Sunday, November 17, 2013

மோடியெனும் மாயவலை

Top of Form
மோடியெனும் மாயவலை!
ஏ.பி.பரதன்
[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன், அண்மையில் (அக்டோபர் 19, 2013) மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார ஏட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் தந்திரம், மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக அக்கட்சி நியமித்ததன் சூட்சுமத்தையும் அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மதவெறியில் ஊறித்திளைக்கும் பி.ஜே.பி.க்கும், மதச்சார்பற்ற இயக்கமாக விளங்கும் காங்கிரசுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டையும், நாட்டை இன்று சூழ்ந்துள்ள அபாயத்தை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டியதன் அவசியத்தையும் இக்கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் தோழர் பரதன். தமிழாக்கம்: விதுரன்]
  
வகுப்புக் கலவரங்களும் சங் பரிவாரமும்:
  
  பிரதமர் பதவிக்கான தனது வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்து முடித்ததில் புண்ணாகிப்போன பாரதீய ஜனதாக் கட்சி, அவரது தோற்றத்தை பிரம்மாண்டப்படுத்திக் காட்டுவதற்காக ஓர் அதிரடிப் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சிக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக் காட்டியவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்கச் செய்யும்பொருட்டு, ஆர்.எஸ்.எஸ். தனது தண்டத்தைப் பிரயோகிக்க வேண்டியதாயிற்று. [இந்த விஷயத்தில்] அவர்கள் தமது எண்ணங்களைத் தம்மோடு வைத்துக்கொண்டு, வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்று பணிக்கப்பட்டார்கள். அந்தக் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிகூட அவருக்குரிய இடத்தில் வைக்கப்பட்டுவிட்டார்.
  மோடியிடம் அனைத்துவிதமான அற்புத குணங்கள், திறமைகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, உலகெங்கிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. ‘வளர்ச்சிக்கான மனிதர்’ (விகாஸ் புருஷ்); சிறந்த நிர்வாகி; வலுவற்ற பிரதமரை நீக்கி அந்த ஆசனத்தில் அமரக்கூடிய சக்திமிக்கவர்; சுருங்கச் சொன்னால், காலம் அருளிய நாயகன்என்றெல்லாம் மோடிக்குப் புகழாரம் சூட்டப்படுகின்றது.
  பிரச்சார இயக்கத்தை முடுக்கிவிடுவதில் பாரதீய ஜனதாக் கட்சி, அதன் முன்னோடியான ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் திறமையையும், திறனையும் யாரும் மறுக்கமுடியாது. இந்து-முஸ்லிம் வகுப்புக்களைச் சேர்ந்த இரண்டு தனிநபர்கள் அல்லது குழுக்களிடையே ஏற்படும் சின்னத் தகறாறைக்கூட முழு அளவிலான பெரிய கலவரமாக மாற்றவல்லவை அவை. பதற்றத்தை உருவாக்கி, ஒரு சிறிய தீப்பொறி பட்டால்போதும் வெடித்துக் கிளம்பி கொழுந்துவிட்டெரியும் பெரும் தீயாக மாற்றுமளவுக்கு அதனைக் கொதிநிலையில் வைத்திருக்கும் வல்லமையும் அவற்றுக்கு உண்டு. நடந்தேறிய கலவரங்களை ஆராய்ந்து பார்க்கையில் இதனை நிரூபிக்கும் எடுத்துக்காட்டுகள் ஏராளம்-ஏராளம். இதற்கான சமீபத்திய உதாரணங்கள் முசாஃபர்நகரில் நடந்த கலவரமும், அதற்கு முன்னதாகவும், அதனைத் தொடர்ந்தும் ஏற்பட்ட கவரங்களுமாகும்.
மோடியெனும் மாயவலை:
  நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்க நெருங்க, மோடியெனும் மாயவலையை வீசத்தொடங்கியது பாரதீய ஜனதாக் கட்சி. மோடியின் பெரிய கட்-அவுட்டுகள், மோடியின் லட்சக்கணக்கான சுவரொட்டிகள், மோடியின் முகமூடிகள் இத்யாதி, இத்யாதி என நாடெங்கிலும் நகரங்கள், கிராமங்களிலுள்ள சதுக்கங்கள், சாலைகளில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றன. மோடியை நட்சத்திரப் பேச்சாளராகக்கொண்ட தொடர் கூட்டங்களும் பேரணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்காக செலவிடப்படும் தொகையோ மலைப்பூட்டுவதாக உள்ளது; ஆனால் அதுகுறித்துக் கேள்விகள் எதுவும் எழுப்பப்படுவதில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சாரப் படோடாபங்கள் அனைத்துக்கும் பின்புலமாக இருக்கும் சக்திகள் எவை என்பதில் இனியும் ஒளிவுமறைவில்லை. பெரிய தொழில் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் தமது பணமூட்டைகளை அகலத் திறந்துவைத்துள்ளன. மோடி விஷயத்தில் அவர்களுக்கு சுயநலமுண்டு. இந்தப் பேரணிகளுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பரவலான பகுதிகளிலிருந்தும் கூட்டம் திரட்டிவரப்படுகிறது. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் மேடைகள் புதிய தொழில்நுட்பவசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.  முஸ்லிம் குழுக்களும்கூட இந்தப் பேரணிகளில் பங்குகொள்வதாகக் காட்டும்பொருட்டு, வட்டக்குல்லாய் அணிந்த ஆண்களும், புர்க்கா அணிந்த பெண்களும் அல்லது குறைந்தபட்சம் முக்காடிட்டு (‘hijab’) முகம் மறைத்தவர்களும் கூட்டத்தில் இடம்பெற விசேஷ முயற்சிகள் செய்யப்படுகின்றன. கிரிக்கெட் போட்டிகளின்போது குதூகலித்து ஆடுகின்ற பெண்களின் குழு (cheer-girls) போன்று பார்வையாளர் அரங்கில் அமர்ந்துகொண்டு, மகிழ்ச்சிக் கரகோஷம் செய்யவும், கூட்டம் நடைபெறுகையில் மோடி!’ ‘மோடி!என்று கதறவும் இளைஞர் குழுக்கள் அமரச்செய்யப்படுகின்றன.
  உண்மையில் தமது நெடுநாள் பாசிஸ்ட் நண்பர்களிடமிருந்து கோயபல்சின் பொய்ப்பிரச்சாரக் கலையைக் கற்றுத் தேர்ந்துள்ளது சங்பரிவாரம். இந்தப் பிரச்சார யந்திரம் கிளப்புகிற களேபரத்தில், குஜராத்தில் மோடி அரசாங்கத்தால் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட போலி என்கவுன்டர் கொலைகள் ஆகியவற்றின் எதிரொலிகள் அமிழ்ந்து அடங்கிப்போகும்; மறக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறது பி.ஜே.பி. 
  மோடியின் செய்தியைப் பரந்துவிரிந்த அளவில் கொண்டுசெல்வதில் கார்ப்பொரேட் செய்தி ஊடகங்களான அச்சு மற்றும் மின்னணு செய்தி நிறுவனங்களில் சில பகுதியினரும், சமூக ஊடகங்களும் தம் பங்குக்குப் பிரம்மப்பிரயத்தனம் செய்கின்றன.
   மனக் கிளர்ச்சியூட்டும் இந்த நிகழ்வுகளை நுணுகி ஆராயவேண்டியுள்ளது.
குஜராத் முன்மாதிரியாம்:
  ‘குஜராத் மாடல் வளர்ச்சியின் சிற்பி மோடி என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா? தனிச்சிறப்புவாய்ந்த வளர்ச்சி முன்மாதிரியை குஜராத் கொண்டிருப்பதுபோன்று ஒரு மாயை பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. குஜராத் உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் காணப்படும் வளர்ச்சியின் (ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான) அனுபவங்களில் கற்கவேண்டிய சில அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், குஜராத் விஷயத்தில் ஏதோ தனிச்சிறப்பு இருப்பதாகத் தம்பட்டமடித்துக் கொள்வது உண்மையோடு விளையாடுவதாகும். மற்ற பலரோடு ஒப்பிடுகையில், குஜராத்திகள் எப்போதுமே வணிகம் சார்ந்த, தொழில்முனைப்பு காட்டும் சமூகத்தினராகவே அறியப்பட்டுள்ளனர். இதற்குக் காரணகர்த்தா மோடி அல்ல. வளர்ச்சியின் அனைத்து அலகுகளிலும் முன்னணி இடத்தில் எங்குமே குஜராத் இல்லை. எந்தவொரு பொருளாதார ஆய்வு அறிக்கையிலும் இதனைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
  நாட்டின் பிற மாநிலங்களில் தலைகாட்டுவதைப்போன்றே பொருளாதார வளர்ச்சியின் அனைத்து நெருக்கடிகளாலும் இன்றைய குஜராத் பாதிக்கப்படுகிறது. அங்கு, நல்ல நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள், செயல்பணிகள் ஏட்டளவில் பார்க்கும்போது மிகச்சிறந்தவையாகத் தோன்றியபோதிலும் நடைமுறையில் அவை முடங்கிக்கிடக்கின்றன என்பதற்குப் பல உதாரணங்களுண்டு. எடுத்துக்காட்டாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பான மகப்பேறு என்பதற்கான சிரஞ்சீவி யோஜனா போன்ற திட்டங்களைக் கூறலாம். புள்ளிவிபரங்களைச் சீரழித்தல், கசப்பான விஷயங்களை மறைத்தல், சாதனைகளை அதீதமாகத் தம்பட்டமடித்தல் ஆகியவை இன்றைய சகல துறைகளையும் தழுவிய மன அழுத்தத்திலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடுவதற்கான வழியை மக்களுக்குக் காட்டுவதாகாது. மோடி, தனது பகட்டான மேடைப்பிரசங்கங்களில் காங்கிரசுக்கு எதிராகக் கக்குகிற ஏகடியம்-காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தைக் குறிவைத்துச் செய்யப்படுகிற ஏளனம், பரிகாசங்கள்-குறிப்பிட்ட பகுதியினர் காங்கிரஸ்மீது கொண்டுள்ள வெறுப்பை மேலும் தூண்டுவிடுவதாக அமையுமேயொழிய பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிகாட்டுவதாக அவை அமையாது. அடிக்கடி நிகழ்த்தும் பிரசங்கங்கள் ஒன்றிலேனும், மாற்றுக் கொள்கை அல்லது மாற்றுத் திட்டத்தை பி.ஜே.பி. பின்பற்றும் என ஒருபோதும் மோடி அறிவித்ததில்லை. நாடு அனுபவிக்கின்ற பிரச்சனைகளுக்கு அவர் எந்தத் தீர்வையும் முன்மொழிந்ததுமில்லை.
  அவரால் எப்படி முடியும்? ஏனெனில், பொருளாதாரக் கொள்கைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் பி.ஜே.பி.யும் காங்கிரசும் ஒரேமாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டுள்ளன. ஊழல் எனும் புற்றுநோயிலிருந்து இருகட்சிகளுமே விடுபட்டவையல்ல. ஒரு கட்சி ஆட்சியில் மற்றது எதிர்க்கட்சி வரிசையில் என்பதுதான் இருக்கின்ற வித்தியாசம். அந்த வகையில், அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட ஆனால் தமக்குகந்த ஓசையை எழுப்புகின்றன.
காங்கிரஸ்-பி.ஜே.பி. பெரிய வேறுபாடு:
  ஆனால், ஒரு பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. பி.ஜே.பி. மூர்க்கத்தனமான மதவெறிக்கொள்கை கொண்டுள்ளது; காங்கிரசோ, எப்போதேனும் மதச்சார்பின்மை எனும் பாதையிலிருந்து விலகிச்சென்றாலும், மதச்சார்பற்ற கொள்கைகொண்டதாக விளங்குகிறது. (அவரே ஒப்புக்கொண்டதைப்போல) இறுகிப்போன இந்து தேசியவாதியாக இருக்கும் மோடி, பிரதமர் எனும் உயர் பொறுப்புக்கு வருவது பி.ஜே.பி.யின் ‘இந்துத்வா திட்டத்திற்குமேலும் உசுப்பேற்றுவதாகவே அமையும்.
  ஊழலை எதிர்த்துப் போராடுதல் என்று பேசும்போது, குஜராத்தில் மோடி ஆட்சியிலிருக்கும் இத்தனை ஆண்டுகளில் ‘லோக் ஆயுக்தாசட்டத்தை நிறைவேற்றக்கூட முடியவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பழைய சட்டத்தை நிச்சயமற்ற நிலையில் இருத்திவிட்டு, பெயரளவிலானதொரு லோக் ஆயுக்தா மசோதா, மோடி அரசாங்கத்துக்கும், அதற்கு அங்கீகாரம் அளிக்கமுடியாத நிலையில் இருக்கும் அந்த மாநில ஆளுநருக்குமிடையே முன்னும் பின்னுமாக ஊசலாடச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  காங்கிரஸ் ஆட்சியின்கீழ் நிலவுகிற ஊழலை எதிர்த்துப்போராடத் துடிக்கின்றார் மோடி; ஆனால், தனது புறக்கடையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக விசாரணைநடத்த முனைந்தால்,கை வைக்காதேஎன்கிறார் அவர். ஜன் லோக்பால் மசோதா வேண்டுமெனக்கோரி அன்னா ஹசாரே நடத்திய இயக்கத்தின்பின்னே சென்று, இப்போது மோடியை ஆதரிக்க ஓடோடிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் அந்தப் பகுதியிடம் ஒரு விஷயத்தைக் கேட்பது நல்லது. உண்மையில் அவர்கள் எதற்காக நிற்கிறார்கள்? ஊழலுக்கு எதிரான அவர்களின் போராட்டம் என்னவாகும்?
பி.ஜே.பி.யின் யுத்த தந்திரம்:
  ஒரேயொரு திட்டத்தைமட்டும் வைத்துச் செயல்படுவதில் பி.ஜே.பி.க்கு நம்பிக்கையில்லை. ‘வளர்ச்சியின் நாயகன்என்று வர்ணிக்கப்படும் மோடியெனும் மாயவலையை வீசுகின்ற அதே நேரத்தில், வேறு இரண்டு யுத்த தந்திரங்களையும் அது வார்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் சிறிதும் பெரிதுமாகக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் வகையில் பல மாநிலங்களில் வகுப்புரீதியிலான பதற்றத்தீயை அவர்கள் எவ்வாறு பற்றவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமது ஹிந்து வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில், மக்களைப் பிளவுபடுத்தி, சமூகத்தினரை மதரீதியில் எதிரும் புதிருமாக நிறுத்துவதுதான் அவர்களின் நோக்கம்.
  ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமராகசித்தரித்து, அப்படிப்பட்ட பலவீனமான பிரதமருக்கு பதிலாக மோடி போன்ற வலுவான, உறுதியான செயல்பாடுடைய ஆட்சியாளரைக் கொண்டுவரவேண்டிய அவசியம் இருப்பதாகப் பிரச்சாரம் செய்வது இரண்டாவது யுத்த தந்திரமாகும். வலுவான ஆட்சியாளர், திறன்மிகு நிர்வாகி என்பவர் அதேசமயம் கட்டாயம் ஜனநாயகவாதியாகவும் இருக்கமுடியும் என்றாலும், அப்படித்தான் இருப்பார் என்பது நிச்சயமில்லை அல்லவா? எப்படியிருப்பினும், மோடியைப் பொறுத்தவரை, அவர் ஒரு எதேச்சாதிகார ஆட்சியாளராகத்தான் இருப்பார். இது அவரது குணாதிசயத்துடன் இரண்டறக்கலந்தது. அவர் சர்வாதிகாரியாக இருப்பதோடு, பிளவுபடுத்தும் தன்மை கொண்டவராகவும் உள்ளார். தன்னுடன் ஒத்துப்போகாத தனிநபர்களையும், வகுப்பினரையும் அழுத்திக் கீழேதள்ளிவிடும் கலையை நன்கு கற்றுத்தேர்ந்தவர் அவர்.
   அவர் தேர்தல்கள்மூலம் வெற்றிபெற்றவர்; ஒருமுறையல்ல-உண்மையில் மூன்றுமுறை ஆள்வதற்கு ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவராயிற்றே என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய நிலையில்தான் நாம் இருக்க நேரிடும். தேர்தல்கள்மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் சிலர் ஜனநாயகமாக செயல்படாததை வரலாற்றில் காணமுடியும். உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தைக் கொலைதான் செய்தார்கள்.
   “உலக வரலாற்றில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களும் புகழ்மிகு மனிதர்களும் இரண்டுமுறை தோன்றுவதைக் காண இயலும் என்று எங்கோ ஹெகல் குறிப்பிடுகிறார். ஆனால், முதலில் அது துயரகரமானதாகவும், இரண்டாவதாக அசட்டுத்தனமிகு மோசடியாகவும் நிகழ்கிறது என்பதை அவர் சொல்ல மறந்துவிட்டார்என மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டுகிறார். வரலாறு, ஹிட்லரின் வடிவில் துயரத்தைக் கண்டு துடித்துவிட்டது. நரேந்திர மோடியின் மோசடியை அது இன்னும் கண்டு அனுபவிக்கவில்லை.
   பி.ஜே.பி.யும் மோடியும் தவறாகக் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெல்லிக்கு அவர்களை இட்டுச் செல்லும் நேரான காவி சாலை இங்கில்லை. சரித்திரத்தில் சொல்வதுபோல்,டெல்லி இருப்பதோ தொலைதூரத்தில்! இத்தகைய வகுப்புவெறியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், சக்திகளும், தனிநபர்களும் கங்கணம் கட்டிச் செயல்பட்டாக வேண்டும்.
Courtesy: Mainstream, VOL LI No 44, October 19, 2013

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP