Monday, May 20, 2013

பல்லாண்டு பல்லாண்டு-2



  

பல்லாண்டு பல்லாண்டு-2

பி.ச. குப்புசாமி
                           


1960 செப்டம்பரில் - தேதி கவனமில்லை - நானும் நண்பர் வையவனும் ஜெயகாந்தனை எங்கள் ஊர் பாரதி விழாவில் பேசுவதற்கு அழைப்பதற்காக, சென்னைக்கு ரயிலில் புறப்பட்டோம்.
எனக்கு அப்போது பதினேழு வயது. பி.யூ.சி. செலக்ஷன் தேர்வில் கோட்டை விட்டு விட்டுஅந்த செப்டம்பரில் அடுத்தத்தேர்வை எழுதி முடித்திருந்தேன். குமுதத்தில் முதல் கதையும், அடுத்து கல்கியில் ஒரு கதையும் ஆனந்த விகடனில் இரண்டு கதைகளும் அப்பொழுது எழுதிவிட்டிருந்ததேன்.  
வையவன், எழுத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர். என்னைவிட நானகு வயது பெரியவர். பத்திரிகைகளிலும் அவருடைய பல கதைகள் வெளிவந்துவிட்டிருந்தன.
திருப்பத்தூரில், இரட்டையர்கள் போல நாங்கள் எப்பொழுதும் திரிந்து கொண்டிருப்போம்.
எங்கள் ஊரில், சுந்தரமூர்த்தி நாயனார் என்று ஒரு வக்கீல் இருந்தார். மெலிந்த தேகமுடையவர். அவர் கேஸ் கட்டுகளைப் படிப்பதைவிடவும் இலக்கியம் படிப்பதைத்தான் நாங்கள் அதிகம் பார்த்திருக்கிறோம். சி.சு. செல்லப்பாவின் கல்லூரித் தோழர் அவர் என்று கூறியதாக நினைவு.
"ஜெயகாந்தன் கூட கூட்டங்களில் பேசுகிறானாம்பா! இந்த வருஷம் அவனைக் கூப்பிடுங்களேன்!" என்று அவர்தான் முதலில் யோசனை கூறியவர்.
"சரஸ்வதி" பத்திரிகையில் வந்த ஜெயகாந்தன் கதைகளை நாங்கள் அப்போது படித்துவிட்டிருந்தோம். ஆனந்த விகடனிலும் அவர் எழுதுகிற கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன.
அதிகாலை நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து பிராட்வேயில் இருந்த "ஜனசக்தி" அலுவலகத்துக்குச் சென்றோம். எங்கள் இரண்டு நாள் சென்னைப் பயணத்தில், இரவு தங்குவதற்கு அதைத்தான் நாங்கள் வரித்தோம். வையவன்தான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. என்னை விடவும் அவருக்குத்தான் சென்னை அதிகம் பரிச்சயம். "ஜனசக்திவாராந்திர மலரில் அவர் கதைகள் எல்லாம் எழுதியிருந்தார். தோழர் மாஜினி அவருக்குப் பழக்கமாயிருந்ததார். அவரது சிபாரிசில், இரவு நேரத்தில் தங்கிக்கொள்ள அங்கே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
சென்னையில் முதல் நாள் பூராவும், சில பத்திரிகை அலுவலகங்களில் வையவன் அவர்களுக்கு வேலையிருந்ததால், அங்கெல்லாம் அவருடன் நானும் சென்றேன். சில எழுத்தாளர்களையும் சந்தித்தோம்.    அவர்களெல்லாம், நாங்கள் சென்னைக்கு என்ன வேலையாக வந்திருக்கிறோம் என்று விசாரித்தார்கள். எங்கள் ஊர் பாரதி விழாவிற்கு ஜெயகாந்தனை அழைப்பதற்காக வந்திருக்கிற விவரத்தைக் கூறினோம்.
அதிலே மூன்று நான்கு பேருக்கு மேல் சொல்லி வைத்தாற்போல, "ஜெயகாந்தனையா? அவர் ரொம்ப முரடராமே? கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவாராமே?" என்று எங்களுக்குப் பயம் காட்டினார்கள்.
பகலெல்லாம் சென்னையில் அலைந்து திரிந்துவிட்டு, இரவு படுப்பதற்கு "ஜனசக்திக்கு" வந்துவிட்டோம்.
குளியலறையின் எதிரே பெரிய பெரிய பேப்பர் பண்டல்களை அடுக்கியிருந்தார்கள். அதுதான் எங்களுக்குக் கட்டில் போல் ஆயிற்று. முன்னிரவில் ரயிலில் வந்தபோது நஷ்டமாகியிருந்த தூக்கத்தாலும் பகலின் அலைச்சலிலும் அயர்ந்துபோய் நன்கு தூங்கிவிட்டோம்.
காலையில் வையவன்தான் முதலில் கண்விழித்து எழுந்து குளித்துத் தயாரானார். அன்றுதான் ஜெயகாந்தன் அவர்ககளைப் போய்ப் பார்ப்பதாகத் திட்டம்.
 "ஏம்ப்பா, சீக்கிரம் எழுப்பா! அவன் எங்கேயாவது போய்விடப் போகிறான்" என்று வையவன் என்னை அவசரப்படுத்தினார். நான் எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டே, "அந்த ஆளைப் பத்தி எல்லோரும் சொல்றதப்பார்த்தா, அவர் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து வீட்டை விட்டு வெளியே போற ஆளாத்தெரியலே!" என்று வையவனின் அவசரசத்துக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு, நான் என் வேலைகளை முடித்தேன். டவுன் பஸ் ஏறி எழும்பூரில் இறங்கி, "26- எக்மோர் ஹைரோடு" என்று முகவரி குறிக்கப்பட்ட வீட்டை, காலை எட்டரைமணிக்கெல்லாம் அடைந்தோம்.
குறுகிய நுழைவாயிலும், வெளியே இருபுறமும் ஒட்டுத்திண்ணைகளும் கொண்ட வீடு, கதவிலே பொறிக்கப்பட்டிருந்தத வீட்டு எண்ணை இருபத்தாறுதான் என்று உறுதி செய்து கொண்டோம் . ஒண்டுக்குடித்தன வீடு. உள்ளே ஜனநடமாட்டம் தெரிந்தது. நாங்கள் வாயிலில் நிற்பததைப் பார்த்த ஒரு பெண்மணி, "யார் வேணும்?" என்று கேட்டார்.
"எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பார்க்க வந்தோம்!" என்று பதில் சொன்னோம். அந்தப் பெண்மணி, "இவங்களைக் கேளுங்க" என்று ஒருவரைக் காட்டினார்.
அவர் எங்களுக்கு முகம் காட்டி "யாரு?" என்றுகேட்டார்.
அவர்தான் ஜெயகாந்தனின் தாயார். தோற்றத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் துலங்கிற்று.
பவ்யமாக, "திருப்பத்தூரிலிருந்து வரோம். ஜெயகாந்தனைப்பார்க்கனும்!" என்றோம்.
"வாங்க" என்று எங்களை அழைத்தவர், தாங்கள் குடியிருந்த பகுதியின் பக்கமாகத் திரும்பி, "காந்தா, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க பார்!"என்று குரல் கொடுத்தார்.
அதற்குள் நாங்கள் உள்ளே போய் அவர்கள் அறை வாயிலில் நின்றிருந்தோம்.
இரண்டே அறைகள் கொண்ட சிறிய குடித்தனப் பகுதி அது. முதல் அறையின் நடுவே, கார்ட்போர்டினால்ஆன ஒரு ஸ்டாண்ட் நிற்க வைக்கப்பட்டும், சுமார் மூன்றடி அகலத்துக்குத் துணித்திரை ஒன்று தொங்கவிடப்பட்டும், அவ்வறையைப் படுக்கை அறையாகவும் வரவேற்பறையாகவும் பிரித்தன.
அம்மாவின் குரல் கேட்டதும், துணித்திரையை ஒரு கரம் சிறிதே விலக்கியது. பள்ளிகொண்டநாதனைப் போல், படுத்த வாக்கில், அடர்ந்த சிகையோடு கூடிய ஒரு பருத்த முகம் தெரிந்தது. அப்போதுதான் தூக்கம் கலைந்த கண்கள் தீட்சண்யமாகத்துலங்கின. தொடர்ந்து, "வாங்க!" என்று அவர் குரலும் வந்தது.
கண்களை ஒரு நடுவிரலால்துடைத்துக் கொண்டு, இடுப்பில் கட்டிய லுங்கியைச் சரிசெய்தவாறு, ஜெயகாந்தன் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தார். அந்த வயதின் ஆரோக்கியத்தாலும் தூங்கி எழுந்ததாலும் அவரது முகம் நன்கு மதர்த்துப் போய்த் தெரிந்தது.
"உட்காருங்கள்!" என்றார். இரண்டு சிறிய ஆசனங்களில் அமர்ந்ததோம். அவரும் அமர்ந்தார்.
"வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து வரோம்!" என்று வையவன் தன் பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் என் பெயரைச் சொன்னேன். முந்தின வாரம்தான் நான் ஆனந்த விகடனில், "அறுபத்திரண்டு வருஷங்கள்!" என்று ஒரு கதை எழுதியிருந்தேன்.
"நீங்க போன வாரம் ஆனந்த விகடன்லே அறுபத்திரண்டு வருஷங்கள்னு ஒரு கதை எழுதியிருந்தீங்க இல்லே?" என்று கேட்டார். நான் பவ்யமாகத் தலையாட்டினேன்.
"நல்லாயில்லை!" என்றார். அதற்கும் பேசாமல் நான் தலையாட்டிக் கொண்டேன்.
வையவனைப்பார்த்து, "நீங்க எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீங்க இல்லே?" என்று கேட்டார்.
வையவன் ஆமாமென்று தலையாட்டினார்.
 "கொஞ்சம் இருங்க... வரேன்!"என்று ஜெயகாந்தன் எழுந்து உள்ளே போனார்.
என்ன நடக்கப்போகிறதோ என்ற திகைப்பில், உதட்டைப்பிதுக்கிய ஒரு குறுஞ்சிரிப்போடு வையவனும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
இங்கே ஒரு ரஸமானவிஷயத்தைச்சொல்ல வேண்டும்:
நண்பர் வையவன் புதிய நடைகளைவிரும்புபவர். அது, அவர் எழுதுகிற கடிதங்களிலும் புலப்படும்.
இதற்கு முன் அவர் ஜெயகாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "துர்க்கை" என்ற கதையைப்பற்றித் தனது விமரிசனத்தை அதில் எழுதியிருந்தார். என்ன எழுதியிருந்தார் என்பது எனக்கு இப்போது  ஞாபகமில்லை. ஆனால், அந்தக் கடிதத்தை எல்லாரும் போல் அவர் சாதாரணமாக ஆரம்பிக்கவில்லை.  "தமிழ்நாட்டின் சிறுகதை மன்னனே தான்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தோழர் ஜெயகாந்தன்!" என்கிற அந்தக் கடிதத்தின் விளிப்பு வரி மட்டும் இன்றளவும் எனக்கு மறவாமல் இருக்கிறது.
அந்தக் கடிதத்தை எடுத்து வரத்தான் ஜெயகாந்தன் எழுந்து அந்தத் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே போனார்.
நாங்கள் பின்னால் எல்லார்க்கும் சொன்னபடியே, எங்கள் இருவருக்கும் திக்திக் என்றுதான் இருந்தது. ஏற்கெனவே, நேற்று சென்னைப்பட்டினத்தில் பார்த்தவர்கள் பெரும்பாலோர் 'முரடன்' என்று பயமுறுத்தியிருந்த காரணத்தால், ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை புரிந்து கொண்டோம்.
ஜெயகாந்தன் அந்தக் கடிததத்தை எடுத்துக் கொண்டு வந்து அமைதியாக எங்கள் எதிரில் உட்கார்ந்தார்.
அந்தக் கடிதத்தை அவரே படித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.
"தமிழ்நாட்டின் சிறுகதை மன்னனேதான்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தோழர் ஜெயகாந்தன்!"என்று படித்து நிறுத்தினார். அப்புறம் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார்!
"நான் எப்பொழுதும் என்னைச் 'சிறுகதை மன்னன்' என்று சொல்லிக்கொண்டதில்லை. அது மட்டுமல்ல, அவ்வாறு கோஷம் போடுபவர்கள் மீது கோபித்துக்கொண்டும் இருக்கிறேன்!"
பொறுமமையாக இதை அவர் சொன்ன விதம், அவரைப்பற்றி எங்களிடம் சொல்லப்பட்ட மாறுபட்ட விமரிசனங்களை எல்லாம் ஒரு நொடியில் ஒரேயடியாக அடித்துப்புறந்தள்ளிவிட்டது.
எங்களிடம் ஓர் ஆசுவாசமான புன்னகை மலர்ந்தது.
பிறகு, அந்தக் கடிதத்தின் உள் விவரங்களுக்குள் புகுந்து, நண்பர் வையவனின் விமரிசனங்களுக்கு எல்லாம் தர்க்கபூர்வமாக விளக்கமளித்தார். இவ்வளவுதான் எனக்கு ஞாபகம். அவர் சொன்னது எங்களுக்கு ஒப்புக்கொள்வதாக இருந்தது.
ஒப்புக் கொள்வது என்றால் என்ன அர்த்தம்? சொன்ன ஒன்றை நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டோம் என்பதுதானே அது?
அப்புறம் வேறு விஷயங்களுக்கு மாறி, நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது பற்றிக்கூறினோம். எங்கள் ஊர் பாரதி விழாவில் பேசுவதற்கு அவரை அழைத்தோம். அவர் தயங்காமல் ஒப்புக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
இடையிடையே கொஞ்சம் இலக்கிய விசாரம் நடத்தினோம் என்பதும் நினைவுக்கு வருகிறது.
அப்புறம் ஜெயகாந்தன் எழுந்துபோய்க் குளித்தார். குளித்து முடித்துவிட்டு வந்து, எங்கள் இருவரையும் அவரோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அழைத்தார்.
சந்தித்த முதல்சந்திப்பிலேயே அவர் வீட்டில்அவரது தாயார் பரிமாற, நாங்கள் உண்ட அந்தக் காலை உணவு என்றென்றும் மறக்க முடியாததாகும்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது, எங்கள் மீது அவர் கொண்ட அன்பின் குறியீடாகவே  அது எப்பொழுதும் தோன்றுகிறது!
பிறகு, அவர் உடையணிந்து கொண்டு வர, நாங்கள் வெளியே புறப்பட்டோம்.
ஜெயகாந்தன், பேண்ட் அணிந்து வந்ததார்.
பதினேழுவயதுப் பையனான நான், அவருடைய "ரஸ்வதி" கதைகளைப் படித்துவிட்டு, எதனாலோ, பேண்ட் அணிகிற நவநாகரிக நபர்களை எல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் கிழிகிழி என்று கிழிப்பவர் என்று கருதிக் கொண்டிருந்தேன். அவர்பேண்ட் அணிந்து வந்தது எனக்கு ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. நாங்கள் என்னவோ வேஷ்டிதான் கட்டியிருந்தோம். "சரஸ்வதி" அலுவலகம் சென்று திரு.விஜயபாஸ்கரன் அவர்ககளைச் சந்தித்தோம். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தோம்.
அடுத்து தமிழ்ப் புத்தகாலயம் சென்று திரு. கண.முத்தையா அவர்களையும் பார்த்தோம். அங்கே எங்களுக்கு இன்னுமோர் ஆச்சர்யம் உண்டாயிற்று. பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய பெண் குழந்தை, கற்பூரம் எரிந்து கொண்டிருக்கிற ஒரு பூஜைத்தட்டுடன் வீட்டின் உள்ளிருந்து வந்தது. அதை எங்களுக்கெல்லாம் நீட்டியது. அந்தத் தட்டிலிருந்த விபூதியை ஒரு விரலால் கொஞ்சமாகதத் தொட்டு, ஜெயகாந்தன் தன் நெற்றியில் இட்டுக்கொண்டார். அது, பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்லாமல், ஆச்சரியமாகவும் இருந்தது.
அடடே, நீட்டப்படுகிற பூஜைத்தட்டைத் தொட்டு வணங்குவதும், கொஞ்சம் நீறு இட்டுக்கொள்வதும் தப்பில்லை என்கிற தடையற்றதோர் சுதந்திர வெளிக்கு அது என்னை இட்டுச் சென்றது.
பச்சையப்பன் கல்லூரி எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது ஒரு பிச்சைக்காரன் வந்து கையேந்தினான். சில்லறை ஏதும் இல்லாததால் நாங்கள் அவனைப்போகச் சொன்னோம். ஆனால் அவன் போகாமல் அங்கேயே நின்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஜெயகாந்தன், சற்றுக் கடுமை காட்டிய குரலில், "இல்லேனு சொல்றோமில்லே?" என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதுவவும் எனக்கு ஓர் ஆச்சர்யம். பிச்சைக்காரர்களுக்கு ஈயாதவர்களை அவர் காராக்கிருஹத்தில் அடைத்துவிடுவார் என்பதுபோல் எனக்கு ஏனோ ஒரு நினைப்பு இருந்தது. 
இவ்விதம், அவரைச் சந்தித்த அந்த முதல் நாளில், நாங்கள் கருதிக் கொண்டிருந்த உண்மைக்கு மாறான இறுக்கமான கட்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவிழ்ந்தன.
நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் "39 ஸ்டெப்ஸ்" என்று ஓர் ஆங்கிலப் படம் பார்த்தோம்.
திருவல்லிக்கேணியில் ஒரு ஹோட்டலில் மாலைச் சிற்றுண்டி அருந்தினோம்.
அப்புறம் கடற்கரைக்குச்சென்றோம். அந்த அனுபவத்தை ஒரு தனி அத்தியாயமாகவே எழுதுவதுதான் சரி!    

Read more...

Wednesday, May 8, 2013

தமிழர்களின் எண்ணங்களை, இதயங்களை வென்றெடுங்கள்!

  
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு:

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பங்காற்றட்டும்!

தோழர் சந்திரப்பன் வாழ்த்துரை!!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, கட்சியில் பல்வேறு பொறுப்புக்களில் செயலாற்றி, கேரள மாநிலக் குழுவின் செயலாளராகவும் கடமையாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் தோழர் சி.கே.சந்திரப்பன். இவர்,கடந்த ஆண்டு (2012) மார்ச் 22-ஆம் நாள் அமரரானார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் செயலாளராக அவர் பொறுப்பு வகித்தபோது, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு, 2010 ஆகஸ்ட் 27-29 தேதிகளில் கொழும்புவில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக அந்த மாநாட்டில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார் தோழர் சந்திரப்பன்.


நம்மிரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே சகோதர உறவு இருப்பதைக்கூட வசதியாக மறந்துவிடுகின்றனர் சிலர். உண்மையை உணர்ந்துகொள்ள, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டை வாழ்த்தி தோழர் சந்திரப்பன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்கே சஞ்சிகை வாசகர்களுக்காகத் தரப்படுகிறது:


தமிழர்களின் எண்ணங்களை, இதயங்களை வென்றெடுங்கள்!

"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு கொழும்பு நகருக்கு வந்துள்ளேன். இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எமது அண்டை நாடுகளில் உள்ள நெருங்கிய சகோதரக் கட்சிகளில் ஒன்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி. அது தோன்றிய காலந்தொட்டு பல தசாப்தங்களாக எங்களது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆழமான, நட்புறவுகளைக் கொண்டுள்ளது.

"புதிய வாழ்க்கை, ஒளிமிகு எதிர்காலம் ஆகியவற்றுக்காகப் போராடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நம்மிரு நாடுகளின் மக்களையும், நமது பொதுவான வரலாறு, பாரம்பர்யம் மற்றும் கலாசாரம் ஆகியவை ஒன்றுபடுத்தியுள்ளன.


"விடுதலை பெறவும், சுதந்திரக்கனியைப் பறிக்கவும், இந்தியாவும் இலங்கையும் காலனியாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துச் சமர்புரிந்தன. புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகள் மற்றும் அவற்றின் மக்கள், ஸ்திரத்தன்மை கொள்ளவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடவும், வளம்தனைப் பெருக்கவுமான சூழலை உருவாக்கும் வகையில், அணிசேராமை, சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில் ஒருமைப்பாடு கொண்டு நம்மிரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.


"சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோஷலிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சி, அதன் விளைவாக சோஷலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு போன்றவை, ஏகாதிபத்தியம்
இறுமாப்பு கொள்ளவும், மேலும் அதிக நம்பிக்கைகொண்டு மூர்க்கத்தனமாகப் பாயவும் காரணிகளாக அமைந்தன. உலகமுழுவதும் நவீன தாராளமயக் கொள்கையைத் திணிப்பதற்கு ஏகாதிபத்திய சக்திகள் காட்டுகின்ற மும்முரத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தப் புதிய நிலைமை, ஏகாதிபத்தியத்தை மேலும் மூர்க்கத்தனம் கொள்ளச் செய்திருக்கிறது; பயங்கரவாதத்தை முறியடிப்பது என்கிறபெயரால், நாடுகளின்மீது யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடுமளவுக்கு அது முரட்டு தைரியம் பெறச்செய்திருக்கிறது.

"அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொடங்கி, ஐரோப்பாவையும், கனடாவையும் கவ்விப்பிடித்துள்ள புதிய நிதி நெருக்கடியானது, உலகின்மீது பேராதிக்கம் செலுத்த ஏகாதிபத்தியம் கண்ட பெருங்கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கும் பேரிடியாக அமைந்தது. உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் தருணங்களில், முதலாளித்துவ அமைப்பு தாக்குப்பிடிக்கமுடியாமல் வலுவிழந்து போவது இப்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. முதலாளித்துவம் வெல்லற்கரியது என்னும் மாயை சுக்குநூறாகச் சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறது.


"இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த [2009] பொதுத்தேர்தலின்போது இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்தபோதிலும், தீவிரமான சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் வகையில், புதிய வளர்ச்சிப்போக்குகள் அங்கு தோன்றியிருக்கின்றன. புதியதோர் ஆரோக்கியமான வளர்ச்சியாக, தொழிலாளிவர்க்க ஒற்றுமை, கிட்டத்தட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் ஒரு பொதுமேடைக்குக் கொண்டுவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதிய அமைப்பு, வாழ்க்கை மற்றும் பணி நிலைமைகளில் முன்னேற்றம் காண்பது போன்ற அம்சங்களில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரும்பொருட்டு ஒன்றுபட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் இயக்கங்களுக்கு அவை தலைமையேற்றுநடத்திவருகின்றன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அவர்களைத் திரட்டுவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மற்றொரு முக்கியமான விஷயமாகும். இவை, நம்பிக்கையூட்டுகின்ற வளர்ச்சிகள்.


"மறுபுறத்தில், வெறிகொண்ட வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள், தமது பிடிமானத்தை இழந்துவருகின்றன. ஆனால், அண்மைக்காலத்தில், இடது மற்றும் வலது அதிதீவிர சக்திகள், பயங்கரவாதத்தைத் தோற்றுவித்திருப்பது ஒரு அச்சுறுத்தலாகும். இதை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. இந்தப் பிரச்சனைகளுக்கான வேர்களைக்கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும். விவசாய நெருக்கடி, பெருமளவிலான வேலையின்மை, பழங்குடி மக்களின், பின்தங்கிய பகுதிகளின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்களாகும்.


"இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுவருவது ஒரு நல்ல வளர்ச்சியாகும்.தற்போதுள்ள நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்துவதற்கு இடதுசாரிகளும், மற்றபிற முற்போக்கு சக்திகளும் முன்வரவேண்டும்.


"தொடுவானில் புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் தோன்றியுள்ள இந்த சூழலில், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு நடைபெறுகிறது. அதே நேரத்தில், சவால்களும் காத்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் (எல்.டி.டி.இ) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்திருப்பது முக்கியமான அம்சம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்றெடுப்பது இப்போதுள்ள சவாலாகும்.


"ஒரு வலிமையான, ஒன்றுபட்ட, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை உருவாக்கப்பட வேண்டும்; அங்கு முக்கியமான சிறுபான்மை இனமாக உள்ள தமிழ்மக்களின் அபிலாசைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; இதற்கான சட்டபூர்வமான உத்திரவாதங்களை, அர்த்தமுள்ள அதிகாரப்பரவல் மூலமாகவும், நிறுவனபூர்வமான உறுதிப்பாடுகள் மூலமாகவும் ஏற்படுத்துவது அவசியம்.இதை ஈடேற்ற, அரசுக்கு உறுதியான அரசியல் திண்மையும், இலங்கையில் உள்ள தமிழ்ச்சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான இதயசுத்திகொண்ட அணுகுமுறையும் தேவை.


"இதற்கு முன்னதாக, இடம்பெயர்ந்த தமிழ்க்குடும்பங்கள் எங்கே வாழ்ந்தார்களோ, அதே இடத்தில் அவர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவதற்கு விரைவான, காலவரம்புடன்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிட்டத்தட்ட நாடற்ற அகதிகள் போல் பல லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்தம் பிரச்சனைகளைத் தீர்க்கும்பொருட்டு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட வேண்டும். கச்சத்தீவுப்பகுதியில், மீனவர்களின் இயல்பான, அமைதிபூர்வமான மீன்பிடி உரிமைகளை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதும் அவசியமாகும்.


"இலங்கையில் தமிழ்ச்சிறுபான்மை மக்களின் நிலைகுறித்து இந்தியாவில் நியாயபூர்வமான கவலைகள் அதிகம் உள்ளன. இந்த முக்கியமான பிரச்சனையை இலங்கை அரசு தீர்க்கும்பொருட்டு,இந்தியா ராஜீய மற்றும் பொருளாதார உதவிகளை நல்கி வருகிறது.


"இலங்கையில் உள்ள முற்போக்குசக்திகள், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் முக்கியமான பங்காற்றும் என இந்திய மக்களும், இந்திய அரசும் எதிர்பார்க்கிறார்கள். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கே இது அத்தியாவசியமானதாகும்.


"இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே அக்கரைகொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி அர்த்தமுள்ள பாத்திரம் வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.


"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாடு பரிபூரண வெற்றிபெறுமாறு மீண்டும் வாழ்த்துவதற்கு என்னை அனுமதிக்கக் கோருகிறேன்.


"இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!


"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!!"


நன்றி: நியூ ஏஜ்/தமிழில்: விதுரன்


Courtesy: NEW AGE, Central Organ of the CPI/october 7, 2010




Read more...

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP