Monday, November 11, 2013

தொழிலாளி வர்க்கம்

-->மிகவும் புரட்சிகரமான வர்க்கம்: -->
மார்க்சின் கண்டுபிடிப்பு
 
-->
அனில் ரஜிம்வாலே


இவ்வாண்டு (2013) மே 5 காரல் மார்க்சின் 195-வது பிறந்த நாள். அந்த அழியாப் புகழ்கொண்ட புரட்சியாளரின் நினைவைப் போற்றும் வகையில், ’மெயின்ஸ்ட்ரீம்’ ஆங்கில வார ஏட்டின் மே 11, 2013 தேதியிட்ட இதழில், மார்க்சீய சிந்தனையாளரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான தோழர் அனில் ரஜிம்வாலே எழுதிய கட்டுரையின் (MARX’S DISCOVERY OF THE MOST REVOLUTIONARY CLASS) தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.


  ற்பனாவாத சோஷலிசத்தை விமர்சனம் செய்ததன்மூலம், சோஷலிசத்தை விஞ்ஞானபூர்வமான தளத்துக்குக் கொணர்ந்த மகத்தான அறிவியல் ஜாம்பவான் காரல் மார்க்ஸ். அவரது விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளைக் கவனத்தில்கொண்டு நோக்கும்பொழுது, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன், இன்னபிற இயற்பியல் மற்றும் சமூக விஞ்ஞானிகளின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராகத் திகழ்கிறார் அவர். உண்மையில், மற்ற எல்லா சிந்தனையாளர்களையும், விஞ்ஞானிகளையும்விட அதிக அளவில் கண்டுபிடிப்புகளைச் செய்தவர் காரல் மார்க்ஸ். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள் பலவும் நம்முடைய சிந்தனைப் போக்குகளை என்றென்றைக்குமாக மாற்றி அமைத்துவிட்டன. அவரது மகத்தான பல கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது, தொழிலாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் வகிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரம் பற்றியதாகும். பல சந்தர்ப்பங்களில், மார்க்சின் இந்த கருத்தாக்கங்களும், நிர்ணயிப்புகளும், அவற்றின் விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் மேம்போக்கான முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவரது கண்டுபிடிப்பு விஞ்ஞானபூர்வமானது என்பதையும், அது துளியும் கற்பனைகலவாதது; உணர்ச்சி ததும்பும் அறிக்கைபோல அல்லாதது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். விஞ்ஞான முறைகளைக் கையாண்டு, மிகத்துல்லியமாகத் தொழிலாளிவர்க்கம் ஏன், எவ்வாறு மிகவும் புரட்சிகரமான சக்தியாக உள்ளது என்பதை மார்க்ஸ் தீர்மானித்திருக்கிறார். ஆகையால், ‘புரட்சிகரமான’ என்கிற பதம், வெறும் விழைவைக் குறிப்பதாக அல்லாமல், எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
  வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு நிறைவேற்றிய நீண்ட நெடிய பணி இது. தொழிலாளர்களின் மோசமான வாழ்நிலையைக்கண்டு இரங்கி, அவர்கள்மீது கொண்ட அனுதாப உணர்வின் அடிப்படையில் விளைந்ததல்ல இந்தக் கண்டுபிடிப்பு. விஞ்ஞானபூர்வமற்ற அணுகுமுறையால் உருவாகும் தவறான அபிப்ராயம் இது. தொழிலாளர்களின் இத்தகு வாழ்நிலைகள் இருந்ததும், இருப்பதும் உண்மைதான்; தொழிலாளர்கள் மற்றும் சுரண்டப்படுவோர்மீது மார்க்சும் எங்கெல்சும் மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மையே. ஆனால், இதுவே, இவ்விரு சிந்தனையாளர்களையோ அல்லது தொழிலாளர்களையோ புரட்சியாளர்களாக்கிவிடவில்லை. சுரண்டல் உட்பட முதலாளித்துவத்தின் சில போக்குகள் விளைவாகத் தோன்றியவையே வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, துயர்மிகு வாழ்க்கை, பட்டினி போன்ற நிலைமைகளாகும். வேலையின்மையில் உழல்பவர்கள், மிகவும் ‘புரட்சிகரமான’ வர்க்கமாகவோ அல்லது பிரிவினராகவோ விளங்குவார்கள் என்று மார்க்ஸ் காலத்தில் சிலர் தவறான கருத்துகொண்டிருந்தனர். இன்றும்கூட அந்தக் கருத்து நிலவுகிறது. பிரெளதான், லாசல்லெ, பாகுனின் போன்றவர்களுடன் நடத்திய விவாதத்தின்போது அவர் குறிப்பிட்டதைப்போன்று, இந்தக் கருத்துக்கள, “தத்துவத்தின் வறுமை” என்றுகூறி எதிர்த்தார் மார்க்ஸ். உற்பத்தி இயங்கு முறைகளுக்கு வெளியில் உள்ளவர்களைப் ‘புரட்சிகரமான வெகுஜனங்கள்’ எனக் காண்பது என்றும் அராஜகவாதத்தின் நிலையாகும்.
  இரங்கத்தக்க நிலையில் இருப்பதுவே ஒருவரைப் புரட்சிவாதியாக ஆக்கிவிடாது.
வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்:
  இது, மார்க்சின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது; சமுதாயத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை (இயக்கத்தை) அது விளக்குகிறது. அவரது இந்தக் கருத்தாக்கம், மிக எளிமையானது; ஆனால், பொருள் பொதிந்தது. விலங்குகளைப் போல அல்லாமல், மனிதன் தனக்குத் தேவையான உணவை முதலில் உற்பத்திசெய்தாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி செய்வதற்கு, மனிதர்களையும் உள்ளடக்கியபின் உற்பத்தி சக்திகள் என்று பரவலாக அறியப்பட்ட கருவிகளையும், உற்பத்தி சாதனங்களையும் அவர்கள் உருவாக்க வேண்டும். இந்த வளர்ச்சிதான், ‘சமுதாயம்’ என்ற அமைப்பு முளைத்தெழுவதற்கு வழிகோலுகிறது. உச்சபட்ச ஆய்வில், அதன் அமைப்புக்களும், வாழ்வியல் முறைகளும், உற்பத்தி சக்திகளாலும், அடிப்படையில்-கருவிகளாலும், அவை உருவாக்கிய பொருளாதார உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. ஆக, உற்பத்தி சக்திகள் என்று பொதுவாக அறியப்பட்ட உற்பத்திக் கருவிகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. இந்த மோதல் அல்லது முரண்பாடு சமுதாயத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கிறது.
  இது காரல் மார்க்சின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும். உற்பத்தி சக்திகளும், அதன் விளைவாக உற்பத்தி உறவுகளும் மாறிக்கொண்டே இருப்பதால், சமுதாயம் நிலைகுத்திப்போவதில்லை. இவற்றில், முன்னது [உற்பத்தி சக்திகள்] தொடர்ந்தும், பின்னது [உற்பத்தி உறவுகள்] கட்டம் கட்டமாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பிட்டதொரு கட்டத்தில், உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் மாற்றம் காண்பதற்கான சூழல் முழுமை அடைவதால், பழைய உற்பத்தி உறவுகள் இருந்த இடத்தில், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவது தேவையாகிறது.
  இவ்வாறாக, சமுதாயம் தேங்கிப்போகாமல், எவ்வாறு இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சமுதாயத்தில், குறிப்பிட்ட கட்டங்களில், கேந்திரமான வளர்ச்சிப்போக்குகளும், மாற்றங்களும் நிகழ்கின்றன. வர்க்கங்கள், குடும்பம், தனிச்சொத்து, அரசு, அரசாங்க அமைப்புகள், உறவுகள், ஜனநாயகம், யந்திரமுறையிலான உற்பத்தி, தொழிற்புரட்சி, தேசங்கள், இத்யாதி என இந்தமுறையில் குறிப்பிட்ட கட்டங்களில் வளர்ச்சி பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் இல்லாத சுரண்டல், பின்னர், சமுதாயம் குறிப்பிட்ட அளவு தேவையான உபரிமதிப்பை உருவாக்கியபோது தோன்றலாயிற்று. குறிப்பிட்ட காலகட்டங்களில், சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் எனப் பல வர்க்கங்களும் உருவாகின்றன. பணம்படைத்தோர், ஏழைகள் எனும் பிரிவுகளும் தோற்றம் கொள்கின்றன. ஆக, பணக்காரர்கள்-ஏழைகள் என்ற பிரிவுகள் என்றென்றும் நிலையாக இருப்பதில்லை; சமுதாயம் தோன்றிய காலத்தில் அவை இருந்ததில்லை; சமூக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவை மறைந்துபோய்விடும் அல்லது அப்போது உருவாகின்ற நிலமைகளில் சிறிது சிறிதாகக் கரைந்துபோய்விடும்.
  எனவே, சமுதாயப் பிரிவினைகளுக்கு ஒருவிஞ்ஞான ரீதியிலான வரலாற்று அடிப்படை உண்டு என்பதையும், குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் உருவாகும் அவை, மற்றொரு கட்டத்தில் நீங்கிவிடும் என்பதையும் முதன்முதலில் உணர்த்தியவர் மார்க்ஸ். சமுதாயத்தில் நிகழும் அடிப்படையான மாற்றங்களைப் புரட்சிகுறித்த அவரது தத்துவம் உள்ளடக்கியிருக்கிறது; சுரண்டலற்ற, வர்க்கங்கள் இல்லாத சமுதாயம் உருவாவதுதான் மிகவும் அடிப்படையான புரட்சி என்பது அதன் நிலை. உற்பத்தி சக்திகள், குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்குவம் பெறும்போது, வர்க்கப்போராட்டத்தின் மூலம் இத்தகைய பிரிவுகளுக்கு முடிவு ஏற்படும்.
புரட்சிகர சக்திகள்:
  வரலாறும் சமுதாயமும் தமது பரிணாம வளர்ச்சி மற்றும் இயக்கத்தின் போக்கில், குறிப்பிட்ட வர்க்கங்களையும் பிரிவுகளையும் தோற்றுவித்துவிடுகின்றன; சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தும் கருவிகளாக அவை ஆகிவிடுகின்றன. புரட்சி என்பது நிச்சயமாக உள்ளுணர்வு சார்ந்த ஒரு செயல்தான்; ஆனால், சமுதாயத்தின் பொதுவான முன்னோக்கிய வளர்ச்சிப் பயணத்துக்கு அது எதிரானதல்ல; சமுதாய வளர்ச்சியின் எதார்த்த நியதிகளை மீறியதுமல்ல.
  வரலாற்றின் முந்தைய காலகட்டங்களில், சோஷலிசத்துக்கான அல்லது கம்யூனிசத்துக்கான புரட்சி ஏன் நடைபெறவில்லை என்பதுபற்றிச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் கிளர்ந்தெழுந்த அடிமைகளின் புரட்சி, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான பிரெஞ்சுப் புரட்சி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற புரட்சிகள் போன்ற பல பெரிய புரட்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. அவை பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டன; சமுதாயத்தை முன்னோக்கிக் கொண்டு சென்றன. அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.
  ஆயினும், மனிதகுலத்துக்கு எதிரான சுரண்டல் தொடர்ந்தது; இன்றளவும் தொடர்கிறது. அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சிகள், மென்மையான அடிமைத்தனத்தை மறு நிர்மாணம் செய்தன அல்லது நிலப்பிரபுத்துவத்துக்கு இட்டுச்சென்றன. நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான பெரிய புரட்சி, யந்திரங்களைக்கொண்டு பொருள் உற்பத்திசெய்யும் ஒரு முதலாளித்துவ அமைப்புக்குச் சாதகமான சூழலை உருவாக்கிட, தடைகளை நீக்கி, மதகுகளைத் திறந்துவிட்டது. ஆனால், அத்தகைய மாற்றங்களால், சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரமுடியவில்லை; அதற்கான காலம் அப்போது கனியவில்லை.
  சுரண்டலை விட்டொழிப்பதற்கு உகந்த பொருளாதய, உற்பத்தி சூழல்கள் அப்போது தலைகாட்டத்தான் தொடங்கியிருந்தன. முதலாளித்துவ-தொழில் யுகத்தில்தான் இதற்கான சூழல்கள் உருவாகின. பல கட்டங்களாக நடைபெறும் புரட்சிகர மாற்றங்களின்மூலம் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை மாற்றி, சுரண்டல் இல்லாத புதிய சமுதாய அமைப்பை உருவாக்குவதை முன்னோக்கியே கண்டுணர்ந்து, அதற்கான தயாரிப்புகளிலும் பணிகளிலும் ஈடுபடத்தக்கவகையில் உற்பத்தி சக்திகளும், அவற்றை இயக்குகிற வர்க்கங்களும் அமைந்துள்ளன. தொழிலாளர்களின் பெரும்பகுதி (பாட்டாளிகள் அல்லது தொழிலாளிவர்க்கம்)யினரால் இயக்கப்படுகின்ற உற்பத்தி சக்திகளை முதன் முதலாக வரலாறு உருவாக்கியது. ‘உழைப்பின் தொகுப்பு’தான் பண்டங்களின் மூலாதாரம் எனும் கண்டுபிடிப்பைத் தனது புகழ்மிக்க, ஆக்கபூர்வமான ‘மூலதனம்’ நூலில் விளக்குகிறார் மார்க்ஸ். கைவினைஞர் அல்லது விவசாயியின் தனிப்பட்ட உழைப்பிலிருந்து இது மாறுபட்டது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு பண்டத்தை சிருஷ்டிக்கிறார்கள். அதனை உருவாக்கியது இன்னார் அல்லது இன்னொருவர் என்று இனம்காண முடியாது.
  இத்தகைய உழைப்பில் இருக்கும் முரண்பாட்டுத் தன்மையை, ‘மூலதனம்’, ‘கற்பனாவாத சோஷலிசமும், விஞ்ஞான சோஷலிசமும்’ உட்பட பல நூல்களில் மிக நேர்த்தியாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கான தொடக்கத்தைத் தமது ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் செய்தனர். பொருள் உற்பத்தியில், உழைப்பு ஒரே நேரத்தில், ஸ்தூலமாகவும், கண்ணுக்குப் புலப்படாமலும் இருக்கிறது: முன்னது, ஒரு பொருளின் உபயோக மதிப்பை உருவாக்குகிறது; பின்னது, அதன் மதிப்பை நிர்ணயிக்கிறது. எண்ணிக்கையில் வளரும் தொழிலாளர்களின் உழைப்பு மேலதிகமாக, மிகச்சில (இன்று ஏகபோகம் என்று அழைக்கப்படுகின்ற) பெருக்கமடையும் பெரிய முதலாளிகளின் கைகளில் சென்றடைகிறது. இந்த மோதல், என்றென்றும் தொடரமுடியாது. இது இப்போது நிலவுகின்ற உற்பத்தி உறவுகளைத் தூக்கியெறிந்து, உற்பத்தி சாதன்ங்களைச் சமுதாயம் தன்வசப்படுத்திக்கொண்டு நிர்வகிக்க வேண்டியிருக்கும். ஆகப்பெரிய முதலாளிகள் தொடங்கி, தொழிற்சாலை முதலாளிகள், படிப்படியாகத் தமது சொத்துடைமையை இழக்கச் செய்யப்படுவார்கள். கூட்டு உழைப்பும், அதன் பயனைத் தனியார் அபகரித்துக் கொள்வதும் ஒன்றுக்கொன்று முரணானது.
தொழிலாளி வர்க்கம்:
  வரலாற்றின் மையத்தில் தொழிலாளி வர்க்கத்தை முதன்முதலில் கொண்டு அமர்த்தியவர் காரல் மார்க்ஸ்தான். யந்திரப் பொருள் உற்பத்திமுறை, உழைப்பின் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்தமான, சிக்கல்மிகுந்த அமைப்பில் இந்த வர்க்கத்தின் நுணுக்கமான, மையப்பாத்திரம் கருதித்தான் அவர் இவ்வாறு செய்தார். ஆக, இறுதியில் வரலாறு ஒரு அமைப்பைக் கண்டுபிடித்தது; அது, உற்பத்திக் கருவிகள் மற்றும் உழைப்பின் தொகுப்பைச் சமூகக்கூட்டு ஏற்றுக்கொள்கிற அமைப்பு; ஒட்டுமொத்தமான உற்பத்திக் கருவிகளை அல்லாமல், அடிப்படையில் உழைப்பின் தொகுப்பைக் கொண்டு பெருமளவில் செய்யப்படும் முதலாளித்துவ உற்பத்திமுறையில் ஈடுபடுத்தப்படுகின்ற சாதனங்களை ஏற்றுக்கொள்கிற அமைப்பு. ஆனால், சிறிய அல்லது தனி நபர்  உடைமை என்பது வரலாற்றில் நெடுங்காலம் தொடரும்.
  ஒட்டுமொத்தமான உற்பத்தி அமைப்பில், நேரடியாகக் களத்தில் இறங்கி, கூட்டு உழைப்பின்மூலம் இயக்கப்படுகின்ற ஆலை இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள உற்பத்திக் கருவிகளைத் தன்வசமாக்குகிற ஒரு வர்க்கம், தொழிற்புரட்சியின் ஊடாகவும், அப்புரட்சியின் விளைவாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. ‘பாட்டாளி வர்க்கம்’ அல்லது தொழிலாளிவர்க்கம் என்பதுதான் அது. தான் இயக்குகிற அல்லது கையாளுகிற உற்பத்திக் கருவிகளைப் பறிகொடுத்த வர்க்கம் என்கிற பொருளில்தான், ‘பாட்டாளி வர்க்கம்’ என்கிற பதம் மார்க்சீய அகராதியில் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றின் போக்கில், ஸ்தாபன ரீதியாக, ஆக்கபூர்வமாகத் திரள்கிற உணர்வுமிக்கத் தன்மையைக் குறிக்கும் வகையில், ‘தொழிலாளி வர்க்கம்’ என்கிற சொல் மேலதிகமாகப் பயன்படுத்தப்படலாயிற்று. தொழிலாளி வர்க்கம், வரலாற்றில் ஆக்கபூர்வமான சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இன்றைய சமுதாயத்தில், பொருளாதய ரீதியிலும், கலாசார ரீதியிலும் மதிப்பீடுகளை அது உருவாக்குகிறது. எனவே, அது இன்றைய சமுதாயத்தை சிருஷ்டிக்கிறது; மறுநிர்மாணம் செய்கிறது.
  புதியதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு மிகவும் உகந்தது இந்த வர்க்கமே. விவசாயிகள் மற்றும் குட்டிபூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றைப்போல் அல்லாமல், தொழிலாளி வர்க்கம் எப்படி மிகவும் முன்னேறிய, மிகவும் புரட்சிகரத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதற்குப் பல காரணிகளை மார்க்சும் லெனினும் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள். ‘உற்பத்தியில் அது வகிக்கும் ஸ்தானம்’ தான் அதற்கு அடிப்படையான காரணமாகும். ‘இயல்பாகவே’ கூட்டு உடைமைக்காகத் தொழிலாளி வர்க்கம் போராடுகிறது; அது அவ்வாறு செய்யவேண்டியது அவசியம். எனவே, சோஷலிசம் பற்றிய அதன் அணுகுமுறையும் கூட்டாக மேற்கொள்ளப்படுகிறது. சிறு அளவில் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களான விவசாயிகள், கைவினைஞர்கள், இன்னபிறர் ஏன் அந்த அளவு புரட்சிகரத்தன்மை கொண்டவர்களாக இல்லை; முழுமையாக முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிரானவர்களாக இல்லை’ என்பதை மார்க்ஸ், தன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் தெளிவாக்குகிறார்; பின்னர் லெனின் இதுகுறித்து விரிவாக விளக்குகிறார். தமது தனிப்பட்ட தனியார் உற்பத்திக் கருவிகளை முதலாளித்துவத்திடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று மட்டுமே போராடுவதுதான் இதற்குக் காரணம். இவ்வாறு செய்வதன்மூலம், புதிய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு அவர்களே தோற்றுவாயாக ஆகிவிடுகின்றனர். ‘குட்டிபூர்ஷ்வா உற்பத்தி, ஒவ்வொரு நிமிடமும் முதலாளித்துவத்தை ஜனிக்கச் செய்கிறது’ என்றார் லெனின். எனவேதான், சோஷலிசம் பற்றிய குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் பார்வை சுருங்கிப்போய், இறுதியில் ஏதாவதொரு வகையான முதலாளித்துவத்துடன் அது ஐக்கியமாகிவிடத் துடிக்கிறது. ஒரு வர்க்கத்தின் இயல்பும், கட்டுக்கோப்பும் இங்கே தீர்மானமாகிவிடுகிறது. உற்பத்தியில் அவை வகிக்கும் பாத்திரத்தையே இயல்பு என்கிறார் மார்க்ஸ்.
  முந்தைய வரலாற்று வளர்ச்சிப்போக்கின் விளைவாக, இறுதியில் சுரண்டல் உற்பத்தி உறவுகளைத் தூக்கியெறிவதற்கான ஸ்தானத்தில் தொழிலாளிவர்க்கத்தை சரித்திரம் இருத்தியிருக்கிறது. சமுதாயத்தின் அடிப்படையாக எது விளங்குகிறதோ, அந்த நவீன உற்பத்தியின் மையத்தில் அதுவே ஒருங்கிணைந்த வர்க்கமாகவும் அமைந்துள்ளது. முதலாளித்துவத்தை நேரடியாக எதிர்கொண்டு அதனை எதிர்க்கிற வர்க்கமாக அது திகழ்கிறது. எனவே, சோஷலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் அது மிகவும் உகந்ததாக உள்ளது.
  வேலையின்மை, யாசகம், ஏழ்மை, துயர்மிகு வாழ்க்கை, இன்னபிறவும் புரட்சிகரத் தன்மையைத் தீர்மானிப்பவை என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தவில்லை. முதலாளித்துவ அமைப்பின் சுழற்சியில் தூக்கியெறியப்படுபவர்கள் வேலையின்மைக்கு ஆளாகிறார்கள்; அவர்களில் குறிப்பிட்ட அளவில் குறைவான பகுதியினரை ‘ரிசர்வ் படையாக’ அந்த அமைப்பு வைத்துள்ளது. வெகுஜன இயக்கங்களுக்கு அவர்கள் அவசியம் என்பது மட்டுமின்றி, முக்கியமான பாத்திரமும் அவர்களுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. ஏழ்மையில் உழல்கிறார்கள் என்தால் மட்டுமே தற்போதைய சமுதாயத்தையோ, எதிர்கால சமுதாயத்தையோ நிர்மாணிப்பவர்களாக அவர்கள் ஆக்விடுவதில்லை. அதுமட்டுமல்லாமல், சமுதாயத்தில், ‘ஒட்டுண்ணிகளாக’ பிற வர்க்கத்தினரைச் சார்ந்து வாழப்பழகிப்போன கழிசடைப்பகுதியினர் மற்றும் நோக்கமின்றித் திரிபவர்களின் பாத்திரத்தை மார்க்ஸ் விமர்சித்துள்ளார். லெனின் குறிப்பிடுவதைப்போல, பிற்போக்கின் அதிரடிப்படையாக அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
  இப்படிச் சொல்வதனாலேயே, வேலையின்மையில் உழல்பவர்கள் முக்கியத்துவமற்றவர்கள் என்று பொருளல்ல; உண்மையில், ‘உற்பத்தியில் வகிக்கும் இடம்’ என்ற நிலையில் அல்லாமல், அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்தான். வேலைவாய்ப்புக் கோரிப் போராடவும், புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கவும் அவர்களைத் தொழிலாளிவர்க்கம் அணிதிரட்டவேண்டியுள்ளது. ஆனால், ’புதிய இடதுசாரிகள்’ 1970-களிலும், அதன்பிறகும் செய்ததைப்போன்று, தொழிலாளிவர்க்கத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களின் [வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களின்] பாத்திரத்தைத் தவறாகக் கணிப்பது, சரித்திரத்தில் அவர்களைத் தவறான இடத்தில் இருத்திவிடும்.
  மார்க்ஸ், தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் பல்வேறு வர்க்கங்களின் பாத்திரத்தையும் ஸ்தானத்தையும் அலசி ஆராய்ந்துள்ளார்.
விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சியும் தொழிலாளி வர்க்கமும்:
 விஞ்ஞான-தொழில்நுட்பப்புரட்சி (STR) தொழிலாளி வர்க்கத்தின் பல அம்சங்களை மாற்றியுள்ளது. இந்த விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சி கொண்டுவந்திருக்கும் மாற்றங்களை மார்க்சீயவாதிகளும் விஞ்ஞான சோஷலிஸ்டுகளும் அலட்சியப்படுத்திவிடமுடியாது. தொழிலாளி வர்க்கத்தின், பிற மக்கள் பிரிவினரின் இயல்பிலும், கட்டமைப்பிலும், விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சி, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல புதிய பிரிவுகளை உருவாக்கிவருகிறது. எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகின்றபோதிலும், உற்பத்தி என்பதிலிருந்து, சேவை, தகவல் ஆகியவற்றுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுக்கோப்பு மாறிக்கொண்டிருக்கிறது. இதுவும், இதர மாற்றங்களும், மார்க்சும் லெனினும் தமது காலத்தில் செய்ததைப்போன்று சமூக மற்றும் விஞ்ஞான வளர்ச்சிப்போக்குகளை முற்றிலுமாக அலசி ஆராயவேண்டிய அவசியத்தைச் சுட்டுகின்றன.
  விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சியானது, சமுதாயத்தின் கட்டுக்கோப்பிலும், உட்கூறுகளிலும் ஆழமான மாற்றங்களைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது; என்றுமில்லாத அளவு வெகுவேகமாக நகரமயமாக்கத்தை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது; உற்பத்திக் கருவிகளிலும், தகவல்தொடர்பு போன்றவற்றிலும் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் இல்லாத அளவு, தொடர்பு மற்றும் தகவல் துறைகளின் பங்கு இன்று அதிகரித்திருக்கிறது; இதன் விளைவாக, இவற்றைக் கையாளும் மக்கள் பகுதியினர் மற்றும் வர்க்கங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
  தகவல் தொழில்நுட்பமானது, உற்பத்தி முறைகளில் மிக முக்கியமான அம்சமாகப் பிரவேசித்திருக்கிறது.
  காரல் மார்க்ஸ் செய்ததைப்போன்று, அறிவியல் தத்துவங்களை உருவாக்க, விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ள புதிய புரட்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த விஞ்ஞானபூர்வமான ஆய்வு தேவை; எனவே, அவரது விஞ்ஞானபூர்வமான ஆய்வுமுறைகளைக் கற்றுத் தேர்வது அவசியம்.
தமிழில்: மு.கோபாலகிருஷ்ணன்
Courtesy: MAINSTREAM, MAY 11, 2013


 

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP