Thursday, October 17, 2013

ஜவஹர்லால் நேருவும் பிரசல்ஸ் மாநாடும்

-->
-->
மூன்றாம் அகிலத்தை ஆதரித்தவர் நேரு

சோகன் சிங் ஜோஷ்
  
[பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உலக மாநாட்டில் இந்தியாவின், இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் பண்டிட் ஜவஹர்லால் நேரு. தோழர் லெனின் அவர்களால் நிறுவப்பட்ட மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை ஆதரித்து நின்றவர் அவர் என்பதும் இக்கட்டுரைமூலம் தெளிவாகும். நேருவின் அரசியல் வாழ்விலும், இந்திய அரசியல் வரலாற்றிலும் திருப்புமுனை ஏற்படுத்திய அந்த மாநாடுகுறித்து மிகச்சுருக்கமாக, ‘தி கிரேட் அட்டாக்எனும் தனது நூலில் விவாதிக்கிறார் சுதந்திரப்போராட்டவீரரும், தான் வாழ்ந்த காலத்திலேயே வரலாறாக விளங்கியவருமான தோழர் சோகன் சிங் ஜோஷ். அதன் தமிழாக்கம் இங்கே:]


  பிரசல்ஸில் நடைபெற்ற காலனி நாட்டு மக்களின் மாநாட்டில் கலந்துகொண்டதற்குப் பின்னர், ஜவஹர்லால் நேரு மிகுந்த புகழ்பெற்றார். இதற்கு முன்னதாக, ஏறக்குறைய காந்திய அரசியலின் ஆகர்ஷிப்புக்கு மட்டுமே அவர் ஆட்பட்டிருந்தார். 1926-ஆம் ஆண்டிலிருந்து அவர் ஐரோப்பாவில் இருந்துவந்தார்; பிரிட்டிஷ், பிரெஞ்சு இன்னும் பிற ஏகாதிபத்திய நுகத்தடிகளின் கீழ் சிக்குண்டிருந்த தத்தம் நாடுகளின் விடுதலைக்காக ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்தர்களும், புரட்சியாளர்களும் மேற்கொண்டிருந்த பிரசல்ஸ் மாநாட்டுத் தயாரிப்புப் பணிகளுடன் அவர் ஜீவனுள்ள தொடர்பு கொண்டிருந்தார்.
  ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தேச விடுதலைக்கான சர்வதேச லீக்கை இந்த மாநாடு நிறுவியது. சூங்-சிங்-லிங் (சன்-யாட்-சென் அவர்களின் துணைவியார்), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ரொமெய்ன் ரோலான், லான்ஸ்பரி, முகமது ஹட்டா, வில்லி மியூசன்பர்க் அகியோர் அந்த லீக்கின் தலைவர்களில் அடங்குவர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் தேச விடுதலை இயக்க முன்னணித் தலைவர்கள், ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் போர்க்குணமிக்கத் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் இயக்கத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். தொடக்கம் முதல் இறுதிவரை இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளில் நேரு பங்கு கொண்டார். இதுகுறித்து அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
   “1927-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் நாள் மாலை நான் பிரசல்ஸ் வந்தடைந்தேன்; அங்கு நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
  அவர், அந்த மாநாட்டின் தலைமைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும்படி இந்திய தேசிய காங்கிரசால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார். “சீனர்களைக் கெடுபிடி செய்வதற்காக இந்தியத் துருப்புக்களை அனுப்பத் துணிந்துள்ள பிரிட்டிஷ அரசாங்கத்தின் செயலானது மிகுந்த அவக்கேடான, வருந்தத்தக்க விஷயமாகும்எனப் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் கூறியிருந்தார். இந்திய தேசியக் காங்கிரசும் பிரிட்டிஷ் அரசின் இந்த செயலைக் கடுமையாகச் சாடியிருந்தது; சீன தேசியவாதிகள், தமது தேசத்தை விரைவில் விடுவித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் அது தெரிவித்திருந்தது.
  சீன, பிரிட்டிஷ் மற்றும் இந்தியப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை மிகவும் முக்கியமானது என்று நேரு வர்ணித்தார். பிரிட்டிஷ் பிரதிநிதிக்குழுவால் அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. (இந்தியாவினுடைய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த பிற நாடுகளினுடைய) பரிபூரண விடுதலைக்காகப் போராடுதல்; யுத்தத்திற்கான கடன் பளுவை எதிர்த்தல்; சிப்பாய்களின் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கொண்டுசெல்லுதல் ஆகிய விஷயங்களில் அந்தத்தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டிஷ் தூதுக்குழு ஆத்மார்த்தமான ஈடுபாடுகொள்ள அது வகை செய்தது. “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஆயுத தளவாடங்களையும், துருப்புகளையும் அனுப்புவதை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கவும், வேலை நிறுத்தங்களில் ஈடுபடவும்அது சிபாரிசு செய்தது என்பதை நேரு அடிக்கோடிட்டுக் காட்டினார்.
  மேலும் அவர் கூறுகையில், அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்ட பிரிட்டிஷ்காரர்களை ஈடுபாடுகொள்ளச் செய்வதே உண்மையில் அதன் நோக்கம்; அவர்கள்தான் அதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்; எனினும் இந்தியாவின் சார்பாகக் கையெழுத்திட்டவன் என்கிற முறையில் என்னையும் அது ஓரளவு கட்டுப்படுத்தியது. எது நடந்தாலும் பரவாயில்லையென, குறிப்பாக இந்தியாவை ராணுவ ரீதியில் ஆக்கிரமித்து வைத்திருப்பினும், பிரிட்டிஷ் தொடர்புகளைச் சிக்கெனப் பற்றி நிற்கும் அசாதாரணமான மனப்பான்மையைக் குறைப்பதற்கு இத்தீர்மானம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்என்று அவர் குறிப்பிட்டார்.
  பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்றும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் படைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
  பிரசல்ஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாக விவாதிப்பது இச்சிறு நூலின் நோக்கமல்ல. இளம் ஜவஹர்லால் நேருவின்மீது அது ஏற்படுத்திய தாக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். நேருவே அதைப் பற்றிக் கூறும்போது,
“பிரசல்ஸ் மாநாடும் அதைத் தொடர்ந்து வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற லீக்கின் குழுக்கூட்டங்களும், காலனி மற்றும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் பிரச்சனைகளில் சிலவற்றைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவி செய்தன. மேற்கத்திய தொழிலாளர் உலகின் உள்ளார்ந்த மோதல்கள் குறித்தும் அவை எனக்கு உள்ளொளி தந்தன...தொழிலாளர் உலகைப் பொறுத்தவரை இரண்டாவது அகிலம் மற்றும் மூன்றாவது அகிலம் ஆகியவற்றில் என்னுடைய ஆதரவு மூன்றாவது அகிலத்திற்கே என்று கூறுகிறார். (அடிக்கோடிட்டது: கட்டுரை ஆசிரியர்).
  மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவுக்கு சுயாட்சியைத் தர விரும்புகிற நல்லெண்ணம் கொண்டுள்ளதாக இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களிடம் நிலவிய பல மாயைகளை ஜவஹர்லால் நேரு உடைத்தெறிந்தார் எனும் முடிவுக்கு வருவது ஒன்றும் கஷ்டமல்ல.
  1927-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தந்தை மோதிலால் நேருவுடன் அவர் சோவியத் ரஷ்யாவுக்குச் செய்த விஜயம், அரசியல் ரீதியாக அவரது உள்ளத்தை விசாலப்படுத்தியது; செழுமைப்படுத்தியது. இந்தியாவுக்குத் திரும்பியவுடன், இந்திய தேசியக் காங்கிரசை இடதுசாரி திசைவழியில் இட்டுச்செல்வதற்கு அவர் தனது செல்வாக்கைச் செலுத்தினார்.
  “எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், பிரசல்ஸ் மாநாடு முதல்தர முக்கியத்துவம் வாய்ந்தது; பரவலான விளைவுகளை அது ஏற்படுத்தக்கூடும்என்று இந்திய தேசிய காங்கிரசின் காரியக் கமிட்டிக்குச் சமர்ப்பித்த தனது ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பண்டிட் ஜவஹர்லால் நேரு.
               தமிழில்: விதுரன்
           ஆதாரம்: THE GREAT ATTACK/SOHAN SINGH JOSH

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP