Sunday, February 21, 2016

யுகப்புரட்சி நூற்றாண்டை நோக்கி...

ரஷ்யப் புரட்சி: உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சில படிப்பினைகள்
-அனில் ரஜிம்வாலே-

புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்யப் புரட்சி நடைபெற்ற நூறாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு புரட்சியும் இதற்கு இணையானதல்ல என்கிற வகையில் சரித்திரத்தில் அழுத்தமாகத் தன் சுவடுகளை அது பதித்திருக்கிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் அதன் தாக்கம் குறைந்துவிடவில்லை. ரஷ்யப் புரட்சியின் பொதுவான மற்றும் குறிப்பிடத்தக்க அம்சங்களை ஆய்ந்து, இன்றைய உலகத்துக்குத் தேவையான முடிவுகளுக்கு நாம் வருவது அவசியமாகும். இன்றைக்கும்கூட சாராம்சத்தில் பொருந்தக்கூடிய அம்சங்கள் அதில் உண்டு. அடிப்படையில் ரஷ்யாவுக்கு மட்டும் பொருந்தக்கூடிய தனித்த சில அம்சங்களையும் அது கொண்டுள்ளது.
  சோவியத் (ரஷ்ய) புரட்சியைத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக ஆக்கியது எது? அதுதான் முதன்முதலாகத் தொழிலாளர்களும் விவசாயிகளும் சேர்ந்து வெற்றிகரமாக நடத்திய முதல் புரட்சி. (தன் சார்பாகக் கட்சியோ அல்லது வேறு ஸ்தாபனமோ அல்லாமல்) எப்படி தொழிலாளிவர்க்கம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் பிரயோகிக்க முடியும் என்று உலகத்துக்குக் காட்டிய புரட்சி அது. கட்சியானது வழிகாட்டும் சக்தியாகச் செயல்படுகிறது; ஆனால், [தொழிலாளி] வர்க்கத்தின் இடத்தை அது எடுத்துக் கொள்ளக்கூடாது. வர்க்க மற்றும் வெகுஜனப் புரட்சியாகத் தொடங்கிய புரட்சி, பின்னர் ‘அதன் சார்பான’ கட்சியின் அதிகாரமாக நசிந்தது.
  ராணுவ வீரர்களுடன் இணைந்த, அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்ற அமைப்புகளாக சோவியத்துகள் திகழ்ந்தன. சாராம்சத்தில், ரஷ்யப் புரட்சி சோவியத்துகளின் அதிகாரமேயன்றி கட்சியின் அதிகாரம் அல்ல. இந்தக் கோட்பாடு பின்பற்றப் பட்டிருக்குமேயானால், சோவியத் புரட்சி அதிகாரவர்க்கமயமாகி, நசிந்து, 1991ல் வீழ்ந்துபட்டிருக்காது.
ரஷ்யப் புரட்சி: ஏகாதிபத்திய சகாப்தத்தின் முதல் புரட்சி
  ரஷ்யப் புரட்சி, ஏன் எப்படி சாத்தியமானது? அந்தப் புரட்சிக்கு இட்டுச்சென்ற வழிமுறைகளைப்பற்றி அறிந்துகொள்ளாமல் அதைப் புரிந்துகொள்ள முடியாது. 19-ஆம் நூற்றாண்டு முடிந்து, 20ஆம் நூற்றாண்டு தொடங்கும் காலத்தில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதை லெனின்தான் முதலில் உணர்ந்தார் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. ஆழ்ந்த ஆய்வுக்குப் பின், உலக முதலாளித்துவம் ஒரு ‘புதிய கட்டத்தை’, அதாவது ஏகபோக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் எனும் கட்டத்தை அடைந்துவிட்டது என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஏகாதிபத்தியத்தை முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி என்று லெனின் வகைப்படுத்தியதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. உண்மையில் லெனின் ஏகாதிபத்தியத்தை ஒரு உயர்மட்ட முதலாளித்துவ வளர்ச்சி என்றுதான் வகைப்படுத்தினார். ரஷ்ய மொழியில் அவ்வாறுதான் அது விளக்கப்பட்டிருக்கிறது.
  இந்தக் கண்டுபிடிப்பு நவீன புரட்சியின் தன்மை, வழிமுறை உத்திகள் ஆகியவற்றை அடிப்படையில் மாற்றிவிட்டது. புரட்சியைப் பற்றிப் பகல் கனவு கண்டவரல்ல லெனின். விஞ்ஞானபூர்வமான புரட்சியாளரான அவர், விஞ்ஞானபூர்வமான உண்மைகள் மற்றும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார். உணர்ச்சிவசப்பட்ட கற்பனாவாதம் அல்லது அராஜக அபத்தத்தில் அவர் இறங்கவில்லை. எனவே, ஏகாதிபத்திய சகாப்தத்தினின்று தேவையான முடிவுகளுக்கு வந்த அவர், மார்க்சின் ஆய்வு முடிவுகள் பலவற்றுக்கு மாறுதல்களையும் தந்தார்.
  அந்த வகையில் 1903க்கும் 1916க்கும் இடைப்பட்ட காலத்தில் பல மார்க்சிய கருத்தமைவுகளை மாற்றியமைத்தார்; புத்தாக்கம் செய்தார். “சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” எனும் நூலில் பிரதானமாகவும், அவரது வேறு சில நூல்களிலும் விவரிக்கப்பட்ட பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் தத்துவம் அவற்றுள் ஒன்று. இந்த நூலில், ஒரு சோஷலிஸ்ட் புரட்சிக்குத் தேவையான சூழல் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக நீண்டகாலம் ஜனநாயகப் புரட்சிகர மாற்றங்கள் நிகழவேண்டியது குறித்து லெனின் தனது ஆய்வினை வளர்த்தெடுத்தார். சோஷலிஸ்ட் புரட்சி என்பது ஒரு துள்ளலில் அடைந்துவிடக்கூடிய அல்லது குறுகிய காலத்தில் நடைபெறக்கூடியதல்ல. அதற்கு முன்னதாக அடுக்கடுக்கான பல ஜனநாயக மாற்றங்கள் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், உற்பத்தி சக்திகள் வளர்ச்சிபெறச் செய்யப்பட வேண்டும்; பல வர்க்கங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோன்ற கடமைகளைச் செய்துமுடிப்பதன் மூலம் அடுத்த கட்டமான சோஷலிசத்துக்குத் தளம் அமைக்க வேண்டும்.
ரஷ்யா: ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்துக்கான புரட்சிகளின் கலவை
  ஏகாதிபத்திய சகாப்தத்தின் முதல் புரட்சியான 1917ஆம் வருடத்திய ரஷ்யப் புரட்சியில் லெனினது ஆய்வு முடிவுகள் பரிசோதிக்கப்பட்டன. ரஷ்யப் புரட்சி அல்லது சோவியத் புரட்சி பாட்டாளிவர்க்க அல்லது சோஷலிஸ்ட் புரட்சி என்றும், தொழிலாளி-விவசாயி சர்வாதிகாரம் என்றெல்லாம் பலவாறாக அழைக்கப்பட்டது. அதுபற்றிய விவாதங்களில் இப்பொழுது ஈடுபடப்போவதில்லை. ஆனால், ரஷ்யப் புரட்சியில் ஜனநாயக உள்ளடக்கம் ஆழமாக இருந்தது என்பதை இங்கே குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும். இதை லெனின் நன்கு அறிந்திருந்தார். புகழ்மிக்க என்.இ.பி. (N E P) அல்லது புதிய பொருளாதாரக் கொள்கையை (New Economic Policy) அவர்தான் முன்முயற்சி எடுத்து அறிமுகப்படுத்தினார். புதிய பொருளாதாரக் கொள்கையின்கீழ் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகத் தனிநபர், சிறு மற்றும் குறு உற்பத்தி உறவுகள், குட்டி பூர்ஷ்வா மற்றும் பூர்ஷ்வா உற்பத்தி உறவுகள் நீண்டதொரு இடைக் காலத்தில் மாற்றம் பெறவேண்டும். இந்த நீண்ட நெடிய இடைக்காலத்தின்போது சோஷலிசத்திற்கு இட்டுச்செல்கிற குறைந்தபட்சம் ஐந்து சமூகப் பொருளாதார அமைப்புகளை லெனின் இனங்கண்டார்.
  உண்மையில், அவரது மறைவுக்குப் பிறகு இந்த ஜனநாயகக் கட்டம், ‘சோஷலிஸ்ட்’ கட்டமாக வலுக்கட்டாயமாக, எதார்த்தத்துக்குப் புறம்பாக மாற்றப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை நிரந்தரமாகக் கைவிடப்பட்டது. இது, சோவியத் ரஷ்யாவில் கடுமையான நெருக்கடிக்கு இட்டுச் சென்றது; 1990ல் சோவியத் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.
  புரட்சிக்கு ராணுவ வீரர்களின் ஆதரவும் இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்; ஆயுதம் ஏந்திய புரட்சியாக இருந்தபோதிலும், பெருமளவுக்கு அது அமைதியாகவே நடந்ததற்கு இதுவே காரணமாகும்.
  புரட்சியைப்பற்றித் தீர்மானிக்க சோவியத்துகளுக்குள் பெரும்பான்மை ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷெவிக்) பெறவேண்டியதாயிற்று. எனவே, ஜார் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியை நடத்துவதென்பது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் விருப்பமாக இருந்தது.
  (ரஷ்ய மன்னன்) ஜார், நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய உறவுகளின் பிரதிநிதியாக இருந்தான். ஆகையால், முதல் கட்டப்புரட்சி, ஜனநாயக மற்றும் பூர்ஷ்வா புரட்சியாக அமைந்தது. புரட்சி வெற்றிபெற்ற மறுநாள் பிறப்பிக்கப்பட்ட சோவியத்துகளின் ஆணை சமாதானம், உணவு, உழுபவனுக்கு நிலம் ஆகியவை பற்றியதுதான். இந்த ஆணைகள், சோஷலிஸ்ட் கோஷங்கள் அல்ல; அவை குணாம்சத்திலும், உள்ளடக்கத்திலும் ஜனநாயகத் தன்மை கொண்டவை. முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்டுவது, அனைவரின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் உதவியிருக்கும்; உணவு வழங்குதல் அனைத்து மக்களுக்கும் பயனளிப்பது; உழுபவனுக்கு நிலம் என்பதோ விவசாயிகளது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகள், சோஷலிசத்தை நோக்கிப் பயணிப்பதற்கான பாதையைத் திறந்துவிடமட்டுமே செய்தன; நவீன உற்பத்தி சக்திகளை வளரச் செய்ததற்குப் பின்னரே அதனை முழுமையாக நிறைவேற்ற இயலும்.
  லெனின் இதனை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அடிப்படை உற்பத்தி சாதனங்களை மேம்படுத்துவதற்கான முழக்கத்தை அவர் முன்வைத்தார். சோவியத் அதிகாரத்தின்கீழ் முறையான மின்மயமாக்கல் மூலமாகத்தான் நாட்டை கம்யூனிசத்தை நோக்கி இட்டுச் செல்லமுடியும் என்கிற கருத்தாக்கத்தை அவர் முன்வைத்தார்.
  ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம், அதன் பொதுவான மற்றும் சிறப்பான அம்சங்களில் அடங்கியுள்ளது.
  ஆனால், அதே நேரத்தில் அதன் பல அம்சங்கள் அதற்குப் பின் தோன்றிய புரட்சிகளுக்கும், இன்றைய புரட்சிகளுக்கும் இன்னும் பிரயோகிக்கத்தக்க வகையில் இலங்குகின்றன. சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் காண விரும்புவோர்க்கு அது வழிகாட்டவல்லதாக உள்ளது.
  உழைக்கும் மக்களால், அவர்களுக்கு அடிப்படையான சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் கொண்டுவருவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், சோதனைகளுக்காகவும் ரஷ்யப் புரட்சி என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்.
  ரஷ்யப் புரட்சியின் பொதுவான முக்கியத்துவம் என்னவெனில், அது உழைக்கும் மக்களின் மகத்தான புரட்சி; எழுபதாண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்ற அது, அடிப்படையான சமூக மாற்றங்களை நிறைவேற்றியது. சோஷலிச அமைப்பை உருவாக்குவதில் முக்கியமான சோதனைகளை அது மேற்கொண்டது; அவை அவற்றின் வெற்றியிலும், தோல்வியிலும்கூட முக்கியத்துவம் வாய்ந்தவை.
  மரபார்ந்த புரட்சி என்பது எது; அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதனை அது எடுத்துக் காட்டியது. உலகமுழுவதிலும் விடுதலை இயக்கங்களின், புரட்சிகளின் சகாப்தத்தை அது தொடங்கிவைத்தது.
  அத்துணை பெரிய அளவில் இருந்த முதலாளித்துவ சமுதாயத்தைத் தூக்கியெறிவதற்கான முதல் முயற்சியே ரஷ்யப் புரட்சி. முதலாளித்துவத்தையும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் எப்படி நிர்மூலமாக்குவது என்பதற்கு அது ஸ்தூலமான உதாரணம். தனியார் சொத்துடைமையை ஒழிப்பதற்கான தீவிர முயற்சியாகும் அப்புரட்சி.
  எல்லாப் புரட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அம்சங்களை வெளிப்படுத்திய அது, பொதுவான வழிமுறைகளையும் பிரதிபலித்தது. எடுத்துக்காட்டாக, உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி புதிய [உற்பத்தி] உறவுகள் ஏற்படவேண்டியதன் அவசியத்துக்கு வழியேற்படும்போது புரட்சி முதிர்ச்சியடைகிறது என்பதை அது சுட்டிக்காட்டியது.
  புரட்சி பற்றிய மார்க்சிய தத்துவ உரைகல்லில் ரஷ்யப் புரட்சி பலமுறை சோதித்துப் பார்க்கப்பட்டது; ஒப்புநோக்கப்பட்டது. இந்தத் தத்துவம் முதன் முதலில் இந்தப் புரட்சியில்தான் ஸ்தூலமாகப் பிரயோகிக்கப்பட்டது. ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சிபற்றிய லெனினியத் தத்துவம் பிரயோகிக்கப்பட்டதன் வெளிச்சத்தில் இதைக் காணவேண்டும். இதைப் போன்ற பல நாடுகளில், பெரும்பாலும் ஒரே நேரத்தில் பொதுவாகப் பிரயோகிக்கத் தக்கதாக மார்க்சின் தத்துவம் இருந்த அதே வேளையில், லெனின் அதில் மாறுதல்களைச் செய்தார்; ஏகாதிபத்திய சங்கிலியில் பலவீனமான கண்ணியைக் கண்டுபிடித்தார். ஜாரின் ரஷ்யாதான் அந்த பலவீனமான கண்ணி. இதன் தொடர்ச்சியாக, ஏகாதிபத்திய அமைப்பு முறையில் பிளவை அதிகமாக்கும் வகையில் புதிய பலவீனமான கண்ணிகள் தோன்றும்.
  பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் மார்க்சிய ஆய்வு முடிவையும்கூட ரஷ்யப் புரட்சி பரிசோதித்துப் பார்த்தது; இன்று அது கைவிடப்பட்டிருக்கிறது. பிற ஜனநாயகப் பகுதியினர் மற்றும் குழுக்களின் ஆதரவைக் கொண்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் சர்வாதிகாரம் அல்லது ஆட்சியாக இந்தக் கருத்தாக்கம் ரஷ்யாவில் பிரயோகிக்கத்தக்கது என்பதை லெனின் காட்டினார்.
  முதலாளித்துவ வர்க்கத்தை எப்படித் தூக்கியெறிவது; அதன் தொழிற்சாலைகளையும் உற்பத்தி சாதனங்களையும் சமுதாயம் எப்படிக் கைப்பற்றுவது என்பதை நடைமுறையில் துல்லியமாக எடுத்துக்காட்டியது ரஷ்யப் புரட்சி. தொழிலாளிவர்க்கத்தின் கூட்டுத்தன்மை இதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்தது. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் இத்தனைபேர் என்னும் விகிதாச்சாரத்தில் உலகிலேயே அதிகத் தொழிலாளர்களின் திரட்சி அங்குதான் இருந்தது; புரட்சி வெற்றிகாண அது துணை நின்றது.
  தொழிலாளர்களும் விவசாயிகளும் சோவியத்துகள்மூலம் தமது அதிகாரத்தைச் செலுத்தினர். புரட்சியின் சில விதிகளை உறுதிப்படுத்தியது பாரிஸ் கம்யூன்; அவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அம்சங்களில் விளங்கியது ரஷ்யப் புரட்சி.
  புறநிலை முதிர்ச்சி அடைவதும், அகவய அம்சங்கள் நிலவுதலும் புரட்சிக்குக் கேந்திரமானது. பக்குவம் பெறாத புரட்சி எப்போதுமே தோல்வியைத்தான் தழுவும். எனவே, நிலைமையைக் கணிப்பது புரட்சிகர முன்னணி அமைப்பின் கடமை.
  ரஷ்யாவில், பாட்டாளிவர்க்க மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியின் பொதுவான அம்சங்களைப் புரட்சிக்குப் பின்னைய தனது கட்டுரைகள் பலவற்றில் லெனின் அலசியுள்ளார். புரட்சிகர மாற்றங்களுக்கு அதே பழைய அரசு யந்திரத்தை ஏன் முறையாகப் பயன்படுத்த இயலாது என்பதையும், பொருளாதாரத்திலும் சமுதாயத்திலும் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் பொருட்டு அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் உணர்த்தினார்.
  புரட்சிகளில் முழுமையாகக் கையாளத்தக்க ரஷ்யப் புரட்சியின் சில பொதுவான அம்சங்கள் உண்டு.
  இறுதியாக, அடிப்படை மற்றும் பிரதான உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை மாற்றி, உற்பத்தி சாதனங்களின்மீதான சமூக உடைமையை நிலைநாட்டுவது சோஷலிஸ்ட் புரட்சியின் அடிப்படை அம்சமும் சரித்திரபூர்வமான லட்சியமும் ஆகும்.
  லெனின் இதனை ‘சிறுபான்மையினர்’ (முதலாளிகள், பிரதானமாக பெரிய மற்றும் ஏகபோக முதலாளிகள்) மீதான பெரும்பான்மையினரின் (தொழிலாளர்கள்) ஆட்சி என அழைத்தார். பின்னர், தவறான புரிதலுக்கு வழிவகுத்த, சில அம்சங்களில் தவறாக இருந்த ‘சர்வாதிகாரம்’ எனும் பதப்பிரயோகம் கைவிடப்பட்டது.
ரஷ்யப் புரட்சியின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்கள்
  சக்திமிகு தொழிலாளி வர்க்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் தோன்றுவதற்கு ரஷ்யப் புரட்சி வழிவகுத்த அதே நேரத்தில், புரட்சிபற்றிய சில தவறான கருத்தமைவுகள் ஏற்படவும் அது காரணமாயிற்று. அதைக் காப்பியடிக்கும் போக்கும் தலைதூக்கியது. தமது சொந்த நிலைமைகளையும் சூழல்களையும் கணக்கில் கொள்ளாமல், ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை யாந்திரீகமாகத் தமது நாடுகளில் பிரயோகிக்கப் பல நாடுகளின் புரட்சிவாதிகள் முயன்றனர். இது பல தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் இட்டுச் சென்றது. இன்றும்கூட ரஷ்ய, சீனப் ‘பாதைகள்’ அல்லது பாணிகளைக் காப்பியடிக்கிற போக்குகள் காணப்படுகின்றன. நமது சொந்த நாட்டில், கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர இயக்கத்துக்கு இது பெருந்தீங்கு விளைவித்தது.
  ரஷ்யப் புரட்சியிலேயே அதன் பலவித குணாம்சங்களைக் காணமுடியும். ஆனால், அவற்றைக் காப்பியடிக்கலாகாது. சில குறிப்பிட்ட நிலைமைகளில் மட்டுமே அந்தப் புரட்சி நடைபெற்றது; எனவே, அது சில குறிப்பிடத்தக்க வழிமுறைகளையும் கருத்துக்களையும் பின்பற்றியது. வேறெங்கும் அவற்றைக் கையாளமுடியாது அல்லது மிகச்சொற்ப அளவிலேயே அவை பிரயோகிக்கத்தக்கவை.
  ரஷ்ய நாட்டின் குறிப்பிட்ட நிலைமைகளின் பின்னணியில் நடைபெற்றது ரஷ்யப் புரட்சி. அந்த நிலைமைகளை இன்று காண்பது கடினம். [ஜார் காலத்து] ரஷ்யாவில் பூர்ஷ்வா ஜனநாயகம் இல்லாததால், அடிப்படை உரிமைகளைக்கூட மக்கள் அனுபவிக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக, ரஷ்யா மிகப் பலவீனமான கட்சி அமைப்பு முறையைக் கொண்டிருந்தது; பூர்வாங்கமான, கட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற, தேர்தல் உரிமைகள்தான் இருந்தன. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அங்கே இருக்கவில்லை. (ரஷ்ய நாடாளுமன்றமான) டூமாவுக்கு நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே சொற்ப அளவில் தேர்தல்கள் நடப்பது வழக்கம்; சில சமயம் 10 அல்லது 12 ஆண்டுகள் இடைவெளியில்கூடத் தேர்தல்கள் நடந்ததுண்டு. சில கட்சிகளைத்தவிர பொதுவாகக் கட்சிகள் அங்கே தடைசெய்யப் பட்டிருந்தன. ஜாரின் சர்வாதிகார மன்னராட்சி முறையாகத்தான் அரசியல் அமைப்பு இருந்தது.
  பத்திரிகை சுதந்திரம் என்பது அறவே கிடையாது அல்லது மிகச் சொற்ப அளவிலே இருந்தது. எடுத்துக்காட்டாக, (பின்னாளில் போல்ஷெவிக் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி என்றழைக்கப்பட்ட) ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஏடுகளும் பிரசுரங்களும் தலைமறைவான நிலையிலிருந்தே பதிப்பிக்கப்பட்டன; பல இடங்களிலிருந்தும் ரகசியமாக வெளிக்கொண்டுவரப்பட்டன.
  முதல் உலகப் போரானது, வினோதமான நெருக்கடிகளைத் தோற்றுவித்தது; சமூக-பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறை தகர்ந்தது; அது, புரட்சிக்கு வழிகோலியது.
  ஜாரின் ராணுவத்தைச் சேர்ந்த போர் வீரர்கள் மென்மேலும் புரட்சிகர இயக்கத்தை ஆதரிக்கலாயினர். ரஷ்யப் புரட்சியைப் பற்றி விவாதிக்கும்போது இந்த உண்மை மறக்கப்பட்டுவிடுகிறது. ஆயுதம் தாங்கிய எழுச்சியாகப் புரட்சி வடிவெடுத்தது. புரட்சியின் இந்த வடிவம் இந்நாளில் காணவியலாதது.
இன்றைய ஜனநாயகப் புரட்சிகள்
  இரண்டாம் உலகப் போருக்குப்பின் இன்று சில விஷயங்கள் மாற்றம் பெற்றுள்ளன. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வியூகத்திலும் உத்தியிலும் மாற்றங்களை வேண்டுகிற புதிய நிலைமை தோன்றியது. 1957, 1960, 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் உலக மாநாடுகள் சில முக்கியமான முடிவுகளுக்கு வந்தன; அவற்றில் பல இன்றைக்கும் பொருந்தி வருபவை; அவற்றை மேலும் வளர்த்தெடுப்பது அவசியம். மூன்றாவது உலக யுத்தம் ஒன்று வந்தால், அது அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதனை அனுமதித்தலாகாது என்கிறது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புதிய புரிதல். எனவே, அணு ஆயுத மற்றும் பொதுவான ஆயுதக் குறைப்புக்காக அந்த இயக்கம் பணியாற்ற வேண்டியுள்ளது. இதன் விளைவாக, வெகுஜன ஜனநாயக இயக்கத்துடன் நெருங்கிய இணைப்புகொண்ட விரிவான, பரந்துபட்ட சமாதான இயக்கம் உருவானது.
  அமைதிவழியில் ஜனநாயகப் புரட்சியை உறுதிப்படுத்துகிற வகையில் வெகுஜன, நாடாளுமன்ற இயக்கங்கள் போருக்குப் பின்னைய நிலைமையில் முகிழ்த்தன; அவை இன்றும் நிலவுகின்றன. நாடாளுமன்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் வேகமாகப் பரவின; பத்திரிகை சுதந்திரம் வேர்விடலாயிற்று. ஜனநாயகப் புரட்சிகள், மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் என்றும் தேசிய ஜனநாயகப் புரட்சிகள் என்றும் பலவாறாக அழைக்கப்பட்டன. லெனின் உணர்த்திய பூர்ஷ்வா ஜனநாயக உள்ளடக்கங்களையும், இன்னும் பலவற்றையும் அவை கொண்டிருந்தன. விரிந்து பரந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்கள் ஜனித்தன. சமூக மாற்றத்திற்கான வழக்கமான சக்திகளோடு புதிய பகுதியினர் விரிவான அளவில், பெரும் எண்ணிக்கையில் இந்த இயக்கங்களில் பங்குகொள்ளலாயினர். தற்போது அது மேலும் விரிவான ஜனநாயகப் புரட்சியாக மலர்ந்திருக்கிறது.
  இன்று, சிறு-குறு உற்பத்தியாளர்கள் பெருமளவில் தோன்றியுள்ள நிலையில் இந்த ஜனநாயகப் புரட்சியில் அவர்களை வீரியத்துடன் ஈர்க்க இயலும்.
  இவ்வாறாக, யுத்தத்துக்கு முன்னைய காலகட்டத்தின் வழக்கமான ஜனநாயகப் புரட்சிகளைக் காட்டிலும் இந்த ஜனநாயகப் புரட்சியின் வீச்சு பெரியது; அது மிகவும் ஆழமானது.
  சமாதான சகவாழ்வும், அமைதிபூர்வமான பொருளாதாரப் போட்டியும் சமூக மாற்றத்துக்கான மேலதிக சாதகமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. ஜனநாயகப் புரட்சிகள், மேலும் அதிகமான ஏகாதிபத்திய-எதிர்ப்புத் திறன் உள்ளவையாக உருப்பெற்றன; இயல்பிலும் உள்ளடக்கத்திலும் அவை ஜனநாயகத் தன்மை கொண்டன.
  சோஷலிசத்துக்கு மாறிச்செல்லும் நெடிய காலகட்டங்களுக்குத் தேவையான மேலும் அதிக சாதகமான நிலைமைகளை இது உருவாக்கியது.
  இதனால், இன்றைய புரட்சிகள் மரபார்ந்த புரட்சிகளைக் காட்டிலும் பெருமளவில் வேறுபட்டுள்ளன.
சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தகர்வு
  சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சோஷலிஸ்ட் நாடுகளின் தகர்வு ஜனநாயகப் புரட்சிகளுக்கு ஆழமான படிப்பினைகளை முன்வைக்கிறது.
  அந்த நிகழ்வுகள், நீண்டகாலத்துக்கான பல படிப்பினைகளைக் கொண்டுள்ளன. சோஷலிஸ்ட் நிர்மாணத்துக்கு ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அவை வலியுறுத்துகின்றன. தொழிலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் விரிவான பகுதியினர் புதியதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் இதயசுத்தியோடு ஈடுபாடு கொள்ளச் செய்யப்படவேண்டும்; அவ்வாறு செய்யாதபட்சத்தில் சமூக மாற்றத்துக்கான சோதனை தோற்றுப் போகும் என்பது தெளிவாகிறது. ஜனநாயகப் புரட்சியானது, சோஷலிசத்தை நோக்கிச் செல்வதற்கான நீண்ட நெடிய கட்டம் என்பதையும், அதற்குக் குறுக்குவழி எதுவும் கிடையாது என்பதையும் இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
  இந்த நாடுகளில் நிலவிய சோஷலிச மாதிரிகள் அதிகாரவர்க்க பாணியிலானவை; அவை, ‘அதிகாரவர்க்க சோஷலிசம்’ என்று சரியாகவே வகைப்படுத்தப்பட்டன. கட்சியும், அதிகாரவர்க்கமும் அதிகாரத்தைத் தமது கைகளில் குவித்துவைத்துக் கொண்ட நிலையில், சோவியத்துகளையும் இன்னபிற அமைப்புகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் வகிக்கவேண்டிய உரிய பாத்திரம் மறுதலிக்கப்பட்டது.
  ஜனநாயக வழிமுறையில் ஜனநாயகப் புரட்சிகளுக்காகப் போராடுகின்ற அதே சமயத்தில் மத்தியப்படுத்தப்பட்ட சோஷலிச அதிகாரவர்க்க அமைப்பை மக்களின் தலையில் திணிக்க இயலாது. அத்தகைய சோஷலிச மாதிரியில் குறைபாடுகள் இருக்கும்.
  சோஷலிசத்துக்கு மாறிச் செல்கையில் பல்வேறு சமூக இயக்கங்களும் உறவுகளும் தமக்குரிய வரலாற்றுப் பூர்வமான பாத்திரத்தை வகிக்கவேண்டியுள்ளது எனும் படிப்பினையை சோவியத் அனுபவம் நல்குகிறது. தமது திறனை முழுமையாக வெளிப்படுத்தி முடிக்குமுன் அவை வலுக்கட்டாயமாக அழிக்கப்படலாகாது.
  இன்று, பரந்துபட்ட சக்திகளது கூட்டணியின் ஒரு பகுதியாக பல வர்க்க, பல கட்சிகளின் செயல்பாடாகத்தான் ஜனநாயகப் புரட்சிகளை முன்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
  ‘ஒரு சதவீதத்தினருக்கு எதிராக 99 சதவீத மக்கள்’ என்கிற முழக்கம் வெகுவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இது, ஜனநாயகப் புரட்சியின் புதியதோர் வடிவம்.
லத்தீன் அமெரிக்க நாடுகள் தரும் படிப்பினை  
  லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் ஒரு டஜன் நாடுகளிலும் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட நிகழ்வுகள், கியூப, சீன, ரஷ்ய பாணி புரட்சிகளுக்கான சகாப்தம் முடிந்துவிட்டது என்பதையே காட்டுகின்றன. ஒரு கண்டம் முழுமையுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறது. அங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்களின் மிக முக்கியமான அம்சம் இதுதான். நாடாளுமன்றங்களும் தேர்தல்களும் அந்த நாடுகளில் கேந்திரமான பாத்திரத்தை வகிக்கின்றன. முன்பெல்லாம் இடதுசாரி கூட்டணி அங்கு தேர்தல்களில் வெற்றிபெறுமானால், அவற்றுக்கு எதிராக ராணுவம் தலையீடு செய்து ராணுவ சர்வாதிகாரங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் இன்றோ ராணுவம் இந்த ஜனநாயக வழிமுறையை ஆதரிக்கின்றது. இதுவே மிக முக்கியமான புதிய வளர்ச்சி.
  கடந்த இருபது ஆண்டுகளில், இடதுசாரி வழிவந்த ஜனநாயக சக்திகள் சுமார் பத்துப் பன்னிரண்டு நாடுகளில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் வெற்றிவாகை சூடிவருகின்றன. பரந்துபட்ட கூட்டணிகள் அல்லது ஒருங்கிணைப்புகளை அவை உருவாக்கி, ஜனாதிபதியைத் தீவிரமாக அவை ஆதரிக்கின்றன. அவற்றால் ஓரளவு வறுமையைக் குறைக்க முடிந்திருக்கிறது; பெரிய தொழிற்சாலைகளைத் தேசவுடைமையாக்கவும், தேசிய சர்வதேச ஏகபோகங்களைக் கட்டுப்படுத்தவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் அவை அத்துப்படியாக இருப்பதாகவோ, அவற்றின் பாதை மலர்ப்படுக்கையாக இருப்பதாகவோ சொல்வதற்கில்லை. ஆயினும், அவை ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்திருக்கிறது.
  இது ஒரு புதுவகையான அமைதிபூர்வமான ஜனநாயக வளர்ச்சிமுறை. இந்தப் புதிய புரட்சி, வித்தியாசமானதொரு வளர்ச்சிமுறையாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது நிச்சயம். சமுதாயத்தின் பரிணாமம் மேலும் முன்னேறிச் செல்லும் வகையில் புதிய உத்திகளையும் வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்; ஜனநாயக தேர்தல் முறை பண்படுத்தப்பட வேண்டும்.
விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியும் ஜனநாயகப் புரட்சியும்
  21ஆம் நூற்றாண்டில் புரட்சி வித்தியாசமானதாக இருக்கப்போகிறது. எஸ்.டி.ஆர். (STR) என்று சொல்லப்படுகின்ற விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகக் கடந்த சில தசாப்தங்களில் உற்பத்தி மற்றும் தகவல் தொடர்பு சக்திகள் பீறிட்டெழுந்துள்ளன. புதிய உற்பத்தி சக்திகள், பெரிய அளவில் சமூக சேர்மானத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன; எனவே, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமூக மாற்றத்தின் தன்மையிலும் வழிகளிலும் அடிப்படையான மாறுதல்கள் தேவை. எடுத்துக்காட்டாக, தொழிலாளி வர்க்கத்தின் சேர்மானமே மாறிக்கொண்டிருக்கிறது. மார்க்ஸ் காலத்து தொழிலாளி வர்க்கமாக அது இப்போது இல்லை. ‘இழப்பதற்கென்று எதுவுமில்லை—அடிமைச் சங்கிலிகளைத் தவிர’ என்னும் வகையிலான பாட்டாளி வர்க்கமாக அது இல்லை; இன்று அது இழப்பதற்கு எத்தனையோ உண்டு.
  அதுமட்டுமல்லாமல், தொழிலாளி வர்க்கத்தின் சேர்மானத்தில் ஓர் அடிப்படையான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உற்பத்தித் துறை என்பதிலிருந்து உற்பத்தியல்லாத துறையை நோக்கி அது மென்மேலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவோரின் விகிதம் குறைந்துகொண்டும், சேவைகள் மற்றும் தகவல்  துறையில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக உற்பத்தித் துறைக்கு வெளியில், அடிப்படை வெகுஜனங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
  நகரமயமாக்கல் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதன் முறையாக மனித வளர்ச்சியின் மையம் நகரங்களுக்கு மாறியுள்ளது.
  விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சி, தகவலை அடிப்படையாகக் கொண்டது. புதிய சாதனங்களான கணினிகளும் செல்லிடப் பேசிகளும் பூமித்தாயின் முகத்தையே மாற்றிக் கொண்டிருக்கின்றன. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வியாபித்திருக்கின்ற இணையத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு எடுத்துக்காட்டுவதைப் போன்று தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமான செயல்பாடாக ஆகிவிட்டிருக்கிறது. தொழிற்சாலைகள், தொழில் கேந்திரங்கள் மற்றும் அலுவலகங்களும்கூடத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு சார்ந்தவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன. மரபார்ந்த ஆலைகள், தொழிற்கூடங்கள், தொழில்கள் மூடப்பட்டுவருகின்றன அல்லது அளவில் குறுகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், விகிதாச்சாரமும் வீழ்ந்துகொண்டிருக்கின்றன.
  அதே நேரத்தில், புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் தகவல் தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கையாளுகின்றன. இவற்றைப் பொறுத்தவரை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் விகிதாச்சாரமும் அதிகரித்து வருகின்றன.
  புதிய தொழில்நிபுணர்களும் இன்னபிற பகுதியினரும், குறிப்பாக மின்னணுத் துறையில் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாத்திரம் அதிகரித்துவருகிறது.
  அத்தோடு, மின்னணு ஊடகங்கள், இ-வே, சமூக ஊடகங்கள் மற்றபிற தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களின் பாத்திரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மெய்யான பொருளாதய உலகுக்கு இணையானதொரு உலகாக, பாதையாக மின்னணு உலகம் உருவாகியிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது. நிமிடங்களில், விநாடிகளில் தகவல் மக்களைச் சென்றடைகிறது. எனவே, தகவல் ஊடகங்களின்மீதான கட்டுப்பாடு, புரட்சியின் முக்கியமானதொரு அம்சமாகிறது.
  பரந்துபட்ட வர்க்கங்கள் மற்றும் வெகுஜனங்களை உணர்வுபூர்வமாக ஈடுபடுத்துகின்ற வகையில் ஜனநாயகப் புரட்சி இன்று பன்முகத் தன்மையும் ஜனநாயகத் தன்மையும் கொண்டதாக ஆகிக்கொண்டிருக்கிறது.
  இந்த எதார்த்தத்தை, விரிந்த பார்வை கொண்டு நாம் அணுக வேண்டும்; நமது பார்வையைக் குறுக்கிக்கொள்ளலாகாது.
தமிழில்: மு.கோபாலகிருஷ்ணன், விதுரன்.


0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP