Friday, April 12, 2013

சமூக எதார்த்தவாதி











தோழர் ஜெயகாந்தன், தி ஹிண்டு (THE HINDU) குழுமத்தால் வெளியிடப்படும் "ஃப்ரன்ட்லைன்"  (FRONTLINE) ஆங்கில
மாதமிருமுறை சஞ்சிகையின் நிருபர் எஸ்.துரைராஜுக்கு அளித்த பேட்டி இது. "சமூக எதார்த்தவாதி" (Social realist) என்னும் தலைப்பில், அக்டோபர் 5, 2012 தேதிய இதழில் வெளியான அந்த பேட்டியில், பல்வேறு பிரச்சனைகள்பற்றிய தனது கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். முன்னுரையுடன், கேள்வி-பதில் வடிவில் அமைந்த அந்த பேட்டி தமிழில்-சஞ்சிகை வாசகர்களுக்காக:

சமூக எதார்த்தவாதி
 

"ஜே.கே" என நண்பர்களாலும், தோழர்களாலும் அழைக்கப்படும் தண்டபாணி ஜெயகாந்தன், தனது அறுபதாண்டுக்கால இலக்கியப் பணியில், சமூக அநீதிகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து எழுதுகோல் ஏந்திப் போராடிவருவதற்காகப் பெரும் பாராட்டுக்களை வென்றவர். தலைசிறந்த எழுத்தாளர் என்பதையும் கடந்து, அவர் ஒரு ஈடுஇணையற்ற பேச்சாளர்; இலட்சிய உறுதிகொண்ட திரையுலகப் படைப்பாளி, சாதனைபுரிந்த பத்திரிகையாளர்; அச்சம் அறியாத செயல்வீரர்.

உலகளாவிய அளவில் ஜனநாயகம், சமத்துவம், சமாதானம், முன்னேற்றம் ஆகிய லட்சியங்களுக்காகச் செயல்படுபவர்களுடன் ஓரணியில் கரம்கோர்த்து நிற்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அரசியல் களமானாலும், கலாசாரக் களமானாலும் தனது கருத்துக்களை நிகரற்ற துணிச்சலுடனும் மிகவுயர்ந்த நேர்மையுடனும் வெளிப்படுத்திவருபவர் அவர்.

விருதுகளும் பட்டங்களும் அவரைத் தேடிவந்து குவிந்திருக்கின்றன. ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் விருது,  ரஷ்ய அரசின் நட்புறவு விருது ஆகியவை அவற்றுள் சில.

ஜெயகாந்தன், 1934-ல் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். அவருடைய தாயாரும், தாயாரின் சகோதரர்களும் அவரிடத்தில் தேசபக்த உணர்வை ஊட்டி வளர்க்க, ஓர் ஆரோக்கியமான சூழலில் வளர்ந்தார்.  ஐந்தாம் வகுப்புடன் பள்ளியிலிருந்து விடுபட்ட அவர், 1946-ல் தனது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு, ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.  உண்மையில் அதுதான், உலக இலக்கியம், கலாசாரம், அரசியல், பொருளாதாரம், பத்திரிகையியல் எனப் பல்வேறு துறைகளில் அவரது ஞானத்தை விருத்திசெய்த பல்கலைக்கழகமாக ஆனது. போற்றற்குரிய இலக்கியப் படைப்புகளை நல்கிய மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்களான ப.ஜீவானந்தம், ஆர்.கே.கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோருடன், கம்யூன் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிணைப்பு, இலக்கிய உலகம் குறித்த அவரது பார்வையைச் செழுமைப்படுத்தியது.

கம்யூன் உறுப்பினர்களிலேயே மிகவும் இளையவரான ஜெயகாந்தனுக்கு முழுவளர்ச்சிபெற்ற எழுத்தாளராக மலர்வதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. அவரது முதல் சிறுகதை 1953-ல் வெளியானது. அதன் பிறகு அவர் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்ததில்லை. சமுதாயத்தில், கடைக்கோடியில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் கதைகளின்மூலம் அவர் வெளிக்கொணர்ந்தார். அதுகாறும் மற்றவர்களால் சொல்லப்படாத நடுத்தரவர்க்கத்தினர் மற்றும் உயர்சாதியினரின் பல்வேறு பிரச்சனைகளைத் தொட்டுக்காட்டியதன்மூலம் தமது இலக்கிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டிருந்த அந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்க, புகழ்மிகு தமிழ்ப்பத்திரிகைகள் நீயா-நானா என்று போட்டியிட்டன.

 ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று கதைகளான 'அக்கினிப்பிரவேசம்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'கங்கை எங்கே போகிறாள்?' ஆகியவை, மனித உறவுகளின் நுணுக்கங்களைச் சித்தரிப்பவையாகும்.  'ஊருக்கு நூறு பேர்', 'கைவிலங்கு' ஆகியவை மரணதண்டனை, சிறை வாழ்க்கை, ஆகிய பிரச்சனைகளை அவர் எத்தனைத் திறனுடன் கையாண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன.

கதையல்லாத படைப்புகளைப் பொறுத்தவரை, 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்', 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்', 'யோசிக்கும் வேளையில்' ஆகிய படைப்புகள் பரந்த அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. அவருடைய முன்னோடிகள் சிலரைப்போலவே சாதனைபுரிந்த எழுத்தாளரான அவரும், 1964-ல் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என அங்கு அவரது பங்களிப்பு பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது. அவரது முதல் திரைப்படமான 'உன்னைப்போல் ஒருவன்', குடியரசுத்தலைவரின் விருதினை வென்றது. அவர் எழுதிய இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 45 நாவல்கள், குறுநாவல்கள், 20 கட்டுரைத்தொகுதிகள், அவர் திரைக்கதை எழுதிய 10 திரைப்படங்கள் ஆகியவை அவரின் படைப்பாற்றலுக்கும் சித்தாந்தப் பிடிப்புக்கும் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.


கேள்வி: இந்திய முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தாங்கள். அந்த இயக்கத்திற்கு எதிர்காலம் உண்டா? உலக இயக்கத்தில் அது குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்க இயலுமா?

ஜெயகாந்தன்: முற்போக்கு என்ற சொல் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தைப் பொறுத்தே முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் எதிர்காலமும் அமையும்.

கேள்வி: அண்மைக்காலம் வரையில் எதார்த்தவாதம், சோஷலிஸ்ட் எதார்த்தவாதம் ஆகியவற்றைப் பின்பற்றிவந்த எழுத்தாளர்கள், பின் நவீனத்துவம் (postmodernism), மாயா எதார்த்தவாதம் (magical realism) எனும் இலக்கிய பாணிகளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். முற்போக்கு இலக்கியத்தின்பால் இந்தப் போக்குகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

ஜெயகாந்தன்: முன்னவற்றைக் கைவிடாத வரைக்கும் இயவற்றினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட முடியாது. அவற்றுக்கு ஊக்கமாகவும் உதவிகரமாகவும் இவை அமைந்தால் நல்லதே!

கேள்வி: அண்டை நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியத் தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், அந்தத் தீவு தேசத்தில் உள்ள தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசுக்குத் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

ஜெயகாந்தன்: இலங்கை இனப்பிரச்சனை அவர்களின் பிரச்சனை. அதை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது சக்தியின் தலையீடு-குறிப்பாக, இந்தியாவின் தலையீடு உதவாது என்றே நினைக்கிறேன். இந்தியாவில் இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறதோ, அவ்விதமே இலங்கையிலும் இது கையாளப்பட வேண்டும். ஆனால், இது காலங்கடந்த யோசனை.

கேள்வி: மரண தண்டனை குறித்த தங்களின் கருத்து நன்கு அறியப்பட்டது. அந்த தண்டனைமுறையை அடியோடு ஒழித்துவிடவேண்டுமென மனித உரிமை அமைப்பினர் கோரவும், குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை நீடிப்பது அவசியமென வேறு சிலர் கூறவும், அந்தப் பிரச்சனைகுறித்த விவாதம் இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளதே?

ஜெயகாந்தன்: மரணதண்டனையைப் பற்றி [மரணம் ஒரு தண்டனையாக இருக்கமுடியாது என்பதால் மரண தண்டனை விட்டொழிக்கப்பட வேண்டும் என] ஏற்கனவே கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அதில் ஒருவித மாற்றமும் இல்லை. தண்டனை, குற்றங்களைக் குறைக்க உதவாது.

கேள்வி: தனிநபர் என்ற முறையில் மகாகவி பாரதியும், ஒரு வரலாற்று நிகழ்ச்சி எனும் வகையில் ரஷ்யாவில் நிகழ்ந்த மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியும்தான் தங்களை எழுதத்தூண்டிய உந்து சக்திகள் எனப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்த யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் உள்ளன. எழுத்தாளர் என்கிற வகையில் தங்கள்பால் அது ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுகூர வேண்டுகிறோம்.

ஜெயகாந்தன்: அது உலகின் கண்களைத் திறந்திருக்கிறது. அந்த வெளிச்சத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் பின்னடைவு என்பதே கிடையாது. அதில் ஏற்பட்ட தவறுகளை மாற்றிக்கொள்வதிலோ, திருத்திக் கொள்வதிலோ தவறு ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது அவசியமான நடவடிக்கை. அதுதான் சோவியத் யூனியனிலும் நடந்திருக்கிறது என்று கருதுகிறேன். இது ஒரு பின்னடைவு அல்ல. இதனால் தாக்கம் பெற்றவர்கள், இதிலிருந்து படிப்பினையும் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: தங்களைப் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆதர்சமாக இருந்த சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது. சோஷலிஸ்ட் முகாமோ தகர்ந்துபோனது. இது சோஷலிசத்தின் தோல்வியைக் குறிக்கிறதா அல்லது சோஷலிசத்திற்கு இது தற்காலிகப் பின்னடைவா?

ஜெயகாந்தன்: இது ஒரு சரிவே அல்ல. இதிலிருந்து படிப்பினைகள் பெறும் பட்சத்தில், இது பயனுள்ள மாற்றமே!

கேள்வி: குழந்தைப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர் தாங்கள். உலகு தழுவிய முறையிலும், தேசிய அளவிலும் நிலவுகின்ற அரசியல் சூழலில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?

ஜெயகாந்தன்: கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கியம் என்ற நிலை மாறி, "கம்யூனிசம்" என்கிற சொல்லும், பொருளும் எல்லா கட்சிகளையும் பாதித்துச் செயல்படத் தூண்டியிருப்பது இதன் சாதனையாகும். கட்சி கடந்த, சகல கட்சிகளையும் சார்ந்த ஒரு தத்துவமாகக் "கம்யூனிசம்", "சோஷலிசம்" என்ற வரையறைகள், கருதுகோள்கள் உருவாகிவருகிற காலம் இது.

கேள்வி: பெண்மைக்கு எதிரான போக்குகளையும் அவர்கள்மீதான பாலியல்ரீதியிலான தாக்குதல்களையும் சாடுவதற்கு உங்கள் எழுதுகோல் என்றுமே தயங்கியதில்லை. தேசங்களுக்கிடையிலான ஆயுத மோதல்களின்போதும், உள் நாட்டில் சாதி-மதக்கலவரங்களின்போதும் பெண்களும் குழந்தைகளும் தான் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது கசப்பான உண்மை. இருப்பினும், இதுபோன்ற அக்கிரமங்களுக்கு எதிரான குரல் இப்போது வலுப்பெற்றிருப்பது ஓர் ஆறுதலான விஷயமல்லவா?

ஜெயகாந்தன்: எப்போதுமே ஒரு மாற்றம் என்று வருகிறபோது, அதில் ஆண்கள்-பெண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் இந்தக் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதன் வளர்ச்சியும், தொடர்ச்சியுமாகும் இன்றைய நிலை.

கேள்வி: அன்னா ஹசாரே தலைமையில் உள்ள குழு உட்பட சிவில் சொசைட்டி குழுக்கள் ஊழலுக்கு எதிராகக் கலகக்கொடியை ஏந்தியிருக்கிறார்கள். ஊழல் என்பது தேசத்தைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கிற பூதாகாரமான விஷயம் என்று தாங்கள் கருதவில்லையா?

ஜெயகாந்தன்: ஊழலற்ற சமூகம் என்பது கம்யூனிசம் போன்றதொரு முற்போக்கான கற்பனைதான். எல்லா சமூகத்திலும் எப்போதும் ஊழல் இருந்திருக்கிறது. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுதான் மாபெரும் ஊழல். அன்னா ஹசாரேவின் முயற்சியும் அதுதான். ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லா அரசியல் கட்சிகளிலும் உண்டு. அடிப்ப்படையில், தனிச்சொத்துரிமை உள்ள ஒரு சமூகத்தில் ஊழல் உருவாவது இயல்புதான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,இந்தியாவில் தனிமனித உரிமையும், சொத்துரிமையுடன் சேர்த்திருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளில் இது ஒன்று. எனவே, ஊழலும் இங்கு இயல்பாகிவிடுகிறது. உடைமை மறுப்பு என்கிற அடிப்படையில், தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில்தான் ஊழலை ஒழிக்கமுடியும்.

கேள்வி: தாங்கள் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல; வெற்றிகரமான பத்திரிகையாளரும் கூட. பத்திரிகை உலகில் தங்களின் அனுபவம், உங்கள் இலக்கியப் பணியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது? இது போலவே, தங்களது படைப்புலக அனுபவம் பத்திரிகத்துறையில் எவ்வித பிரதிபலிப்பை நிகழ்த்தியது?

ஜெயகாந்தன்: வெற்றிகரமான பத்திரிகையாளன் என்பதை மாற்றிக்கொள்ளுங்கள். வெற்றிகரமான பத்திரிகையாளர் என்பதற்கு என்ன விளக்கம் என்பதை உறுதி செய்யாமல் நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி: பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பையேற்று, சமரசமற்ற போர் நடத்தியிருக்கிறீர்களே?

ஜெயகாந்தன்: சமரசம் (Compromise) பண்ணிக்கொள்வதுதான் வெற்றி என்று சொல்லிக்கொள்கிற சமூகத்தில் சமரசம் செய்துகொள்ளாத (uncompromising) எழுத்தாளர்கள் வெற்றிபெற முடியாது.

கேள்வி: தமிழ்நாட்டில் சில பகுதியினர் தொடர்ந்து மும்மொழித்திட்டத்தை எதிர்த்துவருகின்றரே, இதுகுறித்துத் தங்களின் கருத்து?

ஜெயகாந்தன்: நடைமுறையில் மும்மொழித்திட்டம்தான் இருக்கிறது. இதை எதிர்ப்பது அரசியல். அவர்களும்கூட மும்மொழித்திட்டத்தைத்தான் தமது சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்கள். மொத்தத்தில், மொழிப்பகைமை இல்லாதிருப்பது நல்லது.மும்மொழி என்ன-பன்மொழிக்கலப்பே அவசியம் என்று சொல்வேன்.

கேள்வி: இணையதளம் வலைதளம் ஆகியவற்றைத் தவறாகப் பிரயோகிப்பது குறித்துக் கவலை எழுப்பப்படுகிறது. சமூக ஊடகங்களைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்க நடவடிக்கைகளைக்கூட சிலர் ஆதரிக்கின்றனரே?

ஜெயகாந்தன்: தவறுகளை அனுமதியுங்கள். மனித சமூகம் ஆரம்பத்தில் எதையும் தவறாகப் பயன்படுத்தும். எது அவசியமோ, எது தேவையோ, எது வளர்ச்சிக்கு உதவுமோ அதுவே நிலைக்கும். இதனுடைய 'negative' (எதிர்மறை) அம்சங்கள் காலப்போக்கில் அவர்களாலேயே கைவிடப்படும் என்று நம்புவோமாக!

கேள்வி: கலாசாரக் காவலர்கள் எனும் போர்வையில் செயல்படுவதும், காதலர் தினம், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்குபெறும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள்மீது தாக்குதல் தொடுப்பதுமான சம்பவங்கள் சில பெரிய நகரங்களில் அதிகரித்துவருகின்றனவே?

ஜெயகாந்தன்: ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு மற்றொரு மனிதனின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது; ஏனெனில், அது சமூகப்பிரச்சனை ஆகிவிடும். சுயமரியாதை உள்ளவர் எவரும் இதுபோன்ற காரியங்களில் இறங்க மாட்டார்கள்.

கேள்வி: மாநிலப் பிரச்சனைகள் தீர்க்கப்படாத காரணத்தால் இந்தியா சிதறுண்டுபோய்விடும் என்று சில குழுக்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனவே, அத்தகைய அச்சத்திற்கு ஏதேனும் அடிப்படை உண்டா?

ஜெயகாந்தன்: எதனாலும் இந்தியா துண்டுதுண்டாகிவிடாது. அதுமாதிரி பயமுறுத்திப் பேசுவது ஒரு அரசியல். இவற்றை மாநிலப் பிரச்சனையாகப் பார்க்காமல் தேசியப்பிரச்சனையாகப் பார்த்தால் இதைத்தவிர்க்கலாம்.

கேள்வி: சரித்திர நாவல்களை எழுதும்போது முற்போக்கு எழுத்தாளர்கள் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்?

ஜெயகாந்தன்: இதில் எழுத்தாளர்களுக்கு ஒருங்கிணைந்த/முழுமையான (comprehensive) பார்வை வேண்டும். சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்துகொண்டு...அதிலும் பிரச்சனை இருக்கிறது..எல்லாவற்றைப்பற்றியும் ஒட்டுமொத்தமான பார்வை இதில் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் சமதளத்தில் (balanced) பார்க்க வேண்டும். ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால் தப்பாகிப்போய்விடும். ஆனால் எதார்த்தத்தில் எப்படி இருக்கிறது என்று சொல்வது முக்கியம்.இதற்கு இலக்கிய விமர்சனம், பரிமாற்றம் அதிகம் தேவைப்படுகிறது.

எழுத்தாளன் ஏதாவதொரு பிரச்சனையைத் தொட்டுத்தான் தனது இந்த முயற்சியைத் தொடங்கவேண்டும். பின்னர், சமூகத்தில் இதற்குத் தொடர்புடைய விஷயங்களுடன் இதனை இணைக்கவேண்டும். இதைத்தான் நாம் சமூக-ஆன்மீக அணுகுமுறை என்கிறோம்.

தனிமனிதனின் பிரச்சனகளை அலசுவதில் இந்தப் பணியை நீங்கள் தொடங்கினாலும், எழுத்தாளர் என்ற முறையில், இது சமூக எதார்த்தத்தின் அங்கமாக இதனைப் பார்க்கும் பாங்கு வேண்டும்.

COURTESY: FRONTLINE/OCTOBER 5, 2012


0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP