Sunday, January 3, 2010

che on castro


விடியலின்


சேதி தாங்கி


விளங்கி நிற்கும்


ஜோதி


[காஸ்ட்ரோ குறித்த சே குவேராவின் கவிதை]



விடியலின் சேதி தாங்கி
விளங்கி நிற்கும் ஒரு ஜோதியே-உன்
அன்பிற்குரிய வளநாட்டு
அடிமை விலங்குப்பாதைகளில் யாம்
அணி அணியாய்ச் செல்கின்றோம்.

அளப்பரும் கொடுமைகளை
களப்பலி காணுதற்கு
யாருமறியாப் பாதைகளில் யாம்
அணி அணியாய்ச் செல்கின்றோம்--எம்

நெற்றி முழுதும்
நின்றொளிரும் நட்சத்திரங்கள்
வெற்றி அன்றேல் மரணமென்று
வீறுகொண்டு முழங்கிவர
யாருமறியாப் பாதைகளில் யாம்
அணி அணியாய்ச் செல்கின்றோம்.

முதற் குண்டின் முழக்கம் கேட்டு--துயில்
முறித்தெழும் ஒரு பெண்ணைப்போலே-தேசம்
விழிப்புற்றிடும் வேளைதன்னில்
வீரர்கள் யாம் அமைதி எய்தி
உம்முடன் இருப்போம் உறுதி உறுதி!
உம்முடன் இருப்போம் உறுதி அறுதி!!

நிலவுடைமையில் சீர்திருத்தம்-எவர்க்கும்
நீதி, உணவு, சுதந்திரம் என
நீ விடுக்கும் பிரகடனம்
காற்றுருவில் கலக்கும்போது
எதிரொலிக்க யாம் இருப்போம்;
எப்போதும் உடனிருப்போம்.

விடுதலை என்னும் வீரவாள்-கொடும்
விலங்கதனின் உடல் கிழிக்கும்
வெற்றி நாளில் உடனிருப்போம்-உன்
வீரமெய்க்கீர்த்தி கேட்டிருப்போம்-எதிரிகள்

அவர்கள் தரும் அன்பளிப்பு
அலங்காரமாம் வலைவிரிப்பு
அசைத்திடுமோ எம்மையென்று
அம்ம, நீ எண்ண வேண்டாம்
ஒரு துப்பாக்கி சில ரவைகள்
ஒரு கைக்கோல் தம்மையன்றி
வேறு எதுவும் யாம் வேண்டோம்
வேறு எதுவும் எமக்கு வேண்டாம்.

அவர்களின் குண்டுகளுக்கு யாம்
அறுவடையாகும் நாள் வந்தால்
கியூபாவின் மக்கள் சிந்தும்
கண்ணீரின் துளிகள் எம்மேல்
சவத்துணியாய் மூடட்டும்.
சரித்திரத்தின் காற்று அதைச்
சாடித் தூக்கி எறியட்டும்.
வேறென்ன வேண்டும் எமக்கு?
வேறென்ன வேண்டும் எமக்கு?

(Che's song on Fidel Castro)
தமிழில்: சந்திரகாந்தன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP