Monday, October 7, 2013

தற்கொலை எனும் கோழைத்தனம்!

மாநிலம் பயனுற வாழ்வோம்!!

பகத் சிங்





தனிமனித வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்ற உணர்ச்சி மோதலின் விளைவாகத் தற்கொலைகள் நிகழ்கின்றன. எந்தக் காரணத்துக்காக நிகழ்ந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவை அவ்வாறு மரணிப்பவர்களின்மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன; தற்கொலைகள் நிகழாமல் தடுப்பதற்குச் சமூகம் மேலதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையையும் தருகின்றன.

இது ஒருபுறமிருக்க, நம் தமிழ்நாட்டில், அரசியல் காரணங்களுக்காக, அரசியல் தலைவர்களுக்காகத் தற்கொலைகள் நிகழ்வது சர்வசாதாரணமாகிவிட்டது. தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்கிற கொடுமையை, குற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதற்குப் பதிலாக, அவ்வாறு தற்கொலை செய்துகொள்பவர்களை அமரர்களாக்கி, குளிர்காய்வதில்தான் முனைப்பு காட்டுகிறார்கள் தமிழகத்து பூர்ஷ்வாஅரசியல்வாதிகள்-அதிலும் குறிப்பாகச் சில மாநிலக் கட்சித் தலைவர்கள். இந்தக் கொடுமையைக் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது.

இந்தியா உட்பட, உலகின் பலபகுதிகளிலும் நிகழும் தற்கொலைப்படைத் தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புகளால் ஒரு போராட்ட உத்தியாகவே பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் தாக்குதல்களை நடத்துபவர்கள் 'புரட்சிவாதிகள்' என்றும் 'தியாகிகள்' என்றும் போற்றப்படுகின்றனர்.

தற்கொலை என்னும் போராட்ட உத்தி எவ்வாறு கோழைத்தனமானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார் புரட்சித் தீயில் புடம்போட்டெடுக்கப்பட்ட மாவீரர் பகத்சிங். ஒரு பொருள்முதல்வாதியாக நின்று இந்தப் பிரச்சனையை அவர் அலசுகிறார். தன் புரட்சி இயக்கத் தோழர் சுகதேவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.-சஞ்சிகை ஆசிரியர் குழு.


[வழக்கு விசாரணை முடிவடைந்த நிலை. எந்த நாளும் தீர்ப்பு சொல்லப்படலாம் என்ற எதிர்பார்ப்பு. சுகதேவ், ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியிருந்த நேரம். அவரைப் பொறுத்தமட்டில் 20 ஆண்டுகள் சிறைவாசம் என்பது வெறுக்கத்தக்கதுதான். ஒருவேளை தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவர் பகத்சிங்குக்குக் கடிதம் எழுதினார். விடுதலை அல்லது வீரமரணம்; இவற்றுக்கிடையே நடுவழி எதுவுமில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சுகதேவின் இந்தக்கடிதத்திற்கு பகத்சிங்கின் எதிர்வினை அல்லது பதில் மிகவும் கூர்மையானது. இலட்சியப் போராட்டத்துக்காகப் பணியாற்றுவது, இன்னலுறுவது, வாழ்வது என்பதுதான் அவரது நிலை. துன்பங்களிலிருந்து தப்பித்தல் அல்லது நழுவுதல் கோழைத்தனமானது என அவர் கூறினார். அந்தத் தியாகச் செம்மலின் சிந்தனையை உற்றுநோக்குவதற்கு இக்கடிதம் இன்னொரு சாளரமாக அமைந்துள்ளது.]

ன்புள்ள சகோதரருக்கு,

தங்களின் கடிதத்தைப் பலமுறை உன்னிப்பாகப் படித்தேன். மாறுபட்ட சூழ்நிலைமை நம்மை வெவ்வேறுவிதத்தில் பாத்தித்துள்ளது என்பதை உணர்கிறேன். வெளியுலகில் நீங்கள் வெறுத்தது தற்சமயம் உங்களுக்கு அவசியப்படுகிறது. அதே சமயம், நான் அதிகமாக ஆதரித்தது இனிமேல் எனக்கு முக்கியமானதாகப் படவில்லை. எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட காதலில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது அந்த உணர்ச்சி எனது மனதிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் மறைந்துவிட்டது. வெளியுலகில், அதனைக் கடுமையாக எதிர்த்த தங்களின் கருத்தோட்டத்தில் தீவிரமான மாற்றத்தையும், வேறுபாட்டையும் இப்போது காணமுடிகிறது. அது மனித வாழ்வியலில் மிகத் தேவையானது என்பதை அனுபவ வாயிலாக உணர்கிறீர்கள். மேலும், அந்த அனுபவத்தில் ஒருவகையான மகிழ்ச்சியையும் உங்களால் உணரமுடிகிறது.

தற்கொலைபற்றி ஒருநாள் நான் உங்களுடன் விவாதித்ததை நீங்கள் நினைவுகூரமுடியும் என்று நம்புகிறேன். சில சமயங்களில் தற்கொலை நியாயமாகத் தோன்றுவதாக அப்போது தங்களிடம் கூறினேன். ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். எந்த நேரத்தில், எந்த இடத்தில் நமது கலந்துரையாடல் நடைபெற்றது என்பதுகூட எனது நினைவில் பசுமையாக உள்ளது. ஷஹான் ஷாஹி குடியாவில், ஒரு மாலைப்பொழுதில் நாம் இதைப்பற்றிப் பேசினோம். கோழைத்தனமான இந்த செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என அப்பொழுது நீங்கள் கூறினீர்கள். இதுபோன்ற செயல்கள் கோரத்தனமானவை; கொடுமையானவை என்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது நீங்கள் அதற்கு நேர் எதிரான கருத்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்கிறேன். அது சில சமயங்களில் சரியானது என்பதோடுமட்டுமில்லாமல், தேவையானது; அவசியமானது என்றும் நீங்கள் இப்போது கருதுகிறீர்கள். தற்கொலை மிகவும் கொடுமையான, கோழைத்தனமான செயல் என்று முன்னர் நீங்கள் சொன்னதுதான் எனது நிலை ஆகும். புரட்சிவாதிகளை விடுங்கள்; தனிநபர் எவரும்கூட இச்செயலை நியாயம் என்று சொல்லமாட்டார்கள்.

வெறுமனே துன்புறுவதுமட்டிலும் ஒரு நாட்டுக்குச் செய்கிற சேவையாகிவிடுமா என்கிற வினாவை எழுப்பி, இதனைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுகிறீர்கள். இதுபோன்ற வினா தங்களைப் போன்றவரிடமிருந்து வருவதென்பது விசித்திரமாக உள்ளது. ஏனெனில், எவ்வளவு சிரமப்பட்டு, சிந்தித்து நவஜவான் பாரத் சபாவின் நோக்கங்களான "துன்பம் அனுபவித்தல் தியாகம் செய்தல் ஆகியவற்றின் மூலம் சேவைபுரிதல்" எனும் லட்சியத்தை நாம் நேசித்தோம். நீங்கள், முடிந்தவரை சேவைபுரிந்துள்ளீர்கள் என்பது என் திடமான கருத்து. நீங்கள் ஆற்றிய பணிக்காக சிரமத்தை எதிர்கொள்கிற தருணம் இது. மக்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லவேண்டிய தருணமும் இதுதான் என்பது மற்றொரு விஷயமாகும்.

அரசியல் நிர்ணய சபைக்குள் நாம் வெடிகுண்டை எறிந்தது போன்று, எந்த ஒரு மனிதனும், தான் செய்கின்ற காரியத்தின் நியாயத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே களத்தில் இ றங்குகிறான். செயலை நிகழ்த்தியதற்குப்பின்னர், அதன் விளைவுகளைத் தாங்கிக்கொள்கிற நேரம் வரும். கருணை மனு மூலம் தண்டனையைத் தவிர்க்க நாம் முயற்சித்திருந்தோமேயானால், நமது செயலின் நியாயம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லை...அது மக்கள் மத்தியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்போது நமது லட்சியப் பணியில் வெற்றிபெற்றிருப்பது நிச்சயம்.

நாம் சிறைப்படுத்தப்பட்ட நேரத்தில், நமது கட்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் நிலைமை படுமோசமானதாக இருந்தது. அந்த நிலைமையில் முன்னேற்றம் காண நாம் முயற்சித்தோம். மிக விரைவில் நாம் இறந்துவிடுவோம் என்று நம்பினோம். வலுக்கட்டாயமாக உணவு உட்கொள்ளச்செய்தல் எனும் தந்திர நுணுக்கத்தை நாம் அறிந்தவர்களுமல்ல அல்லது அதனைப்பற்றிச் சிந்தித்துப் பார்த்தவர்களுமல்ல. சாவதற்கு நாம் தயாராக இருந்தோம். தற்கொலைக்கு விழையும் நோக்கில்தான் நாம் இவ்வாறு செய்தோம் என்று நீங்கள் இதைக் கருதுகிறீர்களா? இல்லை; மாறாக, உயர்ந்த லட்சியத்திற்காக ஒருவனின் வாழ்வில் செய்யப்படும் பெருமுயற்சியும் தியாகமும் தற்கொலை என்று சொல்லமுடியாது. தோழர் யதீந்திரநாத் தாஸ் மரணம் கண்டு நாம் பொறாமைப்பட்டோம். அது தற்கொலையா? இறுதியில் நமது சிரமங்கள், துன்பங்கள் வெற்றிக் கனிகளாகும். நாடுமுழுவதும் பெரும் இயக்கம் தொடங்கியுள்ளது. நமது நோக்கத்தில் நாம் வெற்றிபெற்றவர்கள். இந்த வகையான போராட்டங்களில் இறப்பு என்பது லட்சிய மரணமாகும்.

அதுமட்டுமின்றி, தமக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்ற நம்பிக்கை உடைய நமது தோழர்கள் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, தூக்கு மேடையைச் சந்திக்கும் தினத்தை அமைதியாக எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். இத்தகைய மரணம்கூட அழகானதே; ஆனால், சிறிது வேதனை தரும் என்பதற்காக, உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை கோழைத்தனமானது. இடையூறுகள், மனிதனை நேர்த்தியானவனாக்குகின்றன என்பதைத் தங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்களோ அல்லது நானோ அல்லது நம்மில் எவரும் இதுவரை எந்த வலியையும் அனுபவித்தது கிடையாது. நம் வாழ்வில் அந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது.

நமது இலக்கியத்தில் எங்கும் காணக்கிடைக்காத, அதே சமயம் ருஷ்ய இலக்கியத்தில் இலங்கும் யதார்த்தம் பற்றி நாம் பலமுறை பேசிக்கொண்டதை நினைத்துப் பாருங்கள். அவர்களின் உணர்ச்சிப் பெருக்கையும், அவர்தம் கதை மாந்தர்களின் மேன்மையையும் நாம் விதந்தோதுகிறோம். ஆனால், அதற்கான காரணங்களைக் கண்டறிவதில் நாம் அக்கறை கொள்வதில்லை. வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டுமென்கிற அவர்களின் வைராக்கியத்தால் உணர்வின் வேகமும், வேதனையும் பெருகுகிறது; இதுவே அவர்களது இலக்கியத்தின், கதை மாந்தர்தம் தோற்றத்தின் ஆழத்துக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கிறது.

எந்தவிதமான இயற்கை நியதியோ அல்லது தேவையான ஆதாரமோ இன்றி, காரண-காரியமற்ற ஆன்மிகப் புதிரை வரித்துக்கொள்ளும்போது, நாம் பரிதாபத்துக்கும் கேலிக்கும் உரியவர்களாகிப் போகிறோம். சகல அர்த்தத்திலும் புரட்சிவாதிகளாக இருப்பதில் பெருமைகொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மைப் புரட்சிவாதிகள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்குக் காரணமான, நாம் முன்னெடுக்கின்ற போராட்டங்களின் விளைவாக நாமே தேடிக்கொள்கிற இன்னல்கள், தவிப்பு, வலி, வேதனை முழுவதையும் தாங்கிக்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

குற்றம் மற்றும் தீவினை பற்றிய சமூகவியல் பாடங்களை நடைமுறையில் கற்றுக்கொள்வதற்குச் சிறைக்கூடத்தில், ஏன்-சிறையில் மட்டுமே வாய்ப்புண்டு என்பதைத் தங்களுக்குச் சொல்ல விழைகிறேன். இது சம்பந்தமான சில ஆவணங்களை நான் படித்திருக்கிறேன். இது தொடர்பான விஷயங்களை நாம் சுயமாகக் கற்று அறிவதற்குச் சிறை மட்டுமே தகுந்த இடமாகும். சுயமாகப் படிப்பதில் பெரும்பகுதி ஒருவருக்குத் தன்னை வருத்திக் கொள்வதேயாகும்.

ருஷ்ய சிறைகளில் அரசியல் கைதிகள் பட்ட துன்பமே, ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டதற்குப் பின்னர் சிறை நிர்வாகத்தில் புரட்சிகர மாற்றம் ஏற்பட பிரதான காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பிரச்சனையை முழுமையாக அறிந்துள்ள, சொந்த அனுபவம் கொண்டவர்கள், இந்தியாவுக்குத் தேவை இல்லையா? வேறு யாரேனும் இந்தக் காரியத்தைச் செய்வார்கள் அல்லது அதனைச் செய்து முடிப்பதற்கு அநேகர் உள்ளனர் எனக்கூறி வாளாவிருப்பது சரியன்று. புரட்சிகரப் பொறுப்புகளைப் பிறருக்குத் தள்ளிவிடுவது முற்றிலும் இழுக்கானது; வெறுக்கத்தக்கது என்பதை உணர்ந்துள்ளவர்கள், தற்போது நிலவும் அமைப்பை எதிர்க்கும் தமது போராட்டத்தை முழு அர்ப்பணிப்புடன் தொடங்க வேண்டும். விதிகளை அவர்கள் மீறவேண்டும்; ஆனால், நேர்மையான நெறிமுறைகளை அவர்தம் மனத்தில் இருத்திச் செயல்பட வேண்டும். ஏனெனில், தேவையில்லாத, முறையற்ற முயற்சிகள் ஒருபோதும் நியாயபூர்வமானதாகக் கருதப்படமாட்டாது. அவைபோன்ற கிளர்ச்சிகள், புரட்சியின் பயணத்தச் சுருக்கிவிடும். இயக்கத்தில் ஒட்டாமல் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்குப் புரியவில்லை. நமது நண்பர்களில் சிலர் விஷயம் தெரியாதவர்களாகவோ, புரியாதவர்களாகவோ இருக்கிறார்கள். உங்களின் போக்கு முற்றிலும் வினோதமாக, புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது என அவர்கள் கருதுகிறார்கள். தமது புரிதலுக்கு மேலாக, வெகுதூரத்தில் இருப்பதால், அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சொல்லப்போனால், சிறை வாழ்க்கை உண்மையிலேயே சிறுமைப்படுத்துவதாக உள்ளது என நீங்கள் கருதும்பட்சத்தில், போராட்டத்தின் மூலம் அதனை மேம்படுத்த நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது? ஒருவேளை இந்தப் போராட்டம் வீணானது என்று நீங்கள் சொல்லலாம்; ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் ஒதுங்கிக்கொள்வதற்கு இந்த வாதத்தையே பொதுவாக வலிமையற்றவர்கள் திரையாகப் பயன்படுத்துகிறார்கள். சிறைக்கு வெளியே, புரட்சி இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்வதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துடிப்பவர்களின் இதே பதிலைக் கேட்டுப் புளித்துப்போய்விட்டது. உங்களிடமிருந்தும் இதே வாதத்தை நான் இப்போது கேட்க வேண்டுமா என்ன? விரல்விட்டு எண்ணக்கூடியவர்களையே கொண்டுள்ள நமது கட்சி அதன் விரிந்து பரந்த நோக்கங்களுக்காகவும் லட்சியங்களுக்காகவும் என்ன செய்ய இயலும்? அவ்வாறாயின், நமது பணியைத் தொடங்கியதே பெரும் தவறு எனக் கொள்ளலாமா? இல்லை; இதுபோன்ற அனுமானங்கள் முறையற்றவை. இதுபோன்று சிந்திக்கின்ற மனிதனின் உள்ளார்ந்த பலவீனத்தைதான் இது பறைசாற்றும்.

சிறைவாசம் மனிதனின் சிந்தனையை சிதைத்துவிடும் என்பதால், 14 ஆண்டுகள் சிறைத்துன்பத்திற்குப் பின்னரும் ஒரு மனிதன் அதே சிந்தனையிலிருப்பான் என எதிர்பார்க்கமுடியாது என்றும் நீங்கள் எழுதியிருந்தீர்கள். சிறைக்கு வெளியே உள்ள சூழல், நமது கருத்துக்களுக்கு இதைக்காட்டிலும் சிறிது சாதகமாக இருக்குமா எனத் தங்களைக் கேட்க விரும்புகிறேன். அப்படியிருந்தும், நமது தவறுகளால் அதை நாம் விட்டு நீங்கிவிட்டோமா? நாம் களத்தில் இறங்காமல் இருந்திருப்பின் புரட்சிகரமான வேலை ஒன்றும் நடந்திருக்காது என்பதை சூசகமாகச் சொல்கிறீர்களா? சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவர நாமும் உதவியுள்ளோம் என்பது உண்மையாக இருப்பினும், இதுதான் உங்களின் ஆணித்தரமான கருத்து எனில், அது தவறானது. ஏனெனில், நமது காலத்தின் தேவையால் உருவானவர்கள்தானே நாம்?

உண்மையில், கம்யூனிசத்தின் தந்தை மார்க்ஸ் இந்தக் கருத்தைத் தொடங்கவில்லை என்றுகூட நான் சொல்வேன். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, இதுபோன்ற மனிதர்களை உருவாக்கியது. அவர்களில் மார்க்சும் ஒருவர். அவரது காலத்தில், வரலாற்றுச் சக்கரத்தைக் குறிப்பிட்ட திசைவழியில் சுழலச்செய்வதற்கு மார்க்சும் ஓரளவுக்குக் காரணியாக இருந்துள்ளார் என்பது நிதர்சனம்.

இந்த நாட்டில், கம்யூனிசம், சோஷலிசம் ஆகிய லட்சியங்களை நான் (நீங்களும்கூட) விதைக்கவில்லை. காலமும் சூழலும் நம்மீது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இது. இந்தக் கருத்துக்களைப் பரப்புவதில் நாம் சிறிது பங்காற்றியிருப்பது உண்மையே. சொல்லப்போனால், இந்த லட்சியங்களைப் பற்றி நாம் பிரச்சாரம் செய்துள்ளோம். ஆகவே, ஒரு கடினமான பணியை மேற்கொண்ட நாம், அதில் தொடர்ந்து முன்னேற வேண்டும். இன்னல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தற்கொலையில் நாம் இறங்கினால், அதனை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாறாக, இது முழுக்க முழுக்க ஒரு பிற்போக்கான செயலாகும்.

சிறைச்சாலை விதிகள் தோற்றுவித்துள்ள ஏமாற்றங்கள், நிர்ப்பந்தங்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையேயும் நாம் நமது பணியைத் தொடர்ந்துள்ளோம். நமது பணியின் விளைவாகப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானோம். மாபெரும் புரட்சிவாதிகள் என்று தம்மைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டமடித்துக்கொள்ளும் சில மனிதர்கள்கூட நம்மைக் கைவிட்டுவிட்டார்கள். இந்த நிலைமைகளெல்லாம் நம்மைப் பெரிதும் சோதிக்கவில்லையா? அவ்வாறாயின், நமது போராட்டங்களையும், முயற்சிகளையும் தொடருவதன் காரணமும் அர்த்தமும்தான் என்ன?

இந்த எளிமையான வாதம், நமது கருத்துக்களுக்கு வலுவூட்டவில்லையா? சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வரும் நமது புரட்சிகரத் தோழர்கள், தாம் மேற்கொண்ட பாதையில் பயணத்தைத் தொடர்வதற்கான எடுத்துக்காட்டுகள் நம்மிடம் உண்டல்லவா? உங்களைப் போன்றே பாகுனின் வாதிட்டிருந்தால், ஆரம்பத்திலேயே அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார். இன்றைக்கு ருஷ்ய அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகிக்கக்கூடிய அநேக புரட்சிவாதிகள், தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சிறைக்கூடத்திலேயே கழித்தவர்கள்; தண்டனைக் காலத்தைப் பூர்த்திசெய்தவர்கள். மனிதன் தனது நம்பிக்கைகளில் ஒன்றியிருக்கக் கடுமையாக முயற்சிக்க வேண்டும். எதிர்காலம் எப்படியிருக்கும் என ஒருவரும் ஆருடம் சொல்லமுடியாது.

வெடிகுண்டு செய்யும் நமது கூடங்களில், அடர்த்தியான கொடும் விஷமும் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதுபற்றி நாம் விவாதித்தபோது, அதனைக் கடுமையாகத் தாங்கள் எதிர்த்தது நினைவிருக்கிறதா? அதே கருத்து, தங்களுக்கு தற்போது எட்டிக்காயாக உள்ளது. தங்களுக்கு இப்போது அதில் நம்பிக்கை இல்லை. சரி, இப்போது இங்கு என்னதான் நடந்துவிட்டது? இங்கு கடினமான, குழப்பமிகு நிலைமைகள்கூட இல்லை. இந்தப் பிரச்சனைகுறித்து விவாதிப்பதுகூட எனக்குப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்கிற மனப்போக்கையே முன்னர் நீங்கள் எதிர்த்துள்ளீர்கள். தற்போது தாங்கள் மேற்கொண்டுள்ள நிலையை (அதாவது விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்வதை) நீங்கள் கைது செய்யப்பட்டபோது எடுத்திருந்தால், புரட்சிகர லட்சியத்துக்காகக் கடமையாற்றியதாகக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அதுபோன்ற காரியத்தைச் செய்ய எண்ணிப்பார்ப்பதுகூட அந்த லட்சியத்துக்குக் குந்தகம் விளைத்துவிடும். இதனைச் சொல்வதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.

இன்னும் ஒரு விஷயத்தை இங்கு நான் தங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். கடவுள்மீது, சொர்க்கம், நரகம், தெய்வ தண்டனை, வெகுமதி என்பதிலெல்லாம் நமக்கு நம்பிக்கை கிடையாது. மனித வாழ்க்கையின்மீது, கடவுளின் தீர்ப்பு என்பதைத் திணிப்பதில் நம்பிக்கை இல்லை நமக்கு. எனவே, வாழ்க்கையையும், மரணத்தையும் பொருள்முதல்வாத அடிப்படையில் நாம் சிந்திக்க வேண்டும். அடையாளம் காண்பதற்காக டெல்லியிலிருந்து இங்கே என்னைக் கொண்டுவந்தபொழுது, எனது தந்தையின் முன்னிலையில் இந்த விஷயம்குறித்துப் புலனாய்வு அதிகாரிகள் சிலர் என்னிடம் பேசினார்கள். ரகசியங்களை வெளியிட்டு எனது உயிரைக் காத்துக்கொள்ள நான் முன்வராத காரணத்தால், எனது வாழ்வில் கொடும் அவலம் குடிகொண்டுள்ளது என்று அவர்கள் சொன்னார்கள். இது போன்ற மரணம், ஏறத்தாழ தற்கொலைக்குச் சமம் என அவர்கள் வாதிட்டார்கள். என்னைப் போன்ற நம்பிக்கைகளும் லட்சியமும் கொண்ட மனிதன் வாழ்க்கைப் பயனெய்தாமல் மரணத்தைத் தழுவ எண்ணமாட்டான். எந்த அளவு அதிகப் பயன்மிக்கதாக இருக்கவேண்டுமோ அந்த அளவு பயன்மிக்கதாக நமது வாழ்வு அமைவதையே நாம் விரும்புவோம். சாத்தியமான அளவு மனிதகுலத்துக்குச் சேவை செய்யவே நாம் விழைகிறோம். நாம் சேவை செய்வது அவசியமானது. குறிப்பாக, ஒருபோதும் சோகமானதாகவோ, வேதனைக்குறியதாகவோ வாழ்க்கை அமையாத என்னைப்போன்ற ஒருவன், தற்கொலை முயற்சிக்கு-ஏன், அதுகுறித்துச் சிந்திக்கக்கூடத் துணியமாட்டான். இதையே நான் தங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

என்னைப்பற்றி என்ன நினைக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்வதற்கு அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு மரணதண்டனைதான் என்பதில் உறுதியாக உள்ளேன். இதில் ஏதேனும் சிறிதளவாகிலும் மாற்றத்தையோ அல்லது பொதுமன்னிப்பையோ நான் எதிர்பார்க்கவில்லை. பொதுமன்னிப்பு என்று வந்தாலும்கூட, அது எல்லோருக்குமானதாக இருக்காது; அத்தகைய பொதுமன்னிப்பு, மற்றவர்களுக்கு மட்டுமானதாகவே இருக்குமேயன்றி, நமக்கல்ல. அது மிகுந்த கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் கொண்டதாக இருக்கும். நமக்குப் பொதுமன்னிப்பு இருக்கவும் முடியாது; அது ஒருபோதும் நிகழப்போவதுமில்லை. இருப்பினும், நமது விடுதலைக்கான அறைகூவல் கூட்டாகவும், உலகுதழுவிய அளவிலும் விடுக்கப்படவேண்டுமென விரும்புகிறேன். அதனுடன் இணைந்து, இயக்கம் உச்ச நிலையை அடையும்போது, நாம் தூக்கிலிடப்படுவோம் என விரும்புகிறேன். கவுரவமான, நியாயமான சமரசம் கைகூடுமாயின், நமக்கு எதிரான வழக்குபோன்ற பிரச்சனைகள் ஒருபோதும் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது என விழைகிறேன். நாட்டின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறபொழுது, தனிநபர்களின் தலைவிதி மறக்கப்பட வேண்டும். புரட்சிவாதிகளாகிய நாம், ஆட்சியாளர்கள், குறிப்பாக பிரிட்டிஷாரின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்படுமென நம்பவில்லை. தளர்விலா தொண்டு, முயற்சி, சிரமங்களை அனுபவித்தல், தியாகம் புரிதல் ஆகியவையின்றி அப்படிப்பட்ட வியத்தகு மாற்றம் சாத்தியமில்லை. அது சாதிக்கப்பட வேண்டும். பயன்பாட்டில் நிரந்தரமாக இருக்கும்பட்சத்தில், அனைவருக்குமான வசதிகள், பொதுமன்னிப்பு ஆகியவற்றை நான் வரவேற்க இயலும். நம்மைத் தூக்கிலிடுவதன்மூலம் நாட்டுமக்களின் மனதில் நீங்காத பதிவை ஏற்படுத்தலாம். இதுதான். இதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழில்: இளசை மணியன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP