Sunday, April 13, 2014

சித்தாந்த ரீதியில் நான் கம்யூனிஸ்ட்: ஜே.கே. பேட்டி


 “சித்தாந்த ரீதியில் நான் இன்னும் கம்யூனிஸ்ட்தான்!”

ஜெயகாந்தன் ஜெயமுரசு!!



 [2005 மார்ச் 28-ஆம் தேதிய டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times of India) ஆங்கில நாளிதழில் ’பாலிடிக்ஸ் ஆஃப் ரைட்டிங்’ (Politics of Writing) எனும் தலைப்பில் வெளியான தோழர் ஜெயகாந்தனின் பேட்டியைத் தமிழில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். 2014 ஏப்ரல் 24, தோழர் ஜெயகாந்தனின் 81-வது பிறந்த நாள்.]

கேள்வி: உங்களை எவ்வாறு அழைப்பது? சமூக எதார்த்தவாத எழுத்தாளர் என்று அழைக்கலாமா? லட்சிய வேட்கை கொண்ட கலைஞர் அல்லது கலகக்காரர் என வர்ணிக்கலாமா? 

ஜெயகாந்தன்: நீங்கள் என்னை எவ்வாறு அழைக்கவேண்டுமென விரும்புகிறீர்களோ அவ்விதம் அழைக்க உங்களுக்கு சுதந்திரம் உண்டு. நானறிந்ததெல்லாம் நான் ஓர் எழுத்தாளன்-- அவ்வளவே. இருப்பினும், எனது கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு ஊடகங்களை சோதித்துப் பார்த்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். எனது கதைகளை வெள்ளித்திரையில் காட்டும் பொருட்டு திரைப்படங்களைத் தயாரித்தேன். அப்போதும்கூட பிரதானமாக, திரைக்கதை தயாரிப்பதுபோன்ற எழுத்தாளனின் பணியைத்தான் செய்தேன்; மற்றவர்களின் துணைகொண்டு படங்களை இயக்கினேன்.
அந்த வேலை எனக்குத் தெரியாது என்பதால்  பரிசோதித்துப் பார்க்கும் வகையிலேயே அது இருந்தது என்பது தெளிவு; எனது உச்சபட்ச மனநிறைவு எழுதுவதில்தான்.

கேள்வி: கலையும் கலாசாரமும் வணிகமயமாக்கப்பட்ட அல்லது அரசியல்மயமாக்கப்பட்ட தமிழ்நாடு போன்றதோர் மாநிலத்தில் எழுத்தாளர் என்பவர் எந்தவகையில் அர்த்தமுடையவராகிறார்?

ஜே.கே.: தயவுசெய்து தங்களின் பழைய பார்வையை விட்டொழியுங்கள். சுப்ரமண்ய பாரதி இலக்கியத்தையும் அரசியலையும் வரித்துக்கொண்டார். இதில் எந்தத் தவறும் இல்லை. வணிகமயமாதலைப் பொறுத்தவரை-அதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவேளை அன்று அது நிகழ்ந்திருப்பின், பாரதி வறுமையில் மாய்ந்திருக்கமாட்டார். நான் வியாபாரியல்ல; ஆனால், எனது படைப்பு வணிகப்படுத்தப்படலாம். என்னை வணிகப்படுத்திக்கொள்ள நான் அனுமதிக்காதவரை அதில் தவறேதுமில்லை. பாரதியாரிடமிருந்து பொருளாதாரத்தையும்கூட நான் கற்றேன். காதலை உன்னதமாக தெய்வ நிலைக்குக் கொண்டுசென்றார் அவர்; அதுபோன்றே அரசியல் விவாதத்தை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல இலக்கியம் உதவமுடியும் என்பதையும் அவர் காட்டியிருக்கிறார். தொன்மைக் காலத்தில் இந்திய வணிகர்கள் மிகச் சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்று கருதுவதன் காரணம் என்ன? அவர்கள் வணிகர்களாக மட்டுமின்றி, ஆன்மீக, கலாசார, தத்துவார்த்த தூதுவர்களாகவும் விளங்கினார்கள். இந்தியா எனும் கருத்தை ஏற்கச் செய்தமைக்காக அவர்களுக்கு நான் நன்றிகூறுகிறேன்.

கேள்வி: பாரதியால் எந்த அளவு தாக்கம் பெற்றீர்கள்?

ஜே.கே: அவர் எனது குரு. உண்மையில், தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே – அவர்கள் இதனை அறிந்திருப்பினும் அறியாவிடினும்—பாரதியால் ஆக்கம் பெற்றவர்களே. இந்த உண்மையை நான் நன்கறிவேன். பாரதியாரைப் பரிபூரணமாக நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே நான் சொல்வதன் பொருள் உங்களுக்குப் புரியும்.

கேள்வி: மதத்தை விமர்சிப்பது என்பதில் பயணத்தைத் தொடங்கியது திராவிட இயக்கம். இந்தப் பயணத்தின் போக்கில் எங்கோ அது திசைதவறிச் சென்றுவிட்டது. [உண்மையில்] நடந்தது என்ன?

ஜே.கே.: அது ஒரு எதிர்மறை இயக்கம்; ஆயினும் சில நல்ல உள்ளடக்கங்களையும் கொண்டது. அதன் அரசியல்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமேனும் திராவிட அரசியல் அகற்றப்படவேண்டுமென்கிறேன் நான்; ஏனெனில், நான் விரும்புவதோ இந்திய அரசியலை! கலாசார ரீதியிலும், மொழியாலும், நானும் திராவிடனே. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இயங்குவதற்கு லாயக்கற்றவர்கள் திராவிடர்கள். இறுதியில்  மக்களால் அவர்கள் விலக்கப்படுவார்கள். அவர்கள் [மக்கள்] ஒரே மாதிரியான தவறுகளைச் செய்துகொண்டே இருக்க மாட்டார்கள்; மக்களின்பால் நம்பிக்கைகொண்டவன் நான். அரசியல் நமக்குக் கொஞ்சம் புதியதுதான். “அரசியலுக்கு லாயக்கற்ற அவர்கள், அரசு நிர்வாகத்தை நடத்தலாமெனக் கனவு காண்கிறார்களா?” எனக் கேள்விக்கணை தொடுத்தார் காமராஜர். தான் சொல்வது உண்மை என்பதை அறிந்திருந்தார் அவர். 

கேள்வி: எந்தவொரு எழுத்தாளரும், ஏதேனுமொரு அரசியல் சித்தாந்தத்துடன் அல்லது கட்சியுடன் தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா? சிருஷ்டிபூர்வமான கலைஞராகிய உங்களது சுதந்திரத்தை அது பாதிக்காதா?

ஜே.கே.: ஒரு சித்தாந்தத்துடன் அல்லது கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதென்பது அந்த எழுத்தாளன் சம்பந்தப்பட்ட விஷயம்; அதைத் தீர்மானிக்க வேண்டியவன் எழுத்தாளனே. நான் பிறந்தது கம்யூனிஸ்ட் கட்சியில்; எனக்குப் படிக்கவும், சிந்திக்கவும், எழுதவும் அதுதான் கற்றுத் தந்தது. குருவை விஞ்சிய சிஷ்யனானேன் நான்; இது கம்யூனிசத்தில்தான் சாத்தியம் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கட்சியில் அடையாளபூர்வமான அங்கத்தினராக இல்லாவிட்டாலும் சித்தாந்த ரீதியில் நான் இன்னும் கம்யூனிஸ்டாகவே இருக்கிறேன். எழுத்தாளன் இதனைக் கண்டு அஞ்சினால் அவனால் எழுதவே முடியாது. இது சுற்றுச்சூழலைப் பொறுத்த விஷயம்; எழுத்தாளன் இதனைத் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கட்சி-இந்த சித்தாந்தத்துடன் அல்லது அந்தக் கட்சி-அந்த சித்தாந்தத்துடன் தான் இருப்பது என்பதைத் தீர்மானிக்கிற உச்சபட்ச சுதந்திரம் அவனுக்கு உண்டு. சித்தாந்த ஈடுபாடற்ற எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால், அவர்களிடம் எது செல்வாக்கு செலுத்துகிறது என்பது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுவிடக்கூடும்.

கேள்வி: பெண்கள்குறித்து நீங்கள்  நிறைய எழுதியிருக்கிறீர்கள். சமுதாயத்தில் பெண்களின் நிலை மேம்பட்டிருக்கிறதெனக் கருதுகிறீர்களா?

ஜே.கே.: ஆண்கள் எருமைகள் போன்றவர்கள்; சேற்றிலும் சகதியிலும் கிடந்து புரண்டு திளைக்கிறார்கள். அத்தகையவர்களல்ல பெண்கள். பசுக்களைப்போன்று கண்ணியமானவர்கள் அவர்கள். நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட சாதகமான அம்சங்களை அங்கீகரிக்க வேண்டும். என் அம்மாதான் எனது லட்சியப் பெண். மகத்தான மாதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால், அவர்களுக்கு மகனாக நான் பிறக்காததால் அவர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் படங்களை பூஜிப்பதில்லை; மெய்யான வாழ்க்கைக் கதைகளை, மனதுக்குத் தெம்பூட்டுகின்ற கதைகளை என்னால் பாராட்ட இயலும். பெண்களிடம் எனக்கு அளவிடற்கரிய நம்பிக்கை உண்டு.
அவர்தம் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது என்பது நிச்சயம்.

கேள்வி: உறவுகள் விஷயத்தில் மிகவும் முக்கியமானது எது?

ஜே.கே.: சமுதாயத்தில் எனது குடும்பத்தையும், எனது சுற்றத்தினரையும், நெருக்கமானவர்களையும், நேசிக்கிறேன்.  எவ்வாறு? அவர்களை நான் மதிக்கிற காரணத்தால், முதலில் அவர்களின் மாண்பினைக் காக்க விரும்புகிறேன். பகவத் கீதையை நான் கரைத்துக் குடிக்காதபட்சத்திலும், யாரேனும் அதனை விமர்சித்தால் கோபமடைகிறேன். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; இருப்பினும், அது எனது கலாசார மரபின் அங்கம் என்பதால், அது விமர்சிக்கப்படுவதை நான் விரும்பவில்லை அந்த மொழியைக் கற்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். தமிழர்கள் மெய்யாகவே என்னை மதிக்கிறார்களெனில், தயைகூர்ந்து இதோ இதை எண்ணிப் பாருங்கள்: எதையும் யார்மீதும் திணிக்க வேண்டாம்!

கேள்வி:  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனித அம்சங்களை நாம் மறந்துபோகச் செய்யுமளவுக்கு தேசம் எனும் கருத்து நம் எண்ணத்தில் வியாபித்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறதா?

ஜே.கே.: மனித உறவுகள் இன்றி மற்ற எதுவும் ஜீவித்திருக்க இயலாது. தேசிய கீதம் தானாகவே உருப்பெற்று உலவியதா அல்லது நாம் உருவாக்கியதால் இலங்குகிறதா? கடவுள் சுயம்புவாகவே உருவானவரா அல்லது அவரை நாம் சிருஷ்டித்தோமா? தேசபக்தி, உலக சகோதரத்துவத்தை உருவாக்கவேண்டும். தேசம் என்பதிலிருந்து வளர்ச்சியுற்று உலகம் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம்.  உலகமயமாதல் விஞ்ஞானபூர்வமான வளர்ச்சி என்பதால், நாம் அதிலிருந்து தப்பிக்க இயலாது. உங்களை வந்தடைவதற்கு உங்களின் அனுமதியை அது கோரவில்லை. எந்தவொரு விஷயமும் நல்ல மற்றும் தீய தாக்கங்களை ஏற்படுத்தும் தன்மையதே.  சில சுதேசி நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். அது தவிர்க்கவியலாதது. ஆனால் புதிய சந்தைகள் உருவாக்கப்படும். குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியாது என்பது தமிழ் பழமொழி. பரிணாம வளர்ச்சி ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்.

தமிழில்: பொன்மலை

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP