Sunday, April 13, 2014

இரும்பு மனிதரும், துரும்பு மனிதர்களும்

-->
காந்தியைக் கொன்றவர்களை
அம்பலப்படுத்திய இரும்பு மனிதர்!
-அனில் ரஜிம்வாலே-
 காத்மா காந்தி படுகொலையில் தாம் ஏதும் அறியாத அப்பாவிகள் போல ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கமும் (ஆர்.எஸ்.எஸ்.), பாரதீய ஜனதாக் கட்சியும் (பா,ஜ.க) தொடர்ந்து பசப்பிவருகின்றன.
  நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் இத்தருணத்தில், அந்தக் கொலைக் குற்றத்தில் ஆர்.எஸ்.எஸ். எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்று  ‘விளக்கம்’ அளிப்பதற்கு இந்த அமைப்புகளின் தலைவர்கள் புதிய முயற்சிகளில் இறங்குகின்றனர். இதை யாரும் நம்பப்போவதில்லை.
   இந்தப் பிரச்சனையில் மிகவும் கேந்திரமான அம்சங்களுக்குப் பதில் அளிக்காமல், சில நுணுக்கமான விவரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகத் தன்மீதுள்ள குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
  சர்தார் படேல் அவர்களின் குறிப்பிட்ட சில மேற்கோள்களைக் காட்டி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அவற்றைத் திரித்துக் கூறுகின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும்.
ஆர்.எஸ்.எஸ். குறித்து
சர்தார் படேல்:
  எனவே, [மகாத்மா காந்தி படுகொலையில்] ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட பாத்திரம் வகித்தது என்பது பற்றி சர்தார் வல்லபாய் படேல், தனது எழுத்துக்களில் என்னதான் குறிப்பிட்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். தேர்வுசெய்யப்பட்ட அவரது கடிதப்போக்குவரத்து அடங்கிய நூல் தொகுப்புக்களை இங்கு நாம் ஆதாரமாகக் கொள்கிறோம்.
  இந்தியா விடுதலை அடைந்தபின் ஆரம்ப ஆண்டுகளில், ஜவகர்லால் நேரு அவர்களின் அமைச்சரவையில், சர்தார் வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராக இருந்தார் என்பதை வாசகர்களுக்கு இங்கே நினைவூட்டுகிறோம்.
இரும்பு மனிதரும்
துரும்பு ஜந்துக்களும்:
 ‘இரும்பு மனிதர்’ என்பதற்கு இலக்கணமாக விளங்கியவர் படேல் என்று அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். சிலாகிப்பதுண்டு; இப்போது மோடியும் அதையே செய்கிறார்.  அந்த ‘இரும்பு மனிதரில்’ தனது பிம்பத்தைக் காணத்துடிக்கும் மோடி, அவருக்கு சிலைகளை எழுப்புவதில் மும்முரம் காட்டுகிறார்.
  ஆர்.எஸ்.எஸ். குறித்து சர்தார் கூறியவற்றின் பின்புலத்தில் நோக்கும்போது உண்மையில் இதைக்காட்டிலும் நகைப்புக்குரிய விஷயம் எதுவும் இருக்கமுடியாது. படேல் எழுதியவற்றை மோடி கொஞ்சமேனும் படித்துப் பார்த்திருக்கவேண்டும். மோடியை படேலுடன் ஒப்பிடுவது தமாஷ்தானேதவிர வேறில்லை.
   காங்கிரசுக்குள், வலதுசாரிப்பிரிவைச் சேர்ந்தவராகப் படேல் இருந்தார் என்பதையும், தேசநலன் சார்ந்த பல அடிப்படையான பிரச்சனைகளில் நேருவுடன் முரண்பட்டு நீடித்த மோதல் நிலை கொண்டிருந்தவர் அவர் என்பதையும் இங்கே தெளிவுபடுத்திவிட வேண்டும்.
  இருப்பினும், தனது சிந்தனையிலும் செயலிலும் மெய்யானவராக இருந்த அவர், நேர்மையாளராகவும், தனது சித்தாந்தத்தில் தெளிவுகொண்டவராகவும் விளங்கினார். ஹிந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின்பால் குறிப்பிட்ட சில விஷயங்களில் அவருக்கு அனுதாபமிருந்தது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
  இருந்தபோதிலும், காந்திஜி படுகொலை வழக்கைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில அதிர்ச்சியூட்டும் விபரங்கள் வெளிவந்தன என்பதையோ, முடிவின்றி சர்தார் படேல் அவர்களுக்கு கவலை அளிக்கத்தக்கனவாக அவை இருந்தன என்பதையோ, ஹிந்து மகாசபையையும் ஆர்.எஸ்.எஸ்.ஐயும் ஆதரித்துப் பேசிய ஷியமா பிரசாத் முகர்ஜியைக் கடிந்துகொண்டும்கூட இந்த விஷயங்களில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்தார் என்பதையோ மறுக்கவியலாது.
   காந்திஜி படுகொலை செய்யப்பட்டபோது உள்துறை அமைச்சராக இருந்ததால், இந்தப் படுபாதகச்செயலுடன் நெருக்கமான தொடர்புடைய பல விஷயங்களில் அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  மறுக்கவியலாத விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்.ஐயும் ஹிந்து மகாசபையையும் தடைசெய்து, அந்த அமைப்புகளின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் தலைவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை அவர் முனைந்து நிறைவேற்ற வேண்டியதாயிற்று.
   1948-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் புது டெல்லியிலிருந்து ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், சர்தார் படேல் அவர்கள், ஆர்.எஸ்.எஸ்.-ன் பாத்திரம்குறித்துக் குறிப்பிட்டுள்ளார். (துர்கா தாஸ் அவர்களால் எடிட் செய்யப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள நவ்ஜீவன் பப்ளிஷிங் ஹவுஸால் பதிப்பிக்கப்பட்ட சர்தார் படேலின் கடிதப் போக்குவரத்து, 1945-50, தொகுப்பு-6 எனும் நூலில் இருந்து இக்கடிதம் மேற்கோள் காட்டப்படுகிறது).
  இக்கடிதத்தில், பின்வருமாறு குறிப்பிடுகிறார் படேல்:
 “காந்திஜி படுகொலை வழக்கு நீதிமன்றத்தின் முன்னே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகாசபா ஆகியவற்றின் பங்கு குறித்து நான் எதுவும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன்; ஆனாலும், இந்த இரண்டு அமைப்புகளின் நடவடிக்கைகள், குறிப்பாக முதலாம் ஸ்தாபனத்தின் [ஆர்.எஸ்.எஸ்] செயல்பாடுகள், இத்தகைய கொடுந்துயர் அளிக்கின்ற காரியம் சாத்தியமாகிற சூழலை நாட்டில் ஏற்படுத்திவிட்டன என்பதை எமக்குக் கிடைத்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஹிந்து மகாசபாவில் உள்ள அதிதீவிரப் பகுதியானது, இந்தப் படுகொலைச் சதியில் பங்குகொண்டுள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசாங்கம் மற்றும் அரசு ஆகியவை நிலைகொண்டிருப்பதற்கு ஓர் அச்சுறுத்தலாக ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தடைசெய்யப்பட்டபின்னரும்கூட அதன் அத்தகைய செயல்பாடுகள் மங்கி மறைந்துவிடவில்லை என்பதை எமக்குக் கிடைத்த செய்திகள் சுட்டியுணர்த்துகின்றன. உண்மையில், காலம் செல்லச்செல்ல ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் மேலும் அடங்காமல் நடந்துகொண்டு, அவர்களின் சதிவேலைகள் மென்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.” (தொகுப்பின் 323-ஆம் பக்கம்)
  ஏதேனும் திரித்துக் கூறியிருக்கிறோமோ என்கிற சந்தேகம் எதுவும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த நெடிய மேற்கோளை இங்கே தந்திருக்கிறோம்.
   ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகாசபா ஆகியவற்றின் மீதான தடையையும், அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட கைதுகளையும் மறுபரிசீலனை செய்யுமாறு ஷியாமா பிரசாத் முகர்ஜி விடுத்த வேண்டுகோளுக்கு எதிர்வினையாகவே [படேலின்] இக்கடிதம் எழுதப்பட்டது. சர்தார் அவர்களின் கூர்மையான வாசகமும், அவருக்கு ஏற்பட்ட கோபமும் தெளிவாக வெளிப்படும் இக்கடிதம் நேருவுக்கு எழுதப்பட்டதல்ல; ஷியாமா பிரசாத்துக்கு எழுதப்பட்டது என்பது முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.
  ஹிந்து மகாசபையின் தலைவாராக இருந்த ஷியாமா பிரசாத், பின்னர் ஜன சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரானார்.
  சர்தாரின் கடிதத்திலிருந்து நாம் அறியப்பெறுவது என்ன?  காந்திஜியின் படுகொலைக்குச் சாதகமான சதிகாரச் சூழலை ஏற்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ்.க்கு உள்ள பொறுப்பினை அவர் ஒருக்காலும் மன்னிக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால்தான் அவர் இது பற்றி வெளிப்படையாகப் பேசவில்லையேதவிர, ஏதோ ஆர்.எஸ்.எஸ்.-ம், ஹிந்து மகாசபாவும் அதில் சம்பந்தப்படவில்லை என்பதால் அல்ல.
 அந்தக் கடிதத்தை அவர் எழுதியபோது, நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த காரணத்தால், மிகக் கவனமாக வார்த்தைகளை அளந்து எழுதவேண்டியதாயிற்று. தடைசெய்யப்பட்டபோதிலும், ஆர்.எஸ்.எஸ்.-ன் தீய செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டுதான் சென்றன எனத் தெளிவாகக் கூறுகிறார் அவர்.     
  அந்த இரண்டு ஸ்தாபனங்களும் நிகழ்த்திய சதிகார, விஷம் கக்குகிற வகுப்புவெறிப் பிரச்சாரத்தின் காரணமாக அவற்றைத் தடைசெய்வதையும், [அவற்றைச் சேர்ந்தவர்களைக்] கைதுசெய்வதையும்தவிர வேறுவழியில்லை என்பதையும், தேவையற்ற நடவடிக்கைகள் எதுவும் அவற்றின்மீது ஏவப்படவில்லை என்பதையும் நிரூபிக்க அவர் சிறந்தமுறையில் முயன்றிருக்கிறார். ஹிந்து மகாசபையைக் காட்டிலும், ஆர்.எஸ்.எஸ்.க்குத் தான் இந்த விஷயத்தில் பொறுப்பு அதிகம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
காந்தியடிகள் படுகொலை-
ஆர்.எஸ்.எஸ் கொண்டாட்டம்:
 மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின் இனிப்புகள் வழங்கப்பட்ட விபரத்தையும் வேறுபல கடிதங்களில் சர்தார் படேல் குறிப்பிடுகிறார். (ஆதாரம்: அதே தொகுப்பின் 66-ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள, 1948 மே 6-ஆம் நாள் அவர் எழுதிய கடிதம்). ஹிந்து மகாசபையைச் சேர்ந்த மஹந்த் திக்விஜய் நாத், பேராசிரியர் ராம் சிங், தேஷ்பாண்டே போன்றவர்கள் பரப்பிவரும் “தீவிர மதவெறி”, பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என அக்கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார். நேருவையும், சர்தார் படேலையும்கூட! தூக்கில் போடவேண்டுமெனக் கோரி மஹந்த் திக்விஜய் நாத்தும் தேஷ்பாண்டேயும் பல்வேறு இடங்களில் வெறியுணர்வைத்தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த இருவரும், வேறுசில சதிகாரர்களும் காந்தியடிகளின் படுகொலையில் நெருங்கிய சம்பந்தமுள்ள ஹிந்து மகாசபைத் தலைவர்களாவர்.
  இதோ கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் சர்தார் படேல்: “சதிகாரர்கள் டெல்லியில் இருந்தபோது அவர்கள் டெல்லியில் உள்ள ஹிந்து மகாசபை அலுவலகத்துக்குச் சென்றதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்வசம் உள்ளன... இதில் தேஷ்பாண்டே மற்றும் மஹந்த் திக்விஜய் நாத் ஆகியோர் எடுத்த நிலையோ படுமோசம். மிகுந்த ஆட்சேபணைக்குரிய உரைகளை அவர்கள் நிகழ்த்திவந்தார்கள். ஜவகர்லால் நேருவையும் என்னையும் தூக்கிலிடுமாறு, கூட்டத்திற்கு வந்தவர்களிடம் கேட்டுக்கொள்கிற உரையை அவர்கள் பீகாரில் நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.” (பக்கம் 37).
  இந்த வரலாற்று ஆவணங்கள் பற்றி ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. வும் அத்வானியும் என்ன சொல்கிறார்கள்?
  அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், படேலின் சம்பந்தமில்லாத மேற்கோள்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் அத்வானி. ஒன்று, மேலே குறிப்பிட்ட பகுதிகள் அவருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது அவற்றை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருக்க வேண்டும்.
கண்டனம் செய்யாத பா.ஜ.க:
 காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் கண்டனம் செய்ததேயில்லை. உண்மையில், அவர் படுகொலை செய்யப்பட்டவுடனேயே நாடுமுழுவதும் இனிப்புகளை அது வழங்கியது; அந்தக் கொடூரச் செயலை அது விஸ்தாரமாகக் கொண்டாடியது.
  காந்திஜியைச் சுட்டுக் கொலைசெய்த நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, 1964-ஆம் வருடம் பம்பாயில் ஆர்.எஸ்.எஸ்.ம் ஜனசங்கமும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தன என்பதும் வரலாற்றுப் பேருண்மையாகும்.
  இன்றைக்கும்கூட காந்திஜி படுகொலையை பா.ஜ.க. கண்டனம் செய்வதில்லை.
  இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியதன் காரணமாகவும், சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் தலைமைதாங்கியதன் காரணமாகவும் வகுப்புவாத சக்திகளின் தாக்குதலுக்கு மகாத்மா காந்தி எப்போதுமே ஓர் இலக்கு ஆகிறார். ஹிந்து மகாசபையுடனும், ஆர்.எஸ்.எஸ்.-டனும் தொடர்புடைய வகுப்புவெறியர்கள் அவரைக் கொலைசெய்வதற்கு ஆறுமுறை முயன்றிருக்கிறார்கள்.
   அவர் கொலைசெய்யப்படுவதற்கு மூன்றே தினங்களுக்கு முன்னதாகப் புது டெல்லி கனாட்பிளேசில் நடந்ததொரு கூட்டத்தில் அப்படியொரு அழைப்பு பகிரங்கமாக விடுக்கப்பட்டது. இந்தத் தகவல், பல ஆவணங்களிலும், பத்திரிகை செய்திகளிலும் இடம்பெற்றுள்ளது.
தேசப்பிதாவுக்குப் பரிவாரம் காட்டும் மரியாதை:
 இந்தப் பிரச்சனைகளில் பா.ஜ.க. முழுமையாக மவுனம் சாதிப்பதேன்? தமது விநியோக மையங்களின் மூலமாகவும், வேறு வழிகளிலும் கோட்சே சம்பந்தமான பிரசுரங்களையும், பேச்சுக்களையும் அவர்கள் விற்பனையும் பிரச்சாரமும் செய்கிறார்களா அல்லவா?
  காந்திஜி படுகொலையை ஆர்.எஸ்.எஸ்.-ம் சங்கப் பரிவாரங்களும் முழுமையாக அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
  இந்திய விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராம் தேசப்பிதா மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.-ம் பா.ஜ.க.வும் இப்படித்தான் நடத்துகின்றனர்!
(கட்டுரையாளர் தலைசிறந்த மார்க்சிய சிந்தனையாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்.)
PHOTO: COURTESY THE HINDU
  நன்றி: ‘மெயின்ஸ்ட்ரீம்’ ஆங்கில வார இதழ்/ஏப்ரல் 5, 2014. 
(MAINSTREAM, VOL LII, NO 15, APRIL 5, 2014)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP