Sunday, February 21, 2016

அமர்த்தியா சென் பார்வையில்…

ஆடம் ஸ்மித், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்

[நோபல் பரிசு வென்றவரும் தலைசிறந்த பொருளாதார மேதையுமான அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு`தி கண்ட்ரி ஆஃப் ஃபர்ஸ்ட் பாய்ஸ்’ (The Country of First Boys) என்ற பெயரில் நூல் வடிவில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
வளர்ச்சி, நீதி, கல்வி, முக்கிய நிகழ்வுகள், கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், நாடகத்தின் முக்கியத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
இதில் கூறியுள்ள கருத்துகள் தொடர்பாகவும், மற்ற பல விஷயங்கள் குறித்தும் தி ஹிண்டு (The Hindu) ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஜி.சம்பத்துக்குச் சிந்தனையாளர் அமர்த்தியா சென் அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது:]


கேள்வி: மனிதர்களின் பாதுகாப்புக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் உள்ள வெவ்வேறு முன்னுரிமைகள் பற்றி உங்கள் நூலில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். மனிதர்களின் பாதுகாப்புக்காகப் போதிய அளவு செலவு செய்யாமல் இருப்பதற்காக, தேசப்பாதுகாப்பு என்பது பெரும்பாலும் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: நல்லது. இதில் மூன்று விஷயங்கள் உள்ளன. முதலாவது, மனித வாழ்க்கையைச் சுற்றியே நமது முதன்மையான அக்கறை இருக்கவேணடும் என்பதுதான் பாதுகாப்பின் அடிப்படையான விஷயமாக அமைந்திருக்கவேண்டும். எனவே, நாம் பாதுகாப்பு என்று பேசும்போது, அது மனிதர்களின் பாதுகாப்பாக இருக்கவேண்டும். வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு என்பதும்கூட இதற்குப் பொருளாகும். தேசப்பாதுகாப்பு என்று நாம்அழைப்பது, மனிதர்களின் பாதுகாப்பு என்பதில் அடங்கியுள்ள ஒருஅம்சம் மட்டுமே.
இரண்டாவது, மனிதர்களின் பாதுகாப்பு சார்ந்திருக்கும் கல்வி, உடல்நலம், சமூகப்பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்கு, தேசப்பாதுகாப்பு என்ற பெயரில், பெரும்பாலும் ஆதாரவளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. சிலநேரங்களில், அரசியல் பின்புலத்தில் தேசப்பாதுகாப்பு என்பதைப் பார்க்கும்போது, மனிதர்களின் பாதுகாப்பை வளர்ப்பதற்கான ஓர் உள்ளடக்கக்கூறு என்பதைக் காட்டிலும் அது ஒரு தடைக்கல்லாகவே தோன்றுகிறது. அதே வேளையில், தேசப்பாதுகாப்புக்கான பட்ஜெட்டைக் குறைப்பதுபற்றிப் பரிசீலிக்கும்போது, மற்ற விளைவுகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே ஏன் மோதல் இருக்கவேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
மூன்றாவது, கல்வி, உடல்நலம், சமூகப்பாதுகாப்பு ஆகியவை புறக்கணிக்கப்படுவது நம் நாட்டில் அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. இது, சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப்பில் ஆழமாக வேரோடி இருக்கிறது.
எனவே, எல்லாவற்றுக்கும் தேசப்பாதுகாப்பைப் பழிசொல்வது தவறாகிவிடும்.
கேள்வி: பொருளாதார வளர்ச்சி என்பதில் இருந்து, மனித வாழ்க்கைத்தர வளர்ச்சி என்பதை நோக்கி, வளர்ச்சியின் கவனத்தைத் திருப்புவதற்கு உங்கள் பணி உதவியிருக்கிறது. மேலும், அதிக வளர்ச்சி அடைந்த சமுதாயம் என்பதை நோக்கி தேசம் முன்னேறுவதற்கு ஒரு மெய்யான அளவுகோல் என்றவகையில, மனித வாழ்க்கைத்தர மேம்பாடு என்பதில் இருந்து சமூகநீதி என்பதை நோக்கி இப்போது இன்னொரு திருப்பம் ஏற்படுவதற்கு இது சரியான தருணம் என்று கருதுகிறீர்களா?
பதில்: மனித வாழ்க்கைத்தர மேம்பாட்டுக் குறியீடு (HDI) என்பது வந்தபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP)  புள்ளிவிவரங்களைக்காட்டிலும் நிலவரத்தைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டக்கூடிய எளிய குறியீடாக அது இருக்கவேண்டும் என்பதுதான் கருத்தோட்டமாக இருந்தது. முதன்முதலாக 1990-ல் வெளியான மனித வாழ்க்கைத்தர மேம்பாட்டு அறிக்கையில் (HDR) பல இடங்களில் நீதி என்ற கருத்தோட்டத்தை முன்வைத்தோம். மனித வாழ்க்கைத்தர மேம்பாடு என்பது தனித்துறையாக வளரும்போது, நீதி என்பது அதிக அளவில் ஒரு மிகப் பெரிய உள்ளடக்கக்கூறாக மாறும்.
கேள்வி: வளர்ச்சிப் பொருளாதார இயலைக் குறைகூறும் அந்துரோ எஸ்கோபார், மஜீத் ரஹ்நேமா போன்றவர்கள், வளர்ச்சி என்று பேசுவதே, பின்தங்கியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் மத்தியில் அதிகாரமற்ற, சுதந்திரமற்ற ஓர் ஆட்சிமுறையை நிறுவும் குற்றத்தைப் புரிவதற்கு வழிவகுக்கும் என்றும், பின்னர் அவர்கள், மேற்கத்திய மாடல் தொழில்மயமாக்கத்தையும், சந்தையால் வழிநடத்தப்படும் வளர்ச்சி மாடலையும் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: மனிதவாழ்க்கையைப் பற்றியும், விநியோகத்தைப் பற்றியும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளிபற்றியும், திறமையாகப் பண்டங்களை உற்பத்தி செய்வதில் சந்தையின் பங்குபற்றியும், கல்வி, உடல்நலம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் அரசாங்கத்தின் பாத்திரம்பற்றியும் பொருளாதாரமேதை ஆடம் ஸ்மித் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்.  (அவரது முக்கியபடைப்பான The Wealth of Nations/1776—ல் வெளியானது).
இந்தப் பாடம் இப்போதும் பொருந்தும் என்று கருதுகிறேன். இதை மேற்கத்திய மாடல் என்று அழைப்பது இதைக் குறைத்து மதிப்பிடுவதாகும். சந்தைப் பொருளாதாரம் என்பது முற்றிலும் மேற்கத்திய நாடுகளின்  கண்டுபிடிப்புஅல்லஎகிப்துக்கும் பாபிலோனுக்கும் இடையே வர்த்தகம் இருந்திருக்கிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோவிலும் வணிக முத்திரைகளைக் காணலாம்.
கேள்வி: ஆனால் அப்போது முதலாளித்துவம் என்பது இல்லையே
பதில்: அது உண்மைதான். ஆனால், முதலாளித்துவம் என்பது ஒரு விநோதமான சொல். ஏழைமக்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விதத்தை  நாம் முதலாளித்துவம் என்று அழைப்போமெனில், அந்தவிதமானஅமைப்பைநான்எதிர்க்கிறேன். இந்த அர்த்த்த்தில், ஆடம் ஸ்மித் பலவகையிலும் முதலாளித்துவ எதிர்ப்பாளராக விளங்குகிறார். மூலதனத்தின் தனிஉடைமையை அவர் ஆதரித்தபோதிலும், பணக்காரர்கள் எப்போதெல்லாம் ஒன்றுகூடுகிறார்களோ அப்போதெல்லாம், ஏழைமக்களை ஏமாற்றுவது எப்படி என்பதுபற்றியே திட்டம்தீட்டுகிறார்கள் என்று  அவர் கருதினார். முதலாளித்துவம் என்ற வார்த்தையை அவர் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. மூலதனத்தின் அளவுக்குமீறிய அதிகாரத்தை அவர் எதிர்த்தார். நானும் அப்படித்தான். கார்ல் மார்க்சும் அப்படித்தான்.
கேள்வி: நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வருவோம். அதன் துணைவேந்தராக முனைவர் கோபா சபர்வால் நியமிக்கப்பட்டதைப் பலரும் குறைகூறுகிறார்கள். அவருக்கு புத்தமத ஆய்வுப் பின்புலம் எதுவும் இல்லை. ஒரு பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு விதித்துள்ள தகுதியும் அவருக்கு இல்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பதில்: அவர் மிகச் சிறந்த துணைவேந்தர். இந்தியாவில் உள்ள சாதிய அமைப்புமுறையை வைத்துப்பார்க்கும்போது, சாதி போன்ற பிரச்சினைகள் எழுவதில் ஆச்சரியம் இல்லை. துணைவேந்தர் பதவிக்கு ஒருவர் பேராசிரியர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்ரீடர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது; நிச்சயம், விரிவுரையாளர் சாதியாக இருக்கக்கூடாது என்று பலரும் சொல்வதில் ஆச்சரியம் இல்லை.
இரண்டாவது, நாளந்தா பல்கலைக் கழகம் புத்தமதஇயல் பல்கலைக் கழகம் அல்ல. பழங்காலத்து நாளந்தா பல்கலைக் கழகமும் அப்படி இல்லை. எனவே, ஒரு புத்தமதத் துறவிதான் அந்தப் பல்கலைக் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் அது தவறு. நமக்கு வேண்டுவது அதுவல்ல.
இப்போது புதிய துணைவேந்தராக சிங்கப்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் இயோ வந்திருக்கிறார். திருமதி கோபா சபர்வால் பொருத்தமான துணைவேந்தர் என்றும், அவர் தொடரவேண்டும் என விரும்புவதாகவும் ஜார்ஜ் இயோ பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கோபா சபர்வாலுக்கு எதிரான பிரச்சாரம் முற்றிலும் திட்டமிட்ட ஒன்றாகும்.
கேள்வி: உங்கள் நூலில், ஏகாதிபத்தியம் பற்றிய பழைய புரிதலுக்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற நினைப்பே எப்போதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய இடதுசாரிகளை நீங்கள்  கேலி செய்திருக்கிறீர்கள். அமெரிக்காவுக்கு 130 நாடுகளில் 900 ராணுவதளங்கள் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை என்று நினைக்கிறீகளா?
பதில்: அமெரிக்கா உலகம் முழுவதும் ஏராளமான ராணுவ தளங்களை வைத்திருப்பது நிச்சயம் சமபலம் அற்ற நிலைதான். அதைப்பற்றிக் கவலைப்படுவது நியாயம்தான். ஆனால், அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பது தவறு. அமெரிக்காவுடன் இந்தியாஅணு ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக, [ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1] ஆட்சியைக் கவிழ்க்க இடதுசாரிக் கட்சிகள் முடிவுசெய்த அந்த வேளையை நான் குறிப்பாக நினைத்துப் பார்க்கிறேன்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருக்கிறதா?  சில வகையில் அது இருக்கிறது. சொற்ப அளவில் இந்திய ஏகாதிபத்தியமும் இருக்கிறது. கொஞ்சம் சீன ஏகாதிபத்தியமும் இருக்கிறது. பிரான்ஸ், இங்கிலாந்து ஏகாதிபத்தியங்களும் கொஞ்சம் இருக்கின்றன. இவற்றைவிட அமெரிக்க ஏகாதிபத்தியம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த்து என்பது உண்மைதான். ஆனால் அந்த ஒரு விஷயம் அவர்களை முழுமையாக ஆட்டிப்படைப்பதால், இடதுசாரிகள் சுதந்திரமாகச் சிந்திக்கமுடியாமல் இருக்கும் ஒரு நிலவரத்தைதான் நான் எதிர்க்கிறேன்.
  இப்போது சீதாராம் யெச்சூரியின் புதிய தலைமையின்கீழ் மார்க்சிஸ்ட் கட்சி வந்திருக்கிறது. இனி அறிவார்ந்த சிந்தனை அதிகரிக்கும் என்று நம்புவோம். நான் மனிதகுலத்துக்கும், சமத்துவத்துக்கும், நீதிக்கும் ஆதரவாக இருக்கிறேன். அறிவாற்றலுக்கும் ஆதரவாக இருக்கிறேன்.

தமிழில்: ஜெயநடராஜன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP