற்ற இந்த வளர்ச்சிப்போக்கில் தடை ஏற்படுத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு: அதாவது, 1871-ல் பாரீஸ் நகரில் ரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்தது போன்று, ராணுவத்துடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபடுவதுதான் அந்த வழி" என்கிறார். எனவே, அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்க வேண்டாம் என்றும், தேவையற்ற, முன்யோசனையற்ற காரியத்தில் இறங்கவேண்டாமென்றும், ஆத்திரமூட்டலுக்கு இரையாகி ராணுவத்துடன் வீரசாகச மோதலில் ஈடுபடவேண்டாமென்றும் தொழிலாளி வர்க்கத்தையும் அதன் கட்சியையும் அவர் எச்சரிக்கிறார். வீதியுத்தங்களில் இறங்குகிற விபரீத ஆசைகள் வேண்டாமென்றும் அவர்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.


"உலக வரலாற்றின் விந்தை, அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது"-சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகள் மற்றும் கவிழ்ப்புகளைக் காட்டிலும் சட்டரீதியான வழிமுறைகளைக் கையாள்வதன்மூலம் புரட்சியாளர்களும், 'ஆட்சிக் கவிழ்ப்பாளர்களும்' தமது பணியில் முன்னேற்றம் காண்கிறார்கள் என்கிறார் ஏங்கல்ஸ்.


ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்ததற்குப்பின்னால், சோஷலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழிமுறையாக வாக்குப்பெட்டியை மார்க்சும்  ஏங்கல்சும் கருதினார்கள் என்பது தெளிவு.

Courtesy: MAINSTREAM, VOL L, No.21, MAY12, 2012
ANIL RAJIMWALE, MARX-ENGELS, BALLOT BOX

Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP