Sunday, February 21, 2016

பசு வருடம் (2015)!

-ஜி.சம்பத்-
சீனர்களுக்கு 2015-ஆம் ஆண்டு செம்மறி ஆட்டு வருடம். ஆனால், அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தியாவுக்கோ பசுவருடமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2015ல் தலைப்புச் செய்திகளில் பொருளாதாரமோ, அரசியலோ இடம் பெறவில்லை. அப்படியான முக்கிய இடத்தைப் பெற்றது கலாச்சாரம்தான். 2015ம் ஆண்டின் கலாசார சாராம்சத்தை ‘மாட்டிறைச்சி’, ‘சகிப்பின்மை’ என்ற இரண்டே சொற்களில் சுருங்கச் சொல்லிவிடலாம்.
  2015ல் வாழ்வா-சாவா என்ற விஷயமாகக் கலாச்சாரம் ஆகிவிட்டது. இந்தியாவில் எம்.எம்.கல்பர்கி, முகமது அக்லக், வங்கதேசத்தில் அவிஜித் ராய், ஆனந்த பிஜய்தாஸ், வாஷிகர் ரஹ்மான் ஆகியோர் கொலைசெய்யப்பட்டதைக் ‘கலாசாரக் கொலைகள்’ என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களெல்லாம் கொல்லப்படுவதற்குமுன், பெருமாள் முருகன் தனது எழுத்துலக வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்த ஓர் இலக்கிய மரணமும் நிகழ்ந்தது.
  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி  நிறுவனத்தின் தலைவராகப் பாண்டவர்களில் மிக மூத்தவரான ‘யுதிஷ்ட்ரர்’ [கஜேந்திர செளகான்] நியமிக்கப்பட்டபோது தேசிய அளவில், மற்ற விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு கலாச்சாரம் மீண்டும் முன்னுக்கு வந்தது; அவரது நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பல வாரங்களுக்கு நீடித்தது. இந்தியாவிலுள்ள முதன்மையான கலாச்சார, கல்வி நிறுவனங்களில் இந்துத்வா கொள்கைத் திட்டத்தின்பால் பரிவுகொண்ட காவிச் சிந்தனையாளர்களுக்கு வழியேற்படுத்தித் தரும்பொருட்டு மதச்சார்பற்ற, இடதுசாரி அறிஞர்கள் வெளியேற்றப்பட்டதுபோல், புதுரத்தம் பாய்ச்சுவது போன்ற கலாச்சார யுத்தங்கள் பல துறைகளுக்கும் பரவின. அடுத்து, ‘விருதுகளைத் திருப்பிக் கொடுத்தல்’ என்றழைக்கப்படும் சம்பவமும் நடந்தேறியது. பேச்சுரிமையையும், சமூக நல்லிணக்கத்தையும் சீரழிக்கின்ற சூழலை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் தமக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இதனை ‘உற்பத்தி செய்யப்பட்ட கலகம்’ எனப் புறக்கணிக்க முயன்றபோதிலும், அது ‘சகிப்பின்மை பிரச்சனை’ குறித்த, தேசிய அளவிலான விவாதத்திற்கு வழிகோலியது.
  சகிப்பின்மையின் மையமாக ‘மாட்டிறைச்சி’ விஷயம் இருந்தது என்றாலும், அந்த மையத்தை விட்டு விலகி, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது; காதலர் தினம் கொண்டாடுவது; மதத்திற்கு வெளியே திருமணம் செய்வது, கலாச்சாரக் காவலர்களிடமிருந்து மாறுபட்டு மிக மென்மையாகவேனும் ஒரு கருத்தைச் சொல்வது (இது குறித்து அமீர் கான்/ஷாருக் கான்-ஐக் கேளுங்கள்)—இப்படியாகத்தானே பல எல்லைகளுக்கும் அது பரவி, கலாச்சாரக் காவலர்களின் கோபத்தைக் கிளறியது.
  கலாச்சார யுத்தங்களின் முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பேச்சுரிமை, கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை என்ற அடிப்படை உரிமைகளை, கலாச்சார சுதந்திரத்தின் அடிப்படை ஆதாரங்களை அரசு ஆக்கிரமிக்க முனைந்தது. எடுத்துக்காட்டாக, 2015 அக்டோபர் மாதம் தமிழக அரசின் காவல்துறை, எஸ்.கோவன் என்கிற நாட்டுப்புறப் பாடகரைக் கைது செய்து, மாநில அரசை விமர்சித்துப் பாடல்கள் பாடியதாக ராஜத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியது. (நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி) 2015ல் மட்டும் தேசிய அளவில் 844 வலைதளப் பக்கங்களை முடக்கி சமூக ஊடகங்களைத் தணிக்கை செய்யும் காட்டுதர்பார் நடந்தேறியது.
  ஆனால், நம்பிக்கையை வற்றடிக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகள் மட்டுமல்ல; 2015ல் பேச்சுரிமையின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமும் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அபாயகரமான 66-A எனும் பிரிவின் பிடியிலிருந்து அவர்கள் விடுபெற்றனர். ஒரு மின்னணுக் கருவியைப் பயன்படுத்தி (மின்னஞ்சல் போன்று) பரப்பப்படும் ஒரு செய்தி குற்றத்தன்மை பொருந்தியது எனக் கண்டறியப்பட்டால் அச்செய்தியைப் பரப்பியவரை மூன்றாண்டுகள்வரை சிறையில் அடைக்க வழிவகை செய்தது இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு. 2014-ல் 66-Aன்படி  மொத்தம் 4192 வழக்குகள் பதியப்பட்டன; 2423 பேர் கைது செய்யப்பட்டனர்; 125 பேருக்குக் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது; 42 பேர் தண்டிக்கப்பட்டனர். இவையெல்லாம், இணையத்தின் மூலம் ‘குற்றத்தன்மை’ பொருந்திய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதற்காக. ஆனால், இந்த 2015ம் ஆண்டின்  மார்ச் மாதத்தில் உச்ச நீதி மன்றம் இந்தப் பிரிவை நீக்கியதன் மூலமாக, ஏற்கனவே இந்தப் பிரிவால் தண்டிக்கப்பட்டவர்களும், எதிர்காலத்தில் தண்டிக்கப்பட அதிக வாய்ப்பிருந்தவர்களும் ஆறுதல் அடைந்தனர்.
  ஒரு கட்டத்தில், கலாச்சார வெளிப்பாட்டின் மீதான கட்டுப்பாடுகள் கேலிக்கூத்தான வடிவமெடுத்தன. சமீபத்தில் வெளியான ‘ஸ்பெக்டர்’ (Spectre) என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளைத் தணிக்கை செய்த பஹ்லாஜ் நிஹலானி தலைமையிலான மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல் சமூக ஊடகங்களின் எள்ளல்களுக்கு இலக்கானது. இதனால், பல கட்டுப்பெட்டி வகையறா ஜேம்ஸ் பாண்ட் தொடர்கள் உருவாகிப் பரவின. அதில் ஒன்றில், நீச்சல் உடையணிந்த நடிகை உர்சுலா ஆண்ட்ரெசுக்குப் பதிலாக சேலை சுற்றிய பாண்ட் பெண் இடம் பெற்றிருந்தாள்.
  ‘கோபக்கார இந்தியப் பெண் தெய்வங்கள்’ (Angry Indian Goddesses) என்ற பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பட விஷயத்தில் மத்திய தணிக்கைக் குழு மேற்கொண்ட அறிவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளும் கிண்டலுக்குரியனவாய்ப் போயின. சாதாரணமாகத் தகாத வார்த்தைகள்தான் ‘பீப்’ ஒலி மூலம் மறைக்கப்படும். ஆனால், இந்தப் படத்தில் ‘மதிய உணவு’,  ‘சர்க்கார்’, ‘இந்திய வடிவம்’ என்ற பதங்கள்கூட மெளனப்படுத்தப்பட்டன. காளி தேவியின் உருவங்களும் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் அடங்கும்.
   2015ம் ஆண்டு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தபோதிலும், சகிப்பின்மை என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கனவே 2013ம் ஆண்டில் திரண்ட, 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பரப்பப்பட்ட , வலதுசாரி அரசின் பட்டவர்த்தனமாய் வெளிப்படாத வஞ்சகப் பார்வையின்கீழ் மண்டிவளர்ந்த போக்குகளின் ஒருங்கிணைந்த வடிவத்தைத்தான் இந்த 2015ல் கண்டோம்.
  ஆயினும், இதற்காக சங் பரிவாரம் வழிநடத்தும் தேசிய ஜனநாயக அணி அரசை மட்டும் நாம் குற்றம் சொல்வது தவறாகும். உலகெங்கும் தாராளமயச் சந்தை ஜனநாயகங்களில் பரவலாகக் காணப்படும் போக்கின் ஒரு பகுதியைத்தான் நாம் இந்தியாவில் கண்டுகொண்டுள்ளோம். இந்தப் போக்கை ஸ்லோவேனியன் சித்தாந்தியான ஸ்லவாஜ் சிசெக் (Slavoj Zizek), ‘அரசியலைக் கலாச்சாரமாக்குதல்’ (culturalisation of politics) என்று குறிப்பிடுகிறார்.
  பொருளாதாரக் கொள்கையின் அரசியல் பிரச்சனைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிபுணர்களிடமும், சர்வதேச வர்த்தக உடன்பாடுகளிடமும் விடப்பட்டுவிட்டதால் ஜனநாயகத் தேசிய அரசியல் போதிய உள்ளடக்கமின்றி வெற்றிடமாகக் கிடக்கும் போக்கு நிலவுகிறது. நீதி, சமத்துவம், சுரண்டலுக்கு முடிவுகட்டுதல்—இப்போது இவையெல்லாம் கண்டிப்பாகக் கருதப்பட வேண்டிய விஷயங்களே அல்ல என்றாகிவிட்ட நிலையில்—ஆகியவற்றுக்காக நடத்தப்பட்ட மரபார்ந்த அரசியல் போராட்டங்களின் இடங்களை, எதைப் பேசவேண்டும்; எதை உண்ண வேண்டும்; எங்ஙனம் உடுத்த வேண்டும்; யாரை மணம் செய்ய வேண்டும் என்கிற கலாச்சாரப் பிரச்சனைகள் ஆக்கிரமித்துள்ளன.
  எங்கெல்லாம் ஜனநாகயக அரங்கத்தில் உண்மையான, அர்த்தபூர்வமான அரசியல் தேர்வு மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தக் கலாச்சாரமயமாக்குதல் பொதுப் போக்காகக் கொழிக்கிறது. அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான [குடியரசுக் கட்சியின்] ட்ரம்ப் (Trump) தொடங்கி, கிரீசின் கோல்டன் டான் (Golden Dawn), பிரான்சின் ஃப்ரண்ட் நேஷனல் (Front National) இன்னபிற இயக்கங்கள் வரை இவ்விரிவான போக்கின் அடையாளங்களாக உள்ளன.
  இந்தியாவில், 2015ல் ஏற்பட்ட பணவீக்கம், குறிப்பாக பருப்பு விலையேற்றம் என்ற திடீர் மாற்றங்கள் பேசப்படவேண்டிய விஷயங்களாக ஆகியிருக்க வேண்டும். அப்படி ஏற்பட்டிருந்தால் அது தீவிரமான அரசியல் விவாதத்திற்கு அடிகோலியிருக்கும். சாதிவாரிக் கணெக்கெடுப்பு, சமத்துவம் ஆகியவற்றின் பின்புலத்தில் உணவுப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் குறித்த விவாதமாக அது ஆகியிருக்கும். ஆனால், சாவி கொடுத்து முடுக்கி விட்டவர்களேபோல் சில பரிவாரக் கலகமூட்டிப் பேச்சாளர்கள் கோபமூட்டக்கூடிய எதையேனும் கிளறிவிட்டதும் பொதுமக்களின் கவனம் மீண்டும் கலாச்சாரப் பகுதி நோக்கித் திரும்பியது.
   2015ம் ஆண்டின் இறுதி நாட்களில் சகிப்பின்மைக் கலாச்சார அரசியலின் சீற்றம் பெருகக் கண்டோம். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்களின் நெருக்கடி காரணமாக புனேயில் ஒரு நவீன திரையரங்கில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படம் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டு ரத்தானதும், ‘மெய்யான சகிப்பின்மை’ என்பது என்ன என்று ஷாருக் கானுக்குக் காட்ட விரும்பிய விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள், மங்களூரில் அவர் நடித்த ‘தில்வாலே’ திரைப்படத்தைத் திரையிடவிடாமல் தடுத்ததும் அத்தகைய போக்கினுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
  ஆயினும் அந்த ஆண்டு [2015], நம்பிக்கைக்கு இடமற்ற ஆண்டாக இருந்துவிடவில்லை. பசு வருடத்தில், ஜெய்ப்பூரில் கடந்த [நவம்பர்] மாதம் ஒரு பசு பொம்மை காரணமாக ஏற்பட்ட சிறிய சச்சரவில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் பசு நேசர்கள் தோற்றது ஒரு வேளை, முக்கியமான சமிக்ஞையாக அமைந்துவிட்டது போலும்.
  இளஞ்சிவப்பு நகரான ஜெய்ப்பூரில், கடந்த நவம்பர் 21ம் தேதியன்று பிரகாசமான காலைப் பொழுதில், ஜவகர்லால் கேந்திரத்துக்கு மேலே, நீலவானில் ஒரு கருப்பு-வெள்ளைப் பசு மிதந்தது. அதற்கு முந்தைய மாதங்கள், 2015ம் ஆண்டு பசுவோடு ‘விளையாடு’பவர்களுக்கு ஒரு மோசமான வருடம் என்று உணர்த்தியிருந்தன.
  ஆயினும், ஜெய்ப்பூர் கலை மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு தைரியசாலியான கலைஞர், வாயு நிரப்பிய ஒரு ‘ஸ்டைரோஃபோம்’ பசுவைக் காற்றில் மிதக்கவிடுவது அவசியம் எனக் கருதினார். கைவிடப்பட்ட பசுக்கள் எங்ஙனம் பிளாஸ்டிக் பொருட்களைத் தின்று மூச்சுத் திணறி மடிந்துபோகின்றன என்பதுகுறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்தக் கலைவடிவம் உருவாக்கப் பட்டிருந்தது. அந்தப் பசு பொம்மை விண்ணில் உயரத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தனர்; பிறரது உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகக்கூறி, அந்த பசு பொம்மையை நிர்ப்பந்தமாகக் கீழிறக்கினர். அந்தக் கலை உருவாக்கத்துடன் தொடர்புடைய இரண்டு கலைஞர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
  விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நோக்கமெனில், அந்த இரண்டு கலைஞர்களும் கட்டுரை எழுதியிருக்கலாம்; ஓவியங்கள் தீட்டியிருக்கலாம்; அதனைவிடுத்து பசுவைக் காற்றில் பறக்கவிடலாமா என அந்தக் கலைஞர்களுக்குப் போலீஸ்காரர்கள் அறிவுரை பகன்றனர். பின்னர், வானத்தில் பறந்த அந்த ஸ்டைரோஃபோம் பசுவுக்குத் தக்க மாலை மரியாதைகள் செய்யப்பட்டு சிறிய அளவில் பூஜையும் நடத்தப்பட்டது. இத்தோடு கதை முடிந்திருந்தால் அந்த நாள் பசு ராஜ்யத்தின் இன்னொரு வெற்றித் திருநாளாக ஆகியிருந்திருக்கும். ஆனால் அங்ஙனம் ஆகவில்லை.
  துரிதமாய்ச் செயல்பட்ட மாநில அரசு நிர்வாகம், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களை அந்தப் பகுதியிலிருந்து இடம் மாற்றியது. காவல்துறை ஆணையாளர், கலைஞர்களிடம் மன்னிப்புக் கோரினார். ராஜஸ்தானின் பா.ஜ.க. முதலமைச்சர் வசுந்தரா ராஜே இந்த சம்பவம் குறித்து வருந்துவதாக ‘ட்விட்டரில்’ கருத்து வெளியிட்டார். இப்படியாக, இந்த ஒருமுறையேனும் கலை அந்த மூர்க்கத்தனத்தைத் திருப்பி அடித்து விரட்டியது. பசுப்பட்டாளத்தைத் திருப்பியடிக்க ஒரு பிளாஸ்டிக் பசு—இது பொருத்தமான அங்கதம்தான்!
  சீனர்களின் நாட்காட்டியில் 2016 குரங்கு வருடம். இந்தியாவில், புதிய ஆண்டில் எந்த மிருகம் ஆட்சி செய்யப் போகிறதோ, அறியோம். ஆயினும், மீண்டும் அது பசுவாக இராது என்று நம்புவோமாக!
தமிழில்: சந்திரகாந்தன்

(Courtesy: THE HINDU/December 27, 2015/ The Year of the Cow/G.Sampath)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP