Thursday, January 14, 2010






தைபிறந்தது வழியும் பிறந்தது:
"இனிமேல் எழுதலாம், பேசலாம்..."
தோழர் ஜெயகாந்தனின் ஜெய முழக்கம்!



தோழர் ஜெயகாந்தன் என்றுமே தனிமனிதரல்ல; அவர் ஒரு இயக்கம். சமூக அவலங்களைக் கண்டு இயல்பாகவே கொதித்துப்போன ஜே.கே. தனது பேனா, நா என்னும் வலிமைகொண்ட ஆயுதங்களைச் சுழற்றிச் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சமரசமற்ற வீரச்சமர் புரிந்துவருபவர். வெற்றி-தோல்விகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாதது அவரது போராட்டம்; லாப-நஷ்ட கணக்கு பார்க்காதது அவரது லட்சிய வாழ்க்கை; தன்னுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை அந்த வாழும் பாரதியின் முன்னோக்கிய பயணம்!

சிந்தையில் ஆயிரம் கொண்ட அவர், மாகவி அலெக்சாண்டர் புஷ்கினைப்போன்று, "கிட்ட வராதீர் என்னிடம்; ஒட்டுமில்லை உறவுமில்லை உம்மோடு!" என்று எதிர்மறை சக்திகளுக்குப் பிரகடனம் செய்து தனது ஆயுதங்களைச் சிலகாலம் உறையில் போட்டிருந்தது உண்மைதான். இதனைக் கண்டு விமர்சனம் செய்தவர்களும் உண்டு; ஏக்கம் கொண்டவர்களும் உண்டு.

அவர் எழுதி வைத்தவற்றைப் படித்தாலே ஏழேழு தலைமுறை ஞானம் பெறும் என்பது பலரும் அறிந்த விஷயம்.

இருப்பினும், விமர்சனங்களையும் நலம் பாராட்டல்களையும் எப்போதுமே ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பவர் தோழர் ஜே.கே. அதனால்தான், இரு சாராருமே மகிழும் வண்ணம், தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் நல்லதோர் அறிவிப்பைச் செய்திருக்கிறார் அவர்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்ச் சங்கமத்தின், "ஜெயகாந்தன் என்ற தமிழ் ஆளுமை" என்னும் தலைப்பில் ஜனவரி 13, 2010௦-இல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றிய அவர், குறளைப் போன்று சுருக்கமாக, 'நச்' என்று மனதில் பதியுமாறு சொன்னது இதுதான்:

"இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிற போது பயந்து கொண்டே இருந்தேன்-எங்கே இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை எனக் கேட்டுவிடுவார்களோ என்று. நல்ல வேளையாக யாரும் அப்படிக் கேட்கவில்லை. எனக்கே தெரியும்-இப்போதெல்லாம் நான் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. ஆனால், இனிமேல் பேசலாம், எழுதலாம் என்ற நம்பிக்கை மறுபடி வருகிறது!"


அரங்கத்திலிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி இதனை வரவேற்றார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா! உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா!! என்று தோழர் ஜே.கே. யை என்றும் போல் வரவேற்கிறது தமிழ் கூறும் நல்லுலகு! இந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியா நிற்போம் நாம்?-- விதுரன்.

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP