Tuesday, January 5, 2010

இலட்சியமே குறி





இந்த 'கேமரா' பெண்ணுக்கு!

அபர்ணா பல்லவி

முதாய விழிப்புணர்வும், அநீதியை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவர் ஒரு பெண்ணாக, புகைப்படப் பத்திரிகையாளராக, சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து உயர்ந்தவராக, முற்போக்காளராக இருந்துவிட்டால் அவர் படும் பாடு...!!? குடிசையில் பிறந்த இந்த செம்பருத்தியின் கதையைக் கேளுங்கள்...




'வாழ்க்கையில் முட்டி மோதிப் போராடி தீர்த்த பிறகே ஓய்வெடுக்க இயலும்' என்பார் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஜான் ஆஸ்போர்ன்.


இது, நாகபுரியின் ஓரே பெண் புகைப்படப் பத்திரிகையாளர் 37 வயது சங்கீதா மகாஜனுக்கு நன்கு பொருந்தும். போராட்டமே வாழ்க்கை எனக் கொண்டிருக்கும் இவர், உயரமான ஒற்றை நாடி உருவம்; தூய, எளிமையான ஆடை; நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை என்று நகர்ப்புற நாகரிகத்துக்கு ஈடு கொடுத்து, பதற்றமடையாத பக்குவத்துடன் காட்சி தருகிறார்.


நாகபுரியில், பெயர் பெற்ற ஊடகப் புகைப்படக்காரர்களில் ஒருவராகத் திகழும் இவர், தனது சாதனைகளின் சாட்சியாகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிருக்கிறார். சொந்தமாகப் புகைப்படத் தொழில் நடத்திவரும் சங்கீதா, குடிசைப்பகுதிவாழ்ப் பெண்களின் மேம்பாட்டுக்காகத் தீவிரமாகப் போராடியும் வருகிறார்.


சங்கீதாவின் செயல்துடிப்பு, உண்மையில் அவரது கடந்தகால வாழ்க்கை அனுபவத்தால் உறுதி பெற்றது எனலாம்.


"வாழ்க்கை பற்றிய வித்தியாசமான பார்வை கொண்டிருந்த, காந்தியவாதியும், மார்க்சீயப்பாதையை ஏற்றவருமான என் தாய் மட்டும் இல்லையென்றால், பிற சராசரி கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையைப் போல்தான் எனது வாழ்க்கையும் இருந்திருக்கும்" என்கிறார் அவர்.


மராட்டியத்தின் விதர்பா பகுதியில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்த சங்கீதாவின் தாய் தனது குழந்தைகளுடன் நாகபுரியில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றுக்குக் குடிபெயர்ந்தார். அப்போது சங்கீதாவுக்குப் பத்து வயது இருக்கலாம். இயற்கைச் சீற்றங்கள், அதிகாரிகளின் அலட்சியம், பாதுகாப்பற்ற, வசிக்க லாயக்கற்ற சூழல், குற்றங்கள், வன்முறைகள் என தினம் தினம் வழ்க்கையே அங்கு போராட்டமாயிற்று!


"அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாது அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்ட எனது தாயின் தளராத தைரியம்தான் எனது சொந்த வாழ்க்கையை வித்தியாசமாகப் பார்க்க பேருதவியாக இருந்தது" என்று அடித்துச் சொல்கிறார் சங்கீதா.


இத்தனை இன்னல்களுக்குமிடையே, குடிசைவாழ்ப் பெண்களின் வேலைவாய்ப்பிற்காக, 'ஜாகிருதி மகிளா மண்டல்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினானர் சங்கீதாவின் அம்மா.




கல்லூரியில் சாதனை:


பள்ளிக்கல்வியை முடித்த பிறகு சங்கீதா புகைப்படக் கலையைப் பயின்றார். இதற்குப்பின் நாகபுரியில் உள்ள லேடி அம்ரித்தாபாய் தாகா கல்லூரியில் சேர்ந்து படித்தார். அந்தக் கல்லூரியின் பணக்கார மாணவிகளிடையே சங்கீதாவின் எளிய உடைகளும், குடிசைவாழ் மக்களின் பேச்சு வழக்கும் இவரை வேறுபடுத்திக்காட்டின.


ஆனால், இந்த நிலைமையைக் கண்டு சங்கீதா ஒதுங்கிப் பதுங்கிவிடவில்லை. கல்லூரியில் சீர்திருத்தப் பணிகளைத் தொடங்கினார். மாணவிகள் சங்கத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


" நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது, அங்கே குடிநீர் இல்லை; நூலகத்தில் செய்தித்தாள்கள் இல்லை; பரிசோதனைக் கூடங்களில் போதிய சாதனங்கள் இல்லை; அதுமட்டுமல்ல--கல்லூரி முதல்வரும் கல்லூரி வளாகத்தில் காணப்படுவதில்லை" எனப் பழைய அனுபவங்களை நினைவுகூர்கிறார் அவர்.


"லேடி அம்ரித்தாபாய் தாகா கல்லூரிக்குக் காரில் வந்து இறங்கும் மாணவிகள்தான் கல்லூரி சங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் நான் அப்போது சைக்கிளில்தான் கல்லூரிக்குச் செல்வேன்" என்று கொஞ்சமும் கர்வம் இல்லாமல் சொல்கிறார் சங்கீதா.


மாணவ அரசியலில் பிரவேசித்த சங்கீதா, பயணங்கள் பல மேற்கொண்டதுண்டு. கல்லூரிக் கட்டண உயர்வை எதிர்த்த போராட்டத்தில் சிறைக்கும் சென்றிருக்கிறார் அவர்.




இலட்சிய வாழ்வு:


1992-இல் மாணவத் தலைவரும், அரசியல் செயல்வீரருமான் ஜம்மு ஆனந்த் என்பவரைக் கைப்பிடித்தார் சங்கீதா. இங்கும்கூட அவர், புதுமையான முடிவை மேற்கொண்டார். "ஜம்மு ஒரு வேலையில் சேர்ந்தார். ஆனால், இயக்கப்பணிக்குத் திரும்பவே அவர் விரும்பினார். குடும்பப் பராமரிப்பை நானே மேற்கொள்வது என நாங்கள் முடிவெடுத்தோம் என்கிறார் அவர்.


காமிரா ஒன்றை இரவல் வாங்கிய சங்கீதா, சுயமாகப் பத்திரிகைப் புகைப்படக்காரர் பணியைத் தொடங்கினார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஓரிரு சிறிய வாய்ப்புகள் கிட்டின. இறுதியில், தேசிய நாளிதழ் ஒன்றில் 1994-இல் அவருக்கு வேலை கிடைத்தது.


நகரத்தின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளராக அவதாரமெடுத்த சங்கீதா, ஆண் புகைப்படப் பத்திரிகையாளர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.


"எந்தப் புகைப்பட வேலையாக இருந்தாலும் மற்றவர்களைக் காட்டிலும் இருமடங்கு திறமையாகச் செய்யவில்லையென்றால் பயனில்லை என்று என்னை ஒதுக்கிவிடுவார்கள். அதே நேரம், மிக நன்றாகப் புகைப்படம் எடுத்துவிட்டால், மற்ற புகைப்படக்காரர்களுக்குக் குட்டு வைக்க மேற்பொறுப்பில் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால், சகபுகைப்படக்காரர்கள் தங்களின் வேலைப் பாதுகாப்பின்மை உணர்வுபெற்று என்மீது வெறுப்பை உமிழ்வார்கள்" என்று தன் பத்திரிகை அனுபவம் பற்றிக் கூறுகிறார் சங்கீதா.


சமுதாயப் பணியில் நாட்டம் செலுத்துபவராக இருந்ததால், 'நக்ஸலைட்' என்றும், 'பிரச்சனை கொடுப்பவர்' என்றும் இவருக்கு முத்திரை குத்தப்பட்டது. தன் வேலையையே இழக்க நேரிடும் நிலையை இந்த நாமகரணங்கள் ஏற்படுத்தின.


அவர் வேலை செய்த பத்திரிகையின் நாக்பூர் அலுவலகம், 1999-இல் மூடப்பட்டது. புனே நகருக்குச் சென்று பணியாற்றுமாறு நிர்வாகம் அவரைக் கேட்டுக் கொண்டது. தனது ஒரு வயது குழந்தையை எடுத்துக் கொண்டு புனே சென்று பணியாற்றுவது சிரமம் என்பதால் அவர் செல்லவில்லை.


நாகபுரியிலேயே வேறு பத்திரிகையில் சேர்ந்து பணியாற்ற அவர் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. "நாக்பூரிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய பத்திரிகைக் குழுமத்தில் கிட்டத்தட்ட எனக்கு வேலை கிடைக்கின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த பத்திரிகையில் இருந்த மூத்த புகைப்படக்காரர்களின் நிர்ப்பந்தத்திற்கு இறுதியில் ஆசிரியர் பணிந்துவிட்டார். இதனால் கிடைக்கவிருந்த வேலை தட்டிப் பறிக்கப்பட்டது.




சுய முயற்சி:


இந்த சம்வபவம் நடப்பதற்குச் சற்று முன்னர்தான், 'பிரதிபிம்பா க்ம்யூனிகேஷன்ஸ்' என்ற ஒரு சொந்த நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார் சங்கீதா. இந்த நிறுவனத்தின் மூலம் முழு நேர சுதந்திர புகைப்படப் பத்திரிகையாளராக அவர் செயல்படத் தொடங்கினார். ஆனால், இந்த சுய முயற்சியால் வேலைகளைப் பெறுவது பிரம்மப்பிரயத்தினமாயிற்று.


"ஒரு பெண்ணை நம்பி எப்படி முக்கியமான பணியை ஒப்படைப்பது எனப் பலரும் தயக்கம் காட்டினர்" என்று கூறுகிறார் அவர்.


ஏழாண்டுக்கால கடுமையான போராட்டத்துக்குப்பின்னர், தனது நம்பகத்தன்மையை நிலைநிறுத்திக் காட்டியுள்ளார் சங்கீதா. நாக்பூர் மற்றும் விதர்பா பகுதியைச் சேர்ந்த மற்ற இடங்களிலும் நடைபெறுகின்ற மருத்துவ மாநாட்டு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் மொத்த வாய்ப்பும் இவருக்கே இப்போது அளிக்கப்படுகிறது.


"எனக்குச் சொந்த ஸ்டுடியோ இல்லை; எனது குடும்பம் இன்னும் வாடகை வீட்டில்தான். ஆனால், என்னிடம் மிக நவீனமான புகைப்படக் கருவிகள் உள்ளன; நம்பிக்கைக்குரிய புகைப்பட நிபுணர்களின் குழுவும் உள்ளது" என மகிழ்கிறார் சங்கீதா.


சுயேட்சையான பணிகளின் மூலமாகப் பத்திரிகைப் புகைப்படத்தொழிலில் இன்னும் தொடர்பு வைத்திருக்கும் சங்கீதாவுக்குப் பத்திரிகை உலகம் குறித்த மாயை அகலத் தொடங்கியிருக்கிறது.


"சமுதாய விழிப்புணர்வும், செயல்துடிப்பும் கொண்ட பணியாளர்களைப் பத்திரிகை முதலாளிகள் இப்போதெல்லாம் விரும்புவதில்லை. எந்தக் கோணத்திலிருந்து எப்படிப் படம் எடுக்க வேண்டும் என்றுகூட அவர்கள் கட்டளையிடத் தொடங்கிவிட்டார்கள். பத்திரிகைப் புகைப்படத்துறையில் ஆண்-பெண் பாகுபாடு இன்றளவும் வலுவாகவே இருந்துவருகிறது" என வருந்துகிறார் சங்கீதா.


இன்றுவரை, சங்கீதா மட்டும்தான் நாக்பூரில் பத்திரிகை துறையின் ஒரே பெண் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். சமுதாயத்தில் மனமாற்றம் ஏற்படாதவரை இந்த நிலை மாறப்போவதில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.




மாதர் இயக்கத்தில்:


தனது பொருளாதர நிலை ஸ்திரமானவுடன், முழுநேர சமுதாயப் பணிக்குத் திரும்பக் காத்திருக்கிறார் அவர்.


இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் பிரிவான 'இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின்' நாக்பூர் கிளைச் செயலாளராக இவர் இருக்கிறார்; தான் வளர்ந்த குடிசைப்பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து இயங்கி வருகிறார்; குடிசைப்பகுதிப் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வூட்டும் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றி வருகிறார்.


"பெரும்பாலும் எனது சக்தியை நான் நடத்திவரும் புகைப்படத்தொழிலுக்குத் தற்போது செலவிட வேண்டியுள்ளது" எனக் கூறும் சங்கீதா மகாஜன், "சமுதாயப்பணிக்காக நான் செலவிட விரும்பும் நேரத்தைக் கணிசமான அளவுக்கு இது சாப்பிட்டு விடுகிறது என்பதை நான் அறிவேன். எனது லட்சியப் பயணத்தில் நான் மெல்ல அடியெடுத்துவைக்கிறேன். குடிசைப் பகுதி வாழ்க்கையினூடே நான் பெற்ற சமுதாயப் பார்வைமூலம் நிச்சயம் சாதித்த்க்காட்டுவேன்" என்று உறுதிபடச் சொல்கிறார். (நன்றி: THE HINDU BUSINESSLINE/OCT 13, 2006/ தமிழில்: மணிபின்)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP