Friday, January 29, 2010

ஜே. கே.




ஜெயகாந்தன் விழா:

"மனதிற்குப் பிடித்த இரண்டு சிறுகதைகள்"
-எஸ்.ராமகிருஷ்ணன்-




ன்று சென்னைச் சங்கமத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற தமிழ் சங்கம விழாவில் ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். நிகழ்விற்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். மேடையில் அவரது அருகாமையில் அமர்ந்திருந்தது மிக சந்தோஷமாக இருந்தது.

ஜெயகாந்தன் இன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அந்த மௌனமான அவதானிப்பு மற்றும் பேச்சை கூர்ந்து கேட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. காலை அமர்வு என்பதால் அதிக கூட்டமில்லை.நூறு பேருக்கும் குறைவாகவே இருக்ககூடும். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசுவதற்காக நான் அவரது இரண்டு கதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன்.

இரண்டு குழந்தைகள் என்ற அவரது கதை. பஞ்சம் பிழைப்பதற்காக ராமநாதபுரத்திலிருந்து தஞ்சை பூமிக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவளது குழந்தையின் கதை. சிவப்பி என்ற பெண் பஞ்சகாலத்தில் தஞ்சை பகுதி கிராமத்திற்கு வந்து கடுமையாக உழைக்கிறாள். அவளுக்கு நாலைந்து வயதில் ஒரு பையன். அந்த பையனை எப்போதும் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டே அலைகிறாள்.

தினசரி ஒரு ஐயர் வீட்டு மதிய நேரம் வடித்த கஞ்சி வாங்கி குடிப்பது அவளது வழக்கம். அந்த வீட்டின் ஐயருக்கு அவளை பிடிப்பதேயில்லை. அவளுக்கு ஊற்றப்படும் கஞ்சியில் ஒரு பருக்கை தவறிவிழுந்தவிட்டால் கூட அவர் கத்துகிறார். வெறும்கஞ்சியை மட்டுமே குடித்து அவள் எவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறாள் பாரு என்று சொல்லி காட்டுகிறார். அத்துடன் இனிமேல் சாதத்தை வடிக்காதே பொங்கிவிடு என்று ஆலோசனை வேறு சொல்கிறார்.

சிவப்பி கடுமையான உழைப்பாளி. ஒரு நாள் ஐயர் வீட்டில் விருந்து நடக்கிறது. பசியில் கஞ்சிக்காக காத்திருக்கிறாள் சிவப்பி. விருந்தில் அவளை கவனிக்கவேயில்லை. பிறகு மாமி அவளை அழைத்து கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்ற சொல்கிறாள். அவள் மாங்குமாங்கென வேலை செய்கிறாள். அவளது மகன் வெளியே உட்கார்ந்து பசியோடு வீட்டையே பார்த்து கொண்டிருக்கிறான். விருந்து சாப்பிட்டு முடித்த ஐயரின் பேத்தி வெளியே வந்து காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறாள்.

அந்த சிறுமிக்கு இந்த வேலைக்காரியின் மகனை விளையாட்டு பொம்மை போல காட்டி கேலி செய்கிறார் ஐயர். அவளுக்கு அழுகை அடங்கவில்லை. அந்த பிள்ளையை பார்த்து வேலைக்காரி மகன் சிரிக்கவே அவருக்கு ஆத்திரம் வருகிறது. அந்த சிறுவனை அவமானப்படுத்த துடிக்கிறார். முடிவில் அவனை எச்சில் இலையில் தூக்கி எறியப்பட்ட ஜாங்கிரியை எடுத்துச் சாப்பிட வைக்கிறார்.

அதை கண்ட சிவப்பி மகன் கையிலிருந்த ஜாங்கிரியை பிடுங்கி எறிந்து நான் உழைச்சி சாப்பாடு போடுறனே எதுக்குடா பிச்சை எடுக்குறே என்று அடிக்கிறாள். இதற்கு காரணம் அந்த ஐயர் என்று தெரிந்து அவரை முறைத்தபடியே வெளியேறி போகிறாள். அதன்பிறகு அவள் அந்த வீட்டுபக்கமே வரவில்லை என்று கதை முடிகிறது

இந்த கதை பஞ்சம் பிழைக்க போனவர்களை பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டது. எனது பால்யத்தில் தஞ்சை பஞ்சம் பிழைக்க போன பலரை தெரியும். அவர்கள் மறுபடியும் ஊர் திரும்பவேயில்லை. இன்னொரு பக்கம் பிழைக்கப்போன இடத்தில் பட்ட அவமானங்களை மறைத்து கொண்டு வாழ முயன்று தோற்றுபோய். அவர்கள் கடைசிபுகலிடமாக சென்னை வந்து சேர்ந்து இன்றும் நடைபாதை வாசிகளாகவே வாழ்கிறார்கள்.

இக்கதையில் வரும் சிவப்பி பஞ்சத்திலும் உழைத்து வாழ நினைக்கிறாள். வாழ்க்கையை பயமற்று எதிர்கொள்கிறாள். அவளது மகன் ஒரு அற்புதமான கதாபாத்திரம். ஜெயகாந்தன் கதைகளில் வரும் குழந்தைகள் அற்புதமானவர்கள். குழந்தைகளின் மீதான ஏக்கம் பிரிவு அவர் கதைகளில் திரும்ப திரும்ப வருகிறது. இக்கதையில் வரும் சிவப்பியின் மகன் இன்னமும் சரியாக பேச்சு வராதவன். அவன் கையில் ஒரு முறுக்கை வைத்து கொண்டு தாயின் இடுப்பில் தொங்கியபடியே வரும் காட்சி தத்ருபமாக கண்ணில் தெரிகிறது.

இந்த கதையை வாசித்த உடனே நினைவிற்கு வந்த கதை கு. அழகிரிசாமியின் திரிபுரம். அதுவும் பஞ்சம் பிழைக்க போன இடத்தில் தாயும் மகளும் அடையும் அவமானம் பற்றியதே. அது போலவே இந்த கதை புதுமைபித்தனின் கதையில் வரும் குழந்தைகளை அதிகம் நினைவூட்டுகிறது.

குரலை உரத்தாமல் சீராக கதை சொல்லும் முறை. குழந்தையை கூட பேதம் பார்க்க சொல்லும் பெரிய மனிதனின் அற்பமனது, அவரது மனைவியின் கதாபாத்திரம் என்று கதை மனதில் தொடர்ந்து அலைகளை உருவாக்கியபடியே இருந்தது. இந்த கதை மூன்று தளங்கள் கொண்டது. பஞ்சம்பிழைக்க போன பெண் அவளை பிரிந்த கணவன் அவர்களது போராட்டமிக்க தினசரி வாழ்க்கை. இரண்டாவது. ஐயர் மற்றும் வசதியில்லாத வீட்டில் பிறந்து வந்தவள் என்று குற்றம் சொல்லிக்காட்டப்படும் அவரது மனைவி. மூன்றாவது சம வயதுள்ள இரண்டு குழந்தைகள். இந்த தளங்கள் ஒன்றையொன்று வெட்டி ஊடுருவுகின்றன.

இன்னொரு கதை நான் ஐன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன். திருமணம் ஆகாத பெண் ஒருத்தி வீட்டு ஜன்னல் வழியே உலகை காண்பதை பற்றியது. இக்கதையில் வரும் ஜன்னல் நூற்றாண்டுகளாக பெண்கள் மீதான கலாச்சார ஒடுக்குமுறையின் அடையாளம் போலவே வருகிறது. அந்த பெண் நேரடியாக பேசுவது போன்ற கதை சொல்லும் முறை.

கதையின் வழியே அவர் காட்டும் வெளிஉலகின்காட்சிகள். அதிலிருந்து உருவாகும் அவளது ஆசைகள், நிராசைகள். அந்த பெண் கதையின் முடிவில் ஏன் பாட்டி ஜன்னல்கிட்டயே உட்கார்ந்திருக்கே என்று குரல் கேட்டு திடுக்கிடும் போது வாசகனாக நாமும் திடுக்கிடவே செய்கிறோம். வயதை மறந்து உட்கார்ந்திருந்த அந்த பெண் முகம் ஒரு நிமிசம் மனதில் தோன்றி மறைகிறது. கல்லாக உறைந்து போன அகலிகை போல அது நினைவூட்டுகிறது.

மாக்சிம் கார்க்கி கதைகளில் வரும் சிறுவர்கள் அசலானவர்கள். அவரை போன்ற சதையும் ரத்தமும் கொண்ட குழந்தைகளை புதுமைப்பித்தனிலும் ஜெயகாந்தனிலும் காணமுடிகிறது.

ஜெயகாந்தன் கதைகள் வழியாக தமிழ் கதைமரபு எப்படி மறுஉருவாக்கம் பெற்றது மற்றும் தமிழ் எழுத்தாளர்களின் சமூக அக்கறைகள் பற்றி பேசினேன். அதன் ஒளிவடிவம் வெளியாகும் என்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் வெவ்வேறு சிறுகதைகள் வேறுவேறுசந்தர்பங்களில் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதே வாசிப்பில் நான் கண்ட உண்மை , இந்த முறை ஜேகேயை வாசித்த போது மற்றகதைகளை விட இந்த இரண்டும் என் மனதிற்கு மிக நெருக்கமாக மறுபடி மறுபடி வாசிக்கும்படியாக இருந்தன.

ஜெயகாந்தனின் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதியாக இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் இந்த இணைப்பிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP