Wednesday, February 24, 2016

தோழர் ஜெயகாந்தன் பேட்டி

“எந்த தீமையும் நிரந்தரமானதல்ல!”

[தோழர் ஜெயகாந்தன், ஞானபீட விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து “ஃப்ரண்ட்லைன்” (FRONTLINE) ஆங்கில மாதமிருமுறை ஏட்டின் சிறப்புச் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.எஸ்.விசுவநாதனுக்கு பேட்டி அளித்தார். 2005 மார்ச் (12-15)  “ஃப்ரண்ட்லைன்” இதழில் அவரது பேட்டி, முன்னுரையுடன் வெளியானது. அதன் தமிழாக்கம், இங்கே தரப்படுகிறது.]  
  பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த காலத்திலேயே 1950களில் இலக்கிய உலகில் பிரவேசித்த த.ஜெயகாந்தன், அடித்தட்டு மக்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து மட்டுமல்லாது, அவர்களது வாழ்வின் துல்லியமான அம்சங்கள் பற்றியும் ஆற்றல்மிகு கதைகளை எழுதினார்.     
  எந்தவொரு நல்ல கதையையும் போன்றே அந்தக் கதைகள் அவரது  நடுத்தரவர்க்க வாசகர்களின் மனத்தை பாதித்தன; ஏழைகளின் அவல வாழ்வுகுறித்த அவர்களது மனசாட்சியையும் தட்டி எழுப்பின.
   சில ஆண்டுகளுக்குப்பின், நடுத்தர மக்களின் வாழ்க்கையின்பால் அவரது கவனம் திரும்பியது; அதே இலகுவுடன் அந்த வர்க்கத்தினரின் பிரத்தியேகப் பிரச்சனைகள்பற்றி அவர் எழுதலானார்.
  இதற்கிடையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து அவர் விலகினார்; இருப்பினும், பல்லாண்டுக்காலம் ஓர் இடதுசாரி எழுத்தாளர் எனும் ஆளுமை கொண்டிருந்தார்.
  பின்னர், இந்திய ஆன்மிகத் தத்துவத்தை  அவர் அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஆன்மீக விஷயங்களத் தனது கதைகளின் கருவாக எடுத்துக் கொள்வதாகவும் உணரப்பட்டதால், அவர் ஒரேயடியாக வலதுசாரி முகாமுக்குச் சென்றுவிட்டதாக மார்க்சிய விமர்சகர்கள் கூறத்தலைப்பட்டனர்.
  இருப்பினும், தான் இன்னும் ஒரு மார்க்சியவாதியாகவே இருப்பதாகத் தன் கருத்தை அண்மையில் பதிவுசெய்திருக்கிறார் ஜெயகாந்தன். ”கம்யூனிஸ்ட் என்றாகிவிட்டவர் எப்போதும் கம்யூனிஸ்டாகவே இருப்பார்” என ஒரு பத்திரிகையில் அவர் கூறியிருக்கிறார்.  ஒருவர் ஏக காலத்தில் மார்க்சியவாதியாகவும் ஆன்மிகவாதியாகவும் இருப்பதில் எந்த முரணும் இல்லை என்று எஸ்.விஸ்வநாதனுக்கு அளித்த கீழ்க்காணும் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். பேட்டியின் சில பகுதிகள் இதோ:
கேள்வி: 1950களில் தங்களது டீன் ஏஜ் பருவத்திலேயே  எழுதத் தொடங்கினீர்கள். இலக்கிய உலகில் 50 ஆண்டுகளையும் கடந்துவிட்ட நிலையில், மனநிறைவு எய்திவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஜெயகாந்தன்:  ஆமாம், நிச்சயமாக. பொதுவாகவே நான் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிடமாட்டேன்.  அப்படியே செய்தாலும்கூட, மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளதால், சிறிது மகிழ்ச்சியே விளைகிறது.    
  என்னைச் சுற்றிலும் எத்தனை மாற்றங்கள்! எங்கு நோக்கினும் மாற்றங்கள்-பல விஷயங்களில் அவை நல்ல மாற்றங்களாகவும், சில விஷயங்களில் மோசமானவையாகவும் இருக்கக்கூடும். எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.
  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதத் தொடங்கியபோது, வறுமை என்பது மக்களிடம் மிகப் பரவலாக இருந்தது. மக்களின் துன்ப துயரங்களோ அநேகம். கல்வியறிவு அற்றவர்களும் எழுத்தறிவு இல்லாதவர்களும் எண்ணிலடங்காதவர்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கையோ சொற்பம். அது வேறு இந்தியா. ஆகவே, வேறுவிதமான மக்களை நாம் காணமுடிந்தது. அவர்களைப்பற்றி இப்போது ஏதேனும் கூறப்புகுந்தால், இன்றைய தலைமுறையினர் அதனை நம்புவதற்கு சிரமப்படுவார்கள். மகாத்மா காந்தியைப் பற்றி மட்டுமே நாம் இப்போது பேசுகிறோம். [அன்று] வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பல மகாத்மாக்கள் இருந்தனர்.
   ஆனால் இப்போது நாம் காண்பதோ வேறு வகையான காட்சி. ஒரு வேளை சிறிது ஆன்மிகத் தேக்கம் ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வளர்ச்சிகளும், அவாக்களும், வாய்ப்புகளும் பெருகும்போது ஆன்மிகத் தாகமும், ஆன்மிகத் தேடலும் குறைந்துவிடும்போலும். அதனால் என்ன? ஆன்மிகம் என்பது ஏதோ மதம் அல்லது கடவுள் சம்பந்தமானதன்று; சொல்லப்போனால், அது மனிதனின் எல்லைக்குள் இருப்பதுதான். அது மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியது.
  அனைவருக்கும் இந்த ஆன்மிகத் தாகம் இருத்தல் தேவையின்றிப் போகலாம். ஆனால், குறைந்தபட்சம் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆட்சி நடத்துகிறவர்கள், அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருக்காவது இந்த தாகம் இருத்தல் அவசியம். இந்தப் பகுதியினரிடையே இத்தகு ஆன்மிகத் தாகம் இன்றி அவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக ஆகிவிடும் பட்சத்தில் மெய்யாகவே அது படுநாசம்தான்.
  இந்த நிலைமை மாறும் என்று நம்புவோமாக. எந்தத் தீமையும் நிரந்தரமானதல்ல என்கிற நம்பிக்கையை உருவாக்குவது எழுத்தாளர்களின் கடமை. எனது எழுத்துக்களின்மூலம் இதனைச் செய்ய நான் முயற்சித்திருக்கிறேன்.
  கேள்வி: இன்றைய தமிழ் இலக்கிய உலகினை நீங்கள் எவ்விதம் காண்கிறீர்கள்?
 ஜெயகாந்தன்: வேண்டாம். மன்னிக்கவும். நான் நல்லதொரு விமர்சகனும் அல்ல; ஆர்வமிகு வாசகனுமல்ல. மேலும், நிகழ்காலத்தைப் பற்றி எதிர்காலம்தான் தீர்ப்பு கூறமுடியும். அதுமட்டுமே முறையானதாக இருக்கும். இருந்தபோதிலும், தற்கால இலக்கியத்தில் பல போக்குகளைக் காண்கிறேன்; அவற்றில் சில சரியானவையாகவும், சில தவறானவையாகவும் இருக்கலாம்; அவற்றில் மிகச்சில விரைவில் பயனற்றதாகிவிடக்கூடும்.
   ஆனால், இதைக்காட்டிலும் சிறந்த இலக்கிய சூழலுடன்கூடிய சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அது, என்னிலிருந்தே தொடங்கும். நானே முடிவல்ல. சுப்ரமண்ய பாரதியிடமிருந்து நாமனைவரும் உருவானதைப்போன்றே [என்னிலிருந்து] மேலும் பலர் உருவாகி வளர்வார்கள். ஒவ்வொரு தலைமுறையும் நம்பிக்கையுடன் மறுமலர்ச்சியை எதிர்நோக்கலாம்.  
  கேள்வி: இன்றைய தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காக ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் படைப்புகள் பலவும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. உண்மையில் அது நல்லதுதான். ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் வேறு இந்திய மொழிகளுக்கும் மொழியாக்கம் என்பது மிகச் சொற்பமானதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளதே? மொழியாக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியான படைப்புகள் தமிழில் இருந்தும் இந்த நிலை உள்ளது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஜெயகாந்தன்: இதுவெல்லாம் [மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கான] தேவையைப் பொறுத்துள்ளது. ஒருவேளை, பிறரைக் காட்டிலும் தமிழ் வாசகர்கள் இத்தகு மொழியாக்கங்களுக்கான தேவையை அதிகம் உணர்ந்துள்ளனர் போலும். வேறு நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் தமிழ்ப்படைப்புகளின்பால் இதே போன்ற ஆர்வம் இல்லாதிருக்கலாம். ஆயினும், உங்களது அனைத்து நாவல்களையும் படிக்க வேண்டுமென ஆங்கில வாசகர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. அது உங்களின் பேராசை மட்டுமே. அவர்கள் ஏன் அவற்றைப் படிக்கவேண்டும்? இதோ பாருங்கள், உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், ‘கீதாஞ்சலி’ காவியத்துக்காக மட்டுமே ரவீந்திரநாத் தாகூர் உலகமுழுவதிலும் அறியப்பட்டுள்ளார். இருப்பினும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மொழியாக்கம் செய்யத் தகுந்தவையே. அத்தகு மொழியாக்கங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  மேலதிகமான தமிழ்ப் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுதல் நல்லது.  விரும்பத்தக்க அளவு இல்லாவிடினும், இதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஞானபீட விருது மேலும் இத்தகு வாய்ப்புகளை நல்கும் என நம்புகிறேன்.
  இருப்பினும், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிற மக்களிடையே கருத்துப்பரிமாற்றம் அதிக அளவில் நடைபெறவேண்டும் என்பது இதைவிட முக்கியமானதாகும். இத்தகு கருத்துப்பரிமாற்றம் இல்லாவிடினும் அவர்களிடையே மோதல்கள் இல்லாதிருக்கட்டும்.
  கேள்வி: ஒரு கம்யூனிஸ்டாக நீங்கள் எழுதத் தொடங்கினீர்கள்.  பின்னர், கட்சியிலிருந்து  விலகினீர்கள். பின்னாளில் நீங்கள் எழுதிய கதைகளில் சில ஆன்மிகத்தின்பால் உங்கள் ஆர்வத்தைக் காட்டின. நீங்கள் ஒரு மார்க்சியவாதியாகத் தொடர்வதாக அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். சோவியத் யூனியன் வீழ்ந்துபடுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, “கம்யூனிசம் தோற்குமா?”எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதினீர்கள்...
  ஜெயகாந்தன்: உலகில் கம்யூனிசத்தின் ஒரே பிரதிநிதி சோவியத் யூனியன் அல்ல. சோவியத் யூனியனில் நடந்தேறியிருப்பது ஒரு தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அல்லது அதன் மறு நிர்மாணமும் மட்டுமே. ஒரு கோட்பாடு எனும் வகையில், கம்யூனிசத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மார்க்சியம், ஜீவித்திருக்கும் சித்தாந்தம்.
  கம்யூனிசத்தின் வலிமை எது என்று உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க சிப்பாய்கள் சதாம் ஹுசைனை எப்படி சித்திரவதை செய்து சிறுமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அண்மையில் பார்த்தோம். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததன் தார்மீக அம்சங்கள் இன்னமும் விவாதிக்கப்பட்டுவருகிறது. ஃபிடெல் காஸ்ட்ரோவின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தமுடியுமா? அவ்வாறு செய்வதற்கு அமெரிக்காவுக்கு தைரியம் உண்டா? வியத்நாமிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டதை நாம் பார்க்கவில்லையா? அல்லது சீனாவைத் தொடுவதற்கு அவர்களுக்குத் திராணிதான் உண்டா? இதுதான் கம்யூனிஸ்ட் அரசுகளின் தார்மீக பலம். இந்தியத் தத்துவத்தின் வெளிச்சத்தில் மார்க்சியத்தையும் சோஷலிசத்தையும் நாம் புரிந்துகொண்டோம். 1917-ல் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி நிறைவடைவதற்கு முன்பே, கம்யூனிசம் சோவியத் யூனியனில் நிதர்சனமாவதற்கு முன்பே, இந்தியாவில் முப்பது கோடி ஜனங்களின் நன்மைக்குப் பொதுவுடைமை அவசியம் என்கிற பாரதியின்  தொலைநோக்கு எங்ஙனம் தோன்றியது? இந்திய வேர்களிலிருந்து, இந்திய தத்துவத்திலிருந்து அது விளைந்தது.
கேள்வி: ஒரு மார்க்சியவாதியாகவும், அதே நேரத்தில் ஆன்மிகவாதியாகவும் இருப்பதில் நீங்கள் முரண்பாட்டைக் காணவில்லையா?
ஜெயகாந்தன்: ஒரு ஹிந்து எனும் பொருளில் அல்லது இந்திய தத்துவ நோக்கில் காரல் மார்க்சும்கூட ஆன்மிகவாதிதான். மார்க்சியத்தைப் போன்றே ஆன்மிகமும் மிகவுயர்ந்த மனிதாபிமானமேயன்றி வேறில்லை: இரண்டுமே மக்களுக்கு சேவைபுரிபவை.
  கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிலும் உறுப்பினராக இல்லாவிட்டாலும் கம்யூனிஸ்டாகவே இருக்கிறேன் நான். சில குறிப்பிட்ட பிரச்சனைகளில் கட்சியின் நிலைபாடுகளில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் கட்சியிலிருந்து நான் விலக நேர்ந்தது.
Courtesy: FRONTLINE/March 12-25, 2005.
தமிழில்: எஸ்.துரைராஜ்



0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP