Friday, December 13, 2013

-->
மக்களை நேசித்த மகத்தான புரட்சியாளர்!
மண்டேலாவுக்கு தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி!!
தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் இருபெரும் ஜீவநதிகளாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் (ANC), தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் (SACP) திகழ்கின்றன. வெள்ளை நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், அந்த நாட்டில் ஜனநாயக ஜெயக்கொடியை நாட்டியது இந்த இரு இயக்கங்களின் மகத்தான கூட்டணி.  இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததுமே, தென்னாப்பிரிக்கா தன்வசமிருந்த அணு ஆயுதங்களை அழித்துப்போட்டது. நிறவேறுபாடுகள் எதுவுமின்றி வெள்ளையரும் கறுப்பினத்தவரும் ஒற்றுமையாக வாழும் சூழலுக்கு மண்டேலா போட்ட அச்சாரம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் எனும் நம்பிக்கைத் துளிர்விடத் தொடங்கியுள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் அமைப்பில் இன்று தென்னாப்பிரிக்கா ஒரு முக்கியமான அங்கம். ஆனால், இந்த முன்னோக்கிய பயணம் ஏதோ ரோஜா படுக்கையிலான பாதையில் நடக்கவில்லை. எத்தனையோ இடர்ப்பாடுகள், எதிரிகளின் சதிகள், ஆத்திரமூட்டல்கள், அனைத்தையும் கடந்துதான் இந்தப் பயணம் தொடர்கிறது மண்டேலாவின் ஆசியுடன். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தன்னேரில்லா தலைவரான அவர், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். மறைந்த தலைவர் மடிபாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த இரங்கல் செய்தியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது:
...நேசம் ததும்பும் உணர்வுகள்தான் மெய்யான புரட்சியாளனை வழிநடத்துகின்றன
பெரும்பாலும் தொழிலாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய லட்சோபலட்சம் தென்னாப்பிரிக்க மக்களும், உலகெங்கிலுமுள்ள கோடானுகோடி மக்களும் மெய்யான புரட்சியாளரான டாடா மடிபா என அன்புடன் அழைக்கப்படும் [முன்னாள்] குடியரசுத்தலைவர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலாவை நேற்று இரவு (05.12.2013) இழந்துவிட்டனர்.
தென்னாப்பிரிக்காவின் மகத்தான தலைமகன் என ஜனாதிபதி ஜூமா அவர்களால் சரியாகவே வர்ணிக்கப்பட்ட தோழர் மண்டேலா அமரத்துவம் அடைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்க மற்றும் உலக மக்கள் அனைவருடனும் இணைந்து தனது விசுவாசபூர்வமான அனுதாபத்தை க்ராகா மாஷெல் மற்றும் மண்டேலா குடும்பத்தவர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறது தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி.
எந்த இயக்கம்  அவரை உருவாக்கியதோ, எந்த இயக்கத்துக்கு அவர் மிகவுயர்ந்த சேவைபுரிந்தாரோ அந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடனும், நமது பரந்த விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற அவரது அனைத்து சகாக்கள், தோழர்களுடனும் நமது ஒருமைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். டாடா மடிபா அவர்கள் கூறியதைப்போல, வரலாற்றை உருவாக்குபவர்கள் மன்னர்களும், ராணுவத்தளபதிகளும் அல்ல; மாறாக, மக்களும், தொழிலாளர்களும், விவசாயிகள்ளும்தான்...
தமது சொந்த நாடுகளில் மட்டுமல்லாது, இந்தப்புவிக்கோள் முழுமையிலும் சுதந்திரத்துக்காக, அனைத்து வடிவங்களிலான அடக்குமுறைகளுக்கு எதிராக இந்த 20-ஆம் நூற்றாண்டில் போராடிய மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவரது வாழ்வின் முடிவைக் குறிக்கிறது தோழர் மண்டேலாவின் மறைவு அவர், ஒரு தனித்தீவாக இல்லாத காரணத்தால், வெகுஜனங்கள் உருவாக்கும் புரட்சியின் ஒரு பகுதியாக, விடுதலைக்கான போரில் தோழர் மண்டேலாவின் பங்களிப்பு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசால் வழிநடத்தப்பட்ட புரட்சிகரமான தேசிய விடுதலை இயக்கத்தின் கூட்டு அங்கத்துவத்தாலும், தலைமையினாலும் புடம்போட்டெடுக்கப்பட்டது
துணிச்சலும் வீரமும் மிக்கதோர் போர்வீரரை, தேசபக்தரை, சர்வதேசியவாதியை தோழர் மண்டேலாவில் நாம் கண்டோம்; சே குவேராவின் வார்த்தைகளில் சொல்வதானால், தன் மக்களிடம்கொண்ட நேச உணர்வுகளால் வழி நடத்தப்பட்ட மெய்யான புரட்சியாளராகத் திகழ்ந்தார் அவர்; உண்மையான மக்களின் புரட்சியாளர்களுடைய தலைசிறந்த பண்பல்லவா இது!
1962 ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது, தலைமறைவாகச் செயல்பட்ட தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினராக மட்டுமல்லாது, எமது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார்.
தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்டுகளான நம்மைப் பொறுத்தவரை, எமது விடுதலைச் சமரில், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியினது போற்றத்தகு பங்களிப்பின் சின்னமாக தோழர் நெல்சன் மண்டேலா என்றென்றும் திகழ்வார். தென்னாப்பிரிக்காவின் விடுதலையை வென்றெடுக்க கம்யூனிஸ்டுகள் நல்கிய பங்களிப்புக்கு எமது நாட்டின் சரித்திரத்தில் ஈடு இணை மிகச்சொற்பமே. 1990-ல் அவர் சிறையிலிருந்து மீண்டபின், தன் இறுதி நாட்கள்வரை கம்யூனிஸ்டுகளின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார் தோழர் மடிபா.
எமது கூட்டணியில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்குள்ளும் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒற்றுமைக்காகவும், எமது கூட்டணி முழுமையின்,  மக்களின் ஜனநாயக இயக்கம் அனைத்தின் ஒற்றுமைக்காகவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர் தோழர் மண்டேலாவும் அவரது தலைமுறையைச் சார்ந்த தலைவர்களும்; இது, நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டிய மிக முக்கியமான பாடம். எமது இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்த அந்தத்தலைமுறை பாடுபட்டது; எமது கூட்டணியின் ஒற்றுமையைப் போற்றிப்பாதுகாக்கும் பெருமையை தோழர் மடிபாவுக்கு சமர்ப்பிக்கிறோம். எமது கூட்டணியின் ஒற்றுமையை உருவாக்கிக் காப்பதன்பொருட்டு எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது என்பதைப் புரியாதவர்கள், கவனமில்லாமல், எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்துக் கவலைகொள்ளாமல் நடந்துகொள்வதன்மூலம், மடிபா போன்ற தியாகிகளின் பாரம்பர்யத்துக்கும் நினைவுக்கும் களங்கம் கற்பிக்கவேண்டாம் என எச்சரிக்க விரும்புகிறோம்.
மடிபாவின் தேசிய ஒத்திசைவு திட்டத்திற்கு ஆதரவளித்தது தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி. இன்று சிலர் நம்மை நம்பச் சொல்வதைப்போல அல்லாமல், அவரைப்பொறுத்தவரை தேசிய ஒத்திசைவு என்பது எமது சமூகத்தில் நிலவும் வர்க்க மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான முயற்சிகளைத் தவிர்ப்பதாகாது. மடிபாவைப் பொறுத்தவரை, இனவெறிக்கொடுமை, ஆணாதிக்கம், படுமோசமான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை இல்லாத மிகவும் சமத்துவமானதோர் தென்னாப்பிரிக்க சமுதாயத்தை அமைத்தல் என்கிற லட்சியத்தை நோக்கிப் பயணிப்பதுதான் தேசிய ஒத்திசைவு என்பதன் பொருளாகும். பெரும் ஏற்றத்தாழ்வுகளும், முதலாளித்துவச் சுரண்டலும் இன்னும் தாண்டவமாடுகிற ஒரு சமுதாயத்தில் மெய்யான தேசிய ஒத்திசைவை ஒருபோதும் எட்டமுடியாது. 
இந்த தீரமிகு போராட்டக்காரருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மனிதகுலத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு ஒரே அரசியல் மற்றும் பொருளாதாரத் தீர்வாக விளங்கும் சோஷலிசத்திற்கான போராட்டத்தையும், எல்லா வடிவங்களிலுமான சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தையும் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப்படுத்தும்.
ஜனநாயகத் தென்னாப்பிரிக்காவை இன்னமும் முழுவதாக ஏற்றுக்கொள்ளாத, வெள்ளை மேலாதிக்க யுகத்தை ஏதாவது ஒரு விதத்தில் இன்னும் நினைத்து உருகிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும், பெரும்பான்மை மக்களின் ஆட்சி எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்க ஜனநாயகத்தை மனதார ஏற்றுக்கொள்வதற்கான இரண்டாவது வாய்ப்பை மடிபாவின் மறைவு அளிக்க வேண்டுமென தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
தன்னலமின்மை, தியாகம், அர்ப்பணிப்பு, மக்களுக்கு சேவை செய்தல் எனும் நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டான அவரைப் பின்பற்றி வாழ்வோம் வாரீர் என தென்னாப்பிரிக்கர்களை நாங்கள் அறைகூவி அழைக்கிறோம்.
தீரமிகு போர்வீரரே நீவீர் நீடூழி வாழ்க! என [தோழர் மண்டேலாவை] வாழ்த்துகிறது தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி. தமிழில்: விதுரன்
COURTESY: http://www.sacp.org

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP