Tuesday, December 10, 2013

மகாத்மா பற்றிய மண்டேலாவின் மதிப்பீடு


   புனித வேள்வியின் போர்வீரர்!
        
                        -நெல்சன் மண்டேலா-
  
[இருபதாம் நூற்றாண்டின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா இவ்வாண்டு (2013) டிசம்பர் 6-ஆம் நாள் மறைந்தார். தலைசிறந்த மார்க்சீயவாதியாகவும், விடுதலைப்போராட்ட வீராராகவும், மனிதநேயமிக்க மக்கள் தலைவராகவும் விளங்கிய அவர், ஏகாதிபத்திய அடக்குமுறைகளையும் வெள்ளை நிறவெறியையும் எதிர்த்து வீரச்சமர் புரிந்தவர். மண்டேலா மக்களின் இதய சிம்மாசனத்தில் என்றும் வீற்றிருப்பதால் அவருக்கு மரணம் ஏது? தென்னாப்பிரிக்க காந்தி என வர்ணிக்கப்பட்ட அவர், நம் தேசப்பிதாவை எத்தனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிப்பீடு செய்திருந்தார் என்பது 2000-ஆம் ஆண்டு டைம் பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை மூலம் அறியலாம். தமிழில்: விதுரன்]
 


 ந்தியா, காந்தி பிறந்த நாடெனில், தென்னாப்பிரிக்கா அவரை ஸ்வீகரித்துக்கொண்ட நாடு. அவர் இந்தியராகவும் இருந்தார்; தென்னாப்பிரிக்கப் பிரஜையாகவும் இருந்தார். இவ்விரு நாடுகளுமே அவரது ஞானம் மற்றும் அறநெறிசார் மேதமைக்குப் பங்களிப்பு செய்துள்ளன; காலனியாதிக்கத்திலிருந்த இந்த இரு நாடுகளது விடுதலைப்போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிப்போக்கினை நெறிப்படுத்தியவர் அவர்.
 காலனியாதிக்கத்தை எதிர்க்கும் புரட்சியாளருக்கு இலக்கணம் அவரே. ஒத்துழையாமை எனும் அவரது போராட்ட உத்தி, நம்மீது ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு நாம் ஒத்துழைத்தால் மட்டுமே நாம் ஆதிக்கத்திற்கு ஆளாவோம் என்கிற அவரது தீர்க்கமான நிலை, அவரது சாத்வீகப் போராட்டமுறை ஆகியவை, நமது இந்த நூற்றாண்டில் சர்வதேச அளவில் காலனியாதிக்க எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு சக்திகளுக்கு உத்வேகமளித்தது.


 காந்தியும் நானும் காலனியாதிக்க ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறோம்; எமது சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக எங்களது நாடுகளின் மக்களைத் திரட்டிப்போராடியவர்கள் நாங்கள்.
  காந்தியம், ஆற்றல்மிகு சக்தியைத் தோற்றுவித்ததாலும், தோற்றத்தில் சக்தியில்லாதவர்களாக இருந்தவர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவக்கவல்லதாக இருந்ததாலும், 1960-கள் வரையில் ஆப்பிரிக்க கண்டத்தின் விடுதலைப் போராட்டங்களின்பால் அதன் செல்வாக்கு மிகுந்திருந்தது. சாத்வீகப் போராட்ட முறைதான் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பெரிய கூட்டணி அமைப்புகளின் அதிகாரபூர்வ நிலையாக இருந்தது; தென்னாப்பிரிக்காவின் எ.என்.சி. (ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்) தனது வரலாற்றின் பெரும்பகுதிக்காலம் வன்முறையை எதிர்ப்பதில் பற்றுறுதி கொண்டு நின்றிருக்கிறது.
 காந்தி இறுதிவரை சாத்வீகக் கொள்கையை உறுதியாகப் பற்றி நின்றார்; என்னால் இயன்றவரை நான் காந்தீய போராட்ட முறையைப் பின்பற்றினேன்; ஆனால், சாத்வீக எதிர்ப்பின் மூலமாகமட்டுமே ஒடுக்குமுறையாளர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்து நிற்க இயலாது என்னும் ஒரு நிலை எங்கள் போராட்டத்துக்கு வந்தது. உன்காண்ட்டோ வெ சிஸ்வி (Unkhonto we Sizwe) எனும் ஆயுதப்பிரிவை நிறுவிய நாங்கள், எங்கள் போராட்டத்துக்கு ராணுவப் பரிமாணத்தைக் கொடுத்தோம். அந்த நிலையிலும்கூட, உயிரிழப்பு ஏற்படுத்தாது என்பதாலும், எதிர்காலத்தில் இனங்களின் நல்லுறவுக்கு நன்னம்பிக்கைக் கொடுப்பவை என்பதாலும், நாசவேலை எனும் போராட்ட உத்தியை நாங்கள் தேர்வு செய்தோம். “வன்முறை என்கிற மொழியில் பேசினால் மட்டுமே ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கேட்கிறது; ஏதோ ஒருவகையான வன்முறையில்லாமல் எந்தவொரு நாடும் விடுபடவில்லை என்று, 1962-ல் நடைபெற்ற கடல் கடந்த கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் (PAFMECA) கூட்டத்தில் நான் குறிப்பிட்டேன்; அதனைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை அமைப்பினுடைய (O.A.U.) அதிகாரபூர்வமான ஆதரவுடன் தீவிரப்போக்குகொண்ட நடவடிக்கை ஆப்பிரிக்காவின் செயல்திட்டத்தில் அங்கமாயிற்று.
 காந்தியும்கூட வன்முறையை முழுமையாகவோ, எந்தவித நிபந்தனையுமின்றியோ ஒருபோதும் நிராகரித்ததில்லை.  குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் ஆயுதங்கள் அத்தியாவசமாகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். “கோழைத்தனமா வன்முறையா என்கிற இரண்டில் எதனைத் தேர்வு செய்வது எனும் நிலை இருக்கும்போது நான் வன்முறையைத் தேர்வு செய்யவே அறிவுறுத்துவேன்...கண்ணியம் பறிக்கப்படும்போது பம்மிப்பதுங்கி அதனை வேடிக்கைப்பார்க்கும் இழிசெயலைக் காட்டிலும், கண்ணியத்தைக் காத்து நிற்க ஆயுதத்தைப் பிரயோகிக்கவே நான் முற்படுவேன்... என்றார் அவர்.
 வன்முறையும் சாத்வீகமும் ஒன்றிருந்தால் மற்றொன்று இருக்கமுடியாது என்பதில்லை; இவற்றில் எது மேலோங்கி நிற்கிறதோ அதைக்கொண்டுதான் போராட்டத்தின் தன்மை அறியப்படுகிறது.
 1893-ஆம் ஆண்டு, தனது 23-வது வயதில் தென்னாப்பிரிக்க மண்ணில் கால்பதித்தார் காந்தி.  ஒருவார காலத்துக்குள்ளாகவே இனவெறியுடன் நேருக்கு நேர் மோதினார். தோலின் நிறத்தைக்கொண்டு மக்களை இந்த அளவுக்கு இழிவுபடுத்தும் நாட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதுதான் அவரது மனதில் உடனே தோன்றியது; ஆனால், நெஞ்சுரம் அவரது எண்ணத்தை விஞ்சி ஒரு லட்சிய வேட்கையாக ஊற்றெடுத்தது; உலகமுழுவதிலும் காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த மக்கள் விடுதலைபெற வழிவகுக்கும் வகையிலும், புதிய சமூக முறைமைக்கு அச்சாரம் போடும் வகையிலும் இன ரீதியான சுரண்டலுக்கு ஆளான மக்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் அங்கேயே தங்கினார்.
 21 ஆண்டுகளுக்குப்பின், மகாத்மா (great soul) என்னும் நிலையை நெருக்கும்போது [எமது நாட்டிலிருந்து] அவர் சென்றார். வன்முறையால் இந்த உலகிலிருந்து மறையச்செய்யப்பட்டபோது அவர் மகாத்மா ஆகிவிட்டிருந்தார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
சாதாரண தலைவரல்ல; இறையருளால் உத்வேகம் பெற்றவர்
 அவர் ஒன்றும் சாதாரண தலைவரல்ல. அவர் இறையருளால் உத்வேகம் பெற்றவர் என்று நம்புகிறவர்கள் உண்டு; அதனை நம்பாமல் இருப்பது சிரமம். ஹிரோஷிமா நாகசாகி வன்முறை நம்மீது இடியெனவிழுந்தபோது, சாத்வீகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் திராணி அவருக்கு இருந்தது; விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், முதலாளித்துவ அமைப்பும் ஒழுக்கநெறி கவைக்குதவாதது என்று புறந்தள்ளியபோது அது எவ்வளவு அவசியம் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்; சுயம் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்காமலேயே மக்கள் தொகுதியின் நலத்தை முன்னிலைப்படுத்தி தன்னலத்தை நீக்கச்செய்தார். உண்மையில், சுயம் மற்றும் சமூகம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல்தான் அவரது தத்துவத்தின் இதயநாதம். ஒழுக்கநெறி கொண்டொழுகும் தனிமனிதன்; அறநெறிசார்ந்து விளங்கும் சமூகம் ஆகியவை ஒருசேர, ஒன்றுக்கொன்று பங்களிப்பு செய்து வளர்ச்சியடைவதையே அவர் விரும்பினார்.
 தான் எதனைக் கடவுளாகவும், முழுமையான அறமாகவும் கண்டாரோ அந்த சத்தியத்தை அடைவதற்கான தனது சொந்த மற்றும் சமூகப் போராட்டமாக அமைந்ததுதான் அவரது சத்தியாக்கிரக தத்துவம். தனிப்பட்ட அல்லது சுயநலம் சார்ந்த விஷயமாக அல்லாமல் மக்களுடன் இணைந்து இந்த சத்தியத்தைக் காண அவர் விழைந்தார். “நான் கடவுளைக்காண விரும்புகிறேன்; கடவுளைக் காண விரும்புவதால், பிற மக்களுடன் இணைந்து கடவுளைக் காணவேண்டியுள்ளது. நான் மட்டுமே கடவுளைக் காணமுடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி எண்ணியிருந்தால் இமயமலைக்கு ஓடிச்சென்று அங்கே ஏதெனும் குகையில் அவர் இருக்கிறாரா என்று தேடிக்கொண்டிருந்திருப்பேன். எவரும் தன்னந்தனியே கடவுளைக் காணவியலாது என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதால், மக்களுடன் சேர்ந்து நான் செயல்படவேண்டியுள்ளது. அவர்களை என்னுடன் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. தனியே நான் கடவுளிடம் செல்ல இயலாது என்றார் அவர்.
மகாத்மாவின் விழிப்புணர்வு
 மலைப்பிரதேசமொன்றில் ஏற்பட்ட பம்பட்டா கலகம் (Bambata Rebellion) என்று வர்ணிக்கப்பட்ட எழுச்சியின்போதுதான் அவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது; சாம்ராஜ்யத்துக்கு சேவை செய்யும் விதமாக, ஆர்வமிகு பிரிட்டிஷ் தேசபக்தர் என்கிற முறையில் காயம்பட்டவர்களைக் கொண்டுசெல்கிற தூக்குப் படுக்கைகளைக் கையாளும் இந்தியத் தொண்டர்களின் குழுவுக்கு அவர் தலைமையேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது; வேறு எதனாலும் இதற்குமுன் மனமாற்றம் பெறாத அவரது உணர்வுகளைத் தட்டியெழுப்பியது ஜூலு மக்களுக்கு எதிராக பிரிட்டிஷார் நடத்திய படுமோசமான காட்டுமிராண்டித்தாக்குதல். அனைத்துவிதமான பொருளாதாயப் பிடிப்புக்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, வன்முறையை ஒழிக்கவும், மனிதகுலத்துக்கு சேவை செய்யவும் தன்னை முற்றும் முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வதென அந்த யுத்தகளத்தில்தான் அவர் தீர்மானம் செய்துகொண்டார். காயம்பட்டு, சவுக்கடிக்கு ஆளாகி பிரிட்டிஷ் கொடுமையாளர்களால் இரக்கமின்றி கைவிடப்பட்ட ஜூலு மக்களைக் கண்ணுற்ற அவர் அளவில்லாத வேதனை அடைந்தார்; அதுகாறும் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்குப் புகழ்மாலை சூட்டுவது என்கிற அவரது நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு, தென்னாப்பிரிக்காவின் பிரஜைகள் மற்றும் பூர்வகுடிகளின் புகழ்பாடும் நிலைக்கு வந்தார். அவர், காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த மக்களின் கலாசாரத்தைப் புனருத்தாரணம் செய்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்திய எழுச்சியை விஸ்வரூபம் கொள்ளச்செய்தார்; இந்திய கைத்தொழில்களுக்குப் புத்துயிர் அளித்தார்; மக்களின் திறன்களையும் மூலதனத்தையும் கபளீகரம் செய்கின்ற ஒடுக்குமுறையாளர்களின் பொருட்களை பகிஷ்காரம் செய்யவும், தமது சொந்த தயாரிப்புக்களைப் பயன்படுத்தச்செய்யவும் அவர் சுதேசி இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார்; இதன் மூலம், காலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் இவற்றைப் பொருளாதார ஆயுதமாகப் பிரயோகித்தார்.
 தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அந்நியக் கடன் மலையென அதிகரிக்கச் செய்வதுடன் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குக் குந்தகம் விளைக்கின்ற, உள்நாட்டுத் திறன்களைக் கொன்றழிக்கின்றவகையில் உற்பத்திப்பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தையை சார்ந்திருக்க வேண்டிய நிலை தொடர்வதுதான் உலகில் நிலவும் வறுமைக்கும், குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவும் ஏழ்மைக்கும் காரணமாகும். காந்தி வலியுறுத்திய தன்னிறைவு என்னும் அடிப்படையான பொருளாதாரக் கொள்கை இன்று பின்பற்றப்படுமேயானால், அது, மூன்றாவது உலகின் வறுமையைத் துடைத்தெறியவும், வளர்ச்சியைத் தூண்டவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய இயலும்.
காந்தியடிகளின் தொலைநோக்கு
 தென்னாப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் [பிரான்சு நாட்டில் பிறந்த மார்க்சீய சிந்தனையாளர், புரட்சியாளரான], ஃப்ரான்ட்ஸ் ஃபானன் (Frantz Fanon) தோற்றுவித்த இயக்கம் மற்றும் கறுப்பின மக்களின் உணர்வுபூர்வமான இயக்கங்கள் முகிழ்ப்பதற்கு அரைநூற்றாண்டுக் காலத்துக்கு முன்னதாகவே சொந்தமண் சார்ந்த ஞானம், உணர்வு, தொழில் ஆகியவற்றுக்கு உத்வேகமளித்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் காந்தி.
 தன்னலம் சார்ந்த, மூர்க்கத்தனமான தேவை அடிப்படையிலானது மனிதனின் இயல்பு என்கிற [பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான] ஆடம் ஸ்மித்தின் (Adam Smith) கருத்தை நிராகரித்த காந்தி, சாத்வீகம், நீதி, சமத்துவம் ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக்கொண்ட ஆன்மீகப் பரிமாணத்தை நாம் மீண்டும் அடைய வழிவகுத்தார்.
 கடினமாக உழைத்தால், ஒவ்வொருவரும் செல்வச்செழிப்பும் வெற்றியும் அடைந்துவிடலாம் என்கிற வாதம் எவ்வளவு தவறானது என்பதை அவர் அம்பலப்படுத்தினார். மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் லட்சோப லட்சம் மக்கள் பட்டினியில் பரிதவிப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். பின்பற்றப்பட வேண்டியவர் கிசான் (விவசாயி) தான்; ஜமீன்தார் (நிலப்பிரபு) அல்ல; ஏனெனில், அனைவருமே கிசான்களாக இருக்க இயலும்; விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே ஜமீன்தார்களாய் இருப்பர் என்பதே சமுதாய சமன்பாடு பற்றிய அவரது வேதப்பிரசங்கமாகும்.
 வெகுஜனங்களுடைய நிலைக்குச் சமமாக வாழும்பொருட்டு தனது வசதியான வாழ்க்கையிலிருந்து அவர் இறங்கி வந்தார்.  “பொருளாதார சமத்துவம் கொண்டுவருதல் குறித்து நான் நம்பிக்கைகொள்ள இயலாது...ஏழைகளிலும் பரமஏழைகளாக இருப்பவர்களின் நிலைக்கு நான் என்னை சுருக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
 செல்வச்செழிப்பு, வறுமை ஆகியவை பற்றிய அவரது புரிதலின் அடிப்படையில் தோன்றியது உழைப்பு மற்றும் மூலதனம் குறித்த அவரது புரிதல்; இது, மூலதனத்தின்மீதான தனியார் உடைமை இல்லாதது, மறுவிநியோகம், சமத்துவம் ஆகியவற்றுக்காக நல்லெண்ணத்துடன் ஒப்படைக்கப்படுவது ஆகிய நம்பிக்கைகளின் அடிப்படையிலான தர்மகர்த்தாமுறை எனும் தீர்வுக்கு அவரை இட்டுச்சென்றது. இதுபோன்றே, வேறுபட்ட துறை ஈடுபாடு, செயல்திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும்போது, கூட்டு நலனுக்காகப் பயன்படுத்தப்படவேண்டிய கடவுளின் கருணைக்கொடைகள் என அவற்றைக் கணித்தார்.
 முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் மாற்றாக ஒரு பொருளாதார முறைமையினை நாடித்தேடிய அவர், வன்முறையின்மையை (அகிம்சை) அடிப்படையாகக் கொண்ட சர்வோதயத்தில் அதனைக் கண்டார்.
 தகுதிப் பொருத்தம் உள்ளவை மட்டுமே தாக்குப்பிடித்து ஜீவித்திருக்கும் என்கிற டார்வின்     தத்துவத்தையும், அரசு-கட்டுப்பாடற்ற தனியார்துறை வளர்ச்சி எனும் ஆடம் ஸ்மித்தின் கொள்கையையும், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான இயல்பான முரண்பாடு என்ற மார்க்சின் கொள்கையையும் அவர் நிராகரிக்கிறார்; அவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருத்தலில் கவனம் செலுத்துகிறார்.
 மனிதர்கள் மனமாற்றம் கொள்வதில் நம்பிக்கைகொண்ட அவர், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போர் நடத்துகிறார்; அவர்களை அழிப்பதற்காக அல்லாமல், ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சத்தியத்தேடலில் ஒடுக்கப்படுகிற மக்களுடன் அவர்கள் இணைந்து நிற்கும் வகையில் அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்துவதற்கு.
 இத்தகைய சிந்தனையின் அடிப்படையிலேயே, ஓரளவு அமைதிபூர்வமான வழியில் எமது புதிய ஜனநாயக அமைப்பினை தென்னாப்பிரிக்காவில் நாங்கள் கொண்டுவந்தோம்.
 இன்று, முன்னேறிய தொழில்ரீதியிலான சமுதாய முறைமையை முழுமையாக விமர்சிப்பவராக காந்தி மட்டுமே இருக்கிறார். மற்றவர்களோ, அதன் சர்வாதிகாரத்தைத்தான் எதிர்க்கிறார்களே தவிர, அதன் உற்பத்தி சாதன அமைப்பை எதிர்ப்பதில்லை. அவர் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் எதிர்க்கவில்லை; ஆனால், வேலை செய்வதற்கான உரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் அவர், இந்த உரிமையைப் பறிக்கும் அளவுக்குச் செல்கின்ற எந்திரமயமாக்கலை எதிர்க்கிறார். பெருமளவிலான எந்திர தளவாடங்கள், தனியொரு மனிதனின் கையில் செல்வக்குவியல் சென்று சேரவும், அவன் மற்றவர்களை வல்லாட்சிக்கு ஆளாக்கவும் வழிவகுக்குமென்பது அவரது கணிப்பு. அவர், சிறிய இயந்திரங்களின் பயன்பாட்டை ஆதரிக்கிறார்; தனிமனிதன், தான் கையாளும் கருவிகளின்மீது பிடிப்பு கொள்ள வேண்டுமெனவும், கிரிக்கெட் வீரர், தான் விளையாடும் மட்டை (bat) யின்மீது கொண்டிருக்கும் நேசத்தைப்போன்று, கிருஷ்ணபகவான் தனது புல்லாங்குழல் மீது கொண்ட காதல் போன்று, இவ்விருவருக்கும் [கருவிகளுக்கும் அவற்றைப் பயன்படுத்துவோர்க்கும்] இடையே ஒரு பரஸ்பர அன்பைப் பேணும் நிலை இருக்கவேண்டுமெனவும் அவர் விரும்புகிறார்.  இவை அனைத்திற்கும் மேலாக, இயந்திரங்களிலிருந்து அந்நியப்படுதல் எனும் தளையிலிருந்து தனிமனிதனை விடுவிக்கவும், உற்பத்தி முறையில் ஒழுக்கத்தை உயிர்ப்பிக்கவும் அவர் விரும்புகிறார்.
 வேலை வாய்ப்பற்ற பொருளாதாரங்கள், மிகச்சிறிய அளவிலானவர்கள் நுகரவும், வெகுஜனங்கள் பட்டினியில் வாடவும் விடப்பட்ட சமுதாயங்கள் ஆகியவற்றை நாமே சந்தித்துக்கொண்டிருக்கின்ற சூழலில், நமது தற்போதைய உலகமயமாக்கலின் காரண காரியம் குறித்து மறுசிந்தனை செய்யவேண்டிய, காந்திய மாற்றுகுறித்து ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
 [ஆஸ்திரிய மனோதத்துவ அறிஞரான] ஃப்ராய்டு பாலியலைக் கட்டவிழ்த்து விட்ட அதே சமயத்தில், காந்தி அதனை அடக்கி ஆண்டார்; முதலாளிக்கு எதிராகத் தொழிலாளியை மார்க்ஸ் கொண்டுநிறுத்துகையில், காந்தி அவர்களிடையே இசைவைக் கொணர முற்பட்டார்; சமூகமதிப்பீடுகளிலிருந்து கடவுளையும், ஆன்மாவையும் தூக்கியெறிகின்ற போக்கு ஐரோப்பிய சிந்தனையில் மேலோங்கியிருந்தபோது, கடவுளையும் ஆன்மாவையும் சமுதாயத்தின் மையமாக வைத்தார் அவர்; காலனியாதிக்கத்திற்கு ஆட்பட்டவர்கள், சிந்திப்பதையும் நெறிப்படுத்துவதையும் கைவிட்ட நேரத்தில், சிந்திக்கவும், நெறிப்படுத்தவும் அவர் வீறுகொண்டு எழுந்தார்; காலனியாதிக்கத்தில் வதிந்த மக்களின் சித்தாந்தங்கள் கிட்டத்தட்ட மறைந்துபோன சமயத்தில், அந்த மக்கள் விடுதலை கீதமிசைக்கவும், [இழந்த பெருமையை] மீட்டெடுக்கவும் வழிகாணும் ஆற்றல்கொள்ளத்தக்க வகையில் அவற்றை உயிர்ப்பித்து, அதிகாரம் பெறச்செய்தார் அவர்.
-->

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP