Sunday, November 10, 2013

மோடியின் முகவிலாசம்!


அரேபியாவின் அனைத்து வாசனாதி திரவியங்களாலும்
தூய்மைப்படுத்தமுடியாத கறைபடிந்த கரங்கள்!!
மார்க்கண்டேய் கட்ஜு
-->

திரு.மார்க்கண்டேய் கட்ஜு, முன்னாள்உச்சநீதிமன்ற நீதிபதி. இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவர். போற்றுவோர் போற்றினாலும், புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றினாலும் எவர்க்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைக்கத் தயங்காதவர். ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகக் காவியத்தில் இடம்பெற்ற, “அரேபியாவின் அத்தனை வாசனை திரவியங்களாலும் இச்சிறிய கரங்களை மணங்கமழச் செய்ய இயலாது” எனும் பிரசித்திபெற்ற வசனத்தை எடுத்தாண்டு, மோடியின் முகவிலாசத்தை அம்பலப்படுத்துகிறார் இக்கட்டுரையில். படித்துப் பயன்பெறுவோமாக!]
  பிரச்சனைகளால் சூழப்பட்டு, திக்குத்தெரியாமல் கதியற்று நிற்கும் இந்திய மக்களை, பாலும் தேனும் பெருக்கெடுத்தோடுகின்றதொரு பூமிக்கு இட்டுச்செல்கின்ற நவீனமோசேயாகவும், இறைத்தூதராகவும், இந்தியாவின் அடுத்த பிரதமர் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவராகவும், இந்தியர்களின் பெரிய பகுதியினரால் சித்தரிக்கப்பட்டுவருகிறார் நரேந்திர மோடி. இது ஏதோ கும்பமேளாவில் பாரதீய ஜனதா கட்சியினரும், ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தினரும் பேசிக்கொள்கிற சங்கதிமட்டுமல்ல. மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்ட நமது ‘படித்த’ இளைஞர்கள் உட்பட ‘படித்த’ வர்க்கம் என்று சொல்லப்படுகிற பெருமளவு இந்தியர்களிடமும் இந்தப் பேச்சு அடிபடுகிறது.
  அண்மையில் டெல்லியிலிருந்து போபாலுக்கு நான் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த இருக்கையில் குஜராத்தி வணிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். மோடியைப்பற்றி அவரது அபிப்ராயத்தைக் கேட்டேன். மோடியைப் புகழ்ந்துதள்ளினார் அவர். குறுக்கிட்ட நானோ, குஜராத்தில், 2002-ஆம் ஆண்டு 2000-த்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைப்பற்றிக் கேட்டேன். குஜராத்தில் முஸ்லிம்கள் எப்பொழுதும் பிரச்சனை செய்துகொண்டிருப்பவர்கள் என்ற அவர், ஆனால், 2002-க்குப் பிறகு, அவர்கள் அவர்களுடைய இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், 2002-க்குப் பின் அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதாகவும் அவர் சொன்னார். அது மயான அமைதி என்றும், நீதியுடன் இணைக்கப்படாதவரை அமைதி நீண்டகாலம் நீடித்து நிலைக்கமுடியாது என்றும் அவருக்கு எடுத்துரைத்தேன். இவ்வாறு நான் சொன்னதும், கொந்தளித்துப்போன அவர், விமானத்தில் தனது இடத்தை மாற்றிக் கொண்டார்.
  குஜராத்தில் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அவர்கள், 2002-இல் நடந்த பயங்கரக் கொடுமைகளைப் பற்றிப் பேசினால், தாக்கப்படலாம்; பழிவாங்கப்படலாம் என்கிற நிலை அங்குள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலவரம். இந்திய முஸ்லிம்கள் (நாட்டின் ஜனத்தொகையில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள்) உறுதியாக மோடிக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். (விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் வேண்டுமானால், ஏதோ சில காரணங்களால் இதில் வேறுபடலாம்).
  கோத்ரா ரயிலில் 59 இந்துக்கள் கொலை செய்யப்பட்டதற்கு ‘தன்னெழுச்சியான’ எதிர்வினைதான் (பிரதிகிரியை) குஜராத்தில் நடந்த சம்பவம் என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கதையை நான் நம்பவில்லை. முதலாவது, கோத்ராவில் உண்மையில் நடந்ததென்ன என்பதும், அந்தக் கொலைகளுக்கு யார் காரணம் என்பதும் இன்னும் மர்மமாகவே உள்ளது. இரண்டாவது, கோத்ரா கொலைகளுக்குப் பொறுப்பானவர்களை நிச்சயமாக இனம்கண்டு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்; ஆனால், குஜராத்திலுள்ள முஸ்லிம் சமூகம் முழுவதையும் தாக்குவதில் என்ன நியாயமிருக்கிறது? குஜராத்தில், மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதத்தினர் முஸ்லிம்கள்; மீதமுள்ளவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். 2002-இல் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்தம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; இதர பல கொடூரக் குற்றங்கள் அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டன.
  2002-ஆம் ஆண்டு, முஸ்லிம்களைக் கொன்றுகுவித்தது தன்னெழுச்சியான எதிர்வினைதான் என்று கூறுகின்றனரே, அதைக் காணும்போது, 1938-ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள கிரிஸ்டால் நாஷ்ட் எனும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுஞ்செயல்தான் நினைவுக்குவருகிறது. நாஜிகளால் கொடுமைப்படுத்தப்பட்டுவந்த குடும்பத்தைச் சேர்ந்த யூத இளைஞன் ஒருவனால், பாரிஸ் நகரில் ஜெர்மன் தூதரக அதிகாரியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு யூத இனத்தவர் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தாக்கப்பட்டனர்; அநேகர் கொல்லப்பட்டனர்; அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தீயில் பொசுக்கப்பட்டன; கடைகள் நிர்மூலமாக்கப்பட்டன. இத்தகைய வன்செயல்கள் அனைத்தும் ‘தன்னெழுச்சியாக’ நடந்த எதிர்வினைதான் என்று சொல்லிக்கொண்டது நாஜி அரசாங்கம்; ஆனால், உண்மையில், வெறிகொண்ட பெருங்கும்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு, நாஜி நிர்வாகத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல் அது.
  ‘எது இந்தியா?’ எனும் எனது கட்டுரையில், (justicekatju.blogspot.in என்கிற எனது வலைப்பூவையும்,   kgfindia.com என்கிற வலைதளத்தில் விடியோ காட்சியையும் பார்க்கவும்). இந்தியா என்பது (வட அமெரிக்காவைப்போன்று) பரந்த அளவில் குடியேறியவர்களின் நாடு; இதன் பயனாக, இந்த பூமியில் பெரிய அளவில் வேற்றுமைகள் உண்டு. எனவே, மதச்சார்பின்மை, எல்லா இனத்தவரையும், பிரிவினரையும் சமமாக மதித்து நடத்தல் என்கிற ஒரே கொள்கை வழியில்தான் அதனை ஒன்றுபடுத்தி, முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லமுடியும் என்று குறிப்பிட்டுள்ளேன். இதுதான் மகா சக்ரவர்த்தி அக்பர் கைக்கொண்டொழுகிய கொள்கை வழி; நமது தலைவர்கள் (பண்டித நேரு மற்றும் அவரது சகாக்கள்) இதனையே பின்பற்றி, மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை நமக்கு அளித்தார்கள். இந்தக் கொள்கையை நாம் பின்பற்றவில்லையெனில், அநேக மதங்கள், சாதிகள், மொழிகள், இனக்குழுக்கள் இத்யாதி என எண்ணற்ற வேற்றுமைகள் கொண்ட நம் நாடு ஒருநாள்கூட நிலைக்கமுடியாது.
  ஆகவே, இந்தியா, இந்துக்களுக்குமட்டும் உரித்தானதல்ல; அது, முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சமணர்கள் ஆகிய அனைவருக்கும் சம அளவில் உரியதாகும். மேலும், இந்துக்கள் மட்டும் இந்தியாவில் முதல்தரக் குடிமக்களாக வாழவும், இதரர் இரண்டாம்தர அல்லது மூன்றாம்தர பிரஜைகளாக வதிகின்ற நிலை இங்கு இல்லை. அனைவரும் இங்கு முதல்தர பிரஜைகளே. 2002-ல் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றுகுவித்ததையும், அவர்கள்மீது அராஜகங்கள் கட்டவிழ்த்துவிட்டதையும் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. அந்த வகையில், அரேபியாவின் அனைத்து வாசனாதி திரவியங்களையும் உபயோகித்துப் பார்த்தாலும், மோடியின் கறைபடிந்த கரங்களைக் கழுவித் தூய்மைப் படுத்த முடியாது.
  2002-இல் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களின் படுகொலையில் மோடிக்குத் தொடர்பில்லையென்றும், எந்த நீதிமன்றமும் அவரைக் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கவில்லையென்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். நமது நீதித்துறை பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை; ஆனால், 2002 சம்பவங்களில் மோடிக்கு சம்பந்தமில்லை என்ற கதையை நான் நம்பத் தயாரில்லை. பெருமளவில் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்ட அந்த சமயத்தில் குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் மோடிதான். 2002 சம்பவங்களில் அவரது கைங்கர்யம் எதுவுமில்லை என்று கூறுவதை நம்பமுடியுமா? என்னைப் பொறுத்தவரை நான் அதை நம்புவதற்கில்லை.
  இதோ ஓர் எடுத்துக்காட்டு: எஹ்சான் ஜாஃப்ரி, குஜராத் மாநிலத்தின் சமண்புரா பகுதியில் வாழ்ந்த மரியாதைக்குரிய, மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்ந்த குல்பர்கா வீட்டுவசதி சங்கக் குடியிருப்பில் அமைந்திருந்தது அவரது வீடு. அவரது மனைவியான ஜாகியா எனும் மூதாட்டி பதிவு செய்த வாக்குமூலத்தில், பின்வருமாறு கூறுகிறார்: வெறிபிடித்த கும்பலொன்று, 28.02.2002-ஆம் நாள், எரிவாயு சிலிண்டர்களைக்கொண்டு தாக்கி, வீட்டுவசதி சங்கக் குடியிருப்பின் பாதுகாப்புச் சுவரை இடித்துத் தள்ளியது. ஜாஃப்ரியை, வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்து, ஆடைகளைக் களைந்து, கொடுவாள்களையும் இன்னபிறவற்றையும் கொண்டு அவரது கை-கால்களைத் துண்டித்து, அதன்பின் அவரை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள். மேலும் அநேக முஸ்லிம்களும் கொலைசெய்யப்பட்டார்கள்; அவர்தம் வீடுகளும் நெருப்பில் வெந்து சாம்பலாயின. காவல் நிலையத்திலிருந்து வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் சமண்புரா உள்ளது; ஆமதாபாத் காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து அந்த இடம் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பது முதல்வருக்குத் தெரியாது என்பது கற்பனைசெய்து பார்க்கக் கூடியதா?
  அதன்பிறகு, தனது கணவரின் கொடூரமான கொலைக்கு நீதிகேட்டு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜாகியா ஜாஃப்ரி. (உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு, மோடிக்கு எதிரான ஆதாரங்களைக் காணாமல் இறுதி அறிக்கையையும் சமர்ப்பித்த நிலையில்) மோடிக்கு எதிரான அவரது குற்றவியல் வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. (சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர்), விசாரணை நீதிமன்றத்தின் ஆணையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஜாகியாவின் எதிர்ப்பு மனுவைப் பரிசீலிக்குமாறு ஆணையிட்டுள்ளது.
  நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், அதற்குள் நான் போக விரும்பவில்லை.
  குஜராத்தை தான் முன்னேற்றமடையச் செய்துள்ளதாக மோடி சொல்லிக்கொள்கிறார். ஆகவே, ‘முன்னேற்றம்’ என்பதன் பொருள்குறித்துப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. முன்னேற்றம் என்பதற்கு ஒரு அர்த்தம்தான் உண்டு. அது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என்பதுதான் என நான் நினைக்கிறேன். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாத பட்சத்தில், பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்குவதையும், அவற்றுக்குக் குறைந்த விலையில் நிலம், மின்சாரம் ஆகியவற்றைக் கொடுப்பதையும் முன்னேற்றம் என்று கூறமுடியாது.
  இன்றைய குஜராத்தில், 48 சதவீத குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் அதிகம். சிசுமரண விகிதமோ, குஜராத்தில் அதிகம்; அதேபோன்று, மகப்பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதமும் அதிகம். மேலும், பழங்குடிகள் வாழும் பிரதேசங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்/பிற்பட்டோர் மத்தியிலும் வறுமை நிலை 57 சதவீதமாக நீடிக்கிறது. 8-2-2013 தேதியிட்ட இந்து நாளிதழில், ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டவாறு, குஜராத்தில், சுற்றுச்சூழல் சீரழிவு மேலோங்கிக் கொண்டிருக்கிறது; கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துகொண்டுள்ளது; குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து இன்மை அசாதாரணமாக அதிகரித்துள்ளது. குஜராத்தில் உள்ள வயதுவந்த ஆண்களின் உடற்கட்டு குறியீடு, 18.5 புள்ளிக்கும் குறைவாக உள்ளது-இது இந்த விஷயத்தில் நாட்டில் படுமோசமாகவுள்ள மாநிலங்களில் ஏழாவது இடமாகும். தேக ஆரோக்கியம், கல்வி, வருமானம் போன்ற பல்வேறுபட்ட வளர்ச்சித் தளங்களில், 2010-ஆம் வருடத்திய ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கையின்படி, குஜராத் இந்தியாவில் எட்டு மாநிலங்களுக்கும் கீழே இடம்பெற்றுள்ளது (இந்துஸ்தான் டைம்ஸ் 16.12.2012 இதழின் 13-ஆம் பக்கம் காண்க).
  “ஒரு சமூகவியலாளர் என்னும் முறையில், பொருளாதார நிபுணர்களின் தொகுப்புப் புள்ளிவிவரங்களை எளிதில் நம்பிவிடாத நான், குஜராத்தை, நாட்டில் வளர்ச்சியடைந்த தலைசிறந்த மாநிலம் என்று கருதுவதற்கில்லை. மூன்றாவது முறையாக மோடி முதல்வர் பதவியேற்ற சிறிது காலத்திற்குப்பின், சவுராஷ்டிரா பகுதியினூடே பயணித்தேன். அங்கு மாசுபட்ட, வறண்ட நிலங்கள், ஜீவனம் எவ்வளவு சிரமமான காரியம் என்பதைப் பறைசாற்றின. நகரங்களில், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றுதல், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் விஷயத்தில் எத்தனை பரிதாபகரமான நிலை உள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டின; கிராமப்புறத்திலோ, இயற்கை வளம் அரிது என்பது,  கால்நடை மேய்ப்பவர்கள், தமது ஆடுகளுக்குத் தீவனத்துக்காக பல மைல்கள் நடயாய் நடக்கவேண்டியுள்ளது என்பதிலிருந்தே தெளிவாகும். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்றவிதத்தில், சராசரியைவிட குஜராத் பரவாயில்லைதான்; ஆனால், சிறந்த மாநிலங்களில் ஒன்றாக அதனைக் கொள்ளமுடியாது. கேரளா, இமாசலப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள், தமது மக்கள் தொகையில் கணிசமான சதவீதத்தினருக்கு கண்ணியமான வாழ்க்கையை நல்கியுள்ளன” என்றும் கூறுகிறார் திரு.குஹா.
  தொழில்வணிக முன்னணியினர், அத்துறைக்கு உகந்த நல்ல சூழலை குஜராத்தில் மோடி ஏற்படுத்தித் தந்துள்ளார் என்று சொல்வது உண்மைதான். ஆனால், தொழில்வணிகர்கள் மட்டும்தான் இந்தியாவில் இருக்கின்றனரா?
 மோடி தலைமையின்கீழ் குஜராத் முன்னேறியுள்ளது என்று பேசிக்கொண்டிருப்பவர்களை நோக்கிப் பின்வரும் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: மோடி உருவாக்கி வைத்திருக்கும் சாலைகளை, மின்சாரத்தை, ஆலைகளை ஊட்டச்சத்து இன்றி வாடும் குழந்தைகள் உண்ண இயலுமா?
  இந்திய மக்கள், நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி மெய்யாகவே கவலைப்படுகிறவர்களாக இருப்பின், மேற்கூறப்பட்ட விஷயங்களையெல்லாம் அவர்கள் கவனத்தில்கொண்டு பரிசீலிக்க வேண்டுமென அறைகூவி அழைக்கிறேன்; அல்லாதபட்சத்தில், 1933-இல் ஜெர்மானியர்கள் செய்த அதே தவறை அவர்கள் செய்துவிடக்கூடும்.
  (இக்கட்டுரையின் பகுதி, THE HINDU ஆங்கில நாளேட்டின் பிப்ரவரி 15, 2013 இதழில் பிரசுரமானது.)
தமிழில்: இளசை மணியன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP