Saturday, October 26, 2013

எமது கரங்களில் ரத்தக் கறை இல்லை!



"என்றைக்கும் இனவாதத்திற்குப் பங்களிப்பு செய்ய மாட்டோம்!"

இலங்கைக் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகடனம்!!

["புரட்சி என்பது புதுமைக் கூத்து!" என்பார் தோழர் ஜீவா. ஆனால், கொலைவெறிக் கொக்கரிப்புதான் புரட்சி என்று புதிய வியாக்கியானம் கொடுக்கத் துடியாய்த் துடிக்கின்றனர் சிலர். மெய்யான மார்க்சீயவாதிகள் என்றுமே பயங்கரவாதத்துக்குத் துணைபோவதில்லை. ஏனெனில், அத்தகைய வழிமுறையால், கம்யூனிசத்தின் எதிரிகளுக்குத்தான் லாபம் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்தவகையில், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இணைபிரியா அங்கமாக விளங்கிவரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.இ.டபிள்யூ. குணசேகரா, அண்மையில் (03.07.2013) அக்கட்சியின் 70-ஆம் ஆண்டுவிழாவில் ஆற்றிய அற்புதமான உரையின் தமிழாக்கம் அப்படியே, இலங்கைத் தமிழில் இங்கு தரப்படுகிறது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, அந்த நாட்டின் இனப் பிரச்சனை உள்ளிட்ட இதர பிரச்சனைகள், சர்வதேச அரங்கில் காணும் நிலவரம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோக்கிய பயணத்தின் வாய்ப்புகள், சவால்கள் குறித்த தெளிவுரையாக அது அமைந்துள்ளது.]

2013 யூலை 03 ஆம் நாள் மகரகமை இளைஞர் அரங்கில் இடம்பெற்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 70 ஆவது வருடாந்த விழாவில் பொதுச் செயலாளர், தோழர் டியூ குணசேகர நிகழ்த்திய உரை:

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே! நண்பர்களே!
  இன்று யூலை 03 ஆந் திகதி எமது கட்சியின் பிறந்த நாள். இன்று நாம் எமது கட்சியின் 70 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பம் என்று  கருதப்படும் ஏகாதிபத்திய விரோத ‘சூரியமல்’ இயக்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா இவ்வாண்டில் நிகழ்கின்றது.
கட்சியின் வரலாறு:
  ஒரு மனிதனுடைய வாழ்வில் 70 ஆண்டுகள் குறிப்பிட்ட அளவு காலமாகும். ஆனால், ஓர் அரசியல் இயக்கத்தின், குறிப்பாக ஒரு சமூக முறையை மாற்றுவதற்கான நீண்டகால குறிக்கோள் கொண்ட ஒரு இயக்கத்திற்கு 70 ஆண்டுகள், வரலாற்றில் குறுகிய காலமாகும்.
  எமது கட்சி காலனித்துவ யுகத்தில் உருவாக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக அது 1943 இல் அமைக்கப்பட்டாலும், அதன் ஆரம்பம் 1930-கள் வரை நீடிக்கப்படுகிறது. சோசலிசக் கட்சியின் அவசியத்தைச் சிந்தித்த எமது இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள், அன்று பூரண சுதந்திரத்தை வென்றெடுக்கும் ஒரு போராட்டத்தின் ஊடாக, பல்வேறு கட்டங்கள் ஊடாக கட்சியை படிப்படியாக வளர்த்தெடுத்தனர்.
  கொழும்பு இளைஞர் சங்கம் (1929), அகில இலங்கை இளைஞர் சம்மேளம் (1931) சூரியமல் இயக்கம் (1933), லங்கா சமசமாஜகட்சி (1935), கொழும்பு தொழிலாளர் கழகம் (1940), சோசலிச ஐக்கியக் கட்சி (1940), இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (1943) என்பன இக்கால கட்டங்களாகும்.
  ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டு செயற்பட்ட தலைவர்கள் மட்டத்திலான ஐவர் முன்னோடிகளாகச் செயற்பட்டனர். டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், எம்.ஜீ.மெண்டிஸ்,  வண. உடகந்தவல சரணங்கர தேரர், ஏ.வைத்தியலிங்கம் என்போரை நாம் நன்றி உணர்ச்சியுடன் நினைவு கூருகிறோம். எமது கட்சிக்கான சிந்தனையையும், தொலைநோக்கையும், சக்தியையும், போராட்டத் தன்மையையும், ஒழுங்கையும் அவர்கள் எமக்கு வழங்கினர்.
  எமது கட்சியின் 70 வது வருடாந்த விழா நடைபெறுகின்ற இச் சந்தர்ப்பத்தில் சூரியமல் இயக்கத்தினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் ஆரம்பத் தலைவர்களான –கலாநிதி என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன, கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தன உட்பட்ட அனைத்துத் தோழர்களையும் நாம் கௌரவத்துடனும், நன்றியுடனும் நினைவுகூருகின்றோம். இது எமது கட்சியின் மரவு.
  இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பத் தலைமைத் தோழர்களின் உறவும், நட்பும் அவர்களின் மாணவர் பருவம் வரை நீடிக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஊடாகத் தேசப்பற்றும், சர்வதேசவாதமும் கொழும்பிலும், லண்டனிலும் அவர்கள் மத்தியில் உருவாக்கம் பெற்றது. பூரண சுதந்திரம், தொழிலாளர் போராட்டங்கள், மலேரியாத் தடுப்பு இயக்கம், சூரியமல் இயக்கம் போன்றே நிலப் பிரபுத்துவத்தையும், காலனித்துவத்தையும், தரகுமுதலாளித்துவத்தையும் எதிர்த்து அப்போராட்டங்கள் இடம்பெற்றன.
  கடந்த 70 ஆண்டுகளில் பல தோழர்கள் தமது உயிரை அர்ப்பணித்தனர். இன்னும் சிலர் சிறைச்சாலைகளிலே தண்டனைகளை அனுபவித்த வண்ணம், பல்வேறு துன்பங்களை, அடக்குமுறைகளை எதிர்நோக்கினர். இன்று, எம்மோடு உயிர் வாழாதவர்களும், எம்மோடு வாழ்பவர்களும் ஆகிய சகல தோழர்களும் கட்சிக்காக தமது ஆற்றலையும், உழைப்பையும், செல்வத்தையும் அர்ப்பணித்தனர். அவர்கள் அனைவரையும் நாம் நினைவு கூருகிறோம். குறிப்பாக, நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்த டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, எம்.ஜீ.மெண்டிஸ், வண. உடகந்தவல சரணங்கர தேரர், வீ.ஏ.சமரவிக்கிரம, டீ.பீ.யசோதியஸ், டபிள்யூ.எஸ்.த சில்வா ஆகிய தோழர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
  எமது கட்சி சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செயற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் 47 ஆண்டுகளும், மூன்று கூட்டமைப்பு அரசாங்கங்களின் கீழ் 23 ஆண்டுகளும் செயற்பட்டுள்ளது.
  எமது கட்சி, தோல்விகளையும், பின்னடைவுகளையும், தடைகளையும் எதிர்நோக்கியுள்ளது. அதேசமயம், பல்வேறு வகையான பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும் முகம்கொடுத்துள்ளது. எமது கட்சி எதுவித தவறுகளையும் செய்யாத ஒரு கட்சி என்று கூறவரவில்லை. எமது கட்சி நடந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருத்தி, மக்கள் முன் பகிரங்கமாக தவறை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சியாகும். அதற்கான உள்ளாந்த சக்தி எம்மிடம் இருந்தது. எமது கட்சி சுயவிமர்சனத்தை மதிக்கின்ற ஒரு கட்சியாகும். தந்திரோபாய ரீதியிலும், மூலோபாய ரீதியிலும் நாம் தவறுகளை இழைத்துள்ளோம். ஆனால், ஒருபோதுமே பயங்கரவாதத்தை எமது கட்சி அரவணைக்கவில்லை. எமது கைகளில் இரத்தம் படியவில்லை. அரசியல் இலாபம் கருதாது நாம் அரசியல் கொள்கைகளில் ஈடுபட்டு இருந்து வந்துள்ளோம்.
தேசியம், சர்வதேசியம்
நாணயத்தின் இருபக்கம்:
  நாம் என்றுமே இனவாதத்திற்கு பங்களிப்புச் செய்த கட்சியல்ல. வரலாறு முழுவதும் வன்முறையையும், பயங்கரவாதத்தையும். அராஜகவாதத்தையும் நாம் புறக்கணித்து வந்துள்ளோம்.
  தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடு தவறற்றது என்பதை நாம் வரலாறு மூலம் நிரூபித்துள்ளோம். சில கட்சிகள் தாமதித்தேனும் எமது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை பற்றி நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கட்சியின் கொள்கை நிலைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு முற்பட்டதனால் தலைமை மட்டத் தலைவர்கள் பலர் (வடக்கிலும், தெற்கிலும்) தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.
  எமது நாட்டின் சமூக அபிவிருத்தியில் இடதுசாரி இயக்கத்தின் ஏனைய தோழமைக் கட்சிகளுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பங்களிப்புச் செய்துள்ளோம். எமக்கே உரித்தான அரசாங்கத்தை நாம் உருவாக்காவிட்டாலும், எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு, கூட்டமைப்பு அரசாங்கங்களின் பங்காளர்களாக எமது அறிவையும், அனுபவங்களையும், ஆற்றலையும், சிந்தனையையும், எண்ணக் கருக்களையும்,  நாட்டுப் பொதுமக்களின் நன்மைக்காக நாம் பங்களிப்புச் செய்துள்ளோம். இன்றைய இலங்கையின் எழுத்தறிவு, கல்வி மட்டம், சுகாதார சேவைகளினதும், சமூகப்பாதுகாப்பினதும் வளர்ச்சி பற்றி நாம் பெருமைப்படுகின்றோம். எமது அயல் நாடுகளைவிட இத்துறையில் நாம் முன்னேறியுள்ளோம். இது எவ்வாறு நடந்துள்ளது? இரண்டு சட்டசபைகளினதும், பாராளுமன்றத்தினதும் ஹன்சாட் அறிக்கைகளின் பக்கங்களைத் திறந்து பார்த்தால் இதற்கான விடைகளைக் கண்டுபிடிக்க முடியும். இடதுசாரி இயக்கத் தலைவர்களின் அறிவு ரீதியான பங்களிப்பு சமூகச் சிந்தனைக்கு பாரிய வகையில் சேவையாற்றி உள்ளது.
  1930 களில் இருந்து, இலங்கையின் தொழிலாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், அரச ஊழியர்களுக்கும். ஆசிரியர்களுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்களது உரிமைகளை வழங்குவதற்கு நாம் செயற்பட்டுள்ளோம். போராட்டங்களின்மூலமே இவற்றை வென்றெடுத்தோம். நாம் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை மழுங் கடிக்கவில்லை. அவற்றை விகாரமடையச் செய்யவில்லை. நாம் மாணவர்களின் அறிவை வளர்க்கச் செயற்பட்டோம். பல்கலைக்கழகங்கள் கல்விமான்களை உருவாக்கும் நிலையங்களாகின. ஆனால், இன்றுபோல் அவை பயங்கரவாதத்திற்கும், பணத்தைக் கொள்கையிடுவதற்கும், ஊழல்களுக்கு இரையாக்குவதற்கும் எமது மாணவர்கள் இடமளிக்கவில்லை. தேசப்பற்றும், சர்வதேசவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனக் கருதி நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டோம். இன்று உலகின் வேறு நாடுகளின் போராட்டங்களிலும் எமது நாட்டு மக்கள் சகோதரத்துவத்தையும், ஒத்துழைப்பையும் காட்டுவதற்கு, மேற்படி விளக்கமும் அனுபவமும் காரணமாக அமைந்தன. சோசலிய நாடுகளின் மக்களுக்கும் எமது நாட்டு மக்களுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கு நாம் மேற்கொண்ட செயற்பணியையிட்டு நாம் பெருமைப்படுகிறோம்.
தேசியக் கொள்கைகளை உருவாக்குவதில், எண்ணக் கருக்கள், கொள்கைகள் தொடர்பாக சட்டரீதியாகப் பங்களிப்புச் செய்துள்ளோம். குறிப்பாக தொழிநுட்ப மயமாக்கல், கமத்தொழிலை நவீனமயப்படுத்தல், நீர்ப்பாசனத் திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகள், சூழல், கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டங்கள் ஆகிய கருப்பொருட்கள் தொடர்பாக நாம் சக்திவாய்ந்த வகையில் பங்களிப்புச் செய்துள்ளோம்.
ரத்தக் கறைபடியாத கட்சி:
  எமது கட்சியின் பெருமைமிகு வரலாற்றில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் காணமுடியாது. எமது கைகளில் இரத்தக் கறை படியவில்லையென அதனாலேயே கூறுகிறோம். பயங்கரவாதம் கம்யூனிஸ்ட்களின், மார்க்சிஸ்ட்டுகளின் வழிமுறை அல்ல. தேசிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டகாலங்களில்கூட, போராடி இறந்தாலேயொழிய, எதிரியையும் கொலை செய்வது தடையாக அமைந்தது. துன்புறுத்துதல் தடை செய்யப்பட்டிருந்தது. வியட்நாம் மற்றும் கியூபாவின் தேசப்பற்றாளர் போராட்டம் இதற்குச் சிறந்த முன்னுதாரணம் ஆகும். மக்களை வாழ வைப்பதேயொழிய அவர்களைக் கொலை செய்வது கம்யூனிஸ்ட்களின் தேவை அல்ல. ஏனெனில், கம்யூனிஸ்ட் வாதிகள் உலகின் மிக உன்னதமான மனிதாபிமானிகள் ஆவர்.
  கருத்தியல் துறையிலும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நாம் நடத்தவேண்டி இருந்தது. மூட நம்பிக்கைகள், பழமையான கருத்துக்கள் ஆகியவற்றிற்கு எதிராக, விஞ்ஞான ரீதியான கண்ணோட்டமும், தொலைநோக்கையும் ஏற்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாம் செயற்படத் தொடங்கினோம். இதற்கு, முற்போக்குக் கருத்துக்களை பிரபல்யப் படுத்துவதற்கான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன. இது விடயமாக பல சகோதர சகோதரிகள் அயராது உழைத்தனர். வண. உடகந்தவல சிறி சரணங்கர தேரர், பீட்டர் கெனமன், ஹேடி கெனமன், கே.ராமநாதன், ஈ.எஸ்.ரத்னவீர, பிரேமலால் குமாரசிறி, ஹரி அபேகுணவர்த்தன, என்.சண்முகதாசன், எச்.ஜீ.எஸ்.ரத்னவீர, நிமால் கருணாதிலக, ஹேமா த சில்வா, பி.ஏ.சிறிவர்தன, சுரத் அம்பலாங்கொட, எச்.எம்.பீ.மொஹிதீன், பீ.மலல்கொட, பீ.ராமநாதன், எஸ்.கந்தசாமி, பசில் பெரேரா, மோட் கெனமன், ஏ.ஏ.லத்தீப் போன்ற எம் மத்தியில் இன்று உயிர்வாழாத அனைத்து தோழர்களையும் நாம் கௌரவத்துடன் நினைவு கூருகிறோம்.
  இக்கடமைகளின் போது எமது சில பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் என்போருக்கு 15 வருடங்கள் வரை கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, வண. உடகந்தவல சிறி சரணங்கர தேரர், பெனட் சில்வா, டீ.பி.யசோதிஸ், ஆகியோர் சிறைவைக்கப்பட்டனர். முதலாவது அரசியல் அமைப்பின் உறுப்புரை 13(3)இன் கீழ் டாக்டர் விக்கிரமசிங்கவின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. 1947 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்கு கடந்த காலத்தில் இருந்து செல்லுபடியாகக் கூடிய வகையில் அரசியல் அமைப்பில் மேற்படி வாசகங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. வரலாற்றில் முதலில் சிறைத் தண்டனை பெற்ற ஊடகவியலாளரும் வெளியீட்டாளரும் எமது கட்சி உறுப்பினர்களாவர்.
  எமது கட்சியின் தேசிய மகாநாடு எமது இயக்கத்தினதும், நாட்டின் முன்னேற்றத்தினதும், நாட்டு வரலாற்றின் வெற்றிகரமான தன்மையினதும் விபரங்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் போதாது.
  கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் சுயாதீனத்தைப் பூரணப்படுத்துவதற்கும், தேசிய சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், ஜனநாயக தேசிய முன்னணி ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தினோம். 1950 இல் இடம்பெற்ற நான்காவது தேசிய மகாநாடுமூலம், இலங்கைப் புரட்சியின் பல்வேறு கட்டங்கள், பரந்துபட்ட முற்போக்கு முன்னணியின் அவசியம், அதில் பங்காற்றவேண்டிய சமூக சக்திகள் என்பவற்றை அடையாளங் கண்டது. அன்று, பரந்துபட்ட கூட்டமைப்பு என்பது இடதுசாரி இயக்கத்திற்கு உசிதமாக அமையவில்லை. ஆனால், மேற்படி வரலாற்றுக் கடமைக்காக நாம் தீவிரமான கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது கட்சிக்குள்ளேயே நிலவிய கோட்பாட்டு வாதத்திற்கு எதிராக உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுத்தோம். சமூக அபிவிருத்தி, முன்னணிப் பயணத்திற்கான வரலாற்றுத் தேவையாக அமைந்த சகல பகுதியினரதும் கூட்டு அரசாங்கம் என்பன மேற்படி கருத்தியற் போராட்டத்தின் தெளிவான பெறுபேறாகும்.
நழுவிய வாய்ப்பு:
  1947 பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் இத்தகைய முற்போக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அன்று, ஸ்ரீ நிசங்கவின் இல்லத்தில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'ஜமுனா" மாநாடு இத்தகைய ஓர் இழந்த சந்தர்ப்பமாகும். அது வெற்றியீட்டி இருப்பின், சுதந்திரத்தின் பின்னர் உருவாகும் முதல் அரசாங்கம் முற்போக்கான அரசாங்கமாக அமைந்திருக்கும். 1956 இல் பெற்ற மக்கள் வெற்றியை, 1947 இல் வென்றெடுத்திருக்க முடியும். நாம் எதிர்நோக்கும் தேசிய இனப்பிரச்சினையை தவிர்த்துக் கொண்டிருக்கலாம். இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை 1947 இலேயே ஆரம்பித்திருக்க முடியும். தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நோக்குகையில்,  இன்று அவர்கள் அனுபவித்து வரும் சகல உரிமைகளும், சலுகைகளும் நாம் போராட்டங்கள்மூலம் வென்றெடுத்தவையேயாகும். குறிப்பாக ஓய்வூதியம் மற்றும் சேமலாப நிதி என்ற வகையில் இன்று மாத்திரமல்ல,  நாம் எப்போதுமே தேசிய ஐக்கியத்திற்காகவே போராடி வந்துள்ளோம். இனவாதத்திற்கும், வகுப்புவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும், சகலவிதமான பிரிவினை போக்குகளுக்கும் எதிராக நாம் போராடியுள்ளோம். இப்போக்குகள் இன்று தொழிற்சங்க இயக்கங்களிலும் புகுந்துள்ளன. நாம் இச் சவாலை எதிர்நோக்க வேண்டும்.
  காலனித்துவத்திற்குப் பின்னரான புதிய தாராளவாத யுகத்தில், புதிய தோற்றப்பாடு அரச சார்பற்ற நிறுவனங்கள்மூலம் உருவாகியுள்ளன. தொழிற்சங்க இயக்கத்தினதும். இடதுசாரி இயக்கத்தினதும் இயங்குனர்களைக் கவர்ந்திழுக்கும் சதி - வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிமூலம் மிக சூசகமான முறையில் தொழிற்சங்க இயக்கத்தையும் இடதுசாரி இயக்கத்தையும் பலவீனப்படுத்தியுள்ளன. இது பல்தேசிய நிறுவனங்களின் உள்நோக்கமாகும். இலங்கையர்களாகிய எமக்கு இது பெரும் துன்பங்களையும், தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கும் இது பாரிய அச்சுறுத்தலாகும்.
  தொழிலாளி வர்க்க இயக்கம் எதிர்நோக்கும் மற்றுமொரு தோற்றப்பாடு இருக்கிறது. அது சிறப்புரிமைகளையும், நுன்மைகளையும் பெறும் அரசியலாகும். தோட்டத்துறையில் இந்தத் தோற்றப்பாடு தொழிற்சங்கத் துறைக்கும், அரசியல் துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் நோயாகும். அது, தற்போது அரச துறையிலும் ஊடுருவி உள்ளது. தோழர்களே, 1991-இல் சோசலிச முறைமை வீழ்ச்சியடைந்ததன் பின்பு இடதுசாரி இயக்கத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது. 'வரலாற்றின் முடிவு" என்று சில சித்தாந்த நிபுணர்கள் எதிர்வு கூறினர். அன்று இவ்வாறாக எதிர்வு கூறியவர்கள் இன்று பேசாமடந்தைகளாகி உள்ளனர். செத்தவர்களைப் போல அமைதியாக இருக்கின்றனர். இன்னும் சிலர் 15 ஆண்டுகளின் பின்னர் தமது நிலைப்பாட்டில் இருந்து பகிரங்கமாகவே பின்வாங்கியுள்ளனர். புதிய தாராளவாதத்தின்மூலம் அற்புதங்களை எமக்குக் காட்டியவர்கள், தற்போது எதைஎதையோ பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார அதிர்ச்சிகளைப் பற்றி கூக்குரலிடுகின்றனர். நிதித்துறையில் மிதிவெடிகளின் ஊடே பயணிக்க நேர்ந்துள்ளது எனப் பிதற்றுகின்றனர்.
சோவியத் வீழ்ச்சிக்குப்பின்:
  தோழர்களே!
  சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் உலக சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அது மீண்டும் மாற்றம் அடையத் தொடங்கியுள்ளது. இம்மாற்றம் முற்போக்கு இயக்கத்திற்கு நன்மையளிக்கக் கூடிய வகையிலே இடம்பெற்று வருகிறது. இது, வரலாற்று ரீதியாக அவ்வாறு இடம்பெற வேண்டியதொன்றாகும். இயக்கவியல் ரீதியாக அவ்வாறே இடம்பெற வேண்டும். புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள், தமது உள்ளார்ந்த முரண்பாடுகள் ஊடாக நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளன. புதிய தாராளவாத பொருளாதார மாதிரியினுள் அது நெகிழ்ச்சியான தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தனியார்மயமாக்கல், நிதிமயமாக்கல் என்பவைமூலம் புதிய உலகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்பு இல்லாதவர்களின் வளர்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. வறுமையும், வேலைவாய்ப்பின்மையும்,
போசாக்கின்மையும், சமூகசேவைகளின் சீரழிவும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நோய்நொடிகள், இனத்துவ மோதல்கள், மதரீதியான மோதல்கள், பிரிவினைவாதப்போக்குகள், பயங்கரவாதம், பாதாள உலகம், என்ற வகையில் இயற்கையின் அனர்த்தங்களைப் போலவே மனிதனால் உருவாக்கப்படுகின்ற செயற்கை அனர்த்தங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
  விஞ்ஞானமும், தொழிநுட்பமும் துரித வேகத்தில் வளர்ச்சியடைந்தாலும், அரசியல் ரீதியில் உறுதியின்மை, பொருளாதாரரீதியில் நெருக்கடிகள், நெறிமுறைகளின் பாதுகாப்பு இல்லாத உலகம் என்பன தற்போது சிருஷ;டிக்கப்பட்டுள்ளன. இது நவ தாராளவாதத்தின் நெருக்கடியாகும்.
  இச் சவால்களுக்குத் துலங்கலாகப் புதிய மற்றும் நவீன பொருளாதார மாதிரிகள் மாற்று மாதிரிகளாக உருவாகியுள்ளன. மக்கள் இயக்கத்தின் ஊடாக இவை முன் நகர்த்தப்படுகின்றன. பல்துருவ உலகம் சிருஷ;டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உலக சமநிலையும் மாற்றம் அடைகிறது. புதிய பொருளாதார மையங்கள் உருவாகின்றன.
  இலத்தீன் அமெரிக்காää நவ தாராளவாதத்தை ஆய்வுக்குட்படுத்தியது. முதலாவதாக இதனைப் பரீட்சித்த கண்டம் இலத்தீன் அமெரிக்காவாகும். ஆக்கிரமிப்பும், தாக்குதல்களும் தீவிரமடைந்த, நவ தாராளவாதம் விரிவாக்கப்பட்ட கண்டமே இலத்தீன் அமெரிக்கக்கண்டம். இக் கண்டத்தின் 13 நாடுகள், முற்போக்கான இடதுசாரி அணியைச் சார்ந்த ஜனநாயக அரசாங்கங்களை பதவியில் அமர்த்தியுள்ளன. இந் நாடுகளில் பல்வகைப்பட்ட மாற்றுப் பொருளாதார மாதிரிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இலத்தீன் அமெரிக்காவின் வரைபடம் குணாம்ச ரீதியில் மாற்றம் அடைந்துள்ளது. அங்கு பௌதீக மனித வளங்கள் ஒன்று திரட்டப்பட்டு, பொருளாதார ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் செலக் (CELAC) என்ற பெயரில் 33 இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளன. கியூபாவின் ‘சீனி’ பொருளாதாரம் தற்போது ‘அறிவு’ பொருளாதாரமாக மாறி வருகிறது. இது எமக்கு தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த நாடுகளில் இனவாத, பிரிவினைவாத, அடிப்படைவாதப் போக்குகளுக்கு இடமில்லை. இனவாதத்தை தோளில் சுமந்துகொண்டு செம்பதாகைகளை ஏந்திய வண்ணம் எமது நாட்டில் நடமாடும் சிலருக்கு இலத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கம் சிறந்த உதாரணமாகும். சோசலிசத்தின் அடிப்படைகளுக்கான தேடலில் ஈடுபடுவதற்கு இது அவர்களுக்குச் சிறந்த சந்தர்ப்பமாகும்.
  இலத்தீன் அமெரிக்காவின் “தென் வங்கி" (Bank of the South) என்ற பெயரில் புதிய வங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெனிசியூலா, ஆர்ஜன்டைனா, பிரேசில், பொலீவியா, இக்வதோர் மற்றும் பெரகுவே ஆகிய நாடுகள் இப்புதிய வங்கியை ஆரம்பித்துள்ளன. மூலதனத்தின் உரிமையை அடிப்படையாகக் கொள்ளாமல், நாடுகளின் தேவைக்கேற்ப, இவ் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தையோ, நிதி அதிகாரத்தையோ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வங்கியல்ல. இதற்குச் சமாந்திரமாக "எல்பா வங்கி" (Bank of the Alba) என்ற பெயரில் மற்றுமோர் வங்கி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார ஒருங்கிணைப்பிற்கான வங்கியாகும். எதிர்காலத்தில் உலகின் சர்வதேச நிதி நிறுவனமாக இது அமைய முடியும். உலக வங்கியினதும், சர்வதேச நிதி நிறுவனத்தினதும் கொள்கைகளுக்கு இது முரணான வங்கியாகும். இந்த அபிவிருத்திப் போக்கிற்கு ஆசியாவின் பொருளாதார பூதங்களின் பாரிய எழுச்சி பெரிதும் உதவியுள்ளது. "பிரிக்ஸ்" (BRICS) என்ற பெயரிலான புதிய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா உட்பட்ட நாடுகள் இவ் அமைப்பின்மூலம் மேற்கத்தைய ஏகபோகத்திற்கு சவால் விடுத்துள்ளன. உலக சனத்தொகையில் 40 சதவீதம் இந்த அமைப்பின் கீழேயே வாழுகின்றன.
  "ஷங்கை கோப்பரேஷன்" என்ற பெயரில் மற்றுமொரு அமைப்பு உருவாகியுள்ளது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான், கஸக்கஸ்தான், ரிப்பிக்கிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் இவ் அமைப்பில் உள்ளடங்குகின்றன. தற்போது இந்தியாவும் இந்த அமைப்பில் இணையப்போகிறது. இது மற்றுமொரு சாதகமான வளர்ச்சியாகும். உலகம் ஸ்தாபன ரீதியாக மாறுபடுவதை இதன்மூலம் காண முடிகிறது.
மனிதகுலத்தின் எதிர்காலம்:
  தோழர்களே!
  இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் கீழ் அல்லது அதிகாரத்தில் பங்காளர்களாக உள்ள நாடுகளில் உலக சனத்தொகையின் 40 வீதமான மக்கள் வாழுகின்றனர். மேலும் இடதுசாரிகள் பல நாடுகளில் அதிகாரத்தில் உள்ளனர். நீண்டகால மாற்றீடாக உலக சனத்தொகையின் அரைவாசிப் பேர் சோசலிசத்தைத் தெரிவு செய்துள்ளனர். எனவே, சோசலிசம் கடந்த காலத்திற்கு மாத்திரம் உரித்தானது அல்ல. மனித இனத்தின் எதிர்காலம் சோசலிசமே. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 30 ஆண்டுகளில், அதாவது 1978 முதல் நவீனமயமான ஒரு மாபெரும் சக்தியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இத்தகைய செயற்பாடு வியட்னாமிலும் இடம்பெறுகிறது. இப்போது லாவோசிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டு காலத்திற்குள் 680 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து விடுவித்துள்ளது. நூற்றுக்கு 86 வீதமாக இருந்த வறுமையை 10 வீதமாக சீனா குறைத்துள்ளது. 
  எமது அயல் நாடான நேபாளம் (புத்த பகவான் பிறந்த நாடு) தென்னாசிய பிராந்தியத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு நாடு. அங்கு நிலவிய ஒரே இந்து அரசனின் ஆட்சிக்குப் பதிலாகப் புதிய குடியரசு உருவாகியுள்ளது. அங்கு செயற்படும் இரண்டு கம்யூஸ்;ட் கட்சிகள் நாட்டின் பிரதானசக்தியாக மாறியுள்ளன. அவர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் வேறுபாடு இருந்தாலும், புதிய முற்போக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்கியுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. நேபாளத்தில்,  மதச்சார்பற்ற (Secular), ஜனநாயக, சமஷ்டியுடனான, ஆள்புல ஒருமைப்பாடு கொண்ட ஒருங்கிணைந்த அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி அரசியல் அமைப்புச் சபையின் தவிசாளராக இன்று எமது வருடாந்த விழாவில் பங்குபற்றும் தோழர் மாதவ் குமார் நேபாள் கடமையாற்றியுள்ளார்.
தோழர்களே!
  எமது நாட்டில் நவ தாராள பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்தோடு 35 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை அரவணைத்துக் கொண்ட எமது நாடு, எமக்குப் பாதகமான, பல தீமைகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் போக்குகளை எதிர்கொண்டது. இயற்கை அனர்த்தங்களுக்கு மேலதிகமாக இனரீதியான பேரையும் நாம் எதிர்நோக்கினோம்.
ஓரளவு அதிலிருந்து விலகிச் சென்றாலும் மேற்படி சட்டகத்திற்குள் நாம் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இன்றைய சமூக நெருக்கடிக்கான காரணம் அதுவே.
தேசிய ரீதியாக நாம் எதிர்நோக்கும் முக்கிய நான்கு சவால்கள் உண்டு.
முதலாவது: தேசிய இனப் பிரச்சினை
  போர் ஓய்வடைந்த பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வரலாறு மீண்டும் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அறிவுபூர்வமான ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளவேண்டும். எமது நாட்டு வரலாற்றில் இருந்தும், ஏனைய நாடுகளின் வரலாறுகளில் இருந்தும் நாம் பாடங்களைக் கற்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்களாக வாழும் மக்களுக்கு, தன்னபிமானமும், கௌரவமும், அடையாளமும் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொழிப் பிரச்சினையில் இருந்து நாம் விட்ட தவறைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியை அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்வதை எதிர்த்த நாம் 30 ஆண்டுகளின் பின்னர் அரசியல் அமைப்பின்மூலம் தமிழ் மொழியை அரச கரும மொழியாக ஏற்றுக்கொண்டோம். வெகு அண்மையிலேயே அது அமுலுக்கு வந்தது. மேலும் 20 வருடங்களின் பின்னரே அது நிகழுகின்றது. தற்போது சகல கட்சிகளும் தமிழ் மொழியை அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளுகின்றன. அன்று அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட அழிவுகள்தான் எத்தனை?
  அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும். இத்தகைய அனாவசியப் பயமே நாட்டில் நிலவுகிறது. மனதில் கற்பனை செய்துகொண்ட ஒரு பயம் இருக்கிறது. தமது வாக்குகளின் அடிப்படையை இழந்துவிடுவோம் என்ற அர்த்தமற்ற பயமே இது. தேசிய இனப் பிரச்சனைகளில் நாம் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டும். சமூகச்சிந்தனையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தலைவர்களைச் சார்ந்தது. திடசங்கற்பமும், அர்ப்பணிப்பும், ஊசலாடாத் தலைமையும் இதற்கு அத்தியாவசியமாகும். இவ்விடயத்தில் நாம் நெல்சன் மண்டேலாவிடம் பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது: புதிய அரசியலமைப்புக்கான அவசியம்
நாம் 25 ஆண்டுகள் சோல்பரி அரசியல் அமைப்பின் கீழும், 6 ஆண்டுகள் முதலாவது குடியரசு அரசியல் அமைப்பின் கீழும், 35 ஆண்டுகள் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசியல் அமைப்பின் கீழும் உயிர்வாழ்ந்துள்ளோம். பின்னோக்கிப் பார்க்கும்போது சுதந்திரத்தின் பின்பு, 1978 இன் பின்னர் நிகழ்ந்த குழப்பகரமான நிலைமைகள், முன்னர் செயற்பட்ட அரசியல் அமைப்புக்களின் கீழ் இருக்கவில்லை. ஆங்கில–பிரெஞ்சு–அமெரிக்க அரசியல் அமைப்புக்களின் சாம்பாரே இதன் பெறுபேறு. இது நவ தாராளவாதத்தை நிலைநாட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஓர் அரசியலமைப்பு. சகல துறைகளிலும் குழப்பங்கள் நிறைந்துள்ளன. எனவே, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது: பொருளாதாரத் துறை
  நாம் கடந்த 7 ஆண்டுகளில் துரிதமான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளோம். ஆனால், மேற்படி அபிவிருத்தியின் ஊடாக சமூக நெருக்கடி உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை நாம் சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். இதுபற்றிக் கோட்பாட்டு ரீதியிலும், கொள்கை ரீதியிலும் தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம். மக்களின் வாழ்க்கையின் ஊடாகவே பொருளாதார வளர்ச்சி பிரதிபலிக்கப்பட வேண்டும். திறைசேரியின் ஊடாக இது பிரதிபலிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு துறைகளிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றதா என்பது பிரச்சினைக்குரியது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இது நவ தாராளவாதத்தின் ஒரு குணாம்சமாகும். நவ தாராளவாதம் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட ‘சிலி’ நாடு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
நான்காவது: எமது சர்வதேச உறவுகள்
  அனைத்து நாடுகளின் மக்களோடு நாம் சிறந்த உறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். எனினும் உலகப் போக்கு, உலக அதிகார சமநிலை பற்றிய யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளின் பூகோள ரீதியான உபாய மார்க்கங்களையும், புவியியல் ரீதியான அரசியல் தேவைகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எமது உள்நாட்டுப் ரச்சினைகளை நாமே தீர்த்துக் கொண்டால், எந்தவொரு வெளிநாடும் எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடுகளையோ நிபந்தனைகளையோ விதிக்க மாட்டா. எனவே, எமது தேசியப் பலத்தை மேம்படுத்துவது அவசியமாகும். சர்வதேச ரீதியான நற்பெயரையும் நாம் மேம்படுத்த வேண்டும்.
  எமது கட்சியின் 70 ஆவது வருடாந்த விழாவில் இச் செய்தியையே நாம் மக்கள் முன்வைக்கின்றோம். எமது அழைப்பை ஏற்று பங்குபற்றிய உங்கள் அனைவருக்கும் நல்
வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
(Courtesy: Communist Party of Sri Lanka website)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP